இந்தியாவின் நீதி பரிபாலனம்: பகுதி 1 – காந்தி கொலை வழக்கு
– தோழர் அ.ஹரிஹரன்
சட்டம் என்பது ஒரு அறிவியல் அல்ல, ஒரு அரசியல்.
வாதங்களின் மூலமாக நியாயத்தை குழி தோண்டி புதைக்குமிடம் இந்திய நீதிமன்றங்கள், அந்த சுடுகாட்டுக்கு அப்பாவி மனிதர்களை பிணங்களாக்க அனுப்பி வைக்கும் தரகர்களே காவல்துறையும் சிபிஐயும்.
காந்தி கொலை வழக்கு குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டவர்கள் 9 பேர்,
- நாதுராம் விநாயக் கோட்சே
- நாராயண அப்தே
- விஷ்ணு ராமகிருஷ்ண கார்கே
- மதன்லால் கே பாஹ்வா
- சங்கர் கிஸ்தியா
- கோபால் விநாயக் கோட்சே
- திகம்பர் பாட்ஜே
- விநாயக் தாமோதர் சவார்க்கர்
- தத்தாரேயா சதாசிவ்
இவர்களைத் தவிர மூவர் குற்றம் சாட்டப்பட்டு கடந்த எழுபது வருடங்களாக தேடப்படும் குற்றவாளிகள்.
- கங்காதர் தாணடவதே
- கங்காதர் ஜாதவ்
- சூர்யதேவ் சர்மா
இந்திய தண்டனை சட்டம் எந்த ஒரு குற்றத்திலும் குற்றம் புரிந்தவரைவிட குற்றம் புரிய தூண்டிய சதி திட்டம் வகுத்தவருக்கே அதிக பட்ச தண்டனை கொடுக்க வேண்டும் என்று சொல்கிறது. அப்படி காந்தி கொலையில் சதிதிட்டம் தீட்டியவர்கள், அதாவது கொலை நடந்த பொழுது கொலை செய்தவர் மற்றும் உதவியவர்கள் தவிர கொலையை முதலிலேயே திட்டமிட்டவர்களும், இந்த சதிதிட்டம் தெரிந்து காவல்துறையிடம் சொல்லாதவர்களும் சதியில் ஈடுபட்டவர்கள் என்ற முறையில் அதிகபட்ச தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும். இதில் தான் வீர் சாவர்க்கரும் கொலையின் சதி திட்டத்தில் உடந்தை என்று அப்ரூவராக மாறிய திகம்பர் கொலை நடைபெறும் முன், வீர்சவார்க்கரை ஆப்தேவும் நாதுராமும் சந்தித்ததாக சொல்கிறார். அதன் கீழாக சதிதிட்டத்தில் வீர்சவார்க்கர் கைது செய்யப்படுகிறார்.
ஆனால் கோபால் கோட்சேவின் கடைசி ஊடக பேட்டியில் கோபாலின் மனைவி காந்தி கொலை செய்யப்பட போவது தனக்கு பத்து நாட்களுக்கு முன்பே தெரியும் என்கிறார். இவர் சட்டப்படி ஒரு குற்றவாளி. ஆனால் வழக்கில் இணைக்கப்படவே இல்லை. மேலும் நாதுராம் கோட்சேவின் தம்பியின் மனைவிக்கு கொலை பற்றி தெரியும் பொழுது கோபால் கோட்சே உதவி செய்ததாக மட்டும் குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனையுடன் தப்பிக்கிறார். இது எப்படி சாத்தியமானது என்றால், கோபால் கோட்சேவின் மனைவியே பதில் சொல்கிறார், நாதுராம் கோட்சே கொடுத்த ஒப்புதல் வாக்குமூலம் தான் காரணம் என்கிறார். அதாவது நாதுராம் மட்டுமே செய்ததாகக் கூறி மற்றவர்களின் குற்றங்களை ஒப்புதல் வாக்குமூலம் மூலமாக மறைத்துவிடுகிறார்.
இதனாலேயே வீர் சவார்க்கர் கீழமை நீதிமன்றத்திலேயே குற்றமற்றவர் என்று விடுதலை செய்யப்படுகிறார். வீர் சவார்க்கரின் தம்பி நாரயண் சவர்க்கரின் மகனுக்கும் கோபால் கோட்சேயின் மகள் ஹிமானிக்கும் திருமணம் நடக்கிறது. ஹிமானி இந்து மகா சபையின் தலைவரும் ஆகிறார். அபிநவ் பாரத் என்ற அமைப்பின் தலைவராகவும் ஆகிறார். அபிநவ் பாரத் அமைப்பு தான் மலேகான் குண்டுவெடிப்பு, குஜராத் சம்ஜோத எக்ஸ்பிரஸ் எரிப்பு, மெக்கா மசுதி குண்டு வெடிப்பு போன்றவற்றில் குற்றம் சாட்டப்பட்ட இந்து பயங்கரவாத அமைப்பு.
திகம்பர் பாட்ஜே அப்ரூவர் ஆனதால் மன்னித்து விடுதலை செய்யப்பட்டார். அப்பொழுது இந்திய உச்சநீதிமன்றம் உருவாக்கப்படவில்லை அதனால் அந்த பஞ்சாப் உயர்நீதி மன்றத்தில் குற்றவாளிகள் எழுவரும் மேல் முறையீடு செய்தனர். இதில் தத்தாத்ரேய சதாசிவ் பாச்சுரே விடுதலை செய்யப்பட்டார். இவர் ஒரு மருத்துவர் இவரிடம் வாங்கிய துப்பாக்கியை கொண்டே காந்தியை சுட்டதாக குற்றச்சாட்டு ஆனால் உயர்நீதிமன்றம் அதற்கு ஆதாரம் இல்லை என்று விடுதலை செய்தது.
அதே போல் சங்கர் கிஸ்தையா காந்திகொலைக்கு 10 நாட்களுக்கு முன்பாக ஜனவர் 20ஆம் தேதி காந்தி பேசவிருந்த கூட்டத்தில் கையெறி குண்டு வீசி கொலை செய்ய முயன்றதில் குண்டு வீசியது மற்றும் துப்பாக்கியை சோதனை செய்தது என்ற குற்றங்களின் கீழாக கைது செய்யப்பட்டவர் திகம்பர் பாட்ஜேவுடன் இருந்தவர் என்று குற்றம் சாட்டப்பட்டவர், போதுமான ஆதரங்கள் இல்லை என்று உயர்நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார், ஒருவரின் வாக்குமூலத்தை வைத்து மற்றொருவரை தண்டிக்கக் கூடாது என்ற இந்திய தண்டனைச் சட்டத்தின் கூற்றுப்படி.
காந்தி கொலையில் சதிதிட்டம் தீட்டியவர்கள் யார் என்பதோ அல்லது ஆயுதமான துப்பாக்கியை எங்கிருந்து வந்தது என்பது தெரியாமலேயே வழக்கு முடிவுக்கு வந்து நாதுராம் கோட்சேவும், நாரயான் ஆப்தேவும் தூக்கிலிடப்பட்டனர். மற்ற மூன்று பேர் கோபால், மதன்லால், விஷ்ணு கார்கரே, ஆயுள் தண்டனையும் பெற்றார்கள்.
காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற மூவரும் 1964 அக்டோபர் மாதம் 13ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டனர். விஷ்ணு கார்க்கரே தனது அஹமதாபாத்தில் ஹோட்டல் வணிகத்தை தொடர்ந்தார், மதன்லால் பாஹ்வா ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு மும்பையில் வாழ்ந்தார், குழந்தையில்லாததால் ஒரு மகனை தத்தெடுத்துக் கொண்டார். கோபால் கோட்சே ஒன்பது புத்தகங்கள் எழுதினார், அவரின் மகள் ஹிந்து மகா சபை, அபிநவ் பாரத் தலைவராக வந்தார்.
அனால் இன்று வரை துப்பாக்கி யாருடையது என்று தெரியவில்லை, அதை கொடுத்தாக தான் விடுதலை செய்யப்பட்ட டாக்டர் பார்ச்சுரே குற்றமற்றவர் என்று விடுதலை செய்யப்பட்டார், மேலும் தேடப்படும் குற்றவாளிகளான கங்காதர் தாண்டவதே, காங்காதர் ஜாதவ், சூர்யதேவ் சர்மா ஆகியோரும் துப்பாக்கியை வாங்க உதவியர்கள் என்றே பாச்சுரேவுடன் சேர்த்து குற்றம் சாட்டப்பட்டவர்கள். இவர்கள் மூவரையும் இன்று வரை காவல்துறை தேடிக் கொண்டுள்ளது.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட கோபல் கோட்சே உட்பட யாரும் சாகும்வரை துப்பாக்கியை பற்றிய உண்மையை வெளியில் சொல்லவில்லை. 1964இல் விடுதலை செய்யப்பட்ட கோட்சே இராணுவ பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மீண்டும் கைது செய்யப்பட்டு மேலும் ஒரு வருடம் சிறையில் இருந்து விடுதலை ஆனார்.
தேடப்படும் குற்றவாளியான காங்காதர் தாண்டவதேயின் மகன் சந்திரசேகர் தனது கடைசி பேட்டியில் துப்பாக்கி குறித்த மர்மம் வெளியானால் அது இந்திய அரசியலில் மிகப்பெரும் புயலாக உருவெடுக்கும் என்றார்.
ஆனால் காந்தி கொலை செய்யப்பட்டதற்கான நீதி நாதுராம் கோட்சேவையும், நாரயாண அப்தேவையும் தூக்கிலிட்ட பொழுதே முடிந்து விட்டது. நம்புங்கள் இந்திய நீதிமன்றங்கள் அப்பழுக்கற்றவை..
தொடரும்..
அடுத்ததாக இந்திரா கொலை வழக்கு…
இத்தொடர் கட்டுரையை எழுதிய தோழர் ஹரிஹரன், தமிழ்த்தேசிய களத்தில் மிகத்தீவிரமாக களமாடியவர். தமிழீழ இனப்படுகொலை, கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு, எழுவர் விடுதலை, முல்லைப்பெரியாறு அணை மீட்பு, மீத்தேன் எதிர்ப்பு போராட்டம் உள்ளிட்ட தமிழக வாழ்வுரிமை போராட்டங்கள் அனைத்திலும் வீரியமாக செயல்பட்டு மே பதினேழு இயக்கத்திற்கு உறுதுணையாக இருந்தவர். இவர் கடந்த நவம்பர் 29 அன்று உயிரிழந்தார். அவர் தனது முகநூல் பக்கத்தில் தொடர் கட்டுரையாக எழுதியவற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்து, இங்கு மறுபதிப்பு செய்கிறோம்!