
பாரதிதாசனின் 134-ம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு ஏப்ரல் 29 முதல் மே 5 வரையிலான ஒரு வாரத்தை தமிழ்வார விழாவாக கொண்டாட முடிவு செய்துள்ளதாக தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் அறிவித்துள்ளது. ‘இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’ என்று தமிழையே மூச்சென வாழ்ந்த பாரதிதாசனின் பிறந்தநாளை தமிழ்வார விழாவாக கொண்டாடும் இச்செய்தி தமிழ்ப்பற்று கொண்ட உலகத் தமிழ் மக்கள் அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
தமிழ் மொழியின் சொற்சுவையும் பொருட்சுவையும் குன்றாத நடையில் தேன் சொட்டும் கவிதைகளை தமிழினத்திற்கு அளித்தவர் பாரதிதாசன். அவர்,
“கேளீர் தமிழ் வரலாறு – கேட்கக்
கேட்க அது நமக்கு முக்கனிச் சாறு!” என்று தமிழின் வரலாற்று இனிமையையும் பாடுகிறார்.
“தமிழுக்கு வரும் இடையூறு – போகச்
சாவதும் உனக்குச் செங்கரும்பின் சாறு!” – என்று தமிழுக்காக சாவதும் இனிமை தானென்றும் எழுதுகிறார்.
“எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் நீங்காத தமிழ் என்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!” – முழங்கிய சங்க நாதத்தில் தமிழரின் ஒற்றுமையை வலியுறுத்தியவர்.
“வெங்குருதி தனிற் கமழ்ந்து வீரஞ் செய்கின்ற தமிழ் எங்கள் மூச்சாம்” எனத் தமிழருக்கு வீரத்தினை அளிக்கும் தமிழைப் போற்றிப் புகழ்ந்த பாரதிதாசன், பெரியாரின் பகுத்தறிவு, சமூக நீதி, சாதி ஒழிப்பு, மத மறுப்பு, பெண் உரிமை சிந்தனை, மூட நம்பிக்கை ஒழிப்பு போன்ற திராவிடக் கொள்கைகளுக்கு அழகிய தமிழ் இலக்கிய வடிவத்தைக் கொடுத்து தமிழ்த்தேசியக் கவியாக உயர்ந்து நிற்கிறார் பாரதிதாசன்.

இன்று சீமான் உள்ளிட்ட வலதுசாரி போலித் தமிழ் தேசியவாதிகள் தமிழை அழிக்க வந்தது திராவிடம் என்று கொதிக்கிறார்கள். ஆனால் திராவிடம் என்ற சொல்லே தமிழ் சொல் தான் என்பதை அழுத்தமாக சொல்கிறார் பாரதிதாசன். தமிழை அயலவர்கள் பேசும் போது ஒரு சொல் மாறுட்டு உச்சரிப்பது உண்டு. அதன்படியே திராவிடர் என்ற சொல் உருவானதன்றி, அது ஆரியச் சொல் அல்ல என்பதற்கு உதாரணங்களை அடுக்குகிறார். பாலி மொழியில் உள்ள மகாவம்சத்தில், தமிழை ‘தமிழோ’ என்று கூறுகிறார்கள். தாலமி என்றும் ஆசிரியர் ‘தமிரிசி’ என்றார். மச்சபுராணத்தில் ‘த்ரமிளர்’ என்று உள்ளது. தமிழின் ‘படி’ என்ற சொல் ‘பிரதி’ என்ற வட சொல்லாகியுள்ளது. இவையெல்லாம் தமிழின் திரிபுகள் தானே தவிர, செந்தமிழின் வேர்ச்சொல் பிரியவில்லை.
இதைப் போன்றே ‘தமிழம்’ என்ற சொல் ‘திராவிடம்’ என ஆரியர் வாயால் திரிந்ததே தவிர அது ஆரியச் சொல் அல்ல, திராவிடம் ஆரியச் சொல்லல்ல, இன்பத் தமிழின் திரிபேயாகும். திராவிடர் என்ற பெயர் திணித்து இடப்பட்டது என்று கூறுதல் ஏற்புடையதல்ல என்று தெளிவுபடுத்துகிறார். பாரதிதாசன் போன்ற பல தமிழ் அறிஞர்கள் ஆய்ந்து வெளிப்படுத்தினாலும், அவர்களின் புரட்சி வரிகளை மட்டும் தங்களின் உணர்ச்சி முழக்கத்திற்கு எடுத்துக் கொண்டு, அவர்கள் ஆய்வினை போலித் தமிழ்த்தேசியவாதிகள் நிராகரித்து விடுகிறார்கள். திராவிடர் எனும் ஆரிய எதிர்ப்பு சொல், இவர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறதென்றால், இவர்களை ஆரியக் கைகூலிகள் என்றே பார்க்க வேண்டியிருக்கிறது.
ஆரியம் தமிழின் வழியே புகுந்து தமிழரின் பண்பாட்டைப் பாழ்படுத்தியது. தமிழரின் பகுத்தறிவை முடக்கி கடவுள் என்ற பெயராலே ஆரியம் புகுத்திய பழமைவாத மூடத்தனங்களால் தமிழ் காயப்பட்டு கிடந்த போது, தனது வரிகளால் மருந்திட்டவர் பாரதிதாசன். பக்தித் தமிழை பகுத்தறிவாக்க அவர் கையாண்ட வரிகள் பலவுண்டு.
“பச்சை விளக்காகும் – உன்
பகுத்தறிவு தம்பி!
பச்சை விளக்காலே – நல்ல
பாதை பிடி தம்பி” – பகுத்தறிவே பாதையென ஆண் பிள்ளைகளுக்கு காட்டுகிறார்.
“மூடத்தனத்தின் முடைநாற்றம் வீசுகின்ற காடு
மணக்க வரும் கற்பூரப் பெட்டகமே
…
சாணிக்குப் பொட்டிட்டுச் சாமி
என்பார் செய்கைக்கு
நாணி உறங்கு நகைத்து நீ கண்ணுறங்கு”
– என மூடத்தனத்தை முளையிலேயே கிள்ளி எறியும் தாலாட்டுப் பாடலை பெண் குழந்தைகளுக்கு ஊட்டுகிறார்.
கடவுள் என்ற பெயராலே ஏமாற்றி பிழைக்கும் கயவர் கூட்டத்தை ஒழிக்க,
“நடவு செய்த தோழர் கூலி
நாலணாவை ஏற்பதும்
உடலுழைப்பி லாதசெல்வர்
உலகை ஆண்டு லாவலும்
கடவுளாணை என்றுரைத்த
கயவர் கூட்டமீதிலே
கடவுள் என்ற கட்டறுத்துத்
தொழிலுளாரை ஏவுவோம்”
– உழைப்பாளிகள் உழைப்புச் சுரண்டலை கேள்விக்குட்படுத்தாததன் காரணத்தை விளக்கி விடுகிறார். கடவுளைத் தொழுவதற்கே தமிழ் என்று நிறுவி வைத்த கூட்டத்திடமிருந்து தமிழைப் பறித்து அதில் பகுத்தறிவை பதித்தார். ஆரியம் புகுத்தியதனைத்தையும் அம்பலப்படுத்தினார்.
ஆரியம் பரப்பி விட்ட அடுத்த நோய் சாதி. தமிழ் மீது பற்று கொண்டவராக இருந்தாலும் சாதியைக் கைவிடுவதற்கு பலரும் தயாராக இல்லை. நல்ல தமிழை வளர்க்க சாதி ஒழிய வேண்டும் என்றார் பாரதிதாசன்.
“சாதி ஒழித்தல் ஒன்று – நல்ல
தமிழ் வளர்த்தல் மற்றொன்று
பாதியை நாடு மறந்தால் – மற்றப்
பாதி துலங்குவதில்லை!”
-தமிழை வளர்க்க எண்ணுவோர் சாதியை தூக்கிக் கொண்டலைந்தால் அது துலங்காது என்கிறார். சாதியின் பெயரை ‘குடி’ என்று மாற்றிக் கொண்டு தமிழ் வளர்க்கும் எண்ணம் கொண்டோரை அன்றே சாடியிருக்கிறார்.
“இருட்டறையில் உள்ளதடா உலகம் சாதி இருக்கின்ற தென்பானும் இருக்கின்றானே” – அன்றே கேட்டார். ஆனால் சாதியவாதிகள் இன்றும் இருக்கிறார்கள். அதுவும் பெண்களாகவும் உலவுகிறார்கள் என்பது தான் வியப்பு. விழுப்புரம் அருகே திரெளபதி அம்மன் கோவிலுக்குள் பட்டியலினத்தவரை விட மறுத்து ஆவேசமாக நின்றவர்கள் இடைநிலைச் சாதிய பெண்களே என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. இத்தகைய சாதியைக் கூர்மைப்படுத்தும் வழிகளை மதவாதிகள் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதே இவற்றைப் போன்ற நிகழ்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.
“மத ஓடத்தில் ஏறிய மாந்தரே – பலி
பீடத்திலே சாய்ந்தீரே” – என்ற அவரின் வரிகளையே இம்மகளிரை நோக்கி பாட வேண்டியிருக்கிறது.
“மதம் என்ற கருங்கற் பாங்கில்
மல்லிகை பூப்ப தில்லை
மதியினில் மயக்கம் என்ற
நஞ்சொன்றே மலரும்!”
– மதவாதத்திற்கு மதிமயக்கி என்னும் பெயரையும் சூட்டுகிறார். விழுப்புரம் தீண்டாமை நிகழ்வுகள் சாதியின் கொடுமையை மட்டுமல்ல, ‘மல்லிகைகளை கருங்கல்லாக்கியிருக்கும்’ மதவாத பாதகத்தையும் சொல்லியே சொல்கின்றன.
மதவாதத்தைப் பரப்பி ஆட்சிப் பீடத்தை தக்க வைக்க வேண்டும் என்று நினைக்கும் இந்துத்துவ கும்பலால் சாமானிய மக்களே பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். சிறுபான்மையினர் அச்சத்துடன் வாழ்கிறார்கள். காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினாலும், இந்த கும்பல் இஸ்லாமியர்கள் அனைவரையும் இந்துத்துவ கும்பல் வார்த்தைகளால் குத்திக் காயமாக்குகிறது. கலவரத்தை விதைக்க வன்முறையான சொற்களை தேசபக்தியின் மூலமாக தூவும் இக்கும்பலின் நாடியை அன்றே உணர்ந்தவர் பாரதிதாசன். இவர்களையே,
“புண்ணில் சரம் விடுக்கும் பொய் மதத்தின் கூட்டத்தை
கண்ணில் கனல் சிந்திக் கட்டழிக்க வேண்டும்” எனக் கடிந்துரைக்கிறார்.
“மூடத்தனத்தை முடுக்கும் மதத்தை நிர்மூலப் படுத்தக்கை ஓங்குவீர் – பலி பீடத்தை விட்டினி நீங்குவீர் – செல்வ நாடு நமக்கென்று வாங்குவீர்” – இம்மதவாதக் கூட்டத்தை நிர்மூலப்படுத்த எழுவீர் என்கிறார்.

தமிழர்கள் மதவாதத்தை தூக்கி சுமந்தால் டில்லி ஆதிக்கவாதிகளுக்கு இந்தித் திணிப்பிற்கு சுலபமான வழி கிடைத்து விடும். தாய் மொழிப் பற்றை அழிக்கவல்ல மதவாதமும், சாதியவாதமும் ஒழிந்த தமிழரே தமிழைக் காக்க முடியும். அன்று இந்தித் திணிப்பை எதிர்த்து நின்ற பெரியாரின் படைகள் அனைத்தையும் கடந்தே எழுந்தனர். அவ்வாறு உணர்வெழுச்சியுடன் திரண்ட படைகளுக்கு இவரின் பாடல்களே ஊக்க சக்தியாக வழிநடத்தின.
“இந்திக்கு இங்கு ஆதிக்கமா எல்லோரும் வாருங்கள் நாட்டினரே!
செந்தமிழுக்கு தீங்கு வந்த பின்னும் இத்தேகம் இருந்தொரு இலாபமுண்டோ?…
இந்தி எதிர்ப்பு போர் தொடங்கிற்று கொட்டடா முரசம்!”
– வரிகளில் பாரதிதாசனின் முழக்கம் டெல்லியின் ஆதிக்கத்தை தமிழர்கள் இன்றுவரை எதிர்க்க துணை புரிகிறது.
தமிழ் மீது கொண்ட பேரன்பினால், இவரிடம் இயற்கைக் காட்சிகள் எல்லாம் பாடல் வரிகளை வாங்க இரந்து நின்றன. கவி வரிகளைக் கேட்டு காதல் காத்து நன்றது என்று கூறினாலும் மிகையில்லாத அளவுக்கு அளவற்ற சொற்களால் இரண்டையும் குளிர்வித்திருக்கிறார். அதே அளவிற்கு சமூகக் கொடுமைகளைக் கண்டு தமிழைக் கொண்டு எரிமலையாகவும் சீறியிருக்கிறார். மதவாதிகளை விளாசியிருக்கிறார். சாதியவாதிகளை வெளுத்திருக்கிறார். மூடத்தனங்களை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார். கைம்பெண் கொடுமைகளை விவரித்திருக்கிறார். குழந்தைத் திருமணங்களை கண்டித்திருக்கிறார். அனைத்தையும் இவர் மூச்செனக் கொண்ட தமிழின் மூலமே தமிழர்கள் உணர்வுகளில் கடத்தியிருக்கிறார்.
இவரால் தமிழ் வாழ்ந்தது, தமிழால் இவர் வளர்ந்தார் என்று சொல்வதைக் கடந்து இவரால் தமிழர் வீறு கொண்டு எழுந்தனர் என்றே சொல்லும் அளவிற்கு, தமிழுக்குள் அழுத்தப்பட்டுக் கிடந்த புரட்சி சொற்களை எல்லாம் பட்டை தீட்டி தமிழர் கைகளில் கொடுத்தார். இப்பேர்பட்ட பாவேந்தருக்கு தமிழ்வார விழா கொண்டாடுவதே தமிழ்நாட்டிற்கு பெருமையாகும்.

தமிழ்நாடு அரசு 110-ம் விதியின் கீழ் இதனை நடைமுறைப்படுத்துவதாக கூறியுள்ளது. தமிழுக்கு பாரதிதாசன் அளித்த பங்கினை நினைவு கூறும் வகையில், இந்த வாரம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கருத்தரங்குகள், கவியரங்குகள் நடைபெறும். தமிழில் சிறந்து விளங்கும் இளம் எழுத்தாளர், இளம் கவிஞர் ஒருவருக்கு ‘பாரதிதாசன் இளம் படைப்பாளர் விருது’ வழங்கப்படும். மாநிலம் முழுதும் இசை, நடனம் போன்ற மரபுக் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். மாணவர்களிடையே பேச்சு, கட்டுரை, கவிதைப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். தமிழ் இலக்கிய படைப்பாளிகளை கொண்டு ஆய்வரங்குகள் நடத்தப்படும் என தமிழுக்கு பெருமை சேர்த்த பாரதிதாசனைப் போற்றும் வகையில் இந்த நிகழ்ச்சிகள் யாவும் நடத்தப்படும் எனக் கூறியுள்ளது வரவேற்கத்தக்கது
“வீழ்ச்சியுறு தமிழகத்தில் எழுச்சி வேண்டும்!
விசை ஒடிந்த தேகத்தில் வன்மை வேண்டும்!
சூழ்ச்சி தனை வஞ்சகத்தைப் பொறாமை தன்னைத்
தொகையாக எதிர் நிறுத்தித் தூள் தூளாக்கும்
காழ்ச்சிந்தை, மறச்செயல்கள் மிகவும் வேண்டும்!
கடல் போல்ச் செந்தமிழைப் பெருக்க வேண்டும்!”
– தமிழகம் வீழாமலிக்க, தமிழர்கள் வன்மை பெற, தமிழ் கடல் போல் பெருக தமிழ்வாரம் கொண்டாடுவோம். .
“மொழியே விழியாம், விழியே மொழியாம்;
மொழித் தெளிவுடையார் விழிக் தெளிவுடையார்.” – தமிழர்கள் மீது பாஜக அரசு திணிக்கும் மொழித் திணிப்பு, உரிமைப் பறிப்பு முதலான அனைத்தையும் எதிர்த்து நிற்கும் விழிப்பை, தெளிவை அடைய பாரதிதாசனே கவிதைப் பெட்டகமாக இருக்கிறார். அவரை வாசிப்போம்…