செய்தி நிறுவன அதிகாரி: “நீ பாலஸ்தீனத்திற்குச் செல்ல வேண்டும். சிறிலங்காவிற்கு வேண்டாம்”.
செய்தியாளர்: “ஆனால், அங்கு ஒரு பதிவு செய்யப்படாத போர் நடந்து வருகிறது. ஆகவே நான் அங்கு தான் போக வேண்டும்”.
செய்தி நிறுவன அதிகாரி: “அங்கு ஆறு வருடங்களாக எந்த ஒரு பத்திரிக்கையாளரும் அனுமதிக்கப்படவில்லை.”
செய்தியாளர்: “அங்கு ஆயிரக்கணக்கான குழந்தைகள் பசியில் மடிந்து கொண்டிருக்கிறார்கள்”.
செய்தி நிறுவன அதிகாரி: “இலங்கை அரசிடம் நீ சிக்கினால் கொல்லப்படுவாய்.”
இது ‘A Private War’ திரைப்படத்தில் ஒரு செய்தி நிறுவனத்தின் உயரதிகாரிக்கும் அந்த நிறுவனத்தில் வேலை செய்யும் செய்தியாளருக்கும் இடையில் நடைபெறும் உரையாடல். செய்தி தேவைப்படும் உயரதிகாரியே ‘அரசினால் கொல்லப்படுவாய்’ என்று எச்சரித்தும், ஆறு வருடங்களாக எந்த ஒரு பத்திரிக்கையாளரும் அனுமதிக்கப்படாத ஈழத்தில் பதிவு செய்யப்படாமல் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்டு வந்த இனப்படுகொலையினைப் பற்றி செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர் ‘மேரி கால்வினைப்’ பற்றியான படம்தான் ‘A Private War’.
செசன்யா, கொசோவோ, சியரா லியோன், ஜிம்பாப்வே, கிழக்கு தைமூர், ஈழம், சிரியா என்று பல்வேறு இடங்களில் போர்க்களச் செய்தியாளராக இருந்த மேரி கால்வின் தமிழீழ இனப்படுகொலையின் முக்கிய சாட்சி!
மேரி கால்வின் ஒரு அமெரிக்கர்; பிரித்தானியச் செய்தி இதழில் பணிபுரிந்து வந்தவர். லண்டனில் அவர் பெற்ற சில தொடர்புகளின் மூலம் தான் 2001 ஆம் ஆண்டு இலங்கை அரசுக்குத் தெரியாமல், விடுதலைப் புலிகள் துணையுடன், வன்னியில் செய்தியினைச் சேகரிக்கக் கிளம்பினார் மேரி.
வன்னியின் கிராமங்களில் சுற்றித் திரிந்து தமிழ் மக்களின் மீது பேரினவாத இலங்கை அரசு வெளியில் தெரியாமல் நடத்தி வந்த போர், பொருளாதாரத் தடை, ஐநா சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் வழங்கிய உணவு மற்றும் மருந்து போன்ற நிவாரணப் பொருள்கள் தடுப்பு பற்றியான செய்தியினை பல்வேறு நெருக்கடிகளுக்கு நடுவே பல மைல்கள் தூரம் நடந்தே சேகரித்தார், மேரி. காட்டு விலங்குகள், காட்டு மரங்களின் முள்கள், இடுப்பு வரை நிறைந்திருக்கும் நீர், சேறு, விவசாய நிலங்கள் என்று இலங்கை அரசின் பிடியில் சிக்காமல் இருக்க அவர் மேற்கொண்ட நீண்ட பயணம் நிச்சயம் இனிமையானதாக இருந்திருக்காது. ஒரு போர்க்களச் செய்தியாளராக அது அவருக்குப் பழகியும் போயிருக்கலாம். செய்தியினைச் சேகரித்த பின் இலங்கை அரசின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிக்குச் சென்று அதன் பின் இலங்கையை விட்டு வெளியேறுவது தான் திட்டம். ஆனால், அதன் பின் நடந்த சம்பவம் மேரியின் வாழ்நாள் அடையாளமாகியது.
வன்னியில் இருந்து இலங்கை அரசின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிக்குச் செல்லும் வழியில் திடீரென இலங்கை இராணுவம் துப்பாக்கியினால் சுடத் தொடங்கியது. மேரி கால்வினைப் பாதுகாப்பாக இலங்கை அரசின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிக்குள் விட்டுவரும் வேலையில் ஈடுபட்ட புலிகள் அன்றைக்கு அந்தப் பகுதியின் வழியே செல்வது பாதுகாப்பானது என்று வந்த தகவலின் அடிப்படையிலேயே மேரி கால்வினை அழைத்துச் சென்றனர். துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பிக்க மேரி உள்ளிட்ட அனைவரும் தரையோடு தரையாகப் படுத்தனர்.
அதன் பின் ஏப்ரல் 16 (2001) ஆம் தேதி நடந்த சம்பவங்கள் மேரியின் வார்த்தைகளில்…
“நாங்கள் தரையில் பதுங்கிய போது யாரோ ஒருவர் [பாதுகாப்புக்காக உடன் வந்த புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்] தவழ்ந்து என் மீது ஏறினார். என்னுடைய பாதுகாப்புக்காகவா, பயத்தினாலா என்று தெரியாது. அதன் பின் நான் தனியாக இருந்தேன். ஒரு மரம் 10 அடி தூரத்திலிருந்தது. ஆனால், அது தூரமாக இருந்தது. துப்பாக்கிச் சூடும் நின்றபாடில்லை. இப்படி நடக்கும் என்று யாரும் யூகிக்கவில்லை. ஒரு வழியாக துப்பாக்கிச் சூடு நின்றது. இருளும் அமைதியும் சூழ்ந்தது. துப்பாக்கிச் சூட்டில் அடிபட்ட ஒரு மாட்டினைத் தவிர நான் இருந்த பக்கத்தில் இருந்து எந்த சத்தமும் வரவில்லை. யார் எங்கு இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. நான் எல்லாம் முடிந்தது; நான் தப்பித்து விட்டேன் என்று நினைத்தேன். ஆனால், எனக்குத் தெரியும் அது உண்மை இல்லை என்று. எங்களை அவர்கள் கண்டு கொண்டார்கள். அவர்கள் இது புலிகளின் படை என்று நினைத்து எங்களைக் கட்டாயம் பிடிக்க வருவார்கள். அது அவர்களுக்கு மகிழ்ச்சியையும் பயத்தையும் தூண்டும்.
இரண்டு படைகளில் இலங்கை ராணுவம் அதிக வீரர்கள் மற்றும் ஆயுதங்களுக்கும், கிளர்ச்சியாளர்கள் (புலிகள்) தந்திரங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்கும் பெயர் போயிருந்தார்கள். இந்த இரவில் இராணுவத்துக்குத்தான் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. நான் ஒரு முடிவினை எடுத்தாக வேண்டும். ஒன்று ஓடுவது. அல்லது அங்கேயே படுத்திருப்பது. அல்லது கத்துவது.
நான் அரைமணி நேரம் அங்கேயே படுத்திருந்தேன். எனக்கு நேர் எதிராக ஒருவர் வந்தபோது என்னுடைய வெள்ளைத்தோல் காட்டிக் கொடுத்துவிடும் என்பதால் என்னுடைய முகத்தைப் பூமியில் புதைத்துப் படுத்திருந்தேன்.
மீண்டும் அரை மைல் தொலைவில் துப்பாக்கிச் சூடு தொடர்ந்தது. [எங்களை] கண்டுபிடித்து அழிப்பதற்காக இராணுவப் படை வந்திருந்தது. சாலைகளில் இராணுவ வீரர்கள் பேசுவதையும் சிரிப்பதையும் நான் கேட்டேன். ஒரு இராணுவ வீரன் தானியங்கி ஆயுதத்தினை செலுத்தினான். அது நான் மறைந்து இருந்த இடத்துக்கு சற்றே முன்னால் வெடித்து அங்கு இருந்த பச்சைத் தளிர்கள் என்னை மூடின.
இப்போது நான் கத்தவில்லை என்றால், என்மீது [தேடுதலின் போது] கால் இடரினால் கட்டாயமாக அவர்கள் சுடுவார்கள்.
’பத்திரிக்கையாளர்! பத்திரிக்கையாளர்! அமெரிக்கர்! யூஎஸ்ஏ!’
என் சத்தத்தைக் கண்டுகொண்ட இராணுவ வீரன் ஒருவன் என்னை நோக்கி குண்டெறிந்தான். கைதிகளாக யாரையும் கொண்டு செல்லும் இராணுவம் இல்லை அது.
வலி, சத்தம், தோல்வியோடு சேர்ந்து அது என்னைத் துளைத்தது. நான் கண்ணில் சுடப்பட்டதாக நினைத்தேன். என் கண் மற்றும் வாயிலிருந்து இரத்தம் பீரிட்டு வந்தது. நான் சாகப் போகிறேன் என்ற மிகப்பெரிய துன்பம் என்னைச் சூழ்ந்ததை உணர்ந்தேன்”
இப்படியாக குண்டடி பட்ட மேரி கால்வின், பல மணிநேரப் போராட்டத்துக்குப் பிறகு, இராணுவத்திடம் தான் பத்திரிக்கையாளர் தான் என்று நிரூபித்து அடிப்படை மருத்துவ உதவியினைப் பெற்றதாகச் சொல்கிறார். எப்படி இராணுவம் ‘உங்கள் பக்கத்தில் இருந்து தான் முதலில் தாக்குதலைத் தொடர்ந்தார்கள்’ என்று ஒத்துக் கொள்ள முயற்சி செய்தது என்றும், ‘நீங்கள் தான் [இராணுவம்] தாக்குதல் நடத்தினீர்கள்; நான் இருந்த இடத்திலிருந்து [புலிகள்] எந்தவிதமான தாக்குதலையும் உங்கள் மீது நடத்தவில்லை’ என்று தீர்க்கமாகத் தான் கூறியதையும் பதிவு செய்கிறார்.
இதில் மேரி சென்ற காலம் என்பது புலிகள் இயக்கம் யுத்த நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த காலம். எனினும், ‘கைதிகளைக் கொண்டு செல்லாத’ புலிகள் என்று சந்தேகப்படுபவர்களைக் கொல்லத் துடித்த இராணுவமாக இலங்கை இராணுவம் செயல்பட்டது என்பதை உலகுக்கு உணர்த்தும் சாட்சியாகிப் போனார் மேரி கால்வின். மேலும், இராணுவத்தால் விசாரணை நடத்தப்பட்ட விதத்தை வைத்து, தான் கொல்லப்படப் போவதாக எண்ணியதாகவும் பதிவிடுகிறார். அமெரிக்கராகப் பிறந்ததற்குத் தான் முதன்முதலில் மகிழ்ச்சி அடைந்ததாகவும் பின்னாளில் பதிவு செய்கிறார். [அமெரிக்கர் என்பதாலேயே மேரிக்கான மருத்துவ சிகிச்சை உடனடியாக அளிக்கப்பட வேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்தது].
குண்டெறியப்பட்டதில் மேரியின் உடலில் கிட்டத்தட்ட மூன்று இடங்களில் ஷெல்கள் துளைத்திருந்தன. அதில் முக்கியமாக அவரது இடது கண். எவ்வளவோ முயன்றும் அவரது கண் பார்வையினை மருத்துவர்களால் சரிசெய்ய இயலவில்லை. பின்பு, இடது கண்ணில் கருப்பு நிற ஒட்டு அவரது அடையாளமாகவே ஆகிப் போனது.
“நான் ஏன் போர்க்களச் செய்தியைச் சேகரிக்கிறேன்? கடந்த வாரத்திலிருந்து [ஏப்ரல் 22, 2001-ல் எழுதுகிறார்] இந்த கேள்வி என்னிடம் அடிக்கடி கேட்கப்படுகிறது. இது பதில் சொல்வதற்குக் கடினமான கேள்வி. நான் போர்க்களச் செய்தியாளராக ஆக வேண்டும் என்று புறப்படவில்லை. என்னைப் பொருத்தவரை தீவிரமான சூழலில், தாங்க முடியாத நிலைக்குத் தள்ளப்படும் மனிதத்தைப் பற்றியே நான் எழுதுகிறேன். மேலும், அறிவிக்கப்படாத மற்றும் அறிவிக்கப்படும் போர்களில் என்ன நடக்கிறது என்பதை மக்களுக்கு சொல்வது என்பது மிகவும் முக்கியமான விடயம்.
போர் என்பது ஒரு பிரச்சாரம். உண்மைகள் இரு பக்கங்களிலும் மறைக்கப்படலாம். இலங்கை செல்லும் சர்வதேச செய்தியாளர்களிடம் இலங்கை அரசு விடுதலைப் புலிகள் இயக்கத்திற்காக அழைத்துச் சென்று விடுவார்கள் என்பதற்காகக் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் பெற்றோர்கள் அவர்களது குழந்தைகளைப் பள்ளிகளுக்கு அனுப்பாமல் வீடுகளில் வைத்திருப்பதாகச் சொல்கிறது. ஆனால், நான் நேரில் சென்ற போது, பெற்றோர்கள் அவர்களின் குழந்தைகள் பசியில் மயங்கி விழுந்து விடக்கூடாது என்பதாலும் பள்ளிகளுக்குத் தேவையான பொருள்களை வாங்கித் தருவதற்கான பணம் இல்லை என்பதாலுமே பள்ளிகளுக்கு அனுப்புவதில்லை என்று கூறினார்கள்” என்கிறார் மேரி கால்வின்.
மேரி கால்வின் இலங்கை இராணுவத்தால் தாக்கப்பட்ட பிறகு உலகம் முழுக்க இருந்த தமிழீழ மக்கள் அவர் விரைவாக உடல்நலம் பெற வேண்டியும், நடத்தப்பட்டு வரும் இனப்படுகொலைப் பற்றி செய்தி சேகரிக்க பல்வேறு ஆபத்துகளைக் கடந்து சென்றதற்கு நன்றி தெரிவித்தும் கடிதங்களை அனுப்பினர்.
ஏப்ரல் 16, 2001 நடந்த குண்டுவெடிப்பில் பலத்த காயம் பெற்ற பிறகு பல்வேறு நிலைகளில் மேரி சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருந்தது. பலகட்ட சிகிச்சைகளுக்குப் பிறகு ஜூலை 15, 2001 இல் மேரி எழுதுகிறார்.
“என்னிடம் இலங்கைக்கு சென்று வந்த பயணத்தில் ஏதேனும் உருப்படியாக இருந்ததா என்று கேட்கிறார்கள். ஒரு பிபிசி செய்தியாளர் சென்ற வாரம், ‘சிலர் நீங்கள் அங்கு சென்றது பைத்தியக்காரத்தனமான முடிவு என்பார்கள், மேரி’ என்றார். பைத்திக்காரத்தனமா? இது பதில் சொல்வதற்குச் சற்று கடினமான கேள்வி.
நிச்சயமாக, இலங்கையில் நடக்கும் போர் மறக்கப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 83,000 குடிமக்கள் 1983-க்குப் பிறகு இறந்திருக்கிறார்கள். அவர்களது குடும்பங்களைத் தவிர இது வெளியுலகத்திற்கு தெரியாது. புலிகள் என் மூலமாகச் சொன்ன பொதுசெய்தி கூட இலங்கை அரசினால் கவனிக்கப்படவில்லை. 18 வருடங்களாக அவர்கள் நடத்தி வந்த விடுதலைப் போராட்டத்தினை தன்னாட்சி உரிமை வழங்கினால் விடுவதாகத் தெரிவித்தனர். நான் அங்கிருந்து கிளம்பிய பின், இலங்கை அரசு கடைப்பிடிக்க மறுப்பதால் நான்கு மாதங்களாகப் புலிகள் கடைப்பிடித்து வந்த யுத்த நிறுத்தத்தை நிறுத்தி விட்டனர்.
மீண்டும் சண்டை தொடர்கிறது. ஆனால், என்னுடைய பயணம் ஒரு குறிப்பிட்ட அளவில் மதிப்புமிக்கது தான். நான் [இந்த பயணத்தில்] சோர்ந்தும் பயந்தும் போயிருக்கலாம். ஆனால், அங்கு இருந்த எல்லா காட்சிகளுமே என்னை பயமுறுத்தவில்லை. வன்னியில் ஒரு நகரில் அரசு முகவர் ஒருவர், புலிகளால் கட்டுப்படுத்தப்படும் பகுதியிலும் அஞ்சாமல் ஒரு தகவலைச் சொன்னார். அரசு முகவரான அவரே அரசுக்கு அஞ்சி அவர் பற்றிய தகவல்களை வெளியே சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.
அவரிடம் பல்வேறு தகவல்கள் இருந்தன. எனக்குக் கிடைத்த இரண்டு முரண்பட்ட கதைகளில் உண்மையினைக் கண்டறிய நான் விரும்பினேன். ஒன்று கொழும்புவில் இருக்கும் அரசு தமிழ் மக்களுக்கு உணவுப் பொருள்களை மாதாமாதம் தருவதாகச் சொன்னது. ஆனால், நான் கிராமங்களில் சந்தித்த மக்களோ என்னிடம் அவர்களுக்கு வெகு குறைவாகவே உணவுப் பொருள்கள் வந்து சேர்வதாகச் சொன்னார்கள். அங்கிருந்த பலர் மிக மோசமாக மெலிந்து காணப்பட்டார்கள்.
அந்த அரச முகவர் எனக்கு விளக்கினார்… அவரது மாவட்டத்தில் 36,400 குடும்பங்கள் (கிட்டத்தட்ட 1,40,000 பேர்) அரசு தரும் உணவு நிவாரணத்துக்குத் தகுதி பெறுவதாகத் தகவல் அனுப்பியிருக்கிறார். அரசு 8,900 குடும்பங்களுக்கான (கிட்டத்தட்ட 35,000 பேர்) பொருள்களை மட்டுமே அனுப்பியிருக்கிறது.
’எனவே, முதலில் வரும் பொருள்களை அப்படியே வைத்துக் கொண்டு ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கும் நான் தர வேண்டியதை பிரித்துக் கொடுப்பேன். இந்த கொடுந்துயரத்திற்கு எந்த ஒரு அடிப்படையும் இல்லை.’ என்றார்.
அங்கே நான் பேசுவதற்குத் தகுதியானவள் என்று எல்லோரும் உடனடியாக நம்பவில்லை. மல்லாவியைச் சேர்ந்த கத்தோலிக்க அருட்தந்தை சேவியர் கடும் கோவத்துடன் நிறைய கருத்துகளை வைத்திருந்தார். அவர் என்னிடம் ’தான் மேற்குலகின் மீதான நம்பிக்கையைக் கைவிட்டு விட்டதாகக் கூறினார். தமிழ் மக்கள் அனுபவித்து வரும் அவல நிலையைப் பற்றி யாரும் அக்கறை கொள்ளவில்லை எனும் போது, அவர் ஏன் என்னிடம் பேசி அவரது நேரத்தை வீணாக்க வேண்டும் என்று கேட்டார். ஆறு ஆண்டுகளில் வன்னிக்கு வந்த முதல் பத்திரிக்கையாளராக நான் இருந்தால் என்ன? மேற்குலக நாடுகளின் கேமராக்கள் ஒவ்வொரு ஆண்டும் ஆப்பிரிக்காவில் நடக்கும் பஞ்சங்களை மட்டுமே படம் பிடிக்கச் செல்கின்றன. அவர்கள் செரிபிய படுகொலையில் கொசோவோ படங்களைத் திருப்பி அனுப்பினர். ஆனால், இங்கே என்ன நடந்தது [செய்தார்கள்]?’ என்றார்.
அவர் அமைதியான பின்பு, எனக்கு இனிப்பு டீயினை வழங்கினார். அதன் பின் அவரது திருச்சபையினைப் பற்றி நாங்கள் பேசினோம். அவர் மக்கள் போரினால் சோர்வுற்றிருப்பதாகத் தெரிவித்தார். ஆனால், அது வேறொரு தன்மையைப் பெற்றிருந்தது.
’மக்கள் என்னிடம் அவர்கள் நிறைய கொடுமைகளை அனுபவித்து விட்டதாகச் சொல்கிறார்கள். ஆனால், முன்பு இருந்த அதே அவல நிலைக்குச் செல்லும் அளவுக்குப் போர் நிறுத்தத்துக்கு மதிப்பில்லை’ என்றார். ’மக்கள் வீடுகளை இழந்திருக்கிறார்கள்; நிலத்தினை; மகன்களை; மகள்களை இழந்திருக்கிறார்கள். போரினை முடிக்க ஒரே வழி தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய உரிமையினைப் பெறுவதுதான்’ என்றார்.
அரசின் முற்றுகை [தாக்குதல்] தமிழ் மக்களை விடுதலைப் புலிகளை நோக்கி நகர்த்தியிருக்கிறது. ‘நீங்கள் உங்கள் மேற்குலகில் அவர்களைத் தீவிரவாதிகள் என்று சொல்வீர்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால், இங்கு அவர்கள் மட்டும் தான் எங்களை, தமிழ் மக்களை வெட்டப்படுவதிலிருந்து பாதுகாக்கிறார்கள்’ என்றார்.
என்னுடைய அறுவை சிகிச்சைக்கு சில வாரங்களுக்குப் பின் காவி நிறத்தில் சுற்றப்பட்ட ஒரு கடிதம் வந்தது. எந்த மின்சார வசதியும், வாகன வசதியும், அஞ்சல் வசதி கூட இல்லாத வன்னியிலிருந்து பெரும் ஆபத்துக்கு நடுவே எப்படியோ அந்த கடிதத்தினை அனுப்பியிருந்தார் அருட்தந்தை சேவியர்.
’உங்களுக்கு ஏற்பட்டு இருக்கும் காயங்கள் குறித்து வருந்துகிறேன். நீங்கள் இங்கு [ஈழத்தில்] துணிச்சலான மற்றும் நேர்மையான நபராக நினைவில் கொள்ளப்படுகிறீர்கள்’ என்று எழுதியிருந்தார். அந்த வார்த்தைகள் எனக்கு மிகவும் முக்கியமானவையாக இருந்தன.
நான் குணமடைந்த பிறகு இலங்கையிலிருந்து எனக்கு ஆச்சரியமளிக்கும் அளவிலான அஞ்சல்கள் வந்தடைந்தன. தமிழ் மக்களிடம் இருந்து வந்த பெரும்பாலான செய்திகள் அனுதாபங்களைத் தாங்கியிருந்தது.
அதில் எந்த செய்தியுமே, அவர்களது போராட்டத்தை நான் ஆதரிப்பதாக நினைத்து எழுதப்படவில்லை. அவர்களது தாய்மண்ணைப் பற்றிப் பல வருடங்களுக்குப் பிறகு முதல் செய்தியினைப் பதிவு செய்ததற்காக மனதாரப் பாராட்டி நன்றி தெரிவித்து எழுதியிருந்தனர்.
சிங்களர்களிடம் இருந்து வந்த அஞ்சல்கள் இரண்டு விதமாக இருந்தன. கொலும்புவில் இருந்து எழுதிய ஒருவர், ‘நான் தமிழர் இல்லை. ஆனால், உங்களைப் போன்று நிறைய பத்திரிக்கையாளர்கள் இங்கு நடக்கும் உண்மையினைப் பற்றி உங்களைப் போலவே வெளியே சொன்னால் இந்தப் போர் 24 மணிநேரத்தில் முடிந்து விடும்’ என்று எழுதியிருந்தார்.
மற்ற சிங்களர்களிடம் இருந்து வந்த அஞ்சல்கள் அவ்வளவு அன்பானதாக இல்லை.
எனவே, நான் செய்வது பைத்தியக்காரத்தனமா? என்னைப் பொருத்தவரையில் பைத்தியக்காரத்தனம் என்பது நேற்று நடந்த இரவு விருந்து பற்றியான செய்தியினை எழுதுவதுதான். அதற்குப் பதிலாக நான் மேசை வேலைக்கும், குண்டடிபடுவதற்கும் இடைப்பட்ட தளத்திலேயே வேலை செய்வேன்.
போர்கள் இது போன்று பத்திரிக்கையாளர்களால் சொல்லப்படக் கூடாது அல்லது அவை அரசின் செய்தியாளர் சந்திப்பின் மூலமாகத்தான் சொல்லப்பட வேண்டும் என்று நம்பும் நபராக நீங்கள் இருந்தால் நான் செய்வதை பைத்தியக்காரத்தனம் என்று நீங்கள் நம்பலாம். போர்களில் என்ன நடக்கிறது, அங்கு நடக்கும் அடக்குமுறைகள், வலி, உயிரிழப்புகள் பற்றி பத்திரிக்கையாளர்கள் பேசினால் நிச்சயம் அபாயங்களை சந்தித்துத்தான் ஆக வேண்டும்.
என்னுடைய பங்கிற்கு, நான் அடுத்த போரினைப் பற்றியான செய்தியினை வெளியிடும்போது, நான் என் வாழ்க்கையில் எப்போதும் சந்திக்கவிருக்காத துன்பங்களைச் சகித்துக் கொண்டு அந்த இடங்களில் இருக்கும் மக்களின் அமைதியான துணிச்சலைக் கண்டு ஆச்சரியப்பட்டுப் போவேன். அவர்கள் அவர்கள் இருக்கும் இடத்திலேயே தான் இருக்க வேண்டும். ஆனால், எனக்கு வீடு என்ற ஒன்று லண்டனில் இருக்கிறது. அந்த செய்தியினை முடித்துவிட்டு நான் எனது வீட்டிற்குச் செல்லலாம்.” என்று எழுதுகிறார் மேரி கால்வின்.
மேரியின் மீது தாக்குதல் நடந்து சில நாள்களுக்குப் பின், சிங்கள அரசின் தகவல் இயக்குநர் ஆரிய ரூபசிங்கே, “நாங்கள் பத்திரிக்கையாளர்களைப் போர் நடக்கும் பகுதிகளுக்கு அனுமதிக்கிறோம். ஆனால், அவர்கள் உயிருக்கு அவர்களே பொறுப்பு” என்று எச்சரிக்கை விடுக்கும் வகையிலே பேட்டி அளித்தார்.
பல வருடங்களுக்குப் பிறகு சர்வதேச சமூகத்திற்கு ஈழத்தில் இலங்கை அரசு நடத்தி வரும் இனப்படுகொலையினை பற்றியான செய்தியினைச் சொன்னது மட்டுமல்லாமல், அதன் சாட்சி குறியீட்டையும் இடது கண்ணில் தாங்கி வந்த மேரி கால்வின், 2009ல் இன்னுமொரு படுகொலையின் சாட்சியாகினார். அது தான் வெள்ளைக் கொடி சம்பவம்.
வெள்ளைக் கொடி சம்பவம்
(மேரி கால்வின் வெள்ளைக் கொடி சம்பவம் பற்றி பிபிசிக்கு அளித்த பேட்டித் தொகுப்பிலிருந்து)
மே 17 (2009) ஆம் தேதி மேரி கால்வினுக்கு ஒரு தொலைப்பேசி அழைப்பு வந்தது. அது விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பாலசிங்கம் நடேசன் அவர்களிடமிருந்து வந்தது.
அந்த அழைப்பில் அரசியல் துறையினைச் சேர்ந்தவர்கள் அரசியல் கைதிகளாகச் சரணடைய முற்சிப்பதாகவும், ஆனால், யார் இலங்கை இராணுவத்தைத் தொடர்பு கொள்ள முயற்சி செய்தாலும் அவர்கள் சுடப்படுவதாகவும் நடேசன் கூறியதாக மேரி கால்வின் கூறுகிறார்.
அவர் அதன்பின் ஐநா பொதுச் செயலாளரின் தலைமைப் பணியாளர் விஜய் நம்பியாருக்கு தொலைப்பேசியில் அழைப்பு விடுக்க, அவர் இலங்கை அதிபரிடம் பேசி விட்டதாகவும் அவர் திரு. நடேசன் உள்ளிட்டவர்கள் இலங்கை இராணுவத்திடம் சரணடையும் போது பாதுகாப்பாக நடத்தப்படுவார்கள் என்றும் கால்வினிடம் உறுதியளித்ததாகச் சொல்கிறார் கால்வின்.
“சர்வதேச சட்டத்தின் கீழ் அவர்கள் நடத்தப்படுவார்கள்” என்ற வார்த்தைகளை விஜய் நம்பியார் தன்னிடம் கூறியதை மேற்கோள் காட்டுகிறார்.
மேரியிடம் நம்பியார் அங்கு மூன்றாம் தரப்பு இருக்க வேண்டிய எந்த ஒரு அவசியமும் இல்லை என்றிருக்கிறார்.
இலங்கை அதிபர் நம்பியாரிடம் வெள்ளைக் கொடியினை உயரே பறக்கவிட்டு நடேசன் வரும்போது அவர்கள் சரணடைய அனுமதிக்கப் படுவார்கள் என்ற உறுதியான நம்பிக்கையினை வழங்கியிருந்ததாக நம்பியார் மேரியிடம் தெரிவித்திருக்கிறார்.
இலங்கை அதிபர், பாதுகாப்புச் செயலாளர் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறைப் பொறுப்பாளர் ஆகியோரிடம் நேரடித் தொடர்பிலிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த சந்திரநேரு சந்திரகாந்தன் இந்த சரணடைவு நிகழ்வுக்குச் சாட்சியாக இருக்க முன்வந்திருக்கிறார். ஆனால், அதன்பின் அவருக்கு இலங்கை அரசினால் அளிக்கப்பட்ட உறுதியளிப்பின் பெயரில் அவர் அங்கு செல்லவில்லை.
அந்த நிகழ்வு நடைபெறும் போது அதிகாலை ஒரு மணி இருக்கும் என்று மேரி நினைவு கூர்கிறார்.
மேரியைப் பொருத்தவரையில் ஐநா பொதுச் செயலாளரின் தலைமை பணியாளர் விஜய் நம்பியாருக்கு இலங்கை அதிபர் ராஜபக்ஷே உறுதியளித்த சில நிமிடங்களுக்குப் பின் அந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் தான் நடேசனிடம் பேசிய கடைசியாகப் பேசியவர்.
மே 18, 2009- அதிகாலை 1:06க்கு நடந்த அந்த தொலைப்பேசி அழைப்பில் இலங்கை ராணுவத்தை நோக்கி நடந்து வருவதாகவும், வெள்ளைக் கொடியை எவ்வளவு உயரத்தில் பிடிக்க முடியுமோ அவ்வளவு உயரத்தில் பிடிப்பதாக நடேசன் சந்திரநேருவிடம் கூறியதாக, சந்திரநேரு மேரியிடம் கூறியிருக்கிறார். அதன் பிறகு எங்களுக்கு வந்த தகவலானது அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டார்கள் என்ற இலங்கை அரசின் அறிவிப்பே, என்கிறார் மேரி.
(அவர்கள் அனைவரும் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டதற்கான சாட்சிகளும் ஆதாரங்களும் பல்வேறு ஊடகங்களில் கிடைத்தன)
“நான் எதை மிக மிக ஆழமான கவலைக்குரிய விஷயமாகப் பார்க்கிறேன் என்றால், சரணடைவதற்கான பேச்சுவார்த்தைகள் சிங்கள அரசாங்கத்திடம் [பல நாள்களாக] நடப்பது பிரிட்டன், அமெரிக்கா, ஐநா சபை, கொழும்புவிலிருந்த ஐநா பொதுச்செயலாளரின் தலைமை பணியாளர் நம்பியார் என்று அனைவருக்குமே தெரியும்” என்று நினைவு கூர்கிறார் மேரி கால்வின்.
“அங்கு ஒரு மூன்றாம் தரப்பு இருந்திருந்தால், சரியாக இருந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன். ஐநா பொதுச்செயலாளரின் தலைமைப் பணியாளர் பொறுப்பினைச் சேர்ந்த நம்பியார் அங்கு சரணடைவதைப் பார்க்க சாட்சியாகச் சென்றிருந்தால்…” என்று தன் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் மேரி.
விடுதலைப் புலிகள் சமாதான செயலகத்தைச் சேர்ந்த சீவரத்தினம் புலித்தேவனும் நடேசனுடன் அரசியல் கைதியாக சரணடையச் சென்ற கிட்டத்தட்ட 12 பேரில் ஒருவர். அனைவருமே இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்டனர். மேரி கால்வின் என்கிற ஒரு சர்வதேசப் பத்திரிக்கையாளர், ஐநா பொதுச் செயலாளரின் தலைமைப் பணியாளர், மேரியின் கூற்றுப்படி அமெரிக்க-பிரிட்டன் நாடுகளுக்குத் தெரிந்தே நடந்த சர்வதேச சமூகம் அறிந்திருந்த அதுவும் இலங்கை அரசு பாதுகாப்பாக நடத்தப்படுவார்கள் என்று உறுதிப்படுத்திய அரசியல் சரணடைவில் வெள்ளைக்கொடி இலங்கை அரசின் இரத்த வெறியினை உலகுக்கு அம்பலப்படுத்தியது. உலக நாடுகள் இணைந்து நடத்திய இனப்படுகொலையைக் காட்டிய முக்கிய நிகழ்வாக வெள்ளைக் கொடிச் சம்பவம் மாறியது.
மேரி மீண்டுமொரு முறை சர்வதேச சமூகத்துக்குத் தமிழீழ இனப்படுகொலையின் முக்கிய சாட்சியானார்!
2012 ஆம் ஆண்டு சிரியாவில் போர் என்ற பெயரில் மக்கள் மீது நடத்தப்பட்ட இனஅழிப்பினைப் பற்றி செய்தி சேகரிக்கச் சென்ற போது குண்டு வீச்சில் உயிரிழந்தார்.
A Private War திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். 2003 ஈராக் போரினைப் பற்றி செய்தி சேகரிக்க சென்றிருப்பார்கள். ஒரு இளம் பத்திரிக்கையாளர் அமெரிக்கப் படையும் கூட்டு சேர்ந்து நடத்தும் போரினைப் பற்றியான செய்தியினை எப்படிச் சொல்வது என்பதுபோல் ஒரு கேள்வியினைக் கேட்பார். அதற்குத்தான் மேரி, போரினை நடத்துவது யார் என்பது ஒரு செய்தியாளருக்குத் தேவையில்லாதது; அதில் ஒடுக்குமுறைகளை சந்திக்கும் மக்களைப் பற்றியான செய்தியினை வெளியிடுவதே செய்தியாளருக்கான வேலை என்பதாக ஒரு பதிலினைச் சொல்வார்.
கால்வினும் அப்படியான ஒரு செய்தியாளராகவே இருந்தார். அவர் அமெரிக்கராக இருந்தாலும், அவரது நாடு ஒரு போரினை நடத்துகிறது என்பதற்காகவே அந்தப் போரினைப் பற்றிய செய்தியினை எழுதலாமா என்று அவர் யோசிக்கவில்லை. வெள்ளைக் கொடி சம்பவத்திலும், அமெரிக்காவும், பிரிட்டனும், ஐநா வும் இந்த சரணடைவு பேச்சுவார்த்தையை அறிந்தே இருந்தன என்பதை மீண்டும் மீண்டும் குறிப்பிட்டார்.
அநியாயம் செய்யும் நாடுகளுக்கும், போரை முதலீடாக்கும் முதலாளிகளுக்கும் கைக்கூலிகளாய் பணிபுரியும் பத்திரிக்கையாளருக்கு இடையில் பாதிக்கப்பட்ட மக்களின் வலியைப் பதிவு செய்த பத்திரிக்கையாளராக மேரி கால்வினின் தார்மீக அறம், துணிச்சல், நேர்மை ஆகியவை ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விடுதலை வெளிச்சம். இவரின் இழப்பு ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் கூடுதலாகத் தமிழீழ மக்களுக்கும் மாபெரும் இழப்பாகும்.
வெள்ளைக் கொடிச் சம்பவங்கள்
நடேசன் உள்ளிட்ட அரசியல் துறைத் தலைவர்கள் வெள்ளைக்கொடி தாங்கி அரசியல் சரணடைவுக்குச் சென்றபோது பேரினவாத இலங்கை அரசினால் கொல்லப்பட்டது பெரும்பாலும் ’வெள்ளைக் கொடிச் சம்பவம்’ என்று அறியப்படுகிறது. அதேபோல பல வெள்ளைக் கொடிச் சம்பவங்கள் இறுதி போர்க்காலத்தில் நடைபெற்றன. இந்த வெள்ளைக்கொடி சம்பவங்கள் உலக நாடுகளுக்கும் ஐநாவிற்கும் தெரிந்தேதான் நடைபெற்றன.
மே 15-18 வரை இடைப்பட்ட காலத்தில் பல்வேறு விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் தளபதிகள் இலங்கை இராணுவத்திடம் வெள்ளைக் கொடியுடன் அரசியல் கைதிகளாகச் சரணடையச் சென்றனர். பலர் அவர்களது குடும்பங்களுடன் சென்றனர். அதில் பலர் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. பலர் காணாமல் போனவர்களாக ஆக்கப்பட்டார்கள்.
இதில் அப்போது இலங்கை அதிபராக இருந்த மகிந்த ராஜபக்சேவினுடைய சகோதரன் பசில் ராஜபக்ஷேதான் சரணடைவுகளுடைய பேச்சுவார்த்தையை முன்னின்று நடத்தினார். பாதுகாப்பான சரணடைவுக்கு மஹிந்திர ராஜபக்ஷேவும் பாதுகாப்பு செயலாளரான கோத்தபய ராஜபக்ஷேவும் ஒப்புதல் அளித்தனர். வெளியுறவு செயலாளர் பலித்த கொஹன்னா சரணடைய வருபவர்கள் எந்த மாதிரியான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதான செய்திகளைப் பகிர்வதில் முக்கிய பங்காற்றினார். இரணுவத்தின் 58வது பிரிவினை தலைமை தாங்கிய ஷாவேந்திர சில்வா சரணடைந்த புலிகளின் அரசியல் தலைவர்களை ஏற்றுக் கொள்ளும் பணியினைச் செய்தார். இதில் கொஹன்னா பின்பு ஐநாவுக்கான நிரந்தர பிரதிநிதியாகவும், சில்வா கொஹன்னாவின் துணை பிரதிநிதியாகவும் உயர்வு பெற்றனர். தற்போது வரை சில்வாவிற்கு பல்வேறு இராணுவ பதவி உயர்வுகள் வழங்கப் பட்டிருக்கின்றன.
கடைசியாகப் பார்த்த சாட்சிகள், இலங்கை அரசு வெளியிட்ட புகைப்படங்கள், வெவ்வேறு பத்திரிக்கைகளில் வெளிவந்த புகைப்படங்களைக் கொண்டு இறுதிப் போர் நாள்களில் சரணடைந்தவர்களாகக் கிட்டத்தட்ட 280 பேரின் பட்டியலினை 2018 ஆம் ஆண்டு The International Truth and Justice Project அமைப்பு வெளியிட்டது.
இதில் இலங்கை இராணுவத்தால் பாலியல் வன்முறை செய்யப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்ட இசைப்பிரியா, கொல்லப்பட்ட சிறுவன் பாலச்சந்திரன், காணாமலடிக்கப்பட்ட கவிஞர் புதுவை இரத்தினதுரையும் அடங்குவர்.