மதவாதிகளின் கைகளில் சிக்கும் கல்வித்துறை

மதவாதிகளின் கைகளில் சிக்கும் கல்வித்துறை

மக்கள் தொகை பெருகி மக்களின் வாழ்விடங்கள் விரிவடைந்து செல்லும் இடங்களிளெல்லாம் அடிப்படை வசதிகள் உருவாக்கப்படுகிறதோ இல்லையோ தனியார் பள்ளிகள் உருவாக்கப்பட்டு வருகிறது. தற்போது வகை தொகையில்லாமல் புற்றீசல் போல் பெருகிவரும் தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை தமிழகத்தில் 3500-ஐ கடந்துள்ளது. அதிகரிக்கும் தனியார் பள்ளிகள், அதைத் தொடர்ந்து மூடப்பட தயாராக உள்ள அரசு பள்ளிகள் என தமிழ்நாடு கல்வித்துறை, தனியார்மயம், வணிகமயம் எனும் கேடுகளை நோக்கி வேகமாக நகர்கிறது. தனியார் கைகளில் சிக்கும் கல்வித்துறை மக்களுக்கு பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுடன் சமமற்ற கல்வியை தான் வழங்கும் என்பதோடு மட்டுமல்லாமல் அரசியல் ரீதியாகவும் என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை வட மாநில அரசியல் நிலவரங்கள் நமக்கு தெளிவாக உணர்த்துகின்றன.

புதிதாக அரசுப் பள்ளிகள் தொடங்காதது, அடிப்படை கட்டமைப்புகளான தூய்மையான வகுப்பறை, கழிப்பறை மற்றும் குடிநீர் வசதிகளை ஏற்படுத்தாதது, தனியார் பள்ளிகளுக்கு நிகராக நவீன கல்விச் சூழலை ஏற்படுத்தாதது போன்ற காரணங்களாலும், தனியார் பள்ளிகளே தரமான கல்வியை வழங்கும் என்ற பொதுபுத்தியின் காரணமாகவும் 80-களில் மக்கள் மெல்ல அரசு பள்ளிகளை விடுத்து தனியார் பள்ளிகளை நோக்கி நகர ஆரம்பித்தனர். இதனால் அரசுப்பள்ளி மாணவர் எண்ணிக்கை, வருடாவருடம் குறைந்து 2008ல் ஒரு கோடியாக இருந்த மாணவர் எண்ணிக்கை 2018இல் 46 இலட்சமாக சரிந்தது. 37000க்கும் அதிகமான மொத்த அரசுப்பள்ளிகளில் 45 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இல்லாத நிலை உள்ளது. 3003 பள்ளிகள் 15-க்கும் குறைவான மாணவர்களுடன் செயல்படுகிறது.

மத்திய மாநில அரசுகளின் நிதிப் பங்கீட்டில் செயல்படும் தேசிய கல்வி அமைப்பான, “சமக்ரா சிக்ஷா அபியான்” 2018-19 ஆண்டிற்கான தமிழக அரசு பள்ளிகளுக்கான மானியத்தை குறைத்ததோடு மட்டுமல்லாமல் 15 மாணவர்களுக்கு மேல் எண்ணிக்கையுள்ள பள்ளிகளுக்கு மட்டுமே இனி மானியம் வழங்கப்படும் என்று அறிவித்தது. மத்தியத் திட்டக் குழுவான நிதி ஆயோக்கும் குறைவான மாணவர் எண்ணிக்கையுள்ள அரசுப் பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஆலோசனை கூறுகிறது. ஒன்றிய அரசின் நிதிப் பங்களிப்பு கிடைக்காத நிலையில் 2019-ஆம் ஆண்டு பத்துக்கும் குறைவான மாணவர் எண்ணிக்கை கொண்ட அரசு பள்ளிகளை மூடப் போவதாக தகவல் பரவியது. கல்வியாளர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக மூடப்படும் நிலையில் இருந்த 1248 பள்ளிகள் நூலகங்களாக மாற்றப்படும் என்று அப்போதைய கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.

அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தி, மக்களின் நம்பிக்கையைப் பெற்று, மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்காததன் விளைவு, இன்று தமிழக கல்வித்துறை வலதுசாரி அமைப்புகளிடம் சிக்கும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளது. வலதுசாரி அமைப்பான RSS-ன் கல்வி அமைப்பான வித்யா பாரதி 13,607 பள்ளிகள், 35 இலட்சம் மாணவர்கள் என நாடு முழுவதும் தனது கொள்கைகளை பள்ளிகளை உருவாக்கி அதன் மூலம் பரப்பி வருகிறது. தமிழகத்தில் மட்டும் 277  பள்ளிகளை அதிகாரப்பூர்வமாக நடத்திவருகிறது. அதுபோக ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்கள் வெவ்வேறு பெயர்களில் தமிழகம் முழுவதும் பள்ளிகளை உருவாக்கி வலதுசாரி சித்தாந்தங்களை மாணவர்களிடையே விதைத்து வருகின்றனர். இந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் வெறும் பத்தாண்டுகளில் சமூகநீதி சிந்தனையற்ற, சிறிது சிறிதாக இந்துத்துவத்திற்குள் தள்ளப்பட்டு போலி தேசபக்தி பேசும் ஆர்எஸ்எஸ்-ன் அடியாட்களாக உருவாக்கப்படுகிறார்கள். இதுதவிர ஆர்எஸ்எஸின் முறைசாரா கல்வி அமைப்பான  “ஏகல் வித்யாலயா” பழங்குடியினரிடையே கல்விச் சேவை புரிகிறோம் என்ற பெயரில், பெருமளவு வெளிநாட்டு நிதியுடன், மலைவாழ் மக்களிடையேயும், கிராமப்புற மக்களிடையேயும் ஊடுருவி அவர்களிடையே இந்துத்துவ சிந்தனைகளை வளர்த்து வருகிறது.

ஆர்எஸ்எஸ்ஸால் பயிற்றுவிக்கப்பட்ட ஒரு முழு நேர ஊழியர், ஒரு சரஸ்வதி படம், மூன்று மணிநேர இந்துத்துவ சித்தாந்தத்தை உள்ளடக்கிய பயிற்சித் திட்டம், இதை வைத்துக்கொண்டு ஒற்றை ஆசிரியர் பள்ளி என்ற பெயரில் நாடு முழுவதும் இலட்சக்கணக்கான கிராமங்களில் ஊடுருவியுள்ளனர் ஏகல் அமைப்பினர். வடகிழக்கு மாநிலங்களில் பழங்குடியினரிடையே ஊடுருவி அவர்களை இந்துத்துவவாதிகளாக மாற்றியதில் ஏகல் அமைப்பினர் பெரும் வெற்றி கண்டனர்.  பீகாரில் ஏகல் பள்ளிகளை அமைத்ததன் மூலமாகவே தாங்கள் வலிமை பெற முடிந்ததாக வெளிப்படையாக அறிவித்தார் ஜார்கண்ட் VHP தலைவர் கவுஷிக் பட்டேல். மேலும் பாஜகவிற்கு அது தேர்தலில் பெரிய வாய்ப்பை உருவாக்கியதாகவும் அவர் கூறியதன் மூலம் இந்த ஆர்எஸ்எஸ் பள்ளிகள் அரசியல் களநிலவரத்தில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.

தமிழகத்தில் 65,000க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் இயங்கும் வித்யாபாரதி பள்ளிகள், ஆர்எஸ்எஸ் ஆதரவு வலதுசாரிகளின் பள்ளிகள் மற்றும் ஏகல் வித்யாலயா பள்ளிகள் இனிவரும் காலங்களில் தமிழக மாணவர்களிடையே பெருமளவு இந்துத்துவ சிந்தனைகளை விதைக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இவர்களிடம் பயின்றுவரும் மாணவர்கள் ஆர்எஸ்எஸ்-ன் அடியாட்களாக வார்த்தெடுக்கப்படுவார்கள். இதன் விளைவு எதிர்கால அரசியல் களநிலவரத்தில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்.

மேலும், ஒன்றிய பாஜக அரசு புதிய கல்விக்கொள்கை என்ற பெயரில் சமூகத்தில் ஏற்றத்தாழ்வை உண்டாக்கக் கூடிய மனுதர்மத்தின் அடிப்படையிலான இந்துத்துவ கருத்தியலை மாணவர்களை திட்டமிட்டு திணிக்கின்றன. பாஜக ஆளும் மாநிலங்கள் உட்பட இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்கள் இதனை நடைமுறைப்படுத்தும் வேலையில் இறங்கிவிட்டன. குலக்கல்வி முறையை மறைமுகமாக திணிக்கும் இக்கல்வி முறை எதிர்காலத்தில் சமூகத்தில் மிகப்பெரிய சிக்கல்களை உண்டாக்கும் சூழல் உண்டாகியுள்ளது. அதனோடு, தொண்டு நிறுவனங்கள் பள்ளிகளில் கல்விப்பணிகளில் ஈடுபடலாம் என்றும் இந்த புதிய கல்விக்கொள்கை அனுமதிக்கிறது. இது ஆர்எஸ்எஸ் போன்ற இந்துத்துவ நிறுவனங்கள் நேரடியாக மாணவர்களிடையே உரையாட வழிவகை செய்கிறது. புதிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொள்ளாத திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை சமீபத்தில் கூட இதனை அனுமதிக்கும் வகையில் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இது, அரசுகளை தாண்டி அதிகாரவர்க்கம் மதவாத கும்பல்களிடம் சிக்கியுள்ளதையே காட்டுகிறது.

கல்வி நிறுவனங்கள் மதவாத அமைப்புகளின் கைகளில் சிக்குவதால் வரும் காலங்களில் வட மாநிலங்களைப் போன்று தமிழகத்திலும் எந்த சிந்தனை தெளிவுமற்ற, அறிவியல் மற்றும் சமூக நீதியை புறக்கணிக்கும், மதவெறி ஊட்டப்பட்ட ஒரு கூட்டம் ஒன்று உருவாக்கப்படும் ஆபத்து இருக்கிறது.

கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக ஏற்பட்ட பொருளாதார பாதிப்பினால் கடந்த இரு கல்வியாண்டுகளாக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கனிசமாக அதிகரித்துள்ளது. இந்த கல்வியாண்டில் மட்டும் சராசரியை விட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். இதை ஒரு நல்வாய்ப்பாக கருதி தமிழகஅரசு, அரசுப்பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு நிகராக தரம் உயர்த்தி மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். புதிதாக விரிவடையும் குடியிருப்புகளுக்கு ஏற்ப அரசுப்பள்ளிகளை அதிகரிக்கவேண்டும். மதவாத அமைப்புகளால் நடத்தப்படும் பள்ளிகளை அரசின் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரவேண்டும். பள்ளிகளில் வெறுப்பை விதைக்கும்  மதவாத பயிற்சிகள் நடத்துவதை அரசு தடை செய்ய வேண்டும். தமிழகஅரசே மலைக்கிராமங்களில் ஒற்றை ஆசிரியர் பள்ளிகளை அமைத்து அங்கே ஊடுருவியுள்ள ஆர்எஸ்எஸ் ஆட்களை அப்புறப்படுத்த வேண்டும். இப்பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்து உடனடி நடவடிக்கையில் இறங்கினால்தான் தமிழகம் வரும் நாட்களில் வட மாநிலங்களைப் போன்று மாற்றாமல் காப்பாற்றப்படும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »