
அறிஞர் அண்ணா அவர்கள் தனது ஆரிய மாயை புத்தகத்தை ‘போற்றி திருப்பா’ என்ற பாடலுடன் துவங்கியிருப்பார். அதில் ‘பேச நா இரண்டுடையாய் போற்றி’ என்று ஆரியப் பார்ப்பனியத்தின் குணங்களைப் பற்றி எழுதியிருப்பார். ஈராயிரம் ஆண்டு காலமாக, தமிழ் சமூகத்தில் ஒட்டுண்ணியாக வாழ்ந்து கொண்டு அவர்களையே சுரண்டிய பார்ப்பனியத்தின் நாக்குகளை இலக்கிய நயத்துடன் தொங்க விட்டிருப்பார். அண்ணா மீதான ஆரியக் கூட்டத்தின் ஆத்திரம் அன்றிலிருந்து தொடர்வதன் நீட்சியாகவே சமீபத்தில் அரசியல் தரகர் என்றழைக்கப்படும் குருமூர்த்தி ஒரு ஆங்கில ஊடக நேர்காணலில், அண்ணாவின் தமிழ்ப்பற்றைப் பற்றி அவதூறாகவும், திராவிடத்தின் மீது வன்மத்துடனும் பேசியிருப்பதை பார்க்க முடிகிறது.
தமிழ் இலக்கியங்கள், திருக்குறளை பேரறிஞர் அண்ணா அவர்கள் மதித்ததில்லை என்றும் அவற்றில் ஒரு புத்தகம் கூட எழுதியதில்லை என்பதும் குருமூர்த்தியின் அவதூறு. அண்ணாவின் எழுத்துக்கள், பேச்சுகள் என எதிலும் இலக்கிய நயத்தைப் பிரித்துப் பார்ப்பது அரிது என்பது அண்ணாவை வாசித்தவர்கள் அறிந்த ஒன்று. தம்பி என ஆரம்பித்து அவர் எழுதும் கடிதத்தின் ஒவ்வொரு வரியிலும், தொண்டர்களின் அடி மனதிலிருந்து உணர்ச்சிகளை எழ வைக்கும் இலக்கிய ஆற்றல் வாய்ந்தது. உலக இலக்கியத்தையும் தமிழோடு கட்டிப் போடும் ஆற்றல் கொண்டிருந்தவர் அண்ணா.
அண்ணா எழுதிய சிறுகதைகள் 90; நெடுங்கதைகள் 14; ஓரங்க நாடகங்கள் 42; நாடகங்கள் 10; கவிதைகள் 23; இன்னும் தம்பிக்கு கடிதங்கள் 290. மேலும் தலையங்கங்கள் கட்டுரைகள் ஏராளம். அண்ணா எழுதிய இலக்கியக் கட்டுரைகளில் அகநானூறு, புறநானூறு, கலிங்கத்துப்பரணி, சிலப்பதிகாரம், திருக்குறள் ஆகியவற்றிலிருந்து எடுக்கப்பட்ட தொகுப்புகள் மண்டிக் கிடக்கின்றன. அவைகளில் சிலவற்றை அண்ணாவின் புதல்வரான பரிமளம் அவர்கள் தொகுத்து இலக்கியச் சோலை என தனிப் புத்தகமாகவே தந்திருக்கிறார். அப்புத்தகத்தில் பழந்தமிழகத்தின் பெருமைகளை போற்றும் வரிகளுடன் சிலப்பதிகாரம், புறநானூறு, நெடுநல்வாடை, முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம், குறிஞ்சி காட்சி, நிலமடந்தை, கலிங்கத்துப்பரணி போன்ற தமிழர்களின் சங்கப் பாடல்களில் உள்ள சில பாடல்களை எடுத்து, அப்பாடல்களை எளிமையாய் எவரும் அறியும் வண்ணம் தனது கவி வரிகளால் தொடுத்து இலக்கியச் சோலையாகத் தருகிறார் அண்ணா.

அண்ணாவின் இலக்கிய நயம் சங்க இலக்கியங்களின் எளிய வடிவம் கொண்டது. தொல் தமிழர்களின் வாழ்வியலை இன்றைய தமிழரும் புரியும் வண்ணம் எளிமையானது. தமிழர்களின் மூளைக்குள் புகுத்திய புராண, இதிகாசப் புளுகுகளை பதம் பார்த்தது. அவரின் அரசியல், சமூகப் பணிகள் குறித்தான எழுத்துக்களிலும் பாமரரும் ரசிக்கும் இலக்கியச் சுவை கலந்தே இருந்தது. தமிழர்களின் உணர்ச்சிகள் தூண்டும் பேச்சுக்களிலும் இலக்கியமே உறைந்திருந்தது. அப்பேர்ப்பட்ட அண்ணாவை தமிழ் இலக்கியம் பற்றி அறியாதவர் என்று பேசியதை அண்ணா எழுதிய ‘போற்றித் திருப்பா’ வழியாகவே சொல்வதானால்,
‘ஒட்டுவித்தை கற்றாய் போற்றி!
உயர் அநீதி உணர்வோய் போற்றி!
எம் இனம் கெடுத்தோய் போற்றி! – என்றே போற்றலாம்.
அவரின் எளிமையான வரிகளுக்கு எடுத்துக்காட்டாக பூம்புகாரைப் பற்றி விவரிக்கும் ஒரு பாடல்,
‘கடல் வழி வந்த குதிரைகள்
நிலவழி வந்த மிளகுப்பொதிகள் இமையச்சாரலின் மணியும், பொன்னும் குடகு மலை சந்தனமும், அகிலும் தென்கடல் முத்து
கீழ் கடற்பவளம்
ஈழநாட்டுப் பொருள்
காழக நாட்டுப் பொருள்’ – இவைகள் எல்லாம் மலை மலையாகக் குவிக்கப்பட்டிருந்தன; ஒவ்வொரு நாளும் விழாக்கோலமாம் ! ஆடலும் பாடலும் அழகியதாய் அமைந்திருந்தனவாம்! கடலடி சென்று விட்டது காவிரிப்பூம்பட்டினம், கவிதை வடிவில் உள்ளது இன்றும்!’ – சங்க இலக்கியத்தை ஆழ்ந்துணர்ந்த அண்ணா, அதன் சாரமாக வடித்த வரிகளே இவை.
தமிழின் நவீன உரைநடை வடிவத்தை முதன்முதலில் இலக்கிய நயத்துடன் மாற்றியவர் தான் அண்ணா. அந்த எழுத்துகள் எல்லாம் கவிதையா, உரைநடையா என்று பிரித்துப் பார்க்க முடியாத அளவிற்கு பாமரரும் புரிந்து கொள்ளும் வண்ணம் எழுதியவர் அண்ணா. தமிழின் எழிலைப் பற்றி அண்ணா கூறும்போது, ‘நமக்கு கிடைத்திருக்கின்ற தாய்மொழி பிறமொழிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கின்ற நேரத்தில், பிற மொழியாளர்கள் எல்லாம் பார்த்து, இவ்வளவு எழிலுள்ள மொழியா உங்களுடையது?, இவ்வளவு ஏற்றம் பெற்ற இலக்கியமா உங்களிடத்தில் உள்ளது?, இவ்வளவு சிறந்த இலக்கணத்தையா நீங்கள் பெற்று இருக்கிறீர்கள்?, ஈராயிரம் ஆண்டு காலமாகவா இந்த மொழி சிதையாமல், சீர்குலையாமல் இருந்து வருகின்றது? என்று ஆவலுடன் பலரும் கேட்கத்தக்க நல்ல நிலையிலே தான் தமிழ்மொழி இருக்கின்றது’ என்று அவரின் எழுத்துகள் தமிழுணர்ச்சியை தூண்டும் வகையிலானது. இவரைத்தான் இலக்கியம் அறியாதவர் என்கிறது பார்ப்பனியம்.
உலகின் பல நாடுகள் உருவம் கூட பெறாமல், மொழி வளம் இல்லாமல், இலக்கிய வளம் இல்லாமல், புலவர்கள் அதிகம் இல்லாமல் இருந்த காலத்தில் இங்கு, எந்த அளவிற்கு வாழ்க்கை வளம், அரசு நெறி, சீர் இருந்திருந்தால் இத்தனைப் புலவர்கள் இருந்திருப்பார்கள் என்று குறிப்பிட்டு, 92 புலவர்களின் பெயர்களை பட்டியலிடுகிறார் அண்ணா. அன்றைய காலத்திலேயே வேறு எந்த இனத்திலும் இல்லாத அளவிற்கு பெண்பாற் புலவர்களைக் கொண்டிருந்த சமூகம் என இறுமாப்பு கொள்கிறார் அண்ணா. தமிழ்ப் புலவர்களின் பாடல்களைத் திரித்து தமிழர்களிடம் கேடாய் புகுந்த பார்ப்பனியக் கூட்டத்தை ‘ஈடில்லாக் கேடே போற்றி!’ என்று அம்பலப்படுத்தினார். அந்தப் பார்ப்பனியக் கேடுகளே இன்று அண்ணாவை மலினப்படுத்தும் வேலையை செய்கின்றன. சில காலத்திற்கு முன்பு பத்ரி சேசாத்ரி என்னும் பார்ப்பனர் அண்ணாவை முட்டாள் எனக் கூறியதும், அண்ணா மேல் கொண்டிருக்கும் இவர்களின் தொடர் வன்மத்திற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது.

அண்ணா எழுதும் சிறுகதைகள், நாவல்கள், கடிதங்கள், கட்டுரைகள் என எதிலும் இலக்கிய நயம் செறிவாக இருக்கும். எந்த அடர்த்தியான கருத்தையும் எளிமையானதாக மாற்றி, சொற்சுவை மாறாமல் தருவதில் அண்ணா ஒரு தமிழறிஞரே. சங்க இலக்கியத்தின் தாக்கத்தை வரிகளில் கொண்டு, ஆரிய எதிர்ப்பை மூச்சாகக் கொண்டு இயங்கியதால்தான் குருமூர்த்தி போன்ற பார்ப்பனர்கள் அண்ணாவை தமிழிலக்கியப்பற்று இல்லாதவர் எனக் கட்டமைக்கின்றனர்.
திருக்குறளை பெருநெறி காட்டும் வழிகாட்டி நூல் எனப் போற்றியவர்.
வள்ளுவர் தந்த திருக்குறள் தமிழர்க்கு மட்டும் அல்லாமல் பண்புடன் வாழ விரும்பும் அனைவர்க்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்திருக்கிறது என்றவர். வைரத்தைப் பட்டைத் தீட்டத் தீட்ட அதனுள் பல வண்ணங்கள் தெரிவது போல, திருக்குறளை ஆராய ஆராய அதில் பல புத்தம் புதிய அருமையான கருத்துக்கள் புலப்படும் என்று அறிவித்தவர். திருக்குறளை, தமிழ் இலக்கியங்களின் கருத்துக்களை ஓவியங்களாக, வரி வடிவங்களாக, பாடல்களாக, கூத்தாக உருவாக்கி வெளிப்படுத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று சொன்னவர். திருக்குறளை மேற்கோள் காட்டியே தனது உரைகளை, எழுத்துக்களை வடிவமைத்தவர்.
திருக்குறள் பற்றி புத்தகம் எழுதாததால் திருக்குறளை மதிக்காதவர் அண்ணா என்று பேசும் குருமூர்த்திக்கு, தீக்குறளை சென்றோதோம் எனப் பாட்டெழுதிய பக்தி இலக்கியத்தை பதம் பார்த்த அண்ணாவின் பகுத்தறிவு இலக்கிய நயம் சுடும் என்பதில் ஆச்சரியமில்லை. திருவள்ளுவர் உலகமயமாகி நூற்றாண்டு காலமே ஆகிறது., ஈராயிரம் ஆண்டுகளாக பரணையில் கிடந்ததை தூசு தட்டி திராவிடமே திருக்குறளை உலகமயமாக்கியது. இன்று திருக்குறளை செரிப்பதற்கு வருகிறார்கள் பார்ப்பனர்கள்.
‘தமிழர் மனைகளிலே குறள் உண்டோ? பஞ்சாங்கம் இருக்கும்; பாரதக் கதை இருக்கும்; அபிமன்யு வீரமும் இருக்கும்; அறநெறி கூறும் அருமைத் திருக்குறள் இருக்குமா? இல்லை.’ – தமிழர் வீடுகளில் புகுந்து கொண்ட பார்ப்பனியப் புளுகுகளை ஒழிக்க இலக்கிய நயம் கொண்டு எழுதிய அண்ணாவைக் கண்டு பார்ப்பனீயம் எரிச்சல் அடைவதிலும் வியப்பில்லை.
குருமூர்த்தியின் பேச்சு, இங்கு திராவிடத்தை வேரறுப்பதாக புற்றீசலாக கிளம்பிய சீமான், ஐயா மணியரசன் போன்றோரின் பேச்சுக்களை ஒட்டியே இருந்தது. சிவந்தி ஆதித்தனார் அவர்கள் வைத்திருந்த ‘நாம் தமிழர்’ என்னும் அடையாளத்தை அந்தக் குடும்பத்துடன் பேசி சீமானுக்கு அளித்ததே குருமூர்த்தி அரசியல் தரகர் என்று அழைக்கப்படுவதற்கு சான்றான ஒன்று. இந்தியப் பார்ப்பனியத்தின் வேலைத் திட்டமான திராவிடக் கருத்தியலையும், தமிழையும் பிரிக்கும் வேலையில் சீமான் அன்றிலிருந்து சேர்ந்து கொண்டார் என்பதற்கும் இதுவே சான்று.
தமிழுக்கு அரணாக இருந்து தொல் தமிழரின் வாழ்வியல் சிறப்புகளைப் பறைசாற்றும் சங்க இலக்கியங்களை மீட்டு, ஈராயிரம் ஆண்டு கால பார்ப்பனியத் திரிபுகளை அம்பலப்படுத்தி, தமிழரின் முன்னேற்றத்திற்கு தடைகல்லான சாதி, மத மூடத்தனங்களை ஒழிக்க விழிப்புணர்வை உருவாக்கிய பெரியாரையும், திராவிடக் கருத்தியலையும் ஒழிக்கும் வேலைத் திட்டம் சீமானின் கையில் ஒப்படைக்கப்பட்டது. அவரும் அதனை முழு மூச்சாக செய்து தமிழ்ச் சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறார். அதன் மேல் நின்று பார்ப்பனர்கள் இன்று அறுவடை செய்து கொண்டிருக்கிறார்கள்.
திராவிடம் வேறு, தமிழ் வேறு என்பதை நிறுவப் பார்க்கிறார்கள். தமிழின் முதல் இலக்கண நூலான தொல்காப்பிய சமஸ்கிருத அறிஞர்களிடம் சென்று சரிபார்க்கப்பட்டு எழுதியதாக தமிழை மலினப்படுத்துகிறார்கள். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என உலகப் பொதுமறையை பேசிய திருக்குறளை, உயர்வு தாழ்வு கற்பிக்கும் சனாதனக் கருத்துக்கள் நிறைந்திருப்பதாக திரிக்கிறார்கள். எந்த தமிழனும் தமிழ்நாட்டை உருவாக்க வில்லை என வன்மத்துடன் பேசிய சி.பி. ராதாகிருஷ்ணனை, துணைக் குடியரசுத் தலைவர் பதவிக்காக ஒரு தமிழராக ஆதரிக்கவில்லை என்று பாஜகவினர் சீறினார்கள். தமிழை, தமிழர்களை பார்ப்பனியம் தாழ்த்தியது. திராவிடம் தமிழை, தமிழர்களை உயர்நிலையில் கொண்டு சென்றது.
போலித் தமிழ்த் தேசியவாதிகள் பார்ப்பனியத்திற்கு குரலாக மாறி அவர்களின் திராவிட வெறுப்புக் கட்டமைப்பை சுமந்து கொண்டிருக்கின்றனர்.
நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், கடிதங்கள், நாடகங்கள், கதைகள் என தமிழ் இலக்கிய வடிவங்கள் அனைத்திலும் ஆளுமையாக இருந்த அண்ணாவின் புத்தகங்கள் ஆரியப் பார்ப்பனியத்தையும், அவர்களின் புராணப் புளுகுகளையும், இந்துத்துவத்தையும் அம்பலப்படுத்தியது. வடக்கு வாழ்வதையும், தெற்கு தேய்வதையும் பணத் தோட்டம் புத்தகத்தின் மூலம் தரவுகளுடன் சுட்டிக் காட்டினார். தமிழர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய காரணங்களை ஆய்வாளராக முன்வைத்தார். ‘ஆரிய மாயை’ , ‘தீ பரவட்டும்’, ‘நீதி தேவன் மயக்கம்’, ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்’ போன்ற பல புத்தகங்களால் ராம ராஜ்ஜியம் படைக்க நினைக்கும் இந்துத்துவவாதிகளின் வஞ்சகத்தைத் தோலுரித்தார். சட்டமன்ற, நாடாளுமன்ற உரைகளால் தீர்க்கமான பாதையை தமிழ்நாட்டிற்கு அமைத்துக் கொடுத்தார். எண்ணற்ற தொண்டர்களை உணர்ச்சி மிகுந்த இலக்கிய நயத்தால் தமிழின் மீது கவர்ந்திருக்க வைத்தார்.
‘நான் ஒரு திராவிட மாணவன்’ என்று துவங்கும் நாடாளுமன்ற உரை இன்றும் பார்ப்பனர்களுக்கு நெருஞ்சி முள்ளாய் குத்துகிறது. அந்த எரிச்சலே அரசியல் தரகர் குருமூர்த்தின் நேர்காணலாய் வெளிவந்திருக்கிறது..