
தாமிரபரணி ஆற்றங்கரையில் படுகொலை செய்யப்பட்ட மாஞ்சோலைத் தொழிலாளர்களுக்கான நினைவுநாளில், கொல்லப்பட்ட ஈகியர்களுக்கு மே 17 இயக்கத்தினரால் மரியாதை செலுத்தப்பட்டது. தமிழர் ஆட்சிக் கழகத்தின் தலைவர் தோழர் எஸ்.ஆர்.பாண்டியன் அவர்கள் தலைமையில், விடுதலை தமிழ்புலிகள் கட்சியின் தலைவர் தோழர். குடந்தை அரசன், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர். திருமுருகன் காந்தி மற்றும் இதர தோழமைகளும் கலந்து கொண்டனர். மாஞ்சோலை ஈகியருக்கான வீரவணக்கத்தையும், மாஞ்சோலை ஈகியருக்கான நினைவுசின்னம், மற்றும் மாஞ்சோலை தொழிலாளர்களுக்கான நட்ட ஈடு, வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையிலான போராட்ட அறிவிப்பும் செய்யப்பட்டது.
மாஞ்சோலை நிறுவனமான ‘பிரிட்டானிய பிஸ்கெட்’ கம்பெனியின் தமிழர் விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து அந்த அலுவலக முற்றுகைப்போராட்டமும், புறக்கணிப்பு போராட்டமும் மே17 இயக்கம் முன்னெடுக்குமென அறிவிக்கப்பட்டது. மாஞ்சோலை எனும் காலனிய கால, மார்வாடி-பனியா நிறுவனத்தின் அநீதிக்கு முடிவு கட்டுவோம் என சூளுரைக்கப்பட்டது.
இது குறித்து தோழர் திருமுருகன் காந்தியின் செய்தி சேனல்களுக்கு பேட்டியளித்தார். அதன் விவரம் பின்வருமாறு:
மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் கூலி உயர்வை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும். மாஞ்சோலை நிறுவனமான பாம்பே பர்மா நிறுவனம் தேயிலை தொழிலாளிகளை சுரண்டி வருகிறது. இந்த சுரண்டலை நிறுத்த வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி கிட்டத்தட்ட 26 ஆண்டுகளுக்கு முன்பாக நெல்லை மாவட்டத்தினுடைய ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கையை முன்வைப்பதற்காக முன்வந்த போது, அன்றைக்கு இருந்த திமுக அரசு தொழிலாளர் விரோதமாக, அரச அடக்குமுறையை காவல் துறை மூலமாக ஏவியதில் 17 தொழிலாளிகள் இந்த தாமிரபரணி ஆற்றங்கரையில் படுகொலையானார்கள். அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக தமிழர் ஆட்சிக் கழகத்தின் தலைவர் தோழர். எஸ்.ஆர். பாண்டியன் அவர்கள் தலைமையில், விடுதலை தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் தோழர். குடந்தை அரசன் மற்றும் சேனை கட்சி தலைவர் தோழர். முத்து விஜயன் என அனைவரும் இணைந்து இங்கு ஈகியர்களுக்கான மரியாதை செலுத்துகிறோம்.

இந்த சமயத்திலும் மாஞ்சோலையில் போராட்டங்கள் தொடர்கின்றன. கடந்த 100 ஆண்டுகளாக மாஞ்சோலைத் தொழிலாளிகளை சுரண்டிய பாம்பே பர்மா கார்ப்பரேஷன் என்று சொல்லப்படுகின்ற நிறுவனம், இன்றைக்கு எல்லோராலும் அறியப்படுகின்ற ’பிரிட்டானியா பிஸ்கட்’ என்கின்ற நிறுவனத்தை நடத்திக் கொண்டிருக்கக்கூடிய அந்த நிறுவனம் தான், இந்த மாஞ்சோலைத் தொழிலாளர்களை வஞ்சித்துக் கொண்டிருக்கிறது. இந்த பிரிட்டானியா பிஸ்கட் நிறுவனம் கிட்டத்தட்ட 13000 கோடி ரூபாயை ஒவ்வொரு ஆண்டும் தனது வணிகத்தில் ஈட்டிக் கொண்டிருக்கக்கூடிய நிறுவனம். மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்திலிருந்து மட்டும் கிட்டத்தட்ட 4000 கோடி ரூபாயை அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
பாகிஸ்தானை உருவாக்கிய முகமது அலி ஜின்னாவினுடைய பேரனால் உருவாக்கப்பட்ட நிறுவனம்தான் இந்த பிரிட்டானியா பிஸ்கட் நிறுவனம். இந்த நிறுவனம் கடந்த 30 ஆண்டுகளாக பாரதிய ஜனதா கட்சிக்கு மிகப்பெரிய நன்கொடையை கொடுத்து வருகின்ற நிறுவனம். பாரதிய ஜனதா கட்சிக்கு கொடுக்கப்படுகின்ற பெரும் நன்கொடையிலே முன்னணி இடத்தில் இருப்பது இந்த பிரிட்டானியா பிஸ்கட் நிறுவனம். இந்த நிறுவனம்தான் தொழிலாளர்களுக்கு உரிய நட்ட ஈட்டினைக் கொடுக்காமல் 100 ஆண்டு காலமாக சுரண்டி வருகிறது. அவர்களது உழைப்பின் மூலமாக கொழுத்த இந்த நிறுவனம் இன்றைக்கு மாஞ்சோலையை மூடுகிறேன் என்கின்ற பெயரிலே தொழிலாளர்களை தொழிலாளர் சட்ட விரோதத்தின் அடிப்படையிலே வெளியேற்றிக் கொண்டிருக்கிறது.
எந்த இடத்திலும் ஒரு நிறுவனத்திலே வேலை செய்யக்கூடிய தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு கொடுத்தெல்லாம் அந்த நிறுவனம் மூடப்படுவதில்லை. ஆனால் மாஞ்சோலை நிறுவனம் விருப்ப ஓய்வு என்று அந்த மக்களிடத்தில் ஏமாற்றி, எழுதி வாங்கிக்கொண்டு அந்த நிறுவனத்தில் வேலை செய்தவர்களுக்கு உரிய நட்ட ஈட்டை கொடுக்காமல் வெளியேற்றி வருகிறார்கள்.
கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை நாட்கள் என்கின்ற விகிதத்தில் சம்பளத்தை அவர்கள் வேலை செய்த காலம் முழுவதும் கணக்கிட்டு கொடுக்க வேண்டும். அப்படியாக பார்த்தோம் என்றால் அந்த மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் 30-லிருந்து 50 லட்சம் ரூபாய் நட்ட ஈடு கொடுக்கப்பட வேண்டும். இந்த கணக்கீட்டு அடிப்படையில் தான் போர்டு நிறுவனம், BMW நிறுவனம் ஆகிய நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு நட்டயீட்டை கொடுத்திருக்கின்றன. இந்த நிறுவனங்கள் எல்லாம் தங்கள் தொழிற்சாலைகளை மூடும் பொழுது 30 லட்சத்திலிருந்து 70 லட்சம் வரை நட்டயீட்டை தொழிலாளர்கள் வசம் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் இந்த ’பாம்பே பர்மா கார்ப்பரேஷன்’ என்று சொல்லப்படுகின்ற பிரிட்டானியா பிஸ்கட் நிறுவனம் வெறும் இரண்டே கால் லட்சம் ரூபாய் என்கின்ற அளவில் நட்டயீட்டை கொடுத்து இந்த நிறுவனத்தை மூடி வருகிறது.
தமிழ்நாட்டின திமுக அரசினுடைய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் இது குறித்தான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொழிலாளர் நல வாரியம் இதற்கான எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. திமுக அரசு இந்த பிரிட்டானியா பிஸ்கட் நிறுவனத்திடம் வலியுறுத்தி இவர்களுக்குரிய நட்டயீட்டை பெற்றுத் தரவில்லை.

இந்த மாஞ்சோலை தொழிலாளர்களுக்கான இந்த அநீதி என்பது 26 ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. இந்த தாமிரபரணி ஆற்றங்கரையில் படுகொலை செய்யப்பட்ட நாளிலிருந்து இன்றுவரை மாஞ்சோலைத் தொழிலாளர்கள் அநீதிகளை எதிர்கொண்டிருக்கிறார்கள். அநீதிக்கு எதிரான அவர்களது போராட்டம் என்பது வரலாற்று சிறப்புமிக்க போராட்டங்களாகும்.
இதற்கான போராட்டத்தை தொடர்ச்சியாக நாங்கள் நடத்தி வருகின்றோம். மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு உரிய நட்டயீடும், மறுவாழ்வும் தருகின்ற வரையில் எங்களது போராட்டம் இனியும் தொடரும் என்பதை இச்சமயத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த பிரிட்டானியா பிஸ்கட் நிறுவனம் தமிழ்நாட்டிலே மிகப்பெரிய வணிகத்தை செய்து கொண்டிருக்கிறது. அனைவருடைய வீட்டிலும் பிரிட்டானியா பிஸ்கட் என்பது அறியப்படுகின்ற ஒரு உணவுப் பொருளாக இருக்கிறது. ஆனால் தமிழரிடத்தில் வணிகம் செய்யக்கூடிய அந்த நிறுவனம் இந்த மாஞ்சோலைத் தொழிலாளர்களுக்கான இந்த உரிமையை மறுத்து அநியாயமாக அவர்களை வஞ்சித்து வருகிறது. அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தி வருகிறது.
அந்த வகையில் பிரிட்டானியா பிஸ்கட் நிறுவனமாக இருக்கின்ற இந்த பாம்பே பர்மா கார்ப்பரேஷன் நிறுவனத்தை வருகின்ற அக்டோபர் மாதத்தில் நாங்கள் பெருந்திரளாக சென்னையிலே முற்றுகையிட இருக்கின்றோம். ஆகவே இந்த அநீதிக்கு எதிரான போராட்டம் தொடரும் என்பதையும் இந்த இடத்தில் சொல்லிக் கொள்கின்றோம். இந்த மாஞ்சோலைத் தொழிலாளர்களுக்கான உரிமையை பெற்றுத் தருகின்ற வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என்பதை இந்த இடத்தில் நாங்கள் சூளுரைக்கின்றோம். அந்த பாம்பே பர்மா கார்ப்பரேஷன் பிரிட்டானியா பிஸ்கட் நிறுவனம் தமிழர்களுக்கான உரிய நட்டயீட்டை கொடுக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்பதை இந்த சமயத்திலே தெரிவித்து கொள்கின்றோம்.