அதானி ஆதிக்கத்தில் புதுச்சேரி அரசியல்!
காரைக்கால் துறைமுகத்தை கையப்படுத்தும் அதானியும், புதுச்சேரி அரசியலை ஆக்கிரமிக்கும் பாஜகவும்.
பின்வாசல் வழியாக ஆட்சியை கைப்பற்றுவது பாஜகவிற்கு புதிதல்ல. பாஜகவின் நிழலாக குஜராத்தி பனியாக்கள் அம்மாநிலத்திற்குள் நுழைவதும் வாடிக்கையாகிவிட்டது. இந்த சிலந்திவலையில் தற்போது புதுச்சேரியின் அரசியலும், காரைக்காலின் துறைமுகமும் சிக்கி இருக்கிறது.
புதுச்சேரி மாநிலத்தின் காரைக்கால் துறைமுகத்தை கையகப்படுத்த அதானி நிறுவனம் முனைந்து வருகிறது. காட்டுப்பள்ளி துறைமுகத்தை கையகப்படுத்த கடுமையான எதிர்ப்பை தமிழ்நாட்டில் சந்தித்ததை போல புதுச்சேரியிலும் அதானி எதிர்கொள்வதை பாஜகவும்-அதானியும் விரும்பவில்லை. இதனாலேயே நாராயணசாமி அரசியலுக்கு முடிவுகட்டி அதிகாரத்தை கைப்பற்ற பாஜக தீவிர முயற்சி எடுத்தது. புதுச்சேரி தேர்தலில் அதீத கவனத்தை பாஜக செலுத்தியதற்கான காரணங்களில் அதானியின் துறைமுக விருப்பமும் முக்கிய காரணி. காரைக்காலில் தன் திட்டங்களை தொடர வேண்டுமானால் பாஜகவின் கையில் அதிகாரம் குவிய வேண்டுமென்பது அதானிக்கு தெரிந்த ஒன்று. புதுச்சேரி தேர்தலில் இதுவரையில்லாத அளவிற்கு பணப்பட்டுவாடா நடந்ததன் பின்னனியில் அதானியின் பங்களிப்பு முக்கியமானது. இல்லையெனில் ஒரு சிறிய மாநிலத்தின் அரசியலுக்கு பெரும் முக்கியத்துவத்துவத்தை பாஜக கொடுக்க தேவை ஏற்பட்டிருக்காது. தமிழ்நாட்டு அரசியலுக்குள் கால் வைக்க புதுச்சேரியை பரிசோதனை முயற்சியாக பாஜக எடுத்தாலும், இரு மாநிலங்களின் அரசியலும் முற்றிலும் வேறான தளத்தில் இயங்குபவை. தேர்தல் முடிவுகள் வெளியாகி நாற்பது நாட்களைக் கடந்த பின்னும் அமைச்சரவை அமைக்காமல் இருப்பதற்கான காரணிகளில் அதானியும் ஒன்றாக இருப்பதற்கு அதிக சாத்தியக்கூறுகள் உண்டு.
கொழும்பு கிழக்கு கண்டெயினர் துறைமுகத்தினை அதானிக்கு பெற்றுக்கொடுப்பதில் மோடி அரசு பலமுறை முயன்று தோற்றது. ஆறுதலாக மேற்கு கண்டெயினர் துறைமுகம் கிடைப்பதாக செய்திகள் மட்டும் வெளியாகின. அதே போல சென்னையின் வடக்கில் காட்டுப்பள்ளி துறைமுகத்தை பெறுவதலும் இடையூறையும், மக்கள் எதிர்ப்பையும் எதிர்கொண்டிருக்கிறது அதானி. வங்காளவிரிகுடா கடற்பகுதியில் தனக்கான துறைமுகத்தை உருவாக்குவது அதானியின் நிலக்கரி இறக்குமதி, அனல்மின்நிலைய தொழில்களுக்கு மிக அத்தியாவசியமானது. இந்தோனோசியாவின் தனது நிலக்கரி சுரங்கங்களிலிருந்து, ஆஸ்திரேலியாவின் நிலக்கரி எடுத்து ஏற்றுமதி செய்வது வரை அதானியின் தொழிலுக்கு தமிழ்நாட்டின் கடற்கரையில் பல துறைமுகங்கள் தேவைப்படுகின்றன. இதில் காட்டுப்பள்ளி, செய்யூர், காரைக்கால், கோவளம் (கீழமணக்குடி-கன்னியாக்குமரி) என தொடர் துறைமுகங்கள் அதானி பட்டியலில் உள்ளன.
காரைக்காலில் ஏற்கனவே மார்க் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்பட்டு நிலக்கரி இறக்குமதி நடந்து கொண்டிருக்கிறது. காரைக்காலில் நிர்வகிக்கப்படும் இறக்குமதி-ஏற்றுமதி அளவை விட அதானி மிகப்பெருமளவில் விரிவாக்கம் செய்ய இருக்கிறது என்பதை கட்டுரையின் பிற்பகுதியில் காணலாம். மார்க்கின் நிலக்கரி இறக்குமதி பணியால் அருகேயுள்ள நாகூர் மற்றும் இதர கிராமப்பகுதியில் நிலக்கரி தூசு மாசுபாடு அதிகரித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. காரைக்காலில் வெளியாகும் நிலக்கரி தூசு நாகூர் தர்காவின் மணிக்கூண்டுகளில் படிவதை நம்மால் காணமுடியும். இந்நிலையில் அதானி தனது கையாளும் திறனை அதிகரிக்க மேலதிக நிலத்தையும், கடற்கரை பகுதியையும் கையகப்படுத்தவோ, விரிவுபடுத்தவோ செய்ய வேண்டி வருமெனில் மக்களின் எதிர்ப்பு அதிகரிக்கும். இதனை எதிர்கொண்டு அடக்கிட பாஜகவின் ஆட்சி அதிகாரம் அதானிக்கு தேவைப்படுகிறது.
கன்னியாக்குமரியின் கீழமணக்குடி-கோவளம் துறைமுகம் அதானிக்கான ஆஸ்திரேலிய நிலக்கரி இறக்குமதிக்கான இடமாகவும், கண்டெயினர் தளமாகவும் திட்டமிட்டது பாஜக. இதனாலேயே பொன்.ராதாகிருஸ்ணன் பாராளுமன்ற தேர்தலிலும், அதன் பின்னரான இடைத்தேர்தலிலும் வெற்றிபெற கடும் முயற்சிகளை பாஜக எடுத்தது. அமித்ஷாவே நாகர்கோவில் வீதிகளில் இறங்கி பிரச்சாரம் செய்தார். இந்த பின்னனியிலேயே புதுச்சேரி பிரச்சாரமும் பாஜகவால் தீவிரப்படுத்தப்பட்டது. இதே நிலை செய்யூருக்கும் வரலாம் எனும் நிலையிலேயே மே பதினேழு இயக்கத் தோழர்கள், விடுதலை சிறுத்தை தோழர் வெற்றிக்காகவும் அதிமுகவின் தோல்விக்காகவும் பிரச்சாரம் மேற்கொண்டனர். 2014 பாராளுமன்ற தேர்தலின் போதும் செய்யூர் அதானி துறைமுக முயற்சிக்கு எதிரான பிரச்சாரத்தை அத்தொகுதியில் மேற்கொண்டனர். 2021 தேர்தலில் காரைக்காலுக்கு அண்டைய தொகுதியான நாகூர் தொகுதியிலும் கடுமையான பிரச்சாரத்தை ஆளுர் ஷா நவாசுக்காக மேற்கொண்ட பொழுதும் இந்த காரைக்கால் துறைமுக பிரச்சனை பிரச்சாரம் செய்யப்பட்டது. 2018ல் எஸ்.டி.பி,ஐ காரைக்கால் துறைமுக முற்றுகை போராட்டத்தை நடத்தியதில் மே பதினேழு தோழர்களும், திருமுருகன் காந்தியும் பங்கெடுத்தனர். இதன் தொடர்ச்சியே 2021 தேர்தல் பிரச்சாரமும். ஆகவே அதானியின் இந்த ஆபத்தான துறைமுக அரசியலுக்கு எதிராக தீவிரமாக இயங்க வேண்டியதின் தேவையும் எழுகிறது. இந்த முதலீடுகளின் பின்னனியில் புதுச்சேரி அரசியலை மீள்பார்வை பார்க்கலாம்.
புதுச்சேரியில் பாஜகவின் ஆதிக்க அரசியல்:
2016 இல் புதுச்சேரியின் கவர்னராக பதவி ஏற்ற உடன் கிரண் தன்னுடைய சனநாயக விரோத வேலைகளை தொடங்கிவிட்டார் பா.ஜ.க வால் நியமிக்கப்பட்ட கிரண் பேடி. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றம் செயல் படுவதை கிரண் பேடி தடுப்பதாக அம் மாநிலத்தின் அப்போதைய முதல்வர் நாராயணசாமி பல முறை பிரதமர், ஜனாதிபதி போன்றவர்களை சந்தித்து புகார் கொடுத்துள்ளார். அதை கண்டித்தும் 3 நாட்களுக்கு மேல் உண்ணாவிரதம் எல்லாம் அம்மாநில முதல்வர் இருந்ததெல்லாம் புதுச்சேரியில் நடந்தேறின.
2021 தேர்தலில் என்.ஆர்.ரங்கசாமி தலைமையில் பா.ஜ.க வின் 6 எம்.எல்.ஏ க்களின் ஆதரவோடு மே 7 ஆம் தேதி ஆட்சியமைத்தார். பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் முதலாளிகளுக்கு கொண்டாட்டம் தான். அதுவும் குறிப்பாக அதானி என்ற குஜராத்தி முதலாளி, யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே என்பது போல் பா.ஜ.க அரசியல் அதிகாரம் செலுத்தும் இடத்தில் எல்லாம் பின்னாலே தொழில் தொடங்க வந்துவிடுவார். புதுச்சேரியிலும் அதுதான் நடந்துள்ளது.
காரைக்கால் துறைமுகத்தை வாங்கப் போகும் அதானி:
பா.ஜ.க கூட்டணியில் ஆட்சி அமைந்த ஒரு மாதத்திற்குள் இதோ காரைக்காலின் துறைமுகத்தை வாங்க அதானி வந்துவிட்டார். மே 30 ஆம் தேதி சென்னையை சேர்ந்த மார்க் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான தனியார் துறைமுகமான காரைக்கால் துறைமுகத்தை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளது தெரிவித்துள்ளது அதானி போர்ட்ஸ் மற்றும் எஸ்.இ.ஜி.(SEZ). இன்றைய நிலவரப்படி காரைக்கால் துறைமுகத்துக்கு 2000 கோடி அளவுக்கு கடன் இருக்கிறது.
இவ்வளவு கடன் உள்ள நிறுவனத்தை ஏன் அதானி வாங்க வேண்டும்? மோடி ஆட்சியில் குஜராத்தின் பணக்காரர் என்ற நிலையில் இருந்து இன்று ஆசியாவின் முன்னணி பணக்காரராக மாறியுள்ள அதானி இதிலிருந்து எப்படி லாபம் சம்பாதிக்கப்போகிறார்? அதை புரிந்துகொள்ள காரைக்கால் துறைமுகத்தின் பயன்பாடு பற்றி சிறுது தெரிந்து கொள்ளவேண்டும்.
காரைக்காலை சுற்றி குவியும் முதலீடுகள்:
கரி, உரம், சிமெண்ட், கச்சா எண்ணெய், பெட்ரோலிய பொருட்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு தேவையான எண்ணெய்கள் போன்றவைகளை கையாளும் வகையில் நிர்மாணித்து கட்டப்பட்டது காரைக்கால் துறைமுகம். இந்த பகுதியை சுற்றி ஏற்கனவே பெட்ரோ கெமிக்கல் ஆலைகள் உள்ளன. நாகபட்டினத்தில் சி.பி.சி.எல் யின் ஆலை, கடலூரில் பயன்பாட்டுக்கு வராத NOCL ஆலை ஆகியவை புதிய முதலீடுகளை ஈர்த்துள்ளன. எடப்பாடி அரசு கடலூர் மற்றும் நாகபட்டினத்தில் 45 கிராமங்களை உள்ளடக்கி பெட்ரோ கெமிக்கல் மண்டலமாக(PCPIR) அறிவித்து எதிர்ப்பு வந்த பின்னர் அதை திரும்பப்பெற்றது நினைவிருக்கலாம். ஆனால் திரும்பப் பெரும் அறிவிப்பு மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஹால்தியா மற்றும் சி.பி.சி எல் இன் 86320 கோடி முதலீட்டுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் வெளியிடப்பட்டுள்ளது. ஹால்தியா நிறுவனம் கடலூரில் 56230 கோடி மதிப்பீட்டில் பெட்ரோ கெமிக்கல் காம்ப்ளக்ஸ் சும் நாகப்பட்டினத்தில் சி.பி.சி.எல் புதிய கச்சாஎண்ணெய் சுத்திகரிப்பு ஆலையையும் அமைக்க வேலைகளை தொடங்கிவிட்டன.
அதானியின் லாபக் கணக்கு:
கடலூரில் அமைப்போகும் பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலைக்கு தேவைப்படும் கச்சா எண்ணெய் காரைக்கால் துறைமுகம் வழியாகத்தான் கொண்டுவரப்பட்டு அங்கிருந்து ஹால்தியா தொழிற்சாலைக்கு ரயில் மற்றும் குழாய் மூலமாக எடுத்துச் செல்லப்படும். இதன் மூலம் காரைக்கால் துறைமுகத்துக்கு சரக்கு வரத்து அதிகரிக்கும். கடலூரில் 18000 கோடி செலவில் அமைக்கப்பட்ட நாகர்ஜுனா நிறுவனத்தின் சுத்திகரிப்பு நிலையம் அமைந்திருந்தாலே காரைக்கால் துறைமுகம் லாபத்தில் இயங்கி இருக்கும். இப்பொழுது அதை விட மூன்று மடங்கு அதிகமாக 58320 கோடி முதலீடு குவியும் போது காரைக்கால் துறைமுகம் அதிக லாபத்தில் இயங்கும். இது தான் அதானி காரைக்கால் துறைமுகத்தை வாங்குவதற்கு பின்னர் இருக்கும் நோக்கம். சி.பி.சி.எல் இன் முதலீடு கூடுதல் போனஸ். இது வரை 1 மில்லியன் மெட்ரிக் டன் அளவு கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு செய்த ஆலை விரிவாக்கத்துக்கு பின்னர் 9 மில்லியன் மெட்ரிக் டன்னாக உயரும் போது காரைக்கால் துறைமுகத்தில் மேலும் முதலீடு குவித்து லாபத்தை ஈட்டலாம்.
புதுச்சேரியில் அமைந்திருக்கும் பா.ஜ.க பங்கு பெரும் ஆட்சி இதற்கு எப்படி உதவ முடியும் என்று பார்த்தோமேயானால், தற்போதுள்ள காரைக்கால் துறைமுகம் 20000 கோடி மதிப்பிலான ஆலைக்கு தேவையான பொருட்களை கையாளும் அளவுக்கு தான் திட்டமிடப்பட்டுள்ளது. 86320 ஆயிரம் கோடி அளவு முதலீடு அடுத்த 4 அல்லது 5 ஆண்டுகளில் கடலூர் மற்றும் நாகப்பட்டினத்தில் குவியும்போது அவ்வளவு பெரிய ஆலைகளுக்கு தேவையான மூலப்பொருட்கள் மற்றும் அங்கு தயாரிக்கபப்டும் பொருட்களை ஏற்றுமதி செய்யும் அளவுக்கு தற்போதுள்ள துறைமுகத்தில் கொள்ளளவு மற்றும் வசதிகள் இல்லை. அடுத்த 4 முதல் 5 வருடங்களில் அதன் கொள்ளளவு மற்றும் பெட்ரோ கெமிக்கல் மூலப் பொருட்களை கையாளும் வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும். இதற்கு குறைந்தது 5000 கோடி முதலீட்டில் விரிவாக்கப் பணிகள் அதானி குழுமத்தால் மேற்கொள்ளப்படும். அதாவது துறைமுகம் சுற்றியுள்ள நிலங்கள் மக்களிடமிருந்து எடுத்துக்கொள்ளப்படும். இயற்கை வளங்கள், மீன் வளங்கள் பாதிக்கப்படும். அங்குள்ள மக்களின் வாழ்வாதாரம் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகும். இதையெல்லாம் சமாளித்து சாமானியர்களின் குரல்களை ஒடுக்கி கார்பரேட்டுக்கு சாதகமாக செயல் பட ஒரு அரசாங்கம் வேண்டும். அப்படியான தகுதிகள் அனைத்தும் கொண்ட ஒரு கட்சியாக இன்று இந்தியாவில் இருப்பது பா.ஜ.க தான். எனவே தான் பா.ஜ.க கூட்டணியில் ஆட்சி அமைத்த ஒரு மாதத்தில் காரைக்கால் துறைமுகத்தை வாங்க அதானி குழுமம் தயாராகி வருகிறது. பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்களுக்கான கட்டுமானப்பணிகள் விரைவில் தொடங்கும். பா.ஜ.க அங்கம் வகிக்கும் ரங்கசாமி அரசை சாமானியர்களுக்கு எதிராக அதானிக்கு ஆதரவான நிலைபாட்டை எடுக்க நிர்பந்திக்கும். சம்மதிக்கவில்லை என்றால் மற்ற மாநிலங்களில் செய்ததை போல் எம்.எல்.ஏ.க்களை காசு கொடுத்து வாங்கி ஆட்சியை நெருக்கடிக்கு உள்ளாக்கும் அல்லது கிரண் பேடி பாணியை மீண்டும் கையில் எடுக்கும்.
பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பின்னர் ஒட்டு மொத்த இந்தியாவும் கூறு போட்டு விற்கப்பட்டுக் கொண்டிருகிறது. இந்திய சந்தை முழுதும் மார்வாடி பனியா முதலாளிகளுக்கு தாரை வார்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் லட்சத்தீவில் இயங்கிவந்த உள்ளூர் பால் பண்ணைகளை எல்லாம் மூடிவிட்டு ஒரு குஜராத்தி மார்வாடி பனியா அமுல் நிறுவன பால் பொருள் அங்காடியை திறக்க அனுமதி கொடுத்துள்ளார் பா.ஜ.க யால் நியமிக்கப்பட்டுள்ள பிரபுல் படேல். இதுபோல் ஒவ்வொரு திட்டமும் மார்வாடிக்கு லாபம் வருகின்ற வகையில் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. கிரண் பேடி அரசியல் சாசனத்தை மீறி செயல்பட்டதை தட்டிக்கேட்க ஒரு பா.ஜ.க அல்லாத சட்டமன்றமாவது முன்னர் இருந்தது. இப்பொழுது அதுவும் இல்லை. இனி காரைக்கால் துறைமுகம் உட்பட புதுச்சேரியின் நிலம், வளம் என்று அனைத்தும் மார்வாடி முதலாளிகளின் பிடியில் கொஞ்சம் கொஞ்சமாக செல்லும் ஆபத்தை புதுச்சேரி எதிர்கொண்டிருக்கிறது.
புதுச்சேரியின் பகுதிநேர ஆளுனரான தமிழிசையின் வழியாக நடைபெறும் இந்த ஆதிக்க அரசியலின் பின்னனியில் அதானியின் லாப அரசியலும் முக்கியமானது. காரைக்கால் துறைமுகம் அதானியிடம் செல்லும் பட்சத்தில் ஏற்பட இருக்கும் வணிக விரிவாக்கத்தினை அடுத்து வரும் கட்டுரையில் விரிவாக பார்க்கலாம். இந்த துறைமுகத்தினால் காவிரி டெல்டா பகுதியில் ஏற்பட இருக்கும் மாற்றங்களை விரிவாக அடுத்த கட்டுரையில் ‘குரல்’ பதிவு செய்யும்.
இக்கட்டுரையின் தொடர்ச்சியை வாசிக்க, ‘அதானி பிடியில் புதுச்சேரி’: காவிரி டெல்டாவை பாலைவனமாக்கும் ரூ.90,000 கோடி முதலீடு