நீட் நுழைவுத்தேர்வும், +2 பொதுத்தேர்வு ரத்தும்!
கொரோனா பெருந்தொற்று காலத்தில் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பன்னிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வுகள் இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உயர்கல்வி படிப்பிற்கான நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகள் மட்டும் இரத்து செய்யப்படாமல் இருப்பது குறித்த கேள்வி தற்போது எழுந்துள்ளது. பள்ளி இறுதியாண்டு தேர்வுகளை நடத்தினால் கொரோனா பெருந்தொற்று காரணமாக மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றால், நீட் தேர்வு நடத்துவதால் மாணவர்கள் பாதிக்கப்படமாட்டார்களா? ஏனெனில், +2 பொதுத்தேர்வு முறையை ரத்து செய்துவிட்டு நுழைவுத்தேர்வு மூலம் உயர்கல்வி இடங்களை நிரப்ப வேண்டும் என்பதே இந்திய ஒன்றிய அரசின் நோக்கமாக உள்ளது.
கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்தியாவில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட பின்னர் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதையடுத்து, ஏராளமான மாணவர்களின் கல்வியும் கேள்விக்குறியாகி உள்ளது. 2020-21 கல்வியாண்டு முதலே பள்ளிகள் செயல்படாத நிலையில் சனவரி 2021 முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் கொரோனா பரவல் தடுப்பு (SOP – Standard Operating Procedures) நெறிமுறைகளின் படி பள்ளிகள் செயல்பட்டு வந்தன. பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் (Practical Exams) மட்டும் நடைபெற்றது. அது போல் மாதிரி தேர்வுகளும் நடந்துள்ளது.
ஏப்ரல் மாதத்தில் கொரோனா தொற்று 2-வது அலை தீவிரமடைந்ததையடுத்து பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டன. ஒன்று முதல் பதினொன்றாம் வகுப்பு வரை அனைவருக்கும் கட்டாயத் தேர்ச்சி அளிக்க உத்தரவிட்டது தமிழ்நாடு அரசு. பன்னிரெண்டாம் வகுப்பை பொறுத்தவரையில் கொரோனா தொற்று குறைந்த பின் பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும் என்ற நிலைப்பாட்டை முன்வைத்தது தமிழ்நாடு அரசு. இதற்கிடையே பிரதமர் தலைமையில் நடைபெற்ற CBSE மாணவர்களூக்கான +2 தேர்வு குறித்து முடிவெடுத்தல் சார்ந்த கூட்டத்தில், பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது. அதே நேரத்தில் நீட் தேர்வு போன்ற உயர் கல்வி பயில்வதற்கான நுழைவுத் தேர்வு நடத்தப்படுவது குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ததோடு, நீட் தேர்வு போன்ற நுழைவுத்தேர்வுகளையும் இரத்து செய்ய வேண்டுமென ஒன்றிய அரசிற்கு கடிதம் எழுதியுள்ளது.
பொது தேர்வை மட்டும் ரத்து செய்துவிட்டு நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுமெனில், அது மாணவர்கள் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவாக இருக்காது. கொரோனா கால நெருக்கடியை பயன்படுத்தி புதிய கல்விக் கொள்கையை திணிப்பதற்கான முயற்சியே இது. புதிய கல்விக் கொள்கை சமூக நீதிக்கு எதிரான நுழைவுத் தேர்வுகளை உயர்கல்வி பயில்வதற்கு முன்மொழிகிறது என்பதை நினைவில் கொள்வோம்.
பறிக்கப்படும் மாநில கூட்டாட்சி உரிமைகள்
சீர்திருத்தம் என்ற பெயரில் இந்திய மருத்துவ கவுன்சிலை (MCI – Medical Council of India) கலைத்து விட்டு இந்திய மருத்துவக் கல்வியையும் மருத்துவத்தையும், சுகாதாரக் கட்டமைப்பையும் வர்த்தக சந்தையிடம் ஒப்படைக்க வழி செய்யும், தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை (National Medical Commission Bill) இந்திய ஒன்றிய அரசு 2017-இல் முன்வைத்து 2019-இல் நிறைவேற்றியது. இந்திய ஒன்றிய அரசு – மாநில அரசு நிர்வாகப் பிரிவினை என்பது, ஒன்றிய அரசு இயற்றும் சட்டத்தினால் அல்லாமல் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டே இருக்க வேண்டும். மாநில அரசு மற்றும் ஒன்றிய அரசு இரண்டும் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு சமநிலையில் உள்ளன. எனவே, மாநில அரசின் மேல் ஒன்றிய அரசானது நிர்வாக அதிகாரத் தோரணையில் செயல்படுவது அரசியல் சாசனத்திற்கு எதிரானது.
தமிழ்நாடு அரசு தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துரைத்தும் சற்றும் பொருட்படுத்தாமல் எதேச்சதிகாரப் போக்குடன் செயல்பட்டு வருகிறது இந்திய ஒன்றிய அரசு. மாணவர்கள் நலனை கருதி பொது தேர்வை ரத்து செய்வதாக அறிவித்த ஒன்றிய அரசு நுழைவு தேர்வை நடத்துவது புதிய கல்வி கொள்கையை திணிப்பதற்காகவே. பொதுவாக உயர்கல்வி பயில்வதற்கு பெரும்பாலும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையிலேயே சேர்க்கை நடைபெறும். தற்போது பொதுத்தேர்வு நடைபெறாத நிலையில் அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் சேர நுழைவுத் தேர்வு நடத்துவதற்கு வழிவகை செய்துள்ளது. இது, ஏழை எளிய மாணவர்கள் மீது திட்டமிட்டு நிகழ்த்தப்படும் சமூகநீதிக்கு எதிரான தாக்குதல் ஆகும்.
புறக்கணிக்கப்படும் தமிழ்நாடும் – மறுக்கப்படும் மருத்துவமும்
2018-ஆம் ஆண்டில் தனியார் மருத்துவ கல்லூரிகள் ஆண்டுக்கு ரூ.12.50 லட்சம் வரை வசூலிப்பதாக கூறப்படுகிறது. ஆண்டுக்கு 12.50 லட்சம் என்றால் 5 ஆண்டுகளில் 60 லட்சத்திற்கு மேல். இவை தவிர, தனியார் மருத்துவ கல்லூரிகள் சட்டவிரோதமாக அதிக கட்டணம் வசூலிக்கின்றனர் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இப்போது ஒரு மருத்துவ இடத்திற்கு சட்டப்பூர்வமாக ரூ.60 லட்சத்துக்கு மேல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆம், தேசிய மருத்துவ ஆணைய மசோதா (NMC) 2019 இன் படி, தனியார் மற்றும் தன்னாட்சி கல்லூரிகளில் 50 சதவீத இடங்களுக்கு மட்டுமே கட்டணம் மற்றும் பிற கட்டணங்கள் குறித்து அரசாங்கம் முடிவு செய்யும். மீதமுள்ள இடங்களுக்கான கட்டணங்களை அரசாங்கம் நிர்ணயிக்காது என்று அறிவித்துள்ளது.
ரஞ்சித் ராய் சவுத்ரி நிபுணர் குழு அறிக்கையானது சுகாதாரம் மற்றும் குடும்ப நல்வாழ்வுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கை எண்கள் 92 மற்றும் 109 குறித்தும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதிக்கப்படவில்லை. இந்த அறிக்கைகள் தான் NMC-2019 மசோதாவிற்கான அடிப்படைகள் எனக் கூறப்படுகின்றன. இந்தக்குழு, சி.எம்.இ.டி (CMET – Common Medical Entrance Test) எனப்படும் மருத்துவக்கல்வி நுழைவிற்கான பொதுத்தேர்வு என்பதை சி.எம்.இ.டி.க்கு வெளியே இருக்கும் நிலைபாட்டை ஆதரிக்கும் மாநிலங்கள் தவிர்த்து நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த பரிந்துரைக்கின்றது. அப்படி இணைய விரும்பாத மாநிலங்களுக்கு விலக்களிக்க மறுக்கும் 2016-ஆம் ஆண்டு இந்திய மருத்துவ ஆணைய திருத்த சட்டத்தை நிறைவேற்றியதன் நோக்கம் என்ன? 2007-ஆம் ஆண்டு தொழில்முறை கல்லூரிகளுக்கான நுழைவுத்தேர்வுகளை இரத்து செய்து கொண்டு வரப்பட்ட ஒரு சட்டம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெற்று தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு விலக்களிக்காமல் மசோதாவை நிறைவேற்றியுள்ளது ஒன்றிய அரசு. இது அதிகாரத்தைப் தவறாக பயன்படுத்தும் செயலாகும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு எண் 246 இன் படி மாநில அரசுகளின் உரிமையை NMC-2019 மசோதா மறுக்கின்றது. தமிழ்நாட்டில் நீட் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் ஆண்டில், மாநில அரசு மருத்துவக் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்ட ஏழை மற்றும் நடுத்தர மாணவர்களின் எண்ணிக்கையில் 90% வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்று தகவல் அறியும் சட்டத்தில் வெளிவந்தது.
நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் இல்லாத போது ஒரே மாதிரியான தேர்வு நடத்துவது என்பது சமூகநீதிக்கு எதிரானது. பல நுழைவுத் தேர்வுகள் நடத்துவதற்கு பதிலாக ஒரே நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்கிறார்கள். ஆனால் AIIMS மற்றும் JIPMER போன்ற ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு தனி நுழைவுத்தேர்வு எழுத வேண்டும். பொதுவாக ஏழை எளிய மாணவர்கள் மாநிலக் கல்வித் திட்டத்தில் தான் பயின்று வருகின்றனர். ஆனால் பெரும்பாலான கேள்விகள் CBSE பாடத்திட்டத்திலிருந்து கேட்கப்படுவதால் ஏழை எளிய மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு எட்டாக் கனியாகிவிடுகிறது. நீட் தேர்வின் மூலம் தகுதியான மாணவர்கள் மட்டுமே மருத்துவப் படிப்பு பயில முடியும் என அனைத்து வலதுசாரி சிந்தனையாளர்கள் தவறான நிலைப்பாட்டை மக்கள் மனதில் விதைக்கின்றனர். கடந்த 3 வருட நீட் தேர்வு சேர்க்கையின் புள்ளி விவரங்கள், நீட் தேர்வு நேர்மையற்றது என நிரூபித்துள்ளன.
தமிழ்நாட்டில் நீட் தேர்வு நடத்தப்படுவதற்கு முன் +2 மதிப்பெண் அடிப்படையில் தான் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்றது. 85% மாநில இடத்தில் மருத்துவ படிப்பில் சேர முக்கிய பாடங்களான உயிரியல், இயற்பியல், வேதியியல் பாடங்களில் குறந்தபட்சம் 50% எடுத்திருக்க வேண்டும். ஆனால் நீட் தேர்வின் விகிதாச்சாரம் (Percentile) முறையில் +2 மதிப்பெண் கணக்கிடும் போது குறைந்தபட்சம் 40 முதல் 50 விழுக்காடு வரை எடுக்கும் வசதி வாய்ப்புள்ளவர்கள் மருத்துவ படிப்பு பயில முடியும். அவர்கள் நீட் தேர்வில் 16% முதல் 25% வரை மதிப்பெண் பெற்றாலே அதிக பணம் கொடுத்து தனியார் மருத்துவக் கல்லூரி ஒதுக்கீட்டில் சேர முடியும் என்ற நிலை உள்ளது. தகுதி என்ற அளவுகோள் பண வசதியை சார்ந்தது என்றே நிரூபனமானது.
2018-இல் அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்த மாணவர்களில் கிட்டத்தட்ட 1,680 மாணவர்கள் 2017-இல் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தவர்கள். 120 மாணவர்கள் 2016-இல் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தவர்கள் என்று தேர்வு குழு செயலாளர் தெரிவித்திருந்தார். அதாவது 51% மாணவர்கள் ஒன்று அல்லது இரண்டு வருடங்கள் நீட் தேர்வுக்கு தயார் செய்துள்ளனர் (Break Up) என்பது வேதனையளிக்கும் விடயம்.
நீட்-2020 தேர்வில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்ற மாணவர்களில் முதன்முறை தேர்வு எழுதியவர்கள் எண்ணிக்கை 6,692. இவர்களில் 1,633 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்ற 4 மாணவர்கள் 500 மதிப்பெண்ணிற்கு மேல் எடுத்துள்ளனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்ற மாணவர்களில் 14 பேர் 400–500 வரையிலும், 71 பேர் 300–400 வரையிலும் மதிப்பெண் எடுத்துள்ளனர். ஆனால் இந்த மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுமே மருத்துவ படிப்பு பயில முடியாது என்பது தன் உட்சபட்ச வேதனை. மிகுந்த எதிர்ப்புகளிடையே தமிழ்நாடு அரசு 7.5% இடஒதுக்கீடு அளித்து வெறும் 405 மாணவர்கள் (313 MBBS & 92 BDS) மருத்துவ படிப்பிற்கு இடம் கிடைக்கப்பெற்றது.
தமிழ்நாட்டில் ஜூலை 2019 நிலவரப்படி 23 அரசு மருத்துவக் கல்லூரிகள், 3 அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் 23 தனியார் கல்லூரிகள் உட்பட 49 மருத்துவ கல்லூரிகள் உள்ளன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் தமிழ்நாட்டிற்கென்று மருத்துவ படிப்பிற்காக ஒதுக்கப்பட்ட மொத்த இடங்கள் 3,400 ஆகும். 2020-இல் புதியதாக 6 அரசு மருத்துவக் கல்லூரிகள் நிறுவுவதற்கு ஒன்றிய அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. 2020-21-இல் புதிய கல்லூரிகளுக்கு 1,350 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 23 தனியார் கல்லூரிகளுக்கு 3,750 மருத்துவ இடங்கள் உள்ளன. ஆக மொத்தம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளில் 8,500 இடங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. நீட் (2020) தேர்வுக்கு விண்னப்பித்த 1,21,617 மாணவர்களில். தேர்வு எழுதியவர்கள் எண்ணிக்கை 99,610. தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் எண்ணிக்கை 57,215. அதாவது தமிழ்நாட்டின் மொத்த மருத்துவ இடங்களில் 57% மட்டுமே. மீதமுள்ள 43% மருத்துவ இடங்கள் வெளிமாநிலத்தவர்கள் கொண்டு நிரப்பபட்டது. தமிழ்நாட்டு மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய மருத்துவ இடங்களை வெளி மாநிலத்தவருக்கு அளிக்கும் அவலநிலையை உருவாக்கியது தான் நீட்.
தகுதி என்னும் பெயரில் செய்யப்படும் மோசடி
நீட் தேர்வு எவ்வளவு மோசமானது என்பதை கடந்த கால சம்பவங்கள் மூலம் அறியலாம். நீட் தேர்வில் 180 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு கேள்விக்கும் 4 மதிப்பெண்கள். ஆக மொத்தம் 720 மதிப்பெண்கள். 2018-இல் நடந்த தேர்வில் தமிழ் வழியில் வடிவமைக்கப்பட்ட விடைத்தாளில் 49 கேள்விகள் தவறானவை. சென்னை உயர் நீதிமன்றம் ஈடாக 196 மதிப்பெண்கள் வழங்க உத்தரவிட்டதை உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும் தவறான பதிலுக்கும் மதிப்பெண் குறைப்பு (Negative Marks) வழங்கப்பட்டிருக்கும். ஆக, நீட் தேர்வு மோசடிக்கு ஒன்றிய அரசு மட்டுமல்ல உச்ச நீதிமன்றமும் துணை போனது அம்பலமானது. 98.4% மாணவர்கள் நீட் பயிற்சி மையங்கள் வழியாக தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் தான்.
நமது மாணவர்களின் மருத்துவப் படிப்பை கட் ஆஃப் (Cut-off Mark) அடிப்படையில் பறித்து வருகிறது ஒன்றிய அரசு. வெளிமாநில மாணவர்கள் பலர் மோசடி செய்து இருப்பிடச் சான்று பெற்று மருத்துவ படிப்பை நம்மிடம் இருந்து பறித்துள்ளனர். தேர்வு மையத்திலும் கடுமையான கட்டுப்பாடு. இத்தகைய மோசமான சூழலில் தான் நமது மாணவர்கள் மன உளைச்சலுடன் தேர்வெழுதுகிறார்கள். சமச்சீர் கல்வியை பன்னிரெண்டு வருடம் கற்ற மாணவர்கள் தேவைக்குரிய மதிப்பெண் பெற்றிருந்தும், இந்த நுழைவுத் தேர்வினால் மன அழுத்தத்திற்கு ஆளாவதும், சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு இந்தத் தேர்வு எளிமையாக அமைவதும் நிகழ்கிறது. அப்படியென்றால் வசதி வாய்ப்பு உள்ளவர்களுக்கும், உயர் வர்க்கத்தினருக்குமாகத் தான் இந்த நுழைவுத் தேர்வு என்பது தெளிவாகிறது. தகுதி, திறமை என்னும் வார்த்தைகளை அழுத்தமாகக் கூறி இந்த மோசடித்தனத்தை நியாயப்படுத்துகிறார்கள் உயர்சாதி அதிகார வர்க்கமும், அவர்களுக்கான ஆளும் மோடி அரசும்.
கொரோனா தொற்று பேரிடரின் போது அரசு மருத்துவர்கள் தான் களத்தில் இருந்தனர். தனியார் மருத்துவமனை இலாப நோக்கத்தில் தான் செயல்படும். அரசு மருத்துவர்களை கொச்சைப்படுத்திய வலதுசாரி சிந்தனையாளர் மட்டுமே நீட் தேர்வை ஆதரிக்கின்றனர் என்பதை நாம் நினவில் கொள்ள வேண்டும். நீட் தேர்வு என்பது தகுதி சார்ந்தது இல்லை. மோசடி என்பது தெரிந்தும், அனிதா போன்ற 13 உயிர்களை காவு வாங்கிய நீட் தேர்வை தமிழ் நாட்டில் அனுமதித்தால் நாம் அமைதி இருந்தால். வரலாறு நம்மை மன்னிக்காது.
கொரோனா தொற்றும் மாணவர்கள் மனநிலையும்
நாட்டில் கல்வியில் எழுச்சி ஏற்பட்ட காலத்திலிருந்து இதுவரை எந்த தலைமுறையினரும் எதிர்கொள்ளாத ஒரு பிரச்சனையை தற்போது மாணவர்கள் எதிர்கொண்டுள்ளனர். அனைவருக்கும் சமமான கல்வி வழங்கப்பட வேண்டும் என்பது ஆரம்பம் முதலே முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், பேரிடர் காலத்தில் மாணவர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்னைகள் குறித்து ஆலோசித்து கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள இந்த வீழ்ச்சி உடனடியாக சரி செய்யப்பட வேண்டும். வருங்காலங்களில் இதுபோன்ற பேரிடர் ஏற்படும் பட்சத்தில் மாணவர்களின் கல்வியில் பாதிப்பு ஏற்படாதவாறு முன்கூட்டியே திட்டமிடல் வேண்டும்.
கொரோனா தொற்று பரவல் குறைந்த பின்பு பொது தேர்வு நடத்தி மதிப்பெண் வழங்கப்பட வேண்டும். அல்லது அலகு தேர்வு அடிப்படையில் மதிப்பெண் வழங்க வேண்டும். பாரபட்சமின்றி மதிப்பெண் வழங்கப்படுகிறதா என்பதையும் பள்ளிக் கல்வித் துறை கண்காணிக்க வேண்டும். மேலும், அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு அனைத்து நுழைவுத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட வேண்டும். பொது தேர்வை மட்டும் ரத்து செய்து மேற்படிப்பிற்கு நுழைவுத் தேர்வு என்பது Gross Enrolment Ratio அதாவது உயர் கல்வி பயில்வதற்கான வாய்ப்பை தட்டிப்பறிப்பதற்கு சமமாகும்.
சாதாரணமாக கொரொனோ தொற்று இல்லாத காலத்திலேயே அரசு, அரசு உதவி பெறும் மாணவர்களின் நீட் தேர்வு விகிதம் மிகக்குறைவாக இருக்கிறது. அப்படியெனில் ஊரடங்கு காலத்தில் நெருக்கடிக்குள்ளாகும் ஏழை எளிய மாணவர்களின் குடும்ப சூழல், கல்வி சூழல், பயிற்சி சூழல் என எதுவும் சாதகமற்று இருக்கும். அதே நேரத்தில் சி.பி.எஸ்.இ போன்ற நடுத்தர, உயர்தட்டு வர்க்க குழந்தைகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் இவ்வாறான பாதக சூழல் இல்லாமல் சாதக சூழல் அமைந்திருக்கும். ஒரு மிக மோசமான ஏற்றத்தாழ்வு நிலையில் நடத்தப்படும் தேர்வு நேர்மையானதல்ல. மாறாக நெருக்கடியில் உள்ள ஏழை மாணவர்களின் எதிர்காலத்தை சிதைத்து நடத்தப்படும் கொள்ளையாகும்.
தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், ஆகியோர் போராடி நமக்கு பெற்றுத்தந்த சமூகநீதியை ”தகுதி” என்ற பெயரில் சிதைக்க முயற்சி செய்வது தான் நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள். கல்வி என்பது தகுதி சார்ந்தது இல்லை உரிமை சார்ந்தது. சமூக நீதியின் கட்டமைப்பில் உருவான மருத்துவக் கல்வி உரிமையும், பொது சுகாதாரத்தை கட்டமைத்ததன் விளைவே இன்று நாம் கொரோனா பேரிடரில் ஒன்றிய அரசு நம்மை கைவிட்ட போதும் தனி மாநிலமாக போராடி எதிர்கொண்டு வருகிறோம்.