
கர்நாடகாவின் பிரபலமான தர்மஸ்தலா கோவிலின் துப்புரவுத் தொழிலாளராக இருந்தவர் சமீபத்தில் அளித்த வாக்குமூலம் பலரையும் நிலைகுலைய வைத்திருக்கிறது. பாலியல் குற்றவாளிகளின் கூடாரமா தர்மஸ்தலா என அதிர்ச்சிக்குள்ளாகும் வகையில் சிறு பெண் பிள்ளைகளிலிருந்து இளம் பெண்கள் வரை கொடூரப் பாலியல் வன்புணர்வுகளுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதாக துப்புரவுத் தொழிலாளி கூறியிருக்கும் தகவல்கள் மனதை உலுக்குகின்றன.
இந்த துப்புரவு தொழிலாளி தர்மஸ்தலா கோவிலில் 1998 – 2014 வரை துப்புரவு வேலை செய்திருக்கிறார். (வழக்கின் தன்மை காரணமாக பெயர் பொதுவெளியில் கூறப்படவில்லை). அவர் தட்சிண கன்னடா காவல் துறையிடம், ஜூலை 3, 2025 அன்று, இரண்டு வழக்கறிஞர்களுடன் வந்து புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அம்மனுவில் கூறியிருக்கும் தகவல்கள்தான் ஒட்டு மொத்த கர்நாடகாவையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளன.

இவரின் பணிக் காலத்தில், பள்ளி மாணவிகள் உட்பட பல இளம் பெண்களின் சடலங்களை தந்து எரிக்க அல்லது புதைக்க சொன்னதாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். பணியிலிருந்த 16 வருடங்களில், எண்ணற்ற பெண்களின் உடலைப் புதைத்து விட்டு குற்றவுணர்ச்சியில் தவிர்த்திருக்கிறார். இந்த செய்திகள் வெளியில் தெரிந்தால் தன்னையும், தன் குடும்பத்தையும் கொன்று புதைத்து விடுவதாக சிலர் மிரட்டியதாகவும் கூறியுள்ளார். இந்தப் பணியிலிருந்து 2014-ல் தப்பித்து வெளியூருக்கு சென்று இந்நாள் வரை மறைந்து வாழ்ந்ததாகவும், 10 வருடங்களாக சடலங்களின் நினைவுகள் குற்றவுணர்ச்சியைத் தூண்டி மனதினை அலைக்கழிப்பதால், இவற்றை வெளியில் சொல்ல வந்திருப்பதாகவும் கூறியுள்ளார். இவரால் புதைக்கப்பட்ட உடல்களின் எச்சங்களை சமீபத்தில் தோண்டி எடுத்து, அதைப் புகைப்படமாக எடுத்து புகார் மனுவுடன் இணைத்து கொடுத்திருக்கிறார். அதனுடன் தர்மஸ்தலாவில் பணிபுரிந்த போது அளிக்கப்பட்ட அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றையும் கொடுத்திருக்கிறார்.
துப்புரவுத் தொழிலாளர் காவல் துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தின் தொகுப்பு :
“ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்த நான், 1995 முதல் 2014 வரை தர்மஸ்தலா கோவிலின் கீழ் துப்புரவுப் பணியாளராக நேத்ராவதி நதியிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சுத்தம் செய்ய பணிக்கு அமர்த்தப்பட்டேன். நான் ஆரம்பத்தில் பல உடல்களை பார்த்தேன். அது பெரும்பாலும் பெண்களுடையவை. தற்கொலையாகவோ அல்லது தற்செயலாக நீரில் மூழ்கி இறந்தவர்களாகவோ இருக்கலாம் எனக் கருதினேன். அந்த சடலங்கள் பெரும்பாலும் துணிகள் இல்லாதவையாக இருந்தன. சில உடல்களில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொன்றதற்கான தடயங்கள் தெரிந்தன. 1998-ம் ஆண்டில் எனது மேற்பார்வையாளர் அந்த சடலங்களை ரகசியமாக அகற்றுமாறு உத்தரவிட்டார். நான் அதனை செய்ய மறுத்து காவலர்களிடம் புகார் அளிப்பதாக சொன்னபோது கொடூரமாகத் தாக்கப்பட்டேன். எனது மேற்பார்வையாளர் குறிப்பிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று சடலங்களை எடுக்கச் சொல்வார். அந்த சடலங்கள் பெரும்பாலும் சிறுமிகளின் வயதை ஒத்தவையாக இருந்தன. அதில் 12-15 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமியின் சடலம் என்னை இன்னமும் உலுக்கிக் கொண்டிருக்கிறது. பள்ளி சீருடை அணிந்திருந்த அச்சிறுமியின் உள்ளாடை மற்றும் பாவாடைகள் காணப்படவில்லை. பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை நெரித்ததற்கான தடயங்கள் அவளது உடலில் இருந்தன. அவளுடைய பள்ளிப்பையுடன் சேர்த்து என்னை புதைக்கச் சொன்னார்கள். 20 வயது மதிக்கத்தக்க இன்னொரு பெண்ணின் உடல் செய்தித்தாளில் சுற்றப்பட்டு என்னிடம் எரிப்பதற்காக கொடுக்கப்பட்டது. அப்பெண்ணின் முகம் அமிலம் ஊற்றி சிதைக்கப்பட்டிருந்தது.

தர்மஸ்தலா பகுதியின் அனாதைகளாக வீடற்று சுற்றி அலைந்த ஆண்கள் மற்றும் பிச்சைக்காரர்கள் கொல்லப்பட்டதற்கு நான் சாட்சியாக இருந்தேன். பல உடல்களை எரிக்கவோ அல்லது புதைக்கவோ வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாக்கப்பட்டேன். 2014-ம் ஆண்டில் என் குடும்பத்தில் உள்ள பருவமடையாத சிறுமியும் எனது மேற்பார்வையாளருக்கு தெரிந்த ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். இதனால் தப்பிக்க முடிவு செய்து யாருக்கும் தெரியாமல் அண்டை மாநிலத்திற்கு சென்று தலைமறைவாக அடையாளங்களின்றி வாழ்ந்தோம். இந்தக் கொலைகளுக்கு பின்னால் உள்ள குற்றவாளிகளையும் அவர்களால் பாதிக்கப்பட்டவர்களையும் வெளிப்படுத்துவதே எனது நோக்கம். சமீபத்தில் நான் ரகசியமாக சென்று தர்மஸ்தலத்தில் புதைக்கப்பட்ட உடல்களின் எச்சங்களை புகைப்படம் எடுத்து வந்தேன். அவற்றையே இங்கு சமர்ப்பித்துள்ளேன்.” – என அந்த துப்புரவு தொழிலாளி வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.
மேலும், “குற்றவாளிகள் பெரும் செல்வாக்கு கொண்ட நபர்கள். கோயில் நிர்வாகம் மற்றும் பிற ஊழியர்களுடன் தொடர்புடையவர்கள் உடல்களை அடக்கம் செய்ய என்னை அவர்கள் மிரட்டி சித்திரவதை செய்தனர். ‘சாட்சிகள் பாதுகாப்பு திட்டம் 2018’ -ன் கீழ், எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு கிடைத்தவுடன் அவர்களின் பெயர்களை வெளிப்படுத்த தயாராக இருக்கிறேன். நான் உண்மை கண்டறியும் சோதனை மற்றும் வேறு எந்த சோதனைக்கும் தயாராகவே இருக்கிறேன்” எனவும் காவல்துறையினரிடம் தெரிவித்து இருக்கிறார்.

இந்த கொலைகள் பற்றிய செய்திகள் கர்நாடகா முழுவதும் பரவிய பின்னும், இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தடயங்களை அழித்து விடும் சாத்தியமிருப்பது தெரிந்தும், வேகமாக செயல்பட வேண்டிய காவல் துறை இவர் புகாரளித்து ஆறு நாட்களுக்கு பின்பும் துப்புரவுத் தொழிலாளி கூறிய இடத்திற்கு சென்று கூட பார்க்கவில்லை எனக் கூறப்படுகிறது. பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை போன்ற கடுமையான குற்றங்களின் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும் போது BNSS-175-பிரிவின்படி தாமதமின்றி விசாரணை தொடங்க காவல்துறைக்கு முழு அதிகாரம் உண்டு. புகார்தாரர் சொல்லும் இடங்களுக்கு சென்று ஆதாரங்களை சேகரித்து ஆவணப்படுத்தும் அதிகாரமும் காவல்துறைக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் காவல் துறையின் தாமதப்படுத்திய செயல் சந்தேகத்தை வரவழைப்பதாக கர்நாடக செய்தி வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த விசாரணை பாரபட்சமற்றதாக நடக்க இவ்வழக்கின் விசாரணை அதிகாரியும், தர்மஸ்தலா காவல் நிலைய துணை ஆய்வாளருமான சமர்த்த கனிகர் என்பவரை மாற்ற வேண்டும் என சில வழக்கறிஞர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கர்நாடகாவில் மகள்களை காணவில்லை என புகாரளித்திருந்த பெற்றோர்கள் அனைவருக்கும் இந்த செய்தி இடியாய் இறங்கியுள்ளது. கோவிலில் இப்படி ஒரு படுபாதகம் நிகழ்ந்திருக்கும் என்று கனவிலும் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள். இந்த கொடூரத்திற்கு தங்கள் மகளும் ஆட்பட்டிருப்பாளோ என்கின்ற குலை நடுங்கும் உணர்ச்சியில் காவல் நிலையங்களைத் தேடி ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.
மக்கள் கோவில்களை சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட புனித தலங்களாக கருதுகிறார்கள். காஷ்மீரில் ’ஆஷிபா’ என்ற 10 வயது சிறுமி கோவில் பூசாரிகளால் கொடூரமாக கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட போது, அக்குழந்தையின் பெற்றோர், ‘நாங்கள் எல்லா இடங்களிலும் தேடினோம். ஆனால் கோவில் என்பதால் அதில் தேடவில்லை’ என்று கதறிய அவலமும் பாஜக ஆட்சியில் நடந்தேறியிருக்கிறது. இவ்வாறு மக்கள் கோவிலை புனிதமாக நினைக்கிறார்கள். ஆனால் கோயிலே கொடியவர்களின் கூடாரமாகி இருக்கிறது.
காவல் துறை மற்றும் புலனாய்வு நிறுவனங்கள் கூட, சந்தேகம் ஏற்படுமாயின், பெரிய நிறுவனங்கள், பெருங் கட்சிகள், இயக்கங்கள் என பாகுபாடு பார்க்காது எதையும் சோதனை செய்ய சட்டப்படி உரிமை இருக்கும் போது, பெரும் மத நிறுவனங்களும், மடங்களும், கோவில்களும் மட்டும் புனிதம் என்கிற ஒன்றைக் காரணமாக வைத்துக் கொண்டு சோதனைகளிலிருந்து தப்பித்துக் கொள்கின்றன. மயிலாப்பூர்வாசிகளின் புனிதமான சங்கர மடம், ஜக்கியின் ஈசா மையம் என எல்லாமே இந்துத்துவ அரசியல் அதிகார மட்டத்தின் பின்புலத்தில் மறைந்து கொண்டு சோதனையற்ற கூடாரங்களாக இருந்து கொண்டிருக்கின்றன.

சங்கர மடத்தில் நடக்கும் ரகசியங்களை அறிந்ததால் சங்கரராமன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். பிரபல எழுத்தாளர் ’அனுராதா ரமணன்’ சங்கராச்சாரி மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தார். வெளியில் தெரிய வந்த இந்த ரகசியங்கள் இன்றி, வேறு என்னென்ன ரகசியங்கள் இன்னும் எந்த சோதனையுமின்றி பார்ப்பனிய அதிகார மட்டங்களால் பாதுகாக்கப்பட்டு இருக்கிறதோ தெரியவில்லை. கோவையில் உள்ள ஜக்கியின் ஈசா யோகா மையத்தில் தியானம் செய்ய வந்த ’சுபஶ்ரீ’ என்ற பெண் கடந்த வருடம் ஆசிரமத்திலிருந்து தப்பி ஓடி வந்த காட்சிகள் வெளியாயின. அடுத்த நாள் ஒரு கிணற்றில் பிணமாகக் கிடந்தார். அந்த வழக்கு இன்னும் தீர்வு எட்டப்படாமல் மர்மமாகவே நீடிக்கிறது. சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை, நில அபகரிப்பு, சுற்றுசூழல் பாதிப்பு போன்ற எத்தனையே மர்மங்கள் நீடிக்கும் மையமாக அது இருக்கிறது. யோகா நிறுவனமாக இருக்கும் அம்மையத்தில் தகனமேடை அமைக்கப்பட்டிருப்பது எதற்கு என்கிற கேள்விக்கும் விடை தெரியவில்லை. மோடியும், அமித்ஷாவும், திரைப் பிரபலங்களும் இன்னமும் ஜக்கி வாசுதேவிற்கு பக்கபலமாக நிற்கும் போது, அங்கு நடக்கும் மர்மங்களை எந்த சோதனைகள் கொண்டு கண்டறிவது என்கிற கேள்வியே எழுகிறது. தமிழ்நாட்டிலேயே இப்படியான மத நிறுவனங்கள் கோலோச்சும் போது, வட நாட்டில் நாம் சொல்லவே தேவையில்லை.
நித்யானந்தாவின் ஆசிரமத்திற்குள் நடந்த ஆன்மீக பித்தலாட்டங்களை ஒரு பத்திரிக்கை தான் வெளியில் கொண்டு வந்தது. ஒரு தீவையே வாங்கிக் கொண்டு செல்லும் வரை, அவரை அதிகார வட்டங்கள் கைது நடவடிக்கைகள் பாய விடாமல் பாதுகாத்தன. பாலியல் குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டு கைதான ஆசாரம் பாபு, பிரேமானந்தா போன்ற ஆன்மீகப் போலிகள் அனைவரும் மதத்தின் பெயரை சொல்லியே, புனிதத் தனத்தின் பெயரால் எந்த சோதனைகளும் நெருங்காத வண்ணம் உல்லாசமாய் வாழ்ந்தனர். இந்த வரிசையில் கர்நாடகாவின் பிரபல வழிபாட்டுத் தலமான தர்மஸ்தலாவும் இணைந்து இருக்கிறது.
அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்களில் மக்களுக்கு கேள்வி எழுப்பும் அதிகாரம் இருப்பதால் பெரிய தவறுகள் இல்லாமல் தடுக்கப்பட்டு இருக்கின்றன. அரசின் கட்டுப்பாடற்று ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் ஆதிக்கத்தில் இருக்கும் கோவில்களில் கொள்ளைகள், பாலியல் குற்றங்கள் போன்றவைகள் புனிதத் தலங்கள் என்கிற முகமூடியில் மறைக்கப்பட்டு விடுகின்றன. சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால் கோவிலுக்கு சொந்தமான பல ஏக்கர் நிலங்கள் விற்கப்பட்டன. அதனையும் இந்து அறநிலையத் துறையே அம்பலமாக்கியது. குழந்தைத் திருமணங்களை நடத்தி வைப்பதும் சமீபத்தில் வெளியில் தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.

கர்நாடகாவின் தர்மஸ்தலா கோவிலும் சிவன் கோவிலாக ஜைன மதம் சார்ந்த ’ஹெகடே’ குடும்பத்தினரால் நடத்தப்படுகிறது. கோவிலில் நிர்வாகம் முழுக்க ’மத்வா’ எனும் பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஏற்கனவே பக்தர்கள் அளிக்கும் பல கோடிக்கணக்கான பணங்கள் கொள்ளையடிக்கப்படுகிறது என அரசு கையப்படுத்த நினைத்த போதும் வழக்குகள் போடப்பட்டு, இவர்களின் கட்டுப்பாட்டிலேயே இன்னும் நீடிக்கிறது. அரசின் வசம் இல்லாத வழிபாட்டுத் தலங்கள் கொடியவர்களின் கூடாரமாகி விடும் என்பதற்கு தர்மஸ்தலா கோயிலே சாட்சியமாக துப்புரவுத் தொழிலாளியின் வாக்குமூலத்தின் மூலமாக நிரூபணமாகி இருக்கிறது.
தமிழ்நாட்டிலும் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலிருந்து கோவில்களை வெளியேற்ற வேண்டும் என்று பாஜக, ஆர்.எஸ்.எஸ், இந்துத்துவ அமைப்புகள் நீண்ட காலமாக மோசமான பரப்புரையை மேற்கொண்டிருக்கின்றன. அறநிலையத் துறையின் கைப்பிடியில் கோவில்கள் இல்லாமல் போனால் பகற் கொள்ளைகளும், இதைப் போன்ற பாலியல் குற்றங்களும் எந்த விதக் கண்காணிப்புமின்றி சுலபமாக நடக்கவே வழிவகுக்கும் என்பதே கர்நாடகாவின் தர்மஸ்தலாவில் எழும்பியிருக்கும் இந்த பாலியல் கொலைக் குற்றச்சாட்டுகள் உணர்த்துகின்றன.
குறிப்பு: