அனகாபுத்தூர் மக்களின் வீடு இடிப்பு குறித்தான பத்திரிக்கையாளர் சந்திப்பு

அனகாபுத்தூர் மக்களின் வீடுகளை அராஜகமாக இடிக்கும் தமிழக அரசின் விதிமீறல்களைக் கண்டித்தும், காசா கிராண்ட் போன்ற தனியார் நிறுவனத்திற்காக ஏழைகளின் வீடுகள் பலியாக்கப்படுகிறதா என்பது குறித்தும், ஆறுகளை மறுசீரமைப்பு செய்யவே வீடுகள் இடிக்கப்படுகிறதா, அரசினால் பரப்பப்படும் உண்மைக்கு மாறான தகவல்கள் குறித்துமான பத்திரிக்கையாளர் சந்திப்பு மே 22, 2025 அன்று மே பதினேழு இயக்கத்தால் ஒருங்கிணைக்கப்பட்டது.

இந்த சந்திப்பில் மூத்த வழக்கறிஞர் ப.பா. மோகன் அவர்கள், வழக்கறிஞர் சுபாஷ் அவர்கள், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் வெற்றிச் செல்வன் அவர்கள், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் மற்றும் அனகாபுத்தூர் வாழ் மக்களும் கலந்து கொண்டனர். பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.

பத்திரிக்கையாளர் சந்திப்பில் தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் முன்வைத்த கருத்துக்கள்:

வெள்ளத்தினால் மிகப்பெரிய அளவிற்கு சிக்கலுக்கு உள்ளானவர்கள் ஏழை எளிய மக்கள். மறுசீரமைப்பு என்பது ஏழை எளிய மக்களினுடைய நலன்களை உள்ளடக்கியதாக வாழ்வாதாரத்தை பாதுகாப்பதாக அமைந்திருக்க வேண்டும். ஆனால் அப்படியாக நடக்கவில்லை என்பதற்கு இப்பொழுது அனகாபுத்தூரில் நடந்து கொண்டிருக்கக்கூடிய இந்த வீடுகளை இடிப்பு என்பது இருக்கிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றுகிறோம் என்கின்ற பெயரில் திமுக அரசு, அதிகாரிகள் மேற்கொள்கின்ற இந்தப் போக்கு என்பது அராஜகமான, ஜனநாயக விரோதமான, ஏழைகள் விரோதமான ஒரு நடவடிக்கை என்பதை நாங்கள் இந்த சமயத்தில் பகிரங்கமாக அறிவிக்க விரும்புகிறோம்.

இந்த ஆற்றினுடைய எல்லை வரையறுக்கப்படவில்லை. குறிப்பிட்ட பகுதிகள் மட்டுமே ஆக்கிரமிப்பு என்று அறிவிக்கப்படுகிறது. அந்த குறிப்பிட்ட பகுதிகளும் ஏழை எளிய மக்களினுடைய, பாட்டாளிகளினுடைய வீடுகளாகவும், குடியிருப்புகளாகவும் இருக்கின்றன. அதே சமயத்தில் அந்த குடியிருப்புகளின் அருகாமையில் இருக்கக்கூடிய பெரிய நிறுவனங்களினுடைய நிலங்கள் கட்டிடங்கள் பாதுகாக்கப்படுகின்றன. அவை அங்கீகரிக்கப்பட்ட நிலப்பரப்பு என்று அரசு அதிகாரிகள் அறிவிக்கிறார்கள். ஆக ஆற்றினுடைய ஒரு பகுதி ஆக்கிரமிப்பு என்றும், அதற்கு அருகாமையில் இருக்கக்கூடிய பகுதி ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி அல்ல என்றும் அறிவிக்கக்கூடிய இந்த இரட்டைத் தன்மை என்பது இந்த அரசு அதிகாரிகளுடைய, ஆளும் கட்சியுடைய, பெரும் முதலாளிகள் சார்பு நிலையை அம்பலப்படுத்துகிறது. பெரிய கம்பெனிகளுக்கு சாதகமாக இந்த திட்டங்களை வகுப்பதும், நதிகளின் எல்லையை அவர்களுக்கு ஏற்றபடி வரையறை செய்வதும் என்பது இப்பொழுது அம்பலமாகி இருக்கிறது.

இதற்கான தொடர் போராட்டத்தை இரண்டு ஆண்டுகளாக நடத்தியதற்கு பிறகு நேற்றுதான் (21.05.2025) முதல் முறையாக சென்னை நதிகள் புனரமைப்பு நிறுவனம் என்ற ஒரு நிறுவனம் இருப்பதை வெளிப்படையாக அறிவித்திருக்கிறார்கள். இந்த நிறுவனத்தினுடைய சனநாயகத் தன்மை என்பது கேள்விக்குரியது. ஏனென்றால் சென்னை நதிகளை புணரமைப்பதில் அரசு அதிகாரிகள் மட்டுமே, அவர்கள் மட்டுமே முடிவெடுக்கக்கூடிய ஒரு கட்டமைப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த உறுப்பினர்களும் கிடையாது. அமைச்சர் பெருமக்களும் கிடையாது.

நதியை ஒட்டி வாழுகின்ற அந்த பகுதியில் வாழ்கின்ற மக்களினுடைய சட்டமன்ற பிரதிநிதிகளும் கிடையாது. சனநாயகக் கட்சிகளினுடைய, அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடைய பிரதிநிதிகளும் கிடையாது. சமூக செயல்பாட்டாளர்கள் கிடையாது, சூழலியல் செயல்பாட்டாளர்கள் கிடையாது, மனித உரிமை செயல்பாட்டாளர்கள் கிடையாது, வழக்கறிஞர்கள் கிடையாது, குடிசைகளினுடைய மறுவாழ்வுக்காக போராடக்கூடிய அமைப்புகளுடைய பிரதிநிதிகள் கிடையாது. இங்கு ஒடுக்கப்பட்ட மக்களினுடைய பிரதிநிதிகள் கிடையாது. எந்தவிதமான சிவில் சமூக ஈடுபாடும் இல்லாமல் வெறும் அதிகாரிகள் மட்டும் முடிவெடுக்கக்கூடிய ஒரு சனநாயகமற்ற அதிகார வர்க்க ஒரு நிறுவனமாக இந்த நிறுவனம் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதை இச்சயத்தில் நாங்கள் அதிர்ச்சியுடன் மக்களுக்கு தெரிவிக்க கடமைப்பட்டிருக்கின்றோம்.

இப்படிப்பட்ட ஒரு நிலையில் எடுக்கப்பட்ட முடிவுகள் சட்டமன்றத்தில் மக்கள் விவாதத்துக்கு உட்படுத்தப்பட்டு எடுக்கப்பட்டதா என்றால், அப்படியான எந்த விவாதங்களும் நடந்த மாதிரி தெரியவில்லை. பொது விவாதங்கள், கலந்து ஆலோசிப்பது நடந்ததா என்றால் அதுவுமில்லை. பாரதிய ஜனதா கட்சி கல்விக் கொள்கையிலே கொள்கை உருவாக்கம் (Policy Making) கலந்து ஆலோசனை செய்யவில்லை என்று குற்றம் சாட்டுகிற நம் தமிழ்நாட்டில், இத்தனை லட்சம் மக்கள் பாதிக்கப்படுகின்ற ஒரு திட்டத்தில் கலந்து ஆலோசித்தல் என்கின்ற ஜனநாயக நடவடிக்கையை திமுக அரசு மேற்கொள்ளவில்லை என்பதை நாங்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறோம்.

இன்றைக்கு அனகாபுத்தூரில் நடந்து கொண்டிருக்கக்கூடிய வீடுகள் இடிப்புகளை, ஆக்கிரமிப்பு என்கின்ற பெயர் வைத்ததற்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஒன்று அவர்கள் ஏழை எளிய மக்கள் கேட்பதற்கு நாதியற்றவர்கள், அவர்களை வெளியேற்றி விட முடியும், அவர்களுக்கு நட்ட ஈடு தர வேண்டியதில்லை, அவர்களுக்கு எந்தவிதமான வாழ்வுரிமை பாதுகாப்பும் தர வேண்டியதில்லை என்கின்ற அடிப்படையில் எதேச்சயதிகாரமாக வெளியேற்றுகிறார்கள்.

அவர்களது குடியிருப்புக்கு அருகில் இருக்கக்கூடிய பெரு நிறுவனங்கள் காசா கிராண்ட் போன்ற பெரிய நிறுவனங்களுடைய கட்டிடங்கள் இடிக்கப்படுவதில்லை. அவர்களுடைய திட்டங்கள் (Project) எதுவுமே இடிக்கப்படுவதில்லை. இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இந்த காசா கிராண்ட் என்கின்ற தனியார் நிறுவனம் அடையாறு ஆற்றங்கரையை ஒட்டி மட்டுமே மூன்று நான்கு திட்டங்களை வைத்திருக்கிறார்கள். இது எப்படி சாத்தியமானது என்கின்ற கேள்வியும் இச்சமயத்தில் முன் வைக்கின்றோம். ஆற்றின் ஒருபுறத்தில் வீடுகளை அகற்றுகிறீர்கள். மறுபுறத்தில் இருக்கக்கூடிய ஆக்கிரமிப்புகளை பற்றி பேசுவதில்லை. காரணம் அங்கு தனியார் நிறுவனங்கள், கல்லூரிகள் பெரு நிறுவனங்களுடைய திட்டங்கள் வருகின்றன.

ஆகவே இந்த இரட்டைத் தன்மையை அம்பலப்படுத்துவதற்கான ஒரு ஊடக சந்திப்பாகவும், இந்த திட்டத்தினுடைய முழுமையான சட்ட ரீதியான அங்கீகாரம் என்பது இல்லை என்பதை அம்பலப்படுத்துவதற்காகவும், இந்த சந்திப்பை நாங்கள் நடத்துகிறோம். அதே சமயத்தில் உண்மையாகவே இவர்கள் ஆற்றங்கரையை தூய்மைப்படுத்துகிறார்களா, அதற்கான நோக்கம் இருக்கிறதா என்றால் அப்படி எதுவும் இல்லை. அதற்குரிய அறிவியல் பூர்வமான நடவடிக்கைகளும் இல்லை என்பதையும் சூழலியல் செயல்பாட்டாளர்கள் (தோழர் வெற்றிசெல்வன்) இங்கே நம்மிடத்திலே பதிவு செய்ய இருக்கிறார்கள்.

ஏழை எளிய மக்களினுடைய வாழ்வாதாரம் முற்றிலுமாக நசுக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் இந்த இடத்தில் அப்புறப்படுத்தப் பட்டிருக்கிறார்கள். ஆக அவர்களுடைய வாழ்வாதாரத்திற்கு பாதுகாப்பு வேண்டும், இத்தனை ஆண்டு காலம் வாழ்ந்த நிலத்தில் அவர்களுடைய உரிமையை சட்ட விரோதமாக மறுக்கின்ற இந்த அரசு அதிகார வர்க்கத்தின் நடவடிக்கையை நாங்கள் அம்பலப்படுத்துவதற்கான ஒரு சந்திப்பாக நடத்துகிறோம்.

தமிழ்நாட்டிலே அனைத்து மக்களாலும் போற்றப்படுகின்ற மூத்த வழக்கறிஞர் ஐயா ப.பா மோகன் அவர்கள் இந்த வழக்கினுடைய நுணுக்கங்களை நம்மிடத்திலே விவரித்து நம் மக்களுக்கு எளிய முறையிலே விளக்குவார். இந்த வழக்கை நடத்திய மரியாதைக்குரிய தோழர் வழக்கறிஞர் சுபாஷ் அவர்கள் இந்த வழக்கினுடைய போக்கு குறித்து நம்மிடத்திலே விளக்குவார். பூவுலகின் நண்பர்கள் அமைப்பினுடைய மூத்த பொறுப்பாளர் தோழர் வழக்கறிஞர் வெற்றிச் செல்வன் அவர்கள், இது உண்மையில் சூழலியலை பாதுகாப்பதற்கான திட்டம் தானா என்பது குறித்தான கேள்விகளை முன் வைப்பார். ஆகவே மூன்று பங்கேற்பாளர்களின் முழு விவரங்களும் பகிரப்பட்டதற்கு பிறகு நாங்கள் பத்திரிக்கையாளருடைய கேள்விகளை எதிர்கொள்ள விரும்புகின்றோம்.

மூத்த வழக்கறிஞர் ப.பா மோகன்:

அனகாபுத்தூரில் நடந்திருக்கக்கூடிய சம்பவம் என்பது தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைவரையும் இன்றைக்கு திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. நீர்நிலையில் இருக்கக்கூடிய ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்பதிலே எந்தவிதமான மாற்றுக்கருத்தும் கொள்ள முடியாது. ஏற்கனவே தமிழ்நாட்டில் சென்னை உயர்நீதிமன்றம் 2005 -ஆம் ஆண்டு கிருஷ்ணன் Vs ஸ்டேட் ஆப் தமிழ்நாடு என்ற வழக்கிலே தான் நீர்நிலைகள் என்பவை இயற்கைக்கான ஒரு பாதுகாப்பு தேவை.

ஆகவே நீர்நிலைகள், நீர் வழிப்பாதைகளை பொறுத்தவரையிலும் அவைகள் பட்டா கொடுக்கப்பட்டிருந்தாலும் கூட ரத்து செய்ய வேண்டும், அப்படி பட்டா கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்ற உத்தரவுகள் எல்லாம் போட்டார்கள். இன்றைக்கு அதற்குப் பின்னால் நம்முடைய சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆகட்டும், உச்ச நீதிமன்றம் ஆகட்டும் ஏகப்பட்ட தீர்ப்பை கொடுத்திருக்கிறார்கள். இங்கே அடையாறு ஆற்றை பொறுத்தவரையிலும் அதை மறு சீரமைப்புக்கு கொண்டு வர வேண்டும் என்கிற வகையிலே ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தார்கள். அதற்காக ஒரு 747 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து 42 கிலோமீட்டர் இருக்கக்கூடிய வழிகளிலே ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று பொதுவான திட்டத்தைப் போட்டு அதை நடைமுறைப்படுத்தும் போது வரும் சிக்கல்கள் தான் இவை.

ஏற்கனவே திருமுருகன் காந்தி சொன்னதைப் போல ஒரு ஆறு என்று சொன்னால் ஆற்றினுடைய அகலம் என்ன என்பதைப் பற்றி ஏற்கனவே நமக்கு வரையறுக்கப்பட்ட பகுதி என்ற ஒன்று இருக்க வேண்டும். அதேபோல ஆற்றை ஒட்டி இருக்கக்கூடிய கரைப்பகுதி பொதுவாக ஆற்று புறம்போக்கு, வாரி புறம்போக்கு, பள்ள புறம்போக்கு, சாலை புறம்போக்கு இவை போன்று ஆற்றை ஒட்டியவாறு இருப்பவற்றை பொறுத்தவரையிலும் யாருக்கும் பட்டா கொடுக்க மாட்டார்கள். இது பொதுவாக உள்ள நிலைமை.

‘தமிழ்நாடு நில அளவை மற்றும் எல்லைகள் சட்டம் 1923’-ன்படி ஒரு இடத்தை அளவு செய்ய வேண்டும் என்று சொன்னால் அது பிரிவு 9ன் கீழ் எப்பொழுதுமே சம்பந்தப்பட்டிருக்கிறவர்களுக்கு அறிவிப்பு கொடுத்துவிட்டு தான் அந்த அளவை செய்ய முடியும், அப்படி செய்து அவர்களிடம் ஆட்சேபனை கேட்டுவிட்ட பின்புதான், இறுதிப்படுத்தி அரசு ஆணையிட வேண்டும். இவைகளெல்லாம் இருக்கின்ற நடைமுறை.

இங்கே சென்னையைப் பொறுத்தவரையிலும் இங்கு இருக்கக்கூடிய ஆறு என்று சொன்னால் அந்த ஆற்றை அளப்பதற்கான முறையிலே அதற்கும் ஒரு திட்டம் இருக்கிறது. ஏற்கனவே இங்கு மாண்புமிகு முதலமைச்சர் எம்ஜிஆர் அவர்கள் இருந்தபோதே இந்த பகுதி மக்கள் ஆக்கிரமித்தார்கள் என சொல்கிறார்கள். ஆகவேதான் அவருடைய பெயரிலே உருவாகியிருப்பதாக சொல்லப்படுகிறது. இதைப் போலவே மூன்று பெயர்கள் கொண்ட நகர்களாக உருவாகி சாலைகள், மின்சார வழி, வீடுகளுக்கு மின்சாரம், வரி கட்டுதல் என அனைத்தும் நடந்திருக்கின்றன. ஆகவே இந்தப் பகுதிகளை பொறுத்தவரை எளிய, சாதாரண வீடற்ற மக்கள் எல்லாரும் அங்கே ஏற்கனவே கட்டி இருக்கிறார்கள். பல பேருக்கு பட்டா கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், ஏற்கனவே 2023 ஆம் ஆண்டு சென்னை நீதிமன்றம் கொடுத்திருக்கக்கூடிய அந்த வழக்கிலே அளிக்கப்பட்ட கடைசி உத்தரவு – 21/6/ 2023 this Court suggested that the survey would be conducted with respondant (அரசு அதிகாரிகள்) may conduct fresh Survey and place the report on record, the petition report to the Pallavaram and so and so என்று 2023-ஆம் ஆண்டிலேயே ஒரு உத்தரவு போடப்பட்டிருக்கிறது. அந்த உத்தரவை வைத்துக்கொண்டு இப்போது பேசுகிறார்கள்.

தனி நபர் உள்ளடக்கிய ’பொது தனியார் திட்டம்’ (Public -Private Project) என்று சொல்லக்கூடிய திட்டத்தைப் பற்றி அப்போது பேசவேயில்லை. ஆனால் இப்போது தனி நபரை உள்ளடக்குவது மட்டுமல்ல, இதுவரைக்கும் நாங்கள் பார்க்காத ஒன்றாக, அரசுக்கு என்றே தனியாக ஒரு ’நில அளவைத் துறை’ (Survey Department) இருக்கின்ற போது, ஒரு தனியாரை வைத்துக்கொண்டு எப்படி அளந்தார்கள், அப்படி அளக்கிற போது யாருக்கெல்லாம் அறிவிப்பு கொடுத்தார்கள், அப்படி அறிவிப்பு கொடுத்து, அவைகளை மக்கள் முன்னால் வைத்து ஆட்சேபனை கேட்டிருக்க வேண்டும். இவைகள் எல்லாமே இல்லாமல் யாரோ ஒரு சில பேருக்காக மட்டும் திட்டமிட்டிருக்கிறார்கள்.

இன்றைக்கு பெரிய பெரிய நகரங்களை ஆக்கிரமித்து இருக்கும் மிகப்பெரிய கார்ப்பரேட் சார்ந்திருக்கக்கூடிய நபர்களுக்கு உதவுகிற வகையிலே முன்கூட்டியே திட்டமிடுகிறார்கள். மும்பையின் ’கிரேட்டர் மும்பை’ என்ற பகுதியிலே இதைப் போலவே சொல்லி, அங்குள்ள கார்ப்பரேட்டுகள் முக்கால்வாசி குடிசை வாழ் பகுதிகளை (slum areas) அழித்தே விட்டார்கள். அதைப் போலவே சென்னை பெருநகரத்திலே இங்கு இருக்கக்கூடிய அடையாறு ஆற்றை அகலப்படுத்துகிறோம் என்ற பெயரிலேயும் தனிப்பட்ட நபர்களின் மிகப்பெரிய கல்லூரிகள், வணிக வளாகங்கள் பயன்பாட்டுக்கு கொடுத்து விட்டு மக்கள் குடியிருப்புகளை அகற்றுகிறார்கள். எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அவர்கள் பெரு முதலாளிகளுக்கும், கார்ப்பரேட்டுகளுக்கும் சார்பாகத்தான் இருக்கிறார்கள் என்பதை இந்த திட்டம் இன்றைக்கு அம்பலப்படுத்தி இருக்கிறது.

ஆகவே முதலில் நாங்கள் கேட்பதெல்லாம், உச்ச நீதிமன்றமோ உயர் நீதிமன்றமோ போட்டிருக்கிற உத்தரவுகளுடைய அடிப்படையான லெட்டர் ஸ்பிரிட் (Letter Spirit) என்று சொல்கிறோமே, அது காட்டிருக்கின்ற வழிகாட்டு அடிப்படையிலே இந்த சர்வே நடத்தப்படாத காரணத்தினால் உடனடியாக வீடுகள் இடிக்கப்படுவதை நிறுத்த வேண்டும் என்று சொல்லி மக்கள் சார்பாக நாங்கள் கேட்கின்றோம்.

அடுத்தபடியாக நீதிமன்றத்தின் கண்காணிப்பிலே இதற்குரிய சுற்றுப்புற சூழலியலாளர்கள், மனித உரிமைப் போராளிகள், அங்குள்ள மக்கள் மற்றும் அதிகாரிகளை சேர்த்து ஒரு குழுவை நியமித்து நீதிமன்றத்தின் கண்காணிப்பில், அடையாறு ஆற்றின் கரை எந்த அளவுக்கு இருக்கிறது, எப்படி ஒரு பக்கத்தில் இருக்கக்கூடிய மிகப்பெரிய வளாகங்களுக்கு பட்டா கொடுக்கப்பட்டிருக்கிறது, மறுபக்கத்திலே பட்டா வாங்கி இருக்கிற எளிய மக்களுடைய வீடுகள் இடிக்கப்படுகின்றன என்பது குறித்தான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும்.

நேற்று ஒருவர், தங்களுக்கு பட்டா இருக்கிறது என்று கூற, அதற்கு ஆணையர் நாங்கள் உத்தரப்படி இடிக்கின்றோம், நீங்கள் கோர்ட்டிலே பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்கிறார். இதே வாதம் ஏன் பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கிற பட்டாவிற்கு வரவில்லை? மிகப்பெரிய ஆட்களுக்கு இதே போல் சொல்லப்படுவதில்லை, ஏன்? ஆகவே, இது ஒரு பாரபட்சம். எல்லாமே இன்றைக்கு மக்களுக்காகத்தான். மக்களுக்கு வீடு கொடுப்பது என்பது அரசின் அடிப்படைக் கடமை. அந்த அடிப்படையிலே அப்படி ஆக்கிரமிப்பு இருந்தால் கூட, அவர்கள் மறுகுடியமர்ப்பு செய்வதற்கான முறையிலே முறையான திட்டம் போட்டு செய்ய வேண்டும். மறு குடியமர்ப்பு என அறிவித்திருக்கிறார்கள். ஆனால், அதற்குரிய முறையானபடி அறிவிக்கவில்லை.

அடையாறு ஆற்றின் கரைகளை முறையாக அளக்காமல், அதற்கான திட்டம் செய்யாமல் வீடுகள் இடிப்பை நிறுத்த வேண்டும். தமிழ்நாடல்ல, இந்தியா முழுக்கவே பல இடங்களில் இதே போன்றே திட்டங்களை எல்லாம் வைத்துக்கொண்டு எளிய மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்துகிறார்கள். அதற்கு பின்னால் பெரும் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், கார்ப்பரேட்டுகள் தான் அதை ஆக்கிரமிக்கிறார்கள். ஆகவே இது மக்களுக்கு எதிரானது.

இன்று முதலமைச்சர் மக்களுடைய குறைகளை சென்று கேட்கிறார். சென்னை நகரத்தில் இருக்கக்கூடிய இந்த குறையையும் அவர் வந்து கேட்க வேண்டும் என கோரிக்கை விடுப்போம். ஊட்டிக்கு சென்று அங்கு மக்களைப் பார்ப்பதை நாங்கள் பாராட்டுகிறோம். அதே சமயம் சென்னை நகரத்துக்குள்ளே 40 ஆண்டுகள் தாண்டியும் வாழ்ந்து கொண்டிருக்கிற இந்த எளிய மக்கள் கட்டி இருக்கிற வீடுகளையும் வந்து பார்க்க வேண்டும்.  எதிர்கட்சிகள் மற்றும் சுற்றுப்புற சூழலியாளர்கள் எல்லாரும் இங்கு வந்து உடனடியாக இடிப்பதை நிறுத்த வேண்டும்.

அடுத்தபடியாக அவர்கள் கொண்டிருக்கக்கூடிய தனியார் சர்வே என்பது ஏற்றுக்கொள்ளவே முடியாதது. சட்டத்தில் அப்படி ஒரு இடமே கிடையாது. அப்படி ஒரு அறிவிப்போ, விதிகளோ (Notification, rules) கிடையாது. சட்டம் என்று சொன்னால் சட்டத்துக்கு ஒரு விதிமுறை உண்டு. ஆகவே அப்படி ஒரு விதிமுறையே இல்லாத ஒரு சர்வே கொண்டு வந்து எப்படி இடிக்க முடியும். அதுமட்டுமல்ல, தனிநபர் குழு என்று சொல்லக்கூடிய ’பொது தனியார் திட்டம்’ என்பதில் எப்படி தனியார் (Private) வந்தார்கள் என்பதற்கான அடிப்படையே இல்லை. இதுவரைக்கும் இப்படி எங்கேயும் சொல்லப்படவில்லை. ஆகவே இது சட்டத்திற்கும், இயற்கை நீதிக்கும் புறம்பானது. அதற்குள் நான் போக விரும்பவில்லை.

இது சட்டத்தின் அடிப்படை மற்றும் இயற்கை நீதிக்கு புறம்பாக இருக்கின்ற காரணத்தினால் இடிப்பதை நிறுத்த வேண்டும். மீண்டும் அவர்களுக்கு குடியமர்த்தும் வகையிலான மாற்று ஏற்பாடுகள் அங்கு செய்ய வேண்டும். அடுத்தபடியாக முறையான சர்வே செய்ய வேண்டும். ஜி.பி.எஸ் என்பதை இன்றைக்கு வரைக்கும் அரசோ, மற்றவையோ ஒரு முடிவான சாட்சி என்று ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகவே அதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆறு காப்பதற்காக போராடுபவர்கள் தான் இவர்கள், நாங்கள் எல்லோருமே. ஆகவே நீர்வழி பாதைகள், நீர் நிலைகளிலே ஆக்கிரமிப்பு அகற்றுவதிலே மாறுபாட்டுக்கான கருத்தே கிடையாது. ஆனால் அதை உயர்நீதிமன்றத்தினுடைய, உச்சநீதிமன்றத்தினுடைய உத்தரவு என்று தனக்கு சாதகமாக வைத்துக் கொண்டு ஆகும் விளையாட்டு என்பதுதான் என்னுடைய கருத்து.

ஆகவே வீடு இடிப்பு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். மறு அளவைக்கு உட்படுத்த வேண்டும். அந்த மறு அளவைக்கான சரியான வரையறைகள் கொடுக்கப்பட வேண்டும். நீதிமன்ற கண்காணிப்பில் சுற்றுப்புற சூழலியலாளர்கள், மக்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்களைக் கொண்ட ஒரு குழு அமைத்து செய்யப்பட வேண்டும் என்பது என்னுடைய கோரிக்கையாகும்

தோழர். வெற்றிச் செல்வன் அவர்களின் கருத்து :

நான் பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சார்ந்திருக்கிறேன். இந்த நிகழ்வை பொறுத்தவரைக்கும் அடிப்படையில் ஒரு நீர்நிலையை பாதுகாப்பதில் எடுக்கக்கூடிய நடவடிக்கையில் யாருக்கும் ஒரு மாறுபட்ட கருத்து இருக்காது. ஆனால் நீர்நிலையை பாதுகாப்பது என்றால் என்ன? பாதுகாப்பு (Conservation) என்றால் என்ன? மறுசீரமைப்பு (Restoration) என்றால் என்ன? என்பதை தெரிய வேண்டும். மறுசீரமைப்பு என்பது அந்த நீரினுடைய அசல் நிலை (Original position) நிலைக்கு கொண்டு போக வேண்டும். அதாவது அடையாறு ஆறு முன்பு எப்படி இருந்ததோ அந்த நிலைமையை மீட்டுருவாக்கம் செய்தல் ஆகும். அப்படி மீட்டுருவாக்கம் செய்வதற்கான வேலைகள் தான் இப்போது நடைபெறுகிறதா? அந்த மறுசீரமைப்பு தான் செய்கிறார்களா? அந்த பாதுகாப்பு தான் செய்கிறார்களா என்கிற கேள்விகள் இருக்கின்றன. இதை எப்படி புரிந்து கொள்வது என்றால், இதற்கான சட்டங்கள் இருக்கின்றன.

தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும் ஆங்கிலேய ஆட்சி காலத்திலேயே நீர்நிலைகளைப் பாதுகாப்பதற்காக ‘மெட்ராஸ் நதிகள் பாதுகாப்புச் சட்டம்’ (The Madras Rivers Conservancy Act) என்று கொண்டு வந்தார்கள். 1884-ல் கொண்டு வந்த சட்டமிது. தமிழ்நாடு நதி பாதுகாப்புச் சட்டம் 1884- சட்டத்தினுடைய பிரிவு 2 மற்றும் 3 மிகவும் முக்கியமானது. அது என்ன சொல்லுகிறதென்றால், நீர்நிலைகளை பாதுகாப்பதற்கு முதலில் அதை அளக்க வேண்டும் என்கிறது. இப்போது 42 கிலோமீட்டர் ஓடுகிறது அடையாறு. அது ஆரம்பப் புள்ளியில் இருந்து, கடலில் போய் கலக்கின்ற வரை இடைப்பட்ட இடத்தில் அதனுடைய நீளம், அகலம், பரப்பளவு என்ன என்பதைப் பொறுத்து தண்ணீர் கொள்ளளவு அமையும்.

அடையாறு எந்த ஏரியாவில், எந்த வடிகால் பகுதியில் இருக்கிறது. எவ்வளவு வயல் வெளிகளுக்கு பயன்படுகிறது என்பது குறித்தெல்லாம் அரசு ஆவணங்களில் இருக்க வேண்டும். அது பொதுமக்களுடைய பார்வைக்கு இருக்க வேண்டும் என்கிற சட்டம் அப்பொழுதே வந்து விட்டது. அப்படியென்றால் PWD (பொதுப்பணித்துறை) ஆவணங்களில் இது  கண்டிப்பாக இருக்கும்.

இரண்டாவது 2007ஆம் ஆண்டு ’தமிழ்நாடு குளங்கள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றுதல் சட்டம்’ என்று கொண்டு வந்தார்கள். இது உயர் நீதிமன்றத்தின் வழக்குக்கு பின்பாக கொண்டு வரப்பட்ட முக்கியமான ஒரு சட்டம். இந்த சட்டத்திலும் பிரிவு 3 மற்றும் 4 என்ன சொல்கிறதென்றால், எல்லா நீர்நிலைகளையும் ஆய்வு செய்ய வேண்டும். சர்வே செய்ய வேண்டும், அதனுடைய கொள்ளளவு என்ன என்பதை பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும், அதற்குப் பின்பாக அதில் ஆக்கிரமிப்பு இருந்தால் அவர்களுக்கு நோட்டீஸ் கொடுத்து அவர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று சொல்கிறது. இதுதான் நீர்நிலை பாதுகாப்பதற்காக இருக்கக்கூடிய சட்டங்கள்.

இப்பொழுது இங்கு என்ன நடந்திருக்கிறது என்பது தான் கேள்வியாக இருக்கிறது. 2008 ஆம் ஆண்டு சென்னைக்கான ‘இரண்டாவது மாஸ்டர் பிளான்’ கொண்டு வருகிறார்கள். அதில் சென்னையில் இருக்கக்கூடிய சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் என்னென்ன என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். அதில் அடையாறு இருக்கிறது, கூவம் இருக்கிறது, கொசஸ்தலை ஆறு இருக்கிறது, பக்கிங்காம் கேனல் இருக்கிறது, பள்ளிக்கரணை சதுப்பு நிலம் இருக்கிறது. நான் சொல்லக்கூடிய இந்த ஐந்துமே ‘சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலம்‘ (Eco Sensitive Zone). ஆனால் இந்த ஐந்து நிலைகளின் சர்வே என்ன என்பது குறித்து மாஸ்டர் பிளானில் கிடையாது. சிஎம்டிஏ-வின் இணையதளத்திலும் கிடையாது. எதிலும் கிடையாது. இந்த ஐந்தும் பாதுகாக்கப்பட்ட மண்டலங்கள். பள்ளிக்கரணை மேம்பாட்டு மண்டலம் இல்லை. அப்படி என்றால் அங்கு யாரும் வீடு கட்டக் கூடாது. அப்படி என்றால் இந்த  சர்வேக்குள் அது வருகிறது. அதை பாதுகாக்கப்பட்ட வனம் (Protected forest) என்று அறிவித்து விட்டார்கள். அந்த அறிவிப்பு இன்று வரைக்கும் பொதுமக்கள் பார்வையில் இல்லை.

ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதி என்றால் என்னவென்று முதலில் சொல்ல வேண்டும். அப்படி சொன்னால் தான் இங்கு வீடு கட்டலாமா, வேண்டாமா என்பது தெரியும். இதுதான் ஆறு என்று சொல்லாத போது, அடையாரினுடைய கொள்ளளவு இதுதான் என்று பொதுமக்கள் பார்வையிலே இல்லாத பொழுது, அந்த இடத்தில் எப்படி வீடு கட்டினீர்கள் என்று எப்படி கேட்க முடியும்? இது பிரச்சனை எண் ஒன்று.  உண்மையிலேயே நீர்நிலை பாதுகாக்க வேண்டும் என்றால், இதுதான் அடையாறு ஆறு என்று அறிவிப்பாணை வெளியிட வேண்டும். இதுதான் அதனுடைய சர்வே என்று வெளியிட வேண்டும்.

இரண்டாவதாக உயர் நீதிமன்றத்தினுடைய உத்தரவுப்படிதான் இதை செய்வதான ஆணையை நேற்று (21.05.2025) வந்து வெளியிட்டிருக்கிறார்கள். உயர்நீதிமன்றம் என்ன சொல்லி இருக்கிறது? இந்த விடுமுறை கால அமர்வில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் லட்சுமிநாராயணன் அடங்கிய அந்த அமர்வு என்ன தீர்ப்பு கொடுக்கிறார்கள் என்றால், தனி நபர் வழக்கில் தீர்ப்பு கொடுக்கிறார்கள். அதாவது மூன்று பேர் நீதிமன்றம் சென்று எங்கள் வீடுகளை இடிக்கக் கூடாது என்று வழக்கு போடுகிறார்கள். அந்த வழக்கு  அன்றைக்கே விசாரணையை வந்து, அன்றைக்கே தள்ளுபடி செய்கிறார்கள். அந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் என்ன சொல்கிறார் என்றால், சர்வே 113 என்பது ஆக்கிரப்பு என்று வருவாய்துறை ஆவணத்தில் இருக்கிறது. அது என்ன ஆவணம் என்பதைப் பற்றி நீதிமன்றம் பதிவு செய்யவில்லை. வருவாய் துறை ஆவணம் என்கிறார்களே ஒழிய பதிவு செய்யவில்லை. நமக்கு அதுதான் என்னவென்று தெரியவில்லை.

ஒருவர் ஆக்கிரமிப்பாளர் எனக் கண்டறிந்து விட்டு, அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்வது சரியானதுதான். ஆனால் போகிற போக்கில் என்ன சொல்கிறார்கள் என்றால் நாங்கள் பத்திரிக்கை செய்தியில் பார்க்கின்றோம், பத்திரிக்கையில் குடிசைவாசிகள் என்கிற ஒரு பிரிவினர் இருக்கிறார்கள், இவர்கள் காசு வாங்கிக்கொண்டு நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்வதற்கான வழிவகை செய்கிறார்கள். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே ஆக்கிரமிப்புகள எல்லாம் மூன்று மாதத்திற்குள் அப்புறப்படுத்த வேண்டும் என்று ஆணையிடுகிறார்கள். இப்போது பிரச்சனை என்னவென்றால் யார் ஆக்கிரமிப்பாளர் என்று கண்டறியவில்லை. வழக்காடு மன்றத்துக்கு முன்பாக அவர்கள் இல்லை.

கடந்த காலங்களில் இந்த பகுதி சார்ந்திருக்கக்கூடிய வழக்குகள் எல்லாம் வருகின்ற போது உயர்நீதிமன்றம் சர்வே செய்யச் சொன்னார்கள். இன்றைக்கு வரைக்கும் அந்த சர்வே முழுமையாக செய்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. ஒட்டுமொத்த ஏரியாவையும் சர்வே செய்ய வேண்டும் என்பதுதான் அதனுடைய அர்த்தம். அடையாறு பகுதியை முழுமையாக சர்வே செய்து இதுதான் அதனுடைய கொள்ளளவு, இதன் ஆக்கிரமிப்பு இவ்வளவு என்று அறிவிக்க வேண்டும். அந்த வேலையை செய்யவில்லை. கடந்த 2023 ஆம் ஆண்டு கூட உயர்நீதிமன்றம் ஒரு வழக்கில், முதலில் சர்வே செய்யுங்கள் என்று தெளிவாக சொல்லி விட்டார்கள். அதற்குப் பிறகு அந்த மக்கள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். இப்ப சமீபத்தில் இந்த 16/5 –ல் வந்திருக்கக்கூடிய இந்த தீர்ப்பில் கூட, ஆக்கிரமிப்பு என்கிற வார்த்தையை பயன்படுத்துகிறார்கள். ஆனால் யார் ஆக்கிரமிப்பாளர், யார் இடத்தை ஆக்கிரமிப்பு செய்திருக்கிறார் என்பதை, தனியாக கண்டறிந்து செய்ய வேண்டும். அதுதான் சட்டம். 

2007-ஆம் ஆண்டு சட்டம் என்ன சொல்கிறது என்றால் தனியாக நோட்டீஸ் கொடுக்க வேண்டும். ஒருவர் நீர்நிலை ஆக்கிரமிப்பு செய்திருக்கிறார் என்றால், சர்வே செய்து, அவரிடம் நோட்டீஸ் கொடுக்க வேண்டும். அவரின் விளக்கத்தை கேட்க வேண்டும். விளக்கம் ஏற்றுக்கொள்ளும்படி இருந்தால் விட்டுவிடலாம், இல்லையென்றால் நடவடிக்கை எடுக்க வேண்டும். இடிப்பதற்கான நோட்டீஸ் கொடுக்க வேண்டும். அதற்கான உத்தரவு கொடுக்க வேண்டும் அதற்குப் பிறகு தான் வர வேண்டும். ஒரே நாளில் போய் ஜேசிபியை கொண்டு போய் முழுமையான எல்லா வீடுகளையும் இடித்து தள்ளுவது என்பது எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாதது.

நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டும் என்றால் முதலில் நீர்நிலை என்றால் என்ன?, அதனுடைய ஏரியா என்ன என்பதை முதலில் வரையறை செய்ய வேண்டும். அதை செய்யாத வரைக்கும் இப்படியான நடவடிக்கைகள் தோழர்கள் குறிப்பிட்டது போல பாரபட்சமானதுதான். இப்போது என்ன பிரச்சனை ஏற்படுகிறது என்றால், ஒன்றை (காசா கிராண்டு) விட்டு விட்டு மற்றொன்றை (குடியிருப்பு) மட்டும் இடிப்பது ஏன் என்கிற கேள்வி வருகிறது. இதற்கு காரணம், எது அடையாறு என்றே தெரியவில்லை.

அரசின் 2023 ஆம் ஆண்டின் தலைமை கணக்காளர் கட்டுப்பாட்டு அறிக்கை எண் இரண்டில் ஒரு ஆய்வு அறிக்கை வெளியிடுகிறார்கள். அதில் பிரதம மந்திரியுடைய வீடு கட்டும் திட்டத்தின் கீழாக, நிறைய நீர்நிலைகளில் அரசே வீடு கட்டி இருக்கிறது என்று சொல்கிறார்கள். பறக்கும் ரயில் இருக்கிறதே, அதுவே, நீர்நிலையில் தான் இருக்கிறது. ஆக்கிரமிப்பைப் பொறுத்தவரைக்கும் ”சட்டப்படியான ஆக்கிரமிப்பு, சட்டப்படியில்லாத ஆக்கிரமிப்பு” என்கிற இரண்டு இருக்கிறதா? இந்த வேறுபாட்டை தான் நாங்கள் சுட்டிக்காட்டுகிறோம்.

இப்போது என்ன நடக்க வேண்டும் என்றால், முதலில் வரையறை செய்ய வேண்டும். அதற்குப் பிறகு யார் ஆக்கிரமிப்பாளர் என்று கண்டுபிடிக்க வேண்டும் அதற்குப் பின்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் சரியாக இருக்கும். இயற்கை நீதி பின்பற்றப்பட வேண்டும். அறிவியல் ரீதியான ஆணையை அரசு பின்பற்ற வேண்டும். இன்னும் சொல்லப்போனால் நீர்நிலை பாதுகாக்க வேண்டும் என்றால், அதற்கான ஒரு சுற்றுப்புறவியல் மேலாண்மை திட்டம் வேண்டும். அதற்குப் பிறகு நீர்நிலை பாதுகாப்பு இருக்கலாம். இன்னும் அடிப்படையான இயற்கை பார்வையில் இருந்து பார்க்க வேண்டும் என்றால், நீர்நிலைகளைப் பாதுகாக்க சும்மா இருந்தாலே போதும். நதி தன்னை பாதுகாத்துக் கொள்ளும். நதியின் மீது நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருக்க வேண்டும். ஆனால் எல்லா நதிகளின் மீதும் ஆக்கிரமிப்பை நாம்தான் மேற்கொண்டிருக்கிறோம். 

அரசினுடைய இந்தப் பாகுபாடு தான் இங்கு பிரச்சனையாக இருக்கிறது. அந்த வகையில் நாம் முன்வைக்கக்கூடிய கோரிக்கை என்னவாக இருக்கின்றதென்றால், அடிப்படையில் நீர்நிலைகள் என்ன என்பதை தெளிவுபடுத்துங்கள். அதற்குப் பின்பாக யார் ஆக்கிரமிப்பாளர்கள் என்பதை தெளிவுபடுத்துங்கள். மூன்றாவதாக நீர்நிலைகளை குடியிருப்புப் பகுதியாக மாற்றுவதற்கான அரசாணைகள் கடந்த காலங்களில் பிறப்பிக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் 2020-ல் பிறப்பித்திருக்கிறார்கள். அதன் அடிப்படையில் சில நபர்களை மட்டும் நீர்நிலை ஆக்கிரமித்துக் கொண்டு அங்கு வீடு கட்டிக் கொள்ளலாம் என்று அனுமதிக்கிறீர்கள் என்கின்ற அந்த விஷயங்களை முன்வைக்க வேண்டும். இவ்வளவு வெளிப்படைத் தன்மைகள் வேண்டும்.

அரசிடம் வைக்கக்கூடிய கோரிக்கைகள் என்னவென்றால், பாதுகாக்கப்பட்ட சூழலியல் பகுதிகள் என்ன என்று சிஎம்டிஏவினுடைய மாஸ்டர் பிளானில் வரையறுத்திருக்கீறீர்களா? அதனுடைய சர்வே நம்பர் வேண்டும். ஆக்கிரமிப்பாளர்கள் என்று முடிவு செய்தால் முறையான அனைத்தையும் செய்து விளக்கமளித்த பின்பே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இறுதியாக ஒன்றுதான், சூழலியல் நீதி இல்லாமல் சமூக நீதி இல்லை. சமூக நீதி இல்லாமல் சூழலியல் நீதி இல்லை.

தோழர். திருமுருகன் காந்தி கருத்துகள்

அனகாபுத்தூரில் இடிக்கப்பட்டது என்பது அநீதியானது. அது நியாயமானது என்று இன்றைக்கு வரைக்கும் அரசாங்கம் சொல்லவில்லை. இதுவரைக்கும் அரசாங்கம் அதை நியாயமானது என்று நிரூபிக்கவும் இல்லை. நாங்கள் நேரடியாக அங்கு இருக்கக்கூடிய அதிகாரிகளைப் பார்த்து, ஆற்றின் எல்லை எதுவென்று கேட்டோம். ஆற்றின் எல்லையை வரையறை செய்த எந்த மேப்பையும் காட்டவில்லை. எந்த சர்வேயும் காட்டவில்லை. ஆற்றின் எல்லை என்று அரசாங்கத்தின் நீர்வளத்துறையினால் ஒரு கல் நடப்பட்டிருக்கிறது. அந்தக் கல்லுக்கு

மேற்புறமாகத்தான் மக்கள் குடியிருப்பு இருக்கிறது. இதுதான் வெளிப்படையான உண்மை. அப்படி என்றால், மக்கள் ஆற்றங்கரையில இல்லை. அனகாபுத்தூரில் அந்த மக்கள் ஆற்றங்கரையில் இல்லை. இதுதான் உண்மையானது.

ஆற்றங்கரையில் யார் இருக்கிறார்கள் என்றால், இந்த மக்கள் குடியிருப்புக்கு எதிர்ப்புறத்தில மாதா பொறியியல் கல்லூரியும், காசா கிராண்ட்டும் இருக்கிறது. அதற்கு அருகாமையில் இன்னொரு காசா கிராண்ட் இருக்கிறது. இரண்டு கட்டடங்கள் இருக்கின்றன. அதிலிருந்து ஒரு கிலோமீட்டரில் இன்னொரு காசாகிராண்ட் நிறுவனம் இருக்கிறது. இவையெல்லாம்தான் எங்களுக்கு கேள்விகளாக இருக்கின்றன.

அனகாபுத்தூரில் அநீதி நடந்திருக்கிறது. பெரிய நிறுவனங்களுக்கு சாதகமாக அதிகாரிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த பிரச்சனை பெரிதாகி விடக்கூடாது, அதற்கு முன்பாகவே எல்லா வீடுகளும் இடிக்கப்பட வேண்டும் என்கின்ற நோக்கத்திற்கு மட்டும் தான் அரசு செயல்படுகிறதே ஒழிய, நீதி வழங்க வேண்டும் என்கின்ற நோக்கத்தில் அரசு செயல்படவில்லை என்று பகிரங்கமாக நாங்கள் குற்றம் சாட்டுகிறோம்.

அதிகாரிகள் கொடுக்கக்கூடிய தகவலின் அடிப்படையிலே எந்த முடிவும் எடுப்பதற்கு முன்பு, சட்டமன்றத்தில் விவாதம் செய்திருக்க வேண்டும். இத்தனை மக்களை வெளியேற்றுகிறீர்கள். இது குறித்து என்ன விவாதம் என்ன கொள்கை உருவாக்கம் நடந்திருக்கிறது என்றால், இதுவரைக்கும் எதுவும் இல்லை இதுவரைக்கும் அரசும் பதில் சொல்லவில்லை. இத்தனை போராட்டம் நடந்திருக்கிறது. இதுவரைக்கும் அரசு அதிகாரிகளோ அல்லது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளோ, அமைச்சர் பெருமக்களோ யாரும் ஊடகத்தை சந்தித்து விளக்கம் தரவில்லை.

இது இரண்டு வருஷமாக நடக்கக்கூடிய பிரச்சனை. இது அனகாபுத்தூர் மக்களுக்கு மட்டுமல்ல அடையாறு ஆற்றங்கரை, கூவம் ஆற்றங்கரை, கொசஸ்தலை ஆற்றினுடைய கரை, பக்கிங்காம் கால்வாயினுடைய கரை என அனைத்து ஆற்றங்கரைகளிலும் நடக்கிறது. இந்த பக்கிங்காம் கால்வாயில் 2000 வீடு இடிக்கப்பதற்கான அறிவிப்பாணை கொடுத்திருக்கிறார்கள். இதே முறைதான் நடக்கிறது.

குடிசைகளில் இருந்து வெளியேறக்கூடிய கழிவு நீரை தடுப்பதற்காக செய்வதாக சொல்கிறார்கள். ஆற்றங்கரையை வலுப்படுத்துறீர்களா அல்லது மாசுபடுத்துவதை தடுக்கிறார்களா என்பவற்றை குறித்து எந்தவிதமான தெளிவான அறிக்கைகள் இதுவரைக்கும் இல்லை. குடிசைகளில் இருந்து வரக்கூடிய கழிவு நீர்தான் ஆற்றை மாசுபடுத்துகிறது என்றால், அங்கு இருக்கக்கூடிய பெரிய நிறுவனங்களுடைய கழிவு நீர் என்ன செய்யும்? அதற்கு ஏதாவது அறிக்கை இருக்கிறதா என்றால் எந்த அறிக்கையும் இல்லை. 

இந்த மாதிரியான ஒரு குழப்பமான விடயத்தில் அவசரம் அவசரமா அந்த வீடுகள் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மிகவும் குறிப்பான எங்களுடைய கவலை என்னவென்றால், 500க்கும் மேற்பட்ட குழந்தைகளினுடைய கல்வி பாதிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு தமிழ்நாடு அரசு பதில் சொல்ல வேண்டும். நீங்கள் கொண்டு போய் நான் மறுக்குடியமர்ப்பு செய்கிறோம் என்று 20/30 கிலோமீட்டர் தள்ளி போட்டால் குழந்தைகள் எந்த பள்ளிக்கூடத்தில் படிக்கும்? அதற்கான வசதி என்ன இருக்கிறது?

ஏற்கனவே கண்ணகி நகரில் இப்படித்தான் கொண்டு போய் குப்பை மாதிரி எல்லா மக்களையும் கொட்டுனீர்கள். கண்ணகி நகர் பெரும்பாக்கத்தில் உயர்நிலைக் கல்விப் பள்ளிக்கூடங்கள் எத்தனை இருக்கிறது? எத்தனை மேல்நிலைக் கல்விக்கூடங்கள் இருக்கிறது? எத்தனை கல்லூரிகள், அரசு கல்லூரிகள் இருக்கிறது? இதுவரைக்கும் இல்லை. ஏதாவது அரசு மருத்துவமனை இருக்கிறதா? இருந்தால் எத்தனை பேருக்கு சிகிச்சை பண்ண முடியும், ஏதாவது கணக்கு இருக்கிறதா, எந்த கணக்கும் கிடையாது. இத்தனை லட்சம் மக்களை கொண்டு போய் கொட்டுகிறீர்கள். இது திரும்ப திரும்ப நடந்து கொண்டே இருக்கிறது.

ஆகவே மக்களிடத்தில் நாங்கள் தெரிவித்துக் கொள்வது என்பது இது நேர்மையாக நடக்கவில்லை. அரசு சொல்லக்கூடிய ஒரு காரணம் கூட உண்மையான காரணங்கள் கிடையாது. அரசு பொய் சொல்கிறது என்பதைத்தான் நாங்கள் சொல்ல வேண்டிய திருக்கிறது. ஆகவே நாங்கள் இது குறித்து எந்தவிதமான விளக்கமும் அளிப்பதற்கு தயாராக இருக்கின்றோம். நீதிமன்றத்தில் மட்டுமல்ல, மக்கள் மன்றத்தில் மட்டுமல்ல, ஊடகத்தில் பதில் சொல்லவும் தயாராக இருக்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »