கொரோனா தொற்றுக்கான தீர்வைத் தேடி…

ஹாலிவுட் திரைப்படங்களில் வரும் படக்காட்சியைப் போல இன்று நம் ஊர் தெருக்கள் காட்சி அளிக்கின்றன. “ஸாம்பி” படங்களை எல்லாம் அருவருப்பான கற்பனைகள் என்று நினைத்த நாட்கள் போய் “அப்படியும் ஒரு நாள் வந்திடுமோ?!” என்ற அச்சம் ஆழ்மனதில் எட்டிப் பார்க்கிறது.

இந்தத் தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் தடுப்பு மருந்துகளை ஆராய்ந்து வருவதை அறிவோம். ஆனால், அது நிரந்தரத் தீர்வாகுமா? இன்று போய் நாளை வேறாக வந்தாலும் வரலாம் என்கிறார்களே! நிரந்தரத் தீர்வு தான் என்ன? இந்தக் கேள்விகளை ஆராய்வதே இந்தக் கட்டுரை.

31.12.2019 அன்று வூகான் மாநகராட்சி சுகாதாரத் துறை முதன்முதலாக ஒரு புது ரக சுவாசத் தொற்று கண்டறியப் பட்டுள்ளதாகச் செய்தி வெளியிட்டது. அடுத்த 30 நாள்களில், 30.1.2020 அன்று உலக சுகாதார அமைப்பு தனது அறிக்கையில் இந்த நோய்த் தொற்று 18 நாடுகளுக்குப் பரவி மொத்தம் 7818 பேர் பாதிக்கப் பட்டுள்ளதாகக் குறிப்பிட்டது.

தற்போது, உலகின் பாதிக்கும் மேலான மக்கள், வீட்டில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். வளர்ச்சி பெற்ற நாடுகளின் மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. “இறந்தவர்களைப் புதைக்க எங்களிடம் இடமில்லை” என்று இத்தாலி பிரதமர் கண்கலங்கியதைப் பார்த்தோம். இறந்தவர்களைப் புதைக்க இடம் தேடி வருவதாக நியூயார்க் (அமெரிக்க மாகாணம்) ஆளுநர் கூறியதைக் கேட்டோம். இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 37 நாள்கள் கழிந்தும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் சரியான சோதனை முறையைக் கண்டறிந்து மக்களைச் சோதனை செய்யும் திறனற்று உள்ளதை நேரடியாகக் கண்டு வருகிறோம். கொரோனா தொற்றுநோய் உலக நாடுகளின் உண்மை நிலவரத்தை அம்பலமாக்கியுள்ளது. தற்போதைய தொற்று குழந்தைகளைப் பெரும்பாலும் பாதிப்பதில்லை என்பது ஓர் ஆறுதலான செய்தி.

28.4.2020 வரை உலகளவில் 30,79,972 பேர் இந்த COVID-19 (கோவிட்-19) கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 9,28,995 பேர் குணமாகியுள்ளனர். 2,12,265 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது, உலகளவில் நோய்த்தொற்று ஏற்பட்டதில் இறப்பு விகிதம் சுமார் 7% ஆக உள்ளது. அதேநேரம், இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் 3% ஆக இருக்கிறது. தமிழ்நாடு அளவில் இறப்பு விகிதம் 1.2% ஆக மட்டுமே உள்ளது.

ஒப்பீட்டளவில், H5N1 பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு விகிதம் 60% ஆகவுள்ளது. பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் 50% ஆகவுள்ளது. 2017-ல் பரவி வந்த பறவைக் காய்ச்சல் நின்று போனதின் காரணத்தை இதுவரை யாராலும் கணிக்க முடியவில்லை.

ஒருவேளை, H5N1 பறவைக் காய்ச்சல் நோய் கோவிட்-19 அளவிற்கு எளிமையாகப் பரவும் தொற்றாக மாறி, மீண்டும் தாக்கினால் மனித சமூகம் நினைத்துப் பார்க்க முடியாத இழப்பைச் சந்திக்க நேரிடும். அது, மீண்டும் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து அமெரிக்காவின் தொற்று நோய் கட்டுப்பாட்டு வாரியத்தின் மருத்துவர் நான்சி காக்ஸ் “இந்த கதை எங்கு, எப்படி முடியும் என்று யாருக்கும் தெரியாது” என்று கருத்து தெரிவித்தார்.

கோவிட்-19 வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் விபரம். *28.4.2020 நிலவரம்.

நாடு பாதிக்கப்பட்டவர் இறந்தவர் இறப்பு விகிதம்
இத்தாலி 1,99,414 26,977 13.5%
ஸ்பெயின் 2,32,128 23,822 10.3%
இங்கிலாந்து 1,57,149 21,092 13.4%
அமெரிக்கா 10,10,507 56,803 5.6%
இந்தியா 29,451 939 3.2%

இந்தியாவின் குறைந்த இறப்பு விகிதம் உலகளவில் விவாதமாகியுள்ளது. இதுவரை தெளிவான காரணம் அறியப்படவில்லை.

இந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப் பட்டவர்களில் 80% பேருக்கு அறிகுறிகள் தென்படுவதில்லை. மற்ற நாடுகளில் தொற்று அறிகுறி தென்படாதவர் 25% – 50% வரை உள்ளனர். மேலும், இத்தாலி, ஸ்பெயின், இங்கிலாந்து, அமெரிக்கா தங்களது ஒவ்வொரு 10 லட்சம் மக்கள் தொகைக்கும் முறையே 29600, 28779, 10605, 17211 சோதனைகளை செய்துள்ளன. இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு வெறும் 519 சோதனைகளே செய்யப்பட்டுள்ளது. மிகக் குறைந்தளவு சோதனைகள் மற்றும் 80% நோய் அறிகுறி இல்லாதது இணைந்து இந்தியாவின் பெரும்பான்மையான கொரோனா பாதிப்புகள் கண்டறியப்படாமலே போகின்றன. இதன் விளைவாக, நோய்த்தொற்று அறிகுறி இல்லாமல் இறந்து போவோரின் எண்ணிக்கை அரசின் கணக்கில் வராமல் போகும் வாய்ப்புகள் மிக அதிகம்.

இந்தியாவின் மிகக் குறைவான நோய்த்தொற்று எண்ணிக்கை மற்றும் இறப்பு விகிதத்திற்கு இது காரணமாக இருக்கலாம்.

நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை 12 மேற்குலகு நாடுகளின் இறப்பு விகிதத்தை ஆய்வு செய்ததில் மார்ச் மாதத்தில் மட்டும் கூடுதலாக 40,000 பேர் இறந்திருக்கக் கூடும் என்கிறது. பினான்சியல் டைம்ஸ் பத்திரிகை, 14 நாடுகளின் கொரோனா இறப்பு எண்ணிக்கை 60% அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளது. பேரிடர் காலங்களில் இப்படி கணக்கில் முரண்பாடுகள் வருவது இயல்பு தான் என்கின்றனர். இதில் இந்தியா இடம் பெறவில்லை. வளர்ந்த நாடுகளின் இறப்பு எண்ணிக்கையில் இவ்வளவு வித்தியாசம் வர வாய்ப்பிருக்கும் போது மக்கள் அடர்த்தி மிகுந்த நகரங்களையும், பரந்து விரிந்த கிராமங்களையும் கொண்ட இந்தியா அறிவித்துள்ள எண்ணிக்கைகளை நாம் ஐயத்துடனேயே அணுக வேண்டியுள்ளது.

கொரோனா வைரஸ் வரலாறு காணாத சமூக-பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் வேளையில் இதுவரை கோவிட்-19 வைரஸ் எந்த விலங்கிடமிருந்து மனிதருக்குத் ‘தாவியது’ என்பது சர்ச்சையாகவே நீடிக்கிறது.

2002-ல் சார்ஸ் (SARS) வைரசானது வவ்வாலில் இருந்து இடைநிலை விலங்கான சைவட் பூனை வழியாக மனிதர்களை அடைந்தது. இதேபோல, கோவிட் -19 வைரஸ் வவ்வாலில் இருந்து இடைநிலை விலங்கான எறும்புண்ணி மூலமாக மனிதனை வந்தடைந்து இருக்கலாம் என்று அறிஞர்கள் சந்தேகிக்கின்றனர். சில ஆராய்ச்சியாளர்கள் இதை ஏற்க மறுக்கின்றனர்.

எறும்புண்ணி

வவ்வால்களில் உள்ள வைரஸ்களைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் நோயெதிர்ப்பு நிபுணர் ஆஸ்திரேலியாவின் மிச்செல் பேக்கர், “இந்த கோவிட்-19 வைரஸ் அநேகமாக வவ்வால்களில் இருந்துதான் வந்திருக்கக் கூடும். வூகான் இறைச்சி சந்தையில் பல்வேறு விலங்குகள் ஒன்றோடொன்றாக இருந்திருக்கும் வாய்ப்புகள் அதிகமுள்ளது. இருந்தபோதிலும், இன்னும் வைரசின் தோற்றம் குறித்துத் தெளிவான தகவல் இல்லை” என்கிறார். இந்த விவகாரத்தில் மேற்குலகு நாடுகள், “வூகான் இறைச்சி கசாப்பு சந்தை (wet markets) போன்றவை தான் விலங்குகளிடம் இருந்து தொற்றுநோய்களைப் பரப்புகின்றன. ஆகையால், இது போன்ற இறைச்சி சந்தைகளைத் தடை செய்ய வேண்டும்” என்று அறிவித்தன.

வைரஸின் தோற்றம் குறித்து உறுதியான தகவல் கண்டறியப்படாத வரை நோய்த் தடுப்பு மருந்துகள் தோல்வி அடைவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஆராய்ச்சியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

சிகிச்சை வழிமுறைகள்

உலகெங்கும் 185 நாடுகளில் பரவியுள்ள கோவிட்-19 வைரஸ் ஏற்படுத்தி வரும் மனித உயிரிழப்புகளும், தொற்று தடுப்பு நடவடிக்கையால் ஏற்படும் பொருளாதார இழப்புகளும் மனிதகுல வரலாறு இதற்குமுன் கண்டதில்லை.

ஏழை நாடுகளை விடப் பணக்கார நாடுகளில் உயிரிழப்புகள் மிக அதிகமாக உள்ளது. இதற்கு, “கடந்த நூற்றாண்டில் நோய்த்தொற்றை எதிர்கொள்ளாத சமூகம், நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாடுள்ள சமூகம், முதியோர்களால் நிரம்பிய சமூகம், தனியார் மயமான சுகாதாரத் துறை” என்று பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. பணமும் இராணுவ பலமும் வைத்து எதையும் சாதிக்கலாம் என்று நாட்டாமை செய்த ஏகாதிபத்திய அமெரிக்காவை கையுறை, முகக்கவசம் வேண்டி, கையேந்த வைத்துவிட்டது கோவிட்-19 என்னும் ஒரு செல் நுண்ணுயிர் கிருமி.

நோய்த்தடுப்பு மருந்து

தங்கள் சமூகத்தையும், பொருளாதாரத்தையும், எல்லாவற்றையும்விட தங்கள் சர்வதேச மேலாண்மையையும் நிலை நிறுத்த பணக்கார அரசுகள் கோவிட்-19 தொற்றுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்க, பல இலட்சம் கோடிகளைக் கொட்டி ஆராய்ச்சி செய்து வருகின்றன. தற்போது, பல்வேறு ஆராய்ச்சிக் கட்டங்களில் உள்ள இந்த மருந்துகளால் இந்த நோயைத் தடுத்து விடலாம் என்று இந்த அரசுகள் நினைத்தாலும் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் வேறு பல சிக்கல்களை முன் வைக்கின்றனர்.

சீனாவின் கோவிட்-19 வைரஸ் மரபணுப் பிறழ்வால் திரிபு (mutated strain) அடைந்து சிறு மாற்றத்துடன் இத்தாலியில் பரவியுள்ளது. அமெரிக்காவிலும், இந்தியாவிலும் வெவ்வேறு மரபணுத் திரிபுகள் பரவியுள்ளது. அதாவது, வைரசின் மரபணு சிறு வேறுபாடுகளைக் கொண்டுள்ளன. “இதுவரை நடைபெற்றுள்ள கோவிட்-19 மரபணுப் பிறழ்வால் வைரசின் நோய்த்தொற்றின் வீரியமோ அல்லது அதன் உயிர் கொல்லும் தீவிரத் தன்மையோ மாற்றமடையவில்லை” என்று உலக சுகாதாரக் கழகத்தின் மருத்துவர் மரியா வான் கெர்கோவே கூறியுள்ளார். ஆதலால், நோய்த் தடுப்பு மருந்துகள் ஆரம்பத்தில் சரியாகப் பணி செய்யக்கூடும். ஒருவேளை, மனித உடலில் நோய்த் தடுப்பு மருந்தைச் செலுத்தியபின் அதை எதிர்கொள்ளும் வேளையில் கோவிட்-19 வைரஸ் தன்னை தற்காத்துக் கொள்ள மரபணு அடிப்படைகளை மாற்றும் மரபணுப் பிறழ்வுகளை நிகழ்த்தலாம். இது நடைபெறும் பட்சத்தில் நோய்த் தடுப்பு மருந்து செயலிழந்து போக வாய்ப்புள்ளது. இவையனைத்தும், தடுப்பு மருந்து சோதனைகளின் போதுதான் தெரிய வருமென மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

உலகின் இரண்டாம் மிகப் பெரிய பணக்காரர் பில் கேட்ஸ் நடத்தி வரும் பணக்காரத் தொண்டு நிறுவனம் கொரோனா நோய்த்தடுப்பு மருந்து ஆராய்ச்சிக்கு சுமார் 250 மில்லியன் டாலர் வழங்கியுள்ளது. “கொரோனா சர்வதேசத் தொற்றுநோய் என்பதால் இந்த பூமியில் வாழும் 700 கோடி மக்களும் கோவிட்-19 தடுப்பூசி போடுவது அவசியாமகிறது. தேவை ஏற்பட்டால் பல முறை போட வேண்டிய அவசியம் எழலாம். மேலும், கொரோனா தடுப்பூசி போடாதவர்களை பொது சமூகத்துடன் சேரவிடாமல் தனிமைப்படுத்துவதன் மூலமே இந்நோயை கட்டுப்படுத்த முடியும்” என்று பில் கேட்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

அதாவது, தடுப்பூசி போடாதவர்களை முத்திரை குத்தி சமூகத் தனிமை படுத்த வேண்டும் என்பது கேட்ஸின் முதலாளித்துவ கருத்து. அரசுக்கு வரி கட்ட மூக்கால் அழும் பன்னாட்டு முதலாளிகளா பொது சமூகத்தின் பாதிப்புகளைக் கண்டு மனம் வருந்துவார்கள்? இல்லை! இனிமேல் வரும் தொற்று நோய்கள் ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்தையும் பாதிக்கும் வாய்ப்புகள் அதிகம். ஒட்டுமொத்த மனித இனமும், சுமார் 700 கோடி மக்கள் சந்தை, பல முறை தடுப்பு மருந்து வாங்கும் என்பதை “இரத்தவாடை பிடித்த ஓநாய்களாக” உணர்ந்த பணக்கார முதலாளிகள் இந்த “தொற்று நோய் தடுப்பு மருந்து” துறையில் அதிகமாக முதலீடு செய்து வருகின்றனர். இந்த முதலாளித்துவ லாப வெறியானது தடுப்பூசி போட வசதியில்லாத ஏழை மக்களைப் பலியாக்கும்.

தடுப்பூசி ஆராய்ச்சி, உற்பத்தி மற்றும் விநியோகம் அனைத்தும் பன்னாட்டு முதலாளித்துவத்தின் கோரப் பிடியில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும். கோவிட்-19 தொற்று நோயை குணமாக்கக்கூடிய உயிர் காக்கும் நோய் தடுப்பு மருந்துகளை, பெனிசிலின் (penicillin vaccine) போன்று, பொதுவுடைமையாக்க வேண்டும். சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் எளிமையாக கிடைக்கும்படி செய்திட வேண்டும்.

பொதுவாக, நோய்த்தடுப்பு மருந்துகள் மனித உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை தட்டியெழுப்பி தயார்படுத்த மட்டுமேயன்றி, இந்த மருந்துகள் நேரடியாக நோய்க் கிருமிகளுடன் சண்டையிடுவதில்லை. இப்படி வலுவூட்டப்பட்ட மனித உடலின் நோயெதிர்ப்பு சக்தி தான் தொற்று நோய் கிருமிகளுடன் நேரடியாக சண்டையிட்டு நோய்க் கிருமியை வீழ்த்த வேண்டும்.

மந்தை நோயெதிர்ப்பு சக்தி 

இன்று பல்வேறு ஆய்வுக் கட்டங்களில் உள்ள தடுப்பு மருந்து, மக்கள் பயன்பாட்டிற்கு வர அடுத்த 6 முதல் 18 மாதங்கள் வரை ஆகலாம் என்று செய்திகள் வெளியாகின்றன. இதற்கிடையே, சீனா, சிங்கப்பூர், தென் கொரியா போன்ற நாடுகளில் கொரோனா தொற்று ஏற்பட்டு குணமாகியவர்களுக்கு மீண்டும் நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதாகக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. முறையான தடுப்பு மருந்து பயன்பாட்டிற்கு வரும் வரையில் தற்போதைய ஊரடங்கைத் தொடர்ந்து நீட்டிப்பதே சரியான முடிவாக விவாதிக்கப்படுகிறது.

ஏற்கனவே 6 வாரங்கள் ஊரடங்கால் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தினக்கூலிகளும் சிறு- நடுத்தர தொழில் மற்றும் வணிகர்களும் வருமானம் இல்லாமல் போதுமான உணவுக்கு வழியில்லாமல் முற்றிலும் முடங்கிப் போயுள்ளனர். அடுத்து வரும் மாதங்களில் ஊரடங்கால் காப்பாற்றப்படும் உயிர்களைவிட பசியால் போகும் உயிர்கள் அதிகரிக்கும்.

பல நூற்றாண்டுகளாகத் தொற்றுநோய்கள் மனிதக் குலத்தைத் தாக்கி வந்துள்ளன. தொற்று நோயால் தாக்கப்பட்ட சமூகம் நோய்க்கிருமியுடன் போராடி தனக்கான ‘மந்தை நோயெதிர்ப்பு சக்தி’யை (herd immunity) வளர்த்திடும் வரை அந்த சமூகம் தொற்றுநோயின் தாக்குதலுக்கு ஆட்பட்டிருக்கும். நோய்த்தொற்றின் தீவிரத் தன்மையைப் பொருத்து உயிரிழப்புகளும் இருக்கும்.

தொற்றுநோயின் வீரியத்தைப் பொருத்து ஒரு சமூகம் 70-90% மக்கள் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுக் குணமடைந்தால் மட்டுமே ‘மந்தை நோயெதிர்ப்பு சக்தி’ உருவாகும். ஒரு சமூகத்தின் 70% மக்கள் ‘மந்தை நோயெதிர்ப்பு சக்தி’ பெற்றால், 10ல் 7 பேர் நோய்க் கிருமியின் பாதிப்பு இல்லாமல் இருப்பார்கள். தொற்றுநோய்களை ஒழிக்க இதுவே இயற்கை வழங்கும் நிரந்தரத் தீர்வு. கோவிட்-19 கொரோனா தொற்றை சமூகத்தில் இருந்து ஒழித்திட அச்சமூகத்தின் 70% மக்கள் பாதிக்கப்பட்டு குணமடைந்தால் மட்டுமே ‘மந்தை நோயெதிர்ப்பு சக்தி’ பெற முடியும் என்று அமெரிக்கப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதிக உயிர் இழப்புகள் இல்லாமல் ‘மந்தை நோயெதிர்ப்பு சக்தி’யைப் பெற்றிடவே தடுப்பூசிகள் பயன்படுத்தப் படுகின்றன. தடுப்பூசிகள் நோய்க் கிருமியைச் சிறியளவில் மனித உடலுக்கு அறிமுகப்படுத்தி முன்கூட்டியே நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கச் செய்திடும். இந்த முறையாலேயே தட்டம்மை, போலியோ, சின்னம்மை போன்ற நோய்களுக்கு எதிரான ‘மந்தை நோயெதிர்ப்பு சக்தி’ ஏற்படுத்தப்பட்டு இன்று முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டன.

மந்தை நோயெதிர்ப்பு சக்தி செயல்படும் முறை

தடுப்பூசிக்காக அடுத்த 6 முதல் 18 மாதங்கள் வரை காத்திருந்தால் ஊரடங்கால் ஏற்படும் பாதிப்புகள் கைமீறிப் போகுமென அரசுகள் அஞ்சுகின்றன. அதேநேரம், தடுப்பூசி இல்லாமல் ஊரடங்கினைத் தளர்த்தினால் நோய்த்தொற்று மளமளவென வளர்ந்து மருத்துவமனைகள் நிரம்பி, உயிரிழப்புகள் மலையெனக் குவியும் என்றும் அஞ்சப்படுகின்றது. இதற்கு ஒரு தீர்வாக, “தடுப்பு மருந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும் வரையிலான இடைப்பட்ட காலத்தில் தொற்று பரவுவது குறையும்போது ஊரடங்கை சில நாள்கள் தளர்த்தலாம். மருத்துவமனைகள் கையாளும் அளவிற்கு புது நோயாளிகள் வந்தவுடன் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கலாம். தடுப்பூசி வரும்வரை இந்த முறையைக் கடைப்பிடிக்கலாம்.” என்று ஆராய்ச்சியாளர்கள் ஆலோசனை தெரிவிக்கின்றனர். இந்த முறையால் நோய்த்தொற்று மற்றும் பொருளாதார பாதிப்பு இரண்டையும் ஓரளவுக்குச் சமாளிக்கலாம்.

மக்கள் தொகை குறைவான, வளர்ச்சி பெற்ற நாடுகளுக்கு இந்த நடவடிக்கை பொருந்தலாம். இந்தியா போன்ற பல்வேறு சமூக பொருளாதார நிலையில் உள்ள பல தேசிய இனங்கள் கொண்ட ஒன்றியத்தில் இது மிகப்பெரும் சவாலாகவே இருக்கும். அதே சமயம், பசியால் வாடும் ஏழைகளை வைத்துக் கொண்டு ஊரடங்கைத் தொடர்வது பட்டினிச் சாவுகளை அதிகரிக்கும். குறைந்தபட்சம் மக்களின் பசியைப் போக்க இந்திய ஒன்றிய அரசு தேவையான அளவு தானியங்களை வழங்கலாம். அதை ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் வழங்க மறுப்பதால் பசிக்கொடுமை தாளாத மக்கள் கொரோனாவைப் பொருட்படுத்தாமல் வெளியே வரும் சூழல் ஏற்படுகிறது. அப்படி பசிக்கொடுமையால் வெளியே வரும் தினக்கூலிகள், தொழிலாளர்கள் தான் கடுமையாகப் பாதிப்பிற்குள்ளாவார்கள்.

முன்னோடி நாடுகள்

ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி, பிரான்சு, நெதர்லாந்து, சுவீடன், நார்வே போன்றவை தங்கள் பள்ளிகளைத் திறக்கப் போவதாக அறிவித்துள்ளன. ஜெர்மனியில் மாணவர்கள் பள்ளிக்குச் செல்கின்றனர். சில நாடுகள் மக்கள் அதிகம் கூடாத சிறு வணிக நிலையங்களைத் திறக்க அனுமதி அளித்துள்ளன. இந்த நாடுகள் தடுப்பூசி வரும்வரை பல மாதங்கள் காத்திருக்க விருப்பமின்றி தங்கள் பொருளாதார நிலவரத்தைக் கருத்தில் கொண்டு ஊரடங்கைத் தளர்த்தத் தொடங்கி விட்டன. தடுப்பு மருந்தின் துணை இல்லாமல் இயற்கையான முறையில் ‘மந்தை நோயெதிர்ப்பு சக்தி’யை உருவாக்கும் முயற்சியில் இறங்கி விட்டன.

கோவிட்-19 கொரோனா சுவாசக் கோளாறு தொற்று முதியோர் மற்றும் வேறு உடல்நல குறைபாடுகள் உள்ளவர்களையே கடுமையாகப் பாதிக்கின்றது. குழந்தைகளைப் பெரிதாகப் பாதிக்கவில்லை என்பதால் பள்ளிக்கூடங்கள் முதற்கட்டமாகத் திறக்கப்படுகின்றன. “எங்கள் குழந்தைகளை வைத்து சோதனை நடத்த அனுமதிக்க மாட்டோம்” என்று குழந்தைகளின் பெற்றோர்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையிலும் இந்த அரசுகள் பள்ளிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளன.

சுவீடன் அரசு இதுவரை முழுமையான ஊரடங்கு அமல்படுத்தவில்லை. இதன் காரணமாக, முதியோர்களும் நோய் வாய்ப்பட்டவர்களும் கொரோனா தொற்றால் அதிக அளவில் உயிரிழந்தனர். இதனையடுத்து, 65 வயதிற்கு மேற்பட்டோர், இருதயம், நுரையீரல், நீரிழிவு நோய்ப் பாதிப்பு உள்ளவர்களைக் கண்டிப்பாக வீட்டில் இருக்கும்படி வலியுறுத்தியுள்ளது சுவீடன் அரசு. மற்ற மக்கள் அனைவரும் சமூக இடைவெளி கடைப்பிடித்து இயல்பு வாழ்க்கையை நடத்த அனுமதித்துள்ளது.

கொரோனா தொற்றால் சுவீடனில் ஏற்பட்ட இறப்பு விகிதம் என்பது 12% ஆக உள்ளது. இது, உலகிலேயே அதிகமாகப் பாதிக்கப்பட்ட இத்தாலியின் 13.5% இறப்பு விகிதத்துடன் ஒத்து இருந்தாலும் இத்தாலி முழு ஊரடங்கில் உள்ளது சுவீடன் முழு ஊரடங்கை அமல்படுத்தவே இல்லை என்பதைக் கவனிக்க வேண்டும்.

சுவீடனின் பொதுச் சுகாதாரத் துறை தலைமை தொற்றுநோய் மருத்துவர் ஆண்டெர்ஸ் டெக்னேல் இந்த நடவடிக்கை குறித்துக் கூறுகையில், “நாங்கள் மிக நுணுக்கமாகத் திட்டமிட்டு நோய்த்தொற்றைக் கண்காணித்து வருகிறோம். தற்போது, மழலையர் பள்ளி தொடங்கி 9 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்கி வருகிறது. இன்னும், உயர்நிலைப் பள்ளி, கல்லூரிகள் திறக்கவில்லை. தலைநகர் ஸ்டாக்ஹோமில் 25% மக்கள் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு நோயெதிர்ப்பு சக்தி பெற்றுள்ளதாக நாங்கள் கணிக்கின்றோம். இங்கு, ஒரு மருத்துவமனையில் 27% பணியாளர்கள் நோயெதிர்ப்பைப் பெற்றுள்ளதைக் கண்டறிந்துள்ளோம். அடுத்த சில வாரங்களில் ஸ்டாக்ஹோம் மக்கள் முழுவதும் மந்தை நோயெதிர்ப்பு சக்தியினைப் பெற்று விடுவார்கள் என எதிர்பார்க்கிறோம்.” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மந்தை நோயெதிர்ப்பு சக்தியே வரலாறு முழுவதும் தொற்றுநோய்களை நிரந்தரமாக ஒழித்துள்ளன. இந்தப் போக்கில் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்கவே தடுப்பு மருந்துகள் பயன்படுத்தப் படுகின்றன. தடுப்பு மருந்து வரும் காலம் தொலைவில் உள்ளதால், மந்தை நோயெதிர்ப்பு சக்தியை மட்டுமே நம்பி சுவீடன் மற்றும் சில நாடுகள் கவனமாகத் திட்டமிட்டு தங்கள் பயணங்களைத் தொடங்கி விட்டன.

நமக்கான பயணம்

இந்த மந்தை நோயெதிர்ப்பு சக்தி நிரந்தரத் தீர்வை இயற்கையான முறையில் வழங்கினாலும், தடுப்பு மருந்தின் உதவி இல்லாமல் சமூகம் செயல்பட்டால், குறைந்த பட்சம் 30% மேலாக இறப்பு விகிதம் இருக்க வாய்ப்புள்ளது. அதாவது, 1 கோடி மக்கள் தொகையில் 30 லட்சத்திற்கும் அதிகமான இறப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இன்றைய நாகரீகம் அடைந்த சமூகத்தில் இது மிகப் பெரிய மனித அழிவாக இருக்கும். இதில், நோய்க் கட்டுப்பாடு, மருத்துவ சிகிச்சை மற்றும் அரசின் அத்தியாவசியப் பணியாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். அதைவிட முக்கியமாக, நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்கள் மற்றும் தினக்கூலி தொழிலாளர்கள், ஏழை எளிய நலிந்த மக்கள் முழுமையாக பாதிக்கப்படுவார்கள். இந்தப் பிரிவினர்களின் மருத்துவப் பாதுகாப்பை முறையாகத் திட்டமிடாமல் சுவீடன் மாதிரியான ‘மந்தை நோயெதிர்ப்பு சக்தி’ முறையை செயல்படுத்துவது மிகப் பெரிய சமூக அழிவையே தேடித் தரும்.

அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் சில நோர்டிக் நாடுகள் (சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, ஐஸ்லாந்து) இந்த முறையைப் பின்பற்றின. அதில்,

❏ அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து அரசுகள் கோவிட்-19 தீவிரமாகப் பரவி வந்த நிலையிலும் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க மட்டுமே வலியுறுத்தின. மற்றபடி, அலுவலகங்கள், தொழிற்சாலைகள் இயங்கின. மக்கள் இயல்பு வாழ்க்கையைத் தொடர்ந்தனர். 100% ஊரடங்கு பிறப்பிக்கப்படவில்லை. இதனால், கோவிட்-19 வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் கிடுகிடுவென மருத்துவமனைகளில் குவியத் தொடங்கினர்.

தொற்றுநோயை எதிர்கொள்ள மக்களின் இயல்பு வாழ்க்கையை அனுமதித்த இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா, நோய்த்தொற்றை எதிர்கொள்ள இயலாமல் மருத்துவ சிகிச்சை வேண்டி வருபவர்களுக்குச் சிகிச்சை அளிப்பது குறித்து திட்டமிடவில்லை. தங்கள் மருத்துவக் கட்டமைப்பு சமாளிக்கும் அளவை மீறி நோயாளிகள் வருவதைக் கணித்து ஊரடங்கை பிறப்பிக்கத் தவறி விட்டன. இதன் விளைவாக, மருத்துவ சிகிச்சை பெற முடியாமல் நிறைய இறப்புகள் நிகழ்ந்தன. ட்ரம்ப் மற்றும் ஜான்சனின் தீவிர வலதுசாரி முதலாளித்துவ அரசுகள் பணக்கார முதலாளிகளின் வணிக லாபங்களைப் பாதுகாக்க நினைத்தனவே தவிர மருத்துவ சிகிச்சை தேவைப்படும் மக்களின் பாதுகாப்பை முற்றிலும் கை கழுவிவிட்டன.

❏ சுவீடன் இந்த முறையை விரிவாகத் திட்டமிட்டு செயல்படுத்தியுள்ளது. தொடக்கத்தில் உயிரிழப்புகள் நிகழ்ந்தாலும் நோய்த்தொற்றை தற்போது கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. முழு ஊரடங்கை அமுல்படுத்தாத இந்த நாடுகள் நோய்த்தொற்று ஏற்பட்டு மருத்துவ சிகிச்சை தேடி வருபவருக்கு உரிய சிகிச்சையை வழங்கி வருகின்றன. நோயாளிகள் வருகையும் நார்டிக் நாடுகளின் பொதுச் சுகாதார மருத்துவ கட்டமைப்புகள் சமாளிக்கும் அளவைவிடக் குறைவாகவே உள்ளன.

அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா முதலாளித்துவ நாடுகளைப் போன்றில்லாமல் நார்டிக் நாடுகள் தங்கள் மக்களின் பொதுநலன்களில் மிகவும் அக்கறை செலுத்துபவை. உலகின் சிறந்த சமூகக் கட்டமைப்புகளைக் கொண்ட நார்டிக் நாடுகளின் செயல்திட்டங்களை, ஆப்ரிக்க நாடுகளுக்கு இணையான பட்டினி சாவுகளைக் கொண்டுள்ள இந்திய சமூகத்தில் செயல்படுத்துவது பேரழிவில் தான் முடியும்.

காசநோய், நீரிழிவு நோய், இருதய நோய், ஊட்டச்சத்து குறைபாடு, மோசமான பொது சுகாதாரக் கட்டமைப்புகள் உள்ள இந்திய ஒன்றியத்தில் நார்டிக் நாடுகளின் செயல்திட்டத்தை அமுல்படுத்த நினைப்பது கல்லைக் கட்டிக்கொண்டு கிணற்றில் குதிப்பதற்கு ஒப்பாகும். அதேசமயம், இந்திய அரசு வேறு என்ன செயல்திட்டம் தீட்ட முடியும் என்பதும் பெரும் கேள்விக்குறியாகவே உள்ளது.

நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் சொந்த ஊர்களுக்கு நடந்து செல்லும் மக்களுக்கு போக்குவரத்தைக்கூட ஏற்பாடு செய்ய வக்கற்ற, பட்டினியால் உயிரிழக்கும் மக்களுக்கு சேமிப்பு கிடங்குகளில் நிரம்பி வழியும் தானியங்களை வழங்கிட மனம் இல்லாத பணக்கார வர்க்கத்தின் அடிவருடியான பாஜக மோடி அரசு பெரும்பான்மை மக்களுக்கு நிச்சயமாக மருத்துவப் பாதுகாப்பை வழங்கிடாது. கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தை மாநில அரசுகளே முன் நின்று நடத்திட முடியும். அதுவே, சரி!

நார்டிக் நாடுகளைப் பின்பற்றி தமிழ்நாடு அரசும் அனைத்து தரப்பு மக்களுக்கும், குறிப்பாக ஏழை எளிய மக்களுக்கு, முறையான அவசரகால சிகிச்சை வழங்கிடும் பொதுச் சுகாதாரத் துறை கட்டமைப்புகளை மாவட்டரீதியாக விரிவாக அமைத்து, பின்னர் ஊரடங்கைத் தளர்த்திட திட்டமிடலாம். அதற்குமுன், தமிழகத்திற்கு சேர வேண்டிய நிலுவைத் நிதியை தமிழக அரசு ஒன்றிய அரசிடம் போராடிப் பெற்றிட வேண்டும். போதுமான நிதியில்லாமல் அவசரக்கால கட்டமைப்பை திட்டமிட்டு உருவாக்கிட முடியாது.

80% தொற்றுக்களில் அறிகுறிகள் தென்படாததால் ஊரடங்கு காலத்தில் முழுமையாக சோதனைகளை செய்திட வேண்டும். தமிழ் நாட்டில் நிகழும் அனைத்து மரணத்தையும் (100%) கட்டாயம் கொரோனா தொற்றுக்கான பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். இது மட்டுமே நோயின் பரவலையும் தீவிரத்தையும் அறிய உதவும்.

தொடர்ந்து, ஊரடங்கை தளர்த்தும் பட்சத்தில் பாதிக்கப்பட்டு வரும் நோயாளிகளுக்கு, முக்கியமாக வசதி வாய்ப்பில்லாதவருக்கு, முழுமையான மருத்துவ சிகிச்சையை வழங்கிட வேண்டும். கொரோனா தொற்று நோயாளிகளின் வரத்தால் அரசின் மருத்துவத் திறன் நிரம்பும் நிலையை முன்கூட்டியே கணித்து மீண்டும் முழு ஊரடங்கை அறிவித்திட வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் குணமடைந்து வெளியேறிய பின்னர் போதுமான மருத்துவக் கட்டமைப்பை மாநில அரசு தயார்படுத்திக் கொண்டு மீண்டும் ஊரடங்கைத் தளர்த்த திட்டமிடலாம்.

கொரோனா நோய்த் தடுப்பு மருந்து உருவாக்கப்பட்டால் அவற்றை, தனியார் லாபவெறிக்கு அனுமதிக்காமல், பொதுவுடைமையாக்கி அனைத்து மக்களுக்குமானதாக அறிவித்திட வேண்டும். கொரோனா தொற்று தடுப்பு மருந்து துணையுடன் கொரோனாவை எதிர்கொள்ளும் போது உடலின் நோயெதிர்ப்பு சக்தி மிக வீரியமாக தொற்றை எதிர்கொண்டு, உயிர் இழப்புகளைக் குறைத்து, விரைவாக ‘மந்தை நோயெதிர்ப்பு சக்தி’யைப் பெற்றிட உதவும்.

இதுவே, கொரோனா வைரஸை ஒழித்திட நிரந்தரத் தீர்வை தேடித் தரும்!!

Translate »