ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 40 நாள்களைக் கடந்து கொண்டிருக்கிறது தமிழ்நாடு. எனினும், பரிசோதனை என்பது இன்னும் முழுவீச்சில் மேற்கொள்ளப்படவில்லை. மருத்துவ பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவலர்கள் என களப்பணி செய்து கொண்டிருப்பவர்களுக்குக் கூட போதுமான பாதுகாப்புக் கருவிகள் அளிக்கப்படாத செய்திகள் அன்றாடம் வந்துகொண்டிருக்கிறது. பரிசோதனைக் கருவிகளைக் கொள்முதல் செய்வதற்கானப் பொறுப்பை இந்திய அரசே மேற்கொள்கிறது. இதே காலத்தில் மின்சாரச் சட்டத்திருத்த மசோதாவை அறிமுகப்படுத்தி இருக்கிறது மோடி அரசு.
இச்சட்டத்திருத்தம் மின்சார மானியம் கொடுக்கும் உரிமையை மாநில அரசுகளிடமிருந்து மத்திய அரசு எடுத்துக் கொள்வதை அப்பட்டமாக வரையறைச் செய்கிறது. மின்சார விநியோகமும் மானியமும் அந்தந்த மாநிலங்களின் பொருளாதார-சமூக நிலைகளுக்கு ஏற்பவே மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் கொள்கை வடிவமைப்பைப் பெறுகிறது. இதை மோடி அரசின் நேரடிக்கட்டுப்பாட்டிற்குள் கொண்டுசெல்ல இம்மசோதா பரிந்துரை செய்கிறது. மேலும், மின்சார விநியோகத்திற்கான விலை நிர்ணயம் மற்றும் மின்சாரக் கொள்முதல் கட்டுப்பாடுகளை உருவாக்கும் மாநில மின்துறை ஒழுங்காற்று ஆணையத்திற்கானப் பொறுப்பாளர்களை நியமனம் செய்யும் பொறுப்பினை மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் மோடி அரசு கொண்டு செல்கிறது.
இதுபோலவே, கல்வித் துறையில் பட்டப்படிப்பிற்கான நுழைவுத் தேர்வினை பொறியியல் மற்றும் கலைத்துறைக்கும் கட்டாயமாக்கும் முறையை மோடி அரசு கொண்டு வந்திருக்கிறது. மருத்துவக் கல்லூரிகளில் நீட் தேர்வு முறை மூலம் மாநில அரசுகள் மற்றும் மக்களின் தேசிய இன உரிமையைப் பிடுங்கியதைப் போன்று, பிற துறைகளிலும் நுழைவுத் தேர்வின் மூலமாக தன் கட்டுப்பாட்டை மாநிலத்திற்குள் திணிக்கிறது. இந்த நெருக்கடிக் காலத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசின் நீர்வளத்துறையின் கீழ் கொண்டு சென்றிருக்கிறது. இதன்படி மத்திய அரசின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் காவிரி மேலாண்மை வாரியம் கொண்டு செல்லப்பட்டு அதன் இறையாண்மை முற்றிலும் பறிக்கப்படுகிறது. இம்முயற்சிகளின் மூலமாக மாநிலங்களின் உரிமைகளை முற்றிலுமாக தன் கையில் எடுத்துக் கொண்டு இறையாண்மையற்ற நிர்வாக அலகுகளாக மாநிலங்களை மாற்றிக்கொண்டிருக்கிறது இந்துத்துவ அரசு.
இந்தக் கொரொனோ நெருக்கடியின் பொழுது தமிழ்நாடு கேட்டிருந்த நிவாரணத்தொகையை மோடி அரசு இதுவரை ஒதுக்கவில்லை. மேலும், ஜி.எஸ்.டி நிலுவையும் வந்து சேரவில்லை. இது குறித்து தமிழ்நாட்டின் முதல்வர் பிரதமருடனான சந்திப்பில் பேசிய பின்னரும் கூட இது நிறைவேறாத நிலையைத்தான் காண்கிறோம். ஒரு மாநிலத்தின் வரிவருவாய் வழிமுறையை அடைத்துவிட்ட நிலையில், அம்மாநிலத்தின் வருவாய் பங்கைப் பகிர்ந்தளிக்க மறுப்பது சனநாயக விரோத செயலாகும். தமக்குரிய நிதிப்பங்கை ஒரு மாநிலம் பெற்றால் ஒழிய, அது தன்னுடைய மக்களுக்கான நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்த இயலாது. இந்தியாவின் கட்டமைப்பில் மாநிலங்கள் தான் நிர்வாகக்கட்டமைப்புகளாக இருக்கின்றன. மத்திய அரசு என்பது கொள்கைத் திட்டங்களை வடிவமைக்கும் அமைப்பாகவே இயங்கும் வடிவில் அரசியல் சாசனம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் நிதித்தேவையை நிறைவேற்றாமல் தவிர்ப்பதற்கான காரணம் தமிழின விரோதம் என்பதை நம்மால் உணரமுடிகிறது.
மாநில நிதி உரிமையை மறுத்துவரும் நிலையில், இந்திய அரசு சுங்கச்சாவடிகளை திறந்திருக்கிறது. தனது வருவாயைப் பெருக்கிக் கொள்ளத் தேசிய இனமக்களின் நிலத்தின் மீதமைந்த சாலையில் நிறுவி இருக்கும் சுங்கச்சாவடியின் மூலமாகத் தனது வரிச்சுரண்டலை துவக்கி இருக்கிறது. கொரொனோ ஊரடங்கின் காரணமாக முடக்கப்பட்ட வாழ்வியல் நெருக்கடியிலிருந்து மீளும் வகையில் உதவிகளைச் செய்யாமல், மேலும் மேலும் மக்களைச் சுரண்டும் வெள்ளையர் காலத்திய காலனிய மனநிலையையே இது பிரதிபலிக்கிறது.
தமிழர்களைச் சுரண்டிக்கொண்டிருக்கும் இதே சூழலில் தான், இந்திய அரசின் ரிசர்வ் வங்கி, பெருமுதலாளிகளின் கடன் நிலுவைத் தொகையான 68,700 கோடி ரூபாயை தள்ளுபடி செய்த செய்தி வெளியாகி இருக்கிறது. இந்தப் பெருமுதலாளிகளில் பெரும்பாலோனோர் பனியா சமூகத்தவர். இவர்களில் பலர் வழக்குகளிலிருந்தும், கைதுகளிலிருந்தும் தப்புவதற்காக இந்தியாவிலிருந்து வெளியேறி நாடு கடந்து வாழக்கூடியவர்கள். இப்படிப்பட்டக் குற்றவாளிகள், மக்களின் பணத்தைக் கையாடல் செய்தவர்களுடைய கடனை தள்ளுபடி செய்ய 2019 செப்டம்பர் மாதமே ரிசர்வ் வங்கி ஒப்புதல் கொடுத்திருக்கிறது. இது பற்றி 2020 பிப்ரவரியில் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய பொழுது நிர்மலா சீதாராமன் பதிலளிக்க மறுத்திருக்கிறார்.
இச்செய்திகளைக் கவனிக்கும் பொழுது நமக்கு ஒரு உண்மை புலனாகிறது. இந்தியாவின் செல்வ வளத்தினை, நிதி ஆதாரங்களைக் குசராத்தி-ராசஸ்தானி மார்வாடி-பனியா கூட்டத்திடம் குவிக்கும் பணியை வெகு வேகமாக இந்தப் பாரதிய சனதா கட்சியின் வழியாக ஆர்.எஸ்.எஸ் செய்துவருகிறது. அதிகார மட்டங்களில் பார்ப்பனர்களைக் குவித்து வைத்து, அவர்கள் வழியாக ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு, பனியாக்களின் செல்வத்தைக் குவிப்பது இந்துத்துவ ஆட்சியின் கொள்கையாகவே இருந்து வருகிறது.
பனியாக்களிடத்தில் நிதியைக் குவிக்கவும், அவர்களது நிறுவனங்களை அமைக்கவும், பனியாக்களின் பொருள்களை விற்பதற்குரிய சந்தையாகவும் தேசிய இனங்கள் இரையாக்கப்படுகின்றன. இந்தியக் கட்டமைப்பில் நிலம், கனிம வளங்கள், மக்கள் வளம் என்பது மாநிலங்களுக்குரிய சொத்துக்களாகும். இந்த வளங்களை எல்லாம் பனியா-மார்வாடிக் கூட்டங்களுக்குத் தாரை வார்க்க இந்திய அரசின் அதிகார மட்டங்களில் குவிந்து கிடக்கும் பார்ப்பனக் கூட்டங்கள் பல்வேறு திட்டங்களைக் கொண்டு வருகின்றன. இந்த முயற்சி பெருவெற்றி பெறவேண்டுமெனில், மாநில உரிமைகளைத் தனதாக்கிக் கொள்ள வேண்டும் என்று பார்ப்பன-பனியா கூட்டமைப்பு நம்புகிறது. ஏனெனில், மாநில ஆட்சிகள், மாநிலக் கட்சிகள் என்பது பெரும்பாலும் அம்மாநிலத்தின் தேசிய இனமக்களின் நலனைக் குறைந்த பட்சமேனும் பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருக்கின்றன.
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, ஒடிசா, மேற்கு வங்கம், பஞ்சாப், மராத்தியம் என இருக்கும் மாநிலங்களின் ஆட்சிப்பரப்புகளில் அம்மாநிலத்தின் மொழிவழி தேசிய இனங்களின் நலனைப் பேண வேண்டிய நெருக்கடி இருக்கிறது. ஆனால், இந்தியா எனும் மத்திய அரசிற்கு அப்படியான நெருக்கடிகள் வாய்ப்பதில்லை. ஏனெனில், இந்தியாவில் மத்திய அரசிற்கென்று தனித்த நிலப்பரப்போ, தனித்த தேசிய இனமோ கிடையாது. மேலும், இந்திய அரசின் நிர்வாக, நிதி, நீதி, இராணுவக் கட்டமைப்பைக் கட்டுப்படுத்தும் சமூகங்களாக இந்து மதத்தின் உயர்சாதி பார்ப்பன-பனியா எனும் ஆரியச் சமூகங்களே இருக்கின்றன. இவர்கள் இந்தியத் துணைக்கண்டத்தின் பெரும்பான்மை மக்களை தமக்கும் கீழானவர்களாகச் சூத்திரர்களாகவே கருதுகின்றனர். சூத்திர மக்களின் சொத்துக்களை, வளங்களை, செல்வங்களை அவர்களது அனுமதியின்றி எடுத்துக் கொள்வது வேத மரபின் அடிப்படையில், ஸ்மிருதிகளின் அடிப்படையில் இவர்களுக்கு ஏற்புடையது. அதுவே இந்துத்துவ தர்மம் என நம்பும் கூட்டமே இந்தியத் துணைக்கண்டத்தினை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. இந்த சுரண்டல் அரசியலுக்காகவே மாநில உரிமைகள் பறிபோகின்ற சூழலை நாம் காண்கிறோம்.
மேலும், தமிழ்த்தேசியத்தின் எழுச்சியை முடக்குவதற்காகவும், திசை திருப்பவும் இந்துத்துவ அமைப்புகள் திட்டமிட்டு மதவெறிப் பிரச்சாரத்தைச் செய்து வருகின்றன. கொரொனோ தொற்று நெருக்கடிக் காலத்திலும்கூட, தமிழர்களின் ஒற்றுமையைக் குலைக்கவும், தமது வேத வெறியை வளர்த்துவிடவும் முஸ்லீம்களுக்கு எதிரான பிரச்சாரத்தை ஆ.ர்.எஸ்.எஸ் அமைப்புகளால் வளர்த்துவிடப்பட்ட இந்துத்துவச் சில்லறைக் கூட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் செய்துவருகின்றன. தமிழ்நாட்டின் மூலைமுடுக்குகளில் இப்பிரச்சாரத்தை வெற்றிகரமாகக் கொண்டு சேர்க்க அதிமுகவின் எடப்பாடி அரசு அனைத்து உதவிகளையும் செய்திருக்கிறது.
சுகாதாரத்துறைச் செயலராக இருக்கும் திருமதி. பீலா ராஜேஸ் தனது பத்திரிக்கையாளர் சந்திப்புகளில் இசுலாமியர்கள் மீதான வெறுப்புப் பிரச்சாரத்திற்கான அடிப்படையை முன்மொழியும் வகையிலேயே பதிவு செய்துகொண்டிருந்தார் எனும் குற்றச்சாட்டு வெளிப்படையாகவே எழுந்தது. இவருடைய இந்த மதவெறுப்புத் தன்மையை எதிர்த்துக் கேள்வி எழுப்பியவர்கள் மீது வழக்குகள் பதிவாகின. பச்சைத்தமிழகம் கட்சியின் தலைவர் தோழர். சுப. உதயகுமார் மீதான வழக்குப் பதிவு இந்த எதேச்சதிகாரத்தை அம்பலப்படுத்துகிறது. இந்த இசுலாமிய எதிர்ப்பு – மதவெறுப்பு பிரச்சாரங்களைக் கிராமம் தோறும் ஆர்.எஸ்.எஸ் செய்வதை மே பதினேழு இயக்கத் தோழர்கள் நேரில் கண்டதை, மே பதினேழு இயக்கம் பொதுவெளியில் பதிவு செய்தது.
இந்துத்துவ அமைப்புகள் மக்களிடத்தில் வெறுப்புப் பிரச்சாரத்தைச் செய்வதை அதிமுக அரசு பாதுகாத்தது. பொதுமக்களுக்கு உதவி செய்யும் அமைப்புகள், தன்னார்வலர்கள் ஆகியன தடுத்து நிறுத்தப்பட்டு அவ்வுதவிகளை அரசு நிர்வாகங்களின் வழியே ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் மேற்கொண்டன. இப்படி தமிழ்நாட்டில் நிலவும் கொரொனோ நெருக்கடி சூழலைப் பயன்படுத்திக் கொண்டு இந்துத்துவ அமைப்புகள் தங்களுடைய ஆதிக்கத்தை விரிவு செய்திருக்கின்றன. இப்படியான வெறுப்பு அரசியல் பரவுவதை இயக்கங்கள் கண்டித்து அறிக்கை வெளியிட்டன. அதிமுகவின் இந்தத் தமிழின விரோதப் போக்கிற்கும், இசுலாமியர் விரோத பிரச்சாரத்திற்கும் எதிராக ஒட்டுமொத்த தமிழினமும் எழுந்து நிற்க வேண்டிய காலமிது.
தமிழ்த்தேசிய இனமக்களை சாதி அடிப்படையிலும், மத அடிப்படையிலும் இந்துத்துவ ஆரிய ஆற்றல்கள் உடைத்துக் கொண்டிருக்கின்றன. இதைத் துணிச்சலோடும், அர்ப்பணிப்புணர்வோடும் எதிர்த்து விரட்டுகின்ற தமிழ் இளைஞர்கள் எழவேண்டும். தமிழின விரோத ஆற்றல்களை விரட்டும் காலம் வெகுதொலைவில் இல்லை என்பதை அறிவிப்போம். துணிந்து செயலாற்றுவோம். தமிழர் துயர் துடைப்போம். ஆயிரம் ஆண்டு அடிமை விலங்கொடித்து தமிழர் கொடி உயரப்பறக்கச் செய்ய எழு தமிழா.
வீழ்ச்சியுறு தமிழகத்தில் எழுச்சி வேண்டும் விசை ஒடிந்த தேகத்தில் வன்மை வேண்டும் – புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்