சமூகநீதி மண்ணில் ஆணவப் படுகொலைகள்
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற உயரிய பண்பின் அடையாளமாக வாழ்ந்து வந்த நம் தமிழ்ச் சமூகம் இன்று ஆரிய சூழ்ச்சியால் மதம் , சாதியின் பெயரால் பிளவு பட்டுள்ளோம். ஆரிய இழிவுக்குள் நமது அறிவார்ந்த சமூகம் மூழ்கி “சாதி” என்ற வன்மம் நமது எண்ணங்களில் கால காலமாக புரையோடிக் கொண்டிருக்கின்றன என்பதே கசப்பான உண்மை. தேசிய குற்றவியல் ஆவணம் காப்பகத்தின் (NCRB) தரவுகளின் அடிப்படையில் இந்திய ஒன்றியத்தில் நிகழும் கொலைகளுக்கான காரணங்களில் இரண்டாவது இடத்தில் ஆணவப் படுகொலைகள் உள்ளன. இந்திய ஒன்றியத்தில் அனைத்து துறைகளில் தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்கினாலும் ஆணவப்படுகொலை நிகழ்வினை இன்று வரை தடுக்க இயலவில்லை என்பது அவமானகரமானது.
தமிழ்நாட்டையே உலுக்கிய, கடலூரில் 2003ல் நடந்த கண்ணகி-முருகேசன் ஆணவக் கொலை வழக்கில் 18 ஆண்டுகள் கழித்து தற்போது குற்றம் சாட்டப்பட்டிருந்த 15 பேரில் 2 பேரை விடுதலை செய்தும், ஒருவருக்கு மரண தண்டனையும், காவல்துறையைச் சேர்ந்த 2 பேர் உள்பட 12 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கி இருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது.
உலகம் முழுவதுமுள்ள மக்களில் காதலில் விழாதவர்கள் யாரும் இருக்க முடியாது என்றே கூறலாம். ஏனெனில், அது இருபாலருக்கும் பொதுவான ஒரு இயற்கையாக நிகழும் ஹார்மோன் மாற்றமாகும். அது யாருக்கும் யார் மீதும் வரும். இப்படி இயற்கையாக நிகழும் இந்த ஈர்ப்பினை உலகம் முழுவதும் காதலர் தினமாக கொண்டாடும் போது, சில பிற்போக்கான சமூகங்களில், காதல் இன்றும் விலக்கப்பட்ட ஒன்றாகவே அணுகப்படுகிறது. இந்தியாவும் அத்தகைய சமூகங்களுள் ஒன்று.
தமிழ்நாட்டின் நாட்டார் கதைகள் உயர்சாதியில் பிறந்த பெண்களை காதலித்ததால், கொல்லப்பட்ட மதுரை வீரன், காத்தவராயன் முதலானோரின் ஆணவக் கொலைகளின் சான்றுகளாக உள்ளன. நூற்றாண்டுகளாகத் தொடரும் இந்த துயரம், காதலர்களை வதைக்கிறது.
சாதி, மதம், மொழி, நிறம், வர்க்க வேறுபாடுகள் காதலுக்கும், காதலிப்பவர்களுக்கும் முதன்மை எதிரிகளாக உள்ளன. இவைகள் பந்தம், பாசம், உறவு முறைகளை விட மிக மேன்மையானது என கருதும் பிற்போக்கு சிந்தனை கொண்டவர்களை உள்ளடக்கிய சமுகமாக தான் தமிழ்நாடு இன்றளவும் திகழ்கிறது என்பது மிகவும் வருத்தமளிக்கிறது.
மேலும், அவற்றை என்ன விலை கொடுத்தேனும் காக்க வேண்டும் என்று திடமாகக் கருதுபவர்கள், தம் குடும்பத்து உறுப்பினர் யாரேனும் பிற சாதி, மதத்தைச் சேர்ந்தவர்களை சாதி/மத மறுப்புத் திருமணம் செய்து கொண்டாலோ அல்லது காதலித்தாலோ, அவர் தாம் பெற்ற மகள்/மகனாக இருந்தாலும், அல்லது உடன் பிறந்தவர்களாயினும் அவரைக் கொன்று விடத் துணியும் காட்டுமிராண்டித்தனம் இன்றளவும் குறையவில்லை.
உத்திர பிரதேசம், பீகாரில் நடக்கும் மதக்கலவரங்கள் மற்றும் அங்கு நடந்தேறும் அச்சுறுத்தல்களை நாம் வேடிக்கையாக காட்டுமிராண்டித்தனம் என்றும், இன்னும் பல ஏக வசனங்களையும் உபயோகித்தும் நம்மை நல்லவர்கள், படித்தவர்கள் என்று மார்த்தட்டி கொள்வோம். மேலும், அந்த மாநிலங்கள் எல்லாம் இன்னும் முன்னேறவில்லை என்றும் கூட தமிழகத்தை சேர்ந்தவர்கள் எள்ளி நகையாடுவதும் வாடிக்கையே.
ஆனால், அவர்களுக்கு எல்லாம் சற்றும் சளைக்காமல் தமிழகம் ஆணவப் படுகொலையில் ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக மற்ற எந்த மாநிலத்திலும் நடக்காத அளவிற்கு ஆணவக் கொலைகள் நடந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்த கொலைகளில் அதிகம் பாதிக்கப்படுவது தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் தான். இதுவரை கொல்லப் பட்டவர்களில் 90% பேர் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள். மீதம் உள்ள 10% பேர் சாதி மறுப்பு திருமணம் காரணமாக கொலை செய்யப்பட்ட இடைநிலை சாதியை சேர்ந்தவர்கள்.
கண்ணகி-முருகேசன் ஆணவக் கொலை வழக்கு
தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 185 ஆணவக் கொலைகள் நடந்துள்ளதாகவும் அவற்றில் 3 கொலைகளுக்கு மட்டுமே தண்டனை கிடைத்து உள்ளதாகவும், தமிழகத்தின் வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் தான் சாதி ஆணவப் படுகொலைகள் மற்றும் சாதியக் குற்றங்கள் அதிகம் நடக்கிறது என்றும் செயல்பாட்டாளர் ‘எவிடென்ட்ஸ்’ கதிர் கூறியுள்ளார். கடந்த 2007-ம் ஆண்டில் மேற்கு தமிழ்நாட்டில் மட்டும் மொத்தம் 30 ஆணவ கொலைகள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த வகையில் கடலூர் மாவட்டம் விருதாச்சலம் குப்பநத்தம், புதுக்காலனி பகுதியில் வசித்து வந்த தலித் சமூகத்தை சேர்ந்த சாமிக்கண்ணுவின் மகன் கெமிக்கல் எஞ்சினியர் பட்டதாரியான முருகேசன், அதே பகுதியை சேர்ந்த துரைசாமியின் மகளை காதலித்து 05-05-2003 அன்று பதிவு திருமணம் செய்துள்ளார். எனினும், அவர்கள் இருவரும் அவரவர் வீட்டில் தனித்தனியாக வசித்து வந்துள்ளனர்.
இந்த விவகாரம் வெளியில் தெரிந்த நிலையில் கண்ணகியை விழுப்புரத்தில் உள்ள உறவினர் வீட்டில் விட்டுவிட்டு வந்துள்ளனர். ஆனாலும் இத்திருமணத்தால் தங்களது கௌரவம் பாதிக்கப்பட்டது எனக் கருதிய பெண்ணின் பெற்றோர் 08-07-2003 அன்று வண்ணாங்குடிகாட்டிலுள்ள மயானத்திற்கு முருகேசன்- கண்ணகி தம்பதியை அழைத்து சென்று அவர்களின் வாய் மற்றும் காதில் விஷத்தை ஊற்றி கொலை செய்து பின்னர் அவர்கள் உடலை தனித்தனியாக எரித்துள்ளனர்.
இந்த கொடூர சம்பவம் குறித்து முருகேசனின் உறவினர்கள் விருத்தாசலம் காவல்நிலையத்தில் கூறியபோது, அது தற்கொலை என்று கூறி அந்த புகாரை ஏற்காமல் திருப்பியனுப்பப்பட்டனர். அதற்கடுத்து சில நாட்கள் கழித்து ஊடகங்களில் அவர்களின் ஆணவப் படுகொலை செய்தி வெளியானது. அதனால் 18 நாட்கள் கழித்து கிராம நிர்வாக அலுவலரிடம் புகாரை வாங்கி காதல் திருமணத்தால் தங்கள் பிள்ளைகளை ஆணவக் கொலை செய்துவிட்டனர் என்று கண்ணகி தரப்பில் 4 பேர் மீதும், முருகேசன் தரப்பிலும் நால்வர் மீது வழக்கு பதிவு செய்தது காவல்துறை.
ஆணவக் கொலை என்பதால், இந்த வழக்கை சிபிஐ விசாரித்தால்தான் நீதி கிடைக்கும் என்று வலுத்த கோரிக்கையை தொடர்ந்து, 2004ம் ஆண்டு சிபிஐ-க்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. பின்னர் தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில், விருத்தாசலம் காவல்நிலைய ஆய்வாளர் செல்லமுத்து, உதவி ஆய்வாளர் தமிழ்மாறன் உள்ளிட்ட 15 பேரை குற்றவாளிகளை சேர்த்திருந்தது.
இந்த நிலையில் 18 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கின் தீர்ப்பை கடலூர் நீதிமன்றம் தற்போது வெளியிட்டுள்ளது. அதில், குற்றம்சாட்டப்பட்ட 15 பேரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு அவர்களுக்கு தண்டனையும் வெளியிடப்பட்டுள்ளது. அதில், கண்ணகியின் அண்ணன் மருது பாண்டியனுக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிபதிகள் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளனர். மேலும் எஞ்சிய 12 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பிற்கு முருகேசனின் குடும்பத்தினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் வரவேற்பை தெரிவித்துள்ளனர்.
சாதி ஆணவப் படுகொலைகள்
உலகம் முழுவதும் சாதி ஆணவக் கொலைகள் 2010ம் ஆண்டில் மட்டும் 5,000 கொலைகள் நடைபெற்றதாகவும் அதில் 1000 கொலைகள் இந்தியாவில் நடந்தவை என்றும் ஐ.நா தெரிவித்துள்ளது. அதாவது உலகில் நடந்த ஆணவக் கொலைகளில் ஐந்தில் ஒன்று இந்தியாவில் நடைபெறுவதாகவும் கூறுகிறது ஒரு புள்ளி விபரம்.
தமிழகத்தில் நடந்த தருமபுரி இளவரசன் கொலை, உடுமலைபேட்டை சங்கர் கொலை, திருச்செங்கோடு கோகுலராஜ் கொலை, ஓசூர் நந்தீஷ்-சுவாதி படுகொலை என்று சில கொலைகள் மட்டுமே தமிழகம் முழுக்க தெரிந்து இருக்கிறது. இந்த கொலைகள் இல்லாமல் பல ஆணவ கொலைகள் மக்களுக்கும், ஊடகங்களுக்கு தெரியாமல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அவற்றிற்கு வழக்குகள் மட்டும் பதியப்பட்டுள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு உசிலம்பட்டி விமலாதேவியை எரித்துக் கொன்றதும் இதுபோன்ற சாதி வெறியர்களே. தலித் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் திலீப் குமாரை காதலித்த குற்றத்திற்காக அவரது குடும்பத்தினரே விமலாதேவியை உயிரோடு எரித்துக்கொன்றனர்.
இளவரசன் மரணத்தின் போது பரபரப்பாக பேசப்பட்ட சாதிய ஆணவக்கொலை, மக்களவை தேர்தலின் போது அடங்கியது. மேலும் கோகுல்ராஜ் கொலையால் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்த ஆணவக்கொலை, சிலரால் அமுக்கப்பட்டது. அதேபோல் உடுமலைப்பேட்டை சங்கரின் படுகொலையால் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்தது. தற்போது கண்ணகி-முருகேசன் ஆணவக்கொலை வழக்கில் வந்துள்ள தீர்ப்பின் மூலம் ஆணவக்கொலைகள் குறித்த விவாதம் எழுந்துள்ளது. ஆனாலும் இந்த ஆணவக் கொலைகளை தடுக்க பெருமளவில் எந்தவொரு எழுச்சியும் ஏற்படவில்லை என்பதே நிதர்சனம். இத்தகைய சாதிய ஆணவக் கொலைகளில் நடவடிக்கை எடுத்தால் ஒரு குறிப்பிட்ட சாதியினரின் ஆதரவை இழக்க நேரிடும் என்ற அச்சத்தால், இந்த விவகாரங்களை கண்டும் காணாமல் இருக்கின்றன அரசும், காவல் துறையும்.
இத்தனைக்கும் இதுபோன்ற ஆணவக் கொலைகளை ஆதரிப்போர் மிகவும் சிறிய சதவீதத்தினர் தான். எந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அதில் உள்ள பெரும்பாலானோர் இது போன்ற வன்முறையை ஆதரிப்பதே இல்லை. இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கைகளில் ஈடுபட மறுக்கும் நிலையில், நீதித்துறை தான் தலையிட்டு அப்பாவி உயிர்களைக் காக்க வேண்டும்.
நீதி கிடைக்க தாமதமானாலும் முருகேசன்-கண்ணகி வழக்கில் நியாயமான தீர்ப்பு கிடைத்துள்ளது. இதுபோன்ற ஆணவக் கொலைகள் இனி நிகழாமல் இருக்க, சமூக அளவில் மாற்றங்களை உண்டாக்க அரசு முன்வர வேண்டும். சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்கும் விதமாக திருமண உதவித்தொகை வழங்குவதும், சாதி மறுப்பு திருமணம் செய்துகொள்வோருக்கு சமூக பாதுகாப்பை உருவாக்குவதும், கல்வி வேலைவாய்ப்பில் தனி இடஓதுக்கீடு வழங்குவதும், குழந்தைகளின் படிப்பு செலவை அரசே ஏற்றுக்கொள்வது என அரசு முன்மாதிரி திட்டங்களை உருவாக்குவதன் மூலம் சாதிமறுப்பு திருமணங்கள் சமூகத்தில் பொது நடைமுறையாக மாற்றப்படுவதும், அதன் மூலம் ஆணவப்படுகொலைகள் தடுக்கப்படுவதும் நடந்தேறும். மேலும், ஆணவக்கொலைகளை தடுக்க தனி சட்டம் இயற்றப்பட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக இருக்க வேண்டும்.
எண்ணற்ற முற்போக்கு சிந்தனையாளர்கள் பகுத்தறிவாளர்கள் ஆரிய இழிவிலிருந்து விடுபட தமது வாழ்நாள் முழுவதும் தொண்டாற்றிய போதும் நம் தமிழ்ச் சமூகம் இல்லாத சாதிகள் பலவற்றை உருவாக்கி அதனை நான்கு வர்ணத்திற்குள் உள்ளடக்கி மனித குலத்திற்கு எதிரான ஏற்றத்தாழ்வு கற்பிக்கும் பேதத்தை உருவாக்கிய ஆரிய சித்தாந்தத்தை முற்றிலும் அழித்தொழித்தால் மட்டுமே நமது வாழ்வு செழிக்கும். அதுவே மனித குல முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.
சாதிய ஆணவ படுகொலை செய்யும் சாதியிலேயே உள்ள மக்களுக்கு இந்த ஆணவ படுகொலைகள் பிடிப்பதில்லை அவர்கள் காதலை எதிர்க்கிறார்கள் ஆனால் ஆணவ படுகொலை செய்யும் அளவிற்கு அவர்கள் கெட்டவர்களாக வாழ்வதில்லை ஒரு சிலரே செய்கின்றனர். தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும் நீதி உடனடியாக கிடைக்க வேண்டும் இது தற்காலிகமானது. நிரந்தரமானது எது என்றால் அது ஆரிய சித்தாந்தத்தை மக்கள் ஏற்றுக் கொள்ளாமல் ஒழிப்பதே அதற்கு சிறந்த வழி நிரந்தர தீர்வு