மக்களவை தேர்தல் முடிவுகளில் பாஜக கூட்டணி வெற்றி பெறுவதற்கு தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு எண்ணிக்கைகளில் செய்த குளறுபடிகள் காரணமாயிருக்குமா என்கிற சந்தேகம் எழும்பும்படியாக, ‘Vote for Democracy‘ என்கிற ஆய்வு அமைப்பு ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. தேர்தல் வாக்குப்பதிவு நாட்களில் தேர்தல் ஆணையம் அறிவித்த ஆரம்ப வாக்குப்பதிவு புள்ளிவிவரங்களுக்கும், அதன் பிறகு இறுதியாக அளித்த புள்ளி விவரங்களுக்கும் இடையே சுமார் 5 கோடி அளவான வாக்குகள் வித்தியாசம் இருப்பதாக இந்த அமைப்பு தரவுகள் வெளியிட்டுள்ளது. இதனால் 15 மாநிலங்களில் உள்ள 79 இடங்களில் பாஜக கூட்டணிக்கு சாதகமான முடிவுகள் ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கிறது.
பாஜக கூட்டணி வெற்றி பெறுவதற்கு சாதகமான முடிவுகள் வந்திருக்கலாம் என கருதப்படும் இடங்கள் :
இதன் துல்லியமான எண்ணிக்கையாக 4,65,46,855 வாக்குகள் வித்தியாசம் இருப்பதாக ‘Vote for Democracy’ அமைப்பு கூறுகிறது. இதன் சராசரி 4.72% ஆக இருக்கிறது. ஒரு ஓட்டு கூட வேட்பாளர்களின் வெற்றி தோல்வியைத் தீர்மானித்து விடுமென்கிற நிலையில், வாக்குகளின் எண்ணிக்கையில், தேர்தல் ஆணையம் செய்த குளறுபடிகள் பெரும் சந்தேகத்தையே எழுப்புகிறது.
இந்த ‘Vote for Democracy’ அமைப்பில் சமூக செயல்பாட்டாளரான தீஸ்தா செதல்வாட், நிர்மலா சீதாராமனின் கணவரான பரகலா பிரபாகர், ராம் புண்ணியாணி போன்றவர்கள் உள்ளனர்.
முதல் நான்கு கட்டத் தேர்தல் அறிவிப்பு சமயத்தில் கூட, முதலில் வெளியிட்ட புள்ளி விவர எண்ணிக்கையும், சிறிது நாள் கழித்து வெளியிட்ட புள்ளி விவர எண்ணிக்கையிலும் கூட, 1.07 கோடி வித்தியாசங்கள் இருந்ததாக எதிர்கட்சிகள் சார்பில் பெரும் எதிர்ப்புகள் எழுந்தது.
நான்கு கட்டத் தேர்தல்களில் வாக்குகள் வித்தியாசம் :
முதல் கட்டம் | 18. 60 லட்சம் |
இரண்டாம் கட்டம் | 32.20 லட்சம் |
மூன்றாம் கட்டம் | 22. 10 லட்சம் |
நான்காம் கட்டம் | 33. 90 லட்சம் |
மக்களவை தேர்தலுக்கு முன்பாகவே பாஜக அரசு தேர்தல் ஆணைய சட்ட மசோதாவை திருத்தியது. அதாவது இச்சட்டத்துக்கு முன்பு தேர்தல் ஆணையர்களை பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதி தேர்ந்தெடுப்பர். இதனை உறுதிப்படுத்தியது உச்ச நீதிமன்றம். ஆனால் இப்போது உச்சநீதிமன்ற நீதிபதியை நீக்கி விட்டு, அதற்கு பதிலாக பிரதமரால் பரிந்துரை செய்யப்படும் அமைச்சர் தலைமையிலான ஒரு குழு இருக்கும் என திருத்தியது. இது தேர்தல் ஆணையத்தை ஒன்றிய அரசு கட்டுப்படுத்தும் நோக்கில் அமைந்துள்ளதாக கடும் சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் இந்த ஆய்வறிக்கைகளின் முடிவுகளும் பெரும் கேள்விகளை எழுப்பும் வகையில் அமைந்துள்ளது.
தேர்தல் ஆணையம் கூறிய முன்பின் முரணான வாக்குப்பதிவு எண்ணிக்கை வித்தியாசங்கள் மட்டுமல்ல, வாக்குப்பதிவு எந்திரத்தில் போடப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கையும், வாக்குகள் எண்ணும் போது கிடைத்த எண்ணிக்கையும் கூட வெவ்வேறாக இருந்திருக்கின்றன. இதனால் குறைவான வாக்கு வித்தியாசத்தில் பல இடங்களில் பாஜக கூட்டணி வென்றுள்ளன.
குறைவான வாக்கு எண்ணிக்கை வித்தியாசத்தில் பிஜேபி வென்ற மக்களவைத் தொகுதிகள் :
முந்தைய தேர்தல்களில் கூட வாக்கு எந்திரத்தில் பதிவான ஓட்டுகளுக்கும், எண்ணப்பட்ட ஓட்டுகளுக்கும் இடையே வித்தியாசங்கள் இருந்தன. மத்திய பிரதேசத்தின் 2018 சட்டமன்றத் தேர்தலில், மொத்தமுள்ள 230 தொகுதியில் வெறும் 26 தொகுதிகளில் மட்டுமே வாக்குகள் சரியாக பொருந்தி போயின. மற்ற இடங்களில் கூடுதலாகவோ குறைவாகவோ இருந்தன. அதிகபட்சமாக குனா சட்டமன்ற தொகுதியில் 2605 வாக்குகள் வித்தியாசம் இருந்தது.
ஒரு வாக்குச்சாவடியில் உள்ள கூடுதலான வாக்குகள், மற்ற வாக்குச்சாவடியில் உள்ள குறைவான வாக்குகளால் சமன்செய்யப்படும் நடைமுறை உள்ளது. இவ்வாறு நூற்றுக்கணக்கான வாக்குச்சாவடிகளால் சமன் செய்யப்பட்டு வந்த வித்தியாசமே 2605 வாக்குகள். அப்படியெனில், இதை விட கூடுதலான வாக்கு வித்தியாசங்கள் இருப்பதற்கான வாய்ப்புகளே அதிகம்.
மக்களவைத் தேர்தல் நடைபெற்ற 2019-ல்,
காஞ்சிபுரம் | 18,331 |
தர்மபுரி | 17,871 |
ஸ்ரீபெரும்புதூர் | 14,515 |
தெற்கு சென்னை | 11,729 |
திருவள்ளூர் | 8,228 |
தமிழ்நாட்டின் சில தொகுதிகளில் அதிக வாக்குகளும், உத்திரப்பிரேசத்தின் மதுரா தொகுதியில் 9,906 அதிக வாக்குகள் இருந்தன. இதுபோல 220க்கு அதிகமான தொகுதிகளில் வாக்கு வித்தியாசங்கள் நடந்துள்ளது. இப்படி அதிகமான வாக்குகள் வந்தன என்பதற்கு தேர்தல் ஆணையத்திடம் பதிலில்லை.
இந்தியாவின் அனைத்து மக்களவை, சட்டமன்ற தேர்தல்களிலும் முழுமையாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மூலமே தேர்தல் நடந்து வருகிறது.
இதன் மீது பல சந்தேகங்கள் எழும்பும் நிலையில், 2013 முதல் VVPAT (Voter verifiable paper audit trail-VVPAT) அறிமுகப்படுத்தப்பட்டது. VVPAT என்பது மின்னணு இயந்திரத்தில் பட்டனை அழுத்தியதும், யாருக்கு வாக்களித்துள்ளோம் என்பதை நாம் தெரிந்துகொள்ள துண்டுச் சீட்டில் அந்த சின்னத்தை அச்சடிக்கும் எந்திரம் ஆகும்.
EVMக்கு எதிரான மனநிலை பரவலாக உள்ள நிலையில், நீதிமன்றங்களில் வழக்குகளும், பொதுத்தளங்களில் விவாதங்களும் நடைபெற்றன. சனநாயக அமைப்பினர் டெல்லியிலுள்ள ’ஜந்தர் மந்தர்’ மைதானத்தில் போராட்டம் நடத்தினர். அதில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று EVM தடை செய்து சனநாயகம் காப்பாற்றப் படவேண்டும் என முழக்கமிட்டனர்.
இந்நிலையில் கடந்த மார்ச் 2023இல், அரசு சாரா அமைப்பான ADR (Association for Democratic Reforms) அமைப்பு, உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தது. இந்தியாவில் நியாயமான முறையில் தேர்தலை உறுதி செய்ய வேண்டுமென்றால், EVMகளில் பதிவான ஓட்டுகளின் எண்ணிக்கையும் மற்றும் 100 VVPAT சீட்டுகளும் சரியாக உள்ளதா என சரிபார்க்கப்பட வேண்டும் என்று வழக்கு தொடுத்தது. மேலும் இந்த செயல்முறை முடிந்தவரை விரைவாக மேற்கொள்ளப்படுவதை உறுதிசெய்ய, VVPAT சீட்டுகளில் பார்கோடுகளைப் பயன்படுத்தவும் அந்த அமைப்பு பரிந்துரைத்தது. அத்துடன் மின்னணு வாக்கு இயந்திரம் ஒரு வேட்பாளருக்கு அல்லது அரசியல் கட்சிக்கு ஆதரவாகவோ எதிராகவோ செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டது எனவும், வாக்காளர் தங்கள் வாக்குகள் சரியான முறையில் பதிவிடப்பட்டு எண்ணப்பட்டதா என்பதை அறிய அவர்களுக்கு உரிமை உண்டு என்றும் மனுவில் கூறப்பட்டது
ஏப்ரல் 26, 2024 அன்று, உச்சநீதிமன்றம் இந்தியாவின் மக்கள் தொகையை காரணம் காட்டி காகித வாக்கு சீட்டு முறையை நிராகரித்தது. மேலும், மின்னணு வாக்குடன் VVPAT சீட்டுகளை எண்ணும் கோரிக்கையையும் புறக்கணித்து உள்ளது.
பழைய வாக்குச் சீட்டு முறையிலேயே முறைகேடுகள் செய்யும் போது, ஒரு கட்சிக்கு ஆதரவாக EVM -யை பயன்படுத்தக்கூடும் என்பதே ஏனைய கட்சிகளின் குற்றச்சாட்டாக இருக்கின்றன.
இதற்குச் சான்றாக, இதன் மூலம் EVM முறையில் நடந்த இந்த தேர்தலில் பல குளறுபடிகள் அம்பலமாகியுள்ளன. ஆனால் அதே வேளையில் EVM முறைக்கு எதிராக போடப்பட்ட வழக்கு தள்ளுபடி ஆகியிருப்பது சந்தேகம் எழுகிறது. என்னவெனில் இத்தனை ஆண்டுகளாக வாக்கு விவரங்கள் அடங்கிய 17சி படிவம் பொதுவெளியில் வெளியிடப்படும். ஆனால் இந்த முறை அது மறுக்கப்பட்டிருக்கிறது.
வாக்கு இயந்திரத்தை மூடுவதற்கான பொத்தானை இறுதியாக அழுத்தும் போது பதிவான வாக்குகள் எண்ணிக்கை கட்டுப்பாட்டு பிரிவு (control unit) திரையில் தெரியும். அந்த எண்ணிக்கையை உடனே படிவம் 17சி-ல் பதிவு செய்ய வேண்டும் என்ற விதியை தேர்தல் ஆணையம் கொண்டுள்ளது. ஆனால் தற்போது உச்ச நீதிமன்றத்தில் வாக்குபதிவு விவரங்களை தொகுத்து வெளியிட நேரம் எடுப்பதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம், தேர்தல் ஆணையம் வகுத்த விதிமுறைகளை தேர்தல் ஆணையமே மீறுகிறது என்பதுவே தெரிகிறது.
இதன் தொழில்நுட்பம், குறிப்பிட்ட கட்சிக்கு சாதகமாக மாற்றக்கூடிய வாய்ப்பு அதிகம் என பல ஆய்வுகள் பல நாடுகளில் கண்டறியப்பட்டு மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தை தடை செய்து விட்டார்கள். இந்தியாவில் EVM-களை தனியார் அமைப்பே தயாரிக்கின்றது. இதில் பாஜக கட்சிக்கு ஆதரவானவர்கள் இருக்கின்றனர் என பலரும் குற்றச்சாட்டு சுமத்துகின்றனர். இதுகுறித்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி குரேஷி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த 2024 மக்களவைத் தேர்தலில் சுமார் 1.35 லட்சம் கோடி தேர்தல் செலவுகள் மதிப்பிட்டுள்ள நிலையில், இதில் 5000 கோடிக்கு மேல் செலவழித்து 17.30 லட்சம் VVPAT வாங்கப்பட்டு உள்ளன. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை வெளிப்படையாக அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டாலோ குளறுபடிகள் நடந்தாலோ தெளிவுப்படுத்த வேண்டிய பொறுப்பு தேர்தல் ஆணையத்துக்கு உண்டு. 140 கோடி மக்கள் தொகை உடைய நாட்டில் புதிய தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்தும் போது துல்லியமான ஒன்றாக முன்னிறுத்தப்பட வேண்டும். ஒரு தேர்தல் சனநாயக முறைப்படி நடக்கிறதென்றால், ஒரு வாக்கு கூட கூடுதலாகவோ குறைவாகவோ இருப்பதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.
தேர்தல் ஆணையம் முன்பின் முரணாக வெளிப்படுத்தியதில் 4 கோடிக்கும் மேலான வாக்கு வித்தியாசம் ஒருபுறம், வாக்கு எந்திரத்தில் பதிவானவற்றிற்கும், எண்ணிக்கையின் போது ஏற்பட்ட வாக்குகளுக்கும் இடையேயான வித்தியாசங்கள் மறுபுறம் என நடைபெற்ற இவையெல்லாம் மக்கள் போட்ட வாக்குகள் தானா? அல்லது வாக்கு எந்திரத்தின் மூலமாக நிரப்பப்பட்ட வாக்குகளா? என்கிற கேள்வி நம்முன் எழுகிறது.
ஏனென்றால் தேர்தல் காலங்களில் தேர்தல் ஆணையம், பாஜக-வினர் செய்த அத்துமீறல்கள் எதையும் கண்டு கொள்ளவில்லை. முக்கியமாக மோடியின் அளவுக்கதிகமான வெறுப்புணர்வு பேச்சுகளுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சிறுபான்மையின மக்களை ஊடுருவல்காரர்கள், இட ஒதுக்கீட்டை பறிப்பவர்கள், இந்துக்களின் தாலியை, நாட்டின் சொத்துக்களையும் பிடுங்குபவர்கள் என மதப் பிரிவினைவாத வன்முறை பேச்சுக்களை பேசினார். மேலும் பாஜகவினர் பரப்புரைகளிலும், வாக்குப்பதிவு நடைபெறும் நுழைவாயிலில் ராமர் படங்களை வைத்து தேர்தல் விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் அத்துமீறி அராஜகம் செய்தனர். இதையெல்லாம் தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டிய தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்த்த வண்ணமே இருந்தது. வலுவான நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை. இவற்றை எல்லாம் இணைத்துப் பார்க்கும் பொழுதே, பல சந்தேகங்கள் எழுகின்றன.
பார்ப்பனிய மேலாதிக்க நிர்வாகக் கட்டமைப்புகள் வலைப்பின்னல்களாக வளைத்து இருக்கின்ற இந்தியாவில், பாஜக கூட்டணி அடைந்த வெற்றியின் பின்னணியில் புதைந்து கிடக்கும் ஆதாரங்களை சனநாயகம் காக்கும் அமைப்புகள் ஒன்றிணைந்து தோண்டி எடுத்திருக்கிறார்கள். இதை மட்டுமல்ல, மின்னணு வாக்கு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்ட ஒவ்வொரு தேர்தல்களிலும் நடக்கும் குளறுபடிகளை ’Vote for Democray, Association for Democrotic Reforms’ போன்ற சனநாயக அமைப்புகள் வெளிப்படுத்துகிறார்கள். நீதிமன்றத்தை நாடி வாதாடுகிறார்கள். ஆனால் அவை இழுவைகளாக நீட்டிக்கப்படுகின்றன. இருப்பினும் தங்கள் நடவடிக்கைகளைக் கைவிடாது, இந்த மக்களவைத் தேர்தல் குளறுபடிகளையும் நீதிமன்றத்தின் முன் சமர்ப்பிக்கக் காத்திருக்கிறார்கள். சனநாயகம் காக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் இந்த அமைப்புகளை ஆதரிப்போம்.