நூறு நாள் வேலைத்திட்டத்தை அழிக்கும் புதிய மசோதா

மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்து வேளாண்மையை அழித்து, அதை கார்ப்பரேட் நிறுவனங்களின் கையில் கொடுக்க நினைத்த மோடி அரசிற்கு இந்தியா முழுவதும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பஞ்சாப் முதல் தமிழ்நாடு வரை ஒலித்த அந்த எதிர்ப்புக் குரலின் காரணமாக அப்போது அதை கைவிட்ட ஒன்றிய அரசு, இப்போது மறைமுகமாக விவசாயத்தைக் கார்ப்பரேட் கையில் கொடுக்கும் வகையில் புதிய மசோதாக்களை கொண்டு வருகிறது. அவற்றில் ஒன்றுதான் ‘விக்ஷித் பாரத் — ரோஸ்கர் மற்றும் அஜீவிகா மிஷன் (கிராமின்) மசோதா’.

கிராமப்புற பெண்களும் ஒடுக்கப்பட்ட வகுப்பினரும் பெரிதும் பணிபுரியும் நூறு நாள் வேலைத்திட்டத்தை முடக்கும் வகையில் அண்மையில் மசோதா ஒன்றைக் கொண்டு வந்திருக்கிறது ஒன்றிய பாஜக அரசு. மாநிலங்களுக்கு நிதி நெருக்கடியை உண்டாக்கும் வகையில் இயற்றப்பட்ட இந்த மசோதா மூலம் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரமே சீர்குலையும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.

‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு சட்டம்’ எனும் நூறு நாள் வேலை திட்டத்தை அழிக்கும் வகையில் ‘விக்ஷித் பாரத் — ரோஸ்கர் மற்றும் அஜீவிகா மிஷன் (கிராமின்) மசோதா’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது ஒன்றிய அரசு. இந்த புதிய திட்டத்தின் கீழ் ஒன்றியம்-மாநிலங்களுக்கு இடையேயான நிதிப் பகிர்வில் ஒரு பெரிய மாற்றம் ஏற்படப் போகிறது. இதுவரை ஒன்றிய அரசும்: மாநில அரசும் 75:25 என்ற விகித அளவில் திட்டத்தின் செலவுகளைப் பிரித்து வந்தன. ஆனால் இந்த புதிய மசோதா 40% செலவுகளை மாநிலங்கள் ஏற்க வேண்டும் என்று முன்மொழிகிறது. இனி ஒன்றிய அரசும் மாநிலங்களும் 60:40 என்று செலவுகளைப் பிரித்துக் கொள்ள வேண்டும். ஆனால் வடகிழக்கு மாநிலங்கள், உத்தராகண்ட் மற்றும் இமாச்சல பிரதேசம் போன்றவை 90:10 ஆக செலவுகளைப் பிரித்துக் கொள்ளும். (அதாவது தமிழ்நாடு உட்பட சில மாநிலங்கள் 40% நிதிச்சுமையைப் பெறப் போகின்றன, ஆனால் சில வட மாநிலங்கள் 10% நிதிச்சுமை மட்டுமே பெறப் போகின்றன.)

மேலும் ‘விதைப்பு மற்றும் அறுவடை நடைபெறும் நாட்களில் மொத்தம் 60 நாட்கள் வரை இந்த புதிய சட்டத்தின் கீழ் எந்த வேலையும் தொடங்கப்படாது’ என்று ஒன்றிய அரசு கூறியிருக்கிறது. மேலும் டிஜிட்டல் முறையில் விவசாயிகளின் பயோமெட்ரிக் தரவுகளை ஒன்றிய அரசு பெறும் எனக் கூறியிருப்பது ஏற்கனவே ஆதார் குளறுபடிகளால் தவிக்கும் விவசாயிகளிடையே கலக்கத்தை உண்டாக்கி இருக்கிறது. இந்த மசோதாவிற்கு முன்னர் நெல் கொள்முதல், புதிய வேளாண் சட்டம் என்று பலவகையில் விவசாயிகளுக்கு இன்னல் விளைவித்த பாஜக, இப்போது நேரடியாகவே அவர்களின் பொருளாதாரத்தில் கை வைத்திருக்கிறது.

குறிப்பாக தமிழ்நாடு, மேற்கு வங்கம் போன்று பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களை வஞ்சிக்கவே இந்த புதிய மசோதா கொண்டு வரப்படுவதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ஏனெனில் இதற்கு முன்னரும் இந்த மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டியிருக்கிறது பாஜக. தற்போது நிர்வாக செலவு உள்ளிட்ட செலவுகளுக்காக ஆண்டுக்கு ரூ1.5 லட்சம் கோடி செலவாகும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், மாநிலங்கள் மீது 55,000 கோடி நிதிசுமையை புதிய மசோதா மூலம் சுமத்தவிருக்கின்றது.

தமிழ்நாட்டில், 31 மாவட்டங்களில் 12,524 பஞ்சாயத்துகளில் நூறு நாள் வேலைத்திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது வரை தமிழ்நாட்டில் சுமார் 85 லட்சம் தொழிலாளர்கள் நூறு நாள் வேலைத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பிற மாநிலங்களில் இல்லாத அளவுக்கு அதிகளவில் பெண்கள் (சுமார் 82% தொழிலாளர்கள்) பணிபுரிவது தமிழ்நாட்டில் மட்டுமே. கிட்டத்தட்ட 56% தொழிலாளர்கள் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள். இவ்வாறு அதிகளவில் எளிய மக்கள் பயன்படுத்தும் ஒரு திட்டத்தை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரத் துடிக்கும் பாஜக, புதிய மசோதாவை அறிமுகப்படுத்துவதோடு இதற்கு முன்னர் திட்டத்தின் பெயரில் இருந்த ‘காந்தி’ என்ற சொல்லையும் நீக்கி இருக்கின்றது. அதற்கு பதிலாக வாயில் நுழையாத சம்ஸ்கிருத பெயர்களை திணித்திருக்கிறது.

மத்தியில் பாஜக அரசு தலைமையேற்றது முதல் நூறு நாள் வேலைத்திட்டத்தில் செயல்முறை சிக்கல்கள் ஏற்படுத்துவது, மாநிலங்களுக்கு நிதி வழங்குவதில் தாமதம் ஏற்படுத்துவது எனப் பல குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. இந்தத் திட்டத்தில் பணிபுரியும் விவசாயிகளையும் எளிய தொழிலாளர்களையும் ஆதார் எண்ணை கொடுக்க சொல்லிக் கட்டாயப்படுத்தியது ஒன்றிய அரசு. ஆதார்- வங்கி கணக்கு குளறுபடிகளால் தொழிலாளர்கள் ஊதியம் பெறுவதில் தாமதம் ஏற்பட்டது. பல கிராமத் தொழிலாளர்கள் நூறு நாட்கள் பணி கிடைக்காமல் அவதி உற்றனர். இத்தனை குளறுபடிகளுக்குப் பிறகும் மாநில அரசுகளின் மேல் நிதிச் சுமையை சுமத்துகிறது ஒன்றிய பாஜக அரசு.

2009-10 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட ரூ.40,000  கோடி ஒதுக்கப்பட்ட இந்த திட்டத்திற்கு 2014-15 ஆம் ஆண்டில், மோடி அரசு ரூ.34,000 கோடி என குறைந்த அளவில் நிதி ஒதுக்கீடு செய்தது. மேலும் நூறு நாள் திட்டம் என்பது ‘குழிகளைத் தோண்டும் பணி’ என்று அப்போது பகடி பேசினார் பிரதமர் மோடி. ஒரு நாட்டின் பிரதமர் பொறுப்பில் இருந்துகொண்டு விவசாய மக்களை இழிவுபடுத்தும் வகையில் அன்று பேசினார். அன்று அவர் கேலி செய்த திட்டத்திற்குத்தான் இன்றும் மாநிலங்களுக்கு ரூ.9,700 கோடியை வழங்காமல் தாமதப்படுத்திக் கொண்டிருக்கின்றது பாஜக அரசு.

பாஜக அரசு கொண்டு வந்திருக்கும் புதிய திட்டத்தின் மூலம் 125 நாட்கள் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் என்று கூறுகிறது. ஆனால் இதற்கு முன் நடைபெற்ற ஆய்வுகள், அனைத்து மாநிலங்களில் சராசரியாக 50 நாட்கள் மட்டுமே வேலைகள் நடைபெறுவதாக கூறுகின்றன. நடப்பு நிதியாண்டிலும் ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீட்டைத் தாமதப்படுத்தியதால் தமிழ்நாட்டில் ஐந்து மாதங்களுக்கு ஊதியம் இல்லாமல் தொழிலாளர்கள் இன்னலுற்றனர். பல முறை மாநில அரசுகள் போராடியே தங்கள் நிதி பங்கீடைப் பெரும் சூழல் இருக்கின்றது. இத்தகைய சூழலில்தான் ஒன்றியத்திற்கு அதிக அதிகாரத்தை வழங்கும் வகையில் வரைவு மசோதாவைக் கொண்டு வந்திருக்கிறது பாஜக அரசு. இனி இந்த திட்டம் செயல்படுத்தப்படும் கிராமப்புறங்களை ஒன்றிய அரசாங்கம் மட்டுமே அறிவிக்கும். மாநில அரசு 40% செலவினங்களை ஏற்றாலும் ஒன்றியத்திற்கே அதிகார குவிப்பு செல்லும் வகையில் மசோதாவை  முன்மொழிந்திருக்கிறது பாஜக அரசு.

கடந்த மாதம் கோவை இயற்கை வேளாண்மை கூட்டமைப்பில் பேசிய மோடி, மறுநாளே தமிழ்நாட்டு விவசாயிகள் நெல்கொள்முதல் செய்வதற்கு அதன் ஈரப்பரத அளவை 17%-லிருந்து 22% ஆக உயர்த்த கோரிக்கையை நிரகரித்தது. ஆக தமிழ்நாட்டின் நிதி பயன்பாடு, மக்கள் தொகை போன்ற காரணங்கள் எல்லாம் தெரிந்தும் வட மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கிக் கொண்டிருந்தது பாஜக அரசு. இப்போது புதிய சட்டங்கள் மூலம் தமிழ்நாட்டை வஞ்சிப்பதை தொடர்கிறது. நூறு நாள் வேலைத்திட்டத்தில் தொழிலாளர்கள் எழுப்பிய கோரிக்கைகள் பலவற்றையும் புறக்கணித்த நிலையில், இப்போது மாநிலங்கள் மீதான அதிகாரப் போரைத்  தீவிரப்படுத்தி இருக்கின்றது பாஜக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »