ஜூலியன் அசாஞ்சே கொலை திட்டம்
வரலாறு முழுவதும் முடியாட்சி முதல் குடி ஆட்சி வரை அரசுகளும் அரசாங்க கட்டமைப்பும் அதிகாரத்தை, அதிகார வர்க்கத்தை, பெரு முதலாளிகளை, வியாபாரிகளை பாதுகாக்க, சந்தையை உருவாக்க பல போர்களை மனித உரிமை மீறல்களை தொடர்ந்து செய்து வந்துள்ளன. குறிப்பாக, கடந்த 200 ஆண்டுகளில் மேற்கத்திய நாடுகள் தங்கள் வியாபார எல்லையை விரிவாக்கிக் கொள்ள, ஆயுதங்களை விற்க, வளங்களை சுரண்ட சாதாரண மக்களை கொத்துக்கொத்தாக கொலை செய்துள்ளன. தென் அமெரிக்கா ஆரம்பித்து ஆப்ரிக்கா, ஆசியா, மத்திய கிழக்கு நாடுகள் என்று மேற்கத்திய ஆக்டோபஸ் கரங்கள் பல அழித்தொழிப்புகளை எந்தவித குற்றவுணர்ச்சியும் இன்றி செய்து வந்துள்ளது.
இந்த 200 வருட அனுபவம் தாங்கள் செய்யும் தவறை மறைக்க அல்லது மக்களிடத்தில் அந்த செய்திகள் சென்று சேராமல் பார்த்துக் கொள்ளும் வழிமுறைகளை கையாள்வதில் அவர்களை கைதேர்ந்தவர்களாக மாற்றியுள்ளது. இதையெல்லாம் மீறி அத்தி பூத்தார் போல் சில நேர்மையான, உறுதியான பத்திரிக்கையாளர்கள், செயல்பாட்டாளர்கள் அரசுகளின் யோக்கிதயை, அவைசெய்த போர்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்களை வெளிக்கொண்டு வருவர். அப்படி 21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய வல்லரசான அமெரிக்கா 2004 முதல் 2009 வரை ஈராக்கில் செய்த போர்குற்றங்களை விக்கிலீக்ஸ் என்ற இணையதளம் மூலம் வெளிக் வந்தவர் ஜூலியன் அசாஞ்சே. குறிப்பாக அவர் வெளிக் கொண்டு வந்த அமெரிக்க ராணுவம் ஈராக்கில் பொதுமக்கள் 18 பேரை சுட்டுக் கொன்ற கோலேற்றல் மர்டர்(collateral murder) என்ற வீடியோ உலகம் முழுவதும் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த 18 பேரில் ராய்டர்ஸ் நிறுவத்தை சேர்ந்த இரண்டு பத்திரிகையாளர்களும் அடக்கம். இது அமெரிக்காவுக்கு மிகப்பெரிய நெருக்கடியை உலகம் முழுவதும் ஏற்படுத்தியது.
இதை தொடர்ந்து அவர் மீது பல பொய் வழக்குகளை பதிந்து அவரை எப்படியேனும் அமெரிக்காவுக்கு நாடு கடத்திவிட வேண்டும் என்று கடந்த 12 ஆண்டுகளாக பல முயற்சிகளை மேற்கொண்டுவந்தது. ஆஸ்திரேலியாவில் பிறந்த ஜூலியன் அசாஞ்ச், பல வருடங்கள் லண்டனில் உள்ள ஈகுவடார் தூதரகத்தில் தஞ்சம் புகுந்து பின் அமெரிக்காவின் நெருக்கடியால் லண்டன் போலீசாரால் கைது செய்யப்பட்டு லண்டன் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இதில் முக்கிய திருப்பமாக கடந்த வெள்ளிகிழமை(10.12.21) பிரிட்டன் ஹைகோர்ட் அவரை அமெரிக்காவுக்கு நாடுகடத்த அனுமதி அளித்துள்ளது. இது உலகம் முழுவதும் உள்ள பத்திரிகையாளர்கள், செயல்பாட்டாளர்கள் மத்தியில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்து உள்ளது.
உடல் ரீதியாகவும், மனரீதியாகம் மிகவும் சோர்வடைந்துள்ள அசாஞ்ச் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டால் அவரது உயிர்க்கே ஆபத்து ஏற்படலாம் என்று அவர்கள் குரல்களை எழுப்பி வருகின்றனர். அப்படி அவர்கள் பயப்பட வலுவான காரணங்கள் இருக்கிறது.
CIAவின் கொலை முயற்சியும், மேற்குலக ஊடகங்களின் மௌனமும்
செப்டம்பர் 26, 2021 அன்று யாஹூ நியூஸ் (Yahoo News) இங்கிலாந்தின் ஈக்வடார் நாட்டு தூதரகத்தில் தஞ்சம் புகுந்திருந்த அமெரிக்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பான ஆவணங்களை வெளியிட்ட ஊடகவியலார் ஜூலியன் அசாஞ்ச் அவர்களை அமெரிக்காவின் உளவு அமைப்பான CIA கொலை செய்யவும், கடத்துவதற்கும் திட்டமிட்டுருந்ததாக ஒரு அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டது.
டிரம்ப் ஆட்சிக்காலத்தில் முன்னாள் CIA உளவு அமைப்பின் தலைவராக இருந்த மைக் பாம்பேயோ வெளியுறவு செயலாளராக இருந்த போது இந்த திட்டம் அமெரிக்க அரசின் உத்தரவுக்கிணங்க தீட்டப்பட்டதாகவும், பின்னர் அதிபர்மாளிகை பின்விளைவுகள் கருதி ஒப்புதல் அளிக்காததால் நிறைவேற்றப்படாததாகவும் செய்தி வெளியிட்டது.
இது தொடர்பாக பதிலளித்த டிரம்ப் ஆட்சிக்கால வெளியுறவு செயலாளர் மைக் பாம்பேயோ “CIA திட்டம் தொடர்பான ரகசிய தகவல்களை வெளியிட்டவர்கள் மீது தேசதுரோகம் உள்ளிட்ட கடுமையான சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்” என்றார். இதன் மூலம் வெளிவந்த தகவல் உண்மையென்பது உறுதிபடுத்தப்பட்டதாக கருதப்படுகிறது.
அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகனில் வேலை செய்த செல்சி மேனிங் ஈராக் போரில் அமெரிக்க ராணுவம் பொதுமக்கள் மீதும், செய்தியாளர்கள் மீதும் குண்டுவீசி போர்குற்றங்களில் ஈடுபட்டதற்கான காணொளி உள்ளிட்ட பல ஆதாரங்களை ஜூலியன் அசாஞ்சிடம் கொடுத்து, விக்கிலீக்ஸ் எனும் வலைதளத்தில் ஜூலியன் அசாஞ்ச் அமெரிக்க போர்குற்றத்தை அம்பலப்படுத்தினார். இது தொடர்பாக செல்சி மேனிங் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, கடுமையான ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டு இறுதியாக ஒபாமா ஆட்சியின் இறுதிக்கட்டத்தில் சிறையிலிருந்து விடுதலையானார்.
ஏற்கனவே சொன்னது போல் அச்சாஞ்சை அமெரிக்காவிற்கு நாடுகடத்த பல முயற்சிகள் எடுக்கப்பட்டு, சுவீடன் நாட்டில் கற்பழிப்பு வழக்கு பொய்யாக புனையப்பட்டு, லண்டனில் கைதுசெய்ய முயற்சித்தபோது லண்டனிலுள்ள ஈக்வடார் நாட்டு தூதரகத்தில் தஞ்சமடைந்தார். பின் சுவீடன் நாட்டு நீதிமன்றத்தில் இவர்மீது சுமத்தப்பட்டது பொய் குற்றச்சாட்டு என்பது உறுதிபடுத்தப்பட்டது.
அதன் பின்புதான் இந்த கொலைக்கான திட்டமிடலும், கடத்தல் திட்டமிடலும் CIA வினால் நிகழ்த்தப்பட்டுள்ளது என்பதை யாஹூ நியூஸ் CIA உள்ளக தகவல் கசிவு மூலம் வெளிகோணர்ந்து கொண்டுவந்துள்ளது. போர்க்குற்ற விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தல் என்பது CIA வுக்கு பெரிய அவமானமாக கருத்தியதாக மேலும் அது விவரிக்கிறது. எனவே ஜூலியன் அசாஞ்சை கொலைசெய்து பலிதீர்த்துக்கொள்ள திட்டமிட்டதாக யாஹூ நியூஸின் செய்தியாளர்கள் அம்பலப்படுத்தியுள்ளனர்.
இந்த போர்க்குற்றம் தொடர்பான ஆவணங்களை விக்கிலீக்ஸ் உலகின் முன்னணி செய்திநிறுவனங்களான அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ், தி வாஷிங்டன் போஸ்ட், இங்கிலாந்தின் பிபிசி, தி கார்டியன், இந்தியாவின் தி ஹிந்து உள்ளிட்ட மேலும் பல செய்தி ஊடகங்களின் துணையுடன் வெளியிட்டது. அப்போது அது உலக மக்களின் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு நிகழ்வாக பார்க்கப்பட்டது. அமெரிக்க வல்லாதிக்கத்தின் முகமூடி கிழிக்கப்பட்டது என்றே சொல்லலாம்.
அதன் பிறகு 2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் பிரச்சார அணியின் தலைவராக இருந்த ஜான் பொடெஸ்ட்டா ஈமெயில் தகவல்களை விக்கிலீக்ஸ் 2016 அமெரிக்க தேர்தலுக்கு முன்பாக வெளியிட்டது. ஹிலாரி கிளிண்டன் தேர்தல் செலவுக்காக அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள், பெருநிறுவனங்கள், ஓமன், அமீரகம், சவுதி உள்ளிட்ட வெறுநாடுகளின் தலைவர்கள் கொடுத்த நிதி என ஹிலாரி கிளிண்டனின் மறைமுக உறவுகளை அம்பலப்படுத்தியது.
ஜூலியன் அசாஞ்ச் கட்சி வேறுபாடின்றி அமெரிக்க கட்சிகளின் திரைமறைவு செயற்பாடுகளை அம்பலப்படுத்தினார். ஆனால் ரஷ்யாவின் உளவுத்துறையுடன் இணைத்து அமெரிக்க தேர்தலில் தலையிட்டார் என்று துரோகி பட்டம் சுமத்தப்பட்டது. இதிலிருந்து உலகின் முன்னணி பத்திரிக்கைகள் ஜூலியன் அசாஞ்ச் மீது அவதூறுகளை அள்ளி வீசத்துவங்கின. அவருக்கு எதிராக கட்டுரைகளையும் தலையங்கங்களையும் தொடர்ந்து எழுதத்துவங்கின.
இந்நிலையில் லண்டனில் தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டு கடும் சித்திரவதைகளை அனுபவித்துவரும் ஜூலியன் அசாஞ்சை அமெரிக்காவிற்கு நாடுகடத்த முயற்சிகள் நடந்துவருகின்றன. அதன் விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையின் தனிமனித துன்புறுத்தல் சிறப்பு அதிகாரி கடந்த ஆண்டு ஜூலியன் அசாஞ்சை நேரில் சந்தித்து பேசியிருந்தார். ஜூலியன் அசாஞ்ச் மனநிலை பாதிக்கப்படுமளவுக்கு மோசமாக சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுகிறார் என்றும், அவரது உடல் மற்றும் மனநிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
அவரை சிறையிலிருந்து காப்பாற்ற உலகெங்கிலும் பெரும் பிரச்சாரங்களும், போராட்டங்களும் மனிதஉரிமை இடதுசாரிய அமைப்புகளால் நடத்தப்பட்டு வருகின்றன. ஒரு பத்திரிகையாளராக அவர் வேலையை செய்தது எவ்வாறு குற்றமாகும் என்று பலர் கேள்வியெழுப்புகின்றனர். அமெரிக்காவின் பத்திரிக்கை சுதந்திரம் கேள்விக்குள்ளாக்கபடுவதாக உலகெங்குமிருக்கும் அறம்சார்ந்த பத்திரிக்கையாளர்கள் அபாயசங்கு ஊதுகின்றனர்.
அமெரிக்க அரசியலமைப்பின் முதலாவது திருத்தம் கொடுத்திருக்கும் பத்திரிக்கையாளர்களுக்கான சுதந்திரம் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது என்றும், இதன் மூலம் உலகெங்கிலும் அரசின் தவறுகளையும், குற்றங்களையும் ஒரு செய்தியாளர் அம்பலப்படுத்தினால் அவர் எந்த நாட்டை சேர்ந்தவராக இருந்தாலும் தேசத்துரோக குற்றத்தில் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கின்றனர்.
இந்நிலையில் தான் CIA வின் கொலைமுயற்சி திட்டம் குறித்த தகவல் வெளிவந்திருக்கிறது. ஆனால் மேற்குலக முன்னணி பத்திரிக்கைகள் மற்றும் செய்தி ஊடகங்கள் இந்த அதிர்ச்சிதரும் தகவல் தொடர்பான செய்தியை இருட்டடிப்பு செய்து தங்கள் சுயமுகத்தை வெளிக்காட்டுகின்றன.
பத்திரிகைகளும் கள்ள மௌனம்
நேர்மையாக ஒரு பத்திரிக்கையாளர் தன்னுடைய வேலையை செய்ததற்காக கொலைசெய்யும் அளவுக்கு அரசுகள் செல்லும் நிலையில் முன்னணி பத்திரிக்கைகளின் அமுது சிவில் சமூகதிர்க்கிடையில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. உலகின் வெகுமக்கள் வாசிக்கும் இங்கிலாந்தின் பிபிசி செய்தி நிறுவனம் தனது சோமாலியா நாட்டு மொழிப்பதிப்பில் ஒரேயொரு செய்தியை மட்டுமே வெளியிட்டுள்ளது. அசாஞ்சேபற்றிய செய்திகளை வெளியிடவில்லை என்ற குற்றச்சாட்டிற்கு விளக்கமளித்துள்ள பிபிசி நிறுவனம்,”தாங்கள் இது தொடர்பான செய்தி வெளியிடவில்லை என்பது தவறு எங்களது சோமாலி மொழிப்பதிப்பில் வெளியிட்டுள்ளோம்” என்று அப்பட்டமாக தங்கள் மேற்குலகு அரசுகள் சார்பு நிலையை வெளிப்படுத்தியுள்ளது.
தி நியூயார்க் டைம்ஸ் மற்றும் தி வாஷிங்டன் போஸ்ட் எனும் இரண்டு உலகின் மிகப்பெரிய செய்தி நிறுவனங்களும் ஜூலை, 2021 க்கு பிறகு ஜூலியன் அசாஞ்சை பற்றிய ஒரு செய்தியும் வெளியிடவில்லை.
இங்கிலாந்தின் தி கார்டியன் இந்த சதித்திட்டம் தொடர்பான 2 செய்திகளை வெளியிட்டுள்ளது. ஆனால் ரஷ்யாவின் எதிர்க்கட்சி காரராகிய அலெக்ஸி நவால்னி ரஷய அரசால் விஷம் வைத்து கொள்ள முயற்சிக்கப்பட்டார் எனும் செய்தி தொடர்பாக காணொளி விளக்கங்கள், கருத்து கட்டுரைகள் என 16 வெவ்வேறு செய்திகளை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒட்டுமொத்த இங்கிலாந்து செய்தி நிறுவனங்களில் ஆகஸ்ட் 2020 ல் 20-25 தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில நவால்னி தொடர்பான செய்திகள் தேடப்பட்டத்தில் 288 செய்திகள் வந்துள்ளன. ஆனால் கடந்த செப்டம்பர் 26 – ஆகஸ்ட் 1க்கு இடைப்பட்ட காலத்தில் அசாஞ்ச் தொடர்பான செய்திகளை தேடியதில் 29 செய்திகள் மட்டுமே வந்துள்ளன. அதிலும் இன்டிபென்டன்ட் பத்திரிக்கை வெளியிட்ட பெட்ரிக் காக்பர்ன் எழுதிய அசாஞ்ச்க்கு எதிரான நிலைப்பாடு கொண்ட கருத்து கட்டுரையும் அடங்கும்.
மேற்கத்திய நாடுகளின் உளவுத்துறைகளை அம்பலப்படுத்தி அசிங்கப்படும் விதமாக மேற்கத்திய பெருநிறுவன ஊடகங்கள் செய்தி வெளியிடுவதில்லை என்பது ஒரு பொதுவான விதி, அதே நிலைப்பட்டையே இப்போதும் எடுத்திருக்கின்றன. பத்திரிக்கை சுதந்திரத்திற்கு எதிராக நடந்த ஒரு அதிர்ச்சிகரமான சதி செய்தியாக்காமலேயே மறைத்து மேற்கத்திய நாடுகளின் உளவுநிறுவனத்திற்கு சார்பாக நடந்துகொண்டிருக்கின்றன.
இத்தகைய நிலையில் யூட்டுப்பில் இயங்கும் சுதந்திர ஊடகமான க்ரேசோன்(Grayzone)-னின் ஆரோன் மாட்டே(Aaron Maté) தனது நிகழ்ச்சியில் இந்த செய்தியை வெளிக்கொண்டுவந்த செய்தியாளர்களில் ஒருவரான மைக்கேல் ஐசிகோஃப்(Michael Isikoff) அவர்களின் நேர்காணலை வெளியிட்டிருக்கிறார்.
க்ரேசோன் வலைதள செய்தி ஊடகம், அசாஞ்சை கடத்தி, விஷம் வைத்து கொலைசெய்ய CIA தொடர்புடைய முன்மொழிவு கொடுக்கப்பட்டதாக முதன்முதலாக மே2020-திலேயே ஆதாரத்துடன் செய்திவெளியிட்டது. ஆனால் உலகளவில் அந்த செய்தியானது செய்தியாகாமல் கடக்கப்பட்டது. கான்சர்டியம் செய்திகள்(Consortium News) நிறுவனத்தின் ஜோ லாரியா சொல்வதைப்போல் முதன்மை செய்திநிறுவனங்களில் வராத செய்திகள், நடந்த நிகழ்வாகவே கருதப்படுவதில்லை.
ஜீலியன் அசாஞ்ச் வழக்கின் முக்கியசாட்சியான சிகுர்துர் இங்கி தோடர்சன்(Sigurdur Ingi Thordarson), ஜூலியனுக்கு எதிராக CIA பொய் சாட்சி அளிக்க சொன்னதையும், அதற்காக தனக்கு பெரிய தொகை கைமாறாக கிடைத்ததாகவும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருந்தார். ஆனால் அந்த செய்தி முதன்மை ஊடகங்கள் எதிலும் வெளியாகவில்லை. இந்த ஒப்புதல் வாக்குமூலம் ஜூலியன் மீதான வழக்கையே தவிடுபொடியாக ஆகியிருக்க வேண்டிய தடயம், ஆனால் திட்டமிட்டே மிக்கமுக்கியத்துவம் வாய்ந்த இந்த செய்தியை மெற்குல ஊடகங்கள் மறைந்தன.
மேலும், UC குளோபல் செக்யூரிட்டி நிறுவனம் ஜூலியன் அசாஞ்சை உளவுபார்த்த ஆவணங்கள் வெளிவந்தன. அதில் வாஷிங்டன் போஸ்ட் மற்றும் நியூயார்க் டைம்ஸ் செய்தியாளர்களும் உளவுபார்க்க பட்டது தெரிந்தும் செய்தி வெளியாகவில்லை.
ஐக்கிய ராஜ்ஜிய நீதிபதி, க்ரேசொன் வெளியிட்ட CIA வின் கொலை மற்றும் கடத்தல் திட்டமிட்ட செய்தியை CNN வெளியிட்ட ஆதாரமற்ற பொய் தகவலை காரணம் காட்டி நிராகரித்தார் என்பது குறிப்பிட தக்கது.
ஊடகங்களின் இந்த மரண மௌனம் ஒருப்புறமிருக்கும் போது அமனிஸ்ட்டி இன்டெர்னஷனல் போன்ற மனித உரிமை நிறுவங்கங்களும் இந்த செய்தியை பெரிதுபடுத்தவில்லை.
மறுபுறம் மேற்குலக ஊடகங்கள் ஒருவிடயத்தில் ஒற்றுமையாக இருக்கின்றன. ஜூலியன் அசாஞ்சை தவறாக சித்தரிப்பதிலும், கேலி செய்து அசிங்கப்படுத்துவதிலும் நேர்த்தியாக செயற்படுகின்றன.
தி கார்டியன் பத்திரிக்கையில் ஜேம்ஸ் பால்(James Ball) எழுதிய ஒரு கட்டுரையில் ஜூலியன் அசாஞ்சே ஈக்வடார் நாட்டு தூதரகத்திலிருந்து வெளியேறாமல் இருப்பதற்கு ஒரே காரணம் தான் உண்டு, அது அச்சாஞ்சேவின் பெருமையை பாதுகாப்பது என்று எழுதினார். வேறொரு கட்டுரையில் உடனடியாக ஜூலியன் ஈக்வடார் நாட்டு தூதரகத்திலிருந்து கையை உயர்த்திக்கொண்டு வெளியேறவேண்டும் என்று எழுதினார்.
இப்போது இந்த செய்தியை பற்றிய அவரது லண்டன் டைம்ஸ் இதழின் கட்டுரை ஜூலியன் அசாஞ்சேமீது கடுமையாக தனிமனித தாக்குதல் தோடுத்ததாக இருக்கிறது.
இவரின் கருத்தை ஒத்ததாகவே மரினா ஹேய்ட்(Marina Hyde)-இன் தி கார்டியன் கட்டுரையும் இருந்தது. ஆனால் இப்போது வந்த செய்தியை பற்றி இதுவரை அவர் ஏதும் பேசவில்லை.
மற்றொரு ஆர்வெல் பரிசு பெற்ற பத்திரிக்கையாளரான சூசன் மூர்(Suzanne Moore) விக்கிலீக்சையும், ஜூலியன் அசாஞ்சேவையும் தொடக்கத்திலிருந்தே கேலி செய்து வருபவர். அவரின் ஆதரவாளர்களையும் கேவலமாக சித்திரிப்பவர். அவரின் சக செய்தியாளர் நிக் கோகன்(Nick Cohen) அவரை போன்றே ஜூலியன் அசாஞ்சின் ஆதரவாளர்களை கேலிசெய்து தி கார்டியன் இதழில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.
2019ல் ஐநா மனித உரிமைகள் சபையின் தனிமனித துன்புறுத்தல் கண்காணிப்பு சிறப்பு அதிகாரி நில்ஸ் மெல்ஸிர்(Nils Melzer) W சமூகவைத்தளத்தில் எழுதிய ஜூலியன் அசாஞ்சுக்கு நிகழ்த்தப்படும் அடக்குமுறைகளை அம்பலப்படுத்தி கண்டித்து எழுதியபோது, தி கார்டியன் அவரின் அந்த கட்டுரையை வெளியிட்டது சிறிதேனும் ஆச்சரியத்தை தான் தருகிறது.
பெருநிறுவங்களாக மாறிநிற்கும் மேற்குலக ஊடகங்கள் மேற்கத்திய நாடுகளின் உளவுத்துறைக்கு சாதகமான செய்திகளை தருவதை மிகமுக்கியமானதாக கருதுகின்றன. அசாஞ்ச் தொடர்பான செய்திகளில் பத்திரிக்கை சுதந்திரம், தரம், அறம் போன்றவற்றை ஓரம்கட்டிவிட்டு உளவு நிறுவனங்களுக்கு சாதகமாக செய்தி வெளியிடுவதையே தங்கள் பத்திரிக்கை அல்லது ஊடக பணி என்று கருதுகின்றன என்பது அம்பலப்பட்டு நிற்கிறது.
2009-ல் ஒன்றரை லட்சம் மக்கள் கொத்துக்குண்டுகள், தடைசெய்யப்பட்ட குண்டுகள் என உலக வல்லாதிக்க சக்திகள் இணைந்து ஈழத்தில் இனப்படுகொலைக்கு துணைபோனபோதே நாம் இந்த ஊடகங்களின், குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து இடதுசாரி என்ற முகமூடியை அணிந்திருந்த லங்கா ரத்னா ராமின், தி இந்து தொடங்கி, வடஇந்திய ஊடகங்கள் மற்றும் மேற்கத்திய ஊடகங்களின் நேர்மையை, பத்திரிக்கை அறத்தை கண்டிருக்கிறோம். அதுவே இன்று 12 ஆண்களுக்க்கு பிறகும் ஜூலியன் அசாஞ்ச் கொலை, கடத்தல் திட்ட செய்தி வெளியீட்டிலும் காணமுடிகிறது.
முதன்மை ஊடகங்களில் வராத செய்தி, நடந்ததாகவே கருதப்படாது என்ற ஜோ லாரியாவின் கருத்து எவ்வளவு பொருள்கொண்டது என்பதை நாம் கண்கூடாக காண்டோம்! இன்றும் காண்கிறோம்!
ஜூலியன் அசாஞ்சேவுக்காக நாம் தொடர்ந்து குரல் கொடுப்போம்.. அறம் வெல்லும்.. 💪