ஆளுநர் ஆர்என் ரவி அவர்களின் மக்கள் விரோத- சனாதன பிரச்சாரங்களைப் பற்றிய கட்டுரையின் இரண்டாம் பாகம்.
கட்டுரையின் முதல் பாகத்தை வாசிக்க
அறிவியல் வெறுப்பு
மதத்தை ஓர் அரசியல் முன்னெடுப்பாக கொண்டு செல்லப்படுவது மனித சமூக வளர்ச்சியை பின்னுக்குத் தள்ளுவதாகும். காலங்காலமாக புரட்சியாளர்கள் சமூக வெளியிலிருந்து ஆன்மீகத்தையும், கடவுளையும் தள்ளி வைத்தது இதன் காரணத்தால் தான். ஆன்மீகம் என்பது அவரவர் நம்பிக்கை சம்பந்தப்பட்டதாகும். அதை மற்றவர்கள் மீது திணிப்பதும் ஏற்புடையதல்ல. ஆனால் அது சமூக அரசியல் வெளியில் மனித சமூகத்தை பின்னோக்கி நகர்த்தக் கூடியதாகிறது. இதை தமிழ் சமூகத்தின் வளர்ச்சி நிலையிலேயே காணலாம். சமனம் பௌத்தம் ஓங்கியிருந்த காலம் வரை தமிழ்ச்சமூகத்தின் வளர்ச்சி என்பது பரந்துபட்ட அளவில் அனைத்து தளங்களிலும் ஏற்பட்டிருந்தது. பிறகு, பக்தி இயக்க காலத்தில் தொடங்கி, தனது அறிவை, அறிவியலை கோவிலில் கொண்டு போய் அடகு வைத்தது தமிழ் சமூகம். அதனால் ஏற்பட்ட சமூக வீழ்ச்சியை சரி செய்ய திராவிட இயக்கம் வரவேண்டியிருந்தது. ஆனால் அதற்குள் பல நூற்றாண்டுகள் கடந்து விட்டிருந்தன. ஆனால் திராவிட அரசியல் இந்து-இந்தி-இந்திய அரசியலை தமிழ்நாட்டு அரசியலில் இருந்து அந்நியப்படுத்தியே வைத்திருந்தது.
ஆனால் சமீபகாலமாக அந்நிலையினை மாற்றவேண்டுமென இந்துத்துவவாதிகள் களம் இறக்கி விடப்பட்டிருக்கிறார்கள். ஊடகவெளி, சமூக வளைதளங்கள், பள்ளிகள் கல்லூரிகள் ஆகியவை இந்துத்துவ பரப்புரை தளங்களாக மாற்றப்படுகின்றன. வளரும் தலைமுறையை குறிவைத்து இச்செயல்கள் முன்னகர்த்தப்படுகின்றது. இந்த வகையில், தமிழக ஆளுநர் செல்லும் இடமெல்லாம் மாணவர்களிடையே ஆன்மீகம் பேசி, அறிவியலை மழுங்கடிப்பது போன்ற முயற்சியில் ஈடுபடுகிறார். அதாவது “நமது தேசிய வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்துவது மேற்கத்திய சித்தாந்தங்கள். அவை டார்வீன் மற்றும் காரல் மார்க்ஸ் கோட்பாடு” எனவும், “இந்தியா ராணுவம் மற்றும் பொருளாதாரத்தில் வளர்ச்சியடைவதைப்போல ஆன்மிகத்திலும் வளர்வது முக்கியம். ஆன்மிகத்தில் வளர சனாதன தர்மம் வழிமுறையாக இருக்கும். இந்தியாவின் தலைமைத்துவம் ஆன்மிகத்தின் மீது நம்பிக்கை கொண்டதாக இருக்க வேண்டும்” என கல்வியில் ஆன்மீக திணிப்பை- அறிவியல் ஒதுக்கலை வலியுறுத்துகிறார்.
பூமியில் வாழும் உயிரினங்களின் தோற்றம், தேவை, அதன் மூலம் தூண்டப்பெற்ற பரிணாம வளர்ச்சி பற்றிய டார்வினின் கோட்பாடுகள் பரந்த தளங்களைக் கொண்டது. இன்றைய அறிவியல் வளர்ச்சியில் மிக முக்கிய பங்கினை டார்வினின் கோட்பாடுகள் கொண்டிருக்கின்றன. கடவுள் மனிதனை படைத்தான் என்ற பொது உளவியலுக்கு சம்மட்டி அடியாக டார்வினின் கோட்பாடு இருக்கிறது; ‘மாற்றம்’ என்கிற கருத்தாக்கத்தை ஏற்காத ‘சனாதனிகள்’ டார்வினை புறந்தள்ளுவது இயற்கையே. அந்தவகையில்தான் டார்வினின் கோட்பாடுகளைப் பற்றிய ஆளுனநரின் பேச்சினைப் புரிந்துக் கொள்ளமுடியும்.
அடுத்து சமூகம், பொருளாதாரம் மற்றும் அரசியல் பற்றிய காரல் மார்க்சின் கோட்பாடுகள், சிந்தனைகள் மானுட அறிவியலில், சமூக பொருளாதார தளத்தில் மிகப்பெரிய புரட்சியை கொண்டு வந்தவை. மனித சமூகம் முதலாளியத்தால் ஏற்பட்ட வீழ்ச்சிக்கான காரணங்களையும் அதிலிருந்து மனித சமூகம் மீள்வதற்கான வழிமுறைகளை அறிவியல்பூர்வமாக முன்வைத்தவர் காரல் மார்க்ஸ். மனித சமூகங்கள் வர்க்க மோதலின் மூலம் உருவாகின்றன என உலகிற்கே தெளிவுப்படுத்தியவர். மேலும் அநீதி, ஏற்றத்தாழ்வு மற்றும் சுரண்டலை முடிவுக்கு கொண்டுவர வழிகண்டவர். அவரைத்தான் ஆளுநர் “இந்தியர்களை பற்றி தவறாக எழுதி வைத்திருப்பவர் கார்ல் மார்க்ஸ். நமது பாரதம் உலகின் வல்லராசாகும் வாய்ப்பிருந்தது. ஆனால் ஆங்கிலேயருக்கு உதவிய கார்ல் மார்க்ஸ் இந்திய சமூக கட்டமைப்பையே அழிக்க வேண்டும் என அதை இல்லாமல் செய்துவிட்டார். இருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் இடையில் மார்க்சியக் கோட்பாடு நிரந்தரப் பகைமைகளை உருவாக்கிவிடுகிறது. ‘மார்க்சிய மாடல்’, சமுதாயத்தின் வெவ்வேறு பிரிவுகளுக்கிடையில் பாகுபாட்டை தோற்றுவிக்கிறது. சமூகத்தில் நிரந்தர மோதலைத் தூண்டிவிடுகிறது” என்கிறார் ஆளுநர். மேலும் காரல் மார்க்ஸின் தத்துவம் செத்துப்போய்விட்டது, அது தோன்றிய நாட்டிலேயே அதைக் கைவிட்டுவிட்டார்கள் என்கிறார்.
சாதியமைப்பை- பிறப்பின் அடிப்படையிலான ஏற்றத் தாழ்வுகளை வலியுறுத்தும் சனாதன கோட்பாட்டை கடைப்பிடிக்கும் ஆளுநருக்கு வர்க்க பேதமில்லாத, சாதி, மத வேற்றுமைகள் இல்லாத, நிகரற்ற மனிதநேய சமூகம் அமைக்க முடியும் என்ற அறிவியல் உண்மையை உலகத்திற்கு அறிவித்த மேதை காரல் மார்க்ஸ் எதிரியாகத்தான் தெரியமுடியும்.
நீட் தேர்வு
சமீபத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை குழுமம் நீட் தேர்வு பற்றிய ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. நீட் தேர்வில் தேசிய அளவில் முதல் 50 தரவரிசைகளில் இடம்பெற்ற மாணவர்கள் ஆய்வில் எடுத்துக்கொள்ளப்பட்டனர். அவ்வாய்வின் முடிவுகள் நீட் தேர்வு உண்டாக்கியிருக்கிற சமநிலையற்றத் தன்மையை விளக்க கூடியதாக இருக்கிறது. அதன்படி.
- 50 மாணவர்களில் பெரும்பான்மையானவர்கள் பயிற்சி நிறுவனத்தை நம்பி தேர்வை எதிர்நோக்கியவர்கள்.
- 38 மாணவர்கள் பயிற்சி நிறுவனங்களில் பயின்று நீட் தேர்வு எழுதியவர்கள்.
- 29 மாணவர்கள் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படித்தவர்கள்.
- அந்த 29 மாணவர்களுமே பொதுப்பிரிவை சேர்ந்த உயர்சாதி பிரிவினர்.
- இவர்கள் அனைவரும் நகர் புறத்தில் வளர்ந்த மற்றும் பொருளாதார அடிப்படையில் வசதிபடைத்தவர்கள்.
நீட் தேர்வு மையங்களில் நடத்தப்பட்ட மேற்சொன்ன ஆய்வு அறிக்கையில் கிடைத்த முடிவுகளுக்கு அப்படியே நேர் எதிரானது தமிழ்நாடு அரசு, ஏ கே ராஜன் அவர்கள் தலைமையில் அமைத்த குழுவின் அறிக்கை. இக்குழு தமிழ்நாட்டின் விளிம்பு நிலையில் இருக்கிற, அரசு பள்ளிகளில் பயில்கிற மாணவர்களின் நீட் தேர்விற்கு முன் பின்பான மறுத்துவ படிப்பிற்கான சேர்க்கைப் பற்றிய முடிவுகளை தருகிறது. நீட் தேர்வுக்கு பிறகு அரசு பள்ளி மாணவர்கள், குறிப்பாக தமிழ்வழி கல்வி பயின்ற மாணவர்களின் மறுத்துவப் படிப்பு சேர்க்கை எண்ணிக்கை பல மடங்கு குறைந்துள்ளதை இவ்வாய்வறிக்கை வெட்ட வெளிச்சமாக்குகிறது.
இந்நிலையில் “நீட் தேர்வுக்கு முன்பிருந்த நிலையைவிட நீட் வந்த பிறகு அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவப்படிப்பு சேர்க்கை அதிகரித்திருக்கிறது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் தொடர்ச்சியாக இயற்றப்படுகிற நீட் விலக்கு மசோதா கிராமப்புற மாணவர்களின் நலனுக்கு எதிரானது. தமிழக சட்டப்பேரவை இந்த மசோதாவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.” என்கிறார் ஆளுநர்.
இதுவரை நீட் தேர்வினால் தமிழ்நாட்டைச் சேர்ந்த 23க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலைச் செய்துள்ளனர். நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதில் இருந்து தமிழ்நாட்டு மககள் அதனை எதிர்த்துப் போராடி வருகின்றனர். இருப்பினும் ஆளுநர் நீட் ஆதரவு கருத்துக்களை பேசிவருகிறார். இது பொதுமக்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்பை உருவாக்கியிருக்கிறது. நீட் தேர்வில் 600 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த மாணவர்களை வைத்து நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் நீட் தேர்வில் வெற்றிபெற்ற மாணவர் ஒருவரின் தந்தை அம்மாசியப்பன்
“தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மாணவர்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு வேண்டும் என தொடர்ந்து கேட்டு வருகிறோம், நீட் விலக்கு எப்போது கொடுப்பீர்கள் ”என்று ஆளுநரை நோக்கி கேள்வியும் எழுப்பினார். எனினும் ஒன்றிய அரசின் இசைவுக்கு ஏற்ப நீட் அவசியம் தேவை என விதண்டாவாதம் செய்கிறார் ஆளுநர்.
தற்போது 2023 ஆம் ஆண்டிலிருந்து முதுநிலை (PG) மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வில் பூஜ்ஜியம் கட் ஆஃப் மதிப்பெண் பெற்றவர்களும் அப்படிப்பிற்குத் தகுதியானவர்கள் என்ற அறிவிப்பும் வெளியாகியிருக்கிறது. இதன்மூலம் நீட் தேர்வினால் தகுதியான மருத்துவர்களை உருவாக்கமுடியும் என்கிற போலி பிம்பம் உடைக்கப்பட்டது. இந்நிலையில் ஆய்வறிக்கை முடிவு, வெகுமக்கள் கருத்து, மாணவர்கள் நலன் ஆகிய எந்த ஒரு கருதுகோளையும் ஏற்காமல் ஒன்றிய அரசு கொண்டு வந்த ஒரே காரணத்தால் ஆளுநர் நீட் ஆதரவு பிரச்சாரத்தை செய்து வருகிறார்.
இசுலாமிய வெறுப்பு
பாஜக ஆளும் மாநிலங்களில் கட்டுக்கடங்காத சாதியக்கொடுமைகள், பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள், மதக்கலவரங்கள், மனித உரிமை மீறல்கள் நடந்துவருகின்றன. காஷ்மீர், குஜராத் மற்றும் மணிப்பூரில் தொடர்ந்து இஸ்லாமியர்கள், தலித்துகள், வடகிழக்குப் பகுதிமக்கள் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இந்தியா முழுவதும் இதுவே நிலை. ஆனால் அப்போதெல்லாம் அமைதி காத்துவிட்டு, கோவை பகுதியை பயங்கரவாதத்துக்குப் பெயர் போன இடம் போல சித்தரிப்பதும், சிறுபான்மையின மக்களின் மீது அவதூறு பரப்பி பொது மக்களிடையே பதற்றத்தை விதைப்பதுமாகிய செயல்களை செய்கிறார் ஆளுநர். ஆளுநர் பேசுகின்ற பெரும்பான்மை மேடைகளில் சிறுபான்மையின மக்களை எதிரியாக கட்டமைக்க முயல்கிறார். இசுலாமிய சிறைவாசிகளுக்கு விடுதலை வேண்டி அனுப்பிய மசோதாவிலும் கையொப்பமிட மறுப்பதும் குறிப்பிடத்தக்கது. அரசியல் சாசனத்திற்கு எதிராகவும், ஒன்றிய பாஜக அரசின் கொள்கைப் பிரச்சாரராகவும் ஆளுநர் செயல்பட்டு வருகிறார்
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அடங்கிய சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்களில் கையெழுத்து இட மறுத்து கிடப்பில் போட்டதோடு இல்லாமல் “கிடப்பில் போடப்பட்ட மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம். சட்டமசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றினால் மட்டும் சட்டமாகாது” என மக்கள் விரோதமாக பேசுகிறார் .பொதுப்பாடத்திட்டம் மற்றும் துணைவேந்தர் நியமனம் உட்பட அனைத்திலும் தன்னிச்சையாக முடிவு எடுப்பது போன்ற சட்டத்திற்கு புறம்பாக நடந்து வருகிறார். சிதம்பரம் கோயிலில் குழந்தைத் திருமணங்கள் செய்து வைத்த தீட்சிதர்களுக்கு ஆதரவாக ஆளுநர் செயல்பட்டது அரசியலமைப்பு சட்டத்தை மீறிய செயலாகும். இவ்விவகாரத்தில் ஆளுநர் நானும் குழந்தை திருமணம் செய்துள்ளேன் என கூறி அதற்கு நியாயம் கற்பிக்கும் வேலையில் இறங்குகிறார்.
இந்துத்துவத்தை வளர்த்தெடுக்கும் ஆர்எஸ்எஸ்-பாஜகவின் ஊதுகுழலாக ஆளுநர் ஆர்என் ரவி நடந்துக் கொள்வதைப் போலத்தான் இன்று ஒவ்வொரு ஆளுநரும் நடந்துக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில். ஏனெனில் ஆளுநர் பதவி என்பது ஒன்றிய அரசின் எதேச்சதிகாரத்தினைக் நேரடியாகக் காட்ட வாய்ப்பாக அமைகிறது. காலனிய ஆட்சியின் நீட்சியாக இன்றும் தொடரும் ஆளுநர் பதவியை ஒழிக்க வேண்டும் என்பதே தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கையாக என்றும் இருந்து வருகிறது. அந்தவகையில் ஆளுநர் ஆர்என் ரவி, தமிழ்நாட்டு மக்கள் இறையாண்மைக்கும், அரசியல் சாசனத்துக்கும் எதிராக செயல்படுவதும், மக்கள் உரிமை சார்ந்த போராட்டங்களை கொச்சைப்படுத்தி பேசி வருவதும் மிகவும் கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டு மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிக்கொண்டு, இதர செலவினங்களென கூறி பல கோடி ரூபாய் செலவழித்து 156 ஏக்கரில் சொகுசாக வாழ்ந்துகொண்டு, மக்களுக்கு எதிரான திட்டங்களை பிரச்சாரம் செய்வதும் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மையளிக்கும் மசோதாக்களை கிடப்பில் போட்டு வைப்பதும் ஆகிய ஆளுநரின் நடவடிக்கையை நிறுத்தவேண்டுமெனில் ஆளுநர் என்ற பதவியை ஒழிப்பதே நிரந்தர தீர்வாக அமையும்.