தமிழ்நாட்டிற்கு மறுக்கப்படும் இயற்கை பேரிடர் நிவாரண நிதி
இயற்கை சீற்றங்கள் பூமியில் ஏற்படுவதும், அதனால் பூமியில் பல மாற்றங்கள் நிகழ்வதும் வாடிக்கையே. ஆயினும், கடந்த சில ஆண்டுகளில் இயற்கை பேரிடரின் தாக்குதல்கள் மிகவும் அதிகரித்து உள்ளது. தினந்தோறும் உலகின் ஏதேனும் ஓர் இடத்தில் இயற்கை சீற்றத்தால் பேரழிவு ஏற்படுவதும் தொடர்கதையாகி உள்ளது. இதற்கு முக்கிய காரணம் சுற்றுச்சூழல் பாதிப்புகள், இயற்கைக்கு மாறான வளர்ச்சி திட்டங்கள், அதிக மக்கள் தொகை உள்ளிட்டவையே.
சுனாமி, புயல், வெள்ளம், கனமழை என தமிழகம் தொடர்ந்து இயற்கை சீற்றங்களை சந்தித்து வருகிறது. இங்கு மழையைப் போன்றே ஜல், தானே, நீலம், நடா, வர்தா, ஒகி, கஜா, நிவர், புரவி என புயல்களும் இயல்பாக வரத் தொடங்கிவிட்டன. இந்த புயல்களால் உருக்குலைந்த பகுதிகள் இன்னும் மீளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கஜா புயலின் கோரத்தாண்டவம் காவிரி படுகையை தலைகீழாக புரட்டி போட்டதும், இதில் பல கிராமங்கள் சூறையாடப் பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இயற்கை சீற்றங்களால் அந்தந்தப் பகுதியை சேர்ந்த மக்களுக்கு பெருத்த பாதிப்பு ஏற்படுவது வழக்கம். குறிப்பாக விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள் மற்றும் எளிய மக்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.
இது போன்ற பேரழிவுகளின் போது பாதிப்படைந்த மக்கள் மாநில அரசின் உதவியை நாடுவதும், மாநில அரசு ஒன்றிய அரசிடம் நிவாரணத்தை கோருவதும் வழக்கம். இயற்கைப் பேரிடர்கள் நிகழும்போது ஒன்றிய அரசு, பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு நிபுணர் குழுவை அனுப்பி இழப்பின் அளவை மதிப்பிடும். அதேபோல மாநில அரசும் தன் மதிப்பீட்டின் அடிப்படையில் ஒரு தொகையைக் கேட்கும். இந்த இரண்டையும் பரிசீலித்து ஒரு குறிப்பிட்ட தொகையை ஒன்றிய அரசு அம்மாநிலத்துக்கு வழங்கி வருவது வாடிக்கை.
ஆனால் சமீபகாலமாக ஒவ்வொரு இயற்கை பேரிடரின் போதும் மாநில அரசுகள் கேட்கும் நிவாரண தொகையை தருவதில் ஒன்றிய மோடி அரசு பாரபட்சம் காட்டுகிறது. பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்குவதும், பிற கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு குறைந்த நிதி ஒதுக்குவதும் வாடிக்கையாகி விட்டது.
தமிழ்நாட்டிற்கு இதுவரை கிடைத்த நிவாரணத் தொகை
தமிழகத்தில் புயல், மழை வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களுக்கு கடந்த 2010-11 முதல் 2019-20 நிதியாண்டுகள் வரையிலான 10 ஆண்டுகளில், தமிழக அரசு மத்திய அரசிடம் கேட்டது சுமார் ரூ.140,000 கோடிகளுக்கு மேலாக, ஆனால் கிடைத்தது வெறும் ரூ.9,390 கோடி மட்டுமே என ஆர்டிஐ தகவல் தெரிவிக்கிறது.
தமிழக அரசு கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட இயற்கை சீற்றத்தின் போது மத்திய அரசிடம் கேட்ட நிவாரண தொகையும் கிடைத்த உதவியும் குறித்து பார்க்கலாம்.
2011-12 இன் போது வீசிய தானே புயலின் போது 5249 கோடி ரூபாய் தமிழக மாநில அரசு நிவாரணமாக கோரியிருந்தது. ஆனால் மத்திய அரசாங்கம் ஒதுக்கியதோ 500 கோடி ரூபாய் தான்.
2012-13 வறட்சியின் போது 19988 கோடி ரூபாய் நிவாரணமாக கேட்கப்பட்டது. ஆனால் கிடைத்ததோ 656 கோடி தான்.
2015-16 சென்னை மழை வெள்ளத்தின் போது 25912 நிவாரணமாக கேட்டதற்கு 1738 கோடி ரூபாய் மட்டுமே கிடைத்தது.
2016-17 வறட்சியின் போது 39565 கோடி ரூபாய் கேட்டதற்கு 1748 கோடி மட்டுமே கிடைத்தது.
2016-17 வர்தா புயலின் போது 22573 கோடி ரூபாய் கேட்டதற்கு 266 கோடி ரூபாய் மட்டுமே கிடைத்தது.
2017-18 ஒக்கி புயலின் போது 9302 கோடி ரூபாய் கேட்டதற்கு 133 கோடி ரூபாய் மட்டுமே கிடைத்தது.
2018-19 இல் வந்த கஜா புயலின் போது 17899 கோடி ரூபாய் கேட்டதற்கு வெறும் 1146 கோடி ரூபாய் மட்டுமே கொடுக்கப்பட்டது.
2019- 20ல் நிவர் புயல் பாதிப்பிற்கு 3758 கோடி ரூபாய் கேட்டதற்கு, நிவர் மற்றும் புரெவி புயல் என இரண்டுக்கும் சேர்த்து 286.91 கோடி ரூபாய் மட்டுமே கொடுக்கப்பட்டது. இதில் நிவர் புயலுக்கு 63.14 கோடியும், புரெவி புயலுக்கு 223.77 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மோடி அரசின் தமிழின விரோத மனப்பான்மை
நீட் தேர்வு, ஜிஎஸ்டி, ரேஷன் அரிசி மானியம் ரத்து, ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம், டெல்டா பகுதியில் மீண்டும் மீத்தேன் திட்டத்திற்கு அனுமதி, சென்னை சேலம் பசுமை வழிச் சாலை, தமிழகத்திற்கு அநீதி இழைக்கும் வகையில் ஒற்றை நதி நீர் தீர்ப்பாயம் அமைக்கும் முடிவு, கூடங்குளம் அணுமின் வளாகத்தில் அடுக்கப்படும் அணுமின் உலைகள், நியூட்ரினோ திட்டத்தைக் கைவிட முடியாது என்ற அறிவிப்பு, பாலாற்றில் ஆந்திராவும், பவானியில் கேரளாவும் தடுப்பணைகள் கட்டி வருவதைத் தடுக்க மறுப்பது என அனைத்திலும் மோடி அரசு தமிழினத்திற்கு எதிரானதாகவே உள்ளது.
இவைகளோடு தமிழ்நாட்டில் நிகழும் இயற்கை பேரிடர்கள் தமிழர்களை வாழ்வின் விளிம்பிற்கே கொண்டு செல்கின்றன. தமிழர்கள் தங்கள் ஆற்றலையும் மீறி சிறுக சிறுக சேர்க்கும் ஒவ்வொரு வாழ்வாதாரமும் முற்றிலும் பாதிக்கப்படுவதோடு, தலைமுறைகளை பாதிக்கும் ஒன்றிய அரசின் அழிவுத்திட்டங்களையும் எதிர்த்து போராடிய வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். இயற்கை பேரிடர் நிவாரணம் வழங்க வேண்டிய மோடி அரசு, தமிழர்களை வஞ்சிக்கும் வாய்ப்பாகவே கருதுகிறது. இந்நிலையிலும் பிச்சையைவிட கேவலமாக வறட்சி நிவாரணம் கொடுப்பது என தமிழ்நாட்டை அழிக்கும் தீய சக்தியாக உள்ளது பாஜக.
உதாரணத்திற்கு, 2017ல் வறட்சி நிவராணம் 39,565 கோடி, வார்தா புயல் நிவாரணம் 22,573 கோடி, என மொத்தம் 62,138 கோடி ரூபாய் நிதியைக் கேட்ட தமிழக அரசுக்கு, மோடி அரசு பிச்சை போடுவது போல வெறும் 2,014 கோடி ரூபாயை மட்டுமே கொடுத்தது. ஆனால், அதே ஆண்டு 4,702 கோடி ரூபாய் வறட்சி நிவாரணம் கேட்ட கர்நாடகவிற்கு 1,782 கோடி ரூபாய், மற்றும் 1,500 கோடி ரூபாய் வறட்சி நிவாரணம் கேட்ட ஆந்திராவுக்கு 518 கோடி ரூபாயும் அளிக்கப்பட்டு உள்ளபோது, தமிழகம் கேட்டதில் வெறும் 3 % மட்டும் நிவாரணத் தொகையாக ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதேபோல ஒக்கி புயலின் போது பாதிக்கப்பட்ட மீனவர்களை மீட்கும் பணி நடக்கவேயில்லை. குறிப்பாக ஆழ்கடலில் சிக்கிய மீனவர்களை வேண்டுமென்றே சாகவிட்டது மோடி அரசு. தப்பிப் பிழைத்த கொஞ்சம் பேரும் தங்களது சொந்த முயற்சியாலும், மற்ற மீனவர்கள் உதவியாலுமே பிழைத்தனர். பாதிக்கப்பட்ட மீனவர்கள் அனைவரும் தமிழ்நாடு மற்றும் கேரளாவைச் சேர்ந்தவர்களாக இருப்பதும், மேலும் குமரி மாவட்ட மீனவர்கள் பெரும்பாலும் கிருத்தவர்களாக இருப்பதும் மோடி அரசின் திட்டமிட்ட அலட்சியத்துக்கு முக்கியக் காரணம். அதனாலேயே 9302 கோடி ரூபாய் நிவாரண உதவி கேட்டதற்கு வெறும் 133 கோடி ரூபாய் மட்டுமே கொடுத்தது.
மேலும் குஜராத்தில் கடந்த மே மாதம் ஏற்பட்ட டவ்தே புயல், அதி தீவிர புயலாக மாறி சேதத்தை ஏற்படுத்தியது. அங்கு இரண்டே நாட்களில் உடனடி நிவாரணமாக அதுவும் முதற்கட்டமாக ரூ.1,000 கோடியை வழங்கியது மோடி அரசு. குஜராத் போன்றே பாதிக்கப்பட்ட மற்ற மாநிலங்களுக்கு குறிப்பாக தமிழ்நாடு, கேரளாவிற்கு இது போன்ற உடனடி நிவாரணம் வழங்கப்படாதது ஏன்?
பட்டேல் சிலைக்கு 3000 கோடி, நீரவ் மோடிக்கு 12,000 கோடி, விஜய் மல்லையாவுக்கு 8,000 கோடி, அதானி அம்பானி போன்ற குஜராத் பெருமுதலாளிகளுக்கு நாட்டின் வளத்தை தாரை வார்ப்பது என்று அள்ளிக் கொடுக்கும் மோடி அரசு, தமிழ்நாட்டிற்கு முறையாக தர வேண்டிய ஜிஎஸ்டி வரிப்பணத்தை கூட கொடுக்காமல், வர்தா, ஒக்கி, கஜா, புயல் போன்ற பேரிடரின் போதும் தமிழ்நாடு அரசு கேட்ட தொகையில் 20-ல் ஒரு பங்கு மட்டுமே கொடுத்து ஏமாற்றுவது அவர்களின் தமிழின விரோத மனப்பான்மையை காட்டுகிறது.
தற்போது (நவம்பர் 1-12, 2021) வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழ்நாட்டின் டெல்டா பகுதிகள் மற்றும் வட மாவட்டங்களில் குறிப்பிடத்தகுந்த அழிவை ஏற்படுத்தி சென்றுள்ளன. இவை புயலால் ஏற்படும் அழிவிற்கு நிகரானது. இது ஓர் இயற்கை பேரிடர். தமிழ்நாட்டிற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை கண்டறிந்து பேரிடர் நிவாரணம் அளிக்க வேண்டியது, மக்களின் வரிப்பணத்தை பெறும் ஒன்றிய அரசின் கடமை. தமிழ்நாடு அரசு கேட்கும் நிவாரணத் தொகையை இம்முறையாவது ஒன்றிய அரசு முழுமையாக வழங்க வேண்டும்.
கடந்த காலத்தில் ஒன்றிய பாஜக அரசுடன் கூட்டணியில் இருந்த, இதற்கு முன்பு தமிழ்நாட்டை ஆண்ட அதிமுக, கிட்டத்தட்ட பாஜகவின் அடிமையாகவே இருந்தது. இதனால் தமிழ்நாட்டிற்கு நியாயமாக கிடைக்க வேண்டிய நிவாரண நிதியை கேட்பதோடு இருந்துவிட்டது. கேட்ட நிவாரண நிதியை பெறுவதற்கு எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. மாறாக ஒன்றிய அரசு அளிக்கும் நிதியை அமைதியாக பெற்றுக்கொண்டு தமிழ்நாட்டு கஜானவில் நிதி இல்லையென்று அரசு ஊழியர்களின் ஊதியத்தில் கைவைக்கும் அளவிற்கு சென்றது. புதிதாக பொறுப்பேற்றுள்ள திமுக அரசு சந்திக்கும் இந்த முதல் பேரிடரில், தமிழ்நாட்டிற்கான நிவாரண நிதியை பெறுவதில் முந்தைய அதிமுக அரசு போல மௌனமாக இருந்துவிடக் கூடாது என்பதே தமிழர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக ஒன்றன் பின் ஒன்றாக பல இயற்கை பேரழிவை சந்தித்து வரும் தமிழக மக்களில் லட்சக்கணக்கானோர் தங்கள் வாழ்க்கையை மீட்டெடுக்க முடியாமல் தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு நிவாரணம் தந்து நம்பிக்கையளிக்க வேண்டியது மத்திய மாநில அரசுகளின் கடமை. அதோடு கட்சி பாகுபாடு பாராமல் அனைத்து மாநிலங்களையும் ஒரே மாதிரி நடத்த வேண்டியதும் ஒன்றிய அரசின் கடமை. ஆனால், மோடி அரசோ இதை எதையும் கருத்தில் கொள்ளாது தமிழகத்தை பாரபட்சமாக நடத்தி வஞ்சித்து வருகிறது.
இந்த பேரிடர் காலத்திலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குறைந்தபட்ச நிவாரணப் பொருட்கள் கூட வழங்காமல், முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் கொளத்தூர் தொகுதியில் தேங்கிய நீரில் படகில் சென்று படப்பிடிப்பு நடத்தி அரசியல் செய்துள்ளார் தமிழ்நாட்டின் பாஜக தலைவர் அண்ணாமலை. தமிழர்கள் மீது அக்கறையிருந்தால், ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டுமென கட்சி மேலிடத்திடம் கோரிக்கை வைத்திருப்பார். ஆனால் பாஜக தமிழர் விரோத கட்சி என்பதையே இந்த பேரிடரிலும் நிரூபிக்கும் வண்ணம் செயல்படுகிறது. திமுக, அதிமுக இருக்கட்டும், நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என்று ஒரு அம்மா அண்ணாமலையை நோக்கி கேட்ட கேள்வி, தமிழர்கள் ஒன்றிய பாஜக அரசை நோக்கி கேட்கும் கேள்வியும் கூட.