கொள்ளை நோயிலும் கொள்ளையடித்த மோடி அரசு
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதை அடுத்து 2020-ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் சமூக பொது முடக்கநிலை அறிவிக்கப்பட்டது. அச்சமயத்தில் 27-03-2020 அன்று, பிரதம மந்திரி குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால நிவாரண நிதி என்ற நிதியத்தை உண்டாக்கினார். சுருக்கமாக பி.எம். கேர்ஸ் (PM Cares) என்று கூறலாம். இந்தியர்கள் அனைவரும் இதற்கு நிதியளிக்க வேண்டும் என அதற்கு கோரிக்கை விடுத்தார். மேலும் அவர், “இந்தியா கொரோனாவை எதிர்கொள்ளவும், எதிர்காலத்தில் இதுபோன்ற இக்கட்டான சூழல்களை எதிர்கொள்ளவும் இந்த நிதியானது உதவியாக இருக்கும்,” என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
பல தரப்பிலிருந்தும், அதாவது பிரபலமான மனிதர்கள், நிறுவனங்கள், தொழில் அதிபர்கள் மற்றும் சாமன்ய மனிதர்களிடமிருந்து ஏராளமான நிதி குவிந்தது. ஒரே வாரத்தில், 6,500 கோடி ரூபாய் வரை இந்த நிதி குவிந்தது. 2020 சூன் மாதம் வரை கிட்டத்தட்ட 10,000 கோடி ரூபாய் வரை இந்த நிதி குவிந்திருக்குமென நம்பப்படுகிறது. இப்போது வரை எவ்வளவு நிதி வந்துள்ளது என்பது தெரியவில்லை.
தொடக்கத்திலிருந்தே இந்த பி.எம்.கேர்ஸ் நிதி தொடர்பாக பல சர்ச்சைகள் தொடர்கின்றன. ஏற்கெனவே, அதாவது 1948-ஆம் ஆண்டிலிருந்தே பிரதம மந்திரி நிவாரண நிதி (PMNRF) என ஒன்று இருக்கும் போது, இப்போது ஏன் இந்த புது அமைப்பு என பலர் தலைவர்கள் கேள்வி எழுப்பினர். கொரோனா வைரஸை எதிர்கொள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோதியால் உருவாக்கப்பட்ட ஒரு நிதி அமைப்பு வெளிப்படைத்தன்மை அற்றதாக உள்ளது.
இந்த நிதியம் உருவாக்கப்பட்டதை அடுத்து, இதன் செயல்பாடுகள் குறித்து பல கேள்விகள் எழுந்தன. இந்த நிதியம் எப்படி நிர்வகிக்கப்படப் போகிறது? எவ்வளவு நிதி நன்கொடையாகப் பெறப்பட்டது? யாரிடமிருந்து பெறப்பட்டது? இந்த கேள்விகளுக்கான எந்த பதிலும் பி.எம் கேர்ஸ் இணையதளத்தில் இல்லை. பிரதமர் அலுவலகமும் இது தொடர்பாக தகவல்கள் அளிக்க மறுக்கிறது.
இது தொடர்பான மனுக்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழும், நீதி மன்றங்களிலும் தாக்கல் செய்யப்பட்டன. இந்த நிதிய விசியத்தில் வெளிப்படைத்தன்மை வேண்டுமென அந்த மனுக்கள் கோரின. ஆனால், பி.எம் கேர்ஸ் அமைப்பு என்பது பொது அமைப்பு அல்ல. அதனால், இது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வராது என்று தெரிவிக்கப்பட்டது.
அப்படி இருக்கும் பட்சத்தில் எப்படி இந்த நிதியம்,
- பி.எம.கேர்ஸ் அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது. பிரதமர் மோடி இதன் தலைவராக இருக்கிறார். அமைச்சரவையில் உள்ள மூன்று அறங்காவலர்கள், பிரதமரால் நியமிக்கப்பட்ட மூன்று பேர் என ஆறு பேர் இதன் அறங்காவலர்களாக உள்ளனர்.
- பி.எம் கேர்ஸ்க்கு “gov.in” என்ற இணைய முகவரி பயன்படுத்தப் பட்டிருக்கிறது. தனிநபர் நிதி என்று கூறும் ஒன்றிய அரசு எப்படி அரசாங்க முகவரி கொடுத்து விளம்பரப்படுத்தி வசூல் செய்தது.
- இந்தியாவின் தேசிய சின்னம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதனை பயன்படுத்த அரசுக்கு மட்டுமே அனுமதி உண்டு. தனி நபர் நிதியத்துக்கு எப்படி தேசிய சின்னம் போடமுடியும் இது சட்டத்தை மீறிய செயல் இல்லையா? நமக்கு ஒரு சட்டம் பிரதமர் மோடிக்கு ஒரு சட்டமா?
- இதற்கு அரசு பிரதிநிதிகள் பெருமளவில் நிதியளித்து இருக்கிறார்கள். தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 10 மில்லியன் ரூபாய் நிதியளிக்க பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரப்பட்டனர். அரசு ஊழியர்கள், நீதிபதிகள் மற்றும் ராணுவ வீரர்கள் தங்கள் ஒரு நாள் ஊதியத்தை தர கட்டாயப்படுத்தப்பட்டனர். அரசாங்க ஊழியர்களின் நிதி மட்டுமே 4,000 கோடிக்கு மேல் வந்துள்ளதாக செய்தி கேள்விப்பட்டோம்.
பி.எம். கேர்ஸ் நிதியம் உருவாக்கப்பட்ட சமயத்தில் தான் இந்தியாவில் மிகப்பெரிய அளவில், லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். மிகவும் ஏழ்மை நிலையிலிருந்த இந்த மக்கள், பசியிலும், தாகத்திலும் பல தங்கள் சொந்த ஊரை அடைய பல மைல் தூரம் தினமும் நடந்தனர். இதில் நூற்றுக்கும் அதிகமான மக்கள் பலியானார்கள்.
இந்த பி.எம் கேர்ஸ் நிதி அந்த புலம்பெயர் மக்களுக்காக செலவிடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. பி.எம்.கேர்ஸ் மூலமாக வாங்கப்பட்ட 10 ஆயிரம் வென்டிலேட்டர்களின் தரமற்ற முறையில் வாங்கி உபயோகப்படுத்தப்படாமல் வீணாகின. அதிலும் பெரும் ஊழல்.
வேலைசெய்யாத வென்டிலேட்டருக்காக ரூ.2,000 கோடி ஒதுக்கிய மோடி. முன் அனுபவம் இல்லாத நிறுவனங்கள் தயாரித்த வென்டிலேட்டர் கருவிகளை மோடி அரசு பெற்றது மட்டுமல்லாமல் அவற்றுக்கான தொகையும் பி.எம். கேர்ஸ் நிதியின் வாயிலாக செலுத்திவிட்டதாக தெரிவித்துள்ளது. ஆனால், அந்நிறுவனங்களோ தங்களுக்கு பாதி தொகை கூட வராத சூழலில் உற்பத்தியை நிறுத்தி கொண்டதாக கூறியுள்ளன. வட நாட்டு மக்கள் கொத்துக் கொத்தாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர். எரிக்க இடம் இல்லாமல் கங்கையில் மிதக்க விட்டது தான் பிரதமர் மோடியின் சாதனை. ஊழலை ஒழிப்பேன் என்று கூறி இந்த பி.எம்.கேர்ஸ் நிதியம் பற்றிய ஊழலை மறைக்கவே கணக்கு வழக்கை பொதுவெளியில் மக்களிடம் தெரிவிக்க மோடி மறுக்கிறார். இதற்கான கட்டுரையை சூன் 2 தேதி மே பதினேழு இயக்கம் வெளியிட்டது.
கட்டுரையை வாசிக்க:
பள்ளிக் குழந்தைகள் முதல் பலரும் ஆர்வமாக முன்வந்து பிஎம் கேர் நிதிக்கு நன்கொடை அளித்துள்ளனர். கிட்டத்தட்ட இந்த நிதி தொகை, மொத்தம் வந்த நிதியில் 70% பொதுமக்களின் பணம்.
அனைவராலும் நன்கு அறியப்பட்ட பிரதமரின் பெயரால் நிதியை வசூலிக்கின்றனர். அப்படியானால், இந்த நிதியம் அரசுக்குச் சொந்தமானது என்றுதான் மக்கள் நினைக்கக்கூடும். ஆனால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில், இந்த நிதி விவரங்கள் குறித்த எந்தத் தகவலையும் பெற முடியாது என்று மோடி அரசு கூறுகிறது. மக்களின் நன்கொடையில் வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருப்பது ஏன்?
இதனை எப்படி மத்திய தணிக்கைக்கு உட்படுத்தப்படாமல் இருக்கலாம்? பல பொதுத்துறை நிறுவனங்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சி.எஸ்.ஆர் நிதி அளவைவிட அதிகமான அளவு தொகையை பி.எம். கேர் நிதிக்கு நிதி வழங்கியிருக்கின்றன. இது தான் பிரதமர் மோடியின் நேர்மையான ஆட்சியா?
கொரோனாவால் ஏற்படக்கூடிய பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ள பல்வேறு நாடுகளும் இடைக்கால நிவாரணங்களை அறிவித்து வருகின்றன. ஆனால் மோடி ஆட்சியில் இப்படியான ஊழல்களை எல்லாம் யாரும் கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காகத்தான் மோடி அரசு ஏற்கனவே இருக்கிற பேரிடர் வங்கி கணக்கு இல்லாமல் பிரதமர் வங்கி கணக்கு என்ற ஒன்றை புதிதாக உருவாக்கி அதை யாரும் கேள்வி கேட்கமுடியாது என்றும் மாற்றியிருக்கிறார்கள்.
அரசு பெயரில் தொடங்கி, தலைமை மோடி பெயரில் நிறுவனம் இயக்கி, அதில் பாதுகாப்பு துறை, உள்துறை மற்றும் நிதி அமைச்சர் அறங்காவலர்களாக இருப்பது எப்படி ஒரு தனியார் நிதியமைப்பாக சொல்ல முடியும்? ஆக இது ஒரு மாபெரும் ஊழலே தான். எவ்வளவு தான் கெட்டிகாரனாக இருந்தாலும் உப்பு நின்றவன் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும். ஆக எப்படியும் இந்த ஊழலில் இருந்து தப்பிக்க முடியாது.