பொழுதுபோக்கு ஊடகத்தையும் கட்டுப்படுத்தும் வலதுசாரிகள்

அண்மையில் மும்மொழிக் கொள்கை தொடர்பான ‘நீயா நானா நிகழ்ச்சி’ ஞாயிறு அன்று ஒளிபரப்பாக இருந்த நிலையில், அந்த தலைப்பு ஒளிபரப்பப்படாமல் வேறு தலைப்பில் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது பார்வையாளர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியது. இதன் பின்புலத்தை ஆராயும்போது தமிழ்நாட்டில் தற்போது கொழுந்து விட்டு எரியும் மும்மொழி பிரச்சினையை ஒளிபரப்ப விடாமல் தடுக்கும் முயற்சியாகவேத் தெரிகிறது. அதோடு பாஜக ஆதரவு வலதுசாரிகள் ஊடகத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் மேலும் ஒரு படி முன்னேறியுள்ளதையே இந்நிகழ்வு காட்டுகிறது.

இவ்விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரும் தங்கள் சமூக வலைதள கணக்குகளில் இருந்து செய்யும் பதிவுகளை வாசிக்கும்போது, இந்தி ஆதரவாளர்களால் தெளிவாக தங்கள் கருத்துக்களை முன்வைக்க இயலவில்லை எனத் தெரிகிறது. எனவேதான் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டால் தமிழுக்கும் இருமொழிக்கொள்கைக்கும் ஆதரவாக இது மாறக்கூடும் என்று திட்டமிட்டு தடுத்திருக்கிறார்கள் ‘ஊடக வலதுசாரிகள்’.

இந்த ‘ஊடக வலதுசாரிகள்’ என்போர் ஊடகங்களில் உயர்பதவிகளில் இருப்பவர்கள் மட்டுமல்ல. ஒன்றிய ஒளிபரப்புத் துறை இணையமைச்சராக இருக்கும் பாஜகவின் எல்.முருகன் தொடங்கி யூட்யூபிலோ தொலைக்காட்சியிலோ ஒரு காணொளி வெளியிடப்பட்டால் அதற்கு பின்னூட்டம் (Feedback) இடும் இந்துத்துவவாதிகள் வரை இந்த ‘ஊடக வலதுசாரிகள்’ பட்டியலில் இருக்கின்றனர். பாஜக மூன்றாம் முறை பதவியேற்பதற்காக பல வலதுசாரி கருத்தியல் திரைப்படங்களை OTT தளத்தில் வெளியிட்டவர்களும் இத்தகையவர்களே. அதேவேளையில் எதிர்மறை கருத்துகள் (negative comments) எனும் பெயரில் காணொளிகளை வெளியிடுபவர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்து அதை நீக்கச் செய்பவர்களும் இவர்களே.

இதேபோன்றுதான் சில மாதங்களுக்கு முன் யூட்யூபில் இளைஞர்களின் வரவேற்பை பெற்ற ‘பரிதாபங்கள்’ சானலை நடத்தி வரும் கோபி – சுதாகர் இருவரும் ‘லட்டு பாவங்கள்’ என்ற காணொளி வெளியிட்டதற்காக மிரட்டப்பட்டிருக்கிறார்கள். திருப்பதி லட்டில் மீன் எண்ணெய், மாட்டுக் கொழுப்பு கலந்ததாக வெளியான சர்ச்சை செய்தியை இவர்கள் தங்கள் காணொளியில் காண்பித்து அதன் மூலம் நடக்கும் பார்ப்பன ஆதிக்கத்தை காட்சிப்படுத்தியதற்காக அந்தக் காணொளியை நீக்குமாறு இந்துத்துவவாதிகளால் கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

இதுவரை யூட்யூபில் பொழுதுபோக்கு காணொளிகளுடன் ‘கடன் அட்டை பாவங்கள்’, ‘டிஜிட்டல் அரெஸ்ட் பாவங்கள்’ என்று அன்றாடம் நாம் சந்திக்கும் நிகழ்வுகளை பகடியாகப் படைத்தவர்கள் கோபி-சுதாகர். கிறிஸ்துமஸ் பாவங்கள், ரம்ஜான் பாவங்கள் என இவர்களின் காணொளி வந்தபோது அனைத்து மதித்தினரும் அதை ரசித்து வரவேற்கவே செய்தார்கள். ஆனால் இந்த ‘லட்டு பாவங்கள்’ காணொளி மட்டும் வலதுசாரிகளை ஏன் உறுத்தியது என்பது காணொளி நீக்கப்படுவதற்கு முன் பார்த்தவர்களுக்குப் புரிந்திருக்கும். 

கோபி-சுதாகர் வெளியிட்டிருந்த காணொளியில் மென்பொருள் நிறுவனங்களில் நிலவும் பார்ப்பன ஆதிக்கத்தை வெளிப்படையாக காட்சிப்படுத்தி இருந்தார்கள். காணொளியின் தொடக்கத்தில் அசைவ உணவு உண்ணும் நபருக்கு அருகில் அமர்ந்திருக்கும் பார்ப்பனர் மூக்கை பொத்திக் கொள்வது போன்ற காட்சியமைப்பு வரும். அசைவ உணவு மீதான வெறுப்பை பார்ப்பனர் தன் உடல் மொழியில் காட்டுவது / ‘கெட்ட வாடை வீசுகிறது’ என்று மறைமுகமாக பேசுவது போன்ற நிகழ்வுகள் இன்று பல நிறுவனங்களில் நடந்து கொண்டிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. இந்தக் காட்சியால் தாங்கள் அம்பலப்படுவதை பொறுக்க முடியாமல் காணொளியை எதிர்த்து மிரட்டியிருக்கிறார்கள் வலதுசாரிகள்.

மென்பொருள் நிறுவனங்களில் பார்ப்பனர் குழுத்தலைவர்(Team Lead) ஆக வேலை செய்கிறார் என்றால் அவர் குழுவில் இணைவதற்கு பார்ப்பனர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. பார்ப்பனருக்கு தளத்திற்கு(onsite) செல்லும் வாய்ப்புகள் அதிகம் கிடைப்பது, மற்றவரை விட அவர்களுக்கு சம்பள உயர்வு அதிகமாகத் தருவது போன்ற நிகழ்வுகளின் ஓர் சிறு சான்றுதான் ‘உணவு அரசியலாக’ கோபி-சுதாகர் காணொளியில் வெளியிடப்பட்டிருக்கிறது.

திருப்பதி லட்டு சர்ச்சைக்குப் பின், தான் வேலை செய்யுமிடத்தில் அனைவரிடமும் எரிந்து விழும் பார்ப்பனர் ஒருவரின் நடவடிக்கையை ‘லட்டு பாவங்கள்’ காணொளியில் காட்டியிருப்பார்கள். மேலும் “பலர் கைப்பட்டு செய்யும் பொருளை நாங்கள் சாப்பிடுவதில்லை” என்று கூறும் பார்ப்பனருக்கு பதிலடியாக “அரிசியை யார் விளைவிக்கிறார்கள்? ராஜபோகம் பொன்னி அரிசி என்ன உங்கள் தோட்டத்திலா விளைகிறது?” என்று கேட்கும் காட்சியும் பார்ப்பனர்கள் செய்த தீண்டாமைக் கொடுமையையும் அதற்கு தகுந்த பதிலடியையும் நுட்பமாக விவரித்திருந்தது. “தெரியாம சாப்பிட்டா தப்பில்லை, சாப்பிட்டா தப்பே இல்லை” என்று இயல்பாக திராவிட சுயமரியாதைக் கருத்துகளை இணைத்து பரப்பிய காணொளியைத்தான் மிரட்டி நீக்க வைத்துள்ளனர் இந்துத்துவவாதிகள்.

இந்துத்துவவாதிகளின் இந்த பதற்றத்திற்கு ஒரு முக்கிய காரணமுண்டு. ஏனென்றால் தற்போதுதான் மென்பொருள் நிறுவனங்களில் நிலவும் பார்ப்பன ஆதிக்கம் சிறிதுசிறிதாக வெளிப்படத் தொடங்கியிருக்கிறது. ஒரு மென்பொருள் நிறுவனத்தின் இந்திய கிளைக்கு வந்த அயல் நாட்டுக்காரருக்கு, காவி நிறத்தில் குர்த்தா உடையை பரிசாக கொடுத்த ஒரு பார்ப்பனர் (Team Lead பொறுப்பிலிருப்பவர்) “The colour of Modiji” என்று சொல்லி பூரித்ததாக அண்மையில் அந்த நிறுவனத்தில் பணிபுரியும் நண்பர் ஒருவர் தெரிவித்தார். ஆனால் அந்த சந்திப்பில் இருந்த 50 மென்பொறியாளர்களில் ஒருவர் கூட இதை எதிர்த்து வாயைத் திறக்கவில்லை என்பதுதான் அதிர்ச்சியளிக்கும் செய்தி. இப்படிப்பட்ட உண்மை நிகழ்வுகள் சர்ச்சையாகப் பேசப்படுமோ என்று நினைக்கும் திராணியற்ற கூட்டம்தான் கோபி-சுதாகர் அவர்களை மிரட்டி காணொளியை நீக்க வைத்தது.

இன்று யூட்யூப் மற்றும் OTT தளங்களில் குவிந்திருக்கும் வலதுசாரி படைப்புகளுக்கு மத்தியில் மிக அரிதாகவே இடதுசாரி சிந்தனைகளை பரப்பும் காணொளிகளை நாம் பார்க்க முடிகிறது. மிக வெளிப்படையாக சிறுபான்மை மக்களுக்கு எதிராக காணொளியை வெளியிடவும் அந்த நஞ்சை மக்களிடத்தில் பரப்பவும் வலதுசாரிகளால் எளிமையாக செய்ய முடிகிறது. குறிப்பாக தமிழ் பெயர்களில், ஆன்மீக/ ஜோதிட  சிந்தனைகளை பரப்புகிறோம் என்ற போர்வையில் சனாதனக் கருத்துக்களைத் திணிப்பதும் சானல்களில் நடக்கிறது. இடதுசாரி அரசியலில் ஈடுபடுபவர்களை எவ்வாறெல்லாம் பொருளாதார ரீதியாக முடக்கலாம் என்று கூட ஒரு வலதுசாரி இந்துத்துவவாதி காணொளி வெளியிட்டார். ஆனால் இத்தகைய காணொளிகள் யூட்யூபில் புகார் கொடுத்தும் நீக்கப்படுவதில்லை.

ஆனால் பெரியார்-திராவிட அரசியல் குறித்தோ, ஈழம் குறித்தோ, எந்த சானல் தொடங்கினாலும் அவை கடுமையான கட்டுப்பாடுகளுக்கு கீழ் கொண்டு வரப்படுகின்றன. கடின முயற்சியால் தயாரிக்கப்படும் திராவிட கருத்தியல் கொண்ட காணொளிகள் மக்களிடம் கொண்டு செல்லப்படுவதற்கு முன் முடக்கப்படுகின்றன. ‘YOUTUBE COMMUNITY STANDARDS’ என்பது 3% பார்ப்பனர்களுக்காக 97% மக்கள் ரசித்த காணொளியை நீக்குவதற்குத்தான் பயன்படுகிறது என்றுப் பரவலாக பேசும் அளவிற்கு ஊடக கருத்துரிமை மாறி விட்டது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி பல்வேறு OTT தளங்களில் 30க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இவற்றில் பாதி வலதுசாரி கருத்தியலுக்கு ஆதரவாகவும் மீதி படங்கள் இடதுசாரி கருத்தியலுக்கு எதிராகவும் இருந்தன. OTT எனும் காட்சி ஊடகத்தைத் திறந்தாலே பாஜக தேர்தல் பரப்புரைக்கு ஆதரவான திரைப்படங்கள் விளம்பரப்படுத்தப்பட்டன. குறிப்பாக அம்பானியின் ஜியோ(JIO) டிவி இடையறாமல் இந்த வேலையைச் செய்தது. இவற்றிற்கு பதிலடியாக எந்த காட்சி ஊடகமும் இடதுசாரி கருத்தியலோடு செயல்பட்டதாக நாம் அறிய முடியாது.

‘அன்னபூரணி’ எனும் திரைப்படத்தில் ராமன் இறைச்சி உண்டதாக வரும் ஒரு வசனத்திற்காக அந்த OTT தளத்தையே புறக்கணிக்க சங்கிகள் அழைப்பு விடுத்தனர். (உண்மையில் திரைப்படத்தில் அந்த வசனத்தைக் கூறுபவர் நடிகர் ஜெய், அதில் இசுலாமிய இளைஞராக கதாப்பாத்திரம் மற்றும் பார்ப்பன பெண்ணாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். ஆனால் இந்துத்துவவாதிகள் நடிகை நயன்தாராவிற்கு அச்சுறுத்தல் விடுத்தது அவர்கள் பெண்களை குறி வைப்பதற்கான சான்றே.)

முன்பெல்லாம் ஊடக விவாத மேடைகளில் எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள் என்று பலர் பங்கேற்ற நிலை மாறி, மக்கள் களத்திற்கே வராத போராடாத ‘வலதுசாரி’ என்ற பெயரில் தற்போது சில நபர்கள் பங்கேற்கிறார்கள். இவர்கள் உடன் விவாதிக்கும் இடதுசாரி கருத்தியலாளர்களை அச்சுறுத்தும் தொனியில் பேசுவதும் எந்த அடிப்படை ஆதாரமற்ற தகவலை பரப்புவதும் ஒளிபரப்பாகிறது. ஆனால் இவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கும் இயக்கத் தோழர்கள் தொடர்ந்து ஊடகங்களால் புறக்கணிக்கப்படுகின்றார்கள்.

தற்போது திமுக ஆதரவாக நடத்தப்படும் யூட்டியூப் சானல்களிலும், அக்கட்சியோடு உடன்படாத பெரியாரிய முற்போக்காளர்களுக்கு இடமில்லை எனும் நிலையே உள்ளது. இன்னும் விரிவாக ஆராய்ந்தால், திமுகவுடன் உடன்படாத பெரியாரியவாதிகள் மீது சொந்த காழ்ப்புணர்ச்சி காரணமாக அவதூறு பரப்பும் அவலமும் நடக்கிறது. இதையெல்லாம் மீறி மக்களை அரசியல்படுத்தும் பணிகளில் ஈடுபடும் இயக்கவாதிகளை முடக்க, யூடூப் நிறுவனமும் சமூக வலைத்தளங்களும் போட்டி போட்டிக்கொண்டு செயல்படுகின்றன.

குறிப்பாக மக்கள் பிரச்சினைகளுக்காக போராடி சிறை சென்ற மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் சமூக ஊடக கணக்குகள் தொடர்ந்து முடக்கப்பட்டன. அவர் சிறை மீண்ட பிறகு, அவரின் நேர்காணல்கள் யூட்யூபால் மட்டுப்படுத்தப்பட்டது, அவரின் நேர்காணலை வெளியிடக் கூடாதென்று தொலைக்காட்சி நிறுவனத்திற்கு வலதுசாரி இந்துத்துவவாதிகள் மிரட்டல் விட்ட சம்பவமும் நடந்திருக்கிறது.

இவ்வாறு காட்சி ஊடகத்தை தங்கள் கைகளுக்குள் கொண்டு வந்திருக்கும் இந்துத்துவாதிகளை எதிர்கொள்ள திராவிட/ தமிழ்த்தேசிய/ இடதுசாரி தோழர்களாகிய நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதே தற்போதைய கேள்வி.

சித்தாந்தத்தை பரப்ப வேண்டும் என்ற உறுதியோடு வலதுசாரிகள் அனைத்து துறைகளிலும் ஒருங்கிணைந்து பணியாற்றுகிறார்கள். (தமிழ்நாட்டில் இருக்கும் பாஜக உறுப்பினரின் ட்விட்டர் பதிவு கூட தில்லியில் இருந்து வழிநடத்தப்படும்.) இத்தகைய ஒருங்கிணைப்பை வலதுசாரிகள் காட்டும்போது, கொள்கை உறுதி கொண்ட இடதுசாரி முற்போக்காளர்களின் ஒருங்கிணைப்பு இன்னும் அதிகமாக தேவைப்படுகிறது. ஆனால் இதுவரை எந்தத் துறையிலும் அது நடக்கவில்லை என்பது துயரமான விடயம். எனவே பல தடைகளைத் தாண்டி, இளையோர்களை சென்றடையும் வழியை இனி நமது முக்கிய பணித்திட்டமாக மாற்றுவோம்! வலதுசாரி கருத்தியலுக்கு எதிரான சித்தாந்த களத்தைக் கட்டமைப்போம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »