
இந்தியா என்று அறியப்படும் நிலப்பரப்பு தன் அரசியல், பொருளாதார விடுதலையை காலணியாதிக்க ஆங்கிலேய அரசிடம் பெற்று விட்டதாக 1947, ஆகஸ்ட்-15 அன்று அறிவிக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை இந்தி(ய) அதிகார வர்க்கத்திற்கும் , இந்தியா முழுவதும் உள்ள மொழி வழி தேசிய இனங்களுக்கும் இடையே எழும் முரண்பாடு, அதையொட்டிய தற்காலிக தீர்வு ஆகியவையே 78 ஆண்டுக் கால இந்திய அரசியல் வரலாறு. இதில் இந்தியா என்பது கூட்டாட்சியா? (Federal Government) அல்லது ஒன்றியமா? (Union Government) என்கிற விவாதமே தீர்க்கப்பட விரும்பாத குழப்பமாக உள்ளது!.
இந்த முரண்பாட்டிற்கான தீர்வாக ‘தமிழ் நாடு தமிழருக்கே’ என்றும், ‘திராவிடநாடு திராவிடருக்கே’ என்றும், ‘கூட்டாட்சி அரசியல்’ என்றும் பின்னர் ‘மாநில சுயாட்சி’ என்றும் பல வடிவங்களை இந்திய அரசியல் நிலப்பரப்பில் கையாண்ட ஒரே நிலப்பரப்பு தமிழ்நாடு மட்டுமே. இதுவே பிற்கால திமுகவின் மிக முக்கிய கொள்கையாக ‘மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி’ என்ற இடத்தை அடைந்தது.
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் காலனிய நிலப்பரப்பாக இருந்த இந்தியாவின் மாகாண அரசியல் நிர்வாகங்களில் இந்தியர்களுக்கு அதிகாரம்(சுயாட்சி) அளிக்கும் சீர்திருத்தத்திற்கு மாண்டேகு-செம்ஸ்போர்டு (Montagu Chemsford) அறிக்கை (1919ல்) உருவாக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் (1922) காந்தியடிகள் தான் ‘சுயராஜ்ஜியம்’ வேண்டும் என்பதைப் பேசிய முதல் காங்கிரஸ் தலைவர்.
சுதந்திர இந்திய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபை தான், இந்திய அரசமைப்புச் சட்டத்தை வரையும் என்கிற அடிப்படையில் “சுயராஜியம் என்பது பிரிட்டிஷ் பாராளுமன்றம் வழங்குகிற ஒரு பரிசாக இருக்காது” என்ற தன் கருத்தை வெளிப்படுத்தினார். இதற்கான விளக்கங்கள் அதன் பின்னர் 1934 ஆம் ஆண்டு ‘பூர்ண சுயராஜ்ஜியம்’ என்று காங்கிரஸால் கொடுக்கப்பட்டது. அரசியல் நிர்ணய சபை என்பது இந்தியாவிலுள்ள எல்லாப் பிரிவு மக்களின் பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு சபையாக இருக்கும் என்கிற சுயராஜ்ஜிய கட்சியின் (இது காங்கிரசின் ஒரு அங்கம்) தீர்மானத்தை அகில இந்தியக் காங்கிரஸ் குழு 1934 மே மாதம் அங்கீகரித்தது.
1935 ஆம் ஆண்டு இந்திய அரசு அமைப்பு சட்டத்தின் மூலம் பிரிட்டிஷ் இந்தியாவில் இரட்டை ஆட்சி முறை நடைமுறைக்கு வந்தது. இதிலுள்ள முரண்பாடுகளால் மாகாண உரிமை குரல் ஒலிக்கத் தொடங்கியது. இதுவே அன்றைய சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் கட்சியால் ‘மாகாண சுயாட்சி’ என்ற கோரிக்கையாக முன்வைக்கப்பட்டது. நீதிக் கட்சியும் இந்த முழக்கத்தை ஏற்றுக் கொண்டது. இந்திய விடுதலைக்குப் பின்னரான குடியரசாக உருவெடுத்த காலத்தில் அன்றைய நாம் தமிழர் கட்சி ‘மாநில சுயாட்சி’ பேசியது, ‘திராவிட நாடு’ கோரிக்கையைக் கைவிட்டு ‘கூட்டாட்சி’ தத்துவத்தை முதன்மைப் படுத்திய அண்ணா அன்றைய நாம் தமிழர் கட்சியின் மாநில சுயாட்சி மாநாட்டில் கலந்து கொண்ட வரலாறும் நடந்துள்ளது. தமிழரசுக் கழகத்தின் தலைவர் மா.பொ.சி அவர்களும் மாநில சுயாட்சி பேசியுள்ளார். முக்கியமாக, இந்தியாவில் ஒன்றியம், மாநிலம் என இருவகைப்பட்ட நிர்வாகக் கட்டமைப்பும், அதிகார பங்கீடும் செய்யப்பட்ட வடிவத்தில் மாநிலம் குறித்த கோரிக்கைகள் எழுந்தன. பின்னர் அது பிற்கால திமுகவின் ‘மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி’ முழக்கம் மூலம் இன்றைய புது வடிவத்தை அடைந்துள்ளது. இதில் பெரியார் ஒருவரே தமிழ் நாடு தமிழருக்கே! என்று கடைசி வரை நாடடையும் இலட்சியத்தை மக்கள் மையம் படுத்தும் பணியைச் செய்தவர்.

ஆகப்பெரும் சனநாயகவாதி எனப்பட்ட சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் நேரு தொடங்கி பாசிச பாஜகவின் இன்றைய பிரதமர் மோடி வரை இந்தியா என்பது பல ராஜியங்களின் ஒன்றியம் என்பதை மறுதலிக்கும் வகையிலான இந்தி(ய) அதிகார வர்க்க அடாவடித் தனங்களையே செய்து வந்துள்ளனர். இந்தியா என்பது ஒற்றையாட்சி (Unitary State) நாடாக இருக்க வேண்டும் என்பதே அன்றைய காங்கிரஸ் முதல் இன்றைய பாஜக வரை உள்ள சிந்தனை. குறிப்பாக 2014 ல் பாஜக ஆட்சியேற்றது முதலான இந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம், மாநில அதிகாரம், மாநில வரி உரிமை, மாநில நிதி பகிர்வு உரிமை, மாநில கல்வி உரிமை என்ற அனைத்து விதமான ஜனநாயக மாண்புகளும் அப்பட்டமாக நசுக்கப்பட்டுள்ளன. இவை ஒற்றை இந்தியா என்கிற நவீன காலனிய அதிகாரத்தின் பலிபீடத்தில் வெட்டி வீசப்பட்டு வருகிறது.
திமுக ஆட்சிக்காலத்தில் ராஜமன்னார் தலைமையில் மாநில உரிமை குறித்த ஆய்வறிக்கை (1974) தயார் செய்யப்பட்டு சமர்ப்பிக்கப்பட்ட காலத்தில் இந்திய அளவில் மாநில சுயாட்சி விவாதம் நடைபெற்றது. ஆனால் தேசிய கொடியை மாநில முதலமைச்சர்கள் ஏற்றலாம் என்பதோடு மீண்டும் அது தொய்வடைந்து போனது என்பதே உண்மை.
குறைந்த பட்சம் இன்றைய திமுக அரை நூற்றாண்டு கழித்து மாநில சுயாட்சி சார்ந்து இன்றைய பொருத்தப்பாட்டில் அதை மறு ஆய்வு செய்ய முன்வந்துள்ளது. இந்திய அளவில் மாநிலங்கள் இல்லாத ஏக இந்திய அரசை நிறுவ பாஜக அரசு துடித்துக் கொண்டிருக்கிறது. ஆர்.எஸ்.எஸின் அகண்ட பாரத கனவையும், மொழி வாரி மாநிலங்கள் இல்லாத இந்தியா என்கிற இலட்சியத்தையும் பாஜக செயல்படுத்தத் துவங்கிப் பல நாட்கள் ஆகிறது.
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து இரத்து, ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே வரி முறை(GST), ஒரே நாடு ஒரே கல்வி (புதிய தேசிய கல்வி கொள்கை), மாநிலங்களுக்கு நிதி பகிர்வில் பாரபட்சம், மாநில வளர்ச்சிக்கு என்று (1950 ல்) உருவாக்கப்பட்ட மத்திய திட்டக் குழுவைக் கலைத்து நிதி ஆயோக் (2015) உருவாக்கப்பட்டது, பேரிடர் மேலாண்மை நிதியைத் தர மறுப்பது, மருத்துவ கல்விக்கான கட்டாய தேசிய நுழைவுத் தேர்வு (NEET), இந்தியைத் திணிக்க மும்மொழி கொள்கை மூலம் மறைமுக நெருக்கடி கொடுப்பது, ஆளுநர்களை வைத்து மாநில அரசின் நிர்வாகத்தைக் கேலிக்கூத்தாக்குவது என்று அடுக்கிக் கொண்டே போகலாம் இந்தி(ய) அதிகார வர்க்கத்தின் அரசியல் வன்முறைகளை.
கடந்த பிப்ரவரி மாதம் பள்ளி ‘சமர சிக்ஷா’ திட்டத்தின் கீழ் தமிழ் நாட்டிற்கு ரூ.2,400/- கோடி நிலுவையில் உள்ள பணத்தை PM SRI திட்டத்தில் இணைந்தால் தான் தமிழ்நாட்டிற்குக் கொடுக்க முடியும் என்று ஒன்றிய அரசு சொன்னது. இதற்குத் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மிகக் கடுமையான எதிர்வினையாக ‘மத்திய அரசுக்கு வரி தர முடியாது எனக் கூற ஒரு நொடி போதும்’என்று கூறினார்.
21-02-205 அன்று இந்தியா கூட்டணி சார்பில் திமுக நடத்திய இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் தமிழ்நாட்டின் வெகு மக்கள் பெரியளவில் பங்கேற்கவில்லை என்றாலும் அதை ஆமோதிக்கும் மனநிலையே இருந்தது.
மாநில உரிமை குறித்த முதல்வரின் ‘வரி கொடுக்க மறுப்பது’ தொடர்பான கருத்திற்கு மக்களிடம் எதிர்ப்பில்லை என்பதும், தமிழ்நாட்டில் உள்ள எந்த மாநில கட்சியும் முதலமைச்சரின் கருத்தோடு முரண்படாமல் போனதற்கான காரணம் என்பதும் தமிழர்கள் அரசியல் வயப்பட்டு இருப்பதற்கான சாட்சியங்களாக உறைந்து கிடக்கிறது. இது தமிழர்களின் கூட்டு நினைவு வரலாற்று குறிப்பாக ஒரு செய்தியை அரசியல் அறிவுலகத்திற்கு நிகழ்காலத்தில் உணர்த்தியுள்ளதாகவே புரிந்துகொள்ள முடியும்!.
திமுகவின் மீது ஏமாற்றங்கள் பலதரப்பில் இருந்தாலும், ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசிற்கான முரண்பாடுகளில் தமிழ்நாட்டின் சார்பாகவே தமிழ் மக்கள் நிற்கிறார்கள் எனும் தேசிய உணர்வையே இதுகாட்டுகிறது. தமிழர்கள் வரலாற்று ரீதியாகவே எதிர்ப்பு மரபினர். மொழியே இனப் பற்றாகவும், இனமே மொழிப் பற்றாகவும், கூடவே சுயமரியாதை உணர்வும் ஊட்டப்பட்ட தனித்துவமான மக்கள் திரட்சி கொண்ட நிலம் தமிழ்நாடு.
தமிழ்நாட்டின் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களும், ஜல்லிக்கட்டு புரட்சியும் இந்தி அதிகார வர்க்கத்தின் தமிழ்த்தேசிய இன விரோத போக்கிற்கு எதிரான எதிர் நடவடிக்கைகளே. இது தேசிய இனத்தின் சிக்கல் என்பதே மார்க்சிய வழிபட்ட பார்வை.

தமிழ்நாடு தமிழருக்கே! என்ற பெரியார், திராவிட நாடு திராவிடருக்கே என்ற அண்ணா இருவரும் தேசிய இனத்தின் உணர்வையே முழக்கமிட்டனர். அந்த வகையில் திமுக மாநில சுயாட்சியோடு இடது சாரி தமிழ்த் தேசிய முழுக்கதை கையில் ஏந்த வேண்டிய வரலாற்றுக் காலகட்டம் இது. ஆளுநர் அதிகார வரம்பு குறித்த சமீபத்திய உச்ச நீதிமன்ற தீர்ப்பு, பாராளுமன்றம் தொகுதி மறு வரையறை என்று திமுக அரசியல் ரீதியாக இந்தியாவில் விவாதம் எழுப்பும் வலிமை உடைய வெகு மக்கள் கட்சி.
பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழ் நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்ற பின்னர் ‘Homerule’ இதழில் ‘Hail the Dawn’ என்கிற தலைப்பில் எழுதிய கட்டுரையே ‘அண்ணாவின் உயில்’ என்று கூறப்படுகிறது. அண்ணாவின் உயிலை நிறைவேற்றுவதே மாநில சுயாட்சி அதுவே திமுகவின் கடமையென்று இன்று வரை திமுகவினர் பேசியும், எழுதியும் வருகின்றனர்.
அதில் அண்ணா…,
“அன்புள்ள தம்பி, நான் பதவியைத் தேடி பைத்தியம் பிடித்து அலைபவனுமல்ல; காகிதத்தில் கூட்டாட்சியாகவும், நடைமுறையில் மத்தியில் அதிகாரக் குவிப்புக் கொண்டதாகவும் இருக்கிற ஒரு அரசியல் சட்டத்தின் கீழ் முதலமைச்சராக இருப்பதற்கு மகிழ்ச்சி கொண்டிருப்பவனுமல்ல. இதற்காக மத்திய அரசுக்கு எரிச்சல் ஏற்படுத்துவதும், டில்லியோடு சண்டை போடுவதும்தான் எனது நோக்கம் என்று எனது நல்ல நண்பர் இ.எம்.எஸ் -ஐ போல நான் பிரகடனம் செய்ய விரும்பவில்லை. அதனால் யாருக்கும் நன்மையில்லை. உண்மைதான்; சரியான பருவத்தில் ஒரு உறுதி ஏற்பட வேண்டும் என்பதுதான் முக்கியம். ஆனால் கூட்டாட்சி முறையைப் பற்றி மக்களுக்கு விளக்கம் கொடுப்பதை அதற்கு முன்னால் செய்ய வேண்டும் அந்தப் பணியில் அன்பு தம்பி உன்னுடைய உற்சாகமான ஒத்துழைப்பும், மனப்பூர்வமான பங்கேற்பும் எனக்குக் கிடைக்கும் என்பதில் எனக்கு நிச்சயம் நம்பிக்கை உண்டு”.
“பதவியில் இருப்பதன் மூலம் இன்றைய அரசியல் அமைப்பு சட்டம் கொல்லைப்புறமாகக் கொண்டுவரப்பட்ட ஒரு இரட்டை ஆட்சிதான் என்பதைச் சிந்திக்கக்கூடிய பொதுமக்களின் கவனத்திற்கு திமுக கொண்டுவர முடியுமானால், அது உண்மையிலேயே அரசியல் உலகிற்குச் செய்யப்படும் குறிப்பிடத்தக்க உதவியாகும்.”-என்று குறிப்பிடுகிறார்.
அதிகார குவியல் கொண்ட ஒரு அரசின் கீழ் முதலமைச்சராகத் தான் நினைத்ததைத் தமிழ்நாட்டிற்கு, நாட்டின் மக்களுக்குச் செய்ய முடியாத நிலையைத் தமிழ்நாட்டின் சிந்திக்கக் கூடிய மக்களின் கவனத்திற்குக் கொண்டு செல்ல மட்டுமே திமுக ஆட்சியில் இருப்பதன் நோக்கம் என்பதாக நேரடியாகக் குறிப்பிடுகிறார் அண்ணா.

திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்ட ஒரு தலைவர் கூட்டாட்சி அரசியலைப் பேசி இந்த இரட்டையாட்சி முறை நமக்கு உதவாது என்பதை மக்களுக்கு உணர்த்தும் பணியையே செய்ய சொல்லியுள்ளார் என்று தான் இதை புரிந்துகொள்ள வேண்டும். கோரிக்கைகளுக்கு மக்கள் ஆதரவு வேண்டும், அதை அரசியலாக மக்களிடம் உருவாக்க வேண்டும். அதற்குக் கூட்டாட்சி தத்துவமும், மாநில சுயாட்சி அரசியலும் பயன்படும் என்கிற அடிப்படையே அண்ணாவின் உயில் சொல்லும் செய்தி.
ஆனால், அண்ணா குறிப்பிட்ட, ‘உண்மைதான்; சரியான பருவத்தில் ஒரு உறுதி ஏற்பட வேண்டும் என்பதுதான் முக்கியம்’ என்பதை திமுக மாநில சுயாட்சியோடு சுருக்கிக்கொண்டது.
இன்றைய திமுக, ஒரு வெகு மக்கள் அமைப்பாக திராவிட அடித்தளத்தில் இருந்து இடது சாரி தமிழ்த் தேசிய அரசியல் உணர்வை மக்களிடம் ஊட்டுவதே வரலாற்று நேர்மையாகும். திமுக அதை செய்யவில்லை என்றால் வேறு ஒரு வெகு மக்கள் அரசியல் கட்சியை வரலாறே உருவாக்கும்!. ஏனெனில் தமிழ்நாட்டின் மக்களுக்குத் தெரியும் கோரிக்கை கைவிடப்பட்டது ஆனால் காரணம் அப்படியே தான் உள்ளது என்று!.
குறிப்பு:
- மாநில சுயாட்சி, முரசொலி மாறன், சூரியன் பதிப்பகம்,ஐந்தாம் பதிப்பு,2024.
- இந்திய அரசமைப்புச் சட்டம் ஒரு மோசடி, வே. ஆனைமுத்து, நிமிர் பதிப்பகம், 2022.
- மாகாண சுயாட்சி, ஏ.என்.சிவராமன், வ.உ.சி. நூலகம்,2022.