2020 ஆம் ஆண்டு கோவிட் தொற்று உலகமெங்கும் பரவி பலர் உயிரிழந்தனர். மார்ச் 25, 2020 ஆண்டில் இந்திய ஒன்றியம் தழுவிய ஊரடங்கு அமலுக்கு வந்தது. அனைவரும் வீட்டில் முடங்க வேண்டிய சூழல் உருவாகியது. அத்தியாவசிய தேவைக்கான சேவைகள் மட்டும் செயல்பட்டன. இருப்பினும், பொதுமுடக்கத்தினால் தினமும் 2300 கோடி வரை நட்டம் ஏற்படுவதாகக்கூறி மே1, 2020 ஆண்டில் தானியங்கி உற்பத்தி வாகன (Automobile) உற்பத்தியாளர் கூட்டமைப்பான SIAM, ACMA, மற்றும் FADA ஆகியவை அரசை நிர்பந்தித்து ஆட்டோமொபைல் உற்பத்தியை அத்தியாவசிய சேவைப் பட்டியலில் சேர்த்தது. அன்றைய நிலையில் சுகாதாரத்துறை உட்பட குறிப்பிட்ட சில சேவைகள் மட்டுமே தொற்றுக்கு இடையே பணியை துவங்கியிருந்தன.
சென்னை ஸ்ரீபெரும்புதூர் அருகே அமைந்திருக்கிற சாம்சங் தொழிற்சாலைப் பணியாளர்கள் செப்டம்பர் 9, 2024-ல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். சங்கத்தினை அங்கீகரிப்பதும், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான சம்பள உயர்வும் அவர்களுடைய முக்கிய கோரிக்கைகளாக இருந்தன. சுமார் ஒருமாத காலம் தொடர்ந்த இவ்வேலைநிறுத்தம் தொழிலாளர்களுக்கு சாதகமான முறையில் முடிந்ததாக அக்டோபர் 15 அன்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அறிவித்தது. வேலைநிறுத்தத்தை ஒருங்கிணைத்த சிஐடியு-யும் வேலை நிறுத்தம் முடித்துக் கொள்ளப்படுவதாக தெரிவித்தது.
இதற்கிடையே நடந்த சில முக்கியமான அரசியல் நிகழ்வுகள் கவனிக்க வேண்டியவையாக இருக்கின்றன. வேலைநிறுத்தத்திற்கு பெரும்பாலான எதிர்கட்சிகள், இயக்க செயல்பாட்டாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் ஆதரவளித்தன. திமுகவின் தொ.மு. பேரவை உள்பட கோரிக்கை மனுவில் கையெழுத்திட்டது.
’வேலை நிறுத்தம் தொடங்கிய நிலையில் முதன்மை கோரிக்கையாக சங்கம் அமைக்க கோருவதே இருந்தது’. சாம்சங் நிர்வாகம் மறுத்த நிலையிலும் தமிழ்நாடு அரசின் தொழிலாளர் துறையில் சங்கத்தை பதிவு செய்வதற்கான வழக்கமான நடைமுறையில் சி.ஜ.டி.யு வழிகாட்டுதலில் ஊழியர்கள் ஈடுபட்டனர். 45 நாட்களில் விண்ணப்பம் ஏற்கப்பட்டது அல்லது நிராகரிக்கப்பட்டது என்று சொல்ல வேண்டிய தொழிலாளர் நலத்துறை அமைதி காத்தது, அரசின் நிர்வாகத்திற்கு ஆதரவான போக்காகவே வெளிப்பட்டது.
இதைத் தொடர்ந்தே ஊழியர்கள் சங்கத்தை பதிவு செய்து தரக் கோரி தொழிற்சங்கங்களின் பதிவாளருக்கும், தொழிலாளர் நலத்துறை துணை ஆணையருக்கும் உத்தரவிடக் கோரி அந்தச் சங்கத்தைச் சேர்ந்த ’எல்லன்’ என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வேலை நிறுத்தம் தொடர்ந்து நடைபெற்ற நிலையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு உயர்நீதிமன்றத்தின் முடிவினை அரசு ஏற்று நடக்கும் என்றார். ஆனால் அதுவரை தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தைக் கைவிட்டு பணியை துவங்க கோரினார். தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா சங்கத்தினை அங்கீகரிப்பதைத் தவிர்த்து பிற கோரிக்கைகளான தரமான உணவு, ஏ.சி. பொருத்திய வாகனங்கள், ஆகிய வசதிகள் செய்துத் தரவேண்டும் என்கிற சில கோரிக்கைகளை நிறுவனம் ஏற்றுக் கொண்டதாக சொன்னார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், சாம்சங் ஒரு பன்னாட்டு நிறுவனம் என்பதைக் குறிப்பிட்டு அரசியல் பின்புலத்தைக் கொண்ட சங்கம் அமைப்பதைத் தவிர பிற அனைத்துக் கோரிக்கைகளையும் சாம்சங் ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவித்தார். இவை அனைத்தும் ஒருமாதகால இடைவெளியில் வெவ்வேறு கட்டத்தில் அரசின் பிரதிநிதிகள் பேசியவை.
இதனைத் தொடர்ந்து ஊடகங்களில் சங்கம் அமைப்பதில் தொழிலாளர் உரிமை என்கிற மைய விவாதம் வேறு பல திசைகளில் திரும்பியது. மையநீரோட்ட ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில், வேலை நிறுத்தம் அந்நிய முதலீட்டை பாதிக்கும் எனவும், உற்பத்தி இலக்கில் பின்னடைவு ஏற்படும் என்கிற அடிப்படையிலும் கருத்துருவாக்கம் நடைபெற்றது. இது திராவிட மாடல் என்று சொல்லும் திமுக அரசின் பொருளாதார மற்றும் ஊழியர் நலக்கொள்கையை அம்பலப்படுத்தும் செயலாகவே மாறிபோனது.
முதல்வர் கடந்தகாலங்களில் பல உலக நாடுகளுக்குச் சென்று ஈர்த்த முதலீடுகள் தடைப்படுமென கூறப்பட்டது. தொழிலாளர்களின் உரிமைகளுக்காக நடத்தப்படும் கூட்டு பேரங்களும் (Collective Bargaining) தொடர்ந்து நடத்தப்படும் வேலைநிறுத்தங்களும், போராட்டங்களும் தமிழ்நாட்டில் தொழிற்சாலை அமைவதற்கான தகுந்த சூழலை கெடுப்பதாகவும், தொழிற்சங்க நடவடிக்கைகளால் ஏற்கனவே இருக்கின்ற தொழில்களும் மூடப்படுவதாகவும் கூறப்பட்டது. இதில் உண்மை இருக்கிறதா?
ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் (Union Labour ministry) தரவுகளின் (2008-2018)படி, அந்த 10 ஆண்டுகளில் அதிக வேலைநிறுத்தப் போராட்டங்கள் நடைபெற்ற மாநிலங்களில் முதலிடம் வகிப்பது தமிழ்நாடு. ஆனால் அதே காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில்தான் அதிக தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்திய தொழில் நிறுவனங்களில் 16% நிறுவனங்கள் தமிழ்நாட்டிலேயே இருக்கின்றன. தொழிளாளர் விகிதமும் பிற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில்தான் அதிகம். இந்த எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றது. இது, தொழிலாளர் உரிமைப் போராட்டங்கள் நிறுவனங்களை துரத்திவிடுகின்றன என்கிற வாதத்தை அடிப்படையற்றதாக மாற்றுகிறது.
இரண்டாவது, தொழிற்சங்க நடவடிக்கைகளால் பொருளாதாரம் பாதிக்கப்படுமென்கிற வாதம். பொருளாதார வளர்ச்சியும் தொழில் வளர்ச்சியுமுற்ற நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கின்ற நாடு சீனா. அதன் நிறுவனங்களில் சொழிற்சங்கங்களின் விகிதம் 44%. ஆனால் இந்தியாவில் 20%. தொழில் வளர்ச்சியும் பொருளாதார வளர்ச்சியிலும் இந்தியாவைக் காட்டிலும் பன்மடங்கு வளர்ச்சி அடைந்திருக்கிற ஸ்காண்டினேவியன் நாடுகளில் சங்க உறுப்பினர்/தொழிலாளர் விகிதம் இந்தியாவை விட அதிகமாக இருக்கிறது.
வேறு ஒரு முக்கிய எடுத்துக்காட்டைப் பார்ப்போம். இன்று உலகத்தின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் உற்பத்தி மண்டலமாக அமெரிக்காவின் டெட்ராய்ட்தான் விளங்குகிறது. அங்கும் தொழிலாளர் நலன் என்பது சங்கத்தின் செயல்பாடுகளால்தான் பாதுகாக்கப்படுகிறது.
கீழே கொடுக்கப்பட்டுள்ளவை அமெரிக்காவில் தொழிலாளருக்காக இயங்கும் சில முக்கியமான தொழிற்சங்கங்களின் பட்டியல்.
- 1. Specific Trade Unions
- **Automotive and Aerospace**
- United Auto Workers (UAW)
- International Brotherhood of Teamsters (IBT)
- International Association of Machinists and Aerospace Workers (IAM)
- International Union, United Automobile, Aerospace, and Agricultural Implement Workers of America (UAAAIW)
- **Manufacturing and Metal Workers**
- United Steelworkers (USW)
- United Electrical, Radio, and Machine Workers of America (UE)
- International Brotherhood of Boilermakers (IBB)
- International Union of Painters and Allied Trades (IUPAT)
- Sheet Metal, Air, Rail, and Transportation Workers (SMART)
- **Service Workers**
- Unifor
- United Food and Commercial Workers International Union (UFCW)
- National Nurses United (NNU)
- Service Employees International Union (SEIU)
- **Construction and Laborers**
- Laborers’ International Union of North America (LIUNA)
- Plumbers and Pipefitters Union (UA)
- **Transportation and Logistics**
- Transport Workers Union of America (TWU)
- International Longshore and Warehouse Union (ILWU)
- **Education and Public Sector**
- American Federation of Teachers (AFT)
- American Federation of State, County, and Municipal Employees (AFSCME)
- National Education Association (NEA)
- **Entertainment**
- Screen Actors Guild‐American Federation of Television and Radio Artists (SAG-AFTRA)
- **Telecommunications**
- Communication Workers of America (CWA)
- 2. Labor Federations
- American Federation of Labor and Congress of Industrial Organizations (AFL-CIO)
- Change to Win Federation
எட்டு மணி நேர வேலைக்கான மிகப்பெரிய தொழிலாளர் போராட்டம் கூட அமெரிக்காவின் சிக்காகோவில் தான் முதன்முறையாக நடைபெற்றது. இந்தியாவில் நூற்றாண்டு தொழிற்சங்க பாரம்பரியமும், மிக முக்கியமான தொழிலாளர் போராட்டங்கள் நடந்த சென்னை தான் இந்தியாவின் டெட்ராய்டாக தொழில் வளர்ச்சியில் மிக முக்கிய மையமாக இருக்கிறது என்பதை பொருத்திப் பார்த்து தெரிந்துக் கொள்ளலாம். இதனடிப்படையில் பார்த்தோமெனில் மேற்சொன்ன வாதங்கள் அடிப்படையற்றதாக ஆகிறது.
சங்கங்கள் உரிமைகளை பேரம்பேசி பெற்றுக்கொள்ள மிக முக்கியமானவையாக இருக்கிறது. தொழிலாளர்களுக்கு மட்டுமல்லாது முதலாளிகளுக்கும் பல்வேறு வகையான இத்தகைய சங்கங்கள் இருக்கிறது. ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியாக அவர்கள் தங்களுக்கு அரசு ஏற்படுத்தித் தருகிற நிதி மானியம், மின்சாரம், வரிச்சலுகைகள், ஆகிய அனைத்து வசதிகளையும் தாண்டி அரசிற்கு கூடுதல் நெருக்கடிகள் தந்து தங்களுக்கு வேண்டியவற்றைச் செய்துக் கொள்கின்றன.
India Cellular & Electronics Association (ICEA), Federation of Indian Chambers of Commerce and Industry (FICCI), Confederation of Indian Industry (CII) போன்ற தொழில்துறை சங்கங்கள் 2024 நிதி பட்ஜெட்டில் தங்களுக்கு சாதகமாக மானியங்கள், வரி விலக்குகள் போன்ற சலுகைகளை கோரியிருக்கின்றன. இதற்காக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை சந்தித்து, தங்களின் தேவைகளை நேரடியாக விளக்குவதன் மூலம், இச்சங்கங்கள் தங்கள் வளர்ச்சிக்கு ஏற்ற பொருளாதார கொள்கைகளை கொண்டுவருகின்றன. சமீபத்திய சாம்சங் தொழிலாளர் போராட்டத்தின்போதும் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக இச்சங்கங்கள் கடிதம் ஒன்றை எழுதின. இத்தகைய போராட்ட சூழல் முதலீடுகளை குறைத்துவிட வாய்ப்பிருப்பதாகவும், அதனால் அரசு தலையிட்டு விரைந்து இதனை முடித்து வைக்க வேண்டுமெனவும் அதில் மறைமுகமாக குறிப்பிட்டிருந்தது.
மின்னணு துறையிலுள்ள சில தொழில் சங்கங்கள்:
- Confederation of Indian Industry (CII)
- Federation of Indian Chambers of Commerce and Industry (FICCI)
- Electronics and Computer Software Export Promotion Council (ESC)
- India Cellular & Electronics Association (ICEA)
இந்திய ஆட்டோமொபைல் முதலாளிகளின் சங்கங்களுள் சில அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.
Society of Indian Automobile Manufacturers (SIAM) |
Automotive Component Manufacturers Association of India (ACMA) |
Federation of Automobile Dealers Associations (FADA) |
Association of Indian Forging Industry (AIFI) |
Society of Manufacturers of Electric Vehicles (SMEV) |
India Energy Storage Alliance (IESA) |
Indian Machine Tool Manufacturers’ Association (IMTMA) |
தொழிலாளர்கள் சங்கம் அமைக்கப்படும்போது ஏற்படுவதாகச் சொல்லப்படுகிற இத்தகைய பின்னடைவுகள் முதலாளிகளின் சங்க நடவடிக்கைகளின்போது ஏற்படுகிறதா?
இதற்கு மாறாக, முதலாளி சங்கங்கள் அரசை நேரடியாக அணுகி, தங்களுக்கான சாதகமான வரி சலுகைகள் மற்றும் மானியங்களை பெறுவதற்கு முயல்கின்றன. அவர்கள் அரசின் கொள்கைகளை தங்களுக்கு ஏற்ற முறையில் மாற்றவும் வலியுறுத்துகின்றனர். இதன் மூலம், தொழிலாளர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு, அவர்களை சுரண்டவும், துன்புறுத்தவும் ஒரு சூழல் உருவாகிறது.
கட்டுரையின் ஆரம்பத்தில் சொல்லப்பட்ட கோவிட் கால உதாரணம் இங்கு பொருந்தும். அவ்வாறு பெருந்தொற்றுக் காலத்தில் ஒரு உற்பத்தித் துறையை அத்தியாவசிய சேவையாக மாற்றியதன் பயன் என்ன?
தமிழ்நாட்டில் ஆட்டோமொபைல் உற்பத்தி 2019-ல் அடிப்படை உபயோக சேவைகளாக மாற்றப்பட்டது, இது இத்தகைய சங்கங்களின் அழுத்தத்தால் நிகழ்ந்தது; இதனால் தொழிலாளர்களின் போராட்ட உரிமைகள் பறிக்கப்பட்டன. இந்த மாற்றம், தொழிலாளர்களின் உரிமைகளை பாதித்தது, ஏனெனில் அடிப்படை உபயோக சேவைகளாக வகைப்படுத்தப்பட்ட பிறகு, தொழிலாளர்களுக்கு போராடுவதற்கான சட்ட ரீதியான உரிமைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. இந்த வரம்பினை அடுத்தகட்டமாக நகர்த்தி அரசுக்கு அழுத்தம் கொடுத்து ஆட்டோமொபைல் உற்பத்தியை அடிப்படை தேவைப் பட்டியலுக்கு கொண்டு சென்றனர்.
கோவிட் தொற்றின் முதல் மற்றும் இரண்டாம் அலையின் போது, சென்னையின் அருகிலுள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் அதிக தொற்றுகள் பதிவானது குறிப்பிடத்தக்கது. இப்பகுதிகளில் சென்னையின் முக்கியமான ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. இந்த தொற்றினால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் பலர் உயிரிழந்தாலும், அவர்களின் குடும்பங்களுக்கு தேவையான இழப்பீடுகள் பெரும்பாலும் வழங்கப்படவில்லை.
தொழிளாளர் சட்டங்கள் அனைத்தும் தொழிலாளர் விரோதமாக மாற்றியமைக்கப்படுவதன் பின்னாலும் இவ்வமைப்புகளே இருக்கின்றன. அரசுக்கு இத்தகைய அழுத்தம் கொடுத்து இவற்றை செய்ய பல்வேறு சங்கங்கள் இருக்கின்ற போது தொழிளாளர் இயக்கங்கள் அரசியல் கட்சியினுடைய பிரதிநிதிகளை தங்களது பேரம் பேசும் பிரதிநிதிகளாக பயன்படுத்துவதில் தவறென்ன இருந்துவிட முடியும்?
தொழிலாளர்கள் தொழிற்சங்க நடைமுறையில் அவர்களை வழிநடத்த வெளி நபர்கள் இருக்கலாம் என்பது நூற்றாண்டு போராடி பெறப்பட்ட சட்ட உரிமை. உழைப்பை தவிர வேறு ஏதும் அறியாத தொழிலாளர்கள் கோரிக்கையை அனைத்து வாய்ப்புகளும், அதிகாரம் இருக்கும் நிர்வாகம் எளிதாக மறுக்கும் நிலையில் அந்த கோரிக்கையின்பால் உள்ள தர்க்க நியாயங்களை, அதற்கான சட்ட நுணுக்கங்களை, அரசியல் பொருளாதார பார்வையை வழங்கவே அதில் அனுபவம் உள்ள வெளி நபர்கள் ஈடுபடுகிறார்கள் அல்லது தொழிலாளர்கள் அவர்களை நாடுகிறார்கள். அது தொழிலாளர் உரிமை. இந்த உரிமை போராட்டத்தை தமிழ்நாடு (சென்னை மாகாணம்) நூற்றாண்டுகளுக்கு முன்பே நடத்தியுள்ளது.
ஆனால் அதே நிலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாம்சங் தொழிலாளர்கள் தனக்கான சங்கம் அமைத்துக் கொள்ளும் உரிமைக்காக போராட வேண்டியுள்ளது. மேலும் இந்த நிறுவனத்தின் பெரும்பாலான தொழிலாளர்கள் இந்த கோரிக்கைக்கு ஆதரவளித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தார்கள்.
எந்த ஒரு நிறுவனமும் தொழிலாளர்கள் தங்களுக்கான அமைத்துக் கொண்ட தொழிற்சங்கங்களுடன் (ஒன்றுக்கும் மேற்பட்ட தொழிற்சங்கம் இருந்தாலும் கூட) கூட்டு பேரம் அடிப்படையில் தொழிலாளர்களின் சம்பளம் மற்றும் தொழிலாளர்களின் இதர நலம் சார்ந்த விடயங்களை இருதரப்பு ஒப்பந்தத்தின் உறுதி செய்ய வேண்டும் என்பது விதி. அமெரிக்காவின் எந்த ஒரு ஆட்டோ மொபைல் நிறுவனமும் தொழிலாளர்களின் சம்பள பேச்சு வார்த்தையை இந்த தொழிற்சங்கங்கள் மூலமாக மட்டுமே பேச முடியும். அனைத்து வசதி வாய்ப்புகளையும் கொண்டுள்ள பன்னாட்டு நிறுவனங்களே தங்களுக்கான சலுகைகளை அரசிடம் பேரம் பேசி பெற தங்களுக்கான சங்கங்களை வைத்திருக்கும் போது உழைப்பை மட்டுமே மூலதனமான கொண்ட உழைக்கும் தொழிலாளர்கள் தங்களுக்கான உரிமையை கேட்டுப் பெற தங்களுக்கான சங்கத்தை அமைத்துக் கொள்வது எப்படி எதிரானதாக இருக்கும்?
சங்கம் பதிவு செய்ய மறுக்கும் தொழிலாளர் நல துறைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு விசாரணையில் நீதியை நிலைநாட்ட நீதிமன்றம் சாம்சங் நிறுவனத்தை ஒரு தரப்பாக சேர்க்க அனுமதித்துள்ளது. அரசு தரப்பு அதற்கு வழிவிட்டுள்ளது. சங்கம் பதிவு என்பது தொழிலாளர்களுக்கும், அரசுக்கும் சம்பந்தப்பட்ட ஒன்று இதில் நிறுவனத்தின் நிர்வாகம் கருத்து கூற ஏதும் இல்லை.
சங்கம் பதிவு செய்வது அரசியல் அமைப்பு சட்டம் தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ள உரிமை. இதை கண்ணும் கருத்துமாக திமுக அரசு மறுக்கும் முயற்சியில் ஈடுபடுவது எப்படி திராவிட மாடலாகும்?
திராவிட மாடல் என்பது தொழிலாளர் விரோத தொழிற்சங்க விரோத போக்கை எப்படி செய்ய முடியும். பெரியாரின் பாட்டாளி வர்க்க திராவிட சிந்தனைக்கும் திமுக முன்வைக்கும் திராவிட மாடலுக்கு மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் உள்ளது. நீதிமன்ற முடிவு என்னவாக இருக்கும் என்பது கணிக்க முடியாது? மற்ற கோரிக்கைகள் இருந்த போதிலும் தொழிற்சங்கம் வைக்க மறுக்கும் நிறுவனத்திற்கு எதிராக போராடியதற்கே மக்கள் ஆதரவும், சனநாயக சக்திகள் ஆதரவும் கிடைத்தது. தொழிற்சங்கம் நீதிமன்றங்களுக்கு சென்று எந்த உரிமையும் பெற்றுவிட முடியாது. வீதி மன்றங்களும், மக்கள் மன்றங்களுமே உரிமைகளை வெல்லும் களம்.! அதுவே தொழிற்சங்கங்களின் வரலாறு!.