
மே 17 இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு தமிழ்த் தேசியப் பெருவிழா மே 17 இயக்க கொடியேற்றத்துடன் துவங்கி, இளையோர்களின் காந்தள் கலைவிழா துள்ளலிசையுடன் இனிதே நிறைவுற்றது. சனநாயத் தலைவர்களின் உரைகள், செவிக்கு விருந்தளித்த அறிஞர்களின் அமர்வுகள், சமூக செயல்பாட்டாளர்களுக்கான விருதுகள் என உற்சாகமளிக்கும் திருவிழாவாக தமிழ்த்தேசியப் பெருவிழா நடந்தேறியது.
அறிஞர் அவையத்தின் அமர்வுகள் அனைத்திலும் தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் தொடக்கவுரை ஆற்றினார். மார்ச் 15, சனி அன்று நடந்த காலை அமர்வினை தொடங்கி வைத்து அய்யா வைகோ அவர்கள், அய்யா விசுவநாதன், தோழர் முத்தரசன், தோழர் என்.ஆர் இளங்கோ ஆகியோர் உரையாற்றினார்கள். ஐயா. வைகோ அவர்கள் வரலாற்று ரீதியாகவும், கோட்பாடு ரீதியாகவும் விரிவான உரையை பதிவு செய்தார். ஈழத்தின் போராட்டத்தில் தனது பங்கேற்பு குறித்த விவரத்தில் ஆரம்பித்து பாராளுமன்றத்தில் ‘சுயநிர்ணய உரிமை‘ குறித்த அறிஞர் அண்ணாவின் உரையைச் சுட்டிக்காட்டி தமிழினத்தின் திசைவழியை கோடிட்டு காட்டிய சிறப்பு வாய்ந்த உரையாக அமைந்தது.
‘தமிழரும், பண்பாடும் எனும் பெருந்தலைப்பில் தமிழர்களின் நாட்டார் பண்பாடு, தமிழரின் அடையாளம், தமிழரும் சாதியும்’ எனும் தலைப்புகளில் அமைந்த மூன்றாம் அமர்வினை நாடாளுமன்ற உறுப்பினர் தோழர். முனைவர் தொல். திருமாவளவன் அவர்கள் தொடங்கி வைத்து சிறப்புரை நிகழ்த்தினார். தமிழ்த் தேசியம் குறித்தான தெளிவுரையாக அவரின் உரை செறிவுடன் அமைந்தது. நிகழ்வில் விடுதலை சிறுத்தைகளின் மூத்த தோழர். வன்னி அரசு, பாலசிங்கம், விசிக -வின் தோழர். கனியமுதன் ஆகியோர் பங்கேற்றனர்.

இரண்டாம் நாளான மார்ச் 16-ல் நடைபெற்ற ‘தமிழர்களும், சமயங்களும்’ குறித்தான நான்காம் அமர்வினை ஐயா. பழ. நெடுமாறன் அவர்கள் துவங்கி வைத்தார். இலக்கியச் சான்றுகளுடன் தமிழர்களின் வரலாறுகளை தொகுப்பளிக்கும் வகையில் அவரின் உரை இருந்தது. ஐயா. விஜிபி பன்னீர் செல்வம் அவர்கள், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.
அறிஞர் அவையத்தின் முதல் அமர்வில் முதல் தலைப்பான ‘சங்ககாலம் அறிந்ததும், அறியாததும்’ தொடங்கி களப்பிரர் காலம், சோழர், பாண்டியர், பல்லவர் கால வரலாறுகள் குறித்து அறிஞர்கள் பேசினர். அதன் பின்பாக விஜயநகரப் பேரரசு, மராத்தியப் பேரரசு, காலனியாதிக்க காலம் வரை இரண்டாம் அமர்வாக இருந்தது. இப்பேரரசுகளின் காலத்தில் அரசக் கட்டமைப்புகளில் நடந்த சமஸ்கிருதமயமாதலும், பார்ப்பனர்களின் மேலாதிக்கமும் செயல்பட்ட விதங்கள் குறித்து அறிஞர்கள் பல வரலாற்றுத் தகவல்களை அளித்தனர்.
அவற்றில் சில சுருக்கமான செய்திக் குறிப்புகள் :

தொல்லியல் துறை ஆய்வாளரான மே.து. ராசுகுமார் அவர்கள் ‘சங்ககாலம் அறிந்ததும், அறியாததும்’ குறித்து பேசும் போது, மானுடவியல், சமூகவியல், உளவியலே சங்கப் பாடல்கள், அவற்றை உரையாசிரிரியர்கள் பார்வையிலிருந்து முற்றும் முழுதுமாக அணுகாமல் ஓரளவு பொருளுக்கான தேவைக்கு மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பேசினார். அசோகர் கால பிராமிக்கு முன்பே இங்கு எழுத்துக்கள் இருந்தன, கிமு 3000 ஆண்டுக்கு முன்பே இரும்பு கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன என தமிழரின் தொன்மையைக் குறித்து விளக்கினார். சங்க காலத்தில் அடிமைக் குழுக்கள் இல்லை, உற்பத்தி பகிரப்பட்டதால் மூலதனம் உருவாகவில்லை என்று விரிவுரை ஆற்றினார்.
‘களப்பிரர் காலம்’ குறித்து ஆய்வாளர் அ. பத்மாவதி அவர்கள், கல்வெட்டுகள், செப்பேடுகள் போன்ற ஆவணங்களிலிருந்து தொகுத்த ஆய்வுகளை செறிவான முறையில் விளக்கி, பார்ப்பனியத்திற்கு இருண்ட காலமாக, தமிழர்களுக்கு பொற்காலமாக செயல்பட்ட களப்பிரர் காலம் எவ்வாறு பார்ப்பன சூழ்ச்சிகளால் ஒட்டு மொத்த மக்களின் இருண்ட காலமாக மாற்றப்பட்டது என்கின்ற விவரங்களை எடுத்துக் கூறினார்.
‘பல்லவர் காலம்’ குறித்து, ஆய்வறிஞரான மார்க்சிய காந்தி அவர்கள், பல்லவர் காலத்தில் நடைபெற்ற வணிகம் சீனக் குறிப்புகளில் சான்றுகள் காணப்படுகின்றன என்றார். இங்கு கண்டறிப்பட்ட நடுகற்களில் 60% பல்லவர் காலத்தை சார்ந்தவை, இவை யாவும் தமிழிலேயே உள்ளன என்பதை விளக்கினார். ஆனால் அரசின் ஆவணங்கள் கிரந்த எழுத்துக்களில் காணப்படுகின்றன, அந்த அளவிற்கு பல்லவ அரசு சமஸ்கிருதமயமாகி இருந்தது என்பதைக் குறிப்பிட்டுப் பேசினார்.
தொல்லியலாளரான ஆய்வாளர் ர. பூங்குன்றன் அவர்கள் ‘சோழர் காலம்’ பற்றிக் குறிப்பிடும் போது, சோழப் பேரரசன் ராஜராஜன், மக்களிடம் வரி போடுவதற்காக நாடுகளை வேளாண்மைக்கேற்ற பருவநிலை அடிப்படையில் மண்டலங்களாகப் பிரித்ததையும், பழங்குடிகளை ஓரிடத்தில் நிறுத்தி வைக்க வேளாண்மையில் ஈடுபாடு காட்டச் செய்தது குறித்தும் பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்தார்.
‘பாண்டியர் காலம்’ பற்றி ஆய்வாளர் சொ. சாந்தலிங்கம் பேசும் போது, கல்வெட்டுகள் வாயிலாகப் பார்க்கும் போது சோழர், பாண்டியர் காலங்கள் சாமானிய மக்களுக்குப் பொற்காலமாக இருந்ததில்லை என்றார். பாண்டியர் கால பார்ப்பனர்கள் சமஸ்கிருதமயமாக்கலிலும், சைவர்கள் சமணக் கோவிலை சைவக் கோவிலாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டிருந்தார்கள் எனவும் பகிர்ந்தார்.
‘விஜயநகரப் பேரரசு மற்றும் மராட்டியப் பேரரசு’ குறித்து ஆய்வாளர் சி. இளங்கோ உரையாற்றுகையில், இந்தப் பேரரசுகளின் காலத்தில் தான், தமிழர்களின் வாழ்க்கை 400 ஆண்டு காலம் பின்னோக்கி சென்றது எனக் குறிப்பிட்டார். நிலம், கிராமங்கள், சத்திரம், பாடசாலை என அனைத்தும் பார்ப்பனர்களுக்கு ஒரு புறம் தானமாக்கப்பட்டு, ஒடுக்கப்பட்ட சாதியினர், வர்க்கத்தினர் அடிமைகளாக்கப்பட்டு விற்கப்பட்ட துயர வரலாறு கொண்டதாக இவர்கள் ஆட்சிக் காலம் இருந்ததாக பல சான்றுகளுடன் வெளிப்படுத்தினார்.
‘பிரிட்டிஷ் இந்திய ஆட்சிக்காலம்’ பற்றி சமூக ஆய்வியல் பேராசிரியர், ஞான. அலாய்சியஸ் அவர்கள் பேசும் போது, பதினெட்டாம், பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் பிரிட்டிஷ் அதிகாரிகளாலும் பார்ப்பனியத்தாலும் உருவாக்கப்பட்டதே இந்தியம் என்றார். இந்தி கூட பெரிய விஷயம் இல்லை ஆனால் இந்து என்பது தான் பெரிய பிரச்சனை தருவது எனக் குறிப்பிட்டார். கீழடி மற்றும் இரும்பு நாகரீகப் பெருமிதங்களால் புல்லரிக்க முடியுமே தவிர சாதிய சமூகத்தை தேசியம் என்று கூற முடியாது என்பதை காட்டமாகவே கூறினார்.

‘சாதியும் தமிழ்ச்சமூகமும்’ குறித்து மானிடவியல் பேரறிஞர் பக்தவச்சல பாரதி குறிப்பிடும் போது, உடலுக்கு இதயம் போல பண்பாட்டு ஆய்வில் உறவுமுறை என்பது குறிப்பிடத்தக்கது, அதில் ஒன்றாக திராவிடர் உறவுமுறை இருக்கிறது என்பதைக் குறிப்பிட்டார். சங்க இலக்கியமே மனித குல வரலாற்றை கச்சிதமாக பேசிய இலக்கியம் என்றார். சிந்துவெளியில் கீழடியும் சங்க இலக்கியமும் இருக்கிறது, கீழடியில் சிந்துவெளியும சங்க இலக்கியமும் இருக்கிறது, சங்க இலக்கியத்தில் கீழடியும், சிந்து வெளியும் இருக்கிறது என மானிடவியல் அறிதலுக்குரிய வழிகளின் தேடலை சுட்டிக் காட்டினார்.
‘தமிழரின் பண்பாட்டுக் கூறுகள்’ குறித்து முனைவர். தி. புருசோத்தமன் அவர்கள் பேசினார். நாட்டுப்புற தெய்வங்களை பார்ப்பனீயம் கையகப்படுத்திய படிநிலைகளை அம்பலப்படுத்தி தக்க சான்றுகளுடன் பேசினார்.
‘சமணம், பௌத்தம், ஆசிவகம் குறித்த தமிழர்களின் பண்டைய சமயங்கள்’ குறித்து, சென்னை பல்கலைக்கழக பேராசிரியரும், ஆய்வாளருமான வீ. அரசு அவர்கள் பேசினார். 7ம் நூற்றாண்டு முதலே அரசர்கள் எல்லாம் வைதீகத்துடன் அடிபணிந்த வரலாறு, வைதீக ஆதிக்கம் துவங்கியதும் சிரமண மதங்கள் அழிந்த வரலாறு, சிலப்பதிகாரம் எழுதும் முன்பு வரை இருந்த தொல் அறிவாற்றல் மரபும், சங்க இலக்கியங்கள், திருக்குறள் காலத்தில் கட்டமைக்கப்பட்ட சமூக வரலாறும் வைதீக மரபு இல்லை போன்ற வரலாறு குறித்தும் தக்க சான்றுகளுடன் பேசினார். பரிமேலழகர், நச்சினார்க்கினியர் போன்றோர் சங்க இலக்கியம், திருக்குறளுக்கு எழுதிய உரைகளால் அவற்றை வைதீக மரபாக கட்டமைக்கும் வேலையை செய்தனர் என பார்ப்பனர்கள் செய்த அனைத்து சூழ்ச்சிகளையும் வெளிப்படுத்தினார்.

‘சைவமும் வைணவமும்’ குறித்து தமிழறிஞர் பா. ஆனந்தகுமார் பேசுகையில், கருத்தியல் தளத்தில் ஆதிக்கம் செலுத்துவது மதமே என்றார். ஏனென்றால் கருத்தியல் ரீதியாக ஒரு இனத்தை அடிமைப்படுத்தி விட்டால் அது தன் அடையாளத்தை இழந்து விடும் எனக் குறிப்பிட்டார்.
மொழி அடையாளத்தினுடைய மதங்கள் வளர்ந்திருக்கின்றன, பொதுவான மரபுகளில் தமிழ் தன்னை கரைத்துக் கொள்ளாமல் அதன் சுய மரபாக பக்தி இலக்கிய காலத்தில் வளர்ந்தது, குறிப்பாக பொது மரபில் இருந்த பெளத்தமானது, தமிழ் மரபுப்படி மணிமேகலையில் கட்டமைக்கப்பட்டது என பல வகையான பொது மரபுகளை பக்தி இலக்கியம் தமிழ் மரபாக உள்வாங்கிய கருத்துக்களைப் பேசினார்.
‘ஆரியமயமாகும் தமிழர் மரபுகள்’ குறித்து பேராசிரியர் ந. முருகேசன் பாண்டியன் கூறும் போது, வைதீகம் தனது கிளையை பல இடங்களில் பரப்பிக் கொண்டிருக்கிறது. மறு பக்கம் நமக்குள் அது வந்து கொண்டேயிருக்கிறது என்னும் நடைமுறை உண்மையை விளக்கிப் பேசினார்.
‘வைதீகம் என்னும் பார்ப்பன மதம்’ குறித்து வரலாற்றுத் துறைப் பேரறிஞர் அ. கருணானந்தன் அவர்கள் குறிப்பிடும்போது, பன்னெடுங்காலமாக இருந்த தமிழரின் விழுமியங்களை பக்தி இலக்கியம் சிதைத்த வரலாறுகளைப் பேசினார். குறிப்பாக சைவர்கள் சிவனிடம் உருகிப் பாடும் போது பௌத்த சமணத்தவரை கொல்லும் அருளினைக் கேட்கும்படியான பாடல்களைக் குறிப்பிட்டு பேசினார்.
‘வள்ளலாரும் வைகுண்டரும்’ குறித்து செவ்வியல் துறை அறிஞர் கரு. ஆறுமுகத்தமிழன் பேசும்போது, ஒருபுறம் பார்ப்பனர்களுக்கு பெரும் தானங்களால் வழங்கி நாட்டை திவாலாக்கிக் கொண்டிருக்கும் போது, மறுபுறம் கடுமையான வரிகளால் மக்களை வதைத்து கொண்டிருந்த திருவனந்தபுரம் அரசுக்கு எதிராக திருமாலின் பத்தாவது அவதாரமாக தன்னை கூறிக்கொண்டு வைகுண்டர் மக்களுக்கு செய்த நன்மைகளைப் பற்றி விரிவாக விளக்கினார். தாழக் கிடப்பாரை தாங்குவதே தர்மம் என வைகுண்டர் செயல்பட்டார். உயரக் கிடப்பாரை மேலும் உயர்த்துவதே தர்மம் என வைதீகம் செயல்பட்ட விதங்களை சிறப்புடன் விளக்கினார்.
‘தமிழும் கிருத்துவமும்’ குறித்து இனவரைவியல் ஆய்வாளரும், பெண்ணிய ஆய்வாளருமான நிவேதிதா லூயிஸ் அவர்கள் பேசும்போது, சனாதனம் எவ்வாறு கிறிஸ்துவத்திலும் பரவி தன்னை தக்கவைத்துக் கொண்டது குறித்தும், கிறித்துவத்தில் சாதியம் ஊடுருவி இருப்பது, கிறித்துவம் செய்த தமிழ் இலக்கியப் பங்களிப்புகள், கல்வி, மருத்துவக் கொடைகள் போன்றவை குறித்தும் விரிவான உரையாற்றினார்.
‘இந்து மதம் ஆக்கிரமித்த கோவில்களும் தெய்வங்களும்’ குறித்து எழுத்தாளர் பா. மீனாட்சிசுந்தரம் அவர்கள் உரையாற்றும் போது, சமணச் சிற்பங்கள் அம்மன் சிற்பங்களாக மாற்றப்பட்டது குறித்தும், கோவையில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் கோணியம்மன் வரலாறு மற்றும் பல பெண் தெய்வங்களின் பின்னணிகள் குறித்தும் விளக்கமாகப் பேசினார். அறிஞர்களின் செறிவான உரைகளால் இரு நாட்களும் செவிகளுக்கு விருந்தளித்த அமர்வுகள் முடிந்த பின்பு, கண்களுக்கு விருந்தாக இளையோர்கள் முன்னெடுத்த காந்தள் நிகழ்வு தொடர்ந்தது.
அறிஞர் அவையத்தைத் தொடர்ந்து விருது விழாவும் காந்தள் கலை விழாவும் சைதாப்பேட்டையில் உள்ள திறந்தவெளி மேடையில் நடைபெற்றது. மார்ச் 16, 2025 அன்று மாலை 6 மணியளவில் தொடங்கிய இந்நிகழ்வு அரசியல் கருத்துக்களின் கலை வடிவத்துடனும் இளைஞர்களின் பெரும் ஆரவார பங்கேற்புடனும் நடைபெற்றது.

தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் பறையிசையைத் தொடர்ந்து “தூங்கும் புலியை பறை கொண்டு எழுப்புவோம்” எனும் பாரதிதாசன் பாடலை தோழர் சுகந்தி அவர்கள் பாடினார்கள். இதனைத் தொடர்ந்து “தமிழே உனக்கு வணக்கம்” எனும் பாடலை மே பதினேழு இயக்கத் தோழர்கள் பாடினார்கள்.
தொடர்ந்து “முத்தமிழ் இருக்க மும்மொழி எதற்கு?” என்று தனது உரையைத் தொடங்கிய மே பதினேழு இயக்கத்தின் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள், இளைஞர்களை அரசியல்படுத்தும் நோக்கத்தையும் அதற்காக இத்தகைய கலை நிகழ்வுகள் ஒருங்கிணைக்கப்பட வேண்டிய தேவையையும் விளக்கினார்.
சமூக விடுதலைக்காக போராடிய தந்தை பெரியார், தேசியத்தலைவர் பிரபாகரன் மற்றும் அண்ணல் அம்பேத்கர் குறித்து பாடியும் நடனம் ஆடியும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர் Dudez in Madras, Dhamma பேண்ட், ஆர்ட் இன்னர்ஸ் மற்றும் Sollisai Sistahs இசைக் குழுக்களின் தோழர்கள்.
“சாதி வெங்காயம் என்னாத்துக்கு?…
எதுக்கு இந்த நீட்டு?
அதை தூக்கிப் போட்டு
டாக்டர் கோட்டை மாட்டு!
என் பாட்டன் பூட்டன் அப்பனெல்லாம் மலைத்தாயின் மடியினிலே
இந்த வேர விட்டு விலகச் சொன்னா திக்கு திசை விளங்கவில்ல
மூட நம்பிக்கைய புகுத்தற கூட்டமே
எங்க கீழடி பொருநையில கடவுள காணோமே
கண்ணீரை மாற்றவே புலிக்கூட்டம் வந்தது…
தமிழா..நீ புலியாய் மாறு…
உன்னை தட்டிக் கேட்பது யாரு…”
போன்ற வரிகளில் உள்ள அரசியல், துள்ளிசையுடன் இளைஞர்களை சென்றடைந்தது.

தமிழினத்தின் கோரிக்கைகளுக்காக பாடுபடும் சமூக செயற்பாட்டாளர்களை சிறப்பிக்கும் விதமாக ‘தமிழ்க்கனலி’ விருதுகள் அறிவிக்கப்பட்டன. பேராசியர் த.செயராமன் அவர்கள், தோழர் ஹென்றி டிபென் அவர்கள், தோழர் பிரின்ஸ் கஜேந்திரபாபு அவர்கள், தோழர் சின்னப்ப தமிழர் அவர்கள் மற்றும் தோழர் ஜெயராணி அவர்கள் ‘தமிழ்க்கனலி‘ விருதுகளை பெற்றுக் கொண்டனர். தமிழினத்தின் உயர்வுக்குப் பாடுபடும் ஆளுமைகளுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதான ‘அருந்திறல் தமிழர்‘ விருது அறிவிக்கப்பட்டது. தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் தலைவர் அய்யா.த.வெள்ளையன் அவர்கள், இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர் தோழர் எஸ்.எம்.பாக்கர் அவர்கள் மற்றும் தியாகி இமானுவேல் பேரவையின் தலைவர் தோழர் பூ.சந்திரபோஸ் அவர்களுக்கு இவ்விருதை அறிவித்ததில் பெருமை கொண்டது மே பதினேழு இயக்கம்.
காந்தள் விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக வருகை புரிந்த நடிகர் நாசர் அவர்களும் நடிகர் இளவரசு அவர்களும் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் பேசினர். நடிகர் இளவரசு பேசும்போது “மக்களின் கருத்தைக் கேட்டு, உள்வாங்கி, அதற்காக குரல் கொடுப்பதே ஜனநாயகம். தோழர் திருமுருகன் காந்தியும் அவ்வாறே செயல்படுகிறார். எனவேதான் அவரை ஆதரிக்கிறோம்” என்று கூறினார்.

மூத்த நடிகர் திரு. நாசர் அவர்கள் பேசும்போது “பெரும் நட்சத்திர கலைவிழாவிற்கு நிகராக இந்த விழா நடைபெற்றது. ஒரு வேளை நான் நிகழ்வு முடியும் வரை காத்திருக்காமல் சீக்கிரம் கிளம்பியிருந்தால், என் வளர்ச்சியில் ஒரு ஜன்னல் திறக்காமலே போயிருக்கும். திரிக்கப்படாத வரலாற்று உண்மைகளை தெரிந்து கொள்ள ஒரு தமிழனாக எனக்கு உரிமை இருக்கிறது. இந்த நிகழ்வில் விவாதிக்கப்பட்ட தமிழ்த்தேசிய தலைப்புகள் மாணவர்களின் கல்வித்திட்டதோடு இணைக்கப்பட்டால் சிறப்பாக இருக்கும் என்றும், மே17 இயக்கத்தோடு பயணிப்போம்” என்று கூறினார்.
அதனை தொடர்ந்து நடிகர் இளவரசு பேசுகையில், தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் போராட்ட குணம் நிறைந்தவர், நேர்மையானவர் என்றும், மேலும் “மக்களை அரசியல்படுத்துவது, ஜனநாயகப்படுத்துவது அவர்களுக்காக போராட்டம் நடத்துவது இவை அனைத்தும் அவசியமானதுதான் என கூறினார்.
இளைஞர்களின் உற்சாக கைத்தட்டலுக்கிடையே, சமூக அர்ப்பணிப்பை விதைக்கும் நோக்கத்துடன் நடைபெற்ற தமிழ்தேசியப் பெருவிழாவை சீரும் சிறப்புமாக நிறைவு செய்தது காந்தள் விழா.
