கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக இனவெறி இசுரேல் அரசு வடக்கு காசா மக்கள் மீதான இனப்படுகொலை போரை இன சுத்திகரிப்பு போராக நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு நேரடி காட்சியாக இந்த கொடூர இனப்படுகொலை போர் ஒளிபரப்பப்படுவது இதுவே வரலாறில் முதல் முறையாக கருதப்படுகின்றது.
தமிழீழ மக்களுக்கு எதிராக சிங்கள அரசாங்கம் நடத்திய இனப்படுகொலை போரானது காசாவில் நடைபெறும் இன்றைய இனப்படுகொலைக்கு இணையானதாக இருந்தாலும் சமூக வலைதளங்கள் வளர்ச்சியடையாத அக்கால சூழலில் மக்களின் கவனத்தை பெறவில்லை.
போர்களின் அடிநாதமாக ஆதிக்கம், பொருளாதார சுரண்டல், வல்லாதிக்க போட்டி, தத்துவ முரண்பாடுகள் பின்னணியாக இருந்தாலும், மக்களின் சமூக சிந்தனை மரபின் அடிப்படையாக இருக்கும் நீதிக்கான போர்களாகவே பதிவு செய்யப்படுகின்றன. அந்த வகையிலேயே இசுரேலும் மேற்குலகமும் இணைந்து நடத்தும் பாலஸ்தீனிய மக்கள் மீதான இந்த இனப்படுகொலை போருக்கு எதிரான போராட்டங்கள் உலகமுழுவதும் நடைபெறுகிறது.
மகாபாரத, இராமாயண புராண இதிகாசங்கள் துவங்கி- மேற்கத்திய தத்துவத்தின் மையமாக விளங்கும் கிரேக்க புராணங்கள் வரை அதிகாரத்திற்கு இடம்பெற்ற போர்கள் நீதிக்காக நடந்த போர்களாகவே கட்டமைக்கப்பட்டன. இதிலிருந்து சமூக சிந்தனை மரபின் நல்லொழுக்க கோட்பாடு போர்களின் மையமாக இன்று வரை மிகமுக்கிய பங்காற்றி வருகிறது என்பதை அறியமுடியும்.
இதன் பின்னணியில் அமெரிக்க ஏகாதிபத்திய விரிவாக்க நலனுக்காக கடந்த 30 ஆண்டுகளாக உருவான போர் “தீவிரவாதத்திற்கு எதிரான போர்” என கட்டமைக்கப்பட்டு, ஆப்கானிஸ்தான் துவங்கி பின்னர் ஈராக் என விரிவடைந்து ஈழ இனப்படுகொலை வரை வந்தது. பிறகு சர்வாதிகாரிகளுக்கு எதிரான “சனநாயக காப்பு” போர் துவங்கப்பட்டு லிபியா, சிரியா, உக்ரைன் என்று விரிவடைந்து ஒரு ஆபத்தான காலகட்டத்திற்கு உலகை தள்ளியுள்ளது. விரிவாக்க ஆதிக்க நலனுக்காக நடக்கும் போர்கள் எப்படி மக்களுக்கு கொண்டு சேர்க்கப்பட்டன என்பது இந்தப் போர்கள் மூலம் விளங்கும்.
இசுரேலிய பிரதமர் நெதன்யாகு தனது இனப்படுகொலை போரை இந்தப் பின்னணியிலேயே நடத்துகிறார். பண்பாட்டு உச்சநிலையை அடைந்து நிற்கும் தாவீதின் பிள்ளைகளான இசுரேலியருக்கும் நாகரீக வளர்ச்சி அடையாத காட்டுமிராண்டி மக்களான அமெலேக் மக்களுக்கும் இடையிலான போராக உருவகம் செய்து தனது வீரர்களுக்கு “அமெலேக்கு மக்களை எப்படி அணுகவேண்டும் என்பதை நீங்கள் அறிவீர்கள்” என்றார். இதனை இசுரேலுக்கு எதிராக இனப்படுகொலை நோக்கத்தை தெளிவுபடுத்தும் ஆதாரமாக தென்னாபிரிக்கா சர்வதேச நீதிமன்றத்தில் முன் வைத்தது.
இசுரேலிய பாதுகாப்பு துறை அமைச்சர், “பாலஸ்தீனியர்கள் ‘மனிதமிருகங்கள்’, எனவே அவர்களை எப்படி அணுகவேண்டுமோ அப்படிதான் அணுகுவோம்” என்று கூறி காசா மக்களுக்கு உணவு, தண்ணீர், மருந்து பொருள், மின்சாரம் என அத்தியாவசிய தேவைகள் அனைத்தையும் தடைசெய்வதாக அறிவித்து நடைமுறைப்படுத்தினார். ஓராண்டுக்கும் மேலாக இன்றுவரை இந்த தடை தொடர்கின்றது.
பின்நவீனத்துவ பொருள்மோக தத்துவத்தை முன்னிலைப்படுத்தும் அமெரிக்கா சனநாயகம், தீவிரவாதம், சர்வாதிகார எதிர்ப்பு போன்ற தற்கால மக்கள் விரும்பும் அடைமொழிகளை தனது போருக்கான நியாயமாக பயன்படுத்தும் இதே வேளையில், பிற்போக்குவாத பைபிள் அடையாளங்களை முன்வைத்து இசுரேலிய ஆட்சியாளர்கள் நன்மை தீமையை அடையாளப்படுத்தி வருகின்றனர்.
பின்நவீனத்துவத்தின் நுகர் கலாச்சாரத்தில் மோகம் கொண்ட மக்கள் மத்தியில், அதிகாரத்தை நிலைநிறுத்த ஆட்சியாளர்கள் பழமைவாத நன்நெறி கோட்பாடுகளை தங்களின் ஆயுதங்களாக பயன்படுத்துவது, இவர்களின் அடிப்படை நிலைத்தன்மை ஆட்டம் கண்டிருப்பதை காட்டுகிறது.
இசுரேல் எனும் மேற்கத்திய காலனிய நுகர் கலாச்சார மக்கள், இழப்புகளையும், ஈகையையும், கொடுப்பதை வாழ்க்கையின் அவசியமாக கருதவில்லை. இழப்புகள் அற்ற, அர்ப்பணிப்புகள் அற்ற ஒரு சுகபோக வாழ்க்கை வாழ்வது மட்டுமே வாழ்வின் நோக்கமாக கொண்டு இயங்கும் சமூக சிந்தனை, பாலஸ்தீனியர்களின் வாழ்வு முறை, விடுதலை, சுயமரியாதை மீட்க போராடும் சிந்தனை மரபின் முன் வெற்றியடைய வாய்ப்பில்லை.
எனவே தான், நுகர் கலாச்சார மக்களுக்கு, செயற்கையான பழமைவாத சிந்தனை மரபை திணிக்கும் முயற்சியாக இசுரேலிய புராண கதைகள் நினைவூட்டபடுகின்றன. சமூகத்தின் அர்ப்பணிப்பை பெறமுடியாத சூழலில், வெறுப்புணர்வை உருவாக்கும் முயற்சி நடக்கிறது. இந்த வெறுப்பு உணர்ச்சியின் மூலம் தங்கள் மக்களை போருக்கு தயார்ப்படுத்தும் பிரச்சாரம் தான் இது.
மேற்கத்திய காலனிய ஆதிக்கம் முடிவுக்கு வந்து, இன்றைய மேற்கத்திய ஏகாதிபத்தியம் பல பகுதிகளில் தோல்வியடைந்து வருகிறது. ஆயிரமாயிரம் ஆண்டுகள் தொடர்ந்து வளர்ந்து வரும் உலகின் பல சமூக சிந்தனை மரபுகளை, தற்கால முற்றிலும் வேறான சிந்தனை முறை மூலம் புரிந்து கொள்ள நடக்கும் முயற்சி முழுமையாக தோல்வி அடைந்து வருகிறது.
பல நாகரீகங்கள் உருவான மேற்காசியாவை இதே பின்னணியில் தான் மேற்குலகம் அணுகுகிறது. ஆனால் மேற்காசிய சிந்தனை மரபுகள் முற்றிலும் வேறுபட்டவை. மேற்காசிய சிந்தனை மரபு, நீதிக்காக, அடக்குமுறைக்கு எதிராக போராடுவதும், ஈகை, இழப்பு, அர்ப்பணிப்பு செய்வதையும், உச்சமாக வீரமரணத்தை தழுவுவதையும் நீதிநெறி கோட்பாடாக முன்வைக்கிறது. இந்த சமூக உளவியல் அம்மக்களின் போராட்டத்திற்கு அடிநாதமாக விளங்குகிறது. இந்த ஆழமான மெய்யியல் கோட்பாடு அற்ற மக்கள் போராட்டங்கள் பெரும்பாலும் ஆதிக்க சக்திகளால் ஒடுக்கப்பட்டு விடுகின்றன.
ஆனால், பாலஸ்தீனிய மக்கள் தங்கள் உரிமைக்கான போரை தொடர்ந்து நடத்துவதில் மிக முக்கிய பங்காற்றுவது அவர்களின் சிந்தனை மரபு. இந்த சிந்தனை மரபின் ஒரு வரலாற்று தொடர்ச்சியாக திகழ்வது கி.பி. 680இல் நடைபெற்ற கர்பலா போர்.
இந்த இனப்படுகொலையை எதிர்த்து போராடும் அமைப்புகளுக்கும், நாடுகளுக்கும் தங்களின் முன்னோர் வரலாறாக கர்பலா போர் மிகப்பெரிய உந்துசக்தியாக அமைந்துள்ளது. இந்த போர் துவங்கியதும் கர்பலா எனும் வரலாற்று சொல்லாடல் பல தருணங்களில் பயன்படுத்தப் பட்டுள்ளது.
கர்பலா போர்:
கிபி 661 இல் உம்மயது பேரரசின் முதலாம் இசுலாமிய உள்நாட்டு போர், முகமது நபி அவர்களின் பேரன் ஹசன் அவர்கள், முவாயியா-விற்கு மன்னர் பொறுப்பை விட்டுக்கொடுத்து உடன்பாட்டை ஏற்படுத்தியதால் முடிவுக்கு வந்தது. முவாயியா டமாஸ்கஸ் தலைநகராக கொண்டு ஆட்சி செலுத்தினார். அடுத்த சில ஆண்டுகளில் ஹசன் படுகொலை செய்யப்பட்டார். முவாவியா கிபி 680 இல் மரணிக்கும் போது உடன்பாட்டை மீறி தனது மகனான யசிதுக்கு ஆட்சியை வழங்கினார்.
இதனால் பாதிக்கபட்ட இன்றைய ஈராக்கின் குபா நகர ஹசன் ஆதரவு மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட முகமது நபியின் மற்றொரு பேரனும், ஹசன் அவர்களின் சகோதரருமான இமாம் உசைன் அவர்களை அழைக்கிறார்கள். குபா நகருக்கு நிலவரத்தை ஆராய சென்ற உசைன் உறவினர் அகில் “மக்கள் ஆதரவு அதிகமாக உள்ளது, எனவே உடனடியாக வாருங்கள்” என்கிறார்.
மதினாவில் இருந்த இமாம் உசைன் குடும்பம், மெக்கா சென்று அங்கிருந்து குபா நகருக்கு பயணிக்கிறது. அவர்களுடன் 50 வீரர்கள் உடன் செல்கிறார்கள். இந்நிலையில், உசைன் அவர்களுக்கு யசிது தனது ஆட்சிக்கு ஆதரவு வழங்கவேண்டும் என்று கட்டளை விதிக்கிறார். அதனை ஏற்க மறுத்து தனது பயணத்தை தொடர்கிறார் உசைன்.
இந்நிலையில், குபா நகரின் ஆளுநர் மாற்றப்பட்டு, புது ஆளுநராக ஜியாது நியமிக்கப்படுகிறார். ஜியாதுவின் வருகையை தொடர்ந்து கிளர்ச்சிக்கு முயற்சிப்பவர்கள் கண்டறியப்பட்டு தண்டனை விதிக்கப்படுகிறது. அங்கு வந்திருப்பது அறிந்து அவரும் கொல்லப்படுகிறார். கொடுங்கோலன் ஜியாதின் வருகையால் குபா நகரின் நிலைமை தலைகீழாக மாறிவிடுகிறது. இதனை அறியாத உசைன் படையினர் குபா நகர் நோக்கி பயணிக்கிறார்கள்.
போகும் வழியில் 1000 படைவீரர்களுடன் வந்த ஜியாது, பாலைவன பகுதியான கர்பலா எனும் இடத்தில் உசைன் படையை நிறுத்துகிறார். தனது குபா நகர ஆளுநர் பதவிக்கும், யசிதின் மன்னர் பதவிக்கும் ஆதரவு அளிக்குமாறு கட்டளையிடுகிறார். இதனை மறுத்த உசைன், சண்டையிட வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படுகிறார்.
உசைன் படை கூடாரம் அமைத்து கர்பலா பாலைவனத்தில் தங்குகிறது. அவர்களுக்கு தண்ணீர், தடை செய்யப்படுகிறது. பல நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகும் தனது நிலையை மாற்றிக்கொள்ள உசைன் மறுக்கவே, தண்ணீர் தடை பலநாள் நீடித்து இறுதியாக சண்டை துவங்குகிறது.
மேலும், 30000 படைவீரர்கள் ஜியாதுவால் கொண்டுவரப்படுகிறார்கள். குபா பகுதியின் வீரர்கள் சிலருடன் இணைந்து மொத்தம் 72 படை வீரர்களுடன் உசைன் சண்டை செய்கிறார்.
உசைன் அவர்களின் அனைத்து வீரர்களும் வீரமரணம் தழுவுகிறார்கள். தனது 6 மாத மகனுக்கு தண்ணீர் வேண்டி குழந்தையை கையில் ஏந்தி உசைன் சொல்கிறார்- “உங்களுக்கு என் உயிர் வேண்டுமானால் எடுத்துக்கொள்ளுங்கள், இந்த குழந்தை தாகத்தை தீர்க்க தண்ணீர் கொடுங்கள்” சொல்லி முடித்தவுடன் அவரின் குழந்தை மீது அம்பு ஏவப்படுகிறது. அவரின் கையிலேயே அவரின் 6 மாத குழந்தை மரணிக்கிறது.
இறுதியாக அவரும் சுற்றி வளைக்கபட்டு, வீரமரணம் அடைகிறார். அவரின் குடும்பப் பெண்களும் அவரின் துண்டிக்கப்பட்ட தலையும் யசிதுவிடம் ஒப்படைக்கப் படுகிறது. (பின்னர் அவரின் குடும்பப் பெண்கள் விடுவிக்கப் பட்டதாக அறிய முடிகிறது.)
இந்த வீரமரணம் காட்டுத்தீயாக உமயது பேரரசு முழுவதும் பரவுகிறது. உசைன் வீரமரணத்துக்கு பழிவாங்க பல ஆண்டுகள் போர் நடக்கிறது.
72 பேருடன் நீதிக்காக போராட சென்று அடிபணியாமல் வீரமரணத்தை தழுவிய இமாம் உசைன் இன்றும் இசுலாமிய மக்களால் போற்றப்படுகிறார். இந்த கர்பலா நிகழ்வு இசுலாமிய மக்களின் இரத்த வரலாறாக பதிந்துள்ளது. மொகரம் மாதத்தின் 10 நாள் நடைபெற்ற இந்தப் போர், நீதிக்காகவும் ஒடுக்கப்படும் மக்களுக்காகவும் வீரமரணத்தை தழுவிய இமாம் உசைன் நினைவாக அனுசரிக்கப்படுகிறது.
இன்றைய இனப்படுகொலை போர்– அன்றைய கர்பலா போர் ஒப்பீடு
கர்பலா பாலைவனத்தில் ஜியாது தண்ணீரை தடை செய்தான், காசா மக்களுக்கு தண்ணீர், உணவு, மருந்து உள்ளிட்ட அனைத்தும் தடை செய்யப்படுகிறது.
உசைன் அவர்களின் 6 மாத குழந்தை கொல்லப்பட்டது. இன்று 10000க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொத்து குண்டுகளால் கொல்லப்படுகிறார்கள். குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என அனைவரின் தலைகளும் துண்டிக்கப்பட்டு பாலஸ்தீனியர்கள் கோணிகளில் அள்ளி செல்வதை படங்களாக பார்க்கிறோம்.
போரை நிறுத்த உதவி செய்ய வந்த லெபனான் விடுதலை அமைப்பின் தலைவர் சையது ஹசன் நஸரல்லா 82 ஆயிரம் கிலோ குண்டுகள் வீசப்பட்டு கொல்லப்பட்டார். யஹ்யா சின்வார் களத்தில் நின்று கடைசிவரை போரிட்டு வீரமரணம் எய்தினார். ஹமாஸ் அமைப்பின் முன்னாள் தலைவர் இசுமாயில் ஹெனியே ஈரானில் வைத்து கொல்லப்பட்டார்.
பேஜர் தீவிரவாத தாக்குதலில் லெபனான் மக்கள் கைகள், கண்கள் என இழந்து கொடூரமாக பாதிக்கப்பட்டார்கள். ஈராக்கின் பல விடுதலை போராட்ட தலைவர்கள், ஈரானின் இராணுவ அதிகாரிகள், ஏமன் நாட்டு நகரங்கள், எண்ணெய் கிடங்குகள், சிரியாவின் குடியிருப்பு பகுதிகள், லெபனான் நகரங்கள் என அனைத்தும் தரைமட்டமாக்கிய பின்னரும் இனப்படுகொலை, பட்டினி காசாவில் தொடர்கிறது.
அன்றைய கர்பலா போரில் காட்டிக்கொடுத்த கூட்டம் போல் இன்றும் காட்டிக்கொடுக்கும் கூட்டம் உள்ளது. அன்று கர்பலா, இன்று காசாவாக மாறியுள்ளதே வேறுபாடு. அன்று குபா மக்கள் அதிகாரத்திற்கும், அடக்குமுறைக்கும் அஞ்சி நின்றனர். இன்று டெக்ரான், சனா, பெய்ரூட், டமாஸ்கஸ், பாக்தாத் மக்கள் ஆயுதங்களுடன் நிற்கிறார்கள். இன்று காசா பல இமாம் உசைன்களை உருவாக்குகிறது.
நியாயத்திற்காக அடிபணியாமல் நின்ற சயீத் ஹசன் நஸ்ரல்லா, கடைசிவரை அடிபணியாமல் நின்ற யஹ்யா சின்வார் என பல நவீன கால இமாம் உசைன்களை காண்கிறோம்.
அன்றைய கர்பலாவில் யசிது, ஜியாதுகளின் படையால் 72 வீரர்களை கொண்ட இமாம் உசைன் வீழ்த்தப்பட்டார், இன்று பல்லாயிரம் பில்லியன் பணபலம், படைபலம், அரசியல் பலம், ஆயுதபலம் கொண்டு உசைன் படைகளை, குடும்பங்களை முற்றிலுமாக வீழ்த்த முடியவில்லை. அன்றைய கர்பலா இசுலாமிய சமூகத்தில் பிளவை உருவாக்கியது, இன்று 1400 ஆண்டுகள் பகையை நீக்கி ஒற்றுமையை உருவாக்கி உள்ளது.
அர்ப்பணிப்பு, ஈகை, நீதிக்காக விட்டுக்கொடுக்காமல், அதற்காக உயிர் கொடுப்பதை வாழ்வின் உயரிய பணியாக எண்ணும் சிந்தனை மரபை பின்னணியாகக் கொண்ட பூர்வகுடி மக்களின் உறுதியில், பின்நவீனத்துவ பொருள் மோக சிந்தனை கொண்ட ஏகாதிபத்திய, காலனிய, ஆதிக்க மக்கள் மந்தை கலைந்து போகும். யசிதுகள் தோல்விப்பாதையில் வேகமாக பயணிக்கிறார்கள்.
அனைத்து வகைகளிலும், இது இசுலாமிய மக்கள் மட்டுமின்றி உலகமக்கள் மனங்களில் மற்றொரு கர்பலாவாகவே நிலைத்து நிற்கும். பாலஸ்தீனிய, மேற்காசியா மக்களின் விடுதலை வரை பலநூறு உசைன்கள் உருவாகிக் கொண்டே இருப்பார்கள்.