சாவா திரைப்படத்தினால் தூண்டப்பட்ட நாக்பூர் மதவெறிக் கலவரம்

‘வரலாற்றுத் திரிபு படங்கள் வரும் முன்னே, மதவாதக் கலவரங்கள் வரும் பின்னே’ என்பதை சாவா திரைப்படம் வெளிவந்ததும், மகாராஷ்டிரத்தை பற்றிக் கொண்ட நாக்பூர் கலவரங்கள் படம் பிடித்துக் காட்டியிருக்கிறது. அன்றைய அரசர்களின் மோதல்களைக் கொண்டு மிகைப்படுத்தப்பட்ட வன்முறைக் காட்சிகள் ஊடாக, வரலாற்றைக் திரிக்கும் திரைப்படங்களை எடுக்க வைத்து, அதன் மூலமாக மக்களின் உணர்வுகளைத் தூண்டி கலவரத்திற்கு விதை போடும் பாஜக, ஆர்.எஸ்.எஸ், சப்பரிவாரக் கும்பலுக்கு ஆதரவாக வெளிவந்த அடுத்த திரைப்படமே ‘சாவா’ (Chhavaa) திரைப்படம்.

மகாராஷ்டிராவின் நாக்பூரில் ஒளரங்கசீப் கல்லறையை இடிக்க வேண்டும் என விசுவ இந்து பரிசத் மற்றும் பஜ்ரங் தள் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். குரான் எழுத்துக்களினால் செய்யப்பட்ட ‘சதர்’ எரிக்கப்பட்டதாக செய்திகள் பரப்பப்பட்டன. இதனால் கலவரம் வெடித்தது. இத்தனை ஆண்டுகளாக இருந்த ஒளரங்கசீப் கல்லறையை இடித்தாக வேண்டும் என மதவெறி அமைப்புகள் கிளம்பும் அளவிற்கு, மக்கள் மத்தியில் வன்மத்தை விதைப்பதற்கு இப்படத்தின் புனைவுக் காட்சிகள் பயன்பட்டிருக்கின்றன. இத்தகைய மதவெறி கலவரங்களுக்கு கருத்துருவாக்க திரைக்களமாக பாலிவுட் திரைத்துறை இன்று மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டே இந்த சாவா திரைப்படம்.

இப்படத்தில் மராட்டிய அரசன் சிவாஜியின் மகனான சம்பாஜியை இந்துக்களுக்கான அரசனாகவும், முதலாய மன்னரான ஒளரங்கசீப்பை இந்துக்களின் எதிரியாகவும் சித்தரித்துள்ளனர். இந்துக்களுக்கான அரசனை முஸ்லிம் அரசன் தோலை உரித்து இரத்த வெள்ளத்தில் மிதக்க விட்டால் தான் இந்துக்களின் சீற்ற உணர்வுகளைத் தூண்ட முடியும் என்கிற குரூர சிந்தனைகளின் கணிப்பே இப்படத்தில் காட்சிகளாக உள்ளன. இந்த மதவாத உளவியல் தூண்டலே, நாக்பூர் கலவரமாக வெடித்திருக்கிறது.

இப்படியான வன்முறையை விதைக்கும் திரைப்படங்களை வரலாறு என்று சொல்லி, எரிகிற தீயிற்கு எண்ணெய் வார்க்கும் வேலையை எப்போதும் மோடி அரசு திட்டமிட்டபடி செய்து விடுவது போல, இப்போதும் இப்படத்தை வரலாற்றுக் காவியம் என பேசி, கடந்த மார்ச் – 27ல், நாடாளுமன்ற நூலக கட்டிடத்தில் மோடி முதற்கொண்ட பாஜக அமைச்சரவையினர் பார்க்க திட்டமிட்டனர். காஷ்மீர் ஃபைல்ஸ், கேரளா ஸ்டோரிஸ், தி சபர்மதி ரிப்போர்ட் போன்ற இஸ்லாமிய வெறுப்புணர்வை தூண்டிய புனைவுப் படங்கள் அனைத்தும் வரலாற்று காவியமெனவே மோடியால் பாராட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் போதே, படம் முடிந்தவுடன் சிலர் கண்ணீருடன் உறுதி எடுத்துக் கொள்வதான காட்சிகள் படத்தின் விளம்பரத்திற்காக திட்டமிட்டு பரப்பப்பட்டன. அது பரவலாகி, சித்தரிக்கப்பட்ட காட்சிகள் அனைத்தும் உண்மை என்பது போல மக்கள் மனதினில் பதிய விடப்பட்டது. சிறுவர்கள் முதற்கொண்டு உணர்ச்சிப் பெருக்குடன் சத்தமிட்டு உறுதிமொழி எடுத்துக் கொண்ட காட்சிகள் எல்லாம் சமூக வலைதளங்களின் மூலம் பரவின. பிஞ்சு மனதில் நஞ்சை விதைக்கும் அளவுக்கு இரத்தம் பீறிட்ட காட்சிகளுக்கு சிறுவர்களுக்கும் தணிக்கை வாரியம் (Sensor board) அனுமதி அளித்திருக்கிறது. 

கிட்டத்தட்ட 2 மணி நேர படத்தில் 40 நிமிடம் அளவிற்கு சம்பாஜியை சித்திரவதை செய்யும் காட்சிகள் மட்டுமே வைக்கப்பட்டுள்ளன. சம்பாஜியை கட்டி வைத்து காயங்களில் உப்பு தேய்க்கப்பட்டு, விரல் நகங்கள் பிடுங்கப்படுகிறது. கண்கள் சூடான கம்பிகளால் குருடாக்கப்படுகிறது. நாக்கு பிடுங்கப்படுகிறது. உடல் பாகங்கள் ஒவ்வொன்றாக வெட்டி எடுக்கப்படுகிறது. இந்த சித்தரிப்பு காட்சிகளைக் காணும் யாவருக்கும் உணர்ச்சிகளில் கொந்தளிப்பு ஏற்படுவது தவிர்க்க முடியாததே. இந்த உணர்ச்சியை எதிர்பார்த்தே இந்தக் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. சிறுவர், சிறுமியர்களின் இள வயதிலேலே இயல்பாக இஸ்லாமிய வெறுப்புணர்வை ஊட்டும் வண்ணம் காட்சியமைப்புகளை நகர்த்தியிருக்கிறார்கள்.

ஒரு போரின் போது சம்பாஜி ஒரு முஸ்லிம் சிறுவனைக் காப்பாற்றுகிறார். ஆனால் முகலாய போர் வீரர்கள் இந்து பெண்ணை எரித்துக் கொள்கிறார்கள். இதைப் போல முகலாய வீரர்கள் மக்களை பல சித்திரவதைகளுக்கு ஆட்படுத்தும் காட்சி அமைப்புகள், கோவில் இடிப்புகள் என ஏராளமானக் காட்சிகளை வைத்திருக்கிறார்கள். இஸ்லாமிய வெறுப்புணர்வை மெதுவாக ஏற்றும் ஊசியாக அத்தனை காட்சி அமைப்பையும் வடிவமைத்திருக்கிறார்கள்.

இப்படத்தின் பரபரப்புக்கு இடையே, மராத்திய வரலாற்று ஆய்வாளரான இந்திரஜித் சாவந்த் தனது வரலாற்று ஆயவின்படி, ‘பிராமணர்களே சம்பாஜியின் இருப்பிடத்தை முகலாயர்களுக்கு காட்டிக் கொடுத்தவர்கள்’ எனக் கூறியிருந்தார். இதனால் கோரட்கர் என்னும் பிராமணர் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார். அந்தக் காணொளியை அவர் வெளியிட்டது சர்ச்சையானது.

ஒரு பகுதியின் ஆட்சியை பிடிக்க வலிமை கொண்டவர்கள் வருகிறார்கள் என்றால், உடனே பார்ப்பனர்கள், அதுவரை தங்களை அரவணைத்து வந்த அரசர்களையும் காட்டிக் கொடுத்து விடுவார்கள் என்பதற்கு வரலாற்று உதாரணங்கள் நிறைய இருக்கின்றன. திப்புசுல்தானை ஆங்கிலேயருக்கு காட்டிக் கொடுத்தவனும் பூர்ணய்யர் என்னும் தளபதி தான் என்பது குறிப்பிடத்தக்கது. பார்ப்பனர்கள் இந்தக் கறைகளை மறைக்கவே வரலாற்றில் புனைவுகளை ஏற்படுத்தி முஸ்லிம்களை எதிரியாக சித்தரிக்கும் கதைகளைப் பல தளங்களிலும் பரவ விடுகின்றனர்.

பேரறிஞர் அண்ணா படைத்த ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்’ நாவலில் பார்ப்பனர்களின் முகமூடியை தோலுரித்திருப்பார். சத்திரியர்களுக்கே முடிசூட்டிக் கொள்ள உரிமை உண்டு என்பதனால், மாவீரராக இருந்தாலும்  பிறப்பால் சூத்திரனாக பிறந்து விட்டக் காரணத்தால் சிவாஜிக்கு முடிசூட்டத் தடை செய்த பார்ப்பனர்களின் செயலையும், சிவாஜியை அரசனாக்க யாகங்கள் செய்ய வேண்டும் என செல்வங்களை பார்ப்பனர்கள் சுரண்டிய முறைகளையும், மக்களின் மூடத்தனங்களை முதலீடாகக் கொண்டு ஆதிக்கம் செய்யும் பார்ப்பனர்களை எதிர்க்க முடியாத சிவாஜியின் சூழ்நிலையும் விரிவாக விளக்கியிருப்பார். சிவாஜியிலிருந்து சிவாஜி மகனான சம்பாஜி வரை பார்ப்பனர்களின் சூழ்ச்சி ஓயவில்லை என்பதையே வரலாற்றாசிரியர்களின் ஆய்விலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது.

இந்தியா என்பது அன்றைய நிலையில் ஒரு நாடு அல்ல. பல சிற்றரசர்கள் ஆண்ட பிரதேசம். இந்திய சுதந்திரத்துக்கு முன்பு வரை 562 சமஸ்தானங்களைக் கொண்டிருந்த நிலப்பரப்பே இந்தியா. இந்த நிலப்பரப்புகளில் ஒரு சமஸ்தானம் இன்னொரு சமஸ்தானத்தை ஆக்கிரமிப்பு செய்ய போர் புரிந்ததும், வென்றதும், தோற்றதும், வென்றவர்கள் தோற்றவர்களை சிறையில் அடைத்ததும், இணங்க மறுத்தவர்களைக் கொன்றதும் என பல நிகழ்வுகள் இயல்பானதாகவே நடந்தேறின. இந்து சிற்றரசர்கள் இந்து சிற்றரசர்களையே கொன்றதும், முஸ்லிம் மன்னர்கள் முஸ்லிம் மன்னர்களையே கொன்றதும் எல்லாம் வரலாற்றில் நடந்தவையே. 

ஒளரங்கசீப்பின் படையில் இந்துக்களும் முஸ்லிம்களும் கலந்தே சுமார் 5 லட்சம் பேர் போர் வீரர்களாக இருந்தனர். சுமார் 15 கோடி மக்கள் அவரின் கட்டுப்பாட்டில் வாழ்ந்தனர். வாள்முனையில் மதம் மாற்றச் செய்தார் என்ற பரப்புரை உண்மையாக இருந்திருந்தால், இன்றைக்கு இந்தியாவில் பெரும்பான்மையினர் முஸ்லிமாகவே இருந்திருக்க முடியும். அன்று மதங்கள் என்பது முக்கியத்துவமாக இருந்ததில்லை. நில ஆக்கிரமிப்பு மட்டுமே முக்கியத்துவமாக இருந்தது என்பதே வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது.

இந்து அரசர்களே இந்து கோயில்களை தங்களின் நில விரிவாக்கத்திற்கு இடித்துத் தள்ளிய நிகழ்வுகளும் உள்ளன. இஸ்லாமிய அரசர்கள் இந்து கோவில்களை புரைமைத்துத் தந்த நிகழ்வுகளும் இருக்கின்றன. பேர்ஷ்வா மராத்தியப் படை சூறையாடிய சிருங்கேரி மடத்தை புனரமைத்துத் தந்தவர் திப்புசுல்தான்.  மதமாற்றங்களும் வாள் முனையில் எதுவும் நடைபெறவில்லை.

உயர்சாதியினர், இடைநிலை சாதியினர் ஆதிக்க வெறி தாக்குப் பிடிக்க முடியாமல் மதம் மாறியவர்களே பலர். அம்பேத்கர் பெளத்த மதம் தழுவியதிலிருந்து மீனாட்சிபுரம் கிராமமே மாற்று மதம் தழுவியது வரை காரணம் உயர்சாதிப் பார்ப்பனர்களின் சனாதன வர்ணாசிரமம் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கமே காரணங்களாக இருக்கின்றன. இந்தக் காரணங்கள் எல்லாம் இன்று உள்ளவர்களுக்கு தெரிய விடாதபடி அரசர்களை தோண்டி எடுத்து வந்து அவர்கள் மூலமாக மதவெறி விதைக்கும் தளமாக திரைத்துறை மாறி வருவது ஆபத்தின் அறிகுறி.

இந்துத்துவ மேல்மட்ட பார்ப்பன சங்கிகள் பல போலிக் கதைகளுக்கான கட்டமைப்புகளை திட்டமிட்டு உருவாக்குகின்றனர். அதில் திரைத்துறையும் ஒன்றாக மாறிவிட்டது. திரையின் வாயிலாக உருவாக்கும் உணர்ச்சிக் கதையாடல்களை நம்பி கீழ்மட்ட சங்கிகள் மதவெறிக் கலவரங்களை ஏற்படுத்தி அமைதியைக் குலைக்கின்றனர். இந்த கருத்துருவாக்கத்திற்கு பஞ்சம் ஏற்படாத வகையில் திரைத்துறையில் சங்பரிவார ஆட்கள் நிறைந்து காணப்படுகிறார்கள். கடவுள், அரசர், இராணுவம் என இவற்றின் மீது மிகையாக காட்டப்படும் போலியான புனைவுக் கதையமைப்புகள் திட்டமிட்டு தயாரிக்கப்படுகின்றன.

மகாராஷ்டிர முதல்வரான தேவேந்திர பட்னாவிஸ் சில நாட்களுக்கு முன்பு இந்துக்கள் கடையிலேயே இந்துக்கள் இறைச்சி வாங்க வேண்டும் எனவும், அதற்கு ‘மல்கர்’ எனப்படும் சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். இப்பொழுது பிரச்சனையை ஆரம்பித்த விசுவ இந்து பரிசத் மற்றும் சங்பரிவார கும்பல்களைப் பற்றி எதுவும் பேசாமல் அவுரங்கசீப்பை மகிமைப்படுத்துவதாக முஸ்லிம்களின் மீது குற்றம் சாட்டினார். மேலும் கலவரம் ஆரம்பிக்கக் காரணமான சங்பரிவார கும்பல்களை விட்டுவிட்டு, எதிர்வினையாற்றிய முஸ்லிம்களின் வீட்டை புல்டோசர் கொண்டு இடித்துத் தள்ளுகிறது பாஜக அரசாங்கம். இதற்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. இருப்பினும் சட்ட விரோத இடத்தில் குடியிருப்பதாக கூறி சிறுபான்மையினர் வீடுகளைக் குறி வைத்து இடிக்கும் படலம் அங்கு தொடர்கிறது.

நாக்பூரில் ஒளரங்கசீப் போன்று திருப்பரங்குன்றத்தில் சிக்கந்தர் தர்காவை இடித்துத் தள்ள வேண்டும் என்று சங்கிகள் முற்பட்டனர். ஜனநாயக ஆற்றல்களின் மாநிலமாக தமிழ்நாடு நீடிப்பதால் அந்த சூழ்ச்சி முளையிலேயே கிள்ளி எறியப்பட்டது. பாபர் மசூதியை இடித்த வெறி இன்னும் அடங்காமல் ஒவ்வொரு மசூதியையும் இடித்துத் தள்ளி விட வேண்டும் எனத் திட்டமிட்டு காய் நகர்த்துவதற்கு இப்படியான திரைப்படங்கள் அவர்களுக்குத் தேவைப்படுகிறது.

திரையுலகம் மக்களைக் கவர்ந்திழுக்கும் மாபெரும் சக்தி என்பது இந்துத்துவ, வலதுசாரி சக்திகள் உணர்ந்த அளவுக்கு முற்போக்கு இடதுசாரி ஆற்றல்கள் உணரவில்லை. போலி கதையாடல்களைக் கொண்டு வரலாற்றைத் திரித்து மதவெறி பரப்பி  இந்து ராச்சியமாக்க நினைக்கும் பாசிச ஆற்றல்களை எதிர்த்து நிற்கும் கலைப் படைப்புகள் வெளிவர வேண்டும். ‘சிவாஜி கண்ட இந்து ராச்சியம்’ போன்ற வரலாற்று அடிப்படையைக் கொண்ட திரைப்படங்களை திரையுலகம் காண வேண்டும். பாசிச சக்திகள் மக்களின் உளவியலில் கோழைத் தன்மையையும், மதவெறியையும் நிறைத்தால், மக்களுக்கான முற்போக்கு சக்திகள் மக்களைத் துணிவுடனும், நல்லிணக்கத்துடனும் வாழ வைக்கும் திரையுலகக் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். மக்களை பிளவுபடுத்தும் சக்திகளை எதிர்த்து நிற்கும் இந்த வழிமுறைகளே தீர்வாக இருக்க முடியும் .

மக்களின் ஒற்றுமையைக் கூறு போட்டு பார்ப்பன இந்துத்துவ மேலாதிக்கவாதிகள் சுகமாக வாழும் ஏற்பாடே சாவா போன்ற மதவெறியூட்டும் திரைப்படங்கள். விழிப்படைவோம்.. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »