கலவரங்களின் ‘கமாண்ட் சென்டர்’, வாட்சாப்!

இது உங்கள் “வாட்சாப்” நம்பரா? என்று சாதாரணமாக கேட்கும் அளவிற்கு இந்த தகவல் பகிரும் செயலி அனைவரிடமும் பரவியுள்ளது. 40 கோடிக்கும் மேலான இந்தியர்கள் வாட்சாப் பயன்படுத்துகின்றனர். அதாவது, மூன்று பேரில் ஒருவரிடம் வாட்சாப் உள்ளது. உலகளவில் 200 கோடி வாட்சாப் பயன்பாட்டாளர்கள் உள்ளனர். தொடக்கத்தில், வாட்சப் நிறுவனர்களின் லாப நோக்கமின்மையும், பாதுகாப்பான எளிமையான தகவல் பரிமாற்ற தொழில்நுட்பமும் வாட்சாப்பின் அசுர வளர்ச்சிக்கு அடிப்படைக் காரணங்களாக பார்க்கப்படுகிறது. அதேநேரம், வாட்சாப் தகவல்களைக் கண்காணிக்க முடியாமல் சர்வதேச அரசுகள் திண்டாடின. குறிப்பாக, வாட்சாப் அதிகமாக பயன்படுத்தப்படும் இந்தியாவில் பாதுகாப்புத் துறைக்குப் பெரும் அச்சமாக இருப்பதாக பேசப்பட்டு வந்தது.

உலக அரசுகள் வாட்சாப் தகவலைக் கண்காணிக்க வைத்த கோரிக்கைகளை நிறுவனர்கள், செயலியின் தொழில்நுட்பத்தால் கண்காணிப்பு சாத்தியப்படாது என்று தெரிவித்து வந்தனர். மேலும், இந்தியாவிற்குள் வாட்சாப் “சர்வர்” நிறுவ இந்தியா வைத்த கோரிக்கையையும் அந்நிறுவனம் நிராகரித்தது. 2014இல் முகநூல் நிறுவனம் வாட்சாப்பை மிக அதிக பணம் (சுமார் ரூ.110,000 கோடி) கொடுத்து வலுக்கட்டாயமாக வாங்கியது. அதற்குமுன் கேட்டிறாத பணம் கொடுத்து வாட்சாப்பை வாங்கிய முகநூல் நிறுவனம் அதைக் கொண்டு வருமானம் பெரும் வழிகளில் ஈடுபட்டது. அதில் ஒன்று தான் “வாட்சாப் பேமண்ட்” எனப்படும் பண பரிமாற்ற சேவை. ஆனால், இதற்கான உரிமத்தை இந்திய ரிசர்வ் வங்கி வழங்க மறுத்தது. அதேநேரத்தில், வாட்சப் “வதந்திகளால்” (குழந்தை கடத்தல், மாட்டுக்கறி வைத்திருத்தல்) சமூகத்தில் கலவரங்களும் கொலைகளும் நடப்பதாக வாட்சாப்பிற்கு எதிராக 2017-18இல் சர்வதேச அளவு பிரச்சாரம் நடந்தது. அடுத்த சில மாதங்களில் வாட்சாப் இந்தியாவில் முகநூல் நிறுவனத்தின் “டேட்டா சென்டர்” பயன்படுத்துவதாக அறிவித்தது.

இந்துத்துவ ஆர்.எஸ்.எஸின் வாட்சாப் உள்ளிட்ட சமூக ஊடக வதந்திகளால் மட்டுமே ஆட்சியைப் பிடித்தவர் பாஜக பிரதமர் நரேந்திர மோடி. இன்று உலகெங்கும் உள்ள தீவிர வலதுசாரி தேசியவாதிகளின் யுக்திமுறையாகவும் இதுவே உள்ளது. ஒருபுறம், “வதந்திகளைப் பரப்ப வேண்டாம்” என்று வாட்சப் நிறுவனத்தின் முழுப்பக்க பத்திரிகை விளம்பரங்கள் வெளியாகின. மறுபுறம், ஆளும் கட்சியின் அன்றைய தலைவர் அமித் ஷா தங்கள் கட்சியின் லட்சக்கணக்கான வாட்சாப் குழுக்கள் மூலம் எப்படி “பொய்யை உண்மையாக்க முடியும், உண்மையைப் பொய்யாக்க முடியும்” என்று மேடைகளில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்து வந்தார். பாஜக தனது 2018-2019 பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை இலட்சக்கணக்கான வாட்சாப் குழுக்களின் வாயிலாக பரப்பிய வதந்திகள் மூலமே மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது.

தற்போது, இந்தியாவில் “வாட்சாப் பேமண்ட்” சேவை சோதனையில் உள்ளது. விரைவில் வர்த்தக சேவைக்கு வரவுள்ளது. இலாபவெறி கொண்ட ஒரு கார்பரேட் நிறுவனமும் மத வெறிபிடித்த ஒரு கட்சியும் தங்கள் நலன்களைக் கருதி சுமுகமான ஒப்பந்தம் செய்து கொண்டதை இது தெளிவுபடுத்துகிறது. இதுவரை இந்துத்துவவாதிகளின் வதந்திகளையும் மத வெறுப்பையும் பிரச்சாரம் செய்ய பயன்பட்ட வாட்சாப் தற்போது கலவரங்களை அரங்கேற்றவும் பயன்படுத்தப்படுகிறது.

பிப்ரவரி 22, சனிக்கிழமை அன்று “குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு” (CAA) எதிரான அமைதிவழி மக்கள் போராட்டம் தில்லி ஜாபிராபாத் மெட்ரோ ரயில் நிலையம் அருகே தொடங்கியது. கடந்த இரண்டு மாதங்களாக தில்லி சகீன்பாக்கில் அமைதியாக நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தை அடுத்து இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் இந்த சட்டச் திருத்தத்திற்கு எதிரான போராட்டம் வலுத்து வந்தது.

(குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம். ஜாபிராபாத், தில்லி.)

இந்தியாவெங்கும் வலுத்து வரும் தொடர் போராட்டங்களால் ஆளும் பாஜக அரசு திணறி வந்தது. பிப்ரவரி 24, 25 அமெரிக்க பிரதமர் ட்ரம்ப் இந்தியா வருகை தரவுள்ள சமயத்தில் பிப்ரவரி 22ஆம் நாள் தில்லியில் புதிதாக தொடங்கிய போராட்டம் அரசைக் கடும் நெருக்கடிக்குள்ளாக்கியது. இந்நிலையில், பிப்ரவரி 23ஆம் தேதி அன்று குடியுரிமைச் சட்டத்திற்கு ஆதரவாக நடைபெற்ற பேரணியில் தில்லி பாஜக தலைவர் கபில் மிஸ்ரா புதிதாக தொடங்கப்பட்ட சாந்த்பாக், ஜாபிராபாத் போராட்டங்களைப் போராட்டக்காரர்கள் தாமாக 3 நாட்களுக்குள் கைவிடாவிட்டால் பாஜக தொண்டர்கள் கலைப்பார்கள் என்று காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் மிரட்டல் விடுத்தார். கபில் மிஸ்ரா பேசி முடித்த சில மணி நேரத்திற்கெல்லாம் பாஜக குண்டர்கள் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக போராடுபவர்கள் மீதான கல்வீச்சை தொடங்கினர். இந்த கல்வீச்சு தாக்குதல்களைத் காவல்துறை ஓரளவிற்கு கட்டுக்குள் கொண்டுவந்தது. மறுநாள், பிப்ரவரி 24 அமெரிக்க அதிபர் குஜராத்தில் இருந்த நேரத்தில் கல்வீச்சு கலவரம் மீண்டும் வெடித்தது. கலவரத்தைக் கட்டுப்படுத்த காவல் துறையும் அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் இரவு நேரத்தில் இஸ்லாமியர்கள் குடியிருப்புகளும் வணிக நிறுவனங்களும் குறிவைத்து இந்துத்துவ மதவெறியர்களால் சூறையாடப்பட்டன.

பிப்ரவரி 25, செவ்வாய் அன்று கலவரம் மேலும் தீவிரமடைந்து அருகில் உள்ள மற்ற பகுதிகளுக்கும் பரவியது. இந்துத்துவக் கலவரக்காரர்கள் தெருக்களில் செல்வோரின் பெயர்களை விசாரித்து அவர்கள் இஸ்லாமியர்களாக இருந்தால் கொலைவெறி தாக்குதல் நடத்தினர். பல நேரங்களில் ஆண்களின் கீழ் ஆடையைக் கழற்றி இஸ்லாமியர் அல்ல என்பதை நிரூபிக்க ஆண் குறியைக் காட்ட மிரட்டப்பட்டனர். பத்திரிகை நிருபர்களும் தங்கள் உயிர்களைக் காப்பாற்றிக்கொள்ள ஆண் குறியைக் காண்பித்துள்ளார். நிருபர்களின் ஊடக உபகரணங்களும் வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டன. 5 இஸ்லாமிய வழிபாட்டுத் தளங்களும் தீயிட்டு கொளுத்தப்பட்டன. சிறுபான்மையினர் மீதான இந்துத்துவ மதவாதிகளின் இரத்தவெறித் தாக்குதல்கள் தில்லி காவல்துறையின் முழு ஒத்துழைப்புடன் நடந்தேறியது. பல நேரங்களில் காவல்துறையினர் இந்துத்துவ வெறியர்களுக்கு கற்கள் மற்றும் இதர ஆயுதங்களை வழங்கியதும் தெரியவந்தது. புதன்கிழமையன்று துணை இராணுவத்தினர் வந்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த கலவரத்தில் சுமார் 53 பேர் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

தில்லி கலவரத்தை முன்னின்று நடத்தியவர்கள் “வெளியாட்கள்” என்று பாதிக்கப்பட்டப் பகுதிகளைச் சார்ந்த மக்கள் தொடர்ந்து சொல்வதைக் கவனிக்க முடிந்தது. இதனடிப்படையில் தொடரப்பட்ட விசாரணைகளில் தில்லி கலவரத்தின் செயல்திட்டத்தில் “வாட்சாப்” முக்கிய பங்குவகித்துள்ளது அம்பலமானது. பிப்ரவரி 23ஆம் தேதி கபில் மிஸ்ரா CAAவிற்கு எதிராக போராடும் மக்கள் மீது வன்மத்தை உமிழும் பேச்சு முடிந்தவுடன் கலவரக்காரர்கள் பல வாட்சாப் குழுக்களை உருவாக்கி அதில் பல்வேறு பகுதிகளில் உள்ள தங்கள் ஆதரவாளர்களை இணைத்துள்ளனர். தொடர்ந்து அந்த வாட்சாப் குழுக்களில் சிறுபான்மையினர் மீதான வெறுப்பு தகவல்களையும், பொய்யான காணொளிகளையும் பரப்பினர்.

உதாரணமாக, ஒரு அட்டைப்பெட்டியில் இருந்து துப்பாக்கிகளை எடுப்பது போன்ற காணொளியுடன் “இந்துக்களைக் கொல்வதற்காக இஸ்லாமியர்கள் தில்லிக்கு ஆயுதங்களைக் கொண்டு வந்துள்ளனர்” என்று வாட்சாப் குழுக்களில் பரப்பினர். உண்மையில் அந்த காணொளி தில்லி காவல் துறையால் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு ஆயுதக் கடத்தல் வழக்கு சம்பந்தமாக வெளியிடப்பட்ட காணொளியாகும். இப்படியான பொய் தகவல்களைக் கண்ட வாட்சாப் குழுவினர்கள் பல்வேறு பகுதிகளில் உத்திரப் பிரதேசத்தில் இருந்தும் 24ஆம் தேதி தில்லிக்கு திரண்டு வந்துள்ளனர்.

அரசு விதிமுறைகளுக்கும் ஊடக கண்காணிப்புகளுக்கும் உட்படாமல் நேரடியாக மக்களுக்கு “பொய்” தகவல்களைக் கொண்டு சேர்ப்பதில் வாட்சாப் சிறப்பாக செயல்படுகிறது. இந்த தனித்துவத்தை முதலில் உணர்ந்த ஆர்எஸ்எஸ் பாஜகவிடம் இன்று மிகப்பெரிய வாட்சாப் குழு பிரச்சாரக் கட்டமைப்பு உள்ளது. எடுத்துக்காட்டாக, 2019 தேர்தலின் போது பீகாரில் மட்டும் 58,000க்கும் மேலான வாட்சாப் குழுக்களை வைத்திருந்தது. தமிழ் நாட்டிலும் தொடர்ந்து இந்த கட்டமைப்பை உருவாக்கி வருகின்றது. அச்சு, தொலைக்காட்சி, பொதுக் கூட்டங்கள் ஒன்றிணைந்து செய்யமுடியாத ஒரு பிரச்சாரப் பணியை வாட்சாப் மட்டுமே செய்து முடிக்கிறது. வாட்சாப் இல்லை என்றால் பாஜக ஆட்சி மறுநாளே கவிழும்! என்று சொன்னால் மிகையாகாது.

பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த “வெளியாட்களைக்” கலவரம் நடந்த பகுதியைச் சேர்ந்த சிலர் வாட்சாப் குழுவின் வாயிலாக வழி நடத்தியுள்ளனர். சிறுபான்மையினரின் வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்கள் அடையாளம் காட்டிக் கொடுத்துள்ளனர். தாக்குதலுக்குத் தேவையான ஆயுதங்கள் அனைத்தும் வைக்கப்பட்டுள்ள இடங்கள் வரை வாட்சாப்பில் பகிர்ந்துள்ளனர். இந்துத்துவக் கலவரக்காரர்களின் இந்த நுணுக்கமான செயல்திட்டமுறையை இதற்கு முன்னர் தில்லி ஜவகர்லால் பல்கலைக்கழக மாணவர்கள் தாக்குதலில் காணலாம். “வாய்ஸ் மெசேஜ், புகைப்படங்கள், மேப் லொகேஷன்” என ஏ.பி.வி.பி சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் “வெளியாட்களை” வாட்சாப்பில் வழி நடத்தியுள்ளனர். வாட்சாப்பைக் கொண்டு மிக துல்லியமாக செயல்படுத்தப்பட்ட வன்முறை என்பதை பின்னர் செய்திகள் வெளியாகின. முன்னணி தாக்குதல் படைகளை வழிநடத்தும் “கமாண்ட் சென்டர்”களாக வாட்சாப் குழுக்கள் புது பரிமாணம் எடுத்துள்ளது.

(தில்லி கலவரத்தில் தீயிட்டு கொளுத்தப்பட்ட வாகனங்கள்)

வீடுகள், வணிக நிறுவனங்கள் முன் எழுதப்பட்டுள்ள பெயர் பலகைகள், வண்டிகளில் இருக்கும் மதக் குறியீடுகள் என கவனமாக பார்த்து சூறையாடியுள்ளனர். மதக் குறியீடுகள் இல்லாத வாகனங்களின் லைசென்ஸ் எண்களை ஆர்.டி.ஓ இணையதளத்தில் சொந்தக்காரரின் பெயரைப் பார்த்து இஸ்லாமியர் வாகனங்களை மட்டுமே கொளுத்தியுள்ளனர். இவ்வாறு பல டாக்சி ஓட்டுனர்களின் வாகனங்கள் தீக்கு இறையாகின. இந்தியாவில் தனிநபர் தகவல் பாதுகாப்பு முற்றிலும் கிடையாது. அப்படியான தகவல் பாதுகாப்புச் சட்டத்தின் அவசரத் தேவையை இந்த சம்பவம் உணர்த்துகிறது.

பல தலைமுறைகளாக ஒரே பகுதியில் வாழ்ந்து வரும் வேற்று மதத்தினர் இடையே வெறுப்பையும் வன்முறையையும் புகுத்துவது சாத்தியமில்லை என்பதால் இந்துத்துவ வெறியர்கள் “வெளியாட்களை” இறக்கி கலவரத்தை விதைத்துள்ளனர். அதனையடுத்து, கலவரத்தில் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் இன்று மதங்களாக பிளவுபட்டுள்ளனர். இதுவே, இந்துத்துவ அரசியலின் வெற்றி!

Translate »