‘போரை’ முதலீடாக்கும் பொருளாதாரம்

இந்திய ஒன்றியத்தின் குடிமகனின் ஒவ்வொரு அசைவுகளையும் “தேசப்பற்றை” வைத்து மதிப்பீடு செய்யும் வீர் சாவர்க்கர் வழித்தோன்றலான ஆர்.எஸ்.எஸ். பாஜக அரசின் தேசப்பற்றை அவர்கள் கொண்டாடும் இராணுவ துறையின் நிதி மற்றும் இதர செயல்பாடுகளை ஆராய்வதின் மூலம் அறிய முடியும்.

2020-21 நிதி அறிக்கையில் ரூ.4,71,378 கோடி பாதுகாப்பு துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது, 2020-21 நிதியாண்டின் 15.5% நிதியானது பாதுகாப்பு துறைக்கு வழங்கப்பட்டுள்ளது. இது, இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.1% ஆகும்.

மக்களின் கல்வி வழங்கும் மனிதவள துறை 3.33% நிதி பெறுகிறது. ஆப்பிரிக்க நாடுகளுடன் போட்டி போடும் சுகாதார குறியீடுகளை வைத்துள்ள ஒன்றியத்தின் சுகாதார துறை 2.21% பெறுகிறது. இந்தியாவின் பெரும்பான்மை (சுமார் 43%) வேலைவாய்ப்புகளை வழங்கும் விவசாய துறை 4.69% பெறுகிறது.

2020-21 நிதியாண்டின் மொத்த அறிவிக்கப்பட்ட செலவு: ரூ.30,42,230 கோடி.

அமைச்சகம் 2020-21 நிதி ஒதுக்கீடு (ரூ. கோடி) மொத்த நிதியில் %
மனிதவள மேம்பாடு 99,312 3.33
சுகாதாரம், குடும்ப நலன் 67,112 2.21
விவசாயம், விவசாயி நலன் 142,762 4.69
பாதுகாப்பு 471,378 15.49

கல்வி, சுகாதாரம், உணவு, வேலைவாய்ப்பு என்று மக்களின் அடிப்படைகளை பூர்த்தி செய்யும் துறைகள் மொத்தம் சேர்ந்து 10.23% நிதி ஒதுக்கீட்டை பெறுகிறது. “பாரத தேசம்” மீது எதிரிகளின் அச்சுறுத்தல் இருப்பதாக தொடர்ந்து கட்டியெழுப்பப்படும் பிம்பத்தின் காரணமாக இராணுவம் 15.5% நிதியை பெறுகிறது. இதை மேலும் உயர்த்தவேண்டும் என்று ஆங்கிலேயர்களுக்கு மன்னிப்பு கடிதம் எழுதியே அரசியல் சாதனை படைத்த வீர் சாவர்க்கரின் வாரிசுகள் கூச்சலிடுகின்றனர். இவர்கள், ஒருபோதும் மக்களுக்கு அறிவியல் கல்வி வழங்கிடு, பசியாற உணவு வழங்கிடு, நோய்களை குணமாக்கும் மருத்துவமனைகளை வழங்கிடு என்று கூச்சலிட்டதாக வரலாறு இல்லை. இனிமேலும், இருக்கப்போவதில்லை!

எந்நேரமும், “யார் இந்தியன்” என்று சோதனை நடத்த இராணுவ வீரனுடன் ஒப்பிட்டு பேசும் பாஜகவினர் அந்த இராணுவ வீரர்களுக்காவது உண்மையாக இருந்தார்களா? இராணுவத்திற்கு ஒதுக்கப்பட்ட மொத்த நிதியில் 30.2% சம்பளத்திற்கும், 28.4% ஓய்வூதியமாகவும் செலவிடப்படுகிறது. இந்த இராணுவ ஓய்வூதிய செலவை குறைக்கவேண்டும் என்று அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. ஆண்டிற்கு 60,000 வீரர்கள் ஓய்வு பெறும் நிலையில் ஓய்வூதியத்திற்கான “மாற்று ஏற்பாடை” ஆலோசித்து வருகின்றனர், பாஜக தேசப்பற்றாளர்கள்!

இராணுவ தளவாட இறக்குமதி

இந்திய மக்களின் அடிப்படை தேவைகளை புறந்தள்ளிவிட்டு பெரும்பான்மை நிதி ஒதுக்கீட்டை விழுங்கும் பாதுகாப்பு துறையின் பணம் எங்கு செல்கிறது என்று கவனித்தால், இந்துத்துவவாதிகளின் தேசப்பற்று பல்லை இளிக்கிறது.

2015-19 காலத்தில் இராணுவ தளவாட இறக்குமதியில் உலகளவில் இந்தியா இரண்டாம் இடத்தை (சவூதி முதலிடம்) பிடித்து வருகிறது. அதற்கு முன்னரும் இந்தியா அதே இடத்தை தான் பிடித்ததாக உலகின் இராணுவ தளவாட வணிகத்தை ஆராய்ந்து வரும் SIPRI (Stockholm International Peace Research Institute) தெரிவித்தது. அதாவது, ஆயுதம் வாங்குகிறோம் என்று இந்தியர்களின் வரிப்பணத்தை அந்நிய கார்பொரேட்களுக்கு கொட்டி கொடுக்கின்றனர்.

ஆயுத வணிகம் என்பது பல பில்லியன் அமெரிக்க டாலர்களில் புரளும் துறை. உலகின் பெரும் முதலீடுகளும் ஊழல்களும் இந்த துறையில் தான் நடைபெறுகின்றன. ஆகையால், பாஜகவின் சமீபத்திய ரபேல் போர் விமான ஊழல் போன்று பல ஊழல்கள் சாதாரணமாக நடைபெறுவது வழக்கம்.

இந்தியாவின் இந்த இராணுவ தளவாட சந்தையை அமெரிக்காவும், இஸ்ரேலும் பல பத்தாண்டுகளாக குறி வைத்திருந்தன. அமெரிக்காவின் பெரும்பான்மை இராணுவ ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப உருவாக்கம் இஸ்ரேலில் தான் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ரஷ்யாவிடம் இருந்த இந்தியாவின் சந்தை தற்போது மிக வேகமாக அமெரிக்கா வசம் கைமாறி வருகிறது. இதுதான், மோடியின் நட்பு வட்டத்தின் இரகசியம்.

அந்நிய வியாபாரிகளின் ஆயுத விற்பனை இந்தியாவில் வளர்ந்து வரும் அதே நேரத்தில் இந்திய உற்பத்தியாளர்களின், பெரும்பான்மையாக பொதுத்துறை நிறுவனங்கள், பங்கு குறைந்து வருகிறது. HAL, NAL, DRDO போன்ற பல பொதுத்துறை நிறுவனங்களின் உற்பத்திகளை முறைப்படி குறைத்து வரும் இந்திய ஒன்றிய அரசு, இந்திய தனியார் முதலாளிகளுக்கு உரிமங்களை வழங்கி வருகிறது. பற்பசை, குளியல் சோப்பு செய்வதற்கான தொழில்நுட்ப அறிவை கூட வெளிநாடுகளில் இருந்து பெற்று செய்யும் மார்வாரி பனியா தரகர்களுக்கு அதிநவீன போர் விமானங்கள், நீர் மூழ்கி கப்பல்கள் செய்யும் வர்த்தக ஆணைகள் வலிய வழங்கப்படுகிறது.

உற்பத்தி ஆணைகளை பெற்ற மார்வாரி பனியா தரகர்களுடன் இராணுவ தளவாட உற்பத்தி தொழில்நுட்ப அறிவை பகிர எந்த நாடும் முன்வரவில்லை. இவர்களுக்கான தொழில்நுட்ப அறிவுகளை பெற்று தரும் பணியில் பனியா சேவகர் மோடி அவர்கள் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

பறிபோகும் இறையாண்மை

இந்தியாவின் வேலைவாய்ப்பு பொருளாதார வளர்ச்சிக்கு “மேக்-இன்-இந்தியா” திட்டத்தை பிரதமர் அறிவித்தார். இந்த திட்டத்தின் கீழ் இராணுவ தளவாட உற்பத்தியை இந்தியாவில் செய்வோம் என்று உலக நாடுகளிடம் இராணுவ ஒப்பந்தங்களை கையெழுத்திட்டு வந்தார். இராணுவ தளவாட உற்பத்தி மண்டலங்களை இந்தியா முழுவதும் அமைத்து உற்பத்தி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் என அனைத்து வளர்ச்சிகளையும் ஏற்படுத்துவேன் என்று முழங்கினார். இதை, ஆண்டு தோறும் “இராணுவ கண்காட்சி” (defence expo), 2018ல் சென்னையில் நடைபெற்றது, நடத்தி பாஜக அரசு விளம்பரம் செய்து வருகிறது.

இராணுவ ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளுக்கு பல பில்லியன் டாலர்களை செலவிடும் பணக்கார நாடுகள் தங்கள் தொழில்நுட்ப அறிவை இந்தியாவுடன் பகிர்வதற்கு தயாராக இல்லை. இந்த இராணுவ இரகசிய தொழில்நுட்பத்தை பகிர்வதற்கு அந்நாடுகள் பல்வேறு கோரிக்கைகளை வைத்தன. இவற்றில் சில இந்திய இறையாண்மைக்கே பாதகமானவை. இதன் காரணமாக, இந்தியாவில் இராணுவ உற்பத்தி திட்டங்கள் நெடுங்காலமாக தலைதூக்காமல் பிரதமர் மோடியின் “மேக்-இன்-இந்தியா” கனவு பட்டமரமாய் நின்றது.

இறுதியாக, எப்பாடுபட்டாவது இந்தியாவிற்கு அந்நிய இராணுவ உற்பத்தி நிறுவனங்களை கொண்டு வர வேண்டுமென்று “வலிமையான தலைவர்” பாரத பிரதமர் தீர்மானித்தார். இவர், ஆங்கிலேயருடன் கைகோர்த்து சுபாஷ் சந்திர போஸ் கட்டிய இந்திய இராணுவத்தை வீழ்த்திய வீர் சாவர்க்கரின் வரலாறை உடையவராயிற்றே! ஆகையால், இந்திய இறையாண்மையை அமெரிக்காவிற்கு தாரைவார்க்கும் பல்வேறு ஒப்பந்தங்களை சத்தமில்லாமல் கையெழுத்திட்டார். இது குறித்து எந்த எதிர்க்கட்சியும் கவலைப்படவில்லை என்பது கூடுதல் வேதனை.

30.8.2016 அன்று கையெழுத்தான LEMOA (Logistics Exchange Memorandum of Agreement) ஒப்பந்தத்தின்படி அமெரிக்க இராணுவ விமானங்கள், கப்பல்கள் எப்போது வேண்டுமானாலும் இந்தியாவிற்குள் வந்து நிறுத்திக்கொள்ளலாம்.

6.11.2018 அன்று கையெழுத்தான COMCASA (Communications Compatibility and Security Agreement) ஒப்பந்தத்தின் வாயிலாக இந்திய இராணுவ பாதுகாப்பு துறையின் தொலைத்தொடர்பு வலைப்பின்னலில் (communication network) அமெரிக்க இராணுவத்திற்கு நேரடியான இணைப்பு வழங்கப்படும்.

விரைவில், BECA (Basic Exchange and Cooperation Agreement) எனப்படும் ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி இந்தியாவின் புவியியல் (Geospatial) சார்ந்த தகவல்கள் அனைத்தும் அமெரிக்காவுடன் பகிரப்படும்.

இப்படி இந்தியாவின் பாதுகாப்பு அனைத்தையும் உலக ஏகாதிபத்திய அமெரிக்காவின் காலடியில் வைத்து தான் “உலகமே மதிக்கும்” பிரதமர் மோடி அந்நிய இராணுவ தொழில்நுட்பங்களை இந்தியாவிற்கு கொண்டு செல்ல அமெரிக்க அனுமதியளித்தது. இதில், கூடுதலாக இராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்கள் தங்களுக்கு பெரும்பான்மை பங்கும் நிர்வாக கட்டுப்பாடும் வேண்டும் என்று கட்டளையிட்டனர். உடனே, அதையும் செய்து முடித்தார் மோடி.

இன்று, அந்நிய நிறுவனங்கள் 49% வரை இந்திய இராணுவ உற்பத்தி நிறுவனத்தில் நேரடியாக முதலீடு செய்யலாம். மேலும், அரசின் ஒப்புதல் பெற்று 100% அந்நிய முதலீடு செய்யலாம். பெப்சி, கொக்க கோலா நிலைக்கு இராணுவ தளவாட உற்பத்தி துறையை திறந்துவிட்டுள்ளார் தேசம் காக்கும் பாரத பிரதமர் மோடி.

ஒரு நாட்டின் இறையாண்மையையும் பாதுகாப்பையும் அந்நிய நாட்டின் நிறுவனங்களிடம் தாரை வார்த்துள்ள “தேச விரோதிகள்” தான் மற்றவர்களை பார்த்து “நீ தேச பக்தனா?” என்று கொந்தளிக்கின்றனர்.

உலக இராணுவ தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தி துறைகளில் முன்னோடிகளாக இருக்கும் உலகின் கட்டப்பஞ்சாயத்தை நடத்தும் அமெரிக்காவும் பேரினவாதியான இஸ்ரேலும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பர்கள். இந்த இரு நாடுகளின் பொருளாதாரமே இராணுவ தளவாடங்கள் விற்பனையை அடிப்படையாக கொண்டவை. போரினால் உயிரிழந்து உடைமைகள் இழந்து இருப்பவர்கள் மீது இராணுவ ஒப்பந்தங்களை கையெழுத்திடும் பிணந்திண்ணிகள். உலகில் நடக்கும் தொடர் போர்கள் அனைத்தும் இவர்களுக்கு வர்த்தகத்திற்கான வாய்ப்பு. இராணுவ தளவாட உற்பத்தியை அடிப்படையாக கொண்டு இந்திய பொருளாதாராத்தை கட்டியமைத்தால் நாளை இந்தியாவும் “உலகில் போர் நல்லது” என்ற வெளியுறவு கொள்கையை மேற்கொள்ளும். இந்த பாழுங்கிணற்றில் தான் இந்திய ஒன்றியத்தின் எதிர்காலத்தை கொண்டுபோய் தள்ளியுள்ளது இந்துத்துவ பார்ப்பன பனியா கும்பல்.

உலக ஏகாதிபத்திய பேரினவாதிகளுடன் இந்திய பார்ப்பன அதிகார வர்க்கம் கைகோர்க்கும் அதேவேளையில் அந்நிய இராணுவ தளவாட உற்பத்தி முதலீட்டு நிறுவனங்களுடன் பங்குதாரராக தரகு வியாபாரிகளான பனியாக்கள் கைகோர்ப்பார்கள். ஆக மொத்தத்தில், இவர்களை பொறுத்தவரை “தேச பக்தி” என்பது அதிகாரத்தையும் வணிகத்தையும் கைப்பற்றுவதற்கான முதலீடு. அவ்வளவு தான்!

Translate »