மணிப்பூரில் குக்கி பழங்குடிகள் மற்றும் மெய்தி மக்களுக்கு இடையில் தொடரும் வன்முறைகளுக்கு வரலாற்று ரீதியாகவும் நில உரிமை/ பொருளாதார ரீதியாகவும் பல காரணங்கள் இருக்கின்றன. பல ஆண்டு காலமாக அங்கு ஆயுதப்படையின் அத்துமீறல்கள், மத/இன மோதல்கள் தொடர்ந்து வரும் நிலையில் பழங்குடியினரின் நிலங்களை அபகரிக்கும் திட்டங்கள் மூலமாகவும் ஆளும் பாஜக அரசு அம்மக்களை வஞ்சித்து வந்திருக்கிறது.
குறிப்பாக மணிப்பூர் மாநிலத்தின் மலைப்பாங்கான நிலப்பரப்பில் குரோமைட், லிக்னைட், சுண்ணாம்புக் கல் (limestone) போன்ற பல்வேறு கனிமங்கள் இருப்பதால் அங்கு ஆளும் பாஜக அரசு பல கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சுரங்கம் தோண்ட அனுமதி அளிக்கும் முனைப்பில் உள்ளது. இந்த கனிம வளக் கொள்ளையைப் போலவே பாஜக அரசு மணிப்பூரில் முன்மொழிந்த மற்றொரு திட்டம் ‘பனை எண்ணெய்’ திட்டம்.
மணிப்பூர் மாநிலத்தின் மலைப்பகுதிகளில் இருந்து பனை எண்ணெய் எடுக்கும் திட்டத்தை 12 நவம்பர், 2020 அன்று அறிவித்தது பாஜக அரசு. ‘பாமாயில்’ எனப்படும் ‘பனை எண்ணெய் உற்பத்தி திட்டம்’ என்ற பெயரில் குக்கி இனத்தவரின் நிலத்தை கைப்பற்றுவதற்காத்தான் இத்திட்டம் முன்மொழியப்பட்டதாக அப்போதே அம்மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இத்திட்டத்தை மோடியின் நண்பர் அதானிக்கு கொடுப்பதற்காக பாஜக அரசாங்கத்தால் மணிப்பூரில் வன்முறை திட்டமிட்டு நடத்தப்பட்டதாக தற்போது எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி உள்ளன.
எண்ணெய் பனை மரங்கள் (OIL PALM) வேறு எந்த எண்ணெய் உற்பத்தி பயிரையும் விட அதிக எண்ணெயை உற்பத்தி செய்யும் தாவரங்களாக இருக்கின்றன. மேலும் இவற்றை வளர்ப்பதற்கு குறைந்த உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளே தேவைப்படுகின்றன. எனவே இந்தியாவில் சமையல் எண்ணெய் துறையில் மட்டுமின்றி ஏற்றுமதி துறையிலும் பாமாயில் கோலோச்சுகிறது. (ஆனால் இதே எண்ணெய் பனை மரம் மணிப்பூரின் மண்ணுக்குப் பரிச்சயமில்லாதது. ஆனால் அங்குள்ள விவசாயிகளின் எதிர்ப்பை மீறி இத்திட்டத்தை கொண்டு வரத் துடிக்கிறது பாஜக அரசு).
உலகளவில் பனை எண்ணெய் உற்பத்தித் துறையில் முன்னணி நிறுவனமாக சிங்கப்பூரைச் சேர்ந்த வில்மர் நிறுவனம் இருக்கின்றது. 1999-இல் வில்மருடன் கூட்டு சேர்ந்து இந்தியாவின் சமையல் எண்ணெய் துறையை ஆக்கிரமிக்க ஒப்பந்தம் செய்தவரே அதானி.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தென்கிழக்கு ஆசியாவில் வெப்பமண்டல மழைக்காடுகளை அழித்து பனை எண்ணெய் உற்பத்தி செய்தது அதானி-வில்மர் குழுமம். 1999 ஆம் ஆண்டில் குஜராத்தில் உள்ள அதானியின் முந்த்ரா துறைமுகத்தில் ஒரு பனை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை தொடங்கினார் அதானி. இன்று 17 சுத்திகரிப்பு ஆலைகளும் பல்வேறு பாமாயில் தயாரிப்புகளும் அதானியின் கைப்பிடிக்குள் உள்ளன. பார்ச்சூன் பிராண்ட் (Fortune brand) என்ற பெயரில் சமையல் எண்ணெய் மட்டுமல்லாது அரிசி, சர்க்கரை, கோதுமை மாவு, பருப்பு வகைகள் போன்ற பொருட்களின் சந்தையையும் கைப்பற்றியது அதானி நிறுவனம்.
பனை எண்ணெய் உற்பத்திக்காக இந்தோனேசியா மற்றும் மலேசியாவில் லட்சக்கணக்கான ஹெக்டேர் மழைக்காடுகளையும் அங்கு வாழும் யானைகள் மற்றும் புலிகளின் வாழ்விடங்களையும் அழித்த அதானி குழுமம், வடகிழக்கு இந்தியாவில் தன் வேட்டையைத் தொடங்க திட்டமிட்டிருக்கின்றது. இந்த வேட்டைக்குத் திறவுகோலாகத்தான் கடந்த 2020-இல் ‘எண்ணெய் பனை மிஷன்’ திட்டத்தை பைரென் சிங் தலைமையிலான பாஜக அரசு அறிவித்தது என்று எதிர்க்கட்சிகள் குற்றசாட்டுகளை எழுப்பியுள்ளன.
மணிப்பூர் அரசாங்கத்தின் தரவுகளின்படி, மலைப்பகுதிகளில் பனை எண்ணெய் எடுப்பதற்காக 9,67,981 ஹெக்டேர் நிலம் குறிக்கப்பட்டிருக்கிறது. இம்பால் மேற்கு (14,516 ஹெக்டேர்), தௌபல் (18,475 ஹெக்டேர்), பிஷ்ணுபூர் (10,389 ஹெக்டேர்), சூர் சந்த்பூர் (11,662 ஹெக்டேர்), சண்டேல் (6,803 ஹெக்டேர்) மற்றும் உக்ருல் (4,808 ஹெக்டேர்) ஆகிய ஆறு மாவட்டங்களில் பழங்குடி மக்களின் நிலங்கள் இத்திட்டத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது .
உள்ளூர் விவசாயிகள் (பெரும்பாலும் குக்கி பழங்குடிகள்) இந்த பாமாயில் உற்பத்தித் திட்டத்தை நடத்த முடியாது என்று கூறி கார்ப்பரேட் நிறுவனங்களை ஒப்பந்தத்திற்கு அழைத்தது பாஜக அரசு. கோத்ரேஜ் அக்ரோவெட் லிமிடெட், பதஞ்சலி குழுமத்தின் ருச்சி சோயா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் மற்றும் 3எஃப் ஆயில் பாம் அக்ரோடெக் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இந்த திட்டத்தின் ஒப்பந்ததை பெற முன்வந்தன.
அதன்படி, மணிப்பூரின் மலைப்பாங்கான பகுதிகளில் ஒதுக்கப்பட்ட நிலப்பரப்பில் 38,000 ஹெக்டேர் நிலத்தில் ஏற்கனவே எண்ணெய் பனை மரக்கன்றுகள் நடவு தொடங்கப்பட்டுள்ளன. இதற்கு ஏற்றவாறு அங்கு வன பாதுகாப்புச் சட்டங்களும் திருத்தப்பட்டதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
இத்தகைய சூழலில்தான் கடந்த மார்ச் 27, 2023 அன்று மணிப்பூர் உயர் நீதிமன்றம் மெய்தி சமூகத்தைச் பழங்குடியின பட்டியலில் சேர்ப்பது குறித்து பரிசீலிக்குமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து மே 3, 2023 முதல் அங்கு வன்முறை சம்பவங்கள் நிகழத் தொடங்கின. அங்கு அதிகார வர்க்கத்தின் துணையோடு குக்கி பழங்குடிகள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. குக்கி இனப் பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்கொமை நிகழ்வுகள் காணொளிகளாக வெளிவந்து அதிர்ச்சிக்குளாக்கின.
அரசின் கனிம சுரண்டலையும் பனை எண்ணெய் திட்டத்தின் செயல்முறையையும் பார்க்கும்போது குக்கி மக்களின் நிலங்களைக் கைப்பற்ற ‘ஒரு திட்டமிட்ட நிகழ்வாக’ இந்த வன்முறை அரங்கேற்றப்பட்டது என்ற சர்ச்சை தற்போது எழுந்திருக்கின்றது.
மெய்தி மக்களை பழங்குடியினர் வகுப்பில் சேர்த்தால் அவர்கள் குக்கி மக்கள் வாழும் மலைப்பகுதிகளில் நிலங்களை கையகப்படுத்த தொடங்குவார்கள் என்பதே குக்கி இன மக்கள் முன்வைக்கும் குற்றசாட்டாக இருந்தது. ஏனெனில் மணிப்பூரின் மக்கள்தொகையில் 53% மெய்தி மக்களும் 40% மக்கள் குக்கி, நாகா போன்ற பழங்குடியினரைச் சேர்ந்தவர்களாகவும் உள்ளனர். மணிப்பூரில் உள்ள 60 சட்டமன்றத் தொகுதிகளில், 40 தொகுதிகள் மெய்தி இனத்தவர் வாழும் பகுதிகளிலும் 20 தொகுதிகள் மலைப்பகுதிகளிலும் உள்ளன. இதனால் மணிப்பூர் அரசாங்கத்திலும் அம்மாநிலத்திற்கான திட்டங்களை முடிவு செய்யும் அதிகாரமிக்கவர்களாகவும் பெரும்பான்மை மெய்தி இனத்தவர் இருக்கின்றனர்.
மணிப்பூர் அரசாங்கத்தில் அதிகளவில் ஆதிக்கம் செய்யும் மெய்தி இனத்தவரிடமிருந்து தங்களையும் தங்கள் நிலத்தையும் காத்துக் கொள்ள குக்கி இன மக்கள் இன்றும் போராடி வருகின்றார்கள். ஆளும் அரசாங்கமோ அவர்களின் நிலத்தை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பங்கு போட்டுவிட துடிக்கின்றது. மணிப்பூரில் பனை எண்ணெய் உற்பத்தி, பிளாட்டின சுரங்கம் போன்ற திட்டங்கள் தொடங்கி மதுரையில் அரிட்டாபட்டி சுரங்கம் வரை அனைத்தும் இறுதியில் மோடியின் குஜராத்தி நண்பர்களான அம்பானி, அதானி, அனில் அகர்வால் நடத்தும் மார்வாடி நிறுவனங்களுக்காகத்தான் என்பது மீண்டுமொருமுறை உறுதியாகிருக்கிறது.
மேலும் இந்திய ஒன்றியத்தின் எந்த ஒரு மாநிலத்தின் வளத்தினையும் எடுக்க அம்மாநில மக்களிடம் எந்த கருத்தையும் கேட்பதில்லை மோடி அரசு. அவர்களின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் தன்னிச்சையாக முடிவு எடுத்து அம்மாநிலத்தின் பகுதிகளை குஜராத்தி பனியா நிறுவனங்கள் சுரண்டுவதற்காக தாரை வார்க்கிறது. இதுவே அம்மக்களிடம் அதற்குப் பின்பாக ஏற்படும் அமைதியின்மைக்கு காரணமாகிறது. மணிப்பூரின் குக்கி மக்களுக்கும் இந்த நிலையை உருவாக்கி இருக்கிறது பாஜக அரசு.
இவர்களின் கொள்ளைகளை சாதகமாக்க இனவாதம், மதவாதம் தூண்டும் குழுக்கள் மக்களுக்குள் திட்டமிடப்பட்டு ஊடுருவ விடப்படுகின்றன. கோவை நகரத்தின் வணிகம் மார்வாடி கும்பல் கைப்பிடிக்குள் இன்று இருப்பதற்கு, 1998-களில் கோவையில் இந்துத்துவ அமைப்புகளால் தூண்டப்பட்ட மதவாதம் சான்றாக இருக்கிறது. இன்று மணிப்பூர் எரிந்து கொண்டிருக்கிறது. இரத்தமும், சதையுமாக பிய்த்துக் கொல்லப்பட்டும், பெண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியும் இன்னும் போராடிக் கொண்டிருக்கிறார்கள் குக்கி மக்கள். ஒரு மாநிலத்தின் நிலமும், வளமும் அம்மாநில மக்களுக்கே உரிமை என்கிற நிலை ஏற்பட்டால் ஒழிய, பனியாக்களின் கொள்ளைகளுக்காக ஒவ்வொரு மாநிலமும் சூறையாடப்படுவதை தடுக்க இயலாது.
இனவெறி, மதவெறி, குஜராத்தி பனியாக்களின் கொள்ளை வெறிக்கு இலக்காகும் குக்கி மக்களின் தனி மாநிலக் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும். குக்கி மக்களின் நிலம் அவர்களுக்கே சொந்தமான நிலை ஏற்பட வேண்டும்.