
கீழடியின் கொந்தகை பகுதியில் கிடைத்த 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட மண்டை ஓட்டை வைத்து இங்கிலாந்து பல்கலைக்கழகம் பழந்தமிழரின் முகத்தை அறிவியல் முறைப்படி வரைந்துள்ளது. மேலும் கீழடியில் கண்டறியப்பட்ட பழம்பொருள்களின் ஊடாக தமிழர்களின் மூத்த நாகரிகக் காலம் 2800 ஆண்டுகள் வரை முன்னோக்கி செல்வதை அமெரிக்காவின் புளோரிடாவில் இருக்கும் பீட்டா ஆய்வு மையத்தில் அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் இரும்பு காலம் 5000 ஆண்டுகள் என இதுவரையிலான அறிவியல் ஆய்வுப்படி ஆதாரப்பூர்வமாக கண்டறியப்பட்டுள்ளது. ஆனாலும் கீழடி ஆய்வறிக்கை, போதுமான அறிவியல் சான்றுகளுடன் இல்லை என இந்திய தொல்லியல் துறையாலும், ஒன்றிய பாஜக அரசாலும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
பல்லாயிரம் ஆண்டுகளாக சங்ககாலம் தொடர்ந்து வந்தாலும், இலக்கியத் தரவுகளின் படி கி.மு 300 – கி.பி 300 வரை 600 ஆண்டுகளைக் காலக் கணக்கீடாக அறிஞர்கள் நிர்ணயித்தனர். ஆனால் கீழடி ஆய்வறிக்கை தமிழர்களின் எழுத்துப் பயன்பாட்டு காலத்தை கி.மு 600 – கி.மு 800 வரை முன்னோக்கி நகர்வதை அறிவியல் சான்றின்படி எடுத்துரைக்கிறது. சங்க காலத்தின் பெருங்கற்காலம் எனக் குறிப்பிடப்பட்ட காலத்தை ஆய்வு செய்வதற்காக தோண்டப்பட்ட அகழ்வுகளில் ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு போன்ற பல இடங்களில் புதைவிடம் மட்டுமே கண்டறியப்பட்டது. ஆனால் மனித வாழ்விடப் பகுதிக்கான தேடலில் கிடைத்தது தான் கீழடி. சுமார் 293 இடங்களின் தேடலுக்குப் பிறகு இங்கு தான் மனித வாழ்வியலுக்கான தடயங்களை கண்டுபிடித்து அகழ்வுகளில் ஈடுபட்டார் தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்கள். தமிழர்களின் மூத்த நகர நாகரித்தின் வாழ்வியலை வெளிக்கொண்டு வந்த 982 பக்க ஆய்வறிக்கையைத் தான், மேலதிகமான அறிவியல் ஆதாரம் தேவை என மோடி அரசு மறுத்திருக்கிறது.
கீழடியில் மக்கள் நகரமயத்துடன் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதற்கு இங்கு கிடைக்கப்பெற்ற கட்டடச் சான்றுகள் பெறும் எடுத்துக்காட்டாக இருக்கின்றன. இக்கட்டட வடிவத்தைக் கொண்டு கி.மு 800 – கி.பி 1000 வரையிலாக மக்கள் பயன்பாடு இருந்திருப்பதை கீழடியின் காலகட்டம் குறித்த ஆய்வுகள் உறுதி செய்கின்றன. கீழடியின் அடுக்குகள் மூலமாக மூன்று காலகட்டங்களாக வரையறுத்திருக்கிறார்கள்.

முதலாம் காலகட்டமான கி.மு 800 – கி.மு 500 வரையில், மரத்தாலான கட்டுமானங்கள் கிடைக்கின்றன. இது கீழடுக்கில் செய்யப்பட்ட ஆய்வாகும். மேலும் இங்கே இரும்புப் பொருட்கள், கிறுக்கல்களைக கொண்ட பானை ஓடுகள், கருப்பு – சிவப்பு மட்பாண்டங்கள் கிடைத்தன.
இரண்டாம் காலகட்டம் என்பது கி.மு 500 – கி.மு 300 வரையிலானது. இங்கு செங்கல்களால் கட்டமைக்கப்பட்ட கட்டுமானங்களை உடையதாக மதில்கள், உறைகிணறு, வடிகால் வசதி, வடிவமான தரைகள், கதவுகள், இரும்பு ஆணிகள் என நகர நாகரிக வாழ்க்கைக்குரிய அனைத்து வசதிகளும் 2500 ஆண்டுகளுக்கு முன்பே இருந்ததற்கான அடையாளங்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக கழிவறை வசதிகள் இன்றைய நவீன காலத்தில் கட்டப்படுவது போல உரிய வசதிகளுடன் மேல் தளத்திலிருந்து கீழ்த்தளம் வரை குழாய்களால் இணைக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டது வியக்க வைக்கும் சான்றாக கிடைத்துள்ளன.
நகர வடிவம் மட்டுமல்ல, சுடுமண்ணாலான முத்திரைக் கட்டைகள் அக்கால வணிகத் தொடர்புக்கான முக்கிய அடையாளமாக கிடைத்துள்ளன. விலையுயர்ந்த மணிகள், ரோமானிய நாணயங்கள், மேற்காசிய மட்பாண்டங்கள், சங்கு வளையல்கள், கண்ணாடி மணிகள், தந்தத்தால் ஆன பகடைகள் போன்றவையும் வணிகத் தொடர்புக்கான பொருட்களாக கிடைத்துள்ளன. கீழடி அருகிலிருந்த கொந்தகை பகுதியின் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியில் அணிகலன்கள் செய்யப் பயன்படுத்தப்படும் விலையுயர்ந்த சூது பவள மணிகள் கண்டறியப்பட்டன. நூல் நூற்கும் தக்களி, சாயத் தொட்டிகள் போன்றவை நெசவு, சாயப் பட்டறைகள் இருந்ததை உறுதி செய்து ஆடை உற்பத்தித் தொழிலும், வணிகமும் நடந்திருப்பதை நிறுவும் சான்றாக உள்ளன.

மேலும் மிகவும் முக்கியமாக தமிழ் பெயர்கள் மட்பாண்டங்களின் கீறல்களாக வெளிப்பட்டுள்ளன. ஆதன், உதிரன், தீசன் போன்ற சங்க இலக்கியங்களின் பெயர்கள், தமிழ் மக்களின் எழுத்துப் பயன்பாட்டு காலம் என்பது, சங்க காலம் என அறியப்பட்ட கி.மு 300-க்கும் முன்னே சென்று கி.மு 600 என ஆகிறது. தமிழ் பிராமி என்பது அசோகர் பிராமியிலிருந்து உருவானது என்ற கருதுகோளை முற்றிலும் மாற்றி அது ’தமிழி’ என்கிற தமிழரின் எழுத்து வடிவம் என்பதை அறிவியல் பூர்வமாக அறிய வைத்திருக்கிறது கீழடி ஆய்வு. அசோகர் பிராமியின் காலம் கி.மு 300. ஆனால் தமிழி என்னும் தமிழ் பிராமியின் காலம் கி.மு 600 -க்கும் முன்னர் செல்கிறது. அதனால் அசோகர் பிராமியிலிருந்து தமிழ் பிராமி உருவானது என்கிற கருதுகோள் உடைக்கப்பட்டு தமிழி என்னும் மொழியே தமிழர்களின் வாழ்வியல் மொழியாக இருந்திருக்கிறது என்பதே உறுதியாகிறது.
‘தமிழி’ என்ற எழுத்து வடிவத்தின் மூலமே, இந்தியாவில் எழுந்த பிராமி என்கிற எழுத்து தோன்றியதற்கான வாய்ப்புகள் உண்டு. இந்த எழுத்தில் இருந்து தான் இந்தியாவில் உள்ள ’பிராமி’ என்று சொல்லப்படுகிற எழுத்து வடிவமும் பிறந்து இருக்க வேண்டும், இந்த தமிழி என்ற எழுத்து வடிவம் தான் இந்தியாவில் இருக்கும் எல்லா மொழிக்கும் தாய் எழுத்தாக விளங்கி இருக்க வேண்டும் என்று கீழடி ஆய்வறிக்கை எழுதிய அமர்நாத் ராமகிருஷ்ணனின் கருத்து இந்திய வரலாற்றையே புரட்டிப் போடவல்லது, இந்த அறிக்கையை இந்திய பாஜக அரசு மறுப்பதற்கு இந்த காரணமே போதுமானது என்பதே தமிழறிஞர்களின் கூற்றாக இருக்கிறது.
இவ்வளவு பொருட்கள் கண்டறியப்பட்டு கீழடி தமிழரின் தொன்மையை பறைசாற்றிக் கொண்டிருக்கும் அதே வேளையில் மதங்கள் சார்ந்த, கடவுள் வழிபாடு சார்ந்த எந்த விதமான சான்றுகளும் அங்கு கிடைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இயற்கை மரபு சார்ந்த தொல்தமிழர் வாழ்வியலின் பெரும் ஆதாரமாக இருக்கும் சங்க இலக்கியங்களும், மதம் சார்பான தொல்பொருள் எதுவும் கிடைக்காத கீழடியும் இணையும் ஆய்வுப் புள்ளிகள் வேறெந்த அகழாய்விலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு நகர மயம், வணிக மயம், எழுத்தின் பயன்பாடு, மதச்சார்பின்மை என மக்கள் சிறந்து வாழ்ந்த நாகரிக காலம் என்பது கி.மு 800 என்பதை ஏற்றுக்கொள்ள முடியாமல், இன்னும் போதுமான அறிவியல் சான்றுகள் வேண்டும் என்று அமித்ஷா கூறுகிறார். மதம் சார்ந்து கீழடி தொல்லியல் பொருட்கள் இல்லை என்பதும், தமிழி அசோகர் பிராமியிலிருந்து உருவாகவில்லை என்பதும் இந்தியப் பார்ப்பனீயம் கற்பித்து வைத்த வரலாற்றிற்கு இடியாய் இறங்கியிருக்கிறது. அதனால் இன்னும் அறிவியல் சான்றுகள் தேடச் சொல்கிறார்கள். அதே வேளையில், ராஜஸ்தான் மாநிலத்தில் 4500 ரூபாய் ஆண்டுகளுக்கு முற்பட்ட புராதன நகரம் கண்டுபிடித்ததாகவும், அதற்குள் சரஸ்வதி நதி ஓடுவதற்கான ஆதாரங்கள் கிடைத்து விட்டதாகவும் இந்திய தொல்லியல் துறை எந்த அறிவியல் ஆய்வுமின்றி சமீபத்தில் வாய்மொழியில் சொல்லியது. ஆனால் அது 2000 ஆண்டுகளுக்கு மட்டுமே முந்தையது என்றும், சிந்து சமவெளி நாகரிகத்திற்கே பிந்தையது என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது. கீழடிக்கு மேலதிகமான அறிவியல் சான்றுகள் கேட்கும் இவர்கள் தான், கீழடியை விட முந்தைய நாகரிகம் கொண்டதாக தங்களுடையதை நிறுவ முயற்சித்துக் கொண்டேயிருக்கிறார்கள்.

கீழடியை விட மேலதிகமான காலத்திற்கு முன் செல்லும் இரும்பு நாகரிகத்திற்கும் தமிழர்களே சொந்தக்காரர்கள் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. கீழடி தொல்லியல் தளத்தை பிஜேபி தந்த அழுத்தத்தினால் மோடி அரசு மூடிய பின்னர், தமிழ்நாடு தொல்லியல் துறை கையிலெடுத்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டு உலகளவில் இரும்பைப் பயன்படுத்திய ஆரம்ப கால இடங்களில் தமிழகமும் ஒன்றாக இருந்துள்ளது என்பதையும் தமிழ்நாடு தொல்லியல் அறிவியல் ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. இதனை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன.
இதன் காலம் கி.மு 2600 முதல் கி.மு 3345 வரை ஆகும். இந்தியாவில் இரும்பு தெலுங்கானாவில் கி.மு 2220 ஆண்டுகளில் கண்டறியப்பட்டது தான் இதுவரையிலான இரும்பு பயன்பாட்டு சான்றாக உள்ளன. தெலுங்கானா எனப் பிரிக்கப்படாத பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் அதுவும் தமிழர் பகுதி தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் தெலுங்கானாவை விட முற்பட்டு கி.மு 3345 என்பது 5345 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் இரும்பு உருக்கும் தொழிலின் இந்தியாவின் முன்னோடிகள் என்பதை பறைசாற்றுகிறது. இரும்பு எஃகு வாள்களை செய்து வெளிநாடுகளில் குறிப்பாக சிரியாவில் ’டமாஸ்கஸ் ஸ்டீ’ல் என்னும் வாளாக ஏற்றுமதி செய்த ஆதாரங்களும் வெளிவந்தது முக்கியமானது. இரும்பு உருக்கும் தொழிலின் உலகளாவிய வளர்ச்சி தமிழகத்தின் ஏற்பட்டுள்ளது என்பதை இதுவரை கிடைத்த அறிவியல் ஆதாரங்களின் மூலமாக தெரிகிறது.
இவ்வாறு தொடர்ச்சியாக அறிவியல் சான்றுகளும் படி நம்(தமிழர்கள்) வரலாறு நிரூபணம் ஆகிக்கொண்டே இருக்கிறது. வேத காலத்திற்கு முந்தைய வரலாறை வலுவாக்கிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் வேத காலத்திற்கு முந்தைய ஒரு பழமையான நாகரிகம் இருந்துள்ளது என சிந்து சமவெளி நாகரிகத்தை ஜான் மார்ஷல் 1924, செப்டம்பர் 20-ல் லண்டன் பத்திரிக்கையில் எழுதினார். அது திராவிட நாகரிகம் என்கிற கருத்தையும் வெளிப்படுத்தினார். அதற்கு முன்பு வரை இந்தியப் பார்ப்பனீயத்தினால் வில்லியம் ஜோன்சிடம் அளிக்கப்பட்ட வேத அடிப்படையே இந்திய வரலாறாக கட்டமைக்கப்பட்டிருந்தது. அது 1924-ல் உடைந்தது. இன்றைய பாகிஸ்தான் பகுதிகளாக இருக்கும் ஹரப்பா, மொஹஞ்சோதாரா வரை சிந்து சமவெளி நாகரிகம் பரவியிருந்ததன் சான்றுகள் கிடைத்தன.
நம்மை அடிமைப்படுத்த வந்த ஆங்கிலேயர்கள், நம் வரலாற்றை தெரிந்து கொண்டு அதன் வழியாக நம்மை அடிமைப்படுத்தலாம் என்று தான் அகழாய்வைத் தொடங்கினார்கள். ஆனால் அவர்கள் உண்மையை எழுதினார்கள். நம் கூடவே இருந்து கொண்டு உண்மையைத் திரிக்கின்ற, மறுக்கின்ற வேலையை இந்தியப் பார்ப்பனீயம் செய்து கொண்டேயிருக்கிறது. இந்திய சுதந்திரத்திற்கு பின்னர் அகழாய்வுகள் எல்லாம் வட இந்தியாவில் வேதகால நாகரிகத்தைக் கண்டறியவே ஆய்வுகள் நடத்தப்பட்டன. தென்னிந்தியாவில் 2001-ல் தான் அகழாய்வுப் பிரிவே ஒதுக்கப்படுகிறது.

இந்தியத் தொல்லியல் ஆய்வாளராக தமிழ்நாட்டிற்கு 2013-ல் அமர்நாத் ராமகிருஷ்ணன் நியமிக்கப்படுகிறார். அவர் 2014-ம் ஆண்டு கீழடியைத் தேர்ந்தெடுக்கிறார். அதன் மூலம் தமிழர்களின் மூத்த நாகரிக வரலாறை நம் கையில் அறிவியல் ஆதாரத்துடன் கொடுத்திருக்கிறார். இதற்காகவே பணியிட மாற்றம் என்று இந்தியப் பார்ப்பனிய அரச மட்டத்தினால் பழிவாங்கப்பட்டுக் கொண்டிருக்கிறார். ஒரு ஆய்வாளரின் இறுதி அறிக்கையே கணக்கிலெடுத்துக் கொள்ளப்படும் என்கிற இந்திய தொல்லியல் துறையின் நடைமுறை விதிகளில் இருந்து இதில் மட்டும் இந்திய தொல்லியல் துறை விலகி ஆதாரத்தைக் கேட்கிறது. பாஜக அரசு தந்த நெருக்கடிகளை சந்தித்தும், ஆய்வின் உறுதியிலிருந்து பின்வாங்காது நின்ற அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களின் குழுவும், அவர்களுக்கு பக்க பலமாய் நின்று இவ்வறிக்கை வெளிவரத் துணை புரிந்த பேராளுமைகளும், அரசின் தடைகளை எதிர்த்து வழக்கு நடத்தியவர்கள், கீழடிக்கு நிலம் தந்த முகம் தெரியாத எளிய மக்கள் எனப் பலரும் கைக்கோர்த்த கீழடி ஆய்வினை வெளிக் கொணர்ந்திருக்கின்றனர்.
நீண்ட நெடுங்காலமாக இந்தியப் பார்ப்பனிய அரசு இல்லாத இந்திய ‘பண்பாட்டு ஒருமைப்பாட்டை’ வலியுறுத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில் கீழடியில் கிடைக்கப்பெற்ற வரலாற்று ஆவணங்கள் தமிழர்கள் தனித்த அடையாளத்தோடு வாழ்ந்தவர்கள் என்கிற உண்மையை வெளிக்கொண்டு வருகிறது. இது ஒற்றை இந்தியப் பண்பாட்டை வலியுறுத்துகிற இந்துத்துவ அரசியலுக்கு நேர் எதிரானது என்பதால் இந்த அறிவியல் உண்மையை மறுக்க மற்றும் மறைக்கப் பார்க்கிறது இந்தியப் பார்ப்பனிய மோடி வகையறாக்கள்.
கீழடி என்பது வெறும் மண்ணை தோண்டும் அகழாய்வு மட்டுமல்ல; அது தமிழரின் வரலாற்று அடையாளத்தை மீட்கும் போராட்டம். மண்ணில் புதைந்த தமிழர் நாகரிகத்தை, அடக்கப்படும் தமிழர் வரலாற்றை மீட்டெடுக்க தமிழர்கள் ஒவ்வொருவரும் இந்த போராட்டத்தில் இணைந்து கொள்ள வேண்டியது அவர்களின் வரலாற்று கடமை. நமது வரலாற்றின் வேர்களை வலுப்படுத்துவோம். தமிழர்கள் தனித்த தேசிய இனத்தவர்கள் என்கிற உண்மையை வரலாற்றின் வழியாக அறிவியலின் துணை கொண்டு இந்த உலகிற்கு உரக்கச் சொல்வோம்.