அறிவுத் திருவிழாவாக எழுச்சியுடன் நடைபெற்ற தமிழ்தேசியப் பெருவிழா 2026

தமிழ்நாட்டின் மிகப்பெரும் அறிவுத் திருவிழாவாக நடைபெற்ற தமிழ்தேசியப் பெருவிழாவில், 15 தலைப்புகளில் நிகழ்ந்த ஆளுமைகளின் உரைகள் குறித்து மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் மார்ச் 9, 2026 அன்று முகநூலில் பதிவு செய்தது.

மதம், கடவுள் நம்பிக்கை, வழிபாடு, பண்பாடு இவற்றில் ஏற்படும் மாற்றங்கள் தாமாக, இயல்பாக நடப்பதில்லை. இவையெல்லாம் அச்சமூகத்தில் மாறி வருகின்ற உழைப்பு முறை, பொருளாதார வளர்ச்சி நிலை, அரசியல் அதிகாரத்தில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றோடு தொடர்புடையது. தமிழ் சமூகம் இதற்கு விதிவிலக்கானதல்ல.

சமத்துவ கோட்பாடுகள், ஆதிக்க கோட்பாடுகள் ஆகியவற்றிற்கு இடையேயான போராட்டங்கள் 5000 ஆண்டுகளாக நடந்து வரும் தமிழர் நிலப்பரப்பில் ஏற்பட்ட மாற்றங்களைக் குறித்து சாட்சியங்களோடும், இலக்கிய சான்றுகளோடும், சமூகவியல் கோட்பாடுகளோடும் அறிஞர்கள் விளக்கிய நிகழ்வாக இருநாள் மாநாடு நடந்தேறியது.

தமிழினம் ஆதிக்க கோட்பாடாகிய சனாதன-வைதீக நம்பிக்கையாளர்களோடு ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாக போர் புரிந்து வருகிறது. இந்த சண்டை பல தளங்களில் நடந்துள்ளது. இன்றும் அந்த போர் தொடர்கிறது.

தமிழ் மொழி இந்த போரை முன்னின்று நடத்தியது எனலாம் அல்லது தமிழர்கள் தமது தாய்மொழி வழியே இந்த போரை பதிவு செய்தார்கள் எனவும் சொல்லலாம். தமிழர்களின் அறிவியல் வளர்ச்சி அவர்களது தாய் மொழியில் பிரதிபலித்தது. தமிழர்களின் பொருளாதார வளர்ச்சி அவர்களின் தமிழ்மொழியை விரிவடையச் செய்தது. தமிழர்களின் மெய்யியல் சிந்தனை மரபு தமிழை ஆழமான தத்துவார்த்ததிற்கான மொழியாக செழுமைப்படுத்தியது. தமிழர்களின் உலகளாவிய அனுபவம் தமிழை பண்படச் செய்தது. இயற்கை குறித்த தமிழர்களின் கோட்பாடுகள் தமிழை சொற்களஞ்சியமாக மாற்றியது. அரசியல் களத்தை வளர்த்தெடுத்த தமிழர்களால், ஆட்சியதிகாரத்திற்கான மொழியாகியது. இவையெல்லாவற்றையும் விட, அன்றாட வாழ்வியலில் தமிழர்களை இணைத்ததால் மக்களின் மொழியாக நிலைபெற்றது. இத்தனை அறிவையும் சேமித்து வைத்த சிந்தனைக் கிடங்காய் தமிழ் மொழி தலைநிமிர்ந்து நவீன சனநாயக சமூகத்தை எதிர்கொண்டது.

வளத்தை கொடுக்கும் இயற்கையை போற்றிய தமிழர் பண்பாடு, வழிபாடுகளாகி, அரசியல்-பொருளாதார காரணிகளால் மாற்றம் கண்டது. இந்த வழிபாட்டின் எச்சம் இன்றும் நம்மிடம் உள்ளது. இதன் மிச்சத்தை இந்துத்துவ பார்ப்பனீயம் செரித்து விட்டது.

இந்துத்துவ ஆதிக்க படையெடுப்பையும், தமிழர் இழந்த சமத்துவ கொள்கைகளையும் ஆய்வுப்பூர்வமாக 2 நாள் மாநாடு விளக்கியது.

தொல்லியல் சான்றுகளின் கீழாக எவ்வாறு வளமையை, உற்பத்தியை கொடுக்கும் இயற்கை மற்றும் அதன் சின்னமாக இருக்கும் தாய் நிலையை கொண்டாடினார்கள் என்பதை தமிழ்நாட்டில் கிடைத்த தொல்-பழங்கால சின்னங்களை, தொல்லியல் அடையாளங்களைக் கொண்டு அறிஞர்கள் விளக்கினார்கள். கடவுளை முழுமுதற் பொருளாக கொள்ளாமல், மனிதத்தை முன்னிறுத்தி வளர்ந்த சமணம், பெளத்தம், ஆசிவக நம்பிக்கைகள், மார்க்கங்கள் தமிழ்நாட்டில் எவ்வாறு நிலைபெற்றன, எவ்வாறு இன்றளவும் இயங்குகின்றன என்பதை தொல்லியல்-வரலாற்று அறிஞர்கள் விளக்கினார்கள். சமணத்தினால் ஏற்பட்ட மாற்றங்களாக கல்வி, மருத்துவம், சமத்துவம் எனும் கொள்கை புரிதல்களை அதன் இலக்கியச்சான்றுகளும் எடுத்துரைத்ததை சுட்டிக்காட்டினார்கள்.

திணை தெய்வமாக வளர்ந்த ’மாயோன்-சேயோன்’ போன்றவற்றின் தோற்றங்களின் அடித்தளத்தை விளக்கினார்கள்.. ’முருகு’ என சொல்லப்படுவதென்ன என ஆரம்பித்து சுப்ரமணியனாக மாற்றப்பட்ட வைதீக மாற்றத்தை விளங்க வைத்தார்கள் தமிழ் மொழி இலக்கிய அறிஞர்கள். அனைத்தும் சான்றுகளோடு.. மறுக்க இயலாத தர்க்கத்தோடு முன்வைத்தார்கள்.

முதல் இரண்டு அமர்வுகள் இவ்வாறாக அடித்தளத்தை உருவாக்கிக் கொடுத்தன. அடுத்த அமர்வு அடர்த்தியான வைதீகத்துடனான தமிழன் நடத்திய சண்டையை குறித்ததாக அமைந்தது.

சைவத்தின் தோற்றம், அதன் பிரிவுகள், அதை ஆதிக்கம் செய்ய நடத்தப்பட்ட முயற்சிகள் குறித்த ஆய்வும், முன்னதாக வேதம்-ஸ்மிருதி-ஸ்ருதி-உபநிடதம்-ஆரண்யகம்-வர்ணாஸ்ரமம்-சனாதனம்-ப்ரம்மம் எனும் இந்துத்துவ கோட்பாடுகள் குறித்த விளக்கம் எளிமையான ஆழமான தத்துவார்த்த புரிதலை கொடுத்தது. இதை அறிந்தாலே இன்றைய தமிழர் நெருக்கடிகளை உள்ளங்கை நெல்லிக்கனியாக விளங்கிட இயலும். சைவத்தை தொடர்ந்து வைணவம் என்னவாக ‘திருமால்’ வழிபாட்டை ஆட்கொண்டது என அறியத்தந்தார்கள்.

வழிபாட்டை மட்டுமல்ல, சடங்குகளை மட்டுமல்ல, கோயிலையும், தெய்வங்களையும் எவ்வாறு களவாடினார்கள் என்பதை சான்றுகளோடு, காட்சிகளோடு விளங்க வைத்து நிறைவுற்றது முதல்நாள் நிகழ்வு.

இரண்டாம் நாள் மேலதிகமாக பழங்குடி காலம் முதலாக நவீன காலத்திற்குள்ளாக நான்காம் அமர்வு பயணப்பட்டது.

பழங்குடிகளிடத்தில் இன்றும் உயிர்ப்போடு இருக்கின்ற மரபுகளை விளக்கி ஆதிகால சமூகத்தை குறித்த புரிதலையும் அதன் வழியே இன்றய சமூகநிலை குறித்த அறிவியல் புரிதலையும் உருவாக்கியது. பின்னர் வந்த நடுகல் குறித்த ஆய்வு நுணுக்கமாக சமூக மாற்றத்தை விளக்கியது. நடுகல்லில் ஒவ்வொரு காலகட்டமாக தென்படும் சின்னங்களின் வழியே எவ்வாறு இயற்கை சின்னங்களிலிருந்து வைதீக சின்னம் வரை இடம்பெற்றதை அறியும் போது, இந்து மத கோட்பாடுகள் எவ்வாறு ஒவ்வொரு காலகட்டத்திலும் தன்னை உள்ளே திணித்துக்கொண்டது என்பதை விளக்கியது. வீரனை கொண்டாட நட்டப்பட்ட நடுகல்லில் இந்துமத சின்னம் பொறித்த நடுகல்லாக எவ்வாறு பிற்காலத்தில் மாற்றம் பெற்றது என விளக்கும் அந்த ஓரிரு மணிநேர உரையை கேட்டாலே வைதீகத்தின் ஆதிக்க அரசியல் வரலாறு எளிமையாய் புரியும்.

இசுலாம் என்பது அரசியல் வழியே நுழைந்ததல்ல, அது மானுட உறவுகளின் வழியே இணைந்தது என்பதை விளக்கி, தமிழர் பண்பாட்டோடு இணைந்த வழிபாட்டு முறையை விளங்கப்படுத்தியது இதுவரை காணக்கிடைக்காத அறிவுப்பெட்டகத்தை திறந்து கொடுத்தது. முறையே கிருத்துவம் தமிழர் பண்பாடுகளோடு இணைந்த சான்றுகளை அறியும் போது பன்மைத்துவத்தோடு ஒரு சர்வதேச சமூகமாக தமிழினம் உயர்ந்து நிற்பதை அறிய முடிந்தது.

ஒப்புரவை உயர்த்திப் பிடித்த மாண்பு தமிழரின் இயல்பான பண்பு. இப்பண்பைத் திரிக்கும் வைதீகத்திற்கு எதிரான போர் 2000 ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தி வரும் தமிழரின் சமத்துவ கோட்பாடுகளை கண்டறிவது தமிழ்த்தேசியத்திற்கான கருவியை கூர்தீட்டும்.

ஆதிக்கப்படையெடுப்பு நிகழ்காலமாக கழுத்தை நெறிக்கும் போது, வரலாறே எம் ஆயுதமாகிறது. சமத்துவப் பண்பாடே நமக்கான கேடையமாகிறது. ஆரிய-இந்துத்துவ படையெடுப்பு தீவிரமாகியுள்ள இக்காலகட்டத்தில் தமிழ்த்தேசிய சிந்தனைக்கருவியை கூர்தீட்டும் மாநாட்டை மூன்றாவது முறையாக திறம்பட செய்திருக்கிறார்கள் எம் மே பதினேழு இயக்கத் தோழர்கள் என்பதில் பெருமையும், மகிழ்ச்சியும்.

ஆளுமைகளின் உரைகளில் கிடைத்த கவனத்திற்குரிய செய்திகளோடு விரிவாக தொடர்ந்து பதிவு செய்வோம்…

நெகிழ்ச்சி உரையும் நிறைந்த மாலை நேர காந்தள், விருது நிகழ்வும் குறித்து அடுத்த பதிவில் காண்போம்.

போலி தமிழ்த்தேசியர்களால் ஆட்கொள்ள இயலாத பெருநெருப்பே தமிழர் நாகரீகம்.

சமத்துவத்திற்காய் போரிட்டுக் கொண்டிருக்கும் தமிழர் மரபோடு கைகோர்த்து முன்னகரும் வல்லமை மே17 இயக்கத்திற்குண்டு.

நாம் வெல்வோம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »