மோடியின் ரசிய பயணம் – பனியா நிறுவனங்களுக்காக போடப்பட்ட ஒப்பந்தங்களும், தமிழர்களின் மீது கொட்டப்படும் ஆபத்துகளும்.
மோடி3.0 பிரதமராக பதவியேற்ற பின்பு முதல் அரசுமுறைப் பயணமாக ரசியா சென்று வந்திருக்கிறார். ரசிய அதிபர் புடின் உடனான சூலை 8 மற்றும் 9 ஆகிய இரு நாட்களின சந்திப்பில், ரசியா – இந்தியா இடையே பொருளாதார கூட்டுறவுகளை வலுப்படுத்துவதற்கான ஒன்பது புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இரு நாடுகளுக்கிடையில், 2030-ம் ஆண்டுக்குள் 100 பில்லியன் (8,40,000 கோடி) அளவுக்கு வர்த்தகத்தை அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியா – ரசியா (யுரேசிய பொருளாதார யூனியன் – EAUA) இடையே தடையற்ற சுதந்திரமான வர்த்தகம் (Free Trade Agreement), தேசிய நாணயங்களை பயன்படுத்துதல், சுங்கவரி தடைகளை நீக்குதல், ரசிய கிழக்கு முனை நாடுகளை இந்திய வர்த்தகத்தில் இணைத்தல், முதலீடுகளை விரிவுபடுத்துதல், கடல் வழிப் போக்குவரத்தை உருவாக்குதல் போன்றவைகள் கொண்ட வர்த்தகம் மற்றும் கூட்டாண்மை ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் அடிப்படையில் இரு நாடுகளுக்கிடையில் கச்சா எண்ணெய், வேளாண்மைப் பொருட்கள், உரங்கள், பெட்ரோலிய எரிபொருட்கள், அணுசக்தி, நிலக்கரி, தாவர எண்ணெய், உலோகங்கள், தளவாடக் கருவிகள், மருந்துகள், கனிமங்கள், மின்னணு கருவிகள், கப்பல் போக்குவரத்து ஆகியவற்றின் மீதான வர்த்தகத் தொடர்பில் விரிவாகம் குறித்து முடிவுகள் எடுக்கப்பட்டன.
ரசியா இந்தியாவின் 5வது பெரிய வர்த்தக பங்காளியாக இருக்கிறது. இந்தியாவிலிருந்து ரசியாவிற்கு 13% ஏற்றுமதி, ரசியாவிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி 380% என வர்த்தகம் நடக்கும் சூழலில் ரசியாவே அதிக லாபம் ஈட்டும் நாடாக இருக்கிறது. இந்தியாவில் சுமார் 35 ஆயிரம் கோடி அளவுக்கான ஏற்றுமதி வர்த்தகம் என்றால், 5 லட்சம் கோடி அளவிலான ரசியாவின் இறக்குமதி வர்த்தகம் நடக்கிறது. ஏற்றுமதியை விட இறக்குமதி கிட்டத்தட்ட 15 மடங்கு அதிகமாக நடக்கிறது. உணவுப் பொருட்கள், உரங்கள், தாவர எண்ணெய், நிலக்கரி போன்றவற்றின் இறக்குமதி 300% மேல் அதிகமாகி இருக்கிறது. அதை விட பெட்ரோலியப் பொருட்களின் இறக்குமதி மூன்று மடங்கு அதிகமாகி இருக்கிறது.
ரசிய-உக்ரைன் போரினால் ரசியாவிலிருந்து குறைந்த விலைக்கு கச்சா எண்ணெய் பெற்றது அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் மற்றும் இந்திய எண்ணெய் நிறுவனங்கள். தினமும் 14 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் சுத்திகரிக்கும் இரண்டு ஆலைகளை வைத்திருக்கிறது ரிலையன்ஸ் நிறுவனம். போரினால் உலக சந்தைகளில் உருவான ஏற்ற இறக்க விலைக்கேற்ப டீசல், பெட்ரோலை சுத்திகரிப்பு செய்து விற்றுள்ளது. சனவரி – மார்ச், 2024 வரையிலான மூன்று மாதங்களில் மட்டும் உலக சந்தையில் பெட்ரோல் 17% மற்றும் நாப்தா 18.5% உயர்ந்துள்ளது. இவ்வாறு விலை ஏறும் நாட்களில் உலக சந்தைகளில் விற்றே, இதன் சொத்து மதிப்பு 60% அளவுக்கு உயர்ந்துள்ளதாக ’ப்ளூம்பெர்க்’ என்னும் பொருளாதார ஆய்வு இதழ் தெரிவித்திருக்கிறது.
மேலும் அடுத்த ஒரு வருடத்திற்காக அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் கடந்த மே, 2024-ல் ஒரு மாதத்திற்கு 30 லட்சம் பேரல்கள் வாங்குவதாக ஒப்பந்தம் போட்டுள்ளது. ஒவ்வொரு பேரலுக்கும் 3 டாலர் (ரூ. 252) தள்ளுபடி விலையில், ரஷ்ய நாணயமான ரூபிளில் வாங்க முடிவு எடுத்துள்ளது. மோடியின் எரிபொருள் ஒப்பந்தம் யாருக்கானது என்பதை ரசியாவுடனான ரிலையன்ஸ் நிறுவனத்தின் எரிபொருள் வர்த்தகமே சொல்லி விடுகிறது.
ரசியாவிலிருந்து குறைந்த விலையில் இறக்குமதி செய்த கச்சா எண்ணெயால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகளைக் குறைத்து கொடுத்திருக்க முடியும். ஆனால் விலைகளில் எந்த மாற்றமும் இல்லாமல், அம்பானி நிறுவனத்தின் கொழுத்த வளர்ச்சிக்கு நம்மிடமிருந்து சுரண்டல் நடந்திருக்கிறது. மோடி அரசு ரசியாவுடன் ஏற்படுத்திய முந்தைய எரிபொருள் ஒப்பந்தங்களால் இந்திய மக்களுக்கு ஒரு பயனும் இல்லை என்னும் போது. மோடியின் இந்த ஒப்பந்தத்திலும் மக்களுக்காக பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கும் சாத்தியக் கூறுகள் இருக்காது.
ஒரு பேரல் 105 டாலராக விற்ற 2014-ம் ஆண்டின் போது பெட்ரோல் விலை 71 ரூ, டீசல் விலை 56 ரூ ஆக இருந்தது. ஆனால் 2020-ல் 47 டாலராக குறைந்த போதும் பெட்ரோல் விலை ரூ 90, டீசல் விலை ரூ 80 ஆக மாறியிருக்கிறது. அது குறித்தான அட்டவணை கீழே :
மோடி அரசு மக்களிடமிருந்து அடிக்கும் கொள்ளையை கொள்கையாக வைத்திருப்பது இந்த அட்டவணையிலிருந்தே தெளிவாகத் தெரிகிறது. ரசியாவில் இதை விட மிகவும் குறைவான விலையில் ரசிய நாணயத்தின்படி வாங்கியது. அப்போதும் விலை குறையவில்லை. இனியும் போடப்பட்ட எரிபொருள் ஒப்பந்தங்களால் பெட்ரோல், டீசல் விலை குறையும் என்பது மூடத்தனமான ஒன்றாகவே இருக்க முடியும்.
அடுத்ததாக, ரசிய – இந்திய நாடுகளின் கப்பல், விமான போக்குவரத்து மற்றும் இராணுவத்திற்கான ஆயுதத் தளவாட உற்பத்தியில் கூட்டுறவு குறித்தும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ரசிய பாதுகாப்பு ஆயுதங்களின் உதிரி பாகங்களை இந்திய நிறுவனங்களுடன் இணைந்து தயாரிக்கும் ஒப்பந்தம் இது. அரசின் பாதுகாப்புத் துறைக்கு தேவையான உபகரணங்களை தயாரிக்கும் தளவாடத் தொழிற்சாலை அமைக்கவும் தனியாருக்கு முந்தைய ஆட்சியில் அனுமதி வழங்கியது மோடி அரசு.
இதனால் அம்பானிக்கு மட்டுமே தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் 16 க்கும் மேற்பட்ட ஆயுதத் தளவாட உற்பத்தி மையங்கள் உள்ளன. அடுத்த பத்து ஆண்டுகளில் பாதுகாப்புத் துறையில் பெரிய முதலீடுகளைச் செய்யப் போகிறது என ரிலையன்ஸ் நிறுவனத்தின் உயரதிகாரி மார்ச், 2024-ல் கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
ராணுவத்திற்கு தேவைப்படும் ஆயுதங்கள், நீர்மூழ்கி கப்பல், விமானம் என ஆயுதத் தளவாடங்களை உலக சந்தையில் ஏற்றுமதி செய்யும் ’டிஃபென்ஸ் அன்ட் ஏரோஸ்பேஸ் லிமிடெட்‘ (Defence and Aerospace ltd) என்ற நிறுவனத்தை அதானியும் நடத்துகிறார். இந்த ஒப்பந்தங்களால் அரசின் ஆயுத உற்பத்தி நிறுவனங்களை விட இவர்களே முக்கியமான பயனாளிகளாக மாறுவார்கள். பாலஸ்தீனத்தின் மேல் விழும் இசுரேல் குண்டுகளில் அம்பானி, அதானி தயாரிப்புகளும் அடக்கம்.
இவர்கள் மட்டுமல்ல, ரசியாவிற்கு ஏற்றுமதி செய்யும் வேளாண் பொருட்கள், உரங்கள், இரசாயனம், மருந்து போன்ற அனைத்து தொழில்களிலும் இந்திய குசராத்தி பனியா மார்வாடி நிறுவனங்களே கோலோச்சுகின்றன. இவைகளே ரசியாவிற்கு ஏற்றுமதிகளை செய்து லாபம் ஈட்டக்கூடியவை. இதனால் தமிழ்நாட்டின் தொழில் துறைக்கும் பயனில்லை. 100 கோடிக்கும் மேல் வறுமையில் வாடும் இந்திய மக்களுக்கும் பயனில்லை.
இவ்வாறு குசராத்தி பனியா மார்வாடி நிறுவனங்களின் கொள்ளைக்காக, ஒப்பந்தங்களை மேற்கொண்டு வந்திருக்கிறார் மோடி. ஆனால் தமிழர்களுக்கு மட்டும் அணுக்கழிவுகளை சொந்தமாக்கும் அணுவுலை விரிவாக்கத்திற்கு ஒப்பந்தம் போட்டு வந்திருக்கிறார்.
தமிழ்நாட்டில் இரண்டு அணுமின் நிறுவனங்கள் இருக்கின்றன. சென்னையில் கல்பாக்கம் அணுமின் நிலையம் மற்றும் நெல்லையில் ரசிய தொழில்நுட்பத்தோடு கட்டப்பட்ட கூடங்குளம் அணுமின் நிலையம். இதன் அருகாமையில் கூடன்குளம் கிராம மக்கள் வசிக்கின்றனர். ‘அணுவுலையிலிருந்து வெளியேறும் கழிவுப் பொருட்கள் மிகவும் ஆபத்தானவை. அதன் கதிர்வீச்சுத் திறனிழக்க பல்லாயிரம் ஆண்டுகள் ஆகும். அவற்றை ஆழமான பகுதிகளில் மிகவும் பாதுகாப்புடன் புதைக்கப்பட வேண்டும். இது வருங்காலத் தலைமுறையின் பாதுகாப்பை அடகு வைப்பதற்கு சமம்‘ என்னும் ஆபத்தை உணர்ந்தே அதனை இடிந்தகரை கிராம மக்கள் எதிர்த்தனர். ஆண்டுக்கணக்கில் அமைதி வழியில் போராடிய அம்மக்களின் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்தே இது கட்டப்பட்டது.
ஒரு புறம் அணுக்கதிர்வீச்சு அச்சம், மறுபுறம் அணுவுலையால் கடல் அரிப்பு, வெளியேறும் சூடான நீரினால் மீன் வளம் குறைவு என வாழ்வாதாரம் பறிபோகும் நிலை என மக்கள் அல்லல்பட்டு கொண்டிருக்கிறார்கள். இந்த சூழலில் ஏற்கெனவே இருந்த இரண்டு அலகுகளுடன் இன்னும் இரண்டு அலடுகள் கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மேலும் அலகுகளை விரிவாக்கம் செய்யும் ஒப்பந்தத்தையே போட்டு வந்திருக்கிறார் மோடி.
இது மட்டுமில்லாமல் தொலைதூரப் பகுதிகளுக்கு, நீர்மூழ்கி கப்பல்களுக்கு, பெரிய கப்பல்களுக்கு பயன்பட மிதக்கும் அணு உலைகள் இரண்டும் இந்தியா வாங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன. சர்வதே அளவில் மாறி வரும் காலநிலை மாற்றத்தில் பேரிடர்கள் ஏற்பட்டால் அணுவுலைகள் பாதுகாப்பானதாக இருக்காதென, உலக சுற்றுச்சூழல் ஆய்வு நிபுணர்கள் கூறியதை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் கடலிலேயே அமைக்கப்படுவது பேராபத்தானது.
சென்னைத் துறைமுகம் வழியாகவே வர்த்தகத்திற்கான போக்குவரத்துப் பாதைகள் அமைக்க திட்டமிடும் ஒப்பந்தமும் கையொப்பமாகி இருக்கிறது. அப்படியென்றால் பனியா கொள்ளை கும்பலின் வர்த்தகத்திற்கு தமிழர் கடலில் அணுவுலை அமைக்கப்படும் வாய்ப்பே அதிகமாக இருக்கும். இது தமிழர்களின் வருங்காலப் பேரழிவுக்கு சமமானது. தமிழர்களை நிரந்தர அச்சத்தில் தள்ளக் கூடியது.
இரசாயனக் கப்பல்கள் விபத்துக்குள்ளாகி, கடலில் இரசாயனம் கழிவுகள் கொட்டிய போதே, அவற்றை வாளியில் அள்ளிய தொழில்நுட்பம் மட்டுமே நம்மிடம் இருந்தது. மேலும் சென்னையில் மிக்ஜாம் புயலின் போது ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினில், எண்ணூரில் உள்ள பெட்ரோலிய நிறுவனங்களிலிருந்து கசிந்து, கடலில் மிதந்த கழிவுப் பொருட்களையும் அப்பகுதி மீனவர்கள் கைகளைக் கொண்டே அள்ளிய துயரமும் நடந்தது. இப்படியான பாதுகாப்பு மேலாண்மை வரலாறே இருக்கின்ற இந்தியாவில், அணுவுலைக்கு பாதிப்பு என்றால், அதன் கதிர்வீச்சுக்களை தமிழர்கள் மட்டுமே அனுபவிக்க வேண்டிய நிலையே ஏற்படும்.
மோடி – புடின் ஒப்பந்தங்களைப் பற்றி தமிழர்களுக்கு பெருமைப்பட ஒன்றுமில்லை. மாறாக அச்சப்படுவதற்கே அணுவுலை மூலமாக வழி செய்திருக்கிறார் மோடி. ஆசியப் பணக்காரர் வரிசையில் முதலிடம் பெறுவதற்கு முன்னேறும் அதானிக்கும், குடும்ப திருமணத்திற்கு பல்லாயிரம் கோடிகளை தண்ணீராய் இறைக்கும் அம்பானிக்கும், பெரு நிறுவனங்களாக வலம் வரும் குசராத்தி பனியா நிறுவனங்களுக்காகவே இந்த ஒப்பந்தங்கள். மாத வருமானம் 10 ஆயிரம் கூட இல்லாத 50 கோடி மக்களுக்கும், 40 ஆயிரம் கூட இல்லாத 80 கோடி மக்களுக்கும் இதனால் ஒரு பலனுமில்லை. மாறாக சுற்றுச்சூழலை, வாழ்வியலை நாசமாக்கும் திட்டங்களோடு போராடி வாழும் வாழ்வே, மக்களுக்கு உரியவையாக மோடி அரசால் திணிக்கப்படும்.
மேலும் இந்த ஒப்பந்தங்களில் மிகவும் முக்கியமானது சென்னையிலிருந்து கடல்சார் போக்குவரத்தை மேம்படுத்தும் திட்டமும் ஒன்று. மேற்குலக நலன்களுக்காக சர்வதேச அளவில் நிகழும் போர்களுக்குள் தமிழர் கடல் சிக்கும் வழியைத் திறந்து விட்டிருக்கும் இந்த ஒப்பந்தம் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் எந்த அளவிற்கு பேராபத்தானது என்பதைக் குறித்து இனி வரும் கட்டுரையில் காண்போம்.