தலையங்கம் – ஆகஸ்ட் 01, 2022
தமிழக காவல்துறை துவங்கப்பட்டு 160 ஆண்டுகளானதைத் தொடர்ந்து அதற்கான சிறப்புகளை அரசு செய்திருக்கிறது. 1859-இல் ஆரம்பிக்கப்பட்ட மெட்ராஸ் போலீஸ் என்பது தற்போது வரை இயங்கிவருவது கவனத்திற்குரியதே. ஆனால் ஒரு பழமையான கட்டிடத்தையோ, நூலையோ கொண்டாடுவதைப் போல ஒரு அரசுத்துறையை கொண்டாட இயலுமா?
இந்தியா விடுதலையடைந்து 75 ஆண்டுகளை கொண்டாடுகிறது. தமிழகக் காவல்துறை 160-ம் வருடத்தை கொண்டாடுகிறது (13 ஆண்டுகள் கழித்து). எனில் இது முரண்பாடாக தோன்றாமல் போவது தான் ஆச்சரியம். கிழக்கிந்திய கம்பெனி 1858-ம் ஆண்டு வட இந்திய விடுதலைப்போருக்கு பின் இந்திய துணைக்கண்டம் முழுவதும் தனது அடக்குமுறையை நிறுவனமாக்கும் வேலையை ஆரம்பிக்கிறது. பின்னர் இங்கிலாந்து இராணியாரின் ஆளுமைக்குக் கீழ் சென்ற இத்துணைக்கண்டம், இராணியின் முடியாட்சிக்குரிய காலனியாக மாறுகிறது. இந்த மாற்றத்தில் ‘மெட்ராஸ் போலீஸின்’ பொறுப்பு என்னவாக இருந்திருக்கும்?
1805 வரை நடந்த பாளையக்காரர் எழுச்சி, வேலூர் புரட்சிக்கு பின்னர், இலங்கை, பர்மா, மலேசியா, பிஜித்தீவு என தமிழர்கள் அரை அடிமைகளாக கொண்டு செல்லப்பட்ட 1800-களில் மெட்ராஸ் போலீஸ் எதற்காக துவக்கப்பட்டிருக்க முடியும் என்பதிலிருந்தே இன்றைய விழாவினை எதிர்கொள்ள இயலும்.
காலனிய ஆட்சி முழுமையாக ஆக்கிரமித்த பின்னர் தென்னிந்தியா முழுமைக்கும் (திராவிட நாடு) ஒரு சிவிலியன்/மக்கள் அடக்குமுறை நிறுவனமாக மெட்ராஸ் காவல்துறை உருவாக்கப்பட்டது. இதன் பல்வேறு பிரிவுகள் தென்னிந்தியா முழுவதும் நடத்திய அடக்குமுறைகள், படுகொலைகள், மாந்தகுல விரோத நடவடிக்கைகள் எண்ணிலடங்காதவை. இந்த அடக்குமுறைகளிலிருந்து விடுதலையடைந்து 75 வருடமாகிறது என்றால், இந்த அடக்குமுறையை நிறுவனமாக்கிய ஒரு துறை எப்படி தனது நிறுவன நாளை காலனிய காலத்திலிருந்து கொண்டாட இயலும்?
இந்நிறுவனம் நடத்திய வன்முறைகளில் ஒருசில இன்றும் நம்மால் நினைவுகூரப்படும் நிகழ்வுகள். சென்னையில் நடந்த தொழிலாளர் போராட்டங்கள், பர்மா ஆயில் கம்பெனி போராட்டம் என ஏராளம். கர்நாடக ஆலைப்போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் தொழிலாளர்கள் கொல்லப்பட்டது இந்திய அளவில் முதல் களப்பலியாக மாறியது. இதே காலகட்டத்தில் பெருங்காமநல்லூரில் குற்றப்பரம்பரை சட்டத்திற்கு அடங்க மறுத்தவர்கள் மீது நடத்தப்பட்ட படுகொலை, பின்னர் இந்தி எதிர்ப்பு போராளிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், கொடிகாத்த குமரன் மீதான தாக்குதல், 1942-இல் வெள்ளையனே வெளியேறு போராட்டம் தீவிரமடைந்த காலத்தில் கோவை சூலூரை ஒட்டியப்பகுதியில் நடத்தப்பட்ட அடக்குமுறை, சிவகங்கை-திருப்பூர் பகுதியில் இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான கொலைகள், இப்போராட்ட தலைவர்களின் பெண்கள் மீது நடத்தப்பட்ட பாலியல் கொலைகள் என பட்டியல் ஏராளம். இந்த அடக்குமுறைகள் தென்னிந்திய மக்களை அச்சுறுத்தவும், சட்டவிரோதமாக கொலை செய்ய இயலும் என்ற வலிமையை காட்டவும், ஆங்கில அரசின் சுரண்டலை எதிர்த்து ஒன்றுதிரள இயலாத நிலைக்கு மக்களை தள்ளவும் செய்தது.
ஆங்கில காலனியத்திடமிருந்து விடுதலையாதல் என்பது அந்த ஆட்சியாளர்களின் கட்டமைப்பை முழுமையாக நிர்மூலமாக்கி, விடுதலைக்காக போராடிய மக்களிலிருந்து அரசு நிறுவனங்கள் உருவாக்கப்படுவதே உலகெங்கும் புரட்சியில் நடந்த அரசு உருவாக்கம். ஆனால் இப்படியாக எதுவும் நிகழாமல், இந்நிறுவனங்கள் கலைக்கப்படாமல் இன்றுவரை பாதுகாக்கப்படுவதும், போற்றப்படுவதற்குமான காரணத்தை எப்படி இளம் தலைமுறையினருக்கு விளக்க இயலும்?
ஆங்கிலேயே கால அரசில் வெள்ளையர் முதலாளிகளுக்கும், அதிகாரிகளுக்குமான நிறுவனமாக மெட்ராஸ் காவல்துறை உருவாக்கப்பட்டு பயிற்சியளிக்கப்பட்டிருந்தது. அதன் கடைநிலை காவலர்கள் பூர்வகுடிகளாக இருந்த காரணத்தினால் நிறவெறி அடிப்படையில் இரண்டாம் தர மக்களாக நடத்தப்பட்டு அவமதிக்கப்பட்ட பணியாளர்களாக நடத்தப்பட்டனர். தம் குடும்பத்தினரே எதிரில் நின்றாலும் அவர்கள் மீது முரட்டுத்தனமான அடக்குமுறையை ஏவுவதற்காக பயிற்சியளிக்கப்பட்டதன் காரணம் நேர்மையாக இருக்கவேண்டுமெனும் நோக்கமல்ல, மாறாக இப்பூர்வகுடி மக்கள் எழுச்சியினை அடக்க வேண்டுமென்பதைத் தவிர வேறென்ன இருக்க இயலும்?
இவ்வகை பயிற்சிகளோடு, சொந்த மக்களை உளவுபார்த்தல், மக்களை முதன்மை எதிரிகளாக நடத்துதல், நம்பவைத்து அவர்களிடமிருந்து தகவல்களைப் பெற்று வெள்ளை அதிகாரிகளுக்கு உளவு செய்து பதக்கம் பெறுதல் ஆகிய சமூகவிரோத செயல்பாடுகள் அப்பாவி அடித்தட்டு பணியாளர்களிடத்தில் திணிக்கப்பட்டது. சொந்த மக்களை வேட்டையாடும் திறமைமிக்க நிறுவனமாக மாறியதன் பின்னணியே இது. இப்பணியாளர்களிலிருந்து , இடைநிலை அதிகாரிகள் வரை மக்கள் அரசியலை கற்றுக்கொள்ளக்கூடாது என்பது அடிப்படை விதியாகவே வெள்ளையர்கள் பயிற்றுவித்தனர். விடுதலை அரசியல், மக்கள் திரள் அரசியல், சனநாயக போராட்டங்களுக்கு எதிரான மனநிலையோடு மெட்ராஸ் போலீஸ் வளர்த்தெடுக்கப்பட்டது. இதைத் தவிர்த்த்து உடல் வலிமை, அடக்குமுறைக்கான மனநிலை, முரட்டு உருவ கட்டமைப்பு, மிரட்டும் குரல், மக்களை மரியாதைக்குறைவாக நடத்தும் பண்பு, பணக்காரர்களை-அதிகாரிகளைக் கண்டதும் அளவற்ற பணிவு காட்டும் மனநிலை, காலநேரமின்றி உழைத்தல், தனக்கான உரிமையைக் கூட கேட்கக்கூடாத அடிமை மனநிலை, உயர் அதிகாரிகளின் உத்தரவினை எக்கேள்வியின்றி நடைமுறை செய்யும் ஒழுங்கு, அதிகாரவர்க்கம், முதலாளிகளை காக்கும் போக்கு ஆகிய அனைத்தும் வெள்ளையர்களால் கவனமாக வளர்த்தெடுக்கப்பட்டது.
இந்நாடு உண்மையான விடுதலையை போராடி பெற்றிருக்குமெனில் இந்த மெட்ராஸ் போலீஸ் கலைக்கப்பட்டு, இந்திய அரசியல் சாசனப் பயிற்சி பெற்ற, சொந்த மக்கள் மீது பரிவு கொண்ட, அடக்குமுறை மீது நம்பிக்கை வைத்திராத, அனைவரையும் சமமாக பாவிக்கும் மனநிலை கொண்ட காவல்துறை நமக்கு கிடைத்திருக்கும். ஆனால் இந்த மாற்றங்கள் சாத்தியமாகாது போனதாலேயே 1942-இல் வெள்ளையனே வெளியேறு என்று போராடிய போராளிகளை அடித்து கொலை செய்த அதே காவல் அதிகாரிகள் 1947-க்கு பின்னரும் அதிகாரத்தில் இருந்தார்கள் என்பது கசப்பான உண்மை தானே? இந்த பாரம்பரியத்தின் எச்சம் இன்றுவரை தொடர்ந்து வருவதன் அடையாளமாகவே சேலத்தில் பொதுவுடைமைப் போராளிகள் படுகொலை செய்யப்பட்டது துவங்கி நொச்சிக்குப்பம் மீனவர் மீதான துப்பாக்கிச்சூடு, தாமிரபரணி துப்பாக்கிச்சூடு, பரமக்குடி துப்பாக்கிச்சூடு, ஜல்லிக்கட்டு கலவரம், ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு என தொடர்ந்து இன்று கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்ட சாமானிய பெண்ணுக்கான நீதி கிடைப்பதை விட மக்கள் எதிர்ப்பிற்கு எதிர்வினையாக அடக்குமுறைகளை கவனமாக நகர்த்துகிறது காவல்துறை.
அன்று பூர்வகுடிகளை இரண்டாம் தரமான குடிமக்களாக காலனிய காலத்தில் நடத்திய மெட்ராஸ் போலீஸ் இன்று தலித்துகளுக்கும், இசுலாமியருக்கும் பாரபட்சம் காட்டும் நிலையை தொடர்கிறது. இவையனைத்திற்குமான மூலப்பிரச்சனை இந்நிறுவனத்தினை உருவாக்கிய காலனிய அமைப்பின் அரசு கட்டுமானத்திலேயே பொதிந்து உள்ளது. இன்றும் கூட தமிழகக் காவல்துறையின் தலைமை அலுவலகத்தில் அடக்குமுறை நிகழ்த்திய மெட்ராஸ் போலீஸின் தலைமைக்காவலர் பெயர்கள் பெருமையுடன் பொறித்து வைக்கப்பட்டிருப்பதைக் காணமுடியும்.
சுயபரிசோதனைக்குட்படுத்தப்படாத அரசியல் கட்டமைப்பு எவ்வகையிலும் சுரண்டல் அமைப்பை, ஊழல் அமைப்பை, இன-சாதி-மதவெறி அமைப்பினை தூக்கி எறிய இயலாது. காலனிய காலத்து கல்வியை தூக்கி எறியப்போகிறோம் என்று வாய்கிழிய பேசும் பாஜக கும்பல் இது போன்ற நிறுவனத்தின் மீது கை வைக்கப்போவதில்லை. பார்ப்பனிய மேலாதிக்கத்தை நிலை நிறுத்த காலனிய அடக்குமுறை கட்டமைப்புகளே பாதுகாப்பானவை என்பதை கோல்வால்கர், சாவர்க்கர் போன்ற ஆர்.எஸ்.எஸ்.-பாஜகவின் நிறுவனத் தலைவர்களின் நிலைப்பாடு. காலனியத்தால் ஏற்பட்ட நல்ல மாற்றங்களை பின்னுக்கு தள்ளுவதும், காலனிய சுரண்டல் அமைப்புகளை வளர்த்தெடுப்பதுமே காங்கிரஸ்-பாஜக எனும் ஆரிய பார்ப்பனிய கும்பல்களில் அரசியல் நிலைப்பாடு. மக்கள் போராட்டத்தை அடக்குமுறை மூலம் முடக்குவதும், பொய் வழக்குகளில் மக்கள் தலைமைகளை சிறையில் அடைப்பதும், வன்முறையாக எளிய மக்களின் சொத்துக்களை சிதைக்கும் பனியா-பார்ப்பனிய மற்றும் பன்னாட்டு முதலாளிகளை காப்பதுமே இவர்கள் காவல்துறைக்கு தந்திருக்கும் தலையாய பணி. மக்கள் விரோத செயல்பாடுகளை இந்நிறுவனங்களின் மூலமாக தொடர்ந்து நிகழ்த்திக்கொண்டே இருப்பார்கள். இவ்வகையிலேயே 160-ம் ஆண்டு கொண்டாட்டத்தை மெட்ராஸ் போலீஸ் நடத்துவதை நாம் காண இயலும்.
இந்நிறுவனத்தை சீர்திருத்தம் செய்யவதால் பலனடையப்போவது சாமானிய மக்கள் மட்டுமல்ல, இந்நிறுவனத்தில் கடுமையாக சுரண்டப்படும் ஊழியர்களும் பணியாளர்களும் என்பது கவனத்திற்குரியது. இதுமட்டுமல்ல, இந்நிறுவனத்தின் மனித உரிமை மீறல்கள், காவல்நிலைய மரணங்கள் ஆகியன களையப்படுவது நிரந்தரமாக்க இயலும். மேலும் முறையான மக்கள் சார்ந்த அரசியல் சாசன உரிமைக்குரிய ஆட்சியை ஒரு கட்சியால் மக்களுக்கு தர விரும்பினால் இம்மாற்றங்கள் அவசியமானது. இதைச் செய்யும் துணிச்சல் மிக்க அரசே மக்கள் அரசாக போற்றப்பட இயலும். அப்படியான காவல்துறையே தமிழீழத்தில் விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்டு போரின் இறுதிநாள் வரை மக்கட்பணி செய்த தமிழீழ காவல்துறையைப் போன்று அப்பழுக்கற்று, ஊழலற்று, மனித உரிமை மீறலற்று மக்களை நேசிக்கும் காவல்துறை போல மாற இயலும். மக்கள் போராளிகளால் உருவாக்கப்படும் காவல்துறை என்பது அரசியலாக்கப்பட்ட, மக்களை நேசிக்கும் எளியவர்கள் கொண்ட காவல்துறையே வலிமையான காவல்துறை. நாம் வளர்த்த வேண்டிய நிறுவனம் இந்த அடிப்படையிலேயே அமையவேண்டும்.
நல்ல கருத்தாக்கம்