
“ஆத்மா, மோட்சம், நரகம், பிதிர்லோகம், மறுபிறப்பு, பேய் பிசாசு,பில்லி சூன்யம் இவற்றைக் கற்பித்தவன் அயோக்கியன். நம்புகிறவன் மடையன். இவற்றால் பலன் அனுபவிப்பவன் மகாமகா அயோக்கியன்” என்றார் தந்தை பெரியார்.
உத்திரப்பிரேசத மாநில பிரயாக்ராஜில், ’கும்பமேளா’ என்ற ஒரு பிரம்மாண்டமான ஆன்மீக விழாவினை நடத்தி, அதில் பங்கேற்றால் மோட்சம் கிடைக்கும் என பக்தர்களை மூளைச்சலவை செய்திருக்கிறது இந்துத்துவம். இப்படி நம்ப வைக்கப்பட்ட மக்கள் கும்பல் கும்பலாக பல மாநிலங்களிலிருந்தும் படையெடுக்கின்றனர். எப்படியாவது கும்பமேளாவில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக கும்பலாக ரயில்வே நிலையங்களில் குவிகின்றனர். ரயிலை சேதப்படுத்துவது மட்டுமல்லாமல் பயணிகளையும் துன்புறுத்தியும் உள்ளே ஏறிவிடத் துடிக்கின்றனர்.
கூட்ட நெரிசலில் போதுமான காற்று (ஆக்சிஜன்) அனைவருக்கும் கிடைக்காது எனும் அறிவியலை கல்விக்கூடங்களில் படித்திருந்தும், குழந்தைகள், வயதானவர்கள் எனப் பலர் கூட்டத்தில் பயணம் செய்து, மூச்சுத்திணறலில் சிக்குகின்றனர். இதனால் உயிர் இழப்பு சுலபமாக நேர்கிறது.
கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் என முன்னேற்றத்தின் அளவுகோல்கள் பலவற்றில் பின்தங்கியிருக்கும் உத்திர பிரதேச மாநிலத்தை பாஜகவின் ஆன்மீக மாநிலமாக முன்னிறுத்துவதற்கு ஒரு விளம்பர நிகழ்வாக கும்பமேளா (மகா கும்பம்) நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஏன் அந்த மாநிலம் வளர்ச்சியடையவில்லை என்று கேட்பவர்களை மடைமாற்ற ஆன்மீகமும், அந்த ஆன்மீகத்தை கண்மூடித்தனமாக ஏற்றுக் கொள்ள மூட நம்பிக்கைகளும் அங்கு மிக விமரிசையாக அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
உத்தரப் பிரதேசத்தின் யோகி அரசினால் மனித உயிர்களை மலிவாகப் பார்க்கும் பக்தித் திருவிழாவாக மகா கும்பமேளா நடந்து கொண்டிருக்கிறது. சிறப்பு விருந்தினர்களுக்கு உச்சகட்ட பாதுகாப்பும், சாதாரண மக்களை மந்தைகளைப் போலவும் நடத்திய கும்பமேளாவில் கடந்த சனவரி 29, 2025 அன்று ஏற்பட்ட நெரிசலில் 40க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் பலியாகி உள்ளதாக யோகி ஆதித்யநாத் அரசு தெரிவித்துள்ளது.

கடும் நெரிசலில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 2000க்கும் மேலாக இருக்கும் எனவும், அதனை யோகி மறைப்பதாகவும் அங்குள்ள எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர். கண்ணால் கண்டவர்களின் சாட்சியங்களை வைத்து, சமூகவலைதளங்களில் பகிரப்பட்ட காட்சிகளைக் கொண்டு இங்கு பலி எண்ணிக்கை பல மடங்கு இருக்கலாம் என குற்றம் சுமத்துகின்றனர். பாராளுமன்றத்திலும் இதன் உண்மைத்தன்மை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. மேலும், குப்பையில் கேட்பாரற்று கிடந்த பக்தர்களின் உடல்களை டிராக்டர்களை கொண்டு வந்து அப்புறப்படுத்தியுள்ளனர். மனிதத்தன்மையற்று சடலங்களை அணுகிய இவை எவையும் முக்கிய ஊடகங்களில் செய்தியாகவில்லை.
கங்கை நதி மற்றும் அதன் துணை நதியான யமுனையின் கரையில் ஒவ்வொரு 144 வருடங்களுக்கும் மகா கும்பமேளா (MKM), ஒவ்வொரு பன்னிரண்டு வருடங்களுக்கும் பூர்ண கும்பமேளா (KM), ஒவ்வொரு ஆறு வருடங்களுக்கும் அர்த்த கும்பமேளா (AKM) மற்றும் ஒவ்வொரு ஆண்டும் மக் மேளா நடைபெறும்” என்று CAG அறிக்கை தெரிவித்துள்ளது. 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா, கடைசியாக 2001 ஆம் ஆண்டு அலகாபாத்தில் நடைபெற்றது” என்று ஹாவர்ட் பல்கலைக்கழகம் தனது புத்தகமான “Kumbh Mela-Mapping the Ephemeral Mega City’ – ல் தெரிவித்துள்ளது. ஆனால், யோகி 144 வருடத்திற்கு ஒரு முறை நடப்பது இதுதான் என்று விளம்பரப் படுத்தி இருக்கிறார். இதையொட்டி இப்பகுதியில் கோடிக்கணக்கானவர்கள் கூடியிருக்கிறார்கள். சனவரியில் 13 இல் ஆரம்பித்த இந்நிகழ்வு பிப்ரவரி 26 இல் முடிகிறது. கங்கா யமுனா சரஸ்வதி ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் குளித்தால் தனது பாவங்கள் தீரும் என நம்ப வைக்கப்பட்ட பக்தர்கள் இங்கு கூடியிருக்கிறார்கள். இதனால் இந்தியாவின் பல பகுதியில் இருந்தும் மக்கள் சென்றிருக்கிறார்கள்.
மௌனி அமாவாசை என்பது மகா கும்பமேளாவின் புனிதமான நாளாக கருதப்படுகிறது.மௌனி அமாவாசை அன்று நடைபெறும் அமிர்த ஸ்நானம், ஒருவரின் பாவங்களை நீக்கி, அவரை ஆன்மீக ரீதியில் தூய்மைப்படுத்தும் என்று நம்பப்படுகிறது.நெரிசல் நடந்த நாளானது சிறப்பான மௌனி அமாவாசை நாளென்றும், அதில் குறிப்பிட்ட நேரத்தில் குளித்தால் மோட்சத்திற்கு உறுதியாக செல்லலாம் என்கிற மூடத்தனத்தை பதிய வைத்ததால், அதை நம்பி அந்த நேரத்திற்குள் ஆற்றுக்குள் சென்றாக வேண்டும் என்கிற பதட்டத்தில் மக்கள் கும்பலாக ஓடியுள்ளனர். இதனால் தான் அதிக பலிகள் நடந்திருக்கிறது.
கும்ப மேளாவில் கூட்ட நெரிசலில் மக்கள் இறப்பது இது முதல் முறையல்ல. 1954இல் கிட்டத்தட்ட 800 பேர், 1986இல் ஹரித்வாரில் நடந்த கும்பமேளாவில் கிட்டத்தட்ட 200 பேர், 2003இல் நாசிக்கில் நடந்த கும்பமேளாவில் 39 பேர், 2013 கும்பமேளாவில் 42 பேர் கூட்ட நெரிசலில் சிக்கியோ விபத்துகள் மூலமாகவோ பலியாகி இருக்கின்றார்கள். இது போன்று கூட்ட நெரிசலில் மக்கள் பலியாவது கும்பமேளாவில் மட்டுமல்ல, உத்திர பிரதேசத்தின் வேறு சில ஆன்மீக நிகழ்வுகளிலும் நடந்திருக்கிறது. 2 சூலை 2024 அன்று, போலே பாபா என்ற சாமியாரைப் பார்ப்பதற்காக கூடிய கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு பெண்கள் குழந்தைகள் உட்பட 121 பேர் இறந்தனர். அதிகபட்சம் 80,000 பேர் அனுமதிக்கப்பட வேண்டிய இடத்தில் 2,50,000 பேரை அனுமதித்ததுதான் இந்த துயர நிகழ்விற்கு காரணமாக அமைந்தது. இவ்வளவு இறப்புகளுக்கு பிறகும் அரசு பாடம் கற்கவில்லை.

அண்மையில் (பிப். 15, 2025 அன்று) புது தில்லி ரயில் நிலையத்தில் கும்பமேளா செல்வதற்காக திட்டமிடப்பட்ட 4 ரயில்களில் 3 ரயில்கள் தாமதமானதால் அதிக எண்ணிக்கையில் மக்கள் கூட்டம் நடைமேடையில் கூடியிருக்கிறது. இதனைத் தொடர்ந்த கூட்ட நெரிசலில் சிக்கி பதினெட்டு பேர் உயிரிழந்திருக்கின்றனர். (இதற்கு முன்னரும் கும்பமேளா செல்வதற்காக பீகாரில் ரயில் சன்னல்களை சில கும்பல் உடைத்துக் கொண்டு ஏறிச் சென்றது சமூக வலைதளங்களில் வெளியானது குறிப்பிடத்தக்கது) இவ்வாறு எந்தவித போக்குவரத்து முறைப்படுத்தலும் இல்லாமல் இத்தகைய விபத்துகளோடும் சட்ட ஒழுங்கு பிரச்சினைகளோடும்தான் கும்பமேளா நடந்து கொண்டிருக்கிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கும்பல் கும்பலாக பலியாவதும் அம்பானி போன்ற பணக்காரர்கள் விமானத்தில் பறந்து வந்து ‘புனித’ நீராடுவதும் இந்த கும்பமேளாவில் சராசரி காட்சிகளாகி விட்டன.
கும்பமேளா நடக்கும் பிரயாக்ராஜில் எல்லா இடங்களிலும் ஏற்பட்டிருக்கும் போக்குவரத்து நெரிசல் காரணமாக மருந்துகள், காய்கறிகள் மற்றும் பெட்ரோல்-டீசல் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. பசியாலும் தாகத்தாலும் சோர்வுற்ற மக்களை மட்டுமே அந்த ஊரின் சாலைகளில் பெருமளவில் காண முடிகிறது.

கூட்ட நெரிசல் மட்டுமல்லாது, கும்பமேளாவில் மக்கள் தங்கியிருந்த முகாம் (இஸ்கான் அமைப்பு அமைத்த முகாம்) இரண்டு தீ விபத்துக்களும் நிகழ்ந்திருக்கின்றன. அங்குவரும் பக்தர்களுக்கு குழந்தைகளுக்கு பால், தண்ணீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதி கிடைக்கவில்லை என பக்தர்கள் குற்றச்சாட்டினர். மேலும் பாதுகாப்பு வழிமுறைகள் இல்லாத ஒரு நிகழ்விற்காகத்தான் இருப்பதை பார்க்க முடிந்தது. கும்பமேளா வருகைக்கு பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாயை செலவழித்து விளம்பரப்படுத்தியது யோகி அரசு. குறிப்பாக சமூக வலைத்தளங்களிலும் யூட்யூபிலும் செல்வாக்கு செலுத்துபவர்கள் மூலம் தொடர்ந்து விளம்பரப்படுத்தியது. கும்பமேளாவில் பங்கேற்றால்தான் மக்கள் புனிதமடைவார்கள், பாவங்கள் நீங்கும் என்ற கருத்தாக்கத்தை உருவாக்க பல கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியிருக்கிறது பாஜக அரசு.
ஆனால் எத்தனை பேர் கூட்ட நெரிசலில் பலியானாலும், அதை செய்தியாக்க விடாமல், விவாதிக்க விடாமல் ஊடகங்களில் ஆன்மீகத்தையும் மூட நம்பிக்கையையும் மட்டுமே பரப்புரை செய்து கொண்டிருக்கிறது யோகி ஆதித்யநாத் அரசு. மக்களின் உணர்வுபெருக்கை (emotions) மூட நம்பிக்கையோடு இணைத்து பலி எண்ணிக்கை குறித்து கூட பேச விடாமல் மடை மாற்றும் வழிமுறைகளை செய்து கொண்டிருக்கிறது பாஜக அரசு.
இந்தியா மதச்சார்பற்ற நாடு என்பது அரசியலமைப்பு சட்டம் வகுத்த விதி. இதனைப் புறந்தள்ளி விட்டு, பாஜகவினர் ஓர்மை நாடு என்று சொல்லி இந்துத்துவ தேசமாக்க கட்டமைக்க முயல்கின்றனர். இந்த நோக்கத்தில் ராமராஜ்ஜியம் அமைப்பதே இலக்காக வைத்து, அதற்கேற்ப தங்களது வேலைத்திட்டங்களை முன்னகர்த்துகின்றனர். அதில் ஒன்றே கும்பமேளா போன்ற பிரம்மாண்ட விழாக்கள்.

அரசர்கள் காலம் காலமாக தங்களின் மோசமான நிர்வாகத்தை மக்கள் அறிந்து, அதனால் அவர்களிடம் எழுச்சி ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காகவே மதங்களை வளர்த்தனர். மதவாதிகளும், மதக் கட்டமைப்புகளும் மக்களின் மூளையை பக்தியிலிருந்து மீண்டெழாதவாறு கட்டிக் காக்கும் வேலையை செய்து கொண்டேயிருக்கின்றன. அன்று அரசர்கள் என்றால் இன்று மதத்தை வைத்தே ராஜ்ஜியம் கட்டியமைப்போம் என்றே செயல்படுகின்றனர் ஆளும் இந்துத்துவ அடிப்படைவாதிகள். அதில் ஒருவரே உ.பி முதல்வரான யோகி ஆதித்யநாத். வேலைவாய்ப்பின்மை, 5 கோடி மக்களுக்கும் மேல் வறுமை நிலை, தலித் – இசுலாமியர்களுக்கு எதிரான வன்முறை என எவற்றைப் பற்றியும் அக்கறை கொள்ளாத யோகி, பல்லாயிரக்கணக்கான கோடிகளை செலவழித்து இந்த நிகழ்வை நடத்துகிறார். மக்கள் இதையெல்லாம் கேள்வி கேட்கும் இடத்திற்கு நகர்ந்து விடக் கூடாது என்கிற இந்துத்துவ ஆட்சியாளர்களின் எண்ணத்தை இதைப் போன்ற பிரம்மாண்ட விழாக்கள் நிறைவேற்றுகின்றன.
இப்படியான பல மூடநம்பிக்கைகளால் மனிதர்கள் பாழாய் போவதை பார்த்தே ‘பக்தி வந்தால் புத்தி போகும்’ என்றார் தந்தை பெரியார். மக்களின் மூட நம்பிக்கையை முதலீடாகக் கொண்டு ஆளும் அரசுகள், எப்போதும் மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை முன்னேற்றும் முயற்சியில் ஈடுபடப் போவதில்லை. மக்களை மூளைச்சலவைக்குள் தள்ளி, அதன் வழியாக ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளும் தந்திரத்தை செய்கின்றனர். இந்த அரசுகளை அம்பலப்படுத்த வேண்டும். அரசுகளின் சனாதனக் கொள்கைகளை அம்பலப்படுத்த வேண்டும். அதற்கு இந்தியா முழுக்க முற்போக்கு, சனநாயக அமைப்புகள் அதிகமாக வேண்டும். மக்கள் அரசுகளைக் கேள்வி கேட்க ஆரம்பித்தாலே மூடத்தனங்கள் மங்கி விடும் நிலை ஏற்பட்டு விடும்.