“இந்தியாவின் அடையாளமே சனாதனம் தான். அந்த சனாதனத்தின் அடையாளம் நாங்கள்தான்” என்று மேடைக்கு மேடை முழங்கிக் கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ்-பாஜக-வின் ஊதுகுழலாய் செயல்படுகிற தமிழ்நாட்டு ஆளுநர் ரவி கூறிய சனாதனம் எது என்பதை மத்திய பிரதேசத்தை பாஜக நபர்கள் வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறார்கள்.
சில வாரங்களுக்கு முன்பாக சமூக வலைதளங்களில் மத்திய பிரதேசம் சித்தி மாவட்டத்தை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் கேதர்நாத் சுக்லாவின் உதவியாளரான பிரவேஷ் சுக்லா மது போதை தலைக்கேறி சாலை ஓரமாக அமர்ந்திருந்த ஒரு பழங்குடி சமூக இளைஞர் மீது சிறுநீர் கழிக்கும் காட்டுமிராண்டிச் செயல் தொடர்பான காணொளி அதிகமாக பகிரப்பட்டு வந்தது. குறிப்பாக மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி சமூகத்தினர் மீது ஆர்.எஸ்.எஸ் பாஜக திட்டமிட்டு கலவரம் தூண்டி வன்முறையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற சமகாலத்தில் மத்திய பிரதேசத்தின் பாஜக பிரமுகர், ஒரு பழங்குடி சமூகத்தை சேர்ந்தவரை இவ்வாறு அவமானப்படுத்தி இருப்பது இந்திய ஒன்றியத்தில் மனசாட்சி இருக்கின்ற சமூக செயல்பாட்டாளர்கள் அனைவரையுமே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
வழக்கம்போல் அந்த நபருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர் கேதர்நாத் சுக்லா நழுவ முயற்சி செய்திருப்பதும், அந்த காணொளியை எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்த தீன் தயாள் சாகு உள்ளிட்ட பாதிக்கப்பட்டவர்கள் மத்திய பிரதேச காவல்துறையாலும், அப்பகுதி பாஜகவினராலும் மிரட்டப்பட்டு வருவதும் என இந்த பிரச்சனையை மூடி மறைத்து விட முயற்சி செய்தாலும் நாடு முழுவதும் பிரவேஷ் சுக்லாவை கைது செய்ய வேண்டும் என்றும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்றும் குரல் எழும்பவே தற்பொழுது அந்த அயோக்கியன் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.
‘மனிதக் கழிவுகளை மனிதர்களே அல்லும் கொடுமையை தடுக்க வேண்டும்’ என்று நாம் குரல் எழுப்புகின்ற இதே 21ம் நூற்றாண்டில் சக மனிதர்கள் மீது சிறுநீர் கழிக்கும் அநாகரிக அரசியல் ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார சனாதன கும்பலின் அரசியல் என்பதை இந்த நிகழ்ச்சி மீண்டும் நிரூபித்திருக்கிறது.
இதற்கு முன்பாக சென்னை நங்கநல்லூரை சேர்ந்த ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த ஆர்.எஸ்.எஸ்-இன் மாணவர் அமைப்பாக கூறப்படும் கலவர கும்பல் அமைப்பான ஏ.பி.வி.பி (Akhil Bharatiya Vidyarthi Parishad – ABVP) என்ற அமைப்பின் தேசிய தலைவர் பொறுப்பில் இருந்தவனும், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை பிரிவு தலைவராகவும் விளங்கியவனுமான சுபாஷ் சண்முகம் என்பவன் அதே குடியிருப்பில் வசித்து வந்த 62 வயது பெண்மணி ஒருவர் மீது ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாக அந்தப் பெண்மணியின் வீட்டு வாசலில் சிறுநீர் கழிக்கும் CCTV காணொளி வெளியாகி அதன் அடிப்படையில் கைது செய்யவும்பட்டான். இந்த அநாகரிக செயலை கண்டிக்காமல் ABVP அமைப்பு இந்த கைதை அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக செய்யப்பட்ட கைதாக செய்தி வெளியிட்டு ‘சிறுநீர் கழிக்கும் அநாகரிக அரசியலை’ ஆதரித்தது.
இந்த இருவரும் பாஜகவை சேர்ந்தவர் அல்லது பாஜகவை ஆதரிப்பவர் என்பது மட்டுமல்லாமல் இந்த இருவரும் பார்ப்பன சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.
இந்த இரு நிகழ்வுகளையும் தனிமனிதர்களின் குற்றங்களாக பார்த்தால் எளிமையாக கடந்து போக முடியும். ஆனால் இவை தனிமனித குற்றங்கள் அல்ல. இந்திய ஒன்றியத்தில் எக்காலத்திலும் இல்லாத அளவிற்கு பெண்கள் மீதும் பழங்குடிகளின் மீதும் கடுமையான ஒடுக்குமுறை கடந்த 9 ஆண்டு பாஜக அரசில்தான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ்-இன் அடிப்படை கொள்கையான சனாதன கட்டமைப்பில் தலித்துகளும், பழங்குடியினரும் அவர்களுக்கு மேல் இருக்கும் மூன்று வருணத்தாரின் அடிமைத்தனத்திற்கு பணிந்து போவதற்காகவே உருவாக்கப்பட்டனர் என்கிற கருத்தாக்கத்தை கொண்டிருக்கிறது. பெண்கள் அவர்களிலும் கீழாக உரிமைகள் அற்றவர்களாக, ஆண்களுக்கு பணிவிடை செய்வதற்காகவே உருவாக்கப்பட்டவர்களாக சித்தரிக்கப்பட்டு இருக்கிறது.
“சண்டாளன், விலக்காகியிருப்பவள் (மாதவிடாய் காலத்தில் இருப்பவள்), பிணம், பிணத்தை தீண்டியவன் ஆகியோரை தீண்டினால் ஸ்நானம் செய்து தூய்மை பெற வேண்டும்” என்றும்,
‘ஸ்நானம் போன்ற காலத்தில் தூய்மையற்றவரை பார்த்தால் உடனே ஆசமநம் செய்து காயத்ரி, சூரிய மந்தரம், பவமான ருக்கு இவற்றை இயன்றவரை ஜபிக்க வேண்டும்”
என்றும் கூறுகிற மனுதர்ம வரிகள் இன்று பட்டியல் சமூகம் என்று அழைக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட மற்றும் பழங்குடி சமூக மக்களையும் பெண்களையும் பிணத்துக்கு இணையாக பேசும் கொடூர காட்டுமிராண்டித்தனத்தை எடுத்துரைக்கின்றன.
பெண்கள் மற்றும் பட்டியல் சமூக மக்களின் மீதான அடக்குமுறைகள் கடந்த 9 ஆண்டுகால பாஜகவின் ஆட்சியில் இந்த இரு சம்பவங்களையும் தாண்டி மிக ஆழமாக வேரூன்றி இருக்கிறது. குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களான மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் போன்ற வட இந்திய மாநிலங்கள் பெண்களுக்கும், பட்டியல் சமூக மக்களுக்கும் வாழத் தகுதியற்ற மாநிலமாக உருவெடுத்து வருகின்றன.
2021 ஆம் ஆண்டு பட்டியல் சமூக மக்களின் மீதான வன்முறைகள் மற்றும் தாக்குதல்கள் குறித்த தரவு பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.
மாநிலம் | குற்றங்களின் எண்ணிக்கை | விழுக்காடு |
உத்தரப்பிரதேசம் | 13,146 | 25.82 |
ராஜஸ்தான் | 7524 | 14.7 |
மத்திய பிரதேசம் | 7214 | 14.1 |
பீகார் | 5842 | 11.4 |
ஒரிசா | 2327 | 4.5 |
பட்டியல் சமூக மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட குற்றங்கள் அடிப்படையில் 2020 ஆம் ஆண்டு பதிவான குற்றங்களின் எண்ணிக்கை 50,291. இது 2021ல் மேலும்1.2% அதிகரித்து 50,900 என்ற எண்ணிக்கையை தொட்டு இருக்கிறது. இந்தியாவில் நடைபெறுகின்ற பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான குற்றங்களில் 25.82% பாஜக ஆளும் மாநிலமாகிய யோகி ஆதித்யநாத்தின் உத்தர பிரதேசத்தில்தான் நடைபெறுகிறது. அதாவது இந்திய ஒன்றியத்தில் நடைபெறும் பட்டியில் சமூக மக்களுக்கு எதிரான குற்றத்தில் கால்வாசி பாஜக ஆளும் உத்தர பிரதேசத்திலேயே நடைபெறுகிறது. 2021 ஆம் ஆண்டு மட்டும் ஏறத்தாழ 13,146 வழக்குகள் அங்கு பதிவாகியுள்ளன. இவை பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மட்டுமே. உண்மை எண்ணிக்கை, அதாவது பதிவு செய்யப்படாமல் போன குற்றங்களின் எண்ணிக்கை, இதைவிட பன்மடங்கு இருக்க வாய்ப்பு இருக்கிறது. இதற்கு அடுத்த இடத்தில் 14.7% குற்ற செயல்கள் பதிவாகியுள்ள மாநிலமாக ராஜஸ்தானும், 14.1% குற்றச் செயல்கள் பதிவாகியுள்ள மாநிலமாக மத்திய பிரதேசமும் இருக்கிறது.
பழங்குடி சமூகத்தின் மீதான குற்றச் செயல்களும் 2020 ஆம் ஆண்டை விட 2021 ஆம் ஆண்டு 6.4 % அதிகரித்துள்ளது. 2020 ஆம் ஆண்டு பதிவிடப்பட்ட குற்றங்களின் எண்ணிக்கை 8,272 ஆக இருந்து, 2021ல் இந்த எண்ணிக்கை 8,802 ஆக உயர்ந்துள்ளது.
மாநிலம் | குற்றங்களின் எண்ணிக்கை | விழுக்காடு |
மத்திய பிரதேசம் | 2627 | 29.8 |
ராஜஸ்தான் | 2121 | 24 |
ஒரிசா | 676 | 7.6 |
மகாராஷ்டிரா | 628 | 7.13 |
தெலுங்கானா | 512 | 5.81 |
பட்டியல் சமூகத்தினர் போலவே பட்டியல் பழங்குடியினர் மீதான குற்றச் செயலிலும் பாஜக ஆளும் மாநிலங்கள் முதல் இடத்தை பிடித்து ‘ஆர்எஸ்எஸின் அகண்ட பாரத கனவுக்கு’ பெருமை சேர்த்துள்ளது.
பழங்குடியினர் மற்றும் பட்டியல் சமூகத்தினருக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகளுக்கு ஆளும் பாஜக அரசின் நேரடி ஆதரவும் கொள்கை ஆதரவும் இருப்பதினால் உத்தரப்பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் போன்ற பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்கள் இந்திய ஒன்றியத்தில் பட்டியல் இன மக்களுக்கு வாழத் தகுதியற்ற மாநிலமாக விளங்கி வருகிறது.
இது ஒருபுறம் இருக்க பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் அதிலும் குறிப்பாக பட்டியல் சமூக மற்றும் பட்டியல் பழங்குடி இனத்தின் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் இதே பாஜக ஆளும் மாநிலங்களில்தான் அதிகம் நடந்து வருகிறது என்பதையும் தரவுகள் வெளிப்படுத்துகின்றன. இக்குற்றசெயல்கள் உடல் ரீதியான தாக்குதல், ஆள் கடத்தல், வன்கொடுமை மற்றும் சாதி ரீதியான வன்புணர்வு உள்ளிட்டவற்றை உள்ளடக்கிய பட்டியலாகும். மேலும் இந்த பட்டியல் 17 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளையும் உள்ளடக்கியது.
2021ல் பதிவு செய்யப்பட்ட பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் வன்புணர்வு செய்தல், வன்புணர்வு முயற்சி, உடல் ரீதியான தாக்குதல் மற்றும் கடத்தல் வழக்குகள் மட்டும் ஏறத்தாழ 8570 வழக்குகளாகும். இது பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளின் மொத்த எண்ணிக்கையில் 16.% ஆகும். இதில் 3893 வன்புணர்வு வழக்குகளில் (7.64%) 2585 குற்றங்கள் பட்டியல் சமூக பெண்களுக்கு எதிராக நடத்தப்பட்டுள்ளது. 1285 குற்றங்கள் 17 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு எதிராக நடத்தப்பட்டுள்ள.
அதேபோல் பட்டியல் பழங்குடி சமூக பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட குற்றங்களின் எண்ணிக்கையாக பதிவாகியுள்ள 2364 (26.8%) வழக்குகளில், 1324 (15%) வழக்குகள் வன்புணர்வு குற்றங்களாகும்.
மேலும் இந்திய ஒன்றியத்தில் 2021 ஆம் ஆண்டு மட்டும் பதிவாகியுள்ள 9,67,916 கொலை வழக்குகளில் 1286 வழக்குகள் பட்டியல் சமூக மக்கள் கொலை செய்யப்பட்டதற்காக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ஆகும். அதாவது ஒரு வருடத்திற்கு ஏறத்தாழ 1250 க்கும் மேற்பட்ட இந்திய குடிமகன்கள் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக படுகொலை செய்யப்படுகிறார்கள். இதுவும் பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கை மட்டுமே பதிவு செய்யப்படாத நூற்றுக்கணக்கான படுகொலைகள் எண்ணிக்கையை நம்மால் கணக்கிட முடியாமல் கையறு நிலையில் நிற்கிறோம். பட்டியல் பழங்குடியும் சமூகத்தினரின் நிலை இன்னும் மோசமாக இருக்கிறது.
பல வருடங்களாக (காங்கிரஸ் ஆட்சி செய்த காலத்தையும் சேர்த்து), பட்டியல் இன மக்கள் மீது நடத்தப்பட்டு வரும் இக்கொடுமைகளை தடுக்க தவறியதன் விளைவாக இன்று இச்சம்பவங்கள் தினந்தோறும் நடைபெறுகின்ற ஒரு அன்றாட சம்பவமாக பார்க்கப்பட்டு வருகிறது. சகமனிதன் என்கின்ற மனிதாபிமான உணர்வற்ற ஆட்சியாளர்கள் ஆதரவுடன் சங்பரிவாரக் கும்பல்கள் நிகழ்த்தும் மனித குலத்திற்கு எதிரான, அநாகரிக குற்ற செயல்கள் குறிப்பாக பட்டியல் சமூகத்தினருக்கும் பெண்களுக்கும் எதிராக அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் பழங்குடி இளைஞர் மீது பாஜக எம்எல்ஏவின் உதவியாளர் ஒருவரே இப்படி ஒரு தீண்டாமை செயலை செய்திருப்பதை கண்டித்து சமூக வலைதளங்களிலும் பத்திரிகைகளிலும் கடுமையான கண்டனம் வெளியாகத் தொடங்கியதற்கு பின்பு, மத்திய பிரதேச மாநிலத்தின் பாஜக முதல்வர் சிவராஜ் சிங் சவ்கான் பாதிக்கப்பட்டவர் என்று ஒருவரை அழைத்து அவர் பாதத்தை கழுவி, அதை வசதியாக படம் பிடித்து இந்த பிரச்சனையை நீர்த்துப் போக செய்ய அனைத்து வேலைகளையும் பார்த்தார்.
அவரும் ஜூலை 8,2023 ம் தேதி ‘தன் மீது இந்த கொடுமை செய்த பர்வேஷ் சுக்லாவை விடுதலை செய்ய வேண்டும்’ என்று கோரிக்கை வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அதில் “பர்வேஷ் சுக்லா எங்கள் கிராமத்து பண்டிட். அவர் செய்த தவறை உணர்ந்து விட்டார். அவரை விடுவிக்க அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியிருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.
ஆனால் அதே நேரம் சிறுநீர் கழித்த பார்ப்பன சமூகத்தை சேர்ந்த பிரவேஷ் சுக்லாவிற்கு ஆதரவாக மத்திய பிரதேசத்தை சேர்ந்த பார்ப்பன சங்கம் 51000 ரூபாய் நிதி சேகரித்து வழங்கியுள்ளது. அவர்கள் இந்த செயலுக்கு எந்த விதத்திலும் வருத்தப்பட்டதாகவோ, அவமானப்பட்டதாகவோ தெரியவில்லை. மேலும் குற்றவாளியாகிய பார்ப்பனருக்கு ஆதரவாக பேரணியும் நடத்தியுள்ளனர். அந்தப் பேரணியின் போது “முகத்தில் சிறுநீர் கழிப்பது என்ன அவ்வளவு பெரிய குற்றமா?” என்று கேட்டுள்ளனர்.
அதே நேரத்தில் ‘மத்திய பிரதேச மாநிலத்தின் பாஜக முதல்வர் சிவராஜ் சிங் சவ்கானால் கால் கழுவி விடப்பட்ட அந்த நபர் பாதிப்படைந்த நபரே இல்லை’ என்று அம்மாநில காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்தது. அதை தொடர்ந்து பல செய்தி ஊடகங்களும் இந்த ஐயத்தை எழுப்பின. இதற்கிடையில் ‘The Quint’ இணையதளத்தின் உண்மை கண்டறிதல் (Fact Check) பக்கத்தில் அவர் பாதிக்கப்பட்டவர்தான் என்று செய்தி வெளியாகி உள்ளது. மொத்தத்தில் நடந்த கொடுமைக்கான விவாதம் மறைந்து போய் யார் பாதிக்கப்பட்டவர் என்பது விவாதமாகியுள்ளது.
இக்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பழங்குடி சமூகத்தை சேர்ந்தவரின் இந்த நிலை உண்மையில் பரிதாபகரமானது. தென்னிந்திய மாநிலங்களில் இருப்பது போன்று ஓரளவுக்கு நீதி பெறக்கூடிய இடத்தில் வட இந்திய மாநிலங்கள் தங்கள் சமூக அமைப்பை இன்னும் உருவாக்கவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். உண்மையில் சொல்ல வேண்டும் என்றால் இந்த பிரச்சனையில் பர்வேஷ் சுக்லா என்ற பார்ப்பனர் கைது செய்யப்பட்டதற்கு பிறகு இப்பழங்குடி சமூகத்து நபருக்கு எத்தகைய அழுத்தங்கள் தரப்பட்டிருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கும் பொழுதுதான் மன வேதனை அதிகரிக்கிறது.
தன் மீது நிகழ்த்தப்பட்ட தீண்டாமை கொடுமைக்கு நீதி கூட பெற்றுக் கொள்ள முடியாத அளவிற்கு ஓர் பழங்குடி சமூக மனிதரை தள்ளிய பாஜகவின் சனாதனம், சமூகநீதியின் மீது மீண்டும் ஒருமுறை தனது காவி சிறுநீரை கழித்துள்ளது.