நாட்கள் கடந்தாலும் காலநிலை மாறினாலும் இவர்கள் போராட்டம் இன்னும் ஓயவில்லை; அரசின் மனம் இளகவுமில்லை. சொந்த நாட்டிலே சொந்த அரசினாலேயே நிலமற்று நாடோடியாய் அலையவிருக்கும் அவலத்தை போக்கவே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, பரந்தூர் பசுமை விமான நிலையத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் .
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் தற்போது மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. நகரின் மையப் பகுதியிலேயே இருப்பதால் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய முடியவில்லை என்றும் இதனால் பல திட்டங்கள் ஹைதராபாத், பெங்களூர் நகரங்களுக்கு சென்றுவிடுவதாகவும் காரணம் கூறப்பட்டு பரந்தூர் பசுமை விமான நிலையத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தலைநகருக்கு இரண்டாவது விமான நிலையம் இல்லாததாலேயே மாநிலத்தின் வளர்ச்சியும் பொருளாதாரமும் பாதிக்கப்படுவதாகக் கூறி 2006-லேயே அப்போதைய திமுக அரசால் இரண்டாம் விமான நிலையம் அமைக்கும் பணி விவாதிக்கப்பட்டது. முதலில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் திருபெரும்புதூரே இதற்கான இடமாக தேர்வு செய்யப்பட்டது. பின்பு வந்த அதிமுக ஆட்சியிலும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. மீண்டும் தற்போது திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விமான நிலையத்திற்காக பரந்தூர், திருப்போரூர், பண்ணூர், மாமண்டூர் ஆகிய இடங்கள் பரிசீலிக்கப்பட்டன. இதில், பரந்தூர் மற்றும் பண்ணூர் தேர்வு செய்யப்பட்டன.
காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துாரைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைவதற்கான அறிவிப்பு கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் வெளியானது. (பரந்தூர் சென்னையிலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.) இந்த விமான நிலையத் திட்டத்திற்காக 13 கிராமங்களில் 4800 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும் என்றும், மேலும் அந்த நிலத்தின் சந்தை மதிப்பை விட 3.5 மடங்கு இழப்பீடு வழங்குவதாகவும் மாநில அரசு அறிவித்தது.
இந்நிலையில், மக்களின் வாழ்வாதாரம், சுற்றுச்சூழல் சீர்கேடு உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு, கடந்த ஆகஸ்ட் 16-ம் தேதியன்று கிராம சபைக் கூட்டத்தில் இந்த விமான நிலைய திட்டத்திற்கு எதிராக பரந்தூர், வளந்தூர், கொடவூர், ஏகனாபுரம் உட்பட 13 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றினார்கள். மேலும் பெரும்பாலும் விவசாயத்தை நம்பி உள்ள இந்த கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இங்குள்ள வளமான நீர்நிலை வசதிகள் வேறு எங்கும் இல்லை என்றும், இப்பகுதியில் விமான நிலையம் கட்டக்கூடாது எனவும் போராடி வருகின்றனர். இதே கருத்துகளை சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதில் நிறைய சிக்கல் உள்ளது தெரிய வருகிறது. இந்திய விமான நிலைய ஆணையம் செய்த செயலாக்க ஆய்வில் விமான நிலயத்திற்காக கையகப்படுத்தப்பட்ட 4800 ஏக்கரில் 2605 ஏக்கர் வெறும் நன்செய் நிலமாக உள்ளது என்று கூறியுள்ளது. மேலும் சுற்றுச்சூழல் ஆய்வுகள், நீரியல் மற்றும் கட்டிடங்களின் உறுதித்தன்மை பற்றிய விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும், “நன்செய் நிலங்களை சுற்றி கட்டுமானப்பணிகளை மேற்கொள்ளலாம், ஆனால் அதற்கும் சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு அவசியம்” என்று கூறுகின்றனர்.
முன்னாள் விமான பயிற்றுவிப்பாளர் மற்றும் விமான பாதுகாப்பு ஆலோசகரான கேப்டன் ரங்கநாதன், “இந்த இடத்தில் ஓடுதளம் அமைப்பது மிகவும் சவாலான விஷயமாக இருக்கக் கூடும்” என்று கூறுகிறார். மண்ணின் தன்மையினால் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கூடுதல் ஓடுதளம் அமைக்க முடியாத சூழல் பரந்தூரில் நிலவுவதையும் அவர் வெளிப்படுத்துகிறார். மேலும் சுற்றுச்சூழல் ஆய்வுகள், நீரியல் மற்றும் கட்டிடங்களின் உறுதித்தன்மை, மண்ணின் தன்மை ஆய்வுகளின் முடிவுகளிலேயே எந்த முடிவும் எடுக்க முடியும் என்றும் கூறுகிறார்.
அவரது கூற்றுப்படி இப்போதுள்ள விமான போக்குவரத்தின் அளவிற்கு இரண்டு விமான நிலையத்துக்கான தேவை இல்லை. அது மட்டுமில்லாமல் விமான நிலைய தளம் நீர்நிலைகளால் நிறைந்துள்ளதால் குறிப்பாக கிழக்கு ஐரோப்பாவிலிருந்து நிறைய புலம்பெயர்ந்த பறவைகளை ஈர்க்கிறது. சில பறவைகள் தெற்கே உள்ள வேடத்தங்கலுக்குச் செல்லும், இது விமானப் போக்குவரத்துக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்கிறார். இவை அனைத்தையும் விட முக்கியமாக எட்டு கடல் மைல்கள் தொலைவில் அரக்கோணத்தில் இந்திய கப்பல் படையின் விமான நிலையம் INS ராஜாளி அமைந்துள்ளது இதனால் இங்கு பல செயல் கட்டுப்பாடுகளுக்கும் வழிவகுக்கும் என்கிறார்.
கையகப்படுத்த வேண்டிய தனியார் நிலங்கள் மிகவும் குறைவு என்பதால் பரந்தூர் இந்தத் திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆனால் சூழலியல் ரீதியாக உணர்திறன் மண்டலத்தில் விமான நிலையம் போன்ற பெரிய கட்டுமானங்கள் வருவது நல்லதுக்கு இல்லை என்றே சூழலியலாளர்கள் கருதுகிறார்கள்.
இந்த விமான நிலையம் கட்டுவதற்கு எதிராக நடந்து வரும் போராட்டங்களை ஒட்டி, காவல்துறையினர் அங்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். ஏற்கனவே, காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிகம் மக்கள் கூடுவதை தடுக்க, கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி முதல், 30 (II) காவல் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன் காரணமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் முக்கிய விழாக்கள், பண்டிகைகள், அரசியல், சாதி மற்றும் மத தலைவர்களின் பிறந்த நாட்கள், நினைவு நாட்கள் என மக்கள் கூடுவது தடுக்கப்பட்டிருக்கிறது.
அரசுடன் பேச்சுவார்த்தை பலனளிக்காததால் பரந்தூர் கிராம மக்கள் தற்போதும் போராட்டத்தை தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். போராட்டத்தின் 200-வது நாளான பிப்ரவரி 12 அன்று, கிராம மக்கள் மாபெரும் போராட்டத்தை நடத்த திட்டமிட்டிருந்தனர். இந்தப் போராட்டத்தில் சென்னையைச் சேர்ந்த சில சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கலந்து கொள்ளவிருந்தனர். ஆனால் காவல்துறை சென்னையில் இருந்து ஆர்வலர்கள் உள்ளே வருவதைத் தடுத்தனர். போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக கிராமத்திற்குச் சென்ற பூவுலகின் நன்பர்கள் அமைப்பின் வழக்கறிஞரும் அலுவலகப் பொறுப்பாளருமான வெற்றிச்செல்வன் கைது செய்யப்பட்டு அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் டி.வேல்முருகன் எம்எல்ஏ, “மக்கள் பிரச்சனைகளை அரசிடம் தெரிவிப்பேன்” என்று கூறியுள்ளார். 200-வது நாள் போராட்டத்தில் பேசிய அவர், மக்கள் பக்கம் தான் இருப்பதாக உறுதி அளித்தார். ஆனால் திமுகவின் அமைச்சரான எ.வ.வேலுவோ, “நீர் நிலைகள் அழிவை விட பொது நோக்கம் முக்கியம்” என்று கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் “வேலைவாய்ப்பு, தொழில் முன்னேற்றம்” என்று சொல்லி இடத்தை கையகப்படுத்துவது முதல் முறையல்ல. திருபெரும்புதூரில் உள்ள சிப்காட்டில் இவ்வாறே தொழிற்கூடங்கள் உருவாகின. இதனால் அங்கு வாழ்ந்த சாமானியர்களின் வாழ்க்கை முன்னேற்றம் கேள்விக்குறியாகவே உள்ளன. கடந்த வருடத்தில் பிரபல செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் கம்பெனியின் தரமற்ற உணவு மற்றும் சுகாதாரமற்ற வாழ்கை முறையை எதிர்த்து பெண் ஊழியர்களின் போராட்டத்தை நாம் நினைத்து பார்க்க வேண்டும்.
இந்த இரண்டாம் விமான நிலையத்திற்கான பேச்சுவார்த்தை 1998-லேயே தொடங்கியது. அதையொட்டி கோவூர், அனகாபுத்தூர் மற்றும் பிற பகுதிகளில் ரியல் எஸ்டேட் வணிகம் முதலில் சூடுபிடித்தது. பின்பு திருபெரும்புதூரில் விமான நிலையம் அமையலாம் என செய்தி வந்தபோது பூந்தமல்லி, திருபெரும்புதூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் ரியல் எஸ்டேட் விலை ஏற்றம் கண்டது. இப்போது பரந்தூர், காஞ்சிபுரம் மற்றும் மற்ற பகுதிகளின் முறை. யாருக்காக நடைபெறுகிறது இந்த ‘வளர்ச்சி’? இந்த ‘முன்னேற்றம், வளர்ச்சி’ வெறும் முதலீட்டார்களுக்கு மட்டுமே. இதுபோல பெரிய கட்டிடங்கள் வந்தவுடன் சாமானிய மக்கள் வாழும் பகுதி ‘சேரி’ என்று அடையாளப்பட்டு ஒடுக்கப்படுவார்கள் இல்லை என்றால் அங்கிருந்து வெளியேற்றப்படுவார்கள்.
200 நாட்களை கடந்த இப்போராட்டம் தேசிய பேசு பொருளாய் இருக்க வேண்டும். ஆனால் இங்கோ ஊடக கவனத்தை எட்டாதது வருத்தத்திற்கு உரியதே. ”சாமானிய மக்களை ஒடுக்கும் மக்கள் விரோத திட்டங்கள், நில அபகரிப்பு , சிறுபான்மையினரை துன்புறுத்துதல் இவை அனைத்தும் பாஜகவின் கொள்கையாகவே இருந்தன. இதை இந்த திமுக அரசும் மேற்கொண்டால் பரந்தூரில் நடக்கும் போராட்டம் தமிழ்நாடு முழுவதும் பரவும்” என்று மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கூறியது கவனத்திற்குரியது.
பரந்தூர் விமான நிலைய கட்டுமான பணிகளை அரசு நிறுத்த வேண்டும் என்பதே போராடும் மக்களின் இப்போதைய கோரிக்கையாக உள்ளது. இவர்களில் பெரும்பாலோர் விவசாயிகள், அவர்களின் நிலங்கள் பறிக்கப்பட்டால், அவர்கள் வேலை தேடி நகரங்களுக்கு இடம்பெயர வேண்டிய கட்டாயம் ஏற்படும். நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு கிடைக்கும். ஆனால் அந்த நிலத்தை வளமாக்கிய அதில் வேலை செய்யும் மக்களுக்கு என்ன இழப்பீடு கிடைக்கும்? 13 கிராமங்களைச் சேர்ந்த 20,000 மக்களின் வாழ்வாதாரமான விவசாய நிலங்களை அழித்து பரந்தூர் விமான நிலையம் அமைக்க திட்டமிட்டால், அது எவ்வாறு முன்னேற்றமாக இருக்க முடியும்?
நாட்டின் முன்னேற்றம் என்பது சமூக நீதிக்கான முன்னேற்றமாக இருக்க வேண்டும். அனைத்து மக்களின் முன்னேற்றமாக இருக்க வேண்டும். ஆனால் பெரும்பான்மை மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து, வளர்ச்சி என்ற பெயரில் கொண்டு வரப்படும் திட்டங்கள் யாருக்காக என்பதுதான் நம் கேள்வி.