ஐக்கிய நாடுகளின் நிவாரணம் மற்றும் பணி நிறுவனம் (United Nations Relief and Works Agency, UNRWA)
இஸ்ரேல் பாராளுமன்றம் 28 அக்டோபர், 2024 அன்று ஐக்கிய நாடுகளின் நிவாரணம் மற்றும் வேலை நிறுவனத்தின் (United Nations Relief and Works Agency, UNRWA) செயல்பாடுகளை இஸ்ரேல் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் தடை செய்துள்ளது. இஸ்ரேலின் இனப்படுகொலை குற்றங்களுக்கு துணை நிற்கும் அதன் நெருங்கிய கூட்டாளியான அமெரிக்காவே இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம், இது சர்வதேச சட்டத்துக்கும் அடிப்படை மனித உரிமைக்கும் எதிரானது என கண்டித்துள்ளது. பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட இஸ்ரேலின் நட்பு நாடுகளும், ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட ஆசிய நாடுகளும் இன்னும் பல நாடுகளும் இந்த நடவடிக்கையைக் கண்டித்துள்ளன.
UNRWA எப்போது எதற்காக உருவாக்கப்பட்டது?
1948-இல் யூத இனவெறி ஜியோனிச ஆயுதப்படை, பாலஸ்தீன நிலப்பரப்பில் 7,50,000-க்கும் அதிகமான பாலஸ்தீனர்களை அவர்களின் சொந்த நிலத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றி இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கியது. அப்போது ஜியோனிச இனவெறியர்கள், பாலஸ்தீன இஸ்லாமியர்கள் மீது அளவில்லாத வன்முறையை செய்தனர். பல பாலஸ்தீன நகரங்கள், கிராமங்கள் அழிக்கப்பட்டன. அவற்றில் யூதர்கள் குடியமர்த்தப்பட்டு அவற்றின் அரபு பெயர்களை மாற்றி புதிய ஹீப்ரு பெயர்கள் வழங்கப்பட்டன. குடிநீர் கிணறுகளில் நச்சு மருந்து கலந்து பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். பாலஸ்தீனர்கள் வீடற்று சொந்த நாட்டிலும், அண்டை நாடுகளிலும் ஏதிலிகளாக ஆக்கப்பட்டனர். இதனை ‘பேரழிவு‘ எனப் பொருள்படும் ‘நக்பா‘ (Nakba) என்ற அரபு வார்த்தையில் பொதுவாக குறிப்பிடுகின்றனர்.
இந்நிலையில் 1948 திசம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை ஒரு தீர்மானத்தை (Resolution 194) நிறைவேற்றியது. அந்த தீர்மானத்தின்படி, பாலஸ்தீன அகதிகள் தங்கள் சொந்த வீடுகளுக்கு திரும்புவதற்கு உரிமை உண்டு அல்லது அதற்கு அவர்கள் விரும்பவில்லை என்றால் நட்டஈடு பெறுவதற்கு உரிமை உண்டு. அவர்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்பும்வரை அந்த மக்களை பாதுகாக்க ஐ.நா தற்காலிக அமைப்பு ஒன்றை உருவாக்கியது. அது தான், ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரணம் மற்றும் பணி நிறுவனம் (United Nations Relief and Works Agency, UNRWA).
இவ்வமைப்பிற்கு பெருமளவில் நிதியளித்தது அமெரிக்காவாகும். கடந்த சில ஆண்டுகளில் சுமார் 70% வரை அமெரிக்காவின் நிதியே அங்கு செலவிடப்பட்டிருக்கிறது. பாலஸ்தீன மக்களை கண்காணிப்பின் கீழ் வைத்துக் கொள்வதும், அமெரிக்க பெருமுதலாளிகளின் எண்ணெய் சார் முதலீட்டிற்கு அத்தியாவசியமான பிராந்திய “அமைதியை” உறுதி செய்வதற்கும், போரில் பாதிக்கப்பட்டு ஏதிலிகளானோர் இடம்பெயராமல் முகாம்களில் தேக்கிவைக்கவும் இம்மாதிரியான ஓர் அமைப்பு அவர்களுக்கு தேவைப்பட்டது. அதில் இதுநாள் வரை வெற்றியும் பெற்றது. ஆனால் இவ்வமைப்பு, பாலஸ்தீன மக்களுக்கும் ஒரு சில வகையில் பயன்பட்டது என்பதும் உண்மை. 70 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்கிற இனப்படுகொலைப் போரினிடையே பாலஸ்தீன மக்களுக்கு அவை அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் பயன்பட்டது.
UNRWAவின் செயல்பாடுகள்:
UNRWA பாலஸ்தீனர்களுக்கு உணவு, மருந்து என வெறும் அவசர கால மனிதாபிமான உதவிகளோடு பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகளைக் கூட நடத்துகிறது. குழந்தைகளுக்கான ஆரம்பக்கல்வி, இளைஞர்களுக்கான தொழிற்கல்வி, ஆரம்ப சுகாதார நிலையங்கள், நிவாரண சேவைகள், சமூக சேவைகள், உள்கட்டமைப்பு மற்றும் முகாம் மேம்பாடு, குறு நிதிக்கடன் சேவை (Micro Financing), போர்காலங்களில் உதவுவது ஆகிய பணிகளில் ஈடுபட்டிருக்கிறது. UNRWA பாலஸ்தீன மக்களுக்கான வேலைவாய்ப்பையும் தருகிறது. UNRWA பணியாளர்கள் 70 சதவீதம் பேர் பாலஸ்தீன அகதிகள். காசா பகுதியில் மட்டும் சுமார் 13,000 பேர் பணிபுரிகின்றனர். அந்த பகுதியின் மிகப்பெரிய வேலை தரும் நிறுவனம் இது தான். இது தற்போது நிதிப் பற்றாக்குறையால் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது.
இஸ்ரேல் அரசு UNRWA அமைப்பைக் குறிவைப்பது எதனால்?
அக்டோபர் 7 தாக்குதலுக்கு உதவியதாக 13 UNRWA பணியாளர்களை கடந்த ஜனவரியில் (2024) இஸ்ரேல் குற்றம் சாட்டியது. எனவே பல பணியாளர்களை வேலையை விட்டு நீக்கிய UNRWA, இதன் மீதான விசாரணையை மேற்கொள்வதாகவும் சொன்னது. ஆனால், பிரிட்டனைச் சேர்ந்த சேனல் 4 ஊடகம், இஸ்ரேல் குற்றச்சாட்டின் ரகசிய ஆவணங்களை ஆராய்ந்ததில் அதற்கான ஆதாரங்கள் எதுவும் அதில் இல்லை என்பதை அம்பலப்படுத்தியது. இஸ்ரேல் தன் குற்றச்சாட்டை நிரூபிக்கும் எந்த ஒரு ஆவணத்தையும் ஐநாவுக்கும் தரவில்லை. மாறாக, இஸ்ரேல் எந்தவித முகாந்திரமும் இன்றி காசாவில் பல பணியாளர்களை பிடித்து வைத்து சித்ரவதைச் செய்ததாக UNRWA குற்றம் சாட்டியது. மேலும், அவர்களிடம் அக்டோபர் 7 தாக்குதல் குறித்து கேள்வி கேட்டதாகவும், சித்திரவதை செய்து ஒப்புதல் வாக்குமூலத்தில் கையெழுத்திட வற்புறுத்தியதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் சொன்னதாக UNRWA தெரிவித்தது.
இஸ்ரேல் UNRWA-வுக்கு எதிராக செயல்படுவது இது முதல் முறை அல்ல. 2008 மற்றும் 2014 காசா போரின் போது, UNRWA-வின் கட்டடங்கள், சேமிப்புக் கிடங்குகள் மீது இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தி கடுமையான சேதத்தை உண்டாக்கியது. அதில் பல டன் அளவிலான உணவு மற்றும் மருந்து பொருட்கள் சேதமுற்று வீணானது. அக்டோபர் 7-இல் இருந்து இதுவரை 152 ஐ.நா பணியாளர்களை இஸ்ரேல் படுகொலை செய்துள்ளது
ஒரு மிக முக்கிய காரணத்திற்காக இஸ்ரேலுக்கு மிகப்பெரிய சவாலாக UNRWA உள்ளது. ’சர்வதேச சட்டங்களின்படி, 1948 ‘நக்பா’வினால் பாதிக்கப்பட்ட 7,50,000 பாலஸ்தீனர்கள் மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கு, தங்கள் சொந்த நிலத்திற்கு திரும்ப செல்வதற்கு முழுமையான உரிமை உண்டு. ஆனால், அவர்களின் நிலம் தற்போது இஸ்ரேல் என்ற நாடாக இருக்கிறது. அப்படி அகதிகளாயிருக்கும் 60லட்சம் பாலஸ்தீனர்களின் தரவுகள், பதிவேடுகளை UNRWA தான் பாதுகாக்கிறது’.
இஸ்ரேலின் சதி:
2011-இல் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அமெரிக்க காங்கிரஸின் கூட்டு அமர்வில், “பாலஸ்தீனர்கள் தங்கள் நிலங்களுக்குத் திரும்புவதற்கான உரிமை நிரந்தரமாக அழிக்கப்பட வேண்டும்” என்று பேசினார். “இஸ்ரேல் நிச்சயமாக ஒருநாள், பாலஸ்தீன அகதிகளின் சந்ததிகளால் நிரம்பிவிடும் என்ற கற்பனையை அவர்கள் தொடர்ந்து நிலைநிறுத்துவது எல்லாவற்றையும் விட மோசமானது. இதற்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்றார். இதற்கு ஏற்றார்போல 2018-இல் அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அரசு, UNRWA-வுக்கு அளித்துவந்த நிதியை நிறுத்தியது. அவரின் மூத்த ஆலோசகர் ஒருவர் UNRWA-வை மூடுவதற்கும், லட்சக்கணக்கான பாலஸ்தீனியர்களின் அகதி அந்தஸ்தை (Refugee Status) நீக்குவதற்கும் முயன்றதாக சொல்லப்படுகிறது.
இஸ்ரேலின் பட்டினிப்போர்:
பாலஸ்தீனர்களுக்கு எதிரான இனப்படுகொலைப் போரில் பட்டினியை ஒரு ஆயுதமாக இஸ்ரேல் பயன்படுத்துகிறது என்று மனித உரிமை அமைப்புகள் கண்டனக் குரல் எழுப்புகின்றன. உலகின் பல நாடுகளில் இருந்து உதவிப் பொருட்கள் காசாவுக்குள் பல கனரக வாகனங்களில் நாள்தோறும் வந்தவண்ணம் இருக்கும். இவை UNRWA மூலம் சேமிக்கப்பட்டு மக்களுக்கு விநியோகிக்கப்படும். இந்த போர் ஆரம்பமானது முதல் காசாவுக்குள் வரும் உதவிப் பொருட்கள் அடங்கிய வாகனங்களை இஸ்ரேல் ராணுவம் பெருமளவில் தடுத்து வருகிறது. இதன் உச்சமாக தற்போது வடக்கு காசாவை முற்றிலுமாக முற்றுகையிட்டு, எந்தவொரு உதவிப் பொருட்களும் அங்குள்ள மக்களை சென்றடையாமல் தடுத்து வருகிறது. மருத்துவமனைகளை ஆக்கிரமித்து பலரை ஆடைகளைக் களைந்து கைது செய்து வருகிறது. இது ‘ஜெனரல்ஸ் ப்ளான்’ (General’s Plan) எனும் இஸ்ரேலின் இன அழிப்பு சதி திட்டத்தின் ஒரு அங்கம். இந்த திட்டத்தின்படி, வடக்கு காசாவை சுற்றி வளைத்து முற்றுகையிட்டு, உணவு, மருந்து மற்றும் எரிபொருள் என அத்தியாவசிய பொருட்கள் அதன் உள்ளே நுழைவதை முற்றிலுமாக தடுத்து மக்களை பட்டினி போடுவது, அந்த மக்களை தெற்கு நோக்கி இடம்பெயரச் செய்வது, எஞ்சியவர்கள் எவரேனும் இருந்தால் அவர்களைக் கொலை செய்வது, இதன் பின்னர் வடக்கு காசாவை இஸ்ரேல் ராணுவத்தின் பகுதியாக அறிவிப்பது. இது அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரானது.
UNRWAவுக்கான நன்கொடை:
UNRWA மீதான இஸ்ரேலின் ஆதாரமற்ற குற்றச்சாட்டைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 16 நாடுகள் நன்கொடையாக நிதி வழங்குவதை நிறுத்தின. ஒருமாதம் கழித்து, ஐரோப்பிய ஒன்றியம் தங்களிடம் இருந்து நிதியை விடுவித்தது. பிறகு கனடா மற்றும் சுவீடன் நாடுகள் நன்கொடை வழங்குவதை மீண்டும் தொடங்கின. இந்நிலையில் UNRWA-வை நிரந்தரமாக மூட வேண்டும் என்று மேற்குலத்திடம் அழுத்தம் கொடுத்து வருகிறார் நேதன்யாகு. நன்கொடை அளிப்பதை நிறுத்த செய்வதன் மூலம் இஸ்ரேல் இந்த நோக்கத்தை நிறைவேற்ற முயற்சிக்கிறது. ஏனெனில் நிதி வழங்குவதை மீண்டும் தொடரவில்லை என்றால், தங்கள் செயல்பாடுகளை நிறுத்த நேரிடும் என UNRWA அமைப்பு தெரிவித்துள்ளது. அப்படி ஒரு சூழல் வருமெனில், ’காசாவில் மட்டுமல்ல ஆக்கிரமிப்பு மேற்கு கரை, லெபனான், ஜோர்டன், சிரியா நாடுகளில் வாழும் 60 லட்சம் பாலஸ்தீனர்களின் நிலை என்னவாகும் என்பதை நினைத்து கூட பார்க்க முடியாது’.
முன்னர் சொன்னதுபோல, ஆரம்பம் முதலே, இஸ்ரேலும், அமெரிக்காவும் UNRWA-வை ஒரு பகடைக்காயாக தான் பயன்படுத்தி வந்துள்ளன. அதாவது, பாலஸ்தீன மக்களுக்கு உணவு, மருந்து உள்ளிட்ட அடிப்படை தேவைகளை UNRWA மூலம் கொடுத்துவிட்டு, அவர்களின் அரசியல் உரிமைகளை நீர்த்து போகச் செய்வதைத்தான் காலங்காலமாக செய்து வருகின்றன. இருப்பினும் அதே இஸ்ரேலுக்குள் கடந்த பத்து ஆண்டுகளில் அந்த நிவாரண உதவிகளும் கூட முறையாக கிடைக்கவிடாமல் அந்த அமைப்பை நெருக்கடிக்கு உள்ளாக்கியும் வருகின்றன.
காசாவில் UNRWA செய்துவருகின்ற ஒரு குறைந்தபட்ச மனிதநேயப் பணியை செய்வதற்கு வேறொரு அமைப்பு அங்கில்லை. ஓராண்டாக இஸ்ரேலின் இனப்படுகொலை தொடரும் தருவாயில், காசாவில் உள்ள பாலஸ்தீன மக்களை பட்டினி போட்டு, அந்தப் பகுதியிலிருந்து முற்றிலுமாக அகற்றி இன அழிப்பு செய்யவும், இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் மீதும் லெபனான் மீதும் நடத்திக் கொண்டிருக்கிற இனப்படுகொலையை சர்வதேச அமைப்பான ஐநாவின் நிறுவனம் உலகத்திற்கு சொல்லி விடக்கூடாது என்பதற்காகவும் முடக்கப்படுகிறது.
UNRWA, பாலஸ்தீனர்களுக்கு எதிரான 1948 ‘நக்பா’விலும் அதன் பின்னரான இனப்படுகொலைகளிலும் அகதிகளானோரைப் பற்றி ஆவணப்படுத்தி இருக்கிறது. ஒருவகையில், இஸ்ரேல் என்ற நாடு பாலஸ்தீனர்களை இனப்படுகொலை செய்துதான் உருவாக்கப்பட்டது என்பதனை ஐ.நா ஒப்புக்கொண்டதன் சட்டபூர்வ ஆதாரம் தான் UNRWA. அந்த ஆதாரத்தை அழிப்பதற்காக தான் இஸ்ரேலின் இந்த UNRWA தடை.