பண்டோரா பேப்பர்ஸ்: தேசபக்தர்களின் தேசவிரோதம்
சர்வதேச புலனாய்வு செய்தியாளர்கள் கூட்டமைப்பு (ICIJ) அம்பலப்படுத்திய பண்டோரா பேப்பர்ஸ் (Pandora Papers) பட்டியலில் இடம்பெற்றிருக்கும் பெயர்கள் மிகமுக்கிய பிரபலங்களாக உள்ளனர். உலகெங்கிலும் 330க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
இந்தியாவிலிருந்து மிகமுக்கியமான அதிகாரமிக்கவர்களின் பெயர்களும் இதில் இடம்பெற்றுள்ளன.
அதானி குடும்பம்
இந்திய ஒன்றிய பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரான அதானி நிறுவனர் கவுதம் அதானியின் அண்ணன் வினோத் சாந்திலால் ஷா அதானியின் பெயர் சிக்கியுள்ளது. ட்ரைடெண்ட் ட்ரஸ்ட் (Trident Trust) நிறுவனத்தின் மூலமாக இபிஸ்கஸ் ஓல்டிங்கு (Hibiscus RE Holdings) எனும் பெயரில், பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளில் நிறுவனம் துவங்கியதாக வெளியாகியுள்ளது.
சைப்ரஸ் நாட்டு குடியுரிமை பெற்றுள்ள வினோத் சாந்திலால் அதானி துபாயில் வசித்து வருகிறார். 2018ல் தனது கட்டுமான தொழிலில் வந்த வருமானத்தையே முதலீடு செய்து துவங்கிய இந்நிறுவனம் தற்போது மூடப்பட்டுவிட்டதாக கூறியுள்ளார். ஆனால், இவரது மகன் பிரணவ் அதானி தனது சித்தப்பா கௌதம் அதானியின் குழும நிறுவனங்களில் இயக்குநர் குழு உறுப்பினராக இருந்து வருகிறார்.
இதே வினோத் சாந்திலால் அதானியின் பெயர் பனாமா பேப்பர்ஸ் பட்டியலிலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. அப்போது, 1994 ஜனவரி 4ம் தேதி நிறுவப்பட்டதாக 2016ல் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டது. இதற்கு சில மாதங்களுக்கு முன்பு தான் கௌதம் அதானி தனது ஏற்றுமதி நிறுவனத்தை நிறுவியிருந்தார்.
அனில் அம்பானி
இதேபோன்று வங்கிக் கடனை திரும்ப செலுத்த முடியாமல் லண்டன் நீதிமன்றத்தில் தன்னிடம் எந்த சொத்துக்களும் இல்லை, “தாம் திவாலானதாக”, என அறிவித்த அனில் அம்பானியின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இவரின் ரிலையன்ஸ் அனில் திருபாய் அம்பானி நிறுவனத்தின் பிரதிநிதிகளின் பெயரிலும், இவரின் பெயரிலும் குறைந்தபட்சம் 18 நிறுவனங்கள் ஜெர்சி, பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள் மற்றும் சைப்ரஸ் நாடுகளில் 2007 – 2010 இடைபட்ட காலத்தில் தொடங்கப்பட்டுள்ளன. இதில் 7 நிறுவனங்கள் மூலம் சுமார் ரூ.9,600 கோடிகள் ($1.3 பில்லியன்) கடன் பெற்று முதலீடுகள் செய்துள்ளதாக ஆவணங்கள் வெளியாகியுள்ளன.
நீரவ் மோடி
இதே போன்று பஞ்சாப் நேஷனல் வங்கியில் போலியான ஆவணங்கள் மூலம் கடன் பெற்று திரும்ப செலுத்தாமல் நாட்டைவிட்டு தப்பி ஓடிய குற்றவாளி நீரவ் மோடியின் சகோதரி பூர்வி மோடியின் பெயரும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. ப்ரூக்டன் மேலாண்மை லிட் எனும் நிறுவனத்தை பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளில் 2017 டிசம்பர் மாதம் துவங்கியுள்ளார். ஜனவரி 2018ல் நீரவ் மோடி இந்தியாவைவிட்டு திருட்டுத்தனமாக ஓடிவிட்டார்.
காங்கிரஸ் தொடர்புடையவர்கள்
2G அலைக்கற்றை ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட, காங்கிரஸ் கூட்டணி (UPA-2) அரசில் அமைச்சரவை நியமனத்தில் தலையீடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நீரா ராடியா 12 நிறுவனங்களை நிறுவியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவரின் பெயர் முன்பு வந்த பனாமா பேப்பர்ஸ், பாரடைஸ் பேப்பர்ஸ்-களிலும் இடம்பெற்றுருந்தது குறிப்பிடத்தக்கது. இதில் ஒரு நிறுவனத்தின் மூலமாக துபாயில் ரூ.1.88 கோடி மதிப்புள்ள வைர கடிகாரம் வாங்கியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் காங்கிரஸ் கட்சியின் கமல்நாத் மகன் பகுல்நாத் 2018ல் பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளில் முதலீடு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் இத்தாலி அகஸ்டா வெஸ்ட்லண்ட் நிறுவன ஹெலிகாப்டர் வாங்கியதில் லஞ்சம் வாங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டு பிணையில் வெளிவந்திருக்கும் ராஜிவ் சக்சேனா மற்றும் கவுதம் கைத்தான் பெயர்களும் இடப்பெற்றுள்ளன. இந்திய பாதுகாப்பு தொழில் துறையில் ஈடுபட்டிருக்கும் மற்றுமொரு குடும்பமான தேவ்மோகன் குப்தாவின் மகன் சுசேன் மோகன் குப்தா போன்ற ராணுவ ஹெலிகாப்டர் பேர வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் பெயர்களும் வந்துள்ளன. தேவ்மோகன் குப்தா குடும்பத்தின் டிஃப்ஸிஸ் சொலுசன்ஸ் பிரைவேட் லிட் அகஸ்டா வெஸ்ட்லாண்ட் மற்றும் ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் தொடர்புடைய நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹரிஷ் சால்வே
இந்தியாவின் முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞராக இருந்த ஹரிஷ் சால்வே பெயரும் இந்தப் பட்டியலில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அல்கோகல் (Alcogal) எனும் நிறுவனத்தின் உதவியுடன் 2015ல் மர்சுல் (Marsul Company Ltd) எனும் நிறுவனத்தை வாங்கியதாகவும், அந்நிறுவனத்திற்கு லண்டனில் ஒரு குடியிருப்பு வளாகம் இருந்ததாகவும் வெளிவந்துள்ளது. முன்னாள் இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேயர் இதே போன்று வரி ஏய்ப்பு செய்த நிறுவனத்தை வாங்கி அதன் லண்டன் சொத்துக்களை சொந்தமாக்கியதாக வெளியாகியுள்ளது.
இந்த, ஹரிஷ் சால்வே தான் வேதாந்தாவின் தமிழ்நாட்டில் உள்ள தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவன ஆக்சிஜன் உற்பத்தி வழக்கில் வேதாந்தா நிறுவனத்திற்காக வாதாடியவர். இப்போது விவசாயிகள் போராட்டத்திற்கு எதிராக யோகி ஆதித்யநாத்தின் உத்தரபிரதேச அரசின் சார்பாக வழக்கு நடத்தி வருபவர்.
இராணுவ அதிகாரிகள்
இந்தியாவின் ராணுவ உளவு அமைப்பின் தலைவராக இருந்த ராகேஷ் குமார் லூம்பா மற்றும் அவரது மகனின் பெயரும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. 2016 டிசம்பர் மாதம் இவர்கள் இருவரும் சேசல்ஸ் தீவில் ராரின்ட் பார்ட்னர்ஸ் லிட் (Rarint Partners Ltd) எனும் நிறுவனத்தை மற்றொரு பங்காளருடன் துவங்கியதாக செய்தி வெளியாகியுள்ளது. ராகேஷ் குமார் லூம்பா இந்நிறுவனத்தை தவிர இந்தோ சிறீலங்கா சேம்பர் ஆப் காமர்ஸ் & இன்டஸ்ட்ரி உள்ளிட்ட பல இந்திய நிறுவனங்களில் இயக்குனராக உள்ளதாக நிறுவனங்களுக்கான பதிவில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
அரசு அதிகாரிகள்
முன்னாள் வருமான வரித்துறை தலைமை ஆணையராக இருந்த சுஷில் குப்தா, சிபிஐயால் லஞ்சம் வங்கியதாக 2011ல் கைது செய்யப்பட்ட விவசாய கூட்டுறவு துறையில் கூடுதல் செயல் அலுவலராக இருந்த ஹோமி ராஜ்வன்ஷ், பிரபல இந்தி நடிகர் ஜாக்கி ஷரோஃப், கட்டுமான நிறுவன தொழிலதிபர் நிரஞ்சன் ஹிரனந்தானி என பட்டியல் நீளுகிறது. இன்னும் பலரின் பெயர்கள் வெளியாகவுள்ளது.
சச்சின் டெண்டுல்கர்
இந்தியாவின் கிரிக்கெட் பிரபலமான சச்சின் டெண்டுல்கர் பெயர் இடம்பெற்றுள்ளது. அவரது மனைவி, மாமனார் பெயரில் பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளில் “சாஸ் இன்டெர்னஷனல்” எனும் பெயரில் தொடங்கிய நிறுவனம் 2016 ஜூலையில் மூடப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது. 2016ல் பனாமா பேப்பர்ஸ் வெளிவந்த 3 மாதங்களில் இந்த நிறுவனம் மூடப்பட்டுவிட்டது.
தற்போது கசிந்துள்ள தகவல்கள் அனைத்தும் பணக்காரர்களின் வரி ஏய்ப்பு சொர்கபூமிகளில் இருந்து தரகு வேலைகளை செய்து வரும் அல்கோகல், ட்ரைடெண்ட் ட்ரஸ்ட் உள்ளிட்ட 14 நிறுவனங்களிடம் இருந்து எடுக்கப்பட்டவையாகும். இந்நிறுவனகளை போன்று லட்சக்கணக்கான நிறுவனங்கள் இத்துறையில் இயங்குகின்றன. அவைகள் அனைத்தின் தகவல்களும் வெளியானால் இன்னும் எத்தனை பேர் சிக்குவர் என்பது கற்பனைக்கு எட்டாதது. அப்படியானால், உலக பணக்காரர்களின் யோகியதை மொத்தமாக அம்பலமாகும்.
உழைக்கும் தொழிலாளர்களுக்கு உரிய ஊதியத்தை முதலாளிகள் தர மறுக்கிறார்கள். தாங்கள் சுரண்டிய லாபத்தை வரி ஏய்ப்பு செய்து திருட்டுத்தனமாக வெளிநாடுகளில் பதுக்கி வைத்து கொள்கின்றனர். அதேநேரம், இந்தியாவில் உழைக்கும் ஏழை எளிய மக்களுக்கு ரேசன், மருத்துவம், கல்வி போன்றவை அரசு வழங்குவதை வீண் செலவு என்று பேசி திரிகின்றனர்.
இவ்வாறான சொர்க்கபுரிகளில் சேர்க்கப்படும் சொத்துக்கள் பெரும்பாலும் ஊழல், வரி ஏய்ப்பு, போதைகடத்தல், ஆயுதபேரங்களின் வழியில் வருவன என்பது பல ஆவணங்களின் மூலம் வெளிக்கொண்டுவரப்பட்டுள்ளது. உலகெங்கிலும் வரி ஏய்ப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளால் ரூ.15 லட்சம் கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் பதுக்கப்படுகின்றன என்று சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி உள்ளிட்ட அமைப்புகள் தெரிவிக்கின்றன.
மோடியின் ஊழல் ஒழிப்பு
கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த பனாமா பேப்பர்ஸ் பட்டியலில் இடம்பெற்ற பெயர்களில் பல தற்போது பண்டோரா பேப்பர்ஸ் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளன. ஊழலை ஒழிக்க வருபவர்கள் என்று அண்ணா அசாரே தூக்கி பிடித்த, பாஜக அரசு 2014 முதல் மோடியின் தலைமையில் ஆட்சியை நடத்தி வருகிறது. ஊழல் செய்தவர்களின் பெயர் முதற்கொண்டு அனைத்து தகவல்களும் அம்பலமாகியும் பாஜக அரசு நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை.
பனாமா பேப்பர்ஸ் பட்டியலில் இடம்பெற்ற பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. இந்தியாவில் எவ்வகையான விசாரணை நடைபெற்றது? அதன் உண்மைத்தன்மை என்ன? இதுவரை ஒரு தகவலும் இல்லை. விசாரணை குழு அமைப்பதும், அது பல பத்தாண்டுகளாக கல்லு பிள்ளையாரை போல எதுக்கும் பயனில்லாமல் இருப்பதும் புதிதல்ல.
இந்த பட்டியலில் இடம்பெற்றவர்கள் அனைவரும் பெரும் செல்வாக்கு மிக்கவர்களாகவும், அரசுக்கு நெருக்கமானவர்களாகவும் உள்ளனர். இவர்கள் தான் தேசபக்தி பாடம் எடுபவர்களாகவும் உள்ளார்கள்.
இந்தியர்களின் பசி குறியீடு பாகிஸ்தான், வங்காளதேசம் போன்ற நாடுகளை விடவும் இந்தியாவின் நிலை தரம்கெட்டு போயுள்ளது. தேசமக்களின் பெரும் விழுக்காடு மக்கள் பசியுடன் உறங்கச்செல்லும் சூழலில், தேசபக்தி வேடமிட்டு வரி ஏய்ப்பு உள்ளிட்ட தேசவிரோத நடவடிக்கையில் ஈடுபடுவோர் தேசபக்தி பற்றி விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் பாடமெடுப்பது வெட்கக்கேடு!
ஏழை எளிய மக்கள்மீது மறைமுக வரிவசூலை கூர்மைப்படுத்தி வாழ வழியற்றவர்களாக மாற்றும் அரசு; பெட்ரோல், எரிவாயு மீது பல மடங்கு வரிவசூல் செய்கிறது. தேச வளர்ச்சிக்கு பயன்படுத்துகிறோம் என்று பேசும் அரசு, ஊழல் பேர்வழிகள், வரி ஏய்ப்பு, ஹவாலா பணமோசடி உள்ளிட்ட தேசவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது எந்த நடவிடிக்கையும் எடுப்பதில்லை.
சிறு குறு விவசாயிகள் கடனை செலுத்தமுடியாமல் விவசாயம் பொய்க்கும்போது வங்கிகள் நெருக்கடியை கொடுத்து தற்கொலைக்கு தள்ளுகின்றன. ஆனால், பல்லாயிரம் கோடிகளை கடனாக பெற்று வெளிநாடுகளில் பணத்தை பதுக்கி வைக்கும் மார்வாடி பனியா திருடர்கள் மீது வங்கிகள் அவ்வாறாக நடவடிக்கை எடுப்பதில்லை.
சிறு குறு தொழில்முனைவோர் வரி கட்டதவறினால் தொழிலை முடக்கி, சோதனை மேற்கொள்ளும் வருமானவரித்துறை, இவர்கள் எவ்வாறு வெளிநாடுகளில் இவ்வளவு சொத்துக்களை பதுக்கினார்கள் என்பதை கண்டறிய தவறுவதை என்னவாக கருத முடியும்? உயர்சாதி, மார்வாடி பனியாக்களுக்கு சாதகமாகவே இந்தியாவின் சட்டங்கள் உள்ளன என்பதை தெளிவாக காட்டுகிறது.
பெரியார் எழுதியதை போல், “இந்திய அரசு என்பது உயர்சாதி பார்ப்பனிய, பனியா பெருமுதலாளிகளுக்கானது” என்பது தொடர்ந்து நிரூபணமாகி வருகின்றது.