தென்னாப்பிரிக்க விடுதலைப் போராட்டத்தின் திருப்புமுனை
“நம்மை இங்கிருந்து தப்பிச்செல்ல விடமாட்டார்கள். நமது உயிர்கள் பேச்சுவார்த்தை நடத்தும் அளவிற்கு தகுதியற்றவை என்றால் அனைத்திற்கும் தகுதியான ஓர் உயிர்க்காக நாம் சண்டையிடுவோம். இதை நாம் ஒரு இயக்கமாக மாற்ற முடிந்தால் என்ன?”
இது மான்ட்லா வால்டர் டியூப் (Mandla Walter Dube) இயக்கத்தில் ஏப்ரல் 22, 2022 அன்று நெட்பிளிக்ஸில் வெளிவந்திருக்கும் சில்வர்டன் சீஜ் (Silverton Siege) எனும் திரைப்படத்தில் வரும் வசனம்.
தென்னாப்பிரிக்காவில் கருப்பின மக்களுக்கு எதிரான நிறவெறி அதிகரித்து அது அனைத்து வடிவங்களிலும் வெளிப்பட்டு கருப்பின மக்களை ஒடுக்கிய காலகட்டத்தில் பல்வேறு அகிம்சை முறையில் நடந்த முயற்சிகளுக்கு பின்னர் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் (African National Congress) தலைவரான நெல்சன் மண்டேலா (Nelson Mandela) மற்றும் சக தலைவர்கள் இணைந்து டிசம்பர் 16, 1961-ஆம் ஆண்டு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் ஆயுதப்படையான உம்காண்டோ வே சீஸ்வே (uMkhonto we Sizwe) (ஆங்கிலத்தில் Spear of the Nation – தேசத்தின் ஈட்டி) ஆரம்பித்தனர். கருப்பின மக்கள் தங்களால் முடிந்த அனைத்து அகிம்சை வழிகளில் போராடினாலும் அவர்களை வெள்ளை நிறவெறி அரசு வன்முறை மூலமாகவே கையாண்டனர்.
அதன் ஓர் அங்கமாக ஜூன் 16, 1976-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா முழுவதும் 20,000-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் தென்னாப்பிரிக்காவின் பல பகுதிகளில் ஒன்று கூடி தங்களின் கல்வி கற்கும் மொழியாக இருக்கும் ஆங்கிலத்தை நீக்கி தங்களின் தாய் மொழியான ஆப்பிரிக்கானை கல்வி கற்கும் மொழியாக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். சோவீடோ (Soweto) எனும் பகுதியில் போராடிய கருப்பின பள்ளி மாணவர்கள் 700 பேரை அப்போதைய தென்னாப்பிரிக்க அரசு காவல் துறையை விட்டு ஏவி சுட்டு கொன்றது. இந்நிகழ்வு ஜூன் 16 எழுச்சி என்று தென்னாப்பிரிக்கர்களால் இன்றளவும் நினைவுகூரப்படுகிறது.
அந்த நிகழ்விற்கு பின்னர் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் உம்காண்டோ வே சீஸ்வே (uMkhonto we Sizwe) அல்லது எம்.கே. (M.K) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஆயுதம் ஏந்திய இயக்கத்தில் சேர்ந்தனர். நெல்சன் மண்டேலாவின் கைது, ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் பல்வேறு தலைவர்களின் கைது மற்றும் கொலைகளுக்கு பின்னர் எம்.கே.வின் (M.K) அப்போதைய திட்டம் தென் ஆப்பிரிக்காவை வெள்ளையர்களால் நிர்வகிக்க முடியாத நாடாக மாற்ற வேண்டும் என்று உயிர் சேதங்களை தவிர்த்து வெள்ளையர்களால் நிர்வகிக்கப்பட்ட தென்னாப்பிரிக்க நிர்வாகத்தின் முக்கிய நிர்வாகங்கள் ஸ்தம்பிக்க வைக்கவேண்டும் என்று திட்டம் தீட்டி எம்.கே. (M.K) இயக்கத்தினர் பல குழுக்களாக பிரிந்து இயக்கத்தின் உயர் மட்ட குழுவின் உத்தரவின்படி செயல்பட்டனர். அதில் கால்வின் குமெலோ (Calvin Khumelo), ம்பாலி (Mbali), ஆல்டோ (Aldo) மற்றும் மசெகோ (Masego) எனும் நால்வர் அடங்கிய குழு ஒன்று தென்னாப்பிரிக்காவின் பொருளாதாரத் தலைநகரான பிரிட்டோரியாவில் (Pretoria) உள்ள ஒரு எண்ணெய் கிடங்கிலிருந்து இராணுவ பயன்பாட்டிற்கு வைத்திருக்கும் எரிபொருளை கடத்திச்சென்று பின்னர் அங்கிருந்து பிரிட்டோரியா நகரின் முக்கிய பகுதிகளுக்கு செல்லும் மின்சாரத்தை துண்டிப்பதே திட்டம்.
ஆனால், தங்கள் இயக்கத்தில் உள்ள யாரோ அவர்களின் திட்டத்தை அரசிடம் சொல்லிவிட, அங்கே அவர்களை சுற்றிவளைத்து பிடிக்க காத்திருக்கும் காவல்துறையிடமிருந்து தப்பிக்க முற்படும்பொழுது நால்வருள் ஒருவரான மாசெகோ கொல்லப்பட, தப்பிக்க வழியின்றி ஒரு வங்கியுனுள் தஞ்சமடைகின்றனர் எஞ்சியுள்ள மூவரும். அந்த வங்கியிலிருந்து தப்பிக்க வேறு வழியே இல்லை என்று ஆன பின்னர் அந்த வங்கியுனுள் உள்ள பொதுமக்களை பிணைக் கைதிகளாக வைத்து தப்பிக்க முற்படுகின்றனர். அதுவும் தோல்வியில் முடிய அப்பொழுது மைய கதாபாத்திரமாக வரும் கால்வின் குமெலோ சொல்லும் வசனம்,
“நம்மை இங்கிருந்து தப்பிச்செல்ல விடமாட்டார்கள். நமது உயிர்கள் பேச்சுவார்த்தை நடத்தும் அளவிற்கு தகுதியற்றவை என்றால் அனைத்திற்கும் தகுதியான ஓர் உயிர்க்காக நாம் சண்டையிடுவோம். இதை நாம் ஒரு இயக்கமாக மாற்ற முடிந்தால் என்ன?”.
அவர்கள் அனைத்திற்கும் தகுதியான உயிர் என்று முடிவு செய்து செய்யும் சண்டை சிறையில் இருக்கும் நெல்சன் மண்டேலாவை விடுதலை செய்ய வேண்டும் என்பதே.
இக்கதையில் பணயக்கைதிகளாக வைக்கப்பட்டிருக்கும் 25 நபர்களை, எம்.கே. இயக்கத்தை சேர்ந்த அம்மூவரும் கண்ணியமாக நடத்தும் முறையினால் அவர்களுக்குள் ஏற்படும் உரையாடல்கள் நுணுக்கமான அரசியலை நம்மிடையே கடத்துகிறது. ஒரு காட்சியில் பணயக்கைதிகளில் ஒருவரான அமெரிக்க கருப்பரை உயிருடன் மீட்க தென்னாப்பிரிக்க அரசாங்கம் முயற்சி செய்யும். ஏனெனில், அவர் அமெரிக்க குடிமகன். அவர் உயிருக்கு ஆபத்து என்றால் நாம் அமெரிக்காவிற்கு பதில் கூற வேண்டும் என்று தென்னாப்பிரிக்க அரசாங்கம் எண்ணும் என எம்.கே. இயக்கத்தினர் பேசும்பொழுது, அந்த அமெரிக்க கருப்பர், “நானும் உங்களை போல ஒருவன் தான், கருப்பினத்தை சார்ந்தவன். அதனால் அமெரிக்காவோ தென்னாப்பிரிக்காவோ எனக்காக எந்த கேள்வியும் கேட்கப்போவதில்லை” என்று அவர் கூறுவார்.
மற்றொரு காட்சியில் பணயக் கைதிகளில் தென்னாப்பிரிக்க நாட்டின் சட்ட மந்திரியின் மகளும் இருப்பார். அவர் உயிருக்கு எதாவது ஆபத்து நேர்ந்துவிடுமென்று இரு அதிகாரிகள் வங்கியினுள்ளே சென்று தாக்குதல் நடத்தாமல் இருப்பார்கள். ஆனால், ஆரம்பம் முதலே காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் கருப்பினத்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது, அவர்களை சுட்டுக்கொல்ல வேண்டும் என்று நிறவெறியுடன் சுற்றித்திரிவார். ஒரு கட்டத்தில் தவறுதலாக சட்ட மந்திரியின் மகளை ஒரு அதிகாரி சுட்டு கொன்றுவிட, அதற்கு அந்த நிறவெறி பிடித்த வெள்ளை அதிகாரி, “நீ நல்ல காரியம் தான் செய்து இருக்கிறாய். சட்ட மந்திரியின் மகளின் பாதுகாப்பிற்காகத்தான் இவர்கள் பொறுமை காத்தனர், இப்பொழுது அவள் இறந்துவிட்டாள். இனி தாராளமாக உள்ளே சென்று அவர்களை வேட்டையாடலாம்” என்று கூறுவார்.
மிகமோசமான அளவில் வன்முறையை கருப்பின மக்கள் மீது செலுத்துவதன் மூலம் அவர்கள் மீது தங்களுக்குன்டான அதிகாரத்தை காலனியம் நிறுவுகிறது. மனிதத்தன்மையற்ற இந்த வன்முறையை நியாயப்படுத்த நிறவெறியை காலனியவாதிகள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். எந்த அளவுக்கும் சென்று கருப்பின மக்கள் மீது வன்முறை செலுத்தலாம் என்கிற மனநிலை, கருப்பின மக்களை மதிப்பற்றவர்களாக மாற்றுகிறது. இவை அனைத்தும் சேர்ந்து அவர்களை எப்பொழுது வேண்டுமானாலும் சமூகத்திலிருந்து துடைத்தெறியலாம் எனும் எண்ணம் அவர்களின் ஆட்சி, அதிகாரத்தின் கோட்பாடாக உருவாகிறது. தங்களுடைய வளர்ச்சிக்காகவும், முதலாளித்துவத்தின் வளத்திற்காகவும் சுரண்டப்படும் பூர்வகுடி (ஆப்பிரிக்க கருப்பின) மக்கள் தங்களின் அரசியல் வலிமையை, தம்மைச் சுரண்டும் காலனியவாதிகளுக்கு எதிராக வன்முறை மூலம் பெற்றுக்கொள்கின்றனர். அந்த வன்முறையே அவர்களை காலனிய அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கிறது.
காரணம், இனி அந்த கருப்பர்களை சுலபமாக வேட்டையாடிவிடலாம் என்று எண்ணி தன் படைகளை உள்ளே அனுப்புவான். ஆனால் உள்ளே இருக்கும் அவ்விடுதலை வீரர்கள் முதற்கட்டமாக உள்ளே நுழையும் இராணுவ வீரர்களை சுட்டு வீழ்த்தும் பொழுது அந்த நிறவெறி பிடித்த வெள்ளை அதிகாரி திக்குமுக்காடிப்போவான். தங்களிடம் உள்ள கடைசி துப்பாக்கி ரவை தீரும் வரை அவர்களுடன் சண்டையிட்டு பின்பு மரணத்தை தழுவியிருக்கலாம். ஆனால் அவர்கள் மீதிருந்த காலணி ஆதிக்கத்தை உடைத்தெறிந்து விட்டு, புது மனிதர்களாகவே அன்று மரணித்தார்கள்.
எம்.கே. (M.K) இயக்கத்தின் ஆப்பிரிக்க விடுதலை வீரர்களாக வரும் அம்மூவரும் நெல்சன் மண்டேலாவை விடுதலை செய்துவிட முடியும் என்று எண்ணி களத்தில் இறங்கவில்லை. அவர்கள் பணயக்கைதிகளாக வைத்திருக்கும் அந்த 25 நபர்களுக்காக, தென்னாப்பிரிக்க அரசாங்கம் நெல்சன் மண்டேலாவை விடுதலை செய்துவிடும் என்று அவர்கள் நம்பவில்லை. ஆனால், உலகமே உற்று நோக்கும் ஒரு மைய்ய இடத்தில் நடக்கும் இந்நிகழ்வில் நெல்சன் மண்டேலாவின் விடுதலையை பேசு பொருளாக்குவோம், அதை மக்கள் இயக்கமாக மாற்றுவோம் என்ற யதார்த்தத்தை தெரிந்தே அவர்கள் அன்று களத்தில் நின்றனர்.
அந்த எண்ணெய் கிடங்கை தகர்க்க செல்லும் முன்னர் கால்வின் குமெலோ தன் சக தோழர்களிடம், “இதை சரியாக செய்தால் நமக்கு வெற்றி, இல்லையெனில் நமக்கு சிறைவாசம் இல்லை, மரணம் தான்” என்று கூறுவார். அவர்கள் அனைவரும் அன்று தங்களின் இன மக்களின் விடுதலைக்காகவும், தங்களின் கோரிக்கைகளுக்காகவும் தங்களின் உயிரை தியாகம் செய்தனர். பலனாக நெல்சன் மண்டேலாவை விடுதலை செய் எனும் முழுக்கம் கருப்பின மக்களிடையே மட்டுமல்லாது உலகம் முழுவதும் எதிரொலித்தது. அதன் தொடக்கப்புள்ளி அவர்கள் சில்வர்டன் சுதுக்கத்தை முற்றுகையிட்டதே.