அதானிக்கு வியாபார தூதராக செயலாற்றி வரும் பிரதமர் மோடி அவர்கள் அதானிக்காக இந்திய ஒன்றியத்தின் வெளியுறவு கொள்கையையே மாற்றி அமைத்து வருகிறார். மோடி ஆஸ்திரேலியா சென்றுவந்த பிறகு அதானி அங்கு தொழில் தொடங்குகிறார். அதோடு அந்த தொழிலுக்காக ஸ்டேட் வங்கி அவருக்கு ஒரு பில்லியன் டாலர் கடனாக தருகிறது. அதேபோல மோடி வங்கதேசம் சென்றுவந்த பின்னர், அந்நாட்டில் 1,500 மெகா வாட் மின்சார திட்டத்துக்கான ஒப்பந்தம் அதானி குழுமத்துக்கு கிடைக்கிறது. மேலும் தற்போது இலங்கையில் காற்றாலை மின்சார உற்பத்தி திட்டத்தை அதானிக்கு கொடுத்திருப்பதும் இதே வகையில்தான். மோடி இந்த ஒப்பந்தத்தை அதானிக்கு வழங்குமாறு முன்னாள் அதிபர் இனப்படுகொலையாளன் கோத்தபயாவிற்கு அழுத்தம் கொடுத்ததாக 10 ஜூன் 2022 அன்று இலங்கை மின்வாரிய முன்னால் தலைவர் எம்.எம்.சி பெர்டினாண்டோ கூறியது மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயம்.
அதேபோல மார்ச் 2022 இல், இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகய (SJB) மன்னார் மற்றும் பூனேரி மாவட்டங்களில் எரிசக்தி திட்டங்களை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் இலங்கை மின்வாரியம் (Ceylon Electricity Board) அதானி நிறுவனத்துடன் கையெழுத்திட்டது குறித்து அதானி பின்வாசல் வழியாக நுழைந்துள்ளதாகவும், ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே, இந்தியப் பிரதமரின் மோசமான நண்பர்களுக்கு சலுகைகளை வாரி வழங்குவதாகவும் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் அதானிக்கு சூரிய ஒளிதிட்டத்திற்கு ஒப்புதல் பெருவதற்காக கடந்த இரண்டு வாரங்களாக இலங்கை அரசை மிரட்டி பணிய வைக்கவே 13-வது சட்டதிருத்தம் என்பதை மோடி அரசு கையில் எடுத்துள்ளது. அதோடு பாஜக அண்ணாமலை, ஒன்றிய அமைச்சர் எல் முருகன், மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் இலங்கைக்கு தொடர் பயணம் மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்.
இந்த அழுத்ததிற்கு எதிர் வினையாற்றும் வகையிலே தற்போது கடந்த 26-2-2023 அன்று காரைக்கால் மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கையின் கடல் எல்லையை தாண்டி அத்துமீறி இந்திய ஒன்றிய எல்லைக்குள் நுழைந்து இலங்கை இனவெறி கடற்படை தமிழ்நாட்டு மீனவர்கள் 11 பேர் மீது மனித தன்மையற்ற கொலைவெறி தாக்குதலை நடத்தி உள்ளது.
இதே போன்று 2021ல் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு சரக்கு பெட்டக முனையத்தை அதானிக்கு பெற்று தருவதற்காக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தொடர் அழுத்தம் தரும் விதமாக கொழும்பு சென்று வந்தார். இதன் மூலமாக அந்த ஒப்பந்தத்தை அதானிக்கு இலங்கை கொடுத்தது. இந்த ஒப்பந்தம் கிடைக்கப்பெற்ற மறுநாள் இலங்கை கடற்படை புதுக்கோட்டை மாவட்ட கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த மீனவர் ராஜ்கிரணின் வாயில் உயர் அழுத்த தண்ணீர் பம்பினை திணித்து தண்ணீரை செலுத்தி அவரைப் படுகொலை செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்த கொடூர கொலையை எதிர்த்து மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்கள் இலங்கை ராணுவத்தின் மீது வழக்குபதிவு செய்து அவர்களை கைது செய்யவும், ராஜ்கிரண் உடலை பிணக் கூறாய்வு செய்யவும் கோரி கோட்டைப்பட்டினத்தில் மூன்று நாட்கள் தங்கி தோழர்களுடன் இணைந்து போராட்டம் நடத்தினார். அதன் பின் தோழமைகள் உடன் சேர்ந்து நடத்திய வழக்கின் மூலமாக புதைக்கப்பட்ட ராஜ்கிரண் உடலை தோண்டி எடுத்து பிணக்கூறாய்வு செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்த போராட்டத்திற்காக திமுக அரசு பிணையில் வர இயலாத வழக்கை தோழர் திருமுருகன் காந்தி மீது பதிந்ததும் மிகவும் குறிப்பிடத்தக்கது.
மோடி அரசின் கட்டுபாட்டில் இருக்கும் இந்திய ஊடகங்களில் இலங்கையில் அதானி குழுமம் தொடர்பான சர்ச்சையைப் பற்றிய எந்தவொரு செய்தியும் வெளிவருவதில்லை. மோடி அரசு இலங்கையின் தற்போதைய நெருக்கடி நிலையை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு அதானிக்காக அங்கு பல வகையில் தேவையற்ற அழுத்தத்தை அளித்து வருவதாக அதானி வாட்ச் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது குறி்ப்பிடத்தக்கது.
ஆக, இங்கு வெளியுறவுக் கொள்கையானது நாட்டு மக்களின் நலனுக்கானதாக இருந்த நிலை மாறி மோடியின் ஆட்சியில் அது அதானி போன்ற நிறுவனத்தின் நலனுக்கானதாக மாறிவிட்டது. நாட்டின் வெளியுறவு கொள்கை அதானியின் வணிகத்தை மேம்படுத்தும் கொள்கையாகவே உள்ளது. இல்லையேல் வெளியுறவுக் கொள்கைகளை வகுக்கும் போது எல்லையோர மாநிலங்களில் இருந்து பிரதிநிதியாக ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அம்மாநில மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வழிவகை செய்து இருப்பார்கள். இந்திய வெளியறவுக் கொள்கையை டெல்லியில் இருப்பவர்கள் வகுப்பதால் தான் எல்லையோர மாநிலமான தமிழ்நாட்டின் பிரச்சினைகளை எடுத்துரைக்க ஆளில்லாமல் தமிழ்நாட்டு மீனவர்கள் நாள்தோறும் தமிழின விரோத சிங்கள பேரினவாத கடற்படையால் கொடூரமாக தாக்கப்படுகிறார்கள். இதை தடுக்க வேண்டிய இடத்தில் உள்ள வெளியுறவுத் துறை அதானிக்காக வேலை செய்து கொண்டிருக்கிறன.
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையானது அதானியின் வணிக கொள்கையாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டும் வெவ்வேறு கிடையாது. அதற்கு மற்றுமொரு சான்று மோடி பிரதமரான பின்னர் ஜூன் 2015 முதல் வாரத்தில், இரண்டு நாள் பயணமாக வங்கதேசத்திற்கு சென்றதும், அங்கு தலைவர்களுடன் நடத்திய பேச்சு வார்த்தையில், ‘மின்சார துறையில், இங்கேயும், இந்தியாவிலும் நாம் இணைந்து பலவற்றைச் செய்யலாம்’ என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
அதற்கடுத்து 7 ஜூன் 2015 அன்று, வங்கதேச செய்தித்தாளான தி டெய்லி ஸ்டார், இரண்டு இந்திய தனியார் நிறுவனங்களான அதானி பவர் லிமிடெட் (APL) மற்றும் ரிலையன்ஸ் பவர் லிமிடெட் ஆகியவை வங்கதேச மின்சார வாரியத்துடன் ஒருங்கிணைந்த முதலீட்டிற்கான திட்டத்திற்காக தனித்தனி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoUs-Memoranda of Understanding) கையெழுத்திட்டதாக செய்தி வெளியிட்டது.
10 ஜூன் 2015 அன்று, பாஜக-RSS உடன் நெருங்கிய தொடர்புடைய இந்திய வலதுசாரிய விவேகானந்தா சர்வதேச அறக்கட்டளை, மோடியின் வங்கதேச பயணத்தைப் பற்றி எழுதிய ஒரு வலைப்பதிவில், பிரதமரின் பயணத்தால் இரண்டு பெரிய இந்திய தனியார் நிறுவனங்கள் வங்கதேசத்தில் வெப்ப மற்றும் எரிவாயு ஆலைகளை அமைக்கும் திட்டங்களை அறிவித்துள்ளன. இது நாட்டின் மின் உற்பத்திக்கு பெரும் ஊக்கமளிக்கும் என்று எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதோடு இந்த திட்டத்திற்காக ஜார்கண்ட் மாநிலத்தின் கோடா மாவாட்டத்தில் 10 கிராமங்களில் சுமார் 1000 ஹெக்டேர் நிலத்தை ஒதுக்கி தருமாறு அதானி குழுமம் அரசாங்கத்திடம் கோரியது. அப்போது ஜார்கண்ட் மாநில ஆட்சியிலிருந்த பாஜக அரசு, 2017 மார்ச்-ல் 6 கிராமங்களை சேர்ந்த 917 ஏக்கரை கையகப்படுத்தி தருவதாக அதானி நிறுவனத்திடம் தெரிவித்தது.
இதைத் தொடர்ந்து பாஜக அரசும், அதானி நிறுவனமும் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி, விதிமுறைகளை மீறி, அற்பமான நீதிமன்ற வழக்குகளைத் தாக்கல் செய்து பழங்குடியினர் மற்றும் கிராம மக்களை அவர்களின் பூர்வீக இடத்திலிருந்து அகற்றுவதற்கு பல விதிகளை மாற்றி எழுதி அவர்களை அப்புறப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இப்படி மக்களை அடித்து விரட்டி அவ்விடத்தை ஆக்ரமித்த அதானி கோடா திட்டத்தை செயல்படுத்த இந்திய அதிகாரிகள் மின்சார வாரிய விதிகளையும் மாற்றி அமைத்தனர். டிசம்பர் 2016ல், இந்தியாவின் மின்சக்தி அமைச்சகத்தின் அறிவிப்பில், தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமான நிலக்கரி-மின் நிலையங்களில் உபரித் திறன் இருந்தால் மட்டுமே அண்டை நாடுகளுக்கு மின்சாரத்தை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படும் என்றிருந்தது.
அதாவது அதானி பவர் லிமிடெட் (APL) வங்கதேசத்திற்கு மின்சாரத்தை ஏற்றுமதி செய்ய வேண்டுமாயின் அது உபரி மின்சாரத்தை உற்பத்தி செய்து இருக்க வேண்டும் என்பது விதிமுறை. இப்போது 2023ல் கூட இந்திய ஒன்றியமே மின்சார உற்பத்தியில் தன்னிறைவு பெற்று, உபரி தரும் நாடாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. நிலமை இப்படி இருக்க அதானி குழுமம் மின்சாரத்தை வங்கதேசத்திற்கு ஏற்றுமதி செய்வதற்காக மேலே குறிப்பிட்ட அந்த விதியை மாற்றி இருப்பது தெளிவாகிறது.
தற்போது அதானி பவர் நிறுவனத்திற்கு வங்கதேச மின்சார வாரியம் அனுப்பியுள்ள கடிதத்தில், அதானி வழங்கும் நிலக்கரியின் விலை டன் ஒன்றுக்கு 400 அமெரிக்க டாலர்கள் எனக் குறிப்பிட்டு, சர்வதேச சந்தையில் நிலக்கரியின் விலை தற்போது டன் ஒன்றுக்கு 250 அமெரிக்க டாலர்களாக உள்ளது. சர்வதேச சந்தை விலையை விட இது மிக அதிகம். எனவே நிலக்கரி விலையை அதானி குழுமம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று எழுதியுள்ளது.
அதோடு வங்கதேச மின்சார வாரியத்தின் 2022 ஆண்டறிக்கையில், அதானி மின் நிலையத்தின் கொள்திறன் கட்டணம் வங்கதேசத்தில் உள்ள மற்ற மின் நிலையங்களை விட 16 சதவிகிதம் அதிகம் என்று கூறியிருந்தது. இவ்வாறாக பல மடங்கு விலையை உயர்த்தி கொள்ளைலாபம் ஈட்டும் அதானி நிறுவன ஒப்பந்தத்தை அவர்கள் தொடர விரும்பவில்லை என்பதை, அதானி குழுமத்திடம் இருந்து மின்சாரம் வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யுமாறு வங்கதேச அரசுக்கு அந்நாட்டு மின்சார மேம்பாட்டு வாரியம் கடிதம் எழுதியுள்ளதன் முலம் தெரிந்து கொள்ளலாம்.
ஆனால் மோடி அரும்பாடுபட்டு பல விதிகளை மீறி/மாற்றி அமைத்து அதானிக்காக 2015ல் ஏற்படுத்தி கொடுத்த வங்கதேச மின்சார திட்ட ஒப்பந்தத்தை அவ்வளவு எளிதாக கைவிட முடியாத காரணத்தால் அதை புதுப்பிக்க இந்தியாவின் வெளியுறவு செயலாளர் வினய் வங்க தேசத்திற்கு இரண்டு நாள் பயணமாக கடந்த பிப்ரவரி 15 மற்றும் 16 தேதிகளில் சென்று வந்தார். அப்போது வங்கதேச வெளியுறவுச் செயலாளர் மசூத் பின் மோமனை சந்தித்து இரு நாட்டு அரசியல் உள்ளிட்ட இரு தரப்பு உறவுகள், பாதுகாப்பு, தண்ணீர், வர்த்தகம், முதலீடுகள், மின்சாரம் மற்றும் எரிசக்தி குறித்து விவாதிக்க இருப்பதாக அமைச்சகம் அதன் அறிக்கையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
வெளியுறவு செயலாளர் வினய் சென்றுவந்த பின்னர் அதானி குழுமத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கொண்ட குழு கடந்த பிப்ரவரி 23 அன்று டாக்கா சென்று BPDBன் (Bangladesh Power Development Board) உயர் அதிகாரிகளுடன் சந்திப்பை நடத்தியதாக வங்கதேச செய்தித்தாளான தி டெய்லி ஸ்டார் செய்தி வெளியிட்டுள்ளது.
இவ்வாறாக அதானிக்காக பல சித்து வேலைகளை மோடி அரசு செய்து, உலக பணக்காரர்கள் பட்டியலில் 2014-ல் 609வது இடத்தில் இருந்த அவரை 2022-ல் கிடுகிடுவென 2வது இடத்திற்கு முன்னேற்றியது. கடைசி 3 ஆண்டுகளில் அதானியின் சொத்து மதிப்பு 8 பில்லியன் டாலரில் இருந்து 140 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும் முன் அனுபவம் இல்லாத அதானி மற்றும் அம்பானி போன்ற குஜராத் பனியா கும்பலுக்கு தாரை வார்த்த மோடி அரசு அவர்களின் சொத்து மதிப்பை பன்மடங்காக உயர்த்திப் புதிய சாதனை படைத்தது.
முன்பெல்லாம் விமான நிலைய பராமரிப்புப் பணிகளை செய்ய முன்னனுபவம் இல்லாதவர்களை அனுமதிப்பது இல்லை. ஆனால் தற்போது முன் அனுபவம் இல்லாத அதானிக்கு 6 விமான நிலையங்களை பராமரிக்கும் பணி வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
2014 தேர்தலின் போது அதானி விமானத்தில் பறந்து வாக்கு சேகரித்து வெற்றிடைந்த மோடி, இன்று மக்களின் பணத்தில் தனி விமானத்தில் தன்னுடன், தான் செல்லும் எல்லா நாடுகளுக்கு அதானியை அழைத்து சென்று அவருக்கு முகவராக செயல்பட்டு அந்நாடுகளில் அதானி தொழில் தொடங்க ஏற்பாடு செய்ததோடு இந்திய வங்கிகளில் பல கோடிகளை கடனாக கொடுத்து அவரை உலக பணக்கார வரிசையில் இடம்பெற செய்துள்ளார். இதற்கு இந்திய வங்கிகளை போன்றே ஒன்றிய வெளியுறவு அமைச்சகமும் உதவி புரிந்து வருகிறது.