ஊடக சுதந்திரத்தைப் பறிக்கும் வகையில் மோடி அரசு தீட்டிய சட்டங்களுக்கு அண்மையில் பல்வேறு பத்திரிக்கை அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. ஜூன் 14 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், பத்திரிக்கை சுதந்திரத்தைப் பறிக்கும் சட்டங்களை ரத்து செய்யுமாறு ஒன்றிய அரசாங்கத்தை பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா (Press Club of India-PCI) அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்த ஒளிபரப்பு (ஒழுங்குமுறை) மசோதா (2023), டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டம் (DPDPA) (2023), பத்திரிகை பதிவுச் சட்டம் (2023) மற்றும் தகவல் தொழில்நுட்பத் திருத்த விதிகள் (2023) குறித்து இதற்கு முன்னரும் எதிர்ப்பு எழுந்த நிலையில், PCIயின் இந்த அறிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த சட்டங்களின் மூலம் பத்திரிக்கைகளை தணிக்கை செய்ய ஒன்றிய அரசிற்கு அதிகாரம் வழங்கப்படுவதோடு பொதுமக்களின் கருத்தறியும் உரிமையும் மறுக்கப்படுவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஒளிபரப்பு (ஒழுங்குமுறை) மசோதா (2023) மூலம் டிஜிட்டல் மற்றும் OTT தளங்களை அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதை விமர்சித்துள்ளது PCI. நடைமுறையில் உள்ள கேபிள் டிவி (ஒழுங்குமுறை) சட்டத்திற்குப் பதில் இந்த புதிய சட்டம் முன்னிலைப்படுத்தப்படக்கூடும் என்றும் ஊடக அமைப்புகள் கூறியுள்ளன.
தனிநபர் தரவு சட்டத்தின் மூலம் பல நிறுவனங்களிடமிருந்து நம் தனிப்பட்ட தகவல்களை ஒன்றிய அரசு பெறுவதையும் விமர்சித்துள்ளது PCI. (ஏற்கெனவே பெகாசஸ் போன்ற உளவு செயலிகளைக் கொண்டு தோழர் திருமுருகன் காந்தி உட்பட பல சமூக ஆர்வலர்களை மோடி அரசு உளவு செய்திருக்கிறது.) மேலும் டிஜிட்டல் குற்றங்கள் பலமடங்கு அதிகரித்திருக்கும் வேளையில், ஒன்றிய அரசு கொண்டுவந்திருக்கும் சட்டமானது மக்களை கண்காணிப்பதற்கே வழிவகுக்கும். எனவே இதுகுறித்தும் ஊடக அமைப்புகள் கவலை எழுப்பியுள்ளன.
மேலும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 8(1)(j)-ஐ தரவுப் பாதுகாப்புச் சட்டத்துடன் இணைத்ததால் பத்திரிகையாளர்களுக்கு உதவும் RTI சட்டங்களை நீர்த்து போகச் செய்திருக்கிறது ஒன்றிய அரசு. கடந்த 2000 ஆண்டில் அமல்படுத்தப்பட்ட தகவல் தொழில்நுட்பச் சட்டத்திற்குப் பதிலாக தற்போது ‘டிஜிட்டல் இந்தியா மசோதா‘வை கொண்டு வந்திருக்கிறது ஒன்றிய அரசு. இந்த சட்டத்தைக் குறித்து அனைத்து அமைப்புகளிடமும் கலந்தாலோசிக்குமாறு கோரிக்கை ஒன்றை பத்திரிக்கையாளர்கள் முன்மொழிந்திருக்கின்றனர்.
2023இல் உலகளவில் இந்தியாவில்தான் அதிகளவில் இணைய முடக்கம் ஏற்பட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒன்றிய அரசின் உத்தரவின் பேரில் நடக்கும் இணைய முடக்கம் மக்களின் குறிப்பாக சமூக ஆர்வலர்களின் கருத்து சுதந்திரத்தை முடக்கும் நோக்கிலேயே நடத்தப்படுகின்றன. இது குறித்து “மீண்டும் மீண்டும் இணையத்தை முடக்குவது குடிமக்களின் உரிமையையும், செய்திகளை வெளிக்கொண்டுவரும் பத்திரிகையாளர்களின் பணியையும் தடுக்கிறது” என்றும் பத்திரிக்கையாளர்கள் கூறுகின்றனர்.
மேலும் புதிய குற்றவியல் சட்டங்களில் ஒன்றிய அரசின் தலையீடு குறித்தும் பத்திரிக்கையாளர் சங்கம் விமர்சித்துள்ளது. பாஜக அரசு நாடளுமன்றத்தில் 146 எதிர்க்கட்சி எம்.பி.க்களை இடைநீக்கம் செய்து விட்டு குற்றவியல் சட்டங்களைக் கொண்டு வந்ததையும் பத்திரிக்கையாளர்கள் இந்தத் தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
இறுதியாக “தற்போது கொண்டுவரப்பட்டுள்ள இந்த டிஜிட்டல் சட்டங்களை பயன்படுத்தி அச்சு, தொலைக்காட்சி மற்றும் இணையதளங்களில் வெளியிடப்படும் செய்திகளை அகற்றவோ தடுக்கவோ கூடாது” என்று பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
மும்பை பிரஸ் கிளப், இந்திய பத்திரிகையாளர் சங்கம் மற்றும் DIGIPUB அமைப்பு எனப் பல்வேறு ஊடகங்கள் சேர்ந்து இத்தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளன.
மக்கள் எந்த செய்திகளை வாசிக்க வேண்டும், எந்த செய்திகளைப் பற்றி தெரிந்து கொள்ளக் கூடாது என்று ஒன்றிய அரசு தணிக்கை செய்ய கொண்டு வரப்பட்ட டிஜிட்டல் சட்டங்களுக்கு எதிராகவே இந்த பத்திரிக்கை அமைப்புகள் குரல் எழுப்பியிருக்கின்றன.