உத்தரபிரதேசம் வழியாக செல்கின்ற கன்வார் பயணத்தில் பல விதமான வன்முறைகள் சாமானிய மக்கள் மீது தொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. சூலை 22, 2024 அன்று தொடங்கிய இந்த யாத்திரை ஆகத்து 6-ம் நாளில் முடிகிறது. பக்தர்களின் மனம் புண்படும் என்று அவர்கள் பயணிக்கும் வழியில் இறைச்சி விற்பனையை உ.பி அரசு தடை செய்தது. மேலும் சிறுபான்மையினரின் கோயில்களை திரை கொண்டு மூடவும் சொன்னது. இருப்பினும் சிவபக்தர்கள் என்ற முகமூடியுடன் வரும் இந்துத்துவ குண்டர்களால் சாமான்ய மக்களின் உடைமைகள் சேதப்படுத்தப்படுவதை கண்டும் காணாமல் யோகி அரசு இருக்கிறது.
கன்வார் யாத்திரை அல்லது காவடி பயணங்கள் என்பது வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் பங்கு பெரும் ஒரு மத விழாவாகும். இலட்சக்கணக்கான சிவபக்தர்கள் சிவனுக்கு உகந்த நாளான திங்கட்கிழமை விரதம் மேற்கொண்ட பின்னர், காவடி ஏந்தி, புனித தலங்கள் என சொல்லப்படும் அரித்துவார், கங்கோத்திரி, கெளமுக், கேதார்நாத், வாரணாசி, பிரயாகை போன்ற தொலைதூர பயணத்திற்கு கால்நடையாக பயணங்கள் மேற்கொள்கின்றனர். கங்கை நீரை சுமந்து சென்று தங்கள் சொந்த ஊர்களில் உள்ள சிவாலயங்களில், அமாவாசை அல்லது மகாசிவராத்திரி அன்று கங்கை நீரால் அபிசேகம் செய்கின்றனர்.
கன்வார் என்றால் மூங்கில் தடி அதன் இரு முனைகளிலும் தண்ணீரை சுமக்க கயிறுகளை கட்டி தங்கள் தோள்களில் சுமந்து செல்வதாகும். இதில் ஆண்கள், பெண்கள் என்று இருபாலரும் கலந்து கொள்வார்கள். இந்த கால்நடைப் பயணத்தில் தில்லி, உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்கண்ட், சத்தீஸ்கர், அரியானா, பஞ்சாப், இராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் என்று அனைத்து மாநிலங்களிலும் இருந்து பங்கெடுக்கிறார்கள். இது பல ஆண்டுகளாக தொடரப்பட்டாலும், சில ஆண்டுகளுக்கு முன்புவரை ஆயிரக்கணக்கில் மட்டுமே பங்கெடுத்தனர். ஆனால் தற்போது கோடிக்கணக்கில் கூட்டம் கூட்டமாக பங்கெடுக்கிறார்கள். இதில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள் என்பது குறிப்பிடதக்கது.
இந்த பயணங்கள் செல்லும் வழித்தடத்தில் உள்ள உணவக உரிமையாளர்கள் மற்றும் வேலை செய்பவர்களின் பெயர்களை எழுதி வைக்க வேண்டும் என்று ஒரு பொது அறிவிப்பு உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் மத்தியப் பிரதேச அரசுகளால் வெளியிடப்பட்டது. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இது முஸ்லிம் வியாபாரிகளை ஒடுக்குவதற்கான நடவடிக்கை என்று எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதற்கு பிஜேபி கூட்டணி கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதை எதிர்த்து திரிணாமுல் காங்கிரசின் எம்.பி. மஹுவா மொய்த்ரா, கல்வியாளர் அபூர்வானந்த் ஜா, கட்டுரையாளர் ஆகர் படேல் மற்றும் சிவில் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பினர் எனப் பலரும் இதற்கு எதிராக மனு கொடுத்தனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், எஸ்.வி.என். பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு, பெயர் பலகையில் உரிமையாளர் பெயரை எழுதி வைத்திருக்க வேண்டும் என யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது என்றும், உ.பி. அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடையை ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை நீட்டித்தும் உத்தரவிட்டது. ஆனால் அவர்கள் பரிமாறும் உணவு சைவமா? அசைவமா? என்பதை தெரிவிக்க வேண்டும் என்று கூறியது.
இவ்வாறிருக்க கன்வார் பயணங்களின் வழித்தடங்களான ஹரித்வாரின் ஜ்வாலாபூர் நகரில் உள்ள இரண்டு மசூதிகள் மற்றும் ஒரு மஸார் சூலை 26 வெள்ளிக்கிழமை அன்று காலை பெரிய வெள்ளைத் துணிகளை கொண்டு மறைக்கப்பட்டன. சர்ச்சைகளுக்கு பிறகு அன்றைய மாலை மாவட்ட நிர்வாகம் திரைகளை அகற்றியது.
திரைகளை வைப்பதற்கு தாங்கள் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்று நிர்வாகம் கூறினாலும், ஹரித்வார் மாவட்ட பொறுப்பு மந்திரியான சத்பால் மகராஜ், எந்தவிதமான கிளர்ச்சி மற்றும் அசம்பாவிதங்களை தடுக்கவும், கன்வார் பயணங்களின் எந்த தடங்கலும் நடைபெறாமல் தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறியுள்ளார்.
மாநில அரசினால் விதிக்கப்பட்ட தடைகள் அமலில் இல்லாத போதும் பலர் அச்சத்துடன், புதிய பெயர் பலகைகளில் தங்கள் பெயர்களை எழுதி வைத்துள்ளனர் மற்றும் சிலர் கடைகளை முற்றிலுமாக அடைத்துள்ளனர். இதனால் இவர்களின் பொருளாதாரம் பாதிக்கபட்டுள்ளது.
இவ்வளவு நெருக்கடிகளைக் கொடுத்த மாநில அரசும், அச்சத்துடன் முன்கூட்டியே பெயர் பலகைகள் வைத்தும், இஸ்லாமியர்கள் மசூதிகளை திரையிட்டு முடியும், சிவபக்தர்கள் என்னும் முகமூடியுடன் சாதாரண பக்தர்களுடன் ஊடுருவி வந்த இந்துத்துவ குண்டர்களால் வன்முறைகள் அளவின்றி நடந்தன. அவைகளில் சில
- முசாபார்நகரில் உள்ள ரிலையன்ஸ் பெட்ரோல் நிலையத்தில் புகை பிடித்ததை தடுத்த மனோஜ்குமார் என்ற ஊழியரை, நாற்பதில் இருந்து ஐம்பது இந்துத்துவ குண்டர்கள், புகை பிடித்ததை தடுத்ததற்காக வெறி கொண்டு தாக்கியுள்ளார்கள். இதில் தலையில் பலத்த காயங்களுடன் மனோஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- சஹரான்பூரில் தனது இரு சக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்ததில் கன்வாரிகளின் மூங்கில் கலி உடைந்ததாகக் கூறி, வாகனத்தில் பயணித்த அமன் குமார் மற்றும் அவரது மச்சான் மோனுவையும் கொடூரமாக தாக்கியுள்ளார்கள்.
- ஹரித்வாரில் உள்ள மங்களூரில் தனது ரிக்சாவின் முன் திடீரென வந்த கன்வாரியோடு சில உரசல் ஏற்பட, அதனால் தனது கன்வாரி உடைந்தது என்று 10-12 குண்டர்களுடன் சேர்ந்து சஞ்சய் குமாரை கொடுரமாக தாக்கி அவரது வாகனத்தையும் சேதப்படுத்தியுள்ளனர். மேலும் மன நலம் குன்றிய ஒருவரையும் கொடூரமாக அடித்து தாக்கியுள்ளனர்.
- இதுமட்டுமல்லாது ஒரு காவல் துறை வண்டியையும் தடம் புரள செய்துள்ளனர். ரோந்து பணியில் உள்ளபோது கன்வரி எனும் மூங்கில் கலியை தொட்டதால் காவல் துறை வண்டி என்றும் பாராமல் அடித்து நொறுக்கி உள்ளனர்.
யாத்திரை எனும் பெயரில் கஞ்சா அடித்து கொண்டு, வழியில் கிடைக்கும் இலவச உணவை சுவைத்து கொண்டு தங்களை சிவனாகவே உணர்ந்து கொண்டு அனைவரையும் அடித்து துன்புறுத்துவது மற்றவர்களுக்கு பாடம் கற்பிப்பதாக இந்த இந்துத்வாவாதிகள் கூறுகிறார்கள். அதுமட்டுமல்லாது வழியெங்கும் சத்தமாக பாடல்களை பாடச்செய்தும் போக்குவரத்திற்கும், பொது மக்களுக்கும் மிகுந்த இன்னல்களை வழங்கி வருகின்றனர். இவர்களில் ஒருவர் கூட காவலர்களால் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
”இந்த பயணங்கள் வெறும் ஒரு சில மக்களின் நம்பிக்கையில் தொடங்கி, இன்று இந்துத்துவ கும்பல்களால் ஒரு திருவிழாவாக உருவெடுத்திருக்கிறது. அது கலவரத்திற்கான புகலிடமாகவும் மாற்றப்பட்டு இருக்கிறது”. இதில் பங்கு பெறும் பலரும் சிறு வயதுக்காரர்களாக இருக்கிறார்கள். புத்தகம் சுமக்கும் தோள்களில் தண்ணீர் சுமந்து கொண்டு பல மைல்கள் நடக்கிறார்கள். பள்ளிக்கு சென்று சமூக நீதி பயிலாமல் தெருவோரங்களில் வெறுப்பை சுமந்து கொண்டு அலைகின்றனர். இதற்கு முன்பு ஆடை நிறம் பற்றி குறிப்பாக ஏதும் இல்லை ஆனால் இன்று அனைவரும் காவி உடைகளில் அலைகிறார்கள்.
வேலையில்லாதவர்கள், கூலி வேலை செய்பவர்கள், வாகன ஓட்டுனர்கள், பாதுகாப்பு வேலை பார்ப்பவர்கள் என அடிமட்ட வேலை செய்யும் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களே இதில் அதிகமாகப் பங்கெடுக்கிறார்கள். மேற்படிப்பு படித்தவர்கள் மிகவும் சொற்ப அளவிலே பங்கெடுக்கிறார்கள். அரசியலாக திரட்டப்படாமல் பக்தியால் திரளும் இளைஞர்களை, சிறுபான்மை மதங்களின் மேல் வெறுப்புணர்வை வளர்க்கும் இந்துத்துவ வன்மத்தை திணிக்கிறார்கள். “எங்கள் இளைஞர்களின் திறனை பாருங்கள், தீரத்தை பாருங்கள்” என்று அவர்களின் உணர்ச்சிகளைத் தூண்டி விட்டு இந்துத்துவ, ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் குளிர்காய்கிறார்கள். பக்தியை அளவுக்கதிகமாக ஊட்டி, பின்னர் இந்து மதத்திற்கு சிறுபான்மையினரால் ஆபத்து என்று கோவமுறச் செய்து, படிப்படியாக தங்களின் அடியாட்களாக மாற்றி விடுகிறார்கள். மதத்தோடு சேர்த்து போதையையும் வளர்க்கிறார்கள். இந்த இளைஞர்கள் மத போதையில் தங்கள் எதிர்காலத்தை தொலைத்து சக மனிதன் மேல் வெறுப்போடு அலைகிறார்கள்.
தமிழ்நாட்டிலும் ஆண்டுதோறும் காவடி தூக்கிக் கொண்டு நடந்தே சென்று முருகனை வழிபடும் பக்தர்கள் அமைதியாகவே வழிபடுகிறார்கள். அவர்களுக்கு இஸ்லாமியர்கள் தண்ணீர், உணவு கொடுத்து அரவணைக்கின்றனர். அனைத்து வழிபாட்டு தலங்களிலும் மத வேறுபாடின்றி நல்லிணக்கத்துடன் இணைந்து இருப்பதே தமிழ்நாட்டில் நாம் காணும் காட்சியாக இருக்கிறது. ஆனால் வடமாநிலங்களில் ’ராம நவமி முதல் கன்வார் யாத்திரை’ என அனைத்து விழாக்களும் கலவரங்கள் இல்லாமல் நடப்பதில்லை.
இந்துத்துவ, ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் வளரும் இடங்களில், மதவெறி இயல்பாகவே எப்படி ஊட்டப்படுகிறது என்பதை ஆய்ந்து பார்த்தாலே, தமிழ்நாட்டில் இந்த இந்துத்துவ குண்டர்களை காலூன்ற விடக் கூடாது என்று ஏன் சனநாயக சக்திகள் வலிமையாக எதிர்க்கிறார்கள் என்பது புரிந்து விடும். சாமானிய பக்தர்களின் உளவியலில், வெறித்தனம் வளர்த்து, இந்துத்துவத்தை வேரூன்றச் செய்யும் அரசியலை முளையிலேயே கிள்ளி எறிவது தமிழ்நாட்டிற்கு நல்லது.