பெகாசஸ் மூலம் உளவு பார்க்கப்பட்ட சர்வதேச பெண் ஆளுமைகள்
இன்றைய சூழலில், ஒரு பிறந்தநாள் விழாவிலோ அல்லது குடும்ப நிகழ்விலோ எடுத்த புகைப்படங்களை நாம் நம் அலைபேசியில் சேர்த்து வைத்திருப்போம். நம் குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுப்புவதற்காக வைத்திருக்கும் அந்த தனிப்பட்ட புகைப்படம், மறுநாள் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு (morphed) சமூக வலைதளங்களில் பரவினால், நமக்கு ஏற்படும் அதிர்ச்சியை வார்த்தைகளில் விவரிக்க முடியாது.
ஒருநாள் தன் ட்விட்டர் கணக்கைப் பார்த்த கடா ஓயிஸ் (Ghada Oueiss) இதே போன்றதொரு பேரதிர்ச்சிக்கு உள்ளானார். மத்திய கிழக்கில், சர்வாதிகார ஆட்சிகளால் குறிவைக்கப்பட்ட பல பெண் பத்திரிகையாளர்களில் ஒருவர் கடா ஓயிஸ்.
அல்-ஜசீரா தொலைக்காட்சியின் லெபனான் பிரிவு செய்தியாளரான கடா ஓயிஸ், குளியலறையில் பிகினி உடையில் இருப்பது போன்ற ஒரு சித்தரிக்கப்பட்ட புகைப்படம் கடந்த ஜூன் மாதம் ட்விட்டரில் பரப்பப்பட்டது. அந்த புகைப்படங்கள் அவருடைய மேலதிகாரியின் வீட்டில் இருந்து எடுக்கப்பட்டதாக பொய்யான தரவுகளுடன் ஆயிரக்கணக்கான ட்வீட்கள் அடுத்த சில நாட்களில் இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டன. இதனால் அவரை உடல் கேலி (body shaming) செய்வது முதல் பாலியல் தொழிலாளியாக சித்தரிப்பது வரை பல வகையான இணையவழி தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஓயிஸின் பத்திரிக்கையாளர் எனும் பிம்பத்தை உடைக்கும் நோக்கில் அவர் அந்நாட்டின் பண்பாடிற்கு எதிரான உடை உடுத்துபவர் என்றும் நாட்டின் இறையான்மையை மீறியவர் என்றும் சித்தரிக்கப்பட்டது.
சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அல் சவுதை ஆதரிக்கும் ட்விட்டர் கணக்குகளிலிருந்தும் அரசாங்க அதிகாரிகள் சிலரின் அதிகாரப்பூர்வ கணக்கிலிருந்தும் இத்தகைய செய்திகள் அதிகளவில் பரப்பப்பட்டன.
தனது அலைபேசி ஹேக் செய்யப்பட்டதை உணர்ந்த கடா ஓயிஸ், புளோரிடாவின் மாவட்ட நீதிமன்றத்தில் மனு அளித்தார் . ஓயிஸின் அலைபேசியை டிஜிட்டல் தடயவியல் நிபுணர் பரிசோதித்தத்தில், அதிலுள்ள தனிப்பட்ட புகைப்படங்களை ஹேக் செய்ய பெகாசஸ் ஸ்பைவேர் (Pegasus Spyware) பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இஸ்ரேல் நாட்டை சேர்ந்த கண்காணிப்பு தொழில்நுட்ப நிறுவனமான என்எஸ்ஓ (NSO) உருவாக்கிய பெகாசஸ் ஸ்பைவேரை பயன்படுத்தி கடா ஓயிஸ் அலைபேசியில் உள்ள அந்தரங்க தகவல்கள் திருடப்பட்டுள்ளன என்பதும், அவரது தெரியவராமலே அவர் உளவு பார்க்கப்பட்டுள்ளார் என்பதும் தெரிய வந்தது.
இந்நிகழ்வினால் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார் கடா ஓயிஸ். கீழ்க்காணும் வார்த்தைகள் மூலம் அவர் தன் வலியை வெளிப்படுத்துகிறார்:
“இது (பெகாசஸ்) வழக்கமான இணைய துன்புறுத்தல்களில் இருந்து வேறுபட்டது. யாரோ நம் வீட்டில், நம் படுக்கையறையில், நம் குளியலறையில் நுழைந்தது போல் இருக்கிறது. நான் மிகவும் பாதுகாப்பற்றதாகவும் அதிர்ச்சியாகவும் உணர்ந்தேன். நான் மீண்டும் மீண்டும் இணையவழி பாலியல் துன்புறுத்தலுக்கும் உடல் கேலிக்கும் ஆளானேன். பயங்கரவாதிகள் அல்லது குற்றவாளிகளிடமிருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டிய கருவிகள் நல்லவர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும்போது அது எவ்வளவு கொடியது என்பது இப்போது உலகிற்குத் தெரியும். நான் உளவு பார்க்கப்படுகிறேன் என்று சொன்னபோது என்னை பெரிதாக எடுத்துக் கொள்ளாத மக்கள் இப்போது அதை தீவிரமாக எடுத்துக் கொள்கிறார்கள். இப்போது நான் தனியாக இல்லை என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர்கள் என் குரலை ஒடுக்க விரும்புகிறார்கள், ஆனால் நான் அமைதியாக இருக்க மாட்டேன்.”
என்று கூறுகிறார் கடா ஓயிஸ்.
இதுவரை உலகில் உள்ள 125 நாடுகளைச் சேர்ந்த 900-க்கும் மேற்பட்ட பெண் பத்திரிகையாளர்களை ஆய்வு செய்ததில், அவர்களில் கிட்டத்தட்ட 75% பேர் இணையவழி அத்துமீறலை அனுபவித்துள்ளனர். பெண்கள் மக்களுக்கு ஆதரவாக குரல் எழுப்ப எந்த உரிமையும் இல்லை எனும் மோசமான செய்தியை பறைசாற்றவே இத்தகைய ஆபாச தாக்குதல்கள் அவர்கள் மீது தொடுக்கப்படுகின்றன.
பெகாசஸ் ஸ்பைவேரை பயன்படுத்தி குறிவைக்கப்பட்ட மற்றொரு சமூக ஆர்வலர், சவுதி அரேபியாவை சேர்ந்த ஆல்யா அல்வைட்டி (Alya Alhwaiti). அல்வைட்டி, சவுதி அரேபியாவின் முதல் பெண் குதிரையேற்ற வீரர் ஆவார். 2018-இல் பத்திரிக்கையாளர் கஷோகியின் (Khashoggi) படுகொலை குறித்த பரப்புரைக்காகவும், சவுதி அரசாங்கத்தின் NEOM மெகாசிட்டி திட்டத்திற்கு வழி வகுப்பதற்காக, அல்-ஹுவைதாத் பழங்குடியினரின் கட்டாய இடப்பெயர்வை நிறுத்துவதற்கான பரப்புரைக்காகவும் அல்வைட்டி குறி வைக்கப்பட்டார். முதலில் அவருடைய அலைபேசி கருவியில் சில தொழில் நுட்பக் கோளாறுகள் ஏற்படத் தொடங்கின. பின் பல தெரியாத எண்களிலிருந்து அழைப்புகளும், கோப்புகள் மாற்றப்படுவதைக் குறிக்கும் செய்திகளும் அடிக்கடி அலைபேசி திரையில் தோன்றின. ஸ்காட்லாந்து யார்ட் வரை சென்றும் அவர் அலைபேசியை ஹேக் செய்தவர்களை கண்டுபிடிக்க இயலவில்லை.
2020-இல் அவர் குடிபோதையில் இருப்பதைப் போன்றும், பாலியல் குற்றங்களில் ஈடுபடுவது போன்றும் புனையப்பட்ட கதைகளுடன் தனிப்பட்ட படங்கள் ட்விட்டரில் வெளியிடப்பட்டன. சமூக ஊடகங்களில் நூற்றுக்கணக்கான கொலை மிரட்டல்களும், பாலியல் வன்கொடுமை மிரட்டல்களும் வாடிக்கையானது. கடா ஒயிசுக்கு நடந்தது போலவே இத்தகைய மிரட்டல்கள் விடுத்த ட்விட்டர் கணக்குகள், பெரும்பாலும் அரசாங்கத்திற்கு ஆதரவானதாகவும் சவுதி கொடிகள் அல்லது பட்டத்து இளவரசரின் படங்களை முகப்பு படங்களாகவும் கொண்டிருந்தன.
“இத்தகைய மிரட்டல் காரணமாக இரண்டு ஆண்டுகளில் 16 வீடுகளுக்கு இடம் மாறினேன். எப்போதும் பயத்துடன் வாழ்வது கடினம். கஷோகிக்கு அவர்கள் செய்ததை போல் மீண்டும் செய்யத் துணிவார்கள். நான் எந்த விதத்திலும் பாதுகாப்பாக உணரவில்லை. நான் எப்போதும் கண்காணிக்கப்படுவது போல் உணர்கிறேன்”
என்கிறார் அவர். தற்போது அவரது அலைபேசியை ஆய்வு செய்ததில் அதில் பெகாசஸ் ஸ்பைவேர் இருந்தது உறுதியாகியுள்ளது.
பெகாசஸ் மூலம் சாத்தியமான இணைய கண்காணிப்பு, பாலியல் ஆபாசத்தை இன்னும் மோசமானதாக ஆக்கி உள்ளது. இந்த உளவு மென்பொருளால் கண்காணிக்கப்பட்ட ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை, உலகம் முழுவதும் காட்சிப் பொருளாகிவிடுகிறது என்பதே உண்மை.
இந்த உளவு தாக்குதலுக்கு ஆளான மற்றொரு சமூக ஆர்வலர் அலா அல்-சித்திக் (Alaa Al-Siddiq). இவர் மனித உரிமை அமைப்பான ALQST-இன் நிர்வாக இயக்குனரும் ஆவார். கடந்த 2020 இல் அல்-சித்திக்கின் தொலைபேசி பெகாசஸ் மென்பொருளால் ஹேக் செய்யப்பட்டது. 33 வயதேயான அவர், கடந்த ஜூன் மாதத்தில் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட்ஷையரில் நடந்த ஒரு கார் விபத்தில் சிக்கி இறந்து விட்டார். ஆனால் அவர் இறக்கும் வரை, அவரது தனிப்பட்ட புகைப்படங்கள் பெகாசஸ்சால் இணையத்தில் கசிந்து விடுமோ என்ற அச்சத்திலேயே அவர் வாழ்ந்து வந்தார்.
யுனெஸ்கோ நடத்திய ஆய்வில், அரசியல் பேசும் பெண்கள் மட்டுமல்லாது, கல்வி, விளையாட்டு செய்திகள் சேகரிக்கும் பத்திரிக்கையாளர் என அனைத்து துறை பெண் பத்திரிக்கையாளர்களும் இணைய தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர். ஆன்லைன் துன்புறுத்தல் காரணமாக, அவர்கள் மனச்சோர்வு அடைவதும், சிலர் பத்திரிகைத் துறையையே விட்டு முழுவதுமாக விலகுவதும் நடப்பதாக அந்த ஆய்வுகள் கூறுகின்றன.
ஐக்கிய அரபு நாடுகளைச் சேர்ந்த சமூக ஆர்வலர் லூஜெயின் அல்-ஹத்லூல் (Loujain al-Hathloul), அரசுக்கு எதிராகப் போராடியதற்காக 1,000 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்தவர். சில ஆண்டுகளுக்கு முன், சைபர் பாதுகாப்பு மாநாட்டில் அல்-ஹத்லூலின் அலைபேசியை சோதித்தபோது, அவரது மின்னஞ்சல்களை வேறொருவர் ஹேக் செய்து வாசித்து வந்தது தெரிந்தது. அவர் சிறையில் இருந்தபோது அவருடைய அலைபேசியை சவுதி அதிகாரிகள் பறிமுதல் செய்தது முதல் இத்தகைய ஸ்பைவேர் தாக்குதல்கள் ஆரம்பித்தன.
“இது (பெகாசஸ்) மிகவும் அதிர்ச்சியளிக்கிறது, ஆனால் பல ஆண்டுகளாக இருந்து வரும் சைபர் பாதுகாப்பு பிரச்சனைக்கு யாரும் எதுவும் செய்யவில்லை. ஒரு பெண் அநீதிக்கு எதிராக தன் கருத்தை தெரிவிக்க முயன்றால் அல்லது அரசாங்கத்திற்குப் பிடிக்காத ஒன்றைச் சொன்னால், அவரை மிரட்ட அவரின் தனிப்பட்ட படங்களை வெளியிடுவார்கள். இது குறுகிய காலத்திற்கு மிரட்டுவதாக இருக்கும், ஆனால் நீண்ட காலத்திற்கு இது போல் செய்ய முடியாது. தாங்கள் அவமானப்படுத்தப்படுவதையும், ஒடுக்கப்படுவதையும் பெண்கள் உணர்ந்து, கண்டிப்பாக அதற்கு எதிராக ஒன்று திரள்வார்கள்”
என்று கூறுகிறார் லூஜெயின் அல்-ஹத்லூல் .
எப்பொழுதுமே பெண்களின் கருத்து சுதந்திரம் குறித்து பலர் பேசுகிறார்கள். ஆனால் நடைமுறையில் மிக அதிகமாக (நேரடியாகவும் / இணைய வழியாகவும்) குறிவைக்கப்படுவது பெண்கள் தான். கருத்தை கருத்தால் எதிர் கொள்ள இயலாதவர்கள், பெண்களை மிக ஆபாசமாகப் பேசுவது இன்று அதிகரித்துள்ளது. பெண்கள் என்ன அணிய வேண்டும் அல்லது என்ன பேச வேண்டும் என்ற அறிவுறுத்தலில் ஆரம்பித்து, வன்கொடுமை மிரட்டல் வரை எதிர்கொள்கிறார்கள்.
தமிழ்நாட்டிலும் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட சமூக செயற்பாட்டாளர்களை, பத்திரிக்கையாளர்களை குறிவைத்து சமூக வலைதளங்களில் மிகவும் அருவருப்பான, ஆபாச சொற்களால் இந்துத்துவவாதிகள் வசைபாடினர். நடிகை கங்கனா ரணாவத் போன்ற பாஜக ஆதரவு வலதுசாரி சிந்தனை கொண்ட பெண்கள் Z+ பாதுகாப்புடன் வலம் வரும்போது, அரசை கேள்வி கேட்கும் சமூக ஆர்வலர்களின் பெண் குழந்தைகள் பாலியல் மிரட்டலுக்கு ஆளாவது இந்நாட்டில் நடந்திருக்கிறது.
மத அடிப்படைவாதிகள் என்றுமே பெண்களை சமத்துவமாக கருதியதில்லை. பொது வெளியில் பெண்களை தவறாக சித்தரித்தால் அவர்கள் மன ரீதியாக பாதிக்கப்பட்டு தங்களை எதிர்ப்பதிலிருந்து பின்வாங்கி விடுவார்கள் என்று சிந்திக்கும் பாசிச அரசுகளின் குரூர சிந்தனையின் விளைவே உளவியல் தாக்குதல் செயலியான பெகாசஸ். அதனாலேயே அரசுகளின் இந்த உளவு பார்க்கும் இழிசெயலானது ஆபாச (porn) திரைப்படத்தை விட மோசமானது என்று பத்திரிக்கையாளர்கள் கூறுகிறார்கள்.
2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பும் பின்பும் கூட, “ஊடகத்தை கையில் எடுப்போம்” என்று கூறும் பாஜக, பெகாசஸ் மென்பொருள் மூலம் பத்திரிகையாளர்களையும் சமூக ஆர்வலர்களையும் கண்காணிக்கிறது.
இணையக் கண்காணிப்பின் மிகக் கொடிய வடிவமான பெகாசஸ் மென்பொருளால், அதிகாரத்தின் நெம்புகோல்களைக் கட்டுப்படுத்தும் அனைத்து பெண்களும் பத்திரிக்கையாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தடைகளைத் தாண்டி முன்னேற்றம் கண்ட பெண்களை மீண்டும் முடக்கும் தொழில்நுட்ப ஆயுதமான இந்த பெகாசிஸ் உளவு செயலியை எதிர்த்து பெண்கள் அணி திரள வேண்டும்.