
வடநாட்டில் அயோத்தியைப் போல தமிழ்நாட்டில் திருப்பரங்குன்றத்தையும் மாற்றுவோம் என வெளிப்படையாக அறிவித்து பிஜேபி, ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி அமைப்புகள் களமிறங்கி இருக்கின்றன. கடந்த முப்பது ஆண்டுகளாக ராமர் கோயிலுக்காக பற்றியெறிந்த அயோத்தியைப் போல, மத நல்லிணக்கம் போற்றும் தமிழ்நாட்டில் முருகனை முன்வைத்து மதக்கலவரம் தூண்டும் இழிவான அரசியலை அரங்கேற்ற ஆரம்பித்துள்ளனர்.
திருப்பரங்குன்ற மலையின் அடிவாரத்தில் முருகன் கோவிலும், காசி விசுவநாதர் கோவிலும், மலையின் மேலே இசுலாமியர்களின் சிக்கந்தர் பாதுஷா தர்காவும் உள்ளது. பொதுவான வழியிலேயே மூன்றிற்கும் முன்பு மக்கள் சென்று வந்திருக்கிறார்கள். அதன் பின்னர் விசுவநாதர் கோயிலுக்கு செல்ல படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆடு, கோழி பலியிட்டு நேர்த்திக் கடன் செலுத்திவிட்டு, அதனை சமைத்து தமிழர்கள், முஸ்லிம்கள் பாகுபாடில்லாமல் உண்பது வழக்கமான நடைமுறையே என அப்பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள். பெரிய அளவிலான சமைக்கும் வளாகமும் அங்குள்ளது. சிக்கந்தர் தர்கா செல்லும் பெயர்ப்பலகையில் தண்ணீர் வசதி மற்றும் கந்தூரி விழா நடத்த சமையல் பாத்திரங்கள் உண்டு என்கிற அறிவிப்பும் உள்ளது.
அவரவர் விழாக்களின் பொழுதும் இரு தரப்பு மக்களும் இணைந்தே கொண்டாட்டத்தில் ஈடுபடுகின்றனர். தமிழர்களும், இசுலாமியர்களும் நல்லிணக்கத்துடன் சுமூகமான முறையில் வாழ்ந்து வரும் சூழலில், கடந்த டிசம்பர் மாதம் சிக்கந்தர் தர்காவிற்கு படையலிடுவதற்காக ஆடு, கோழி எடுத்து வந்த இசுலாமிய குடும்பத்தினரை காவல் துறை அதிகாரி ஒருவர் தடுத்து நிறுத்தியிருக்கிறார். இதனை தடை செய்வதற்கான அரசு ஆணை எதுவும் விதிக்கப்படாத நிலையில், மாவட்ட வருவாய் அதிகாரி ஒருவரின் தன்னிச்சையான வாய்மொழி உத்தரவின் பேரில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
காலங்காலமாக தங்கள் தர்காவில் தொடரும் பண்பாட்டு வழக்கத்திற்கு திடீரென்று அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிராக, இசுலாமிய அமைப்புகள் இணைந்து போராடியுள்ளனர். இதுவரை தொடர்ந்து நடந்து கொண்டிருந்த வழக்கத்தை, தமிழ்நாடு அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்காத நிலையில் தடை செய்த மாவட்ட நிர்வாகம், ‘இசுலாமியர்கள் வழிபடுவதை தடுக்கவில்லை, ஆடு, கோழி எடுத்து செல்வதையே தடுக்கிறோம்’ எனப் புதிதாக தன்னிச்சையான விளக்கம் அளித்துள்ளது.

இசுலாமியர்களுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் இடையிலான இந்த வாதங்களில், திடீரென இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி போன்ற சங்பரிவார கும்பல்கள் நுழைந்துள்ளன. மலையில் அசைவம் உண்ணக்கூடாது, பலியிடுதல் கூடாது என அத்துமீறிப் பேசி தொடர்ச்சியாக பதட்டத்தை உருவாக்கி வந்துள்ளன. இந்த சூழலில், வழிவழியாக வரும் தங்களின் உரிமையை விட்டுக் கொடுக்க முடியாதென சனவரி 18 – ந்தேதி, கந்தூரி விழாவினைக் கொண்டாட இசுலாமியர்கள் ஆடு, கோழியுடன் சிக்கந்தர் தர்காவிற்கு செல்ல முனைந்துள்ளனர். காவல்துறை அவர்களை தடுத்து நிறுத்த, இந்துத்துவ அமைப்புகள் மீண்டும் அங்கு குவிந்து சர்ச்சையில் ஈடுபட்டுள்ளனர். மலையின் புனிதத்தன்மை காக்கப்பட வேண்டும் எனவும், மலையின் உச்சியில் ஆடு, கோழி பலியிடுதல் கூடாது என வன்முறையைத் தூண்டும் வகையில் ஆலோசனைகள், ஊர்வலங்களை நடத்தியுள்ளனர்.
அப்பகுதி பாராளுமன்ற உறுப்பினரும், வக்பு வாரியத் தலைவருமான நவாஸ் கனி அம்மலையில் அமர்ந்து அசைவம் சாப்பிட்டதாகவும், அவர் மத நல்லிணக்கத்தை குலைப்பதாகவும், பாஜகவின் எல். முருகன், பாஜக தலைவர் அண்ணாமலை பேச, அப்பிரச்சனை பெரிதானது. நவாஸ் கனி அதனை மறுத்தார். மாவட்ட நிர்வாகம் சமைத்த உணவை கொண்டு செல்லலாம் எனக் கூறியதால், தன்னுடன் வந்தவர்கள் உண்டார்களே தவிர, தான் அசைவ உணவு சாப்பிடவில்லை எனக் கூறினார். அதனை நிரூபித்தால் பதவி விலகவும் தயார் எனவும் கூறினார். இருப்பினும், தொடர்ந்து பாஜகவும், இந்துத்துவ அமைப்புகளும் அவரைக் குறிவைத்து தாக்கிப் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
இசுலாமியர்கள் பாரம்பரிய உரிமையான நேர்த்திக்கடன் செலுத்த வந்தவர்களை தடுத்த காவலர் துவங்கி வைத்த இப்பிரச்சனை, படிப்படியாக இந்துத்துவ கும்பல்களினால் பிப்ரவரி 4, 2025 அன்று, திருப்பரங்குன்றத்தில் நடத்தப்பட்ட கூட்டம் வரை நீண்டிருக்கிறது. இன்று அங்கு ‘சிக்கந்தர் தர்காவே இருக்கக் கூடாது, வேறு இடத்தில் வைத்துக் கொள்ளட்டும்’ என பீகாரிப் பார்ப்பனரான எச். ராசா பேசியிருக்கிறார். உணவில் ஆரம்பித்த பிரச்சனையை ஊதிப் பெரிதாக்கி தர்காவையே அப்புறப்படுத்த சொல்லும் வரை கொண்டு வந்து இந்துத்துவ கும்பல்கள் நிறுத்தியிருக்கிறது.

அங்கு கலவர சூழ்நிலை ஏற்படும் எனத் தெரிந்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் மதுரை நீதிமன்றம் இந்துத்துவ கும்பல் திரள்வதற்கு அனுமதி அளித்தது. மதவெறி முழக்கங்களினால் அப்பகுதிவாழ் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அக்கூட்டம் நடந்து முடிந்திருக்கிறது. அயோத்தியில் ஆரம்பித்தது திருப்பரங்குன்றத்திலும் நடக்கும் என மதவெறியுடன் பேசிய பேச்சுக்களும், இரைச்சல்களும் இதுவரை தாங்கள் காணாதவை என அப்பகுதி மக்கள் அச்சத்துடன் பேசுகின்றனர். மதுரை சித்திரைத் திருவிழா முதற்கொண்டு பல விழாக்களில் இணக்கமாக செயல்படும் தங்களிடம் வன்முறையை தூண்டும் இந்த தீய சக்திகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மக்கள் குமுறுகின்றனர்.
ஆங்கிலேயர் ஆட்சியின் போது, இதற்கான வழக்கு நடத்தப்பட்டு தர்காவுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டதையும் ஆதாரமாக வழக்கறிஞர்கள் காட்டுகின்றனர். 1923-ல் வெள்ளையர் ஆட்சி அம்மலையை சொந்தம் கொண்டாட நினைக்கும் போது, கோவில் நிர்வாகம், மதுரை உள்நீதிமன்றத்திற்கு செல்கிறது. அதன் தீர்ப்பின்படி தர்கா, பள்ளிவாசல், கொடிமரம், நெல்லித்தோப்பு, புதிய மண்டபம் வரை இசுலாமியர்களுக்கு சொந்தம் என தீர்ப்பாகிறது. வழக்கு உயர்நீதிமன்றத்திற்கு எடுத்து செல்லப்படுகிறது. அங்கு வெள்ளையர்களுக்கு ஆதரவாக தீர்ப்பாகிறது. மீண்டும் கோவில் நிர்வாகம் இங்கிலாந்து பிரிவி கவுன்சிலுக்கு (Privy Council of England) கொண்டு செல்கிறது. மதுரை உள் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் அங்கும் 1931-ல் தீர்ப்பாகிறது. நூற்றாண்டுகளுக்கு முன்னர் வழங்கப்பட்ட இத்தீர்ப்பு மட்டுமின்றி, 1970 க்குப் பின்னர், திருப்பரங்குன்ற கோவில் நிர்வாகம் தர்காவிற்கு சொந்தம் கொண்டாடி வழக்கு போட்டிருக்கிறது. 1975-ல் வெளிவந்த அந்த தீர்ப்பிலும், 1931-ல் வழக்கப்பட்ட அதே தீர்ப்பே வழங்கப்பட்டது. இவ்வாறு நீதிமன்றங்களில் உறுதிப்படுத்தப்பட்ட தீர்ப்புகளுக்குப் பின்னர், இப்போது அமைதியாக இருந்த திருப்பரங்குன்ற மலையின் நல்லிணக்கத்தை இந்துத்துவ கும்பல்கள் குலைப்பதற்கு களமிறங்கியுள்ளன.

நீதிமன்ற தீர்ப்பு மட்டுமல்ல, இம்மலை பல மதத்தைச் சார்ந்தவர்களின் வரலாற்றுத் தலமாக இருந்துள்ளதையும் ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். அங்கு சமணர்கள் வாழ்ந்ததற்கு அடையாளமாக என்றும் சமணப்படுகைகள், சிற்பங்கள் இருக்கின்றன. முருகனின் வரலாற்றை சங்க இலக்கியப் பாடல்கள் பலவும் பதிவு செய்திருக்கின்றன.
முருகன் குறிஞ்சி மற்றும் நெய்தல் நிலத் தலைவனாக, யானை மற்றும் நாவாய்களில் போரிட்ட மனிதனே என்பதே வரலாறாக இருக்கிறது.
‘காடன் என்கோ
நாடன் என்கோ
பாடு இமிழ் கடற்சேர்ப்பன் என்கோ’ – என்கிற புறநானூறுப் பாடல் ‘குறிஞ்சி, மருதம், நெய்தல் திணைகளில், உன்னை எந்த நிலத்தை சார்ந்தவன்’ எனப் போற்றிப் புகழும் பாடல் அவன் அரசன் என்பதை புலப்படுத்துகிறது.
நடுகல் நட்டு வணங்கும் நாட்டார் தெய்வ வழிபாட்டுப்படி, தமிழர்கள் வணங்கிய முருகன் என்னும் அரசனை, காலப்போக்கில் கடவுளாக்கிக் கொண்டனர். சங்க காலத்தின் பிற்பகுதிகளில் முருகன் சிவனின் மகனாக புனையப்பட்டு, ஸ்கந்தன் என்னும் சமஸ்கிருதச் சொல்லால் விளிக்கப்பட்டான். பின்னர் அதையே தமிழ்ப்படுத்துவதாக கந்தன் என மாற்றிக் கொண்டனர். திருமுருகாற்றுப்படையில் போர்த் தெய்வமாக வழிபட்ட கொற்றவையின் மகனே முருகன் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்னும் பதிற்றுப்பத்து, மலைபடுகடாம், பொருநராற்றுப்படை, பதிற்றுப்பத்து, பரிபாடல், அகநானூறு, மதுரை காஞ்சி என சங்ககால இலக்கியங்கள் பலவற்றிலும் முருகன் குறிஞ்சி நில அரசனாகவே போற்றப்படுகிறான்.
தமிழர்களின் நாட்டார் தெய்வமான முருகனுக்குக் குருதிப் பலியிட்ட படையலே நடந்திருக்கிறது. ‘மறிக்குரல் அறுத்துத் திணைப் பிரப் பிரீஇ’ – குறுந்தொகையில் உள்ள இப்பாடல், முருகனுக்கு ஆடு பலியிடலை குறிக்கிறது.
திருமுருகாற்றுப் படையில்,
‘சிறுதினை மலரொடு விரைஇ மறிஅறுத்து
வாரணக் கொடியோடு வயிற்பட நிறீஇ’ – ஆடும், கோழியும் அறுத்து இடும் படையலைக் குறிக்கிறது.
ஆனால் முருகனை சைவன் என்றும், ஆடு, கோழி முருகனுக்கு ஆகாதது என்றும், அதனால் புனிதத் தன்மை கெடுகிறது என்றும் பரவலான கருத்துருவாக்கத்தை பார்ப்பனீயம் நிகழ்த்தியிருக்கிறது.
தமிழர்களின் நாட்டார் தெய்வங்களுக்கு இன்னமும் ஆடு, கோழி படையலிடப்பட்டே வேண்டுதல் நடக்கிறது. பார்ப்பனியம் கைப்பற்றி நிறுவனமாக்கிய பின்னரே, முருகனின் கறி உண்ணும் உணவுப் பண்பாடே அழிக்கப்படுகிறது. முருகன் வழிபாடு குறித்த எதனையும் அறியாத, தங்களின் வீரமிக்க வரலாற்றையோ, பண்பாட்டு வரலாற்றையோ அறியாத சில தமிழர்கள், தமிழர்களின் தெய்வத்தை வைத்து, பார்ப்பனீயத்தின் அடியாட்களான இந்துத்துவ அமைப்புகள் மதக் கலவரம் மூட்டுவதை ஆதரிக்கின்றனர்.

இப்பிரச்சனையை, மலைகளில் கனிம வளச் சுரண்டலை நிகழ்த்துவதற்கான முயற்சியா என்கிற கோணத்திலும் ஆராயப்பட வேண்டும். ஏனென்றால், தமிழர்களுக்கே தெரியாமல் மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் கனிம வளம் எடுப்பதற்கு வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி அளித்தது இந்திய ஒன்றிய பாஜக அரசு. அந்த ஒப்பந்தம் நாடாளுமன்ற உறுப்பினரான சு. வெங்கடேசன் அவர்களால் கண்டறியப்பட்டு மக்களிடம் அம்பலப்படுத்தப்பட்டது. அதன் பின்னரே போராட்டங்கள் சூடுபிடித்தன. இதனால் அதனை பின்வாங்குவதாக அறிவிக்கும் நாடகத்தை நடத்தியது மோடி அரசு.
ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி போன்ற இந்துத்துவ அமைப்புகள் பெரு நிறுவனங்களுங்களின் வளச் சுரண்டலுக்கு ஆயத்தமான சூழலை உருவாக்க பாஜக அரசால் வளர்க்கப்படுபவை. இந்த இந்துத்துவ அமைப்புகள் மக்களிடைய மத, இனவாத உணர்வைத் தூண்டி, பெருநிறுவனங்களுக்கு சுமூகமாக வழியை ஏற்படுத்திக் கொடுப்பவை. இதற்கு கண்முன் சாட்சியமாக மணிப்பூரே இருக்கிறது. மணிப்பூர் மலையைப் பழங்குடிகளிடமிருந்து பிடுங்குவதற்காக இனவெறியும், மதவெறியும் இணைந்து நடத்தப்பட்ட கலவரங்களில் மணிப்பூர் இன்றும் பற்றி எரிகிறது. இந்திய சூழலை கவனத்தில் கொள்ளும் அறிவை வளர்த்துக் கொள்ளாமல். இந்த மதவெறி அமைப்புகள் பற்றியான புரிதலும் கிடைக்காது என்பதை தமிழர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இந்தியாவில் மட்டுமல்ல, தமிழ்நாட்டிலும் தமிழர்களின் பொருளாதாரத்தை மார்வாடிகள் கையில் பிடுங்கிக் கொடுத்த இழிவேலையை இந்த சங்கிகள் செய்தார்கள். சங்கிகள் விதைத்த மதவெறியே 90-களின் இறுதியில் வணிக நகரமாக இருந்த கோயம்புத்தூர் சிதைவதற்குக் காரணமானது. தென்பகுதி மாநிலங்களுக்கு முக்கிய வணிக மையமாக இருந்த கோவையில் தமிழர் – இசுலாமியர்கள் வசமே பெரும்பான்மையிலான கடைகள் இருந்தன. ஆனால் இன்று அவையெல்லாம் மார்வாடிகளின் கைப்பிடிக்குள் இருக்கிறது. முதலில், மதரீதியான பிரிவுகளை ஏற்படுத்தி, படிப்படியாக கலவர சூழலை வளர்த்தெடுத்து கோவையின் வணிகத்தை நாசமாக்கிய கூட்டம், இன்று மதுரையை குறிவைத்து நகர்கிறது. இப்போதே முக்கிய இடங்கள் பலவும் மார்வாடிகளின் கையில் சென்று விட்டன. இந்நிலையில், மதுரையின் மொத்த வணிகத்தையும் மார்வாடிகள் கையில் செல்வதற்கு, சொந்த மண்ணில் மார்வாடியிடம் கூலி வேலையாளாக தமிழர்களை மாற்றுவதற்கு நியமிக்கப்பட்ட தரகர்களே இந்த சங்கிகள்.

இங்கு மதவெறி பரப்பி கலவரம் ஏற்படுத்தும் வாய்ப்புகளுக்காக கண்கொத்திப் பாம்பாக பாஜக, இந்துத்துவ அமைப்புகள் காத்திருக்கின்றன என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன. அரியலூரில் ’லாவண்யா’ என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டதையடுத்து, இறுதி நேரத்தில் அப்பெண் பேசுவதை வீடியோ எடுத்து, அதை வெட்டி ஒட்டி மதமாற்றத்தால் தால் கலவரம் நடந்ததென, தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் சுவரொட்டி ஒட்டினார்கள். பெரும் சர்ச்சைக்குள்ளாக்கிய அப்பெண்ணின் தற்கொலை என்பது குடும்ப பிரச்சனையன்றி, மதமாற்றத்தால் அல்ல என சிபிஐ விசாரணையிலேயே தெரிய வந்துவிட்டது. ஆனால் இந்துத்துவ அமைப்புகளால் பரப்பப்பட்ட பொய் செய்தியைப் போல், இந்த செய்தி பரவவில்லை. திமுக அரசைக் குறிவைத்து செய்யும், இதைப் போன்ற செய்திகளைக் கூட திமுக கவனிப்பதில்லை, கைதும் செய்வதில்லை.
திருப்பரங்குன்றத்தில் கூடிய சங்கிகளின் கூட்டம் என்பது, அவர்களின் நீண்ட கால செயல்திட்டத்தின் ஒரு பகுதியே என்றாலும், 144 தடை உத்தரவு போட்டும், அங்கு இவ்வளவு பேர் கூடியது சந்தேகத்தை உருவாக்குகிறது. இவர்களின் கூட்டத்திற்கு மதுரை நீதிமன்றம் அனுமதி வழங்கும் என முன்பே அறிந்திருந்தார்களா? என்கிற கேள்வியும் எழுகிறது. இந்துத்துவ சங்கி அமைப்புகளின் வழக்குகளென்றால், மதுரை நீதிமன்றத்தில் உடனுக்குடன் எடுத்துக் கொள்ளப்பட்டு சாதகமான தீர்ப்பும் வழங்கப்பட்டு விடுகிறது. முதலில் இப்பிரச்சனை ஆரம்பிப்பதற்கு காரணமான இசுலாமியர்களை தர்காவிற்கு செல்லவிடாமல் தடுத்த காவல் துறை, வாய்வழி உத்தரவளித்த வருவாய்துறை அதிகாரி, நீதிமன்றம் என இந்த உயர் வட்டங்கள் யாருக்காக செயல்படுகிறது என்கிற சந்தேகம் எழும்புகிறது.
மேலும் திமுக அரசு, 144 தடை உத்தரவு போட்டாலும், நீதிமன்றத்தில் முறையான வாதங்களை எடுத்து வைக்கவில்லை. கிட்டத்தட்ட 20 நாட்களுக்கும் மேல், பொய்யான செய்திகளை பரப்பி, மக்களைத் திரட்டும் இவர்களின் செயல் திட்டம் குறித்து காவல்துறை கண்டறியாமல் இருந்ததா? என்கிற கேள்வியும் எழுகிறது. பாஜகவினரை திமுக அரசு குற்றம் சாட்டுகிறதே ஒழிய, இதற்கெல்லாம் மூலக் காரணமான இருக்கும் இந்தத்துவ சங்பரிவார அமைப்புகளான இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார அமைப்புகள் வளர்ச்சியடையும் தன்மையைப் பற்றி அக்கறையின்றி கடக்கும் நிலையே நீடிக்கிறது.

தங்களின் நாட்டார் வழிபாட்டு தெய்வத்தை சுவீகரித்ததைக் குறித்தான கோவம் வராமல், அந்த வரலாற்றை அணைந்து விடாமல் கூறிக் கொண்டேயிருக்கும் திராவிட அமைப்புகளின் மீது கோவம் கொள்ளும்படி அவர்கள் மடைமாற்றப்படுகிறார்கள். அதனாலேயே தமிழர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கும் திராவிடத்தை ஒழிக்க வேண்டும் என்கிற செயல்திட்டத்தில் ‘தமிழர்களுக்கான கட்சி’ என்கிற முகமூடியில் சீமான் களமிறக்கப்படுகிறார். ஒரு புறம், தமிழ்நாட்டின் பார்ப்பனிய எதிர்ப்பின் அடையாளமாக இருக்கும் திராவிடத்தையும், பெரியாரையும் அழிக்கும் செயல்திட்டத்தில் சீமானை இறக்கி விட்டிருக்கிறார்கள். மறுபுறம் முருகன் கோவிலை கையிலெடுத்து மதவெறி அரசியலை வட நாட்டைப் போல இங்கும் நிறுவி விடத் துடிக்கிறார்கள்.
இந்த கும்பலை களத்தில் எதிர்கொள்ளும் துணிச்சல் பெரியாரிய, முற்போக்கு அமைப்புகளுக்கே உண்டு. கட்சிகளைக் கடந்து இயக்கங்கள் செயல்பட வேண்டும். ஆட்சியின் தவறுகளை விமர்சனப் பூர்வமாக அணுக வேண்டும். அறநிலையத்துறை நடத்திய முருகப் பெருவிழா இந்துத்துவ அமைப்புகள் வலுவாவதற்கே பயன்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் இன்றைய நிலை இதுவாகவே இருக்கிறது. சங்கிகளுக்கு எதிரான அரசியலை வலுப்படுத்த ஆளும் கட்சிகள் உதவாது என மே 17 இயக்கம் கடந்த 10 ஆண்டுகளாக சொல்லி வருகிறது. மக்கள் இயக்கங்கள் அரசியல் கட்சிகளைக் கடந்து செயல்படவில்லை எனில், தமிழ்நாடு மதவெறி அரசியலுக்கு எளிதில் இலக்காகும் என்பதற்கு மாற்றுக் கருத்தும் கிடையாது.