இந்திய தேர்தல் ஆணையத்தை முற்றுகையிட்ட மே பதினேழு இயக்கம்

SIR எனும் தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்தின் மூலம் தமிழர்களின் வாக்குரிமையை பறித்து தமிழர்களை வஞ்சிக்கும் தேர்தல் ஆணைய அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக நவம்பர் 10, 2025 அன்று சென்னையில் நடைபெற்றது. தேர்தல் ஆணைய அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கூடிய தோழர்கள், பாஜகவிற்கு சாதகமாக செயல்படும் தேர்தல் ஆணையத்தை கண்டித்தும், தமிழர்களின் வாக்குரிமையை பாதுகாக்க வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பினர்.

மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த முற்றுகைப் போராட்டத்தில் மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைவர் தோழர் தமிமுன் அன்சாரி, வேல்ஃபேர் கட்சியின் மாநிலத் தலைவர் தோழர் அப்துல் ரஹ்மான், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் குடந்தை அரசன், தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் நாகை. திருவள்ளுவன், இந்திய தவ்ஜீத் ஜமாஅத் தோழர் சையது அலி, மக்கள் அதிகாரக் கழகத்தின் பொதுச் செயலாளர் தோழர் வெற்றிவேல் செழியன், தாயக மக்கள் கட்சியின் தலைவர் தோழர் தமிழ்ச்செல்வன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தோழர் குமரன், தமிழர் விடுதலைக் கழகத்தின் தலைவர் தோழர் சுந்தரமூர்த்தி, வன வேங்கைகள் கட்சியின் தலைவர் தோழர் இரணியன், தமிழர் விடியல் கட்சியின் தோழர் இளையராஜா, தலித் இயக்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் தோழர் மெலட்டூர் கார்த்திக், தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தோழர் ராஜசேகர், குடியுரிமை பாதுகாப்பு இயக்கத்தின் தோழர் பாலகிருஷ்ணன் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகளும் தோழர்களும் பங்கேற்றனர்.

போராட்டத்தில் பங்கேற்றவர்கள் SIR திட்டத்தை கண்டித்து, இந்திய தேர்தல் ஆணையத்தின் தமிழகத் தலைமைத் தேர்தல் அலுவலரின் அலுவலகம் அமைந்துள்ள தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்ற போது தலைவர்கள், தோழர்கள் என நூற்றுக்கணக்கானோர் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

முற்றுகை போராட்டத்தில் தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் உரை:

“இந்த முற்றுகைப் போராட்டத்தைப் போல ஒரு சிறு கூட்டமாக ஒரு சிறு குரலாக எழுந்ததுதான் ஜல்லிக்கட்டு போராட்டமாக பெரும் தீயாக வளர்ந்து பாரதிய ஜனதா கட்சியை மண்டியிட வைத்தது. அத்தகைய போராட்டத்தை தமிழ்நாடுதான் நடத்தியது. இந்தியாவில் வேறு யாரும் நடத்தவில்லை. இந்த மண்தான் மோடியை பணிய வைத்து தமிழர்களிடத்தில் கெஞ்சுகின்ற ஒரு அரசியலை சாத்தியப்படுத்திய மண். அந்த மண்ணிலிருந்துதான் எஸ்.ஐ.ஆர்(SIR) எதிர்ப்புக்குரலும் எழுகின்றது. 

அன்றைக்கு ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு மெரினா கடற்கரையில் மட்டும் கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் வந்தார்கள். அப்படியான ஒரு எழுச்சியான போராட்டம் நடத்த வேண்டிய தேவை இன்று ஏன் எழுந்தது என்றால், குடியுரிமையை ரத்து செய்யக்கூடிய சதித்ததிட்டம் இதில் இருக்கிறது.

எஸ்ஐஆர்-க்காக அவர்கள் கொடுத்திருக்கக்கூடிய படிவத்தில், வாக்குரிமைக்காக கொடுக்க வேண்டிய ஆவணங்கள் என்று 13 ஆவணங்களைப் பட்டியலிடுகிறார்கள். நம்முடைய முகவரிக்கான ஆவணம், அடையாள அட்டை, நம் பெற்றோரின் ஆவணம் என 12 ஆவணங்களைப் பட்டியலிடுகிறார்கள். கடைசியாக 13வது ஆவணமாக ‘பீகாரினுடைய தேர்தல் பட்டியலில் நம் பெயர் இருக்கிறதா இல்லையா’ என்கின்ற விவரத்தை கொடுத்து பெயரை இதில் இணைத்துக் கொள்ளலாம் என்று தேர்தல் ஆணயம் எதற்காக கேட்டிருக்கிறது?

தமிழ்நாடு எஸ்ஐஆருக்கான விவரங்களிலே பீகாரினுடைய எஸ்ஐஆர் எக்ஸ்ட்ராக்ட்-ஐ எதற்கு சேர்த்தார்கள்? பீகாரின் வாக்காளர் பட்டியலில் ஒருவரின் பெயர் இல்லை என்பது இங்கு எப்படி ஆதாரமாகும்? இதை எதற்கு சேர்த்தார்கள்? இதுவரைக்கும் முறையாக இதுகுறித்து தேர்தல் ஆணையர் பதில் கூறவில்லை.

முதலில் ஆதார் அட்டை வாங்கினால்தான் எல்லா சலுகைகளும் கிடைக்கும் என்று கூறியது பாஜக அரசு. வங்கி முதற்கொண்டு எல்லா இடத்திலும் ஆதார் எண்ணை இணைத்தார்கள். ஆனால் மக்களுடைய ஆதார் விவரங்கள் பொதுவெளியில் கசியக்கூடிய அளவுக்கு நிலைமை மோசமாகியது. ரேஷன் அட்டையில் ஆதார் எண்ணை இணைக்கக் கூறினார்கள். சமையல் எரிவாயு உருளை மானியத்திற்கு ஆதார் எண்ணை இணைக்கக் கூறினார்கள். ஆனால் எரிவாயு உருளை விலை 400 ரூபாயில் இருந்து 1000 ரூபாய் ஆகி விட்டது. இதேபோல கருப்புப் பணத்தை ஒழிக்கப்போவதாகக் கூறியது மோடி அரசு. ஆனால் இன்று கருப்புப் பணத்தைக் கைப்பற்றுகிறோம் என்று கூறி அமலாக்கத்துறையை அனுப்புகிறார்கள். ஜிஎஸ்டி(GST) அமல்படுத்தப்பட்டால் தொழில்துறை வளரும் என்று கூறியது மோடி அரசு. ஆனால் ஜிஎஸ்டி வந்த பிறகு தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டன. இன்றைக்கும் மூடப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இதன் தொடர்ச்சியாக குடியுரிமையை உறுதி செய்வதற்காகத்தான் இவர்கள் இந்த வழியை (SIR) எடுத்திருக்கிறார்கள். குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக இஸ்லாமியர்கள் போராடிய பொழுது “இதை இஸ்லாமியர்களுக்கான பிரச்சனையாக மட்டும் பார்க்காதீர்கள். இது ஒட்டுமொத்த மக்களுடைய பிரச்சனை. இஸ்லாமியர்கள் இதைப் புரிந்துகொண்டு வீதிக்கு வந்திருக்கிறார்கள், போராடுகிறார்கள். அனைத்து மக்களும் வீதிக்கு வர வேண்டும்” என்று அன்றைக்கு மே பதினேழு இயக்கம் கூறியது. இன்றைக்கு பாரதிய ஜனதா கட்சியினுடைய சதி திட்டங்களை புரிந்து கொண்ட மக்களாக இஸ்லாமிய மக்கள் முதல் கட்ட போராட்டத்தை அறிவித்திருக்கிறார்கள். இதில் இணைய வேண்டிய பொறுப்பு எல்லோருக்கும் இருக்கிறது. இது இஸ்லாமியர்கள்-இந்துக்களுக்கான பிரச்சனை அல்ல, ஒட்டுமொத்த குடிமக்களுக்கும் பாரதிய ஜனதா கட்சிக்குமான பிரச்சனை. நமக்கும் பாரதிய ஜனதா கட்சிக்குமான பிரச்சனை. நமக்கும் ஆர்எஸ்எஸ்-க்குமான சண்டை. இந்த சண்டையிலே இவர்களை தோற்கடித்து விரட்ட வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது.

ஆக அன்பானவர்களே, இந்த தேர்தல் ஆணையம் என்பது மோசடியான ஆணையம். எல்லோரும் எஸ்ஐஆருக்கான விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என்று பதிவு செய்தார்கள். ஏனென்றால் அவர்கள் மோசடி செய்வதற்கு நாம் வாய்ப்பு கொடுத்து விடக்கூடாது என்பதில் நமக்கு மாற்றுக் கருத்தே இல்லை. ஜனவரி மாதம் வெளியாகும் இறுதிப் பட்டியலில் நமது பெயர் இல்லையென்றால் தமிழ்நாட்டில் தேர்தலே நடக்கக் கூடாது. முறையான கேள்விகளுக்கு பதிலளிக்காமல் எங்களது பெயர்கள் நீக்கப்பட்டால் தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் தேவையில்லை என்கின்ற முடிவை நாங்கள் எடுக்க வேண்டியிருக்கும். எங்களுடைய தலைமையை முடிவு செய்வதற்கான எந்த யோக்கியதையையும் எந்த டெல்லிக்காரனுக்கும் நாங்கள் தர முடியாது.

கடந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னரே எஸ்ஐஆர்-ஐ நடத்தி இருக்கலாமே? அப்போது ஏன் நடத்தவில்லை? அப்படியென்றால் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போலி வாக்காளர் ஓட்டு போட்டதை (தேர்தல் ஆணையம்) ஏற்றுக் கொள்கிறது என்றால் மோடியினுடைய தேர்தல் வெற்றியை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. 

2024 தேர்தல் முடிந்த பிறகு, அதற்கு அடுத்த மாதத்தில் தமிழ்நாட்டில் எஸ்ஐஆர்-ஐ தொடங்கியிருக்கலாமே? ஏன் அவ்வாறு செய்யவில்லை? பாஜகவிற்கு சாதகமான தேர்தல் ஆணையரை தேர்ந்தெடுப்பதற்குரிய வகையில் அரசியல் சாசனத்தில் மாற்றத்தை கொண்டு வந்த பிறகு, எஸ்ஐஆர்-ஐ எங்கள் மீது திணிப்பதை நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

தேர்தல் ஆணையம் என்பது ஒரு அரசியலமைப்பு அதிகாரம், அது சுதந்திரமான அதிகாரம் பெற்றது. அந்த சுதந்திரமான அதிகாரம் அரசியலமைப்பைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது. அயோத்தியில் தேர்தல் முடிவு ஏன் இரண்டு மணி நேரம் தாமதப்படுத்தப்பட்டது? அது குறித்து எத்தனை பேர் கேள்வி எழுப்பினார்கள்? என்றைக்காவது பாஜக இதற்கு பதில் கூறியதா? கர்நாடகாவில் ஒரு தொகுதியில் ஒரு லட்சம் வாக்குகள் ஏன் அதிகமானது என்று இதுவரைக்கும் பதில் சொல்லவில்லை. ஹரியானாவில் எட்டில் ஒரு வாக்கு திருட்டு வாக்கு என்ற குற்றச்சாட்டிற்கு இதுவரை தேர்தல் ஆணயத்திடம் இருந்து பதில் வரவில்லை. பீகாரில் 35 லட்சம், 40 லட்சம், 60 லட்சம் என்று வாக்காளர் நீக்கப்பட்டதற்கு எந்த பதிலும் வரவில்லை.

உத்திரபிரதேசத்தில் மிகப்பெரும் தோல்வியை தழுவிய பாரதிய ஜனதா கட்சி எஸ்ஐஆர் திட்டத்தின் மூலமாக இந்தியா முழுவதும் திருட்டுத்தனமான வேலையை செய்கிறது. எஸ்ஐஆர் கேட்கும் எல்லா ஆவணங்களையும் கொடுப்பது என்பது கடவுச்சீட்டு(Passport) அனுமதிச்சீட்டு(Visa) போன்றவற்றிற்கு ஆவணங்கள் கொடுப்பதை விட சிக்கலானதாக இருக்கிறது. கடவுச்சீட்டு போன்றவற்றிற்கு ஆவணங்களை சரி பார்ப்பதற்கே பல நாட்களாகும். அவ்வாறெனில் ஒரு மாத காலத்திற்குள்ளாக 6 கோடி மக்களின் தகவலை இவர்களால் எவ்வாறு சரிபார்க்க இயலும்? 

அதிமுக எஸ்ஐஆர் பிரச்சனையில் தமிழனோடு சேர்ந்து நிற்கவில்லை என்றால் அந்தக் கட்சி தனிமைப்பட்டு போகும். அந்த கட்சிக்கான அழிவு வேலையை அந்த கட்சியினுடைய தலைவரே செய்து கொண்டிருக்கிறார். இது கட்சி பிரச்சனை அல்ல. நாம் அனைவருமே அடிப்படை குடியுரிமை பிரச்சனை, வாக்குரிமை பிரச்சனை பற்றி பேசுகின்றோம்.

எஸ்ஐஆர் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியும் இறங்க வேண்டும். ஈழம் என்று சொல்லி 16 ஆண்டுகளாக நா.த.க ஏமாற்றியது போதும். அதேபோலத்தான் நடிகர் விஜய் அறிக்கை வெளியிட்டால் மட்டும் போதாது. வீதிக்கு வந்து போராட வேண்டும்.

எஸ்ஐஆர் பிரச்சனை என்பது தமிழனுடைய அடிப்படை வாக்குரிமை பிரச்சனை. அதற்கு எதிரான இந்த முற்றுகைப் போராட்டம் என்பது ஒரு தொடக்கப் புள்ளி. இதில் இத்தனை அமைப்பு தோழர்கள், ஆளுமைகள் பங்கேற்றது பெரும் நம்பிக்கையைக் கொடுத்திருக்கின்றது. இது அடையாள போராட்டமாக மட்டும் இருந்து விடக்கூடாது. இனி வரும் இரண்டு/ மூன்று மாதங்கள் தேர்தல் ஆணையம் முறையாக வேலை செய்வதை நாம் கவனிக்கப் போகின்றோம். இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் பொழுது அதில் தமிழர்கள் வஞ்சிக்கப்பட்டால், அதை எதிர்த்து பெருந்திரளாக தமிழர்கள் வீதியிலே திரண்டு நிற்க வேண்டும். அவ்வாறாகத்தான் இந்த சதிகளை எல்லாம் நாம் முறியடிக்க முடியும்” என்று கூறினார்.

இதைத் தொடர்ந்து நடந்த ஊடக சந்திப்பில் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கூறியது: “தேர்தல் ஆணையம் அடுத்த ஆண்டு தேர்தல் வருவதற்கு முன்பாக இந்த சிறப்பு திருத்தத்தை ஏன் கொண்டு வந்திருக்கிறது என்பதுதான் அடிப்படை கேள்வி. வாக்காளர் பட்டியல் திருத்துவதை பற்றி யாருக்கும் எந்த எதிர்ப்பும் கிடையாது, மாற்றுக் கருத்தும் கிடையாது. ஆனால் தேர்தலுக்கு முன்பாக அவசர அவசரமாக செய்ய வேண்டிய தேவை என்ன?

ஆதார் அட்டையில் திருத்தம் செய்வதற்கே 10 நாட்கள் ஆகின்றன. அப்படி இருக்கும் பொழுது ஆறரை கோடி பேருக்கு ஏகப்பட்ட ஆவணங்களை வீட்டுக்கே சென்று சரிபார்ப்பது, அதுவும் மூன்று மாதங்களில் சரிபார்ப்பது எப்படி என்ற கேள்வியை நாங்கள் எழுப்புகின்றோம்.

மேலும் 13வது ஆவணமாக ‘பீகார் தேர்தல் பட்டியலில் நாங்கள் இல்லை’ என்று சொல்வது எப்படி ஆதாரமாக இருக்க முடியும்? இந்தியாவில் பல மாநிலங்களில் ஒரே நேரத்தில் எஸ்.ஐ.ஆர் நடத்துகின்றார்கள். பீகார் பட்டியலில் பெயரில்லை என்று சொல்லி தமிழ்நாடு, மேற்கு வங்கம் போன்ற வேறு மாநிலங்களில் ஒருவர் பெயர் கொடுப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதல்லவா? பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இப்படிப்பட்ட ஒரு பித்தலாட்டத்தை செய்கிறது.

மேலும் ஒவ்வொரு தொகுதிவாரியாக எத்தனை வாக்குகள் பதிவாகி இருக்கின்றன, எந்த கட்சிக்கு வாக்கு பதிவாகி இருக்கிறது, எந்த வயதில் இருப்பவர் வாக்குகளை பதிவு செய்திருக்கின்றார்கள் என்கின்ற அனைத்து ஆவணங்களையும் தேர்தல் ஆணையம் வைத்திருக்கின்றது. அத்தனையுமே தரவுகளாக இருக்கின்றது. இவற்றை வைத்துக்கொண்டு அவர்கள் பல்வேறு பித்தலாட்ட வழிகளை செய்கிறார்கள்.

ஹரியானாவில் ஒரே ஒரு பெண்ணினுடைய படத்தை, அதுவும் பிரேசில்  நாட்டு பெண்ணுடைய படத்தை வைத்து 22 இடங்களில் அந்தப் பெண்ணிற்கு வாக்காளர் உரிமை அனுமதிக்கப்பட்டிருக்கிறது. ஒரே வீட்டின் முகவரி நூற்றுக்கணக்கான மக்களுக்கு ஆவணமாக கொடுக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து இதுவரை தேர்தல் ஆணையம் பேசவில்லை. வாக்காளர் தகவல்கள் அனைத்தும் தேர்தல் ஆணையத்தின் சேவையகத்தில் (Server) இருக்கின்றது. தேர்தல் ஆணயத்தினுடைய தரவுதளவுத்தில் (Database) நுழைந்து யார் இது போன்ற போலியான வாக்குகளை திணிக்கிறார்கள் என்பது குறித்து இதுவரை பதிலில்லை.

தரவுதளத்தை ஹேக்(Hack) செய்து பொய் தகவலை நுழைக்க முடிகிறது என்றால், தேர்தல் ஆணயம் மைய அளவிலே இது போன்ற பித்தலாட்டத்தை செய்து வருவதுதான் தற்போது அம்பலமாகி இருக்கிறது. 20 பேர் ஒரே புகைப்படத்துடன் இருப்பது, ஒரே முகவரியில் 100 பேர் இருப்பது போன்றவற்றை வாக்குச்சாவடி நிலையில் (booth level) பண்ண முடியாது. அதை தரவுதளவு (Database) அளவில் தான் பண்ண முடியும். மையப்படுத்தப்பட்ட தரவுதளவுத்தில் (Centralized Database) இதை எல்லாம் மாற்றுவது என்பது ஒரு பித்தலாட்டம்தான்.

500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மோடி கூறியபோது நம்மை கருப்பு பணத்தை பதுக்கி வைத்த திருடர்களாக நடத்தியது போல தற்போதும் நடக்கிறது. நாம் வாக்காளர்கள் என்று உறுதி செய்வதற்கு நாம்தான் போய் நிற்க வேண்டும். ஆனால் தேர்தல் ஆணயத்தினுடைய மைய தரவுதளவுத்தில் பொய்யான போலியான வாக்காளர்கள் திணிக்கப்படுகின்றார்கள். யாரெல்லாம் போலியோ அதை நீக்குவதற்குப் பதிலாக ஆறரை கோடி பேரும் நாங்கள் போலி அல்ல என்று நிரூபிக்க வேண்டிய முறையை கொண்டு வந்திருக்கிறார்கள். ஊரில் 10 திருடனை பிடிக்கிறதுக்கு பதிலாக, ஊரில் இருக்கும் ஒரு கோடி பேர் நான் திருடன் இல்லை என்று காவல் நிலையத்தில் ஆஜராவதை போலத்தான் இந்த முறையைக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஆகவே போலிகளை நீக்கும் முறையாக இல்லாமல் நம்மையெல்லாம் தண்டிக்கக்கூடிய முறையாக SIR இருக்கிறது.

ஆகவே தமிழ்நாடு மக்களுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறோம். நாம் எல்லா தகவலையும் முறையாக பதிவு செய்வோம். வாக்காளர் இறுதி பட்டியலிலே நம் பெயர் வரவில்லையென்றால் ஜல்லிக்கட்டுக்கு எப்படி திரண்டோமோ அது போல் வீதியில் திரள வேண்டும். ஏனென்றால் வாக்குரிமை இல்லை என்றால் குடியுரிமை இல்லை என்று அர்த்தம்.

வருங்காலத்தில் வாக்கு உரிமை எல்லை என்றால் வங்கி கணக்கு வைத்துக் கொள்ள முடியாது, சொத்து வாங்கிக் கொள்ள முடியாது என்றெல்லாம் பாஜக அரசு ஏதேனும் சட்டம் போட்டால் என்ன செய்வது? அதனால் வாக்குரிமையை ஒருபொழுதிலும் நாம் விட்டுவிடக்கூடாது.

இது கட்சி பிரச்சனை அல்ல. தேர்தல் கூட்டணி பிரச்சனை அல்ல. அனைத்து குடிமக்களினுடைய வாக்குரிமை பிரச்சனை. இதற்காக அனைத்து கட்சிகளும் பேச வேண்டும் என்பதுதான் தமிழ்நாட்டு கட்சிகளுக்கு நாங்கள் வைக்கும் கோரிக்கை.

SIR-ஐ ஆதரித்து வழக்கு நடத்துவோம் என்று அதிமுக சொல்வதை தமிழர்களை வஞ்சிக்க கூடிய செயலாகப் பார்க்கிறோம். எஸ்ஐஆருக்கு எதிரான குரல் வலுத்து, பெரும் போராட்டமாக, மக்கள் திரள் போராட்டமாக வரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. அந்த வகையிலே முற்றுகை போராட்டத்தை இப்பொழுது நாங்கள் தொடங்குகிறோம்” என்று கூறினார்.

இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் SIR-ஐ கண்டித்து சென்னையில் அன்று (10-11-2025) தேர்தல் ஆணையம் முற்றுகை போராட்டத்தில் தோழர் திருமுருகன் காந்தி கண்டன உரை மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »