
உலகின் மிக மோசமான இனப்படுகொலையை தற்போது சூடான் எதிர்கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட இரண்டரை கோடி மக்கள் வசிக்கும் இந்த ஆப்பிரிக்க நாட்டில் Rapid Support Forces (RSF) எனும் தீவிரவாத குழு நிகழ்த்தும் மனித உரிமை மீறல்கள் காணொளிகளாக வெளிவந்திருக்கின்றன. சூடான் மக்களை RSF சித்திரவதை செய்து கொலை செய்யும் இந்தக் காணொளிகள் காண்போரை கலங்கச் செய்வதாக இருக்கின்றன.
1956இல் எகிப்திய-பிரிட்டிஷ் இராணுவ ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்றாலும் ஆட்சிக் கவிழ்ப்புகள், போர்கள், இனப்படுகொலை நிகழ்வுகள் என அனைத்து பேரழிவுகளையும் கண்டிருக்கின்றது சூடான். தற்போதைய சூடானில் பேரழிவை ஏற்படுத்தும் RSF தீவிரவாத குழு அரபு அல்லாத இனத்தவர்களுக்கு எதிராக இனரீதியாக தாக்குதல்களை நடத்தும் குழுவாக அறியப்படுகிறது.

கடந்த ஆகஸ்ட் 2013இல் சூடானிய துணை ராணுவப் படையாக உருவாக்கப்பட்ட RSF, 2023இல் சூடானிய அரசாங்கத்திற்கு எதிராக திரும்பியது. இந்தக் குழுவின் தலைவராக இருப்பவர் ஹெமெட்டி (டகாலோ). சூடானின் பல்வேறு பகுதிகளில் கொலை, வன்கொடுமை, சமூக ஆர்வலர்களைக் கடத்துதல், போர்க்குற்றங்கள் எனப் பல அத்துமீறல்களை செய்துள்ளது RSF. கடந்த இரு ஆண்டுகளாக RSF சூடானை பேரழிவிற்குள் தள்ளியதற்குப் பின்னால் அரசியல்,பொருளாதார, இராணுவ காரணிகள் இருந்தாலும் இந்த காரணிகளின் மையத்தில் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) உள்ளது.
அமீரகத்தின் வறண்ட நிலத்தில் சிறிதளவு மட்டுமே விளைநிலங்கள் உள்ளதால், தனது மக்களுக்குத் தேவையான உணவில் 90 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது. இந்த உணவுத் தேவைக்காக மட்டுமே சூடான், லிபியா மற்றும் ஏமன் போன்ற ஆப்பிரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் அமீரகத்தின் ஆதிக்கத்திற்கு அடிபணியுமாறு நவீன காலனிகளாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
மேலும் அமெரிக்க ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கும் அமீரகம், செங்கடல் கடற்கரையில் உள்ள ஒவ்வொரு துறைமுகத்திலும் தனது பிடியை இறுக்கி, ஒரு கடல்சார் வலையமைப்பை உருவாக்க விரும்புகிறது. இதன்மூலம் பாலைவன தேசமான தன் நிலப்பரப்பிற்கு உணவுப் பாதுகாப்பை ஏற்படுத்த விரும்புகிறது.
அமீரகம் தனக்கான உணவுப் பாதுகாப்பிற்காக 1970களில் இருந்தே சூடானின் விவசாயத் துறையில் முதலீடு செய்யத் தொடங்கி விட்டது. இன்று சூடானில் பல விவசாய நிலங்கள் அமீரகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. அமீரகத்தின் மிகப்பெரிய நிறுவனமான International Holding Company (IHC), ஜெனான் இன்வெஸ்ட்மென்ட் போன்ற நிறுவனங்கள் சூடானில் 50,000 ஹெக்டேர்களுக்கும் அதிகமான நிலங்களில் விவசாயம் செய்கின்றன. ஆனால் தங்கள் நிலவளம் பறிபோவதை உணர்ந்த விவசாயிகள் பலர் அமீரகத்தின் திட்டங்களை எதிர்க்கத் தொடங்கினர். சூடான் அரசாங்கமும் உள்ளூர் நில உரிமையாளர்களின் நலனுக்காக அமீரகத்தின் பல ஒப்பந்தங்களை நிராகரித்தது. இதனால் நில அபகரிப்பு செய்ய முடியாத அமீரகம், RSF-ஐப் பயன்படுத்தி நேரடியாக காலனித்துவப்படுத்தத் தொடங்கி விட்டது.
சூடானின் நிலவளத்திற்காக மட்டுமன்றி தங்கம் மற்றும் விலைமதிப்பற்ற உலோகங்களை அடைவதற்காகவும் அமீரகம் RSF குழுவிற்கு ஆதரவளித்துக் கொண்டிருக்கின்றது. 2010க்கு முன்பு வரை சூடானின் பொருளாதாரத்தில் தங்கத்தின் பங்கு சிறிதாகத்தான் இருந்தது. ஆனால் 2011 ஆம் ஆண்டில் சூடானில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு பணவீக்கம், வேலையின்மை எனப் பல காரணங்களால் தங்க சுரங்கங்கள் முக்கியத்துவம் பெறத் தொடங்கின. படித்த சூடான் இளைஞர்கள்கூட தங்கள் வாழ்வாதாரத்திற்காக சுரங்கங்களில் வேலை பார்த்தனர். இந்த காலகட்டத்தில்தான் ஐக்கிய அரபு அமீரகம் சூடானின் தங்கத்தை வாங்குவதில் முனைப்புக் காட்டியது. சூடானின் தங்கம் பல்வேறு வழிகளில் துபாயை அடைந்து அங்கிருந்து சர்வதேச சந்தைகளில் நுழைந்தது. இதற்காகவே 2013லிருந்து 2023 வரையான பத்து ஆண்டுகளில் சூடானின் பல தங்கச் சுரங்கங்களை RSF தீவிரவாத குழு தனது கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறது.

கடந்த பதினைந்து ஆண்டுகளில், ஆப்பிரிக்கா முழுவதும் துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறது அமீரகம். இதற்காக ஒரு தனியார் ராணுவம் போல் செயல்படும் RSF, அமீரகத்திற்கு பங்காளியாக / வலது கரம் போல் இருந்ததாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
2023ல் இருந்து RSF மற்றும் SAF (சூடானிய ஆயுதப் படைகள்) இடையேயான போர் அதிகரித்து இன்று இனப்படுகொலையாக உருவெடுத்திருக்கிறது. இந்த இனப்படுகொலையில் இதுவரை 1,50,000க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். ஒன்றரை கோடி மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். பஞ்சம் வாட்டி வதைப்பதால் அங்குள்ள மக்கள்தொகையில் பாதி பேர் பட்டினியால் வாடுகின்றனர். அங்குள்ள மருத்துவர்கள் RSF தீவிரவாத குழுவால் பொதுமக்கள் கொல்லப்படுவதையும் மருத்துவமனைகள் தாக்கப்படுவதையும் உறுதிப்படுத்துகின்றனர். (கடந்த வாரம் சூடானின் டார்பூரில் உள்ள எல்-ஃபாஷர் நகரைக் கைப்பற்றிய RSF, சுமார் 2,000 மக்களைக் கொன்று குவித்துள்ளதாக செய்திகள் வருகின்றன.)

இந்த இனப்படுகொலையில் பெண்களும் குழந்தைகளும் மிகக் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கின்றனர். RSF தீவிரவாதிகள் பெண்களை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததோடு அவர்களை கடத்தி, பாலியல் வணிகத்தில் தள்ளுவதாக அம்னஸ்டி இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் மீதான கொடூரத் தாக்குதல் தொடர்ந்து கொண்டிருந்தாலும் சர்வதேச அளவில் சூடான் இனப்படுகொலைக்கு எதிராக போதுமான குரல்கள் இன்னும் எழவில்லை. ஆனால் போருக்கான ஆயுத வணிகம் மட்டும் தங்குதடையின்றி நடைபெற்று வருகின்றது.
உலகில் போர் நடக்கும் இடங்களில் எல்லாம் அமெரிக்காவின் ஆயுத வணிகம் பங்கு வகிக்கும் நிலை சூடானிலும் தொடர்கிறது. அமீரகத்திற்கு தொடர்ந்து ஆயுதங்களை வழங்கி வரும் நாடாக அமெரிக்கா முன்னணியில் இருக்கின்றது. கடந்த ஆண்டு பைடன் அரசாங்கம் அமீரகத்திற்கு $1.2 பில்லியன் ஆயுதங்களை விற்பனை செய்தது. இந்த ஆண்டில் டிரம்ப் அரசாங்கம் $1.4 பில்லியன் ஆயுதங்கள் மற்றும் இராணுவ உபகரணங்களை விற்பனை செய்திருக்கிறது.
இயற்கை வளம் நிறைந்த நிலத்தை ராணுவமயமாக்குவது, அதன் வளங்களை கொள்ளையடிப்பது, அதற்கெதிராக குரல் கொடுக்கும் சமூக ஆர்வலர்களைக் குறி வைப்பது- ஏகாதிபத்தியம் வகுத்த அதே படிநிலைகளில் இன்று சூடானும் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கின்றது. தொடர்ந்து ஆப்பிரிக்க நாடுகளை குறிவைத்து ஐக்கிய அரபு அமீரகம் செய்து கொண்டிருப்பது ‘நவீன காலனித்துவம்’ என்பதே வரலாற்று உண்மை.