இந்தியாவின் நீதி பரிபாலனம்: பகுதி 3 – ஜெனரல் வைத்யா படுகொலை
– தோழர் அ.ஹரிஹரன்
இந்திரா கொலை வழக்கில் பொற்கோயிலில் இராணுவம் நுழைந்ததற்கான பழிவாங்கும் நடவடிக்கையாக சொல்லி ஒரு மூன்று பேர் திட்டம் தீட்டி ஒரு நாட்டின் பிரதமரை கொலை செய்தார்கள் என்று முடித்து வைத்ததை பார்த்தோம்.
இந்திய இராணுவத்தின் தலைவரான ஜெனரல் அருண் ஸ்ரீவாத்சவா வைத்யாவும் பொற்கோயிலில் இராணுவம் நுழைந்தமைக்காக கொல்லப்பட்டவர் தான் அதுவும் இரண்டு வருடங்கள் காத்திருந்து. 1984 நடந்த பொற்கோயில் நிகழ்வின் பொழுது இராணுவ ஜெனரலாக இருந்தவர் தான் ஏ.எஸ்.வைத்யா, அவர் 1986 ஜனவரி 31ஆம் தேதி பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அதன் பிறகு பூனேயில் தனது ஒய்வு காலத்தை கழிக்க வருகிறார். அங்கு ஆகஸ்ட் 10ஆம் தேதி 1986 அன்று காலை 10.00 மணிக்கு அவர் காரின் அருகில் வந்த இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். அவரது மனைவி காயம் அடைந்தார், உடனிருந்த பாதுகாவலர் ஒருவரும் காயம் அடைந்தார்.
சுட்டவர்கள், அவர்கள் வந்த இந்த் சுஜுக்கி வாகனத்தில் தப்பி சென்றுவிட்டனர். முதல் விசாரணையில் வண்டியில் வந்தவர்கள் சவரம் செய்த முகத்துடன் என்று பதிவாகிறது. அதன் பிறகு தேடுதல் வேட்டை நடக்கிறது யாரும் கைது செய்யப்படவில்லை.
இந்த சமயத்தில் செப்டம்பர் ஏழாம் தேதி இண்ட் சுஜூகி வாகனத்தில் வந்த இரண்டு சீக்கியர்கள் பூனேவில் விபத்துக்குள்ளாகிறார்கள். அப்பொழுது கீழே விழுந்தவர்கள் எழுந்து அவர்களிடம் இருந்து விழுந்த பொருட்களை சேகரிக்கிறார்கள். உதவ சென்ற பொதுமக்களை தாங்கள் எடுத்த பொருட்களில் இருந்த துப்பாக்கியை காட்டி மிரட்டி அங்கிருந்து தப்பிச்செல்கின்றனர். அங்கிருந்த பொது மக்களில் ஒருவரான நாரயண பஞ்சரங் பவார் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க, காவல் துறை இருவரை தேடுகிறார்கள். விஷால் டாக்கிஷ் பகுதியில் இருவர் நடந்து செல்கின்றனர் ஒருவர் நொண்டிகொண்டு நடக்கிறார். அவர்கள் மீது சந்தேகம் வந்த காவல் துறையினர் பாய்ந்து பிடிக்கின்றனர். பிடிபட்டதில் ஒருவர் பெயர் சுக்டேவ் சிங் என்ற சுக்கா மற்றொருவர் பெயர் நிர்மல் சிங் என்ற நிம்மா. வாகனத்தில் ஏற்றப்பட்டு கொண்டு செல்லும் பொழுது இருவரும் காலிஸ்தான் ஜிந்தாபாத் என்று குரல் எழுப்பினார்களாம், மேலும் தாங்கள் தான் ஜெனரல் வைத்யாவை கொலை செய்தோம் என்று கூறினார்களாம்.
இவர்களிடம் விசாரித்து மேலும் சிலர் மீது குற்றம் சாட்டப்படுகிறது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள்
1. சுக்தேவ் சிங் (சுக்கா)
2. நிர்மல் சிங் (நிம்மா)
3. யத்விந்தர் சிங்
4. அவ்தார் சிங்
5. ஹர்ஜிந்தர் சிங்
மேலும் தேடப்படும் குற்றவாளிகள்
6. சுக்மிந்தர் சிங் (சுக்கி)
7. தல்ஜித் சுங் (பிட்டு)
8. ஜஸ்விந்தர் கெளர்
9. பல்ஜிந்தர் சிங்
1985ஆம் ஆண்டு தேடப்படும் சுக்கி பூனேயில் ஒரு வீடு வாடகைக்கு எடுக்கிறார், தங்கள் திட்டங்களை வகுக்கவும் நண்பர்களை சந்திக்கவும். பிறகு மே மாதம் 8ஆம் தேதி MFK 7548 ரிஜிஸ்டர் செய்யப்பட்ட இண்ட் சுஜுகி வாகனத்தை சஞ்சீவ் குப்தா என்ற பெயரில் வாங்கினார்கள். அதன் பிறகு சுக்கா ஹோட்டல் அமீரில் ஜூன் 11 முதல் 13 தேதி வரை தங்குகிறார். 13ஆம் தேதி ஹோட்டல் மயூருக்கு மாற்றிக் கொள்கிறார். அதே நாள் மும்பை ஹோட்டல் கமொண்டோவிலும் சுக்கா காணப்படுகிறார். இது எல்லாம் சாட்சியங்களுடன் நிருபிக்கப் படுகிறது. ஜூலை 14 போலி பாஸ்போர்ட்டில் சுக்கி அமெரிக்கா சென்றுவிட்டார் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை, ஆனால் வீட்டை மற்றவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
ஜெனரல் வைத்யா குடியிருந்த பகுதியில் சுக்காவும் ஹர்ஜிந்தர் சிங்கும் ஜெனரல் வைத்யா வீட்டை விசாரித்த சாட்சியங்களும் நீதிமன்றத்தில் வைக்கப்பட்டது. அதன் பிறகே ஆகஸ்ட் 10ஆம் தேதி காலையில் தனது மாருதி காரில் வந்த ஜெனரல் வைத்யாவை, இண்ட் சுஜுகியை ஹர்மிந்தர் ஓட்டி வர பின்னால் அமர்ந்து இருந்த சுக்கா என்ற சுக்தேவ் சிங் தனது துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தார்.
இந்த வழக்கு தடா சட்டம் 3 மற்றும் 4 பிரிவின் கீழாகவும் நடைபெற்றது. வழக்கு ஆரம்பித்த 12ஆம் நாள் சுக்தேவ் செப்டம்பர் 19ஆம் தேதி தனது வாக்குமூலத்தை பதிவு செய்ய விரும்புவதாக சொல்லிவிட்டு ஜெனரல் வைத்யாவை தான் தான் கொன்றேன் என்பதை நீதிமன்றத்தில் ஒத்துக் கொள்கிறார். நீதிபதி 8 நாள் அவகாசம் கொடுத்து எழுத்துப்பூர்வமாக வாக்குமூலம் கொடுக்க சொல்கிறார். செப்டம்பர் 26 அன்று எழுத்துபூர்வ வாக்குமூலத்தை சுக்தேவ் சிங் சமர்பித்தார். ஹர்ஜிந்தர் சிங் தனது வாக்குமூலத்தில் தான் தான் வண்டி ஓட்டினேன் என்பதையும், வண்டி சிகப்பு நிறம் என்பது தவறு கருப்பு நிறம் என்பதையும் குறிப்பிட்டார்.
இதன் பிறகு வழக்கு நடந்து முதல் குற்றவாளியான சுக்தேவுக்கும், 5வது குற்றவாளியான ஹர்ஜிந்தருக்கும் தூக்குதண்டனை விதிக்கப்பட்டு மற்றவர்கள் நிரபராதி என்று மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் விடுதலை செய்தது. மகாராஷ்டிர அரசு உச்ச நீதிமனறம் சென்றது, தடா பிரிவின் கீழான வழக்கு என்பதால் உயர்நீதி மன்றத்தில் முறையிட அனுமதியில்லை, தடா வழக்கை பொறுத்த வரை ஒரே அப்பீல் மட்டுமே அனுமதி. உச்ச நீதிமன்றம் கிழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக் கொண்டது. இருவருக்கு தூக்கு மற்றவர்களை விடுதலை செய்தது.
இதில், வீடு 1985இல் வாடகைக்கு எடுக்கப்பட்ட பின் எதற்கு ஹோட்டலில் தங்க வேண்டும்? அதுவும் ஒரே நாளில் மும்பையில் ஒரு ஹோட்டல் பூனேயில் ஒரு ஹோட்டல் என்று. அதுவும் வெவ்வேறு பெயர்களில். முதல் கட்ட விசாரணையில் குற்றவாளிகள் முகச்சவரம் செய்திருந்ததாக சொல்லப்பட்டது ஆனால் அதன் பிறகு அதைக் குறித்தான எந்த குறிப்பும் இல்லை, தாடியும் தலைப்பாகையுடன் நீள முடியும் சீக்கியர்களின் அடையாளம். கொலையாளிகள் இவர்கள் என்றால், கொலை செய்து ஒரு மாதம் கழித்தும் ஏன் பூனேவிலேயே இருக்க வேண்டும்? குற்றவாளிகள் என்பதற்கான விளக்கமும் இல்லை.
ஆக மொத்தம் உலகின் இரண்டாவது பெரிய இராணுவத்தின் தலைமை தளபதியின் கொலை இரண்டே பேரால் நடத்தப்பட்டது. சதி திட்டத்தில் உடந்தை சென்று சொல்லப்பட்ட 7 பேரில் மூவர் குற்றவாளிகள் இல்லை என்று விடுவிக்கப்பட்டனர். மிச்சம் நான்கு பேரை 33 வருடமாக தேடிக் கொண்டு இருக்கின்றனர்.
இது தான் இந்திய நீதிமன்றம்..
முந்தைய பகுதி இந்திரா காந்தி கொலை வழக்கு..
இத்தொடர் கட்டுரையை எழுதிய தோழர் ஹரிஹரன், தமிழ்த்தேசிய களத்தில் மிகத்தீவிரமாக களமாடியவர். தமிழீழ இனப்படுகொலை, கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு, எழுவர் விடுதலை, முல்லைப்பெரியாறு அணை மீட்பு, மீத்தேன் எதிர்ப்பு போராட்டம் உள்ளிட்ட தமிழக வாழ்வுரிமை போராட்டங்கள் அனைத்திலும் வீரியமாக செயல்பட்டு மே பதினேழு இயக்கத்திற்கு உறுதுணையாக இருந்தவர். இவர் கடந்த நவம்பர் 29 அன்று உயிரிழந்தார். அவர் தனது முகநூல் பக்கத்தில் தொடர் கட்டுரையாக எழுதியவற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்து, இங்கு மறுபதிப்பு செய்கிறோம்!