
மருத்துவத்தை இலவசமாக மக்களுக்கு வழங்க வேண்டியது அரசு மக்களுக்கு செய்யும் சேவையல்ல, மாறாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசின் கடமை. அதே நேரத்தில் அந்த மருத்துவம் தரமான வகையில் கிடைக்கக் கோருவது என்பது மக்களின் அடிப்படை உரிமை. கொரானா என்கிற மிக மோசமான மருத்துவ பேரிடர் நடைபெற்றதற்கு பிறகான காலகட்டத்தில் மருத்துவம் இலவசமாகவும், அதே வேளையில் அது தரமானதாகவும் அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே ஒரு மக்கள் நலன் அரசின் நிலைப்பாடாக இருக்க வேண்டும். ஆனால் தமிழ் நாடு அரசு Public Private Partnership (PPP)-ன் கீழ் ஆரம்ப சுகாதார மையங்களில் சிகிச்சையை கொண்டு வரும் அரசாணையை சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது.
அண்மையில் தமிழ்நாட்டில் 50 சுகாதார மையங்களில் ‘டயாலிசிஸ்’ எனப்படும் சிறுநீரக சிகிச்சையை ‘பொது-தனியார் கூட்டாண்மை’ எனப்படும் (Public Private Partnership -PPP) முறைக்கு கொடுக்கப்போவதாக 23.6.2025 அன்று சுகாதாரத்துறை அரசாணை வெளியிட்டிருக்கிறது. மேலும் இந்த டயாலிசிஸ் சிகிச்சை செய்யும் கருவிகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளுக்கான மூலதன முதலீடு (Capital Investment) தனியார் நிறுவனம் மூலம் வழங்கப்பட வேண்டும் என்று அந்த அரசாணை குறிப்பிட்டுள்ளது.

தொற்றா நோய்களில் முக்கியமானதாகக் கருதப்படும் சிறுநீரக கோளாறுகளை சரி செய்வதே ‘டையலிஸிஸ்’ சிகிச்சை முறை. சிறுநீரகவியல் துறையில் மருத்துவர்களால் அதிகம் பரிந்துரைக்கப்படும் ‘டையலிஸிஸ்’ சிகிச்சை முறையை பல்லாண்டுகளாக அரசு மருத்துவமனைகளில் நடத்தும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும். (தென்னிந்தியாவிலேயே முதல் முறையாக 1972 ஆம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரியின் (எம்.எம்.சி) அரசு பொது மருத்துவமனையில் தான் சிறுநீரகவியல் துறை நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது.)
தமிழ்நாட்டில் இலவசமாக டயாலிசிஸ் சிகிச்சை முறையை அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி பல்வேறு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமையக மருத்துவமனைகள் மற்றும் துணை மாவட்ட மருத்துவமனைகளில் மக்கள் பெற்றுக்கொள்கின்றனர். மேலும் மாநில அரசின் ‘முதலமைச்சரின் விரிவான சுகாதார காப்பீட்டுத் திட்டத்தின் (CMCHIS)’ மூலம் ஆண்டுதோறும் பல டயாலிசிஸ் சிகிச்சைகள் இலவசமாக மேற்கொள்ளப்படுகின்றன. அதே வேளையில் பிற மாநிலங்களில் (மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், அஸ்ஸாம்) பிரதான் மந்திரி தேசிய டயாலிசிஸ் திட்டம் (PMNDP) என்ற திட்டத்தின் கீழ் டயாலிசிஸ் சிகிச்சை கொடுக்கப்படுகிறது. தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் PMNDP பெரும்பாலும் பொது-தனியார் கூட்டாண்மை எனப்படும் (Public-Private Partnership-PPP) முறையில் நோயாளிகளுக்கு டயாலிசிஸ் சிகிச்சை முறையை வழங்குகிறது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ‘PPP மாதிரி’ நடைமுறையில் இருந்தாலும், அரசு மருத்துவமனைகளில் PPP மாதிரியைத் தேர்வு செய்யாமல் டயாலிசிஸ் சிகிச்சையைக் கொடுக்கும் மாநிலங்களாக தமிழ்நாடு மற்றும் கேரளம் மட்டுமே இருக்கின்றன. இந்தியளவில் அதிக டயாலிசிஸ் கருவிகளை வைத்துள்ள இரண்டாம் மாநிலம் தமிழ் நாடு (932 கருவிகள்), முதல் மாநிலம் கேரளம் (1025 கருவிகள்) என்பது இங்கு முக்கியமான தகவல்.

டயாலிசிஸ் சிகிச்சை பரவலாக்கம் (Decentralizing Dialysis Care) என்கிற அடிப்படையில் தான் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இதை கொண்டு வர உள்ளதாக அரசாணை குறிப்பிடுகிறது. அதற்கு முன்னோட்டமாகத்தான் 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள் தேர்வு செய்யப்பட உள்ளது. இதை சரியாக நடைமுறைபடுத்தவே தனியார் பங்களிப்பு தேவை என்கிறது திராவிட மாடல் அரசு.! அதாவது மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட மருத்துவமனை, மின்சாரம், நீர் என அனைத்தையும் அரசு கொடுக்கும், மூலதனம் முதலிடாக (capital investment) டயாலிசிஸ் சிகிச்சை கருவிகளை தன்னார்வ நிறுவனம் (NGO) அல்லது தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் (Tamil Nadu Medical Services Corporation Limited-TNMSC) தேர்வு செய்யும் ஒரு தனியார் நிறுவனம் கொடுக்கும். அதோடு அதை இயக்குவதற்கான தொழில்நுட்ப ஊழியர்களை அந்த நிறுவனங்கள் ஒப்பந்த முறையில் நியமிக்கும், ஆனால் ஊதியம் அரசு வழங்கும்!. இதில் கருவிகள் மற்றும் அதற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளைத் தவிர தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு என்பது எதுவும் இல்லை. அந்த கருவிகளை அரசே வாங்க முடியும், தேவையான தொழில்நுட்ப ஊழியர்களை நிரந்தரமாக அரசே பணியமர்த்த முடியும் என்னும் போது ஒன்றிய அரசின் இந்த PPP கொள்கையை மக்கள் நலன் அரசு என்று சொல்லும் திமுகவின் திராவிட மாடல் அரசு ஏன் தூக்கி சுமக்க வேண்டும்?

இந்திய அளவில் சிறந்த அரசு மருத்துவ கட்டமைப்பை கொண்டுள்ள மாநிலம் தமிழ்நாடு. அதற்கு காரணம் மருத்துவத் துறை சார்ந்து இதுவரை திராவிட அரசுகள் பின்பற்றிய கொள்கைகளே. ஆனால் 2021 தி.மு.க அரசு பொறுப்பேற்றது முதல் இதில் மாற்றங்கள் தெரியத் தொடங்கி உள்ளது. பொதுவாக மாநில உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் (Tamil Nadu Infrastructure Development Board) மூலம் PPP கொள்கையை(Enthuse private sector players to partner with the Government) தி.மு.க அரசு வெளியிட்டு, 1-டிரில்லியன் பொருளாதாரத்தை 2030ல் அடைவதை லட்சியமாக தெரிவித்துள்ளது. இந்த 1-டிரில்லியன் பொருளாதார இலக்கை நோக்கிய பயனத்தில் தமிழ்நாடின் மருத்துவ கட்டமைப்பு பலிகொடுக்கப்படுகிறதா என்கிற கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது.
உலகளவில் கொரோனா போன்ற தொற்று நோய்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு தற்போது ஏற்பட்டிருந்தாலும், நீரிழிவு, இதய நோய்கள், சிறுநீரக செயலிழப்பு போன்ற தொற்றா நோய்கள் குறித்து இன்னும் நம்மில் பலர் அதிகம் அறிந்திருப்பதில்லை. வாழ்வியல் மாற்றங்கள், சுற்றுச்சூழல் காரணிகள் போன்றவற்றால் சிறுநீரகக் கோளாறுகள் உலகளவில் அதிகரித்து வருகின்றன. தமிழ்நாட்டிலும் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் 8.7% மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி 2023இல் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.
தற்போது நம் முன் உள்ள கேள்வி, தமிழ்நாடு மருத்துவத்துறை நிர்வாகம் ‘வரும் முன் காப்போம்’ (Preventive Health care) என்கிற மருத்துவ தத்துவத்தை கைவிட்டு வந்த பிறகு செய்யும் சிகிச்சை முறைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வியாபார சேவை தத்துவத்தை முன்வைக்கிறதா? அல்லது தமிழ் நாட்டில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் டயாலிசிஸ் சிகிச்சை பரவலாக்கம் செய்ய வேண்டிய நிலையில் மாநிலத்தில் சிறுநீரக நோய் பாதிப்பு மிக பெரிய அளவில் உள்ளது என்று சொல்கிறதா? அதற்கான எந்த புள்ளி விவரத்தையும் அரசாணையிலோ பொது வெளியிலோ தமிழ்நாடு அரசு தெரிவிக்கவில்லை என்பது தான் விவாதத்தை எழுப்புகிறது.
தமிழ்நாட்டில் தற்போது இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட சுகாதார மையங்கள் (30,000 பேருக்கு ஒரு மையம்) என கிராமப்புறங்களில் செயல்பட்டு வருகின்றன. இவற்றிற்கான பராமரிப்பு நிதிகளை இதுவரை தமிழ்நாடு அரசு மட்டுமே வழங்கி வருகின்றது. இந்த சுகாதார மையங்களில் ஐம்பது மையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றில் தனியார் மற்றும் அரசு பங்களிப்புடன் டயாலிசிஸ் மையங்கள் செயல்படும் என்று அரசு அறிவித்திருப்பதன் தேவை குறித்து அரசு விளக்கம் கொடுப்பது முக்கியமானது.

விழுப்புரம், கடலூர், வேலூர், சிவங்கை, விருதுநகர், தூத்துக்குடி, அரியலூர், திருவண்ணாமலை, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் சிறுநீரக நோய் ((Chronic Kidney Disease of Unknown Etiology-CKDu) அதிகம் உள்ளது என்று Tamil Nadu Journal of Public Health and Medical Research இதழில் வெளிவந்த ஆய்வு கட்டுரை குறிப்பிடுகிறது. இந்த மாவட்டங்களில் நீரின் உப்புத்தன்மை (Total Dissolved Solids -TDS), PH, பொட்டாசியம், குளோரைட், கால்சியம் போன்ற கடின உப்புகளின் அளவு குறித்தோ அதன் அடிப்படையில் சிறுநீரக நோய் பாதிப்பு உள்ளதா என்பது குறித்தோ எந்த ஆய்வும் இல்லாமல் எப்படி அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் அரசு இதை சமமாக செய்ய முடிவு செய்துள்ளது? இதை தடுப்பதற்கு அரசு ஏதாவது பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டதா? என்ற கேள்விகளும் எழும்புகின்றன.
இந்த கேள்விகள் எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், கிராமப்புற மக்கள் இன்றும் தங்கள் மருத்துவ தேவைகளுக்குப் பெரிதும் நம்பி இருப்பது ‘ஆரம்ப சுகாதார நிலையம்’ மட்டுமே. பெருநகரங்களுக்குப் பயணம் செய்யவோ பல்லாயிரம் ரூபாய் செலவழித்து தனியார் மருத்துவமனை செல்லவோ தேவை ஏற்படாதவாறு அரசு சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சீறுநீரகக் கோளாறுகளுக்கான சிகிச்சையைத் தொடங்குவது என்பது வரவேற்கக்கூடிய ஒன்றே. ஆனால் அதை அரசே முழுவதும் ஏற்று நடத்தாமல் தனியாரை நுழைப்பதுதான் சிக்கலானது.
பொதுவாக PPP திட்டங்களில் இடத்தையும் மின்சாரத்தையும் அரசே வழங்கினாலும் திட்டத்தை செயல்படுத்துவது தனியார் நிறுவனமாகத்தான் இருக்கின்றது. எனவே சிறுநீரக சிகிச்சைக்கான மருத்துவப் பணியாளர்களை தனியார் தரப்பில் எவ்வாறு நியமிப்பார்கள், பணி நியமனங்களில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படுமா என்ற பல கேள்விகள் எழுகின்றன. (கடந்த 2022இல் கர்நாடகாவில் PPP திட்டத்தில் இணைந்த தனியார் நிறுவனம் ஒன்று டயாலிசிஸ் செய்வதற்கு முறையான மருத்துவப் பணியாளர்களை நியமிக்காததால் நோயாளிகளுக்கு பல சிக்கல்கள் எழுந்தன.)
மேலும் மருத்துவத்துறையில் தனியார் நுழைந்தால் ஏழை மக்களின் உரிமையான தரமான மருத்துவம் பாதிக்கப்படும். ஏனெனில் லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருக்கும் தனியார் நிறுவனங்கள் மருத்துவப் பணியார்களின் ஊதியம் உள்ளிட்ட விடயங்களில் கெடுபிடிகள் காட்டலாம். இதனால் நிரந்தர ஊழியர்கள் இல்லாமல் சிகிச்சை தரம் பாதிக்கப்படவே வாய்ப்பு உள்ளது.
ஏற்கனெவே அரசுப் பணிகளில் ஒப்பந்த ஊழியர் முறையைக் கொண்டு வந்ததால் அனைத்துத் துறை பணியாளர்களும் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர். இவற்றோடு தனியார் நிறுவனங்களும் சுகாதாரத் துறையில் நுழைந்தால் அரசு மருத்துவமனைக்கும் தனியார் மருத்துவமனைக்கும் வேறுபாடு இல்லாமல் போய் விடும். எனவே ஆளும் திமுக அரசு சுகாதாரத்துறையில் எந்தவித தனியார் நுழைவையும் தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு தனியாரை நுழைக்கும் PPP திட்டங்களுக்கு வழக்கமாக அரசின் நிதி பற்றாக்குறையே காரணமாக கூறப்படும். ஆனால் 2024-2025 ஆண்டு பட்ஜட்டை ஒப்பிடும்போது, 2025-2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் சுகாதாரத் துறைக்கு 8.4% அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. குறிப்பாக புற்றுநோய், தொற்றாத நோய் சிகிச்சைக்கு நிதி ஒதுக்குவது, ஆரம்ப சுகாதார சேவையை வலுப்படுத்துவது, அதற்கேற்ப ஆட்சேர்ப்புக்கு நிதி ஒதுக்குவது போன்றவை இந்த ஆண்டு மருத்துவத்துறையின் கோரிக்கைகளாக இருந்தன. இதற்காக இந்த ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள ₹21,906 கோடியில் குறிப்பிட்ட ஒரு தொகையை ஆரம்ப சுகாதார மையங்களுக்கு ஒதுக்குவதன் மூலம் தனியார்மயத்தை எளிதாக தடுக்க இயலும். மேலும் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தை கிராமப்புறங்களில் விரிவாக செயல்படுத்துவதன் மூலமும் தனியார்மய சிக்கலை முடிவுக்கு கொண்டுவர இயலும்.
தமிழ்நாட்டின் சுகாதாரத்துறையில் தனியாரை அனுமதிக்கும் நடவடிக்கை என்பது மக்களின் அடிப்படைத் தேவையான மருத்துவத்தை சிதைக்கும் ஆபத்தை விளைவிக்கக் கூடியது. இந்த சுகாதார மையங்களில் தனியார் நுழைந்தால் தமிழ்நாட்டின் இத்தனை ஆண்டுகால மருத்துவ வளர்ச்சியை தனியார் கைகளில் ஒப்படைக்கும் அநீதியாகவே நாம் கருத வேண்டும்.
தற்போது சுகாதார மையங்களில் அரசு கொண்டு வர இருக்கும் PPP திட்டத்திற்கு ‘சேவை மருத்துவர்கள் மற்றும் முதுகலை பட்டதாரிகள் சங்கம்’ (SDPGA) தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. “அரசு நடத்தும் மையங்களில் தனியாரை ஈடுபடுத்துவது எதிர்காலத்தில் முழுமையான தனியார்மயமாக்கலுக்கு வழிவகுக்கும். அனைத்து மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தனியார் இல்லாமல் டயாலிசிஸ் வசதிகள் உள்ளன. அவற்றைப் போன்றே தாலுகா மற்றும் தாலுகா அல்லாத மருத்துவமனைகளுக்கும் ஒரே மாதிரியான டயாலிசிஸ் சேவைகளை விரிவுபடுத்த வேண்டும். இதற்கான செலவுகளை ஈடுகட்ட ஆரம்ப சுகாதார மையங்களில் முதலமைச்சரின் விரிவான சுகாதார காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும்” என்று மருத்துவர்களின் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இந்திய அரசியலமைப்பு, பிரிவு 21இன் கீழ், ஒவ்வொரு குடிமகனுக்கும் கண்ணியமான வாழ்க்கைக்கான உரிமை உள்ளது, அதில் தரமான மருத்துவ சேவையும் அடங்கும். தரமான மருத்துவ சேவையை பெறுவதற்கான உரிமையானது, ஒரு அடிப்படை மனித உரிமையாக உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கல்வி, மருத்துவம் போன்ற அனைத்து முக்கியத் துறைகளும் அரசின் கைகளில் இருப்பது மட்டுமே ‘திராவிட மாடல்’ என்பதற்கான உண்மையான முன்மாதிரியாக இருக்கும். கிராமப்புறங்களில் ஏழை மக்கள் பெரிதும் நம்பியிருக்கும் ஆரம்ப சுகாதார மையங்களில் தனியார் நுழைவு நம் மருத்துவ கட்டமைப்பை சிதைப்பதைத் தவிர வேறு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. எனவே தி.மு.க அரசு தனது பொருளாதார கொள்கையை மாற்றிக் கொண்டு செயல்படுவதே தமிழ்நாட்டின் மக்களுக்கு நன்மை தரும்.
குறிப்புகள்:
1. Go.Ms.No:194 Health and Family Welfare (P1) Department dated: 23.06.2025
2. Chronic Kidney Disease Database In Tamil Nadu – Need Of The Hour, Tamil Nadu Journal of Public Health and Medical Research, Goutham K, Selvameena M, Ezhil S, Vol 3 | Issue 2 | April – June | 2023.
3. https://tnidb.tn.gov.in/en/knowledge-resources/key-concepts/ppp/
4.Public private partnership policy-Partners in Growth by Tamil Nadu Infrastructure Development Board