வெனிசுவேலா பொலிவாரிய-சாவிஸ்மோ அரசியல்: புத்தகப் பார்வை

அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவின் படி வெனிசுவேலாவில் தாக்குதல் நடத்தி, அந்நாட்டின் அதிபரான நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸ் ஆகியோரை அமெரிக்கா இராணுவ அதிகாரிகள் சனவரி 3, 2026 அன்று சட்டவிரோதமாக கைது செய்து, அமெரிக்கா நாட்டு சிறையில் அடைந்து வைத்துள்ளனர். அமெரிக்காவின் இந்த அத்துமீறலை உலக நாடுகள் பலவும் கண்டித்துள்ளன. அந்நாட்டு மக்கள் கொதித்தெழுந்து போராடுகின்றனர்  ஐ.நாவும் கடும் கண்டனத்தை தெரிவித்தது.

அமெரிக்க ஏகாதிபத்தியம் முதலாளித்துவ லாபத்தை நோக்கமாக கொண்டு லத்தீன் அமெரிக்க நாடுகளை அணுகி வந்தாலும், அதற்கு பொலிவாரிய மாற்று அரசு உருவாக்கத்தை தடுப்பதே முதன்மை நோக்கமாக உள்ளது. கடந்த காலங்களில் சாவேஸ் வெனிசுலேவாவின் அதிபராக இருந்த போது, அந்நாட்டை வறுமைப் பிடியிலிருந்து மீட்டெடுத்து வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல, அவர் மேற்கொண்ட முயற்சிகளை எடுத்துரைத்து, வெனிசுவேலா மீதான டிரம்ப் அரசின் அத்துமீறலின் பின்னணியையும் இந்நூலில் விளக்குகிறார் நூலாசிரியர் அமரந்த்தா அவர்கள்.

எழுத்தாளர் அமரந்தா அவர்கள்

வெனிசுவேலாவின் எதிர்கட்சி தலைவரான ‘மரியா கொரியா மச்சாதோ’ என்ற பெண்மணிக்கு சென்ற ஆண்டு (2025) அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவர் அமெரிக்காவின் விசுவாசியாக இருப்பவர், 2001 முதல் 2024 ஆண்டு தேர்தல் வரை பல கலகங்களுக்கு காரணமானவர், அதற்கு நிதியளித்து உதவியவர் என அவரின் அரசியல் தன்மையைப் பட்டியலிட்டு, 2013-ல் தேர்தலில் மதுரோ பதவியிழந்தால், அதன்பின் வரும் பொம்மை அரசுக்கு மரியா பொருத்தமான தலைவராக இருப்பார் என டிரம்ப் திட்டமிடுவதையும் அடிப்படை காரணங்களோடு இந்த புத்தகத்தில் ஆசிரியர் தொகுத்துள்ளார்.

வெனிசுவேலாவில் 1998 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற “ஊகோ சாவேஸ்” என்ன செய்தார்? எப்படி சோசலிச அரசாக வெனிசுவேலாவை வழி நடத்தினார்?  2004 ஆம் ஆண்டு லத்தின் அமெரிக்காவுக்கான பொலிவாரிய மாற்று என்ன? தற்போது அமெரிக்காவால் கைது செய்யப்பட்டு இருக்கும் ‘நிகோலஸ் மாதுரோ’ 2013 ஆண்டு குடியரசு தலைவர் ஆனபின் பொருளாதாரத்தை எப்படி பெருக்கினார்? சோசலிசம் பிடிக்காத ஏகாதிபத்திய வட அமெரிக்கா அதிபர் டிரம்ப் பழி தீர்க்கும் நடவடிக்கைகள் என்னென்ன? மேலும் வெனிசுவேலா மீது நேரடி தாக்கலுக்கு ஆயத்தம், வெனிசுவேலாவின் எதிர்காலமும் லத்தின் அமெரிக்காவின் நம்பிக்கைகளும் பற்றிய தகவல்களையும், அமெரிக்கா லத்தீன் அமெரிக்க நாடுகளில் நல்லாட்சி தருபவர்களை எப்படியெல்லாம் பொய்க் குற்றச்சாட்டுகள் சுமத்தி வேட்டையாடுகிறது என்பதையும் அறிய வைத்துள்ளார் ஆசிரியர்.  

அமெரிக்காவின் வேட்டையின் பலியான மற்றொருவரே சீலே என்னும் சோசலிச நாட்டின் குடியரசுத் தலைவர் ‘சால்வதோர் ஐந்தே’. இவரின் அரசுக்கு எதிராக, வட அமெரிக்கா பல நாச வேலைகளை கட்டவிழ்த்து விட்டது. இறுதியில் 1973 ஆம் ஆண்டில் குடியரசு மாளிகையின் உள்ளே ‘சால்வதோர் ஐந்தே’ சீலே நாட்டின் இராணுவ அதிகாரிகளால் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டார்.  சரியாக 12 நாட்கள் கழித்து சீலே நாட்டின் கவிஞர் நோபல் பரிசு பெற்ற கவிஞர் பாப்லோ விஷ ஊசி ஏற்றி கொல்லப்பட்டார்.

வெனிசுவேலா முன்னாள் அதிபரான இடதுசாரித் தலைவர் ’ஊகோ சாவேஸ்’ 1998 முதல் 2013 வரை பதவியில் இருந்த போது வெனிசுலேவாவை எவ்வாறு முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்றார், உலகிலேயே அதிகபட்ச பெட்ரோலிய (17%) வளத்தை கொண்ட வெனிசுவேலாவில், கிட்டத்தட்ட 80% மேற்பட்ட மக்கள் கடும் வறுமை, வெறும் 6% உள்நாட்டு உற்பத்தி, 70% உணவு இறக்குமதி, 60% விளைநிலங்களில் வெறும் 1% மட்டுமே மக்கள் கையில், 53% மக்கள் அமைப்புசாரா தொழில்கள், 15.4% வேலையின்மை என 1998 – வரை இருந்த நிலையை எந்தெந்த திட்டங்களைக் கொண்டு  நடைமுறைப்படுத்தினார் என்பவை எல்லாம் உலகின் ஒவ்வொரு தேர்தல் கட்சியும் அறிய வேண்டிய பாடங்களெனவே சொல்லாம். 

பெட்ரோலிய தொழிலை நாட்டுடையாக்கியது, புதிய அரசியல் சாசனம் உருவாக்கும் பணியை பெண்கள் குழுவிடம் ஒப்படைத்தது, ராணுவம் மக்கள் உரிமைகளின்  மாற்றப்பட்டது, மக்களின் பசியை போக்க உணவு விலைகளை குறைத்து சந்தைகள் என்பவை போன்ற விரிவான கட்டமைப்பை உருவாக்கிய விதம், ஒரு நாட்டின் மக்களுக்கு உரிய அரசு என்றால் சாவேஸ் அரசைப் போலவே அமைய வேண்டும் எனும் எண்ணத்தை ஏற்படுத்தும் படி, ஆசிரியர் சாவேசின் செயல்திட்டங்களை அடுக்கியுள்ளார் ஆசிரியர்.

சாவேஸ் உருவாக்கிய தெற்கத்திய நாடுகளுக்கான நிதி கொண்டு வந்த மாற்றம், லத்தீன் அமெரிக்காவை வட அமெரிக்க நுகத்தடியில் இருந்து விடுவிக்க சாவேஸ் உருவாக்கிய,  கம்யூன்கள் (மக்கள் மன்றங்கள்), சொத்துக்களை நிர்வகிக்கும் 44000 கம்யூன் நிறுவனங்கள் என ஏகாதிபத்தியத்தை எதிர்த்த செயல்பாடுகளை விளக்கப்பட்டிருக்கிறது.

இப்படியான, சாவேஸ் வழியில் வந்து ஆட்சி நடத்தியவரே மதுரோ.  அவரையே அமெரிக்கா கைது செய்திருக்கிறது. 2019-ல் வட அமெரிக்கா வெனிசுவேலா மீது ஆயுதப்போர், பொருளாதார நெருக்கடி, மின்சாரத் தடை என வர்த்தகத் தடை போட்டது. அப்போது முதல் தற்போது வரை டிரம்ப் வெனிசுவேலாவிடமிருந்து பெட்ரோலியம் வாங்க கூடாது என இந்தியா உட்பட பல நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்திருகிறது. அமெரிக்கா 2020 ஆண்டில் இருந்தே போதைப்பொருள் கடத்தல் என்ற பெயரில் கரீபிய கடல் பகுதியில் தாக்குதல்களை நடத்தப் போவரை தாக்குதல் நடத்தி, தற்போது அதிபர் போதை பொருள் பயங்கரவாதி என குற்றச்சாட்டு சுமத்தி மதுரோவை கைது செய்துள்ளது.

இன்று முன்னாள் வெனிசுவேலா அதிபர் சாவேஸ் வழியில் வெனிசுவேலாவை வழிநடத்திய மதுரோ மற்றும் அவர் எவ்வாறு சாவிஸ்மோ (சாவேசா அரசியல் கருத்தாக்கத்தை வலுப்பெற செய்தார் என்பதையெல்லாம் நூலாசிரியர் அமரந்த்தா அவர்கள்  விரிவாக இந்நூலில் விளக்கியுள்ளார். வெனிசுவேலா – கியூபா-பொலிவியா-ரசியா-சீனா-ஈரான் மையப்படுத்திய அமெரிக்காவின் புவிசார் அரசியலை புரிந்துகொள்ள இச்சிறியநூல் மிகவும் உதவிகரமானது. நிமிர் பதிப்பகத்தின் வெளியீடாக வெளிவந்திருக்கும் இந்நூலில் விலையும் மிகவும் குறைவானது.

புத்தகங்களை வாங்க தொடர்புக்கு:

திசை புத்தக நிலையம்

ஆவின் பால் நிலையம் அருகில்

காமராஜர் அரங்கம் எதிரில்

தேனாம்பேட்டை, சென்னை – 600086

098840 82823

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »