கடந்த சில ஆண்டுகளாகவே வடசென்னையின் நிலம், காற்று, நீர் அனைத்தையும் மாசுபடுத்தியது எண்ணூர் அனல் மின் நிலையம். இப்போது அந்நிலையத்தை மேலும் விரிவாக்குவதன் மூலம் வடசென்னை மக்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் குலைக்க நினைக்கிறது தமிழ்நாடு மின்துறை. வடசென்னை மக்களை மூச்சுத் திணற வைக்கும் வகையில் காற்று மாசுபாட்டை உருவாக்கி விட்டு, இப்போது அதை மேலும் அதிகரிக்கும் வகையில் விரிவாக்கப் பணிகளைத் திட்டமிட்டுள்ளது.
மக்கள் அடர்த்தியாக வாழும் நகர எல்லைக்குள் அனல் மின் உற்பத்தி நிலையங்களைக் கொண்ட ஒரு சில இந்திய நகரங்களில் சென்னையும் ஒன்றாகும். குறிப்பாக எண்ணூர் கழிமுகத்துவாரத்தின் அருகில், பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாக்கும் ஈர நிலப் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசின் அனல் மின் உற்பத்தி நிலையம் வடசென்னை மக்கள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் கொள்ளையடிக்கிறது என்றே கூறலாம்.
பெரிய சதுப்புநில காடுகளும், கொசஸ்தலை ஆறும், வங்காள விரிகுடாவும் சூழ்ந்துள்ள எண்ணூர் பகுதி நிலம் முன்பு விவசாயம் செய்யுமளவிற்கு செழிப்பாக இருந்தது. ஆனால் 1960களில், அரசு இந்தப் பகுதியை பெட்ரோகெமிக்கல் மற்றும் நிலக்கரி சார்ந்த தொழிற்சாலைகள் கட்டப்படும் மண்டலமாக வரையறை செய்தது. தற்போது வடசென்னையில் அனல் மின் நிலையம் முதல் அதானி துறைமுகம் வரை இப்பகுதியின் வளங்களை கூறுபோட்டுள்ளன.
குறிப்பாக 1970 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட எண்ணூர் அனல் மின் நிலையத்தின் கழிவு நீரால் முதலில் கொசஸ்தலையாற்றின் நீர் மாசடைந்தது. தொடர்ந்து மீன்பிடிப் பகுதிகளில் மீன் வளமும் பாதிக்கப்பட்டது. நிலக்கரியை எரிப்பதன் மூலம் உருவான சாம்பல் தூசி (Fly Ash) இரசாயனங்களை காற்றில் பரப்பி அதை நஞ்சாக்கியது.
எண்ணூர் பகுதியில் ஏற்கனவே 36 சிவப்பு பட்டியல் பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலைகள் உள்ளன. மேலும் ஆண்டு ஒன்றுக்கு 10 மில்லியன் டன் எண்ணெய்யை சுத்திகரிப்பு செய்யும் நிலையங்களும் உள்ளன. இத்தனை தொழிற்சாலைகளும் வெளியிடும் நச்சுப்பொருட்கள் கருவிலிருக்கும் குழந்தையைக் கூட பாதிக்கும் வீரியம் படைத்தவை என்று சூழலியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பொதுவாகவே நிலக்கரி உமிழ்வில் நிறைந்திருக்கும் துகள் பொருள் (particulate matter), சல்பர் டை ஆக்சைடு (SO2), நைட்ரஜன் ஆக்சைடு (NOx) மற்றும் கன உலோகங்கள் மக்களுக்கு பெரும் உடல்நலக் கோளாறுகளை உருவாக்குபவை. இத்தகைய மாசுபாட்டினால் எண்ணூர் பகுதியில் உள்ள குழந்தைகள் தங்கள் வாழ்நாளில் புற்றுநோயால் பாதிக்கப்படுவதற்கான ஆபத்தை 4000 மடங்கு அதிகமாக எதிர்கொள்வதாக ’Save Ennore Creek Campaign’ கூறுகிறது.
மேலும் நுரையீரல் நோய்கள், இதய நோய்கள், புற்று நோய் போன்றவற்றால் இங்குள்ள மக்கள் பாதிக்கப்படும் சூழலும் இருக்கிறது. இந்த சாம்பல் தூசி நிறைந்த பகுதிகளில் வளரும் குழந்தைகள் தங்கள் கால்களில் நோய்த்தொற்று ஏற்பட்டு கடும் உடல் சீர்கேட்டிற்கு ஆளாகின்றனர்.
இந்த அனல் மின் நிலையத்தால் ஏற்படும் மாசுபாடுகளோடு எண்ணெய்க் கசிவுகளும் வட சென்னை மக்களை துன்பத்திற்கு உள்ளாகியிருக்கிறது. கடந்த ஆண்டு மிக்ஜாம் புயலின் போது, சென்னை பெட்ரோலிய கார்ப்பரேஷன் லிமிடெட் (சிபிசிஎல்) நிறுவனம் பக்கிங்ஹாம் கால்வாயில் கொட்டிய எண்ணெயால் பாதிக்கப்பட்டது வடசென்னை மக்களே. பக்கிங்ஹாம் கால்வாயில் சிந்திய எண்ணெய் கொசஸ்தலையாறு வழியாக எண்ணூர் கழிமுகத்தை வந்தடைந்து, அங்குள்ள மக்களின் வீடுகளுக்குள் நுழைந்தது. மீன்வளத்தையும் சேதப்படுத்தியது. ஆனால் தற்போது வரை எண்ணெய் கசிவுகளை வாளியில் அள்ளுவதைத் தவிர எந்தத் தீர்வும் இந்த மக்களுக்கு வழங்கப்படவில்லை.
இந்தப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் சீர்கேடுகளை உறுதி செய்யும் வகையில் சில ஆய்வுகள் நடத்தப்பட்டிருக்கின்றன. 2022ஆம் ஆண்டில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தால் அமைக்கப்பட்ட ஒரு கூட்டு நிபுணர் குழு, எண்ணூர் மின்நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் மோசமான சுற்றுச்சூழல் நிலையில் இருப்பதை சுட்டிக் காட்டி இருக்கிறது. மேலும் எண்ணூர் அனல் மின் நிலையத்தின் உமிழ்வுகள் பி.எம் 10ஐ (particulate matter-10) அளவுகோலை ஏற்கனவே தாண்டியுள்ளதாகவும் கூறியது.
ஒவ்வொரு பருவ மழைக்காலத்தின் போதும் சென்னையில் ஏற்படும் வெள்ளத்திற்கு காலநிலை மாற்றத்தோடு, நீரோட்டத்தைத் தடுக்கும் கட்டமைப்புகளும் காரணமாகி இருக்கின்றன. ஏற்கனவே, எண்ணூர் பகுதியில் 1500 ஏக்கருக்கும் மேலான ஈரநிலங்களில் பெட்ரோலிய நிறுவனங்களும் அனல் மின் நிலையமும் கட்டப்பட்ட சூழ்நிலையில், கொசஸ்தலையாற்றின் நீரோட்டத்தையும் நிலக்கரி சாம்பல் பாதிக்கிறது. கொசஸ்தலையாற்றின் முகத்துவாரத்தை முடக்கி இந்தப் பகுதியில் வெள்ளம் வடியா வண்ணம் இருக்கும் ஆக்கிரமிப்புகளுள் எண்ணூர் அனல் மின் நிலையத்தின் கட்டமைப்பும் ஒன்று. அனல் மின் நிலையத்தின் சாம்பல் குழாய் வெளியேறுவதற்கான கட்டுமானத்திற்காக கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தின் (CRZ) கீழ் முறையான அனுமதி பெறவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இவ்வாறு பத்து லட்சத்திற்கும் மேலான உழைக்கும் மக்கள் வசிக்கும் வடசென்னை பகுதியில் ஏற்கனவே கடுமையான சூழலியல் சீர்கேடுகளை எண்ணூர் அனல் மின் நிலையம் ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் அங்கு ஏற்பட்டுள்ள சீர்கேடுகளுக்காக நாம் முறையிட்டுக் கொண்டிருக்கும்போது, இந்த அனல் மின் நிலையத்தை மேலும் விரிவாக்கம் செய்வதற்காக ஒரு திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.
தற்போது செயல்பட்டு வரும் 3330 மெகா வாட் அனல் மின் நிலையத்தின் சுற்றுச்சூழல் அனுமதி (EC) ஜூன் 2, 2019 அன்று காலாவதியானது. இதன் தொடர்ச்சியாக ஒன்றிய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம் (MoEF) 660 மெகாவாட் அனல் மின் திட்டத்திற்கான புதிய அனுமதியைப் பெற தமிழ்நாட்டின் TANGEDCO நிறுவனத்திற்கு அறிவுறுத்தியுள்ளது. இந்த விரிவாக்கத் திட்டத்திற்காக வரும் டிசம்பர் 20, 2024 அன்று கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
இப்பகுதியில் வாழும் பெரும்பான்மை மக்கள் மீனவர்களாகவோ; பழங்குடி மக்களாகவோ அல்லது பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்தவர்களாகவோ இருக்கின்றனர். இவர்களை பூர்வகுடி மக்கள் என்று அரவணைத்த வடசென்னை பகுதியை விட்டு செல்லாமல் இன்றும் அந்த சாம்பல் தூசியில் உழன்று கொண்டிருக்கிறார்கள். ஆனால் சென்னையின் மின்சாரத் தேவைக்காகவும் அதிகப்படியான நுகர்விற்காகவும் வடசென்னை பலியிடப்படுகிறது.
சென்னையின் மின்சாரத் தேவைக்காக இதுபோன்ற வளர்ச்சித் திட்டங்கள் தேவைதானே என்ற ஐயம் சிலருக்கு எழலாம். ஆனால் இன்று மாசுபாட்டைக் குறைக்கும் மாற்று வழிகளான சூரிய ஒளி மின்சார திட்டங்கள் மீது நாம் கவனம் செலுத்தினால், பல லட்சம் மக்கள் நிலக்கரியின் சாம்பலால் மூச்சுத் திணற நேராது. மேலும் சென்னையிலுள்ள மற்ற அனல் மின் நிலையங்களை முறையாக செயல்படுத்தினாலே சென்னைக்கான மின்சாரத் தேவையை நாம் பூர்த்தி செய்ய முடியும். குறிப்பாக எண்ணூருக்கு அருகிலேயே அத்திப்பட்டில் 800 மெகாவாட் திறன் கொண்ட சூப்பர் கிரிட்டிகல் (supercritical) அனல் மின் நிலையம் அதன் முழு திறனில் இயங்கினால் இந்த எண்ணூர் விரிவாக்கத் திட்டத்தை தவிர்க்கலாம்.
ஏனெனில் தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக, சூப்பர் கிரிட்டிகல் அனல் மின் நிலையம் 11% மட்டுமே உற்பத்தி செய்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார். ஆறு மாதங்களில் 6,000 மில்லியன் யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டிய சூப்பர் கிரிட்டிகல் அனல் மின் நிலையம் 680 மில்லியன் யூனிட் மட்டுமே உற்பத்தி செய்துள்ளது. இதேபோல தமிழ்நாட்டிலுள்ள மற்ற அனல் மின்நிலையங்கள் கடந்த ஆண்டு முழுதிறனை எட்டாமல் செயல்பட்டதாக தமிழ்நாடு எரி சக்தி துறையின் 2024-2025 அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. இந்த அனல் மின் நிலையங்களை முழுமையாக செயல்படுத்தி மக்களின் மின்சாரத் தேவையை நிறைவேற்றுவது மின்துறையின் கடமையாகப் பார்க்கப்படுகிறது.
தற்போது வடசென்னை மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்க்கும் இந்த ETPS விரிவாக்கத் திட்டத்தை எதிர்த்து எண்ணூர், திருவொற்றியூர் பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகளும் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தியுள்ளனர். “இதயத்தால் யோசிங்க ஸ்டாலின் மாமா, ETPS வேண்டாம்” என்று கூறும் இக்குழந்தைகளின் குரல் அரசின் காதுகளில் விழுமா?