பத்தாண்டுகால மோடியின் ஆட்சியில் மக்கள் அனுபவித்தது, பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, நீட் போன்ற வரலாற்றில் இல்லாத அளவுக்கான பேரழிவுகளை மட்டுமே. தற்போது மூன்றாவது முறையாக பதவி ஏற்றுள்ள இந்துத்துவ மோடி அரசு, செய்துள்ள முதல் பேரழிவு, புதிய குற்றவியல் சட்டங்கள் மூன்றையும் ஜூலை 1,2024 முதல் நடைமுறைப்படுத்தியது. ஏன்னெனில் இந்த மூன்று சட்டங்களும் இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரையும் நேரடியாக பாதிக்கக்கூடியது.
குற்றவியல் சார்ந்த ஆங்கிலேய காலனித்துவ சட்டங்களை நீக்குவதற்காகவே இந்த 3 சட்டங்களையும் கொண்டு வந்ததாக பாஜக சொல்கிறது. இதில் துளி அளவும் உண்மை இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். இந்த சட்டங்களில் உள்ள சில முக்கியமான பிரச்சனைகளை சற்று விரிவாக இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
1) காலனித்துவ சட்டங்கள் நீக்கம் எனும் பொய்:
இந்திய தண்டனைச் சட்டத்தை (Indian Penal Code-IPC, 1860) முழுவதுமாக மாற்றி பாரதிய நியாய சன்ஹிதா (BNS) என்ற பெயரில் புதிய சட்டத்தை மோடி அரசு அமல்படுத்தியுள்ளது. இது எத்தகைய குற்றங்களுக்கு என்னென்ன தண்டனைகள் வழங்க வேண்டும் என்பதற்கான சட்டம். பழைய இந்திய தண்டனைச் சட்டம் (IPC) மொத்தம் 511 பிரிவுகளைக் கொண்டது. அதிலிருந்து 24 பிரிவுகள் நீக்கப்பட்டு 23 புதிய பிரிவுகளைச் சேர்த்து, பாரதிய நியாய சன்ஹிதா உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் அவற்றில் தற்போதுள்ள சட்டங்களின் காலனித்துவக் கூறுகளை அப்படியே தக்கவைத்துள்ளது. பெரும்பாலான குற்றங்களுக்கான தண்டனைகளில் எந்த மாற்றமும் செய்யவில்லை. அது மட்டுமல்லாமல், சில குற்றங்களுக்கான தண்டனைகள் ஆங்கிலேய ஆட்சியைவிட கடுமையாக்கப்பட்டுள்ளன. அதாவது காலனித்துவ சட்டத்தை விட கொடுமையான சட்டங்களை இந்துத்துவ பாஜக அரசு உருவாக்கியுள்ளது. ஆனால் பாராளுமன்றத்தில் பேசிய அமித்ஷா இதற்கு நேர்மாறாக “புதிய சட்டங்களின் நோக்கம் ஆங்கிலேய சட்டங்களைப் போல வெறும் தண்டனையைப் பெற்று தருவது அல்ல; நீதியை பெற்று தருவது” என்று வாய் கூசாமல் புளுகினார்.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்திற்கு (Code of Criminal Procedure, CrPC, 1973) பதிலாக பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) என்ற பெயரில் புதிய சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இது குற்றங்களை விசாரிப்பதற்கான செயல்முறைகளை விளக்கும் சட்டம். 37 அத்தியாயங்களைக் கொண்ட பழைய CrPC, 39 அத்தியாயங்களுடன் BNSS பெயரில் புதிய சட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. பழைய சட்டத்திலிருந்து 95 சதவீத பிரிவுகள் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே புதிய சட்டத்தில் பின்பற்றப்பட்டுள்ளன. சுருக்கமாக சொன்னால் ஏற்கனவே இருந்த சட்டங்களை இந்தியில் பெயர் மாற்றம் செய்து இன்னும் கடுமையாக மாற்றியிருக்கிறது.
குற்றவியல் செயல்முறை சட்டத்தில் (CrPC) உள்ள காலனித்துவ நடைமுறைகளை நீக்குவதற்காக 1961 முதல் 1973 வரை 6 சட்ட ஆணையங்கள் அமைக்கப்பட்டு, அவற்றின் அறிக்கைகளின் அடிப்படையில் சட்ட திருத்தங்கள் ஏற்கனவே செய்யப்பட்டுவிட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.
2) பழைய மற்றும் புதிய குற்றவியல் சட்டங்கள் நடைமுறையில் இருப்பதால் எழும் சிக்கல்கள்:
ஜூலை 1 முதல் புதிய குற்றவியல் சட்டங்கள் மூன்றும் (BNS, BNSS & BSA) நடைமுறைக்கு வந்தது. ஜூலை 01க்குப் பிறகு பதிவு செய்யப்படும் வழக்குகள் அனைத்தும் புதிய குற்றவியல் சட்டங்கள் மூலம் (BNS, BNSS) நிர்வகிக்கப்படும். அதேபோல ஜூலை ஒன்றுக்கு முன் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் பழைய குற்றவியல் சட்டங்கள் (IPC, CrPC) அடிப்படையில் நிர்வகிக்கப்படும். இந்த வழக்குகள் அனைத்தும் முடிக்கப்பட்டால் மட்டுமே பழைய குற்றவியல் சட்டங்கள் முழுமையாக நீக்கப்படும். இதற்கு குறைந்தபட்சம் 20 ஆண்டுகளாவது ஆகும் என உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ’இந்திரா ஜெய்சிங்’ கூறுகிறார்.
இரண்டு வகை சட்டங்களும் நீடிப்பதால் நீதித்துறையில் பல குழப்பங்களை விளைவிக்கும். புதிய சட்டத்தில் (BNS) உள்ள தண்டனைகளை பழைய வழக்குகளுக்கு பயன்படுத்த முடியாது. ஆனால் BNSSஇல் உள்ள விசாரணை செயல்முறைகளை பழைய வழக்குகளுக்கு பயன்படுத்த முடியும். இதனால் ஒரு வழக்குக்கு எந்த சட்டத்தை பயன்படுத்துவது என்று ஒரு குழப்பம் வரக்கூடும் என்பது இந்திரா ஜெய் சிங்கின் வாதம். இதனை கடிதம் மூலமாக ஒன்றிய சட்ட அமைச்சருக்கு தெரிவித்த இந்திரா ஜெய்சிங், ஏற்கனவே இந்திய நீதிமன்றங்களில் லட்சக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் இது இன்னும் பல மடங்கு பெருகும் எனவும் அச்சம் தெரிவித்துள்ளார். “இந்த சட்டங்கள் நிறைவேற்றப்பட்டபோது, குற்றவியல் வழக்குகளில் உள்ள தாமதங்கள் குறைக்கப்படும் என்று சொல்லப்பட்டாலும், ஆழமாக பார்க்கும் பொழுது நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையை 10 மடங்கு அதிகரிக்கும் வகையில் தான் உள்ளது” என்று கூறுகிறார், வழக்கறிஞர் ’நிபுன் சக்சேனா’.
3) தேசத்துரோகம் (Sedition) எனும் கருப்புச் சட்டம்:
சென்ற டிசம்பர் 2023-ல், இந்த 3 சட்ட மசோதாக்களைப் பாராளுமன்றத்தில் கொண்டு வந்தபோது உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசத்துரோக சட்டத்தை (IPC, 124A) நீக்கிவிட்டதாக பெருமைப்பட்டுக் கொண்டார். ஆனால் அதைவிட கொடுங்கோண்மையான சட்டத்தை பாஜக அரசு கொண்டு வந்துள்ளது. புதிய தண்டனைச் சட்டம் BNS பிரிவு 152ல் ‘இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு ஆபத்தை விளைவிக்கும் செயலை’ குற்றமாக குறிப்பிடுகிறது.
பழைய சட்டத்தில் ‘இறையாண்மை’ (sovereignity) மற்றும் ‘ஒருமைப்பாடு’ (integrity) போன்ற வார்த்தைகள் இல்லை. புதிய சட்டத்தில் இவற்றை சேர்த்ததின் மூலம் சாதாரண போராட்டத்தைக் கூட இந்திய இறையாண்மைக்கும், இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கும் எதிரானதாக சித்தரித்து சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். மோடி அரசின் மக்கள் விரோத திட்டங்களைக் கேள்வி கேட்டு அமைதி வழியில் போராடுபவர்களைக் கூட ‘தேசத்துரோகிகள்’ என முத்திரைகுத்தி அவதூறு பரப்புவது இந்துத்துவ சங்கிகளின் வழக்கம். இதனை மோடி அரசு தற்போது சட்டப்பூர்வமாக ஆக்கியுள்ளது.
மேலும் பழைய சட்டத்தில் மூன்று ஆண்டுகளாக இருந்த தண்டனையை புதிய சட்டத்தில் 7 ஆண்டுகளாக ஆக்கி, அதற்கும் மேல் அபராதம் விதிக்கக்கூடிய வகையில் மாற்றியுள்ளது.
4) முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்வது கட்டாயம் அல்ல:
குற்றவியல் செயல்முறை சட்டம் (BNSS) பிரிவு 173(3)இன் படி 3 முதல் 7 ஆண்டு தண்டனை உள்ள குற்றங்களுக்கு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதை முடிவு காவல் நிலைய அதிகாரியே (Station House Officer) முடிவு செய்து கொள்ளலாம். இது ஏற்கனவே லஞ்சம் மலிந்த காவல்துறையில், அதிகாரிகள் சட்டத்தை தங்களுக்கு சாதகமாக்கி மேலும் ஊழல் செய்வதற்கு தான் வழிவகுக்கும்.
2014ஆம் ஆண்டு வரை காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது, கட்டாயம் அல்ல எனும் நிலை தான் இருந்தது. இதனால் காவல்துறை அதிகாரிகள் லஞ்சம் பெறுவதும், அரசியல் அழுத்தங்களுக்கு ஏற்ப வழக்கு பதிவு செய்வதுமாக இருந்தது. 2014இல் லலிதா குமாரி என்பவரின் உத்தரப்பிரதேச அரசுக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம், பிணையில் வெளிவர முடியாத கடுமையான குற்றங்களுக்கு (கொலை, வன்புணர்வு போன்றவை) வழக்கு பதிவு செய்வதை காவல்துறை மறுக்கமுடியாது என்று கூறியது. மேலும், இதனை மீறும் காவல்துறை அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தீர்ப்பு கூறியது.
இதனை முற்றிலும் நிராகரிக்கும் வகையில் மோடி அரசு, ‘மூன்று முதல் ஏழாண்டுகள் வரை தண்டனை உள்ள குற்றங்களுக்கு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதையும் அல்லது முன் விசாரணை செய்வதையும் காவல் நிலைய அதிகாரியே தீர்மானிக்கலாம்‘ என்று புதிய சட்டத்தில் மாற்றி உள்ளது. இது உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் உறுதி செய்யப்பட்ட வழிமுறைகளுக்கு முரணாக உள்ளது. இதன் மூலம் காவல்துறை லஞ்சம் பெறுவதையும், அரசியல் அழுத்தங்களுக்கு ஆட்படுவதையும் சட்டப்பூர்வமாக உறுதி செய்யப்படுகிறது.
காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்ய மறுக்கும் பட்சத்தில் பழைய CrPC 154(3)இன்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் (SP) மனு கொடுத்து, வழக்கு பதிவு செய்ய வைக்க முடியும். அவரும் நடவடிக்கை எடுக்க தவறினால், பிரிவு 156(3) & 200இன் படி மாவட்ட நீதிபதியை (Magistrate) அணுகலாம். மேலும் பிரிவு 226 & 482 இன்படி விசாரணையை நீதிமன்றத்தில் கோர முடியும். இவற்றை முற்றிலும் மாற்றி சாமானிய மக்களுக்கு எதிரானதாக மாற்றியுள்ளது, மோடி அரசு. குறிப்பாக பெண்கள், தலித்துகள், இசுலாமியர்கள் பாதிக்கப்படும் போது தங்கள் தரப்பிலிருந்து காவல்துறையை வழக்கு பதிவு செய்ய வைக்கவே போராடும் நிலை தான் இன்றுள்ளது.
உதாரணமாக, ஒரு பெண் அமில தாக்குதலுக்கு உட்படுகிறார் என்று வைத்துக் கொள்வோம். இந்த குற்றத்திற்கு 5லிருந்து 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க முடியும் (BNS, 124(2)). பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையம் சென்றால், வழக்குப்பதிவு செய்வதா, வேண்டாமா அல்லது முன் விசாரணை தேவையா என்பதை காவல் அதிகாரி தான் தீர்மானிக்க வேண்டும் என்று ஒரு நிலையைக் கொண்டு வந்திருக்கிறார் மோடி.
இதுபோல 88 குற்றங்களுக்கு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதை தீர்மானிக்கும் அதிகாரத்தை காவல்துறையிடம் கொடுத்திருக்கிறது இந்த புதிய சட்டம் என்பது எப்பேர்ப்பட்ட ஆபத்து.
5) தன்னிச்சையான தடுப்புக்காவல் (Arbitrary detention):
பழைய குற்றவியல் செயல்முறை சட்டப்பிரிவு CrPC 167(2)இன் படி குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டவரை அதிகபட்சம் 15 நாட்களுக்கு மட்டுமே போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க முடியும். அதன் பிறகு கட்டாயமாக நீதிமன்ற காவலுக்கு மாற்றப்பட வேண்டும்.
கைதுசெய்த 90நாட்களுக்குள் காவல்துறை விசாரணையை முடித்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். அப்படி செய்ய தவறும்பட்சத்தில், குற்றம் சாட்டப்பட்டவர் இயல்பாக பிணையில் வெளிவர வழி இருந்தது.
புதிய குற்றவியல் செயல்முறை சட்டப்பிரிவு 187(3)இன் படி குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டப்பின் போலீஸ் காவலில் 15 நாட்களுக்கு மேலும் வைத்துக்கொண்டு விசாரிக்க முடியும். இதனை நேரடியாக சொல்லாமல் 15 நாட்களுக்கு மேல் குற்றவாளியை போலீஸ் காவலில் வைக்கக் கூடாது என்று பழைய சட்டத்தில் இருந்ததை நீக்கியுள்ளது. இதனால், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் வரை காவல்துறையின் கட்டுப்பாட்டில் குற்றவாளியை அடைத்து வைக்கலாம். 7 ஆண்டுகள் வரை தண்டனை உள்ள குற்றங்களுக்கு 60நாட்களுக்குள்ளும், அதற்கு மேல் தண்டனை உள்ள குற்றங்களுக்கு 90நாட்களுக்குள்ளும் காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். இதன் மூலம் காவல்துறை குற்றம் சுமத்தப்பட்டவரை துன்புறுத்தவும், தடுப்புக் காவலில் நீண்ட நாட்கள் அடைத்து வைக்கவும் வழிவகுக்கிறது.
மோடி அரசின் இந்த முடிவு அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரானது. குடிமக்களின் அடிப்படை உரிமைகளை வலியுறுத்தும் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 21 மற்றும் 22க்கு எதிரானது இது. கொடுங்கோன்மையான UAPA சட்டத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டால் கூட 30 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலில் குற்றவாளியை வைக்க முடியாது. அதிலும் கூட 15 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலில் விசாரிக்க வேண்டுமென்றால் துணைக் காவல் கண்காணிப்பாளர் (DSP) நேரடியாக நீதிமன்றத்தில் முறையாக அனுமதி பெற வேண்டும். அரசியல் செயல்பாட்டாளர்கள், எதிர்க்கட்சியினரை ஏதோவொரு சாதாரண பொய் வழக்கு பதிவு செய்து, காவல்துறை நீண்ட நாட்கள் துன்புறுத்தவே இதனை இந்துத்துவ பாஜக அரசு கொண்டு வந்துள்ளது.
6) எண் மயமாக்கல் (digitalization):
2027ஆம் ஆண்டுக்குள் வழக்குப்பதிவு செய்வது முதல் நீதிமன்ற தீர்ப்பு வரை குற்றவியல் சார்ந்த காவல்துறை மற்றும் நீதித்துறை செயல்பாடுகள் அனைத்தையும் முழுமையாக டிஜிட்டல்மயமாக்கல் செய்து விடுவோம் என பாராளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
தொழில்நுட்பம் மற்றும் இணையதளத்தைப் பயன்படுத்தத் தெரியாத பெரும்பான்மை சாதாரண மக்களுக்கு எதிரான பாரபட்சமான நடவடிக்கை தான் இது. சமூகத்தின் விளிம்பு நிலையில் இருக்கும் மக்களுக்கு இது பெரும் பாதகமாக அமையும். ஏனெனில் அவர்கள் மீதுதான் காவல்துறை ஒடுக்குமுறையும் வழக்குகளும் இந்தியாவில் அதிகம் பதியப்படுகிறது. 100% இணையத் தொடர்பு என்பதே வெகு தூரத்து கனவாக இருக்கும் இந்தியாவில் இது போன்ற செயல்பாடு மிகப்பெரிய குழப்பங்களையே உருவாக்கும்.
7) தடயவியல் தரவுகளை முழுமையாக நம்புவது:
ஒவ்வொரு குற்றம் நடந்த இடத்தையும் தடயவியல் குழு (Forensic Team) கட்டாயமாகப் பார்வையிட வேண்டும் என அமித்ஷா வலியுறுத்தியுள்ளார். தடயவியல் ஆதாரங்களை விரைவாக சேகரிக்கும் வகையில், நாட்டில் உள்ள அனைத்து 850 காவல் மாவட்டங்களிலும் நிறுத்துவதற்காக சுமார் 900 தடயவியல் வாகனங்களை வாங்கும் நடவடிக்கையில் ஒன்றிய அரசு ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் சிலர் தெரிவிக்கின்றனர்.
குற்ற வழக்கு விசாரணைகளில் தடயவியல் தரவுகளை ஊக்குவிப்பது, அதனை பெரிதாக நம்புவது தவறாக வழிநடத்தும் என சட்ட வல்லுனர் அபிநவ் சீக்ரி குற்றம் சாட்டுகிறார். உலகஅளவில் கைரேகை ஆய்வினை அறிவியல் ஆய்வாளர்கள் கேள்விக்கு உட்படுத்துகின்றனர். ஒரு நபரின் உள்ளுணா்வு சார்ந்த ஊகத்தின் அடிப்படையில் தான் தடயவியல் தரவுகள் குற்ற வழக்கில் ஆதாரமாக விளக்கப்படுகிறது. எனவே அந்தந்த நபரைப் பொறுத்து, அத்தகைய விளக்கங்கள் மாறுபட வாய்ப்புண்டு.
8. கைவிலங்கு:
ஆங்கிலேய ஆட்சியில்கூட குற்றம் சாட்டப்பட்டவரை காவல்துறை கைவிலங்கிடுவது சட்டபூர்வமாக இல்லை. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் (CrPC) கைவிலங்கிட எந்த விதிகளும் இல்லை. ஆனால், 1980கள் வரையில் காவல்துறை சிறைத்துறை விதிமுறைகளில் கைவிலங்கிடுவதற்கு வரைமுறைகள் வகுக்கப்பட்ட பின்பற்றப்பட்டு வந்தன. காவல்துறை குற்றம் சுமத்தப்பட்டவரைக்கூட கைவிலங்கிட்டு மக்கள் முன் ஊர்வலமாக அழைத்து செல்லப்படுவது வெகு சாதாரணமான நடைமுறையாக இருந்து வந்தது. இதனைக் கடுமையாக சாடிய உச்சநீதிமன்ற நீதிபதி காலஞ்சென்ற கிருஷ்ண ஐயர், “கைது செய்யப்படும்போது கைவிலங்கைப் பயன்படுத்துவது அரசியலமைப்புச்சட்டத்திற்கு எதிரானது என்றும், தனிமனித சுதந்திரத்திற்கும் ஒரு மனிதனின் கண்ணியத்தை கெடுப்பதுமாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டு 1980இல் இந்த நடைமுறைகளை நீக்குவதாக தீர்ப்பு வழங்கினார். ஒரு தனிமனிதன் குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டாலும் அவர் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும் அவருக்குரிய தனி மனித சுதந்திரம் கொடுக்கப்பட வேண்டும் இன்று பல நீதிமன்ற தீர்ப்புகள் உள்ளன.
இவற்றையெல்லாம் கொஞ்சம் கூட கருத்தில் கொள்ளாத மோடி அரசு, BNSS பிரிவு 43(3) இன்படி வழக்கமான குற்றவாளி (Habitual Offender), மீண்டும் குற்றம் செய்பவர்கள் (Repeat Offender) மீது கைவிலங்குகளைப் பயன்படுத்த அனுமதிக்கிறது. இதில் Habitual Offender என்பதற்கு சட்டபூர்வமாக விளக்கம் உள்ளன. அதாவது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வழக்குகளில் தண்டனை பெற்றவர் என்பதை அதன் பொருள். ஆனால் Repeat Offender என்பது சட்ட நடைமுறைகளில் புதிய சொல்லாடல். இதன் மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்ட, குற்றம் நிரூபிக்கப்படாத நபரைக் கூட கை விலங்கிட்டு கைது செய்ய முடியும்.
மேலும் இந்த பிரிவில் அரசுக்கு எதிரான குற்றங்கள் என்று இந்திய இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு ஆபத்தை விளைவிப்பவர்களையும் கைவிலங்கிட அனுமதிக்கிறது. இதன் மூலம் அரசின் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்துப் போராடும் சாமானிய மக்கள் மற்றும் செயல்பாட்டாளர்களை அவமானப்படுத்துவதை இந்துத்துவ பாஜக அரசு நோக்கமாகக் கொண்டிருப்பதை உணர முடியும்.
“எந்தவொரு நபரையும் விலங்குகளைப் போல சங்கிலியால் பிணைத்து பொதுவெளியில் கொண்டு செல்வது என்பது தனிமனித சுதந்திரத்தைப் பறிப்பது மட்டுமல்லாமல் ஒரு மனிதனின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகும்” என்று மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் மனித உரிமைச் செயற்பாட்டாளர் வழக்கறிஞர் ஹென்றி திஃப்பேன் அவர்கள், கைவிலங்கிடும் சட்டப்பிரிவைக் கடுமையாக கண்டிக்கிறார். மேலும், “இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தால் அதுவே முதலில் சட்டவிரோதமானது. இந்தச் சட்டத்தின் மூலம் சட்டப்பூர்வமாக வழங்கப்படும் நீதிமன்ற தீர்ப்புகளுக்கு முன்னரே புறவாசல் வழியாக குற்றம் சாட்டப்பட்டவரை தண்டிப்பதற்கு அரசு முயற்சிக்கிறது” என்று மோடி அரசை கண்டிக்கிறார்.
பரந்த நோக்கில் பார்க்கும்போது, நீதிமன்ற வழக்கின் காலதாமதத்தைக் குறைப்பதற்கு என்று சொல்லிக்கொண்டு, காவல்துறைக்கு பெரும் அதிகாரங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்திய ஒன்றியத்தை காவல்துறையின் கட்டுப்பாட்டில் (Police State) இயங்கும் நாடாக மாற்றுவதையே முக்கிய நோக்கமாக கொண்டு மோடி அரசு இந்த சட்டங்களைக் கொண்டு வந்துள்ளது. தாமஸ் பாபிங்டன் மெக்காலே என்கிற ஆங்கிலேயர் 1830 முதல் 1860வரை சுமார் 30 ஆண்டுகள் விரிவாக ஆய்வு செய்து IPC மற்றும் CrPC சட்டங்களை இயற்றினார். அவர் கூட காவல்துறைக்கு இவ்வளவு அதிகமான அதிகாரம் வழங்க வேண்டும் என்ற நோக்கில் செயல்படவில்லை. ஆகவே ஆங்கிலேய அரசைவிட மிக மோசமான அரசு மோடி அரசு. மெக்காலேவின் குழந்தையான குற்றவியல் சட்டங்களை நீக்கிவிட்டோம் என்று பாஜக தலைவர்கள் தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள். ஆனால், இந்த புதிய குற்றவியல் சட்டங்கள், பழைய சட்டங்களில் ஒரு சில மாற்றங்கள் மட்டும் செய்து சமஸ்கிருத பெயர் வைக்கப்பட்ட மெக்காலேவின் ‘தத்தெடுக்கப்பட்ட பிள்ளை’ என்ற வேண்டுமானால் கூறலாம்.
புதிய குற்றவியல் சட்டங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதன் பின்னணியையும், அவற்றில் உள்ள உள்ள குளறுபடிகளைப் பற்றியும் விரிவான கட்டுரை இதே தளத்தில் வெளியாகியுள்ளது.